Friday, October 31, 2025

பெரும் மனிதநேயர்...

மன முறிவு ஏற்படும் போல தோன்றினால் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்று இந்த மன நல மருத்துவரை கேட்டார்கள். சொன்னது: ‘வீட்டைப் பூட்டிக் கொள். ரயில்வே ட்ராக் ஓரமாக நடந்து போ. உதவி தேவைப்படும் ஒருவனைக் கண்டுபிடி. அவனுக்கு ஏதாவது செய்!’
Karl Menninger ... (1893 - 1990)
வெறும் மனோதத்துவ டாக்டர் மட்டுமல்ல, பெரும் மனிதநேயர். ஆதரவற்றோர்களுக்காக பாடுபடுவதை தன் முக்கிய வேலையாக வைத்திருந்தார்.
சிகிச்சையை மையப்படுத்தும் ஸிக்மண்ட் ஃப்ராய்டிலிருந்து ஸிக்னிஃபிகன்டாக வேறுபடும் இவர் சூழ்நிலை முக்கியம் என்று கருதுபவர். சொல்லும் ஒரு முக்கியமான விஷயம், ‘பெற்றோரின் நேசம் கிட்டாததே பெருமளவு மனநிலை பிறழ்வுக்குக் காரணம். நிறைய குற்றங்களுக்குப் பின்னணியில் இருப்பது இந்த மனநிலைத் தடுமாற்றங்களே!’
மனோ வைத்தியம் வழியாக குற்றங்களை பெருமளவில் தடுத்துவிடலாம் என்று நம்பும் இவர் மனநிலை பாதித்தவருக்கும் மற்றவருக்கும் உள்ள இடைவெளி மிகக் குறைவே, என்கிறார்.
மாணவர்களுக்காக இவர் எழுதிய ’The Human Mind’ மற்றவர்கள் இடையேயும் மகா பிரசித்தம். இவரது மெனிஞ்சர் கிளினிக், 1920 இல் தொடங்கியது, உலக அளவில் பிரபலம்.
வேலை, வேலை என்று மெனக்கெடும் மெனிஞ்சர், ‘மனிதன் கவனம் செலுத்தும் எந்த விஷயமும் மனோ தத்துவத்திற்கு அப்பால் இல்லை; ஆகவே எனக்கு பொழுதுபோக்கு என்று தனியாக எதுவும் இல்லை; எல்லாமே என் வேலைக்குள் வந்துவிடுகிறது!’ என்கிறார்.
ஒரு போடு போடுகிறார் பாருங்கள்! ‘நார்மலாக இல்லாதவற்றை அச்சத்துடன் மட்டுமே பார்க்கும் மனநிலையும், சராசரியாக இருப்பதில் மன திருப்தியுடன் இருப்பதும் மனிதர்களின் அறியாமையே. எதையாவது சாதிக்கும் எவருமே அடிப்படையில் இயல்பு நிலையில் (normal) இல்லாதவர்கள் தாம்.’
மின்னும் வார்த்தைகள் இன்னும் சில...
‘பெற்றோரின் நேசம் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியம்; மனோதத்துவ டாக்டரைவிட மேலாக!’
‘நம்மை நேசிப்பவர்களாலும் நேசிக்க மறுக்கிறவர்களாலும் நம் வாழ்க்கை அமைக்கப்படுகிறது.’
‘எப்படி இருக்கிறார் ஆசிரியர் என்பது, என்ன போதிக்கிறார் அவர் என்பதைவிட முக்கியமான
து.’
‘அன்பு மனிதர்களைக் குணப்படுத்துகிறது. அதைக் கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும்!’
‘ஒருவனுக்கு மூன்று வேளை சோறு கிடைப்பதும், செய்வதற்கு ஜோலி நிறைய இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியதும் முக்கியம்!’
‘குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்களோ அதை அவர்கள் சமூகத்துக்கு செய்கிறார்கள்.’
‘கவனித்து கேட்பது ஓர் அதிசய, வசீகரமான விஷயம். நம்மைக் கவனித்துக் கேட்பவர்களை நோக்கி நாம் நகர்கிறோம்.’
‘குழந்தைப் பருவத்தில் அனுபவிக்கும் உணர்வுகளை வளர்ந்தபின் மனிதர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நான் மருத்துவம் பார்த்தவர்களில் நிறைய பேருக்கு அந்த வைத்தியம் தேவைப்பட்டிருக்காது, சிறு வயதில் அவர்கள் சரியாக வளர்க்கப்பட்டிருந்தால்.’
'தன்னை நேசிப்பது என்பது மற்றவரை நேசிப்பதற்கு எதிரானதல்ல; மற்றவருக்கு ஒரு உதவி செய்யாமல் தன்னை நேசிக்கவோ தனக்கு உதவவோ முடியாது.'
'அறிவின் குரல் அச்சத்தின் கர்ஜனையால் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது.
ஆசையின் குரலால் புறம் தள்ளப்படுகிறது. வெட்கத்தின் ஒலியினால் மறுக்கப்படுகிறது. வெறுப்பால் மாறுபாடு அடைகிறது. கோபத்தினால் மறைக்கப்பட்டு விடுகிறது. எல்லாவற்றையும் விட அறியாமையால் வாய் மூடப்பட்டு விடுகிறது.'
‘அச்சங்கள் கற்பிக்கப்படுகின்றன நம்முள். அதேபோல், கற்று வெளியேற்றியும் விடலாம் அவற்றை.’
முத்தாய்ப்பாக இது: ‘Unrest of spirit is a mark of life.’

Tuesday, October 28, 2025

ஒளியைச் சிந்துங்கள்...


