Saturday, October 4, 2025

வானத்துக்கு உயர்த்தி...


பாரமவுண்ட் ஸ்டுடியோவுக்குள் நுழைந்த அந்த புதிய நடிகர், பிரபல சிஸில் பி டிமிலி நிற்பதைப் பார்த்து கைகளை ஆட்டி தெரிவித்த வணக்கத்தில் கவரப்பட்டவர் இவரைப் பற்றி விசாரித்தார். ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளிவந்திருந்தது. (‘Dark City’) அதைப் பார்த்துவிட்டு தன் ‘The Greatest Show on Earth’ -இல் முக்கிய ரோல் கொடுத்தார். பிரபலமானார் நடிகர்.
அதையடுத்து டிமிலி கொடுத்த வாய்ப்புத்தான் பிரபல ‘Ten Commandments’ படத்தில் மோசஸ். மைக்கலாஞ்சலோ வடித்த மோசஸ் சிலையை இவர் உருவம் ஒத்து இருந்ததால் மோசஸ் வேடத்துக்கு இவரைத் தேர்வு செய்தாராம் டிமிலி. (அவர் முதலில் ஒருமுறை ‘Ten Commandnents’ தயாரித்த 1923 இல் தான் பிறந்தார் இவர் என்பது வினோத ஒற்றுமை)
வானத்துக்கு உயர்த்திற்று படம். 'டன் டன் ஆக' புகழ் சம்பாதித்தார் சார்ல் டன் ஹெஸ் டன்.
Charlton Heston… இன்று பிறந்த நாள்..
புகழ் பெற்றபின் ‘Big Country’ படத்தில் கிரிகரி பெக்குடன் வில்லனாக நடிக்க வந்தது வாய்ப்பு. தயங்கினார். ஆனால் William Wyler டைரக் ஷன் ஆயிற்றே? நடித்தார். அடுத்து வைலர் பிரம்மாண்ட ‘Ben-Hur’-ஐ இயக்க, அதில் பென் ஹர் ஆனார். பதினோரு ஆஸ்கார் பெற்ற அந்தப்படத்திற்காக தன் ஒரே ஆஸ்காரை வாங்கினார்.
பிரம்மாண்ட சரித்திர படங்களின் தவிர்க்க முடியாத நாயகர் ஆனார். ‘The Greatest Story Ever Told', 'Khartoum', 'Major Dundee' என்று வரிசையாக… சோபியா லாரனுடன் ‘Elcid’. அவா கார்ட்னருடன் ‘55 Days at Peking’.
சரித்திரப் படங்களின் நடிப்பதற்கு முன் தன் ரோல் பற்றி அலசிப் படித்து ஆராய்ந்து விடுவார். ‘Major Dundee’ -ல் சில காட்சிகளை மீண்டும் படமாக்கச் சொல்லி தன் முழு சம்பளத்தையும் கொடுத்தாராம்.
‘பென் ஹரி’ல் அந்த புகழ் பெற்ற சேரியட் ரேஸ் காட்சிக்காக மூன்று மாதம் ரதம் ஓட்டக் கற்றுக் கொண்டார். 15000 துணை நடிகர்களுடன் 5 வாரம் படமாக்கப்பட்டது அந்தக் காட்சி. 263 -இல் ஒரு பங்குதான் ஃபைனல் கட்.
பின்னர் ஹெஸ்டன், மைக்கலாஞ்சலோ ஆகவும் நடித்தார். அந்தப் படம் தான் ‘The Agony and the Ecstasy’. ஆம், Rex Harrison -ம் இவரும் கதையிலும் நடிப்பிலும் போட்டி போட்டுக் கொண்டு நடித்த படம்.
வழிதவறிய விண்கலத்தில் வந்திறங்கிய கிரகத்தில் விழித்தெழும் அவர்கள் காணும் காட்சி! மனிதர்கள் பின்தங்கியிருக்க, மனிதக் குரங்குகள் ஆட்சிசெலுத்துகின்றன. ‘Planet of the Apes’ இவருடைய ஆக்ரோஷமான நடிப்பை அதில் பார்க்கலாம்.
Arnold Schwarzenegger -ன் அந்த அசத்தல் காமெடி அட்வெஞ்சர் ‘True Lies’ இல் அவரது பாஸ் ஆக வருவார்.
ரெண்டாம் உலகப் போரில் ராணுவத்தில் ரெண்டு வருடம்.. மனைவி லிடியா. அடுத்த குழந்தை பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தம்பதிகள் முதலில் மகன் பிறந்ததும் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார்கள். மனைவியும் அவரும் கேன்சரில் இருந்து மீண்டவர்கள்.
Empire பத்திரிகையின் Top 100 Movie Stars of All Time லிஸ்டில் 28வது இடம் 1997 இல். Presidential Medal of Freedom பெற்றது 2003இல்.
பின்னால் ‘In the Arena’ என்று சுயசரிதை எழுதியபோது டிமிலி தந்ததே என் திரை வாழ்வு என்று குறிப்பிட மறக்கவில்லை. தயங்காமல் சொல்வார் ‘Ten Commandments’-ல் தன்னைவிட யூல் பிரைனர் நன்றாக நடித்து இருந்ததாக.
ஹெஸ்டன் நடித்த The Earthquake' படம் சற்றே விசேஷம்: தியேட்டரில் Low Bass ஸ்பீக்கர்கள் பொருத்தி பூகம்பத்தின் போது பூமி குமுறுவதை ஆடியன்ஸ் உணர வைக்கிற Sensoround சிஸ்டத்தில் வெளிவந்தது.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!