Prevention is better than cure.’
இப்போது நாம் உணர்ந்து கொண்டாடும் இந்த வாசகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னவர் அவரே.
Desiderius Erasmus… நெதர்லேண்டில் உதித்த நேர்த்தியான சிந்தனையாளர். இன்று பிறந்த நாள்!
சொன்ன எல்லாமுமே ஃப்ரேம் போட்டு மாட்ட வேண்டியவை. என்றாலும் சில மட்டும் இங்கே...
‘மனித மனம் உண்மையை விட பொய்யினால் மிகவும் கவரப்படுகிற மாதிரி அமைந்துள்ளது.’
‘காலம் மனிதர்களின் துக்கத்தை கரைத்து விடுகிறது.’
‘அதீத துணிச்சல் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும்.’
‘எழுதும் ஆசை எழுத எழுத வளரும்.’
‘நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே ஆக விரும்புவதில் தான் மகிழ்ச்சியின் விதை இருக்கிறது.’
‘மிகச் சிறந்த புத்தகங்கள் முதலில் படித்து விடு. எவ்வளவு விஷயங்கள் தெரியும் உனக்கு என்பது முக்கியமல்ல. அந்த விஷயங்களின் தரமே முக்கியம்.’
‘ஒளியைச் சிந்துங்கள். இருட்டு தானே மறைந்துவிடும்.’
‘சிக்கனம் ஒரு வசீகர வருமானம்.’
‘ஒரு ஆணியை இன்னொரு ஆணியால் பிடுங்குவது போல ஒரு பழக்கத்தை இன்னொரு பழக்கத்தை வைத்து மாற்ற முடியும்.’
‘எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால் புத்தகங்கள் வாங்குகிறேன். மீதம்இருந்தால் உணவுக்கும் உடைகளுக்கும்.’
‘கழுகுகள் ஈக்களைப் பிடிப்பதில்லை.’
‘உங்கள் நூலகம் உங்கள் சொர்க்கம்.’
‘எடுத்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கடவுள் இருக்கிறார்.’
‘பெண்கள்… அவர்களோடு வாழ்வது கஷ்டம், அவர்கள் இல்லாமல் வாழ்வதும் கஷ்டம்.’
‘எதுவும் தெரியாமல் இருப்பதே ஏற்றவும் சந்தோஷமான வாழ்க்கை.’
‘ஆளுக்கொரு பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறோம் திரை கீழே விழும் வரை, என்பதைத் தவிர வாழ்க்கை வேறென்ன?’

Sunday, October 26, 2025

ஓவிய விருட்சத்தை...


ஓவிய விருட்சத்தை உலுக்கியவர்களில் ஒருவர்... மாடர்ன் ஆர்டின் தந்தை...

Pablo Picasso… Oct 25 பிறந்த நாள்!

20000 ஓவியங்களுக்கு மேல் வரைந்தவர், கவிதையும் தீட்டுவார் என்பது நி. பே. தெ. தகவல். 300 கவிதைகளுக்கு மேலேயே... ‘ஆசையின் வாலைப் பிடித்துக்கொண்டு’, என்றொரு நாடகமும்!

அப்பா அபார ஓவியர். அவர்தான் பயிற்றுவித்தது. அம்மாவிடம் முதன்முதலில் வாயைத்திறந்து கேட்டதே பென்சிலைத் தான்! 13 வயதில் தன்னை மகன் மிஞ்சி விடவே, தான் பிரஷைக் கீழே வைத்து விடலாமா என்று யோசித்தாராம் தந்தை.

‘The Little Yellow Picador.’ ஏழு வயதில் வரைந்த இந்த ஓவியத்தை அவரே வைத்திருந்தார் இறுதிவரை. ஆரம்ப வறுமையில் குளிர் காய்வதற்காக தன் படங்களை எரிக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை இழப்பு!

கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது இவரிடம். ‘உன் ஓய்வு நேரத்தைப் போல உற்சாகம் அளிக்கக்கூடியதாக ஒரு வேலையைத் தேடிக் கொள்!’ என்பதே அவர் அட்வைஸ். தன் மன அழுத்தத்தை தானே வென்றவர்.

‘அன்றாட வாழ்வின் அழுக்குகளை ஆத்மாவிலிருந்து அப்புறப்படுத்துவது தான் கலை... உற்சாகத்தை உருவாக்குவதே கலையின் நோக்கம்,’ என்பார். ‘படைப்பின் முக்கிய எதிரி அது சுவாரசியத்தை எதிர்பார்ப்பது.’

படைப்புத்திறனை வளர்த்துக் கொண்டே போனார் புதுப் புது ஸ்டைல் என்று. ஓவியக் கலையை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார். Braque -ம் இவருமாகப் பிரபலப்படுத்தியதுதான் Cubism.

‘குழந்தையாக இருக்கும்போது நான் பெரியவர்களை மாதிரி வரைவேன். ஆனால் ஒரு குழந்தை மாதிரி வரையக் கற்றுக் கொள்ள எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆகிவிட்டிருக்கிறது.’

‘மற்றவர்களெல்லாம் என்ன இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு ஏன் என்று கேட்டவர்கள். என்ன இருந்திருக்கக்கூடுமோ அதைக் கண்டு கொண்டு ஏன் கூடாது என்று கேட்டவன் நான்.’

இன்னும் சொன்னது...
‘கலை என்பது உண்மையை நாம் உணர வைக்கிற ஒரு பொய்.’
‘உங்களால் கற்பனை செய்ய முடிகிற எதுவும் நிஜம்.’
‘தேவையற்ற விஷயங்களை நீக்குவதே கலை.’
‘நான் தேடுவதில்லை, கண்டு கொள்கிறேன்.’
‘கலையை நீ உருவாக்குவதில்லை, அதை கண்டுபிடிக்கிறாய்.’
‘எதையும் நான் எப்படி நினைக்கிறேனோ அப்படித்தான் வரைகிறேன், எப்படி பார்க்கிறேனோ அப்படி அல்ல.’
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். சிரமம் என்னவெனில் வளர்ந்த பிறகும் கலைஞனாக நீடிப்பதே.’
‘இளமையாக ஆவதற்கு ரொம்ப காலம் பிடிக்கிறது.’
‘இந்த உலகம் அர்த்தமற்றதாக காணப்படுகிறது, நான் மட்டும் ஏன் அர்த்தமுள்ள படங்களை வரைய வேண்டும்?’
‘ஏகப்பட்ட பணம் வைத்திருக்கும் ஒரு ஏழையாக வாழ விரும்புகிறேன் நான்.’
‘வாழ்க்கையின் அர்த்தம் உங்கள் திறமையைக் கண்டுபிடிப்பது. வாழ்க்கையின் நோக்கம் அதை மற்றவர்களுக்கு கொடுப்பது.’
‘கலை என்பது உண்மையை நாம் உணர வைக்கிற ஒரு பொய்.’
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். சிரமம் என்னவெனில் வளர்ந்த பிறகும் கலைஞனாக நீடிப்பதே.’
‘இசையும் கலையும் வாழ்க்கையை இன்னும் வசீகரமாக்கும் அலங்காரங்கள் அல்ல; அவை இல்லாமல் வாழ முடியாத அளவு வாழ்வின் ஆதார தேவைகள்.’

ஒத்திப் போடுவதுபோடுவது இவருக்குப் பிடிக்காத விஷயம். ‘அப்படியே விட்டுவிட்டு இறக்கத் தயாராக இருக்கிற விஷயங்களை மட்டுமே ஒத்தி போடுங்கள்!’ என்பார்.

பிக்காஸோவின் வீட்டுக்கு விஜயம் செய்த ஓர் பிரமுகர் சுற்றிப் பார்த்துவிட்டுக் கேட்டார், “ஆமாம், சுவரில் உங்க ஓவியம் ஒன்றையும் காணோமே, உங்களுக்குப் பிடிக்காதா?”
“ரொம்பப் பிடிக்கும்,” என்றார் பிக்காஸோ, “ஆனா அதெல்லாம் ரொம்பக் காஸ்ட்லியாச்சே?”

Saturday, October 25, 2025

சேவை மனம்...


‘நான் வாழவைப்பேன்’ படத்தின் இந்தி ஒரிஜினலான அமிதாப் நடித்த 'Majboor'... சலீம் ஜவேத்தின் அந்தக் கதையை இயக்கி பிரபலமானவர் Ravi Tandon.
ரிஷி, நீட் டு சிங்கை வைத்து ‘Khel Khel Mein’ சஞ்சீவ் குமாரை வைத்து 'Anhonee' என்று ஹிட் தந்தவர்... 20 வருடத்திற்கு பின் அவர் மகள் நடிகையாகப் பிரபலமானார்.
Raveena Tandon… இன்று பிறந்தநாள்...
ஃபிலிம் ஃபேர் அளித்த சிறந்த அறிமுக நடிகை அவார்டுடன் தொடங்கியவர், 'Daman' படத்துக்காக பெற்றுக் கொண்டது நேஷனல் பெஸ்ட் ஆக்டரஸ் அவார்டு. சமீபத்தில் வாங்கியது ஃபிலிம் ஃபேரின் OTT சிறந்த நடிகை அவார்டு.
பெற்றோரை இழந்த தன் சொந்தக்கார பெண் குழந்தைகள் இருவரை தன் 21-வது வயதில் தத்து எடுத்துக் கொண்டவர்.

Tuesday, October 21, 2025

ஸ்வீட் நடிகர்...


ஜாலி நடிகர்... ஸ்வீட் நடிகர்... ஐம்பதுகளில் கொட்டகைகளை அதிரச் செய்தவர். இளசுகளின் அபிமான கதாநாயகன். ஜாலியாகப் பொழுது போக்கலாம் என்று வருபவர்களுக்கு ஏமாற்றம் இல்லாத திரைக்கதை. சூப்பர் ஹிட் பாட்டுகள். பெரும்பாலும் சங்கர் ஜெய்கிஷன்.
Shammi Kapoor… இன்று பிறந்த நாள்!
புகழ்பெற்ற சகோதரர்களில் நடுவர். மூத்தவர் ராஜ்கபூர். இளையவர் சஷிகபூர். மாபெரும் நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகன். என்றாலும் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக ஆகி விடவில்லை. அப்பாவின் Prithvi Theatres -இல் நாலு வருடம் துணை நடிகராக வேலை செய்தார்.
‘உன்னைப் போல் பார்த்ததில்லை’ (Tumsa Nahin Dekha) படத்தில் ஹீரோவாக வரும் வரை யாரும் இவரைப் பெரிய ஹீரோ போல் பார்க்கவில்லை. மீசையை அகற்றிவிட்டு, ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு டான்ஸிங் ஹீரோவாக வந்த ஷம்மி கபூரை புருவம் உயர்த்தி பார்த்தார்கள் ரசிகர்கள். இன்ஸ்டன்ட் ஸ்டார். அடுத்து ஆஷா பரேக்குடன் ‘மனதைக் கொடுத்துப் பார்' (Dil Dekha Dekho) வந்து அமர்க்களப்படுத்தி பாலிவுட்டின் எல்விஸ் பிரஸ்லி ஆக்கியது.
“யா…..ஹூ!” என்று பனிமலையில் குதித்தாடும் ‘Junglee’ இவரை வசூல் நடிகர் ஆக்கியது. ஷம்மி கபூர் ஹீரோ, சங்கர் ஜெய்கிஷன் பாட்டு என்று அது ஒரு இசையும் காதலும் இசைந்த வசந்த காலம்! Professor, Singapore, Janwar, Rajkumar...
தற்கொலை செய்து கொள்ளப் போன பெண்ணை காப்பாற்றி அவள் விரும்பிய மாமா மகளுடன் சேர்த்து வைக்கப் பாடுபடுகிறான், கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பாற்றி வளர்க்கும் அவன் என்று அழகாகத் தொடங்கும் ‘Brahmachari’ படத்திற்குத்தான் Filmfare அவார்டு வாங்கினார். “Main Gavun Tum So Jao..” பாடலையும் “Dil Ke Jarokhe…” பாடலையும் மறக்க முடியுமா? (தமிழில் ‘எங்க மாமா’)
சக்கை போடு போட்ட மற்றொரு படம் விஜய் ஆனந்த் டைரக்ஷனில் நடித்த Teesri Manzil. ஆர். டி. பர்மனின் “Ha Ha Ha Aajao…” பாடலுக்கு ஹோட்டல் ஸ்டேஜில் சுழன்றாடுவாரே அது! டான்ஸ் இவரது forte. தன் movements தானே அமைத்துக் கொள்ளுமளவு தேர்ச்சி. கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து தலையை ஒரு ட்விஸ்ட் கொடுப்பார் பாருங்கள், தனி ஸ்டைல்!
வருடங்கள் சென்றதும் சீனியர் ரோல்களுக்கு வசமாக தன் கலை வாசத்தை மாற்றிக் கொண்டார். இவரது இடத்தைப் பெற்றுக் கொண்ட ராஜேஷ் கன்னாவுடன் இவர் நடித்த Ramesh Sippy யின் ‘Andaz’ படத்தில் இவர் ஹீரோயின் ஹேமா மாலினி. அதில்தான் அவர்கள் ஆடும் அந்த சூபர் ஹிட்... “Dil Usse Do Jo Jaan...”
‘Junglee’ யில் தன் ஹீரோயினாக நடித்த சாய்ரா பானுவுக்கே அப்பாவாக நடித்தார் ‘Zameer’ படத்தில்.
தெரியாதது இவர் ஒரு இயக்குனரும் கூட. ‘Manoranjan’ (சஞ்சீவ் குமார், ஜீனத்) ‘BundalBaaz’(ராஜேஷ் கன்னா)
ரொம்ப ஹை டெக் இவர். அது வந்த காலத்திலிருந்தே இன்டர்நெட்டை பிடித்துக் கொண்டவர். I U C I (Internet Users Community of India) வை நிறுவியவர்.
நடித்த ஒரே தமிழ்ப்படம் ‘அமரன்.’
கடைசி சில வருடங்கள் நோயுற்று dialysis வாழ்வின் பகுதி ஆனபோதும் துளி உற்சாகம் குறையாமல் வாழ்ந்தவர்.
ஹீரோவாக நடித்த ‘வண்ண இரவுகள்' (Rangeen Raton) படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வந்த கீதா பாலிக்கும் இவருக்கும் இடையே மலர்ந்த காதல் கல்யாணத்தில் முடிந்த போது அவர் இவரை விட பெரிய ஸ்டார். பத்தே வருடத்தில் கீதா பாலி காலமாகி விட்டதில் தாங்கமுடியாத துயரம் இவருக்கு.

Monday, October 20, 2025

கல்வி என்பது...


‘நேற்று நாம் கற்றுக் கொடுத்த மாதிரி
இன்றைய மாணவர்களுக்கு கற்பித்தால் அவர்களது 'நாளை'யை நாம் அபகரிக்கிறோம்.’
சொன்னவர்..?
இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… கல்வி பற்றிய தீர்க்கமான கருத்துக்களை மொழிந்தவர்… அமெரிக்க பல்கலைக் கழகங்களின் புகழ் பெற்ர பேராசிரியர்… Pragmatism-ன் தந்தை எனப்படுபவர்.
John Dewey... இன்று பிறந்த நாள்!
உதிர்த்த வேறு சில முத்துக்கள்…
‘கல்வி என்பது வாழ்க்கைக்கான தயார்ப் படுத்துதல் அல்ல; கல்வி தான் வாழ்க்கையே.’
‘தான் எதை செய்வதற்குத் தகுதியானவன் என்று கண்டுபிடித்து அதைச் செய்வதற்கான வாய்ப்பை தேடிக் கொள்வதே சந்தோஷத்திற்கான திறவுகோல்.’
‘விஞ்ஞானத்தின் மாபெரும் முன்னேற்றம் ஒவ்வொன்றும் ஒரு புதிய, முரட்டுத்தனமான கற்பனையில் இருந்தே உதித்திருக்கிறது.’
‘சந்தேக மனப்பான்மை: கற்றறிந்த மனதின் தோற்றமும் அடையாளமும் அதுதான்!’
‘நிஜமாய் சிந்திக்கும் எவரும் வெற்றிகளில் இருந்து கற்றுக் கொள்ளும் அதே அளவு தோல்விகளில் இருந்தும் கற்றுக் கொள்கிறார்.’
‘சொல்வதற்கு ஏதாவது வைத்திருப்பதற்கும் ஏதோ ஒன்றை சொல்ல வேண்டியிருப்பதற்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு.’
‘நாம் மிக முக்கியமாக கைக்கொள்ள வேண்டிய வழக்கம் என்பது மேலும் மேலும் அறிந்து கொண்டே இருப்பதிலான ஆர்வமே.’
‘சிந்திக்காமலேயே உண்மைகளை ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால் உண்மைகளின்றி சிந்திக்க முடியாது.’
‘அறிவையும் திறமையையும் அனுபவத்தில் உரசிப் பார்ப்பதே கற்றுக் கொள்ளலின் திறவுகோல்.’
‘பிரச்சனைகள் நம்மை எதிர் கொள்ளும்போது மட்டும் தான் நாம் சிந்திக்கிறோம்.’

அந்த ‘டிடன்று’...


அந்த ‘டிடன்று’ எப்படி?
காதல் தோல்வியை காதலியின் முன் வெளிப்படுத்தும் ஆயிரம் பாடல்களில் காவியமாக நிற்கும் ஒரு பாடல் அது…
’இள வேனில் இது வைகாசி மாசம்
விழியோரம் மழை ஏன் வந்தது?’
’காதல் ரோஜாவே..’ (2000) படத்தில் வரும் அந்த காதல் வலி சொல்லும் பாடல்... பார்ட்டி சீனில் காதலன் காதலியை மனதில் வைத்து பாடுவது. ஐந்தரை நிமிடமும் மனசை அசையாமல் கவ்விக் கொண்டு விடுகிறது. இப்போதும் ஒன்றரை கோடிக்கு மேல் வியூஸ்..
முதல் இடையிசையில் ஃப்ளூட்டின் ஆர்ப்பரிப்பு. ‘ஹுஹுஹூ ஹூ ஹூஹு’… என்று அது மூன்று முறை நம்மை சோகச் சாட்டையால் அடிக்கும்போது கலங்கிப் போகிறோம். அதன் முத்தாய்ப்பாக ஒலிக்கும் அந்த ’டிடன்று டிடன்று டிடன்று!’ ஆஹா அற்புதம்! மொத்தப் பாட்டின் ஆதார பீட் ஆக! இளையராஜாவின் முத்திரை! அது என்ன இசைக்கருவி? எனக்குத் தெரியவில்லை. (ஆரேனும் சொன்னால் நன்றி_ சரியாக 1.59 - 2.01 நிமிடத்திலும் 3.43 - 3.45 நிமிடத்திலும் வருவது.) லிங்க் கமெண்டில்.
ரெண்டாவது இடையிசையில் அந்த அதிசயம். ஃப்ளூட் எழுப்பிய அந்த சோக ஒலியை எஸ்.பி.பி ‘அஹஹா ஹா ஹாஹா’ என்று தன் அடிக்குரலில் ஹம் செய்ய பத்து மடங்கு வெப்பம் பரவுகிறது சோகச் செங்கடலில். பாடலின் மொத்தச் சங்கட உணர்வும் அதில் தொற்றிக்கொண்டு விடுகிறது. அந்தக் கனத்தில் முழுசாய் கவிழ்ந்துவிட, சரணம் முடிகிற அப்போதுதான் அந்த மேஜிக். அவனின் அந்தப் பல்லவியை அப்படியே பாடியபடியே நடனமாடுகிறாள் அவள். அடி மன வேதனை கொப்பளிக்க அவன் பாடும் அந்தப் பல்லவி ராகத்தை அப்படியே எடுத்து மற்றவர்கள் முன் தன் உணர்வை அடக்கிக் கொண்டு அவள் நடனமாடியபடியே பாடும்போதுதான் தெரிகிறது ஆழமான சோகத்துக்கும் பால் ரூம் டான்ஸுக்கும் 'ஆட்ட'காசமாய்ப் பொருந்துகிற மாதிரி அமைத்திருக்கிறார் இளையராஜா என்று.
‘பனி மூட்டம் வந்ததால், மலர்த் தோட்டம் நீங்கியே, திசை மாறிப் போகுமா தென்றலே?’ என்ற அவன் வரிக்கு ‘பனி மூட்டம் வந்ததால், மலர்த் தோட்டம் நீங்கியே, திசை மாறிப் போகுமோ தென்றலோ?’ என்று அவள் ஒரே ஒரு எழுத்தை மாற்றிப் பதில் தருகிறாள். முத்தான பாடலுக்கு பல்லவி மட்டும் பாடி முத்தாய்ப்பு வைக்கிற குரலின் குயில் சித்ரா.

Sunday, October 19, 2025

கிருஷ்ணரைப் போல...


நாமக்கல்லுக்கு சில பெருமைகள் உண்டு. முக்கியமானது: கவிஞர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பிறப்பிடம்.
நாமக்கல் கவிஞர்… இன்று பிறந்த நாள்.
எட்டாவது பிள்ளையாகப் பிறந்தவர்,
கிருஷ்ணரைப் போல.
"தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. " வரிகளை எழுதியவர்.
" கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்." என்ற வரிகளும் அவருடையவையே. (இந்த இரு பாடல்களும் 'கடவுளின் குழந்தை' படத்திலும் இடம் பெற்றன)
உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இவர் பாடிய பாடல் நினைவிருக்கும்... " கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!"
அந்தப் பிரபல படம்.. எம்ஜிஆர், பானுமதி நடித்த 'மலைக்கள்ளன்' இவருடைய கதை தான். பட்சிராஜாவின் ஸ்ரீராமுலு நாயுடு அதை இந்தியிலும் தயாரித்தார். 'Azaad'. திலீப்குமார் மீனாகுமாரி நடித்தனர்.
திருக்குறள் உரை, ‘கம்பனும் வால்மீகியும்’… நிறைய நூல்கள்!
1949இல் அரசவைக் கவிஞர் ஆனார். 1971இல் பத்மபூஷன் விருது.

Thursday, October 16, 2025

நல்ல அறிவுரை...


’சிலர் தாங்கள் எந்த இடத்துக்கு செல்லும்போதும் அதன்
சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.
மற்றவர் தாங்கள் எந்த இடத்தை விட்டு செல்லும்போதும்!
>><<
'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே,
அதுவேதான் என்று அறிந்துகொண்டேன்.'
>><<
'நல்ல அறிவுரையை எப்போதுமே நான்
எவருக்கேனும் கொடுத்துவிடுகிறேன்.
அந்த ஒன்றைத்தான்
அதைவைத்து செய்ய முடியும்,
ஒரு போதும் தனக்கு அது உதவுவதில்லை.’
>><<
’கையாளக் கடினமான
இரண்டே விஷயம் வாழ்க்கையில்:
தோல்வியும் வெற்றியும்.’
>><<
'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடில்
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென
எண்ணிப் பாருங்கள்'
><><><
'இப்போதெல்லாம் மனிதர்களுக்கு
எல்லாவற்றின் விலையும் தெரிகிறது, ஆனால்
எதன் மதிப்பும் தெரிவதில்லை.’

சொன்னவருக்கு இன்று பிறந்த நாள்… Oscar Wilde...
ஆஸ்கார் வைல்ட் ஒரு முறை நடிகை ஸாரா பெனார்டுடன் பேசிக் கொண்டிருந்தார். சிகரெட் ஒன்றை எடுத்து பற்றவைக்குமுன் வைல்ட் அவளிடம், "நான் புகை விடறதில உங்களுக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லையே?"
"நீங்க புகையறதில எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை !" என்றாள் அவள் கூலாக.

><><><

Wednesday, October 15, 2025

ஃபிரேமுக்கு ஃபிரேம்...


ஃபிரேமுக்கு ஃபிரேம், காட்சிக்கு காட்சி நான் இருக்கிறேன் என்று தன்னை தெரிவித்துக் கொண்டே இருக்கும் டைரக்டர்கள் நிறைய பேர். ஆனால் கதைக்குள் முழுசாக நாம் மூழ்கி எழுந்திருந்து, யாரு நம்மை இதுக்குள்ளே இழுத்துட்டுப் போய் மெய் மறக்க வைத்தது என்று கடைசியில் தேடும் நபராக இருக்கும் இயக்குனர் வெகுசிலர்.
அவர்களில் ஒருவர் பீம்சிங். இன்று பிறந்த நாள்..
படிக்காத மேதை. ரங்கராவ் சிவாஜியை வீட்டை விட்டு போடா என்பார். என்னையா போகச் சொல்றீங்கன்னு அதிர்ந்து, எதிர்த்து, கத்தி, அடங்கி கடைசியில் கோபத்துடன் வெளியேறும் அந்த காட்சியில் சிவாஜி, ரங்காராவ் தவிர இன்னொருவரும் இருப்பார். ஆனால் அவரது பிரசன்ஸை கொஞ்சமும் நாம் உணர மாட்டோம். அவர்தான் பீம்சிங். Yes, his speciality is not showing his presence while showing his brilliance!
அம்மையப்பன் தான் முதல் படம். அடுத்ததில் கவனம் ஈர்த்தார். ‘ராஜா ராணி’. breezy comedy... நாலே முக்கால் நிமிட ஒரே ஷாட்டில் சேரன் செங்குட்டுவனாக தொடர் வசனம் பேசுவாரே சிவாஜி? அந்தப் படம். அப்புறம் ‘பாகப்பிரிவினை’ வந்தது. பாகஸ்தர் ஆகிவிட்டார் நம் வாழ்வில்.
திரைக்கதை எடிட்டிங் டைரக் ஷன் மூன்றிலும் எக்ஸ்பர்ட். எடிட்டிங் அசிஸ்டன்ட் ஆக ஆரம்பித்து டைரக் ஷன் அசிஸ்டெண்டாக ( கிருஷ்ணன் - பஞ்சுவிடம்) தொடர்ந்து, பின் டைரக்டர் ஆனவராயிற்றே?.
வாழ்க்கையின் முடிச்சுகளில் சிக்குண்டு தங்கள் தவிப்பை, உள்ளக் கொந்தளிப்பை கேரக்டர்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் அதை நம் உள்ளங்களுக்கு நானோ லிட்டர் குறையாமல் அப்படியே டிரான்ஸ்ஃபர் செய்யும் வித்தையை அறிந்த வித்தகர். Opposite characters + Conflict = Drama என்பதையும் Sensitive Characters + Situation = Melodrama என்பதையும் புரிந்து வைத்திருப்பவர்.
சிவாஜி, ஜெமினி, சாவித்திரி என்று இந்தப் பக்கம் 'பாவமன்னிப்பு' அரங்கு நிரம்ப ஓடிக்கொண்டிருக்க, இரண்டே மாதத்தில் அதே நடிகர்களுடன் பாசமலர் வெளியாகி அந்தப் பக்கம் அரங்கு நிறைந்து... இந்த தியேட்டரை விட்டு சிரித்தபடியே வெளியே வருபவர்களும் சரி, அந்தத் தியேட்டரை விட்டு கண்ணீர் மல்க வெளி வருபவர்களும் சரி, கதையில் கரைந்து, காட்சிகளில் உருகி, பிரமிப்புடன் இருப்பார்கள். (வாழ்க்கையை அப்புறம் அவர்கள் பார்க்கும் விதமே மாறுபட ஆரம்பித்து விட்டிருக்கும்.) மிகச் சின்ன இடைவெளியில் இரண்டு குடும்பப் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா காண வைத்த டைரக்டர் அவர் ஒருவர்தான். நாலாம் மாதமே ‘பாலும் பழமும்’ வெளியாகி அடுத்த ஜூபிலியை நோக்கி... சிவாஜி படங்களுக்கு பீம்சிங் ஒரு பீம்!
அந்த வருடத்தின் மிக நீளப்படமான ‘பதிபக்தி’யில் தொடங்கி இரண்டே கால் மணி ஓடும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை கேரக்டர்களின் conflict தான் இவரது பலம். அதில் சில மிக நுணுக்கமாக இருக்கும். ‘பார் மகளே பார்’ படத்தில் தன் வீட்டு ஃபங்ஷனுக்கு வந்திருந்த வி.கே.ராமசாமியை சிவாஜி தொடர்ந்து கேஷுவலாக அவமானப்படுத்த, பொறுக்கமுடியாமல் அவர் குமுறி எழுந்து, உன் இரண்டு மகள்களில் ஒருத்தியின் தாய் வேறு எவளோ ஒருத்தி, தெரியுமா உனக்கு? என்று தன்னை மறந்து பொங்கிவிடும் அந்தக் காட்சி சாட்சி.
பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்வதால் என்னமோ ‘பா’விலேயே ஆரம்பிப்பார் படத்தின் பெயர்களை. உண்மைதான். பாகப்பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும், பாசமலர், பாவ மன்னிப்பு, பச்சை விளக்கு.. பெயரைச் சொன்னாலே போதும், படம் நம் மனதில் ஓட ஆரம்பித்து விடும்.
கேமராவுக்கு ஒரு கண்ணனையும் எடிட்டிங்குக்கு ஒரு லெனினையும் நமக்குத் தந்திருக்கிறார். ஜெயகாந்தனின் இரண்டு நாவல்களை திரைக்கு தந்தவர் படமாக்கிய மற்றொரு நாவல் மு.வ. அவர்களின் பெற்ற மனம்.
இவர் இயக்கிய பாலும் பழமும் படத்தை ஹிந்தியில் ஸ்ரீதர் இயக்கினார். இவர் இந்தியில் இயக்கிய மற்றவர்கள் இயக்கிய படங்கள் Aadmi (ஆலய மணி - கே சங்கர்), Nai Din Nai Raat (நவராத்திரி- ஏ.பி.நாகராஜன்), Gopi (முரடன் முத்து-பி.ஆர்.பந்துலு), Phooja Ke Phool (குமுதம்-ஏ.சுப்பாராவ்)
வேறு புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது, ஜனங்களின் மனதை கவர்ந்தவர், ஜனங்களின் மனதில் இருப்பவர் பற்றி? எல்லாம் அறிந்ததே.

Tuesday, October 14, 2025

சினிமாவின் தந்தை...


சினிமாவின் தந்தை பிறந்த நாள் இன்று...
எடிசனை எட்டிப் பார்க்காதீர்கள். இவர் அவருக்கும் முன்னோடி. சுழலும் தட்டுகளில் துவாரங்களை வரிசையாக இட்டு, அதன் பின்னாடி படிப்படியான அசைவுகளின் படங்களை சுழலவைத்து கண்ணின் தோற்ற மாயையின் லாபத்தை ... அதாவது சினிமாவின் வித்தை(யை) முதல் முதலாகக் காட்டியவர். அந்த ஆதி அனிமேஷனுக்கு (1832) அவரிட்ட பேர் ஃபினாகிஸ்டிஸ்கோப்!
2019 இதே நாளில் கூகிளின் டூடில் பார்த்திருப்பீர்கள். அது இவரை சிறப்பிக்கவே!
Joseph Plateau...

Monday, October 13, 2025

தயங்கித் தயங்கி...


நடிப்பதில் அவருக்கு துளி ஆர்வம் இல்லை. ஸ்டூடியோ லேபரட்டரியில் அசிஸ்டன்டாக தான்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து தள்ளாத குறையாக கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். புக் செய்திருந்த ஹீரா நடிகருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால். நடிக்க வேண்டியதோ பிரபல நடிகை தேவிகா ராணியுடன். தயங்கித் தயங்கி நடித்து முடித்தவர் லேபரட்டரியில் வந்து ரஷ் பார்த்தபோது அவருக்கே ஆச்சரியம்! அட, நன்றாகவே நடித்திருக்கிறோமே? அவருடனேயே அடுத்த படம் நடித்தபோது அந்த ‘அச்சுத் கன்யா’ உச்சத்துக்குக் கொண்டு போனது அவரை.
அசோக் குமார்… இன்று பிறந்த நாள்!
தாதா மோனி (சகோதர ரத்தினம்) என்று அன்போடு அழைக்கப்பட்டவர். இயல்பாக நடிக்கும் வெகு சில நடிகர்களில் ஒருவர்.
அவருக்கு நீங்கள் எந்த பட்டம் கொடுக்க நினைத்தாலும் அது பொருந்தும். பெஸ்ட் ஹீரோ... பெஸ்ட் வில்லன்... பெஸ்ட் ஃபாதர் காரக்டர்.... பெஸ்ட் காமெடி நடிகர்....
மள மளவென்று தேவிகா ராணியுடன் பல படங்கள்... அடுத்து லீலா சிட்னிஸுடன் வரிசையாக… மீனா குமாரியுடன் பதினேழு... நளினி ஜெய்வந்துடன் நாலைந்து... 1940 களின் அசைக்க முடியாத நாயகனாக.
நாயகன் இமேஜை உடைத்து ஆன்டி ஹீரோவாக முதலில் கலக்கியதும் அசோக் குமார்தான்.... படம்: ‘Kismet’. கண்ட அபார வெற்றியில் அது தெலுங்கிலும் தமிழிலும் (பிரேம பாசம்) ரீமேக்.. அடுத்து வந்த ‘Mahal’ சூபர் ஹிட் சஸ்பென்ஸ் படம்.. “Aayega.. Aanewala..” பாடலைப் பாடி லதா மிகப் பிரபலமானது இந்தப்படத்தில் தான்.
பிச்சுவாப் பக்கிரி ஷேக் முக்தார், ஜெயிலில் இருந்து தப்பிய பிரதீப் குமாருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது பின்னால் சத்தமில்லாமல் வேவு பார்த்துக் கொண்டிருப்பார் அசோக் குமார். சி.ஐ.டி என்று நினைக்கும்போது சீஃப் வில்லனாக வெளிப்பட்டு நம்மைத் திகைக்க வைப்பார் ‘Ustadon Ki Udtad’ படத்தில். (‘வல்லவனுக்கு வல்லவன்’)
‘பாசமலர்’ ஹிந்தியில் ‘ராக்கி'யான போது சிவாஜி ரோலில் இவர். கிடைத்தது Filmfare அவார்ட். ‘க்ரஹஸ்தி' தமிழில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ஆனபோது இவர் ரோலில் சிவாஜி.
‘நானும் ஒரு பெண்’ இந்தியில் (‘Main Hun Ladkhi’) ரங்கராவ் ரோலை அதே கனிவுடன் அழகாக பண்ணியிருப்பார். இவரின் மாஸ்டர்பீஸ் ‘Jewel Thief’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
‘Mamta’ ‘Intaqaum’ ‘Kanoon’ ‘Bhai Bhai’ ‘Chitralekha’ ‘Bheegi Raat’....மறக்க முடியாத படங்கள். மறக்க முடியாத நடிப்பு.
இவர் ஊக்குவித்து பின்னால் மிகப் பிரபலமானவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஷக்தி சமந்தா. இயக்கிய ‘Howrah Bridge’ அசோக் குமாரை ஸ்டைலிஷ் ஹீரோவாக்கியது. 2. பி.ஆர்.சோப்ரா. இவரை இயக்கிய ‘Gumrah’ அமோகமான பெயரை வாங்கித் தந்தது. 3.ரிஷிகேஷ் முகர்ஜி. இவரை இயக்கிய ‘Ashirvad’ படத்தில்தான் நேஷனல் அவார்டு கிடைத்தது இவருக்கு. (அதில் இவர் பாடிய ‘Rail Gadi...’ தான் திரையுலகின் முதல் rap song!)
பாம்பே டாக்கீஸ் தயாரிப்பாளர்களில் இவரும் இருந்த போது இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் தேவ் ஆனந்த். படம் ’Ziddi’ அதே படத்தில் அறிமுகமான மற்றொரு பிரபலர் பிரான்.
1987 -லிருந்து தன் பிறந்த நாளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டார். தம்பி கிஷோரின் மறைவு நாளாக அது ஆனதால்.
ஹோமியோபதி படித்திருந்த இவர், நோயுற்று காலை எடுக்கவிருந்த ஓர் இளம் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாராம்.
பலரின் ஃபேவரிட் ஆக சிலர் இருப்பார்கள். இவர் எவ்ரி ஒன்ஸ் ஃபேவரிட்!

Saturday, October 11, 2025

ஔவையார் என்றதும்...


வழி தவறி வந்த சிறுமியை குழந்தை பாக்கியம் இல்லாத செல்வத் தம்பதி எடுத்து வளர்க்கிறார்கள். பிள்ளையார் பக்தையாக வளரும் அந்தப் பெண், வேண்டாத திருமண வாழ்விலிருந்து தப்பிக்க வேண்டுகிறாள் பிள்ளையாரை. முதியவளாக மாறிவிடுகிறாள். அவ்வையார். ஜெமினியின் பிரமாண்ட தயாரிப்பு. நடித்தவர்? கட்டபொம்மன் என்றதும் சிவாஜி நினைவு வருவது போல ஔவையார் என்றதும் இவர்.
கே.பி.சுந்தராம்பாள்… இன்று பிறந்த நாள்!
தாராளமாகச் சொல்லலாம், தமிழ்த் திரையுலகின் முதல் கிரேட் ஸ்டார் என்று. ஆம், 1935-இலேயே ஒரு லட்சம் வாங்கிய நட்சத்திரம்.(பக்த நந்தனார்)
‘வாழ்க்கை என்னும் ஓடத்தி’ல் நம்மை அழைத்துச் சென்றவர் (பூம்புகார்). ‘ஞானப்பழத்தை’ மொழிந்து தந்தவர் ( திருவிளையாடல்). ‘காலத்தில் அழியாத’ பாடல்கள் தந்தவர் (மகாகவி காளிதாஸ்). ‘கேள்விகள் ஆயிரம்’ பாப்பாவை கேட்கச் செய்தவர் (உயிர் மேல் ஆசை). ‘வாசி வாசி என்று’ தமிழ் வாசித்தவர் (திருவிளையாடல்). ‘எங்கேயும் சக்தி உண்டு’ என்று காட்டியவர் (சக்தி லீலை) ‘கூப்பிட்ட குரலுக்கு’ யார் வராதது? ( துணைவன்)
அந்த கம்பீரக் குரலை கேட்டதும் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும்... அந்த கணீர்க் குரல் காதில் விழுந்ததும் பரவசம் பொங்கும்... அந்தப் பாசக் குரலில் மனம் அப்படியே இளகும்.
ஆரம்பத்தில் டிராமா ட்ரூப்பில் இருந்தபோது, தரப்பட்ட ஆண் வேடங்களையும் ஏற்று நடித்தார். ஒரு மைல் தூரம் கேட்கும் அவர் பாடினால் என்பார் நடிகர் சாரங்கபாணி.
செம பாராட்டில் இருந்தபோது சம புகழில் இருந்தவர் S.G.கிட்டப்பா. ரெண்டு பேரையுமே வேண்டியவர்கள் எச்சரித்தார்கள் அவருடன் பாடினால் உங்கள் பாட்டு எடுபடாது என்று. காதில் போட்டுக் கொண்டால் தானே? கொழும்பில் சந்தித்தபோது நேராக அவரிடமே கேட்டு விட்டார் கிட்டப்பா, ரிகர்சல் ஆரம்பிக்கலாமா என்று. சேர்ந்து பாடிய மேடைகள் கைதட்டலில் மூழ்கின. ‘வள்ளி திருமணம்’ படத்தில் சேர்ந்து நடிக்க, அது அவர்கள் திருமணத்தில் முடிந்தது. எதிர்பாராத கிட்டப்பாவின் 27 வயது மரணம்! மீண்டும் தனிமையில் அவர்.
எப்போதும் கதர் அணியும் இவர், 750 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். ஆறு மணி நேர கச்சேரி எல்லாம் அவருக்கு சாதாரணம்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான நேஷனல் அவார்டு, துணைவன் படத்துக்காக 1969 இல். M.L.C. ஆக பதவி பெற்றது 1951 இல். அவ்வகையில் கலைஞர்களில் முதலாமவர்.