Tuesday, July 22, 2025

விழுந்த யானை எழுந்தது...


அந்த இளைஞன் கொண்டு வந்து கொடுத்த நாடகத்தை படித்துவிட்டு அசந்து போனார் டி. கே. சண்முகம் அவர்கள். ரொம்பச் சின்ன வயசாயிருக்கே, உண்மையிலேயே இவன்தான் அதை எழுதியிருப்பானா? ஒரு ஸீனை அங்கேயே வைத்து எழுதச் சொல்ல, உடனே எழுதி காட்ட... தன் மேல் ‘ரத்த பாசம்’ கொண்ட எழுத்தாளரை தமிழ் சினிமா கண்டுகொண்டது.
‘கல்யாண பரிசு’ தந்தார். வியந்து தீர்ப்பதற்குள் ‘விடிவெள்ளி’ முளைத்தது. ரசித்து முடிப்பதற்குள் ‘தேன் நிலவு’ வந்தது. சிரித்து ஓய்வதற்குள் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திடுக்கிட்டு நிமிர்வதற்குள் ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ அமைத்தார். நெகிழ்ந்து நிற்பதற்குள் ‘காதலிக்க நேரமில்லை’ என்றார். சிரித்து தீர்ப்பதற்குள் ‘நெஞ்சிருக்கும் வரை’. நினைவில் அடைப்பதற்குள் ‘சிவந்த மண்’ படைத்தார். அசந்து நாம் நிற்க, ‘அழகை ஆராதித்துக்’ கொண்டிருந்தவருக்கோ ‘இளமை’ இன்னும் நெஞ்சில் ‘ஊஞ்சலாடுகிறது’.
ஶ்ரீதர்! 'இயக்குநரை' நமக்கு அறிமுகப்படுத்தியவர்..
இன்று பிறந்த நாள்!
தமிழ் திரையுலகுக்கு அவரளித்த முதல் கதையே யாரும் ‘எதிர்பாராதது.’ விமான விபத்தில் கண்ணை இழந்த இளைஞன் வீட்டுக்கு வந்து சேரும்போது காதலியை தன் அப்பாவின் மனைவியாக சந்திக்கிறான் என்ற ஒன்லைன். 1954-இல்!
‘1960 களில் தமிழ் திரை உலகம்’ என்றும் சொல்லலாம். சுருக்கமாக ‘ஸ்ரீதர் பீரியட்’ என்றும் சொல்லலாம். ‘அலைகடலில் எங்களது சிறிய தோணி, கலையுலகில் எங்களது புதிய பாணி..’ என்று தன்னை அழகாய் அறிமுகப்படுத்திக்கொண்டது அவரின் சித்ராலயா.
உருக்கமான ஒரு சீனை கற்பனை பண்ணினால் போதும், அதை நறுக்குத் தெறித்தாற்போல் நாலு வசனங்களால் சுவையூட்டி, வித்தியாசமான கோணங்களில் ஷாட் பிரித்து, டிகிரி சுத்தமாக நடிப்பை வாங்கி, விறுவிறு இயக்கத்தினால் மெருகேற்றி நம் கையில் கொடுத்து விடுவார். இவர் படங்களில் எடிட்டர் பாடு ரொம்ப கஷ்டம். (பெரும்பாலும் என் எம் சங்கர்.) ட்ரிம் பண்றதுன்னா எங்கே கை வைக்கிறது? அத்தனை கரெக்டான ஷாட்கள்.
மாமன் மகள், யார் பையன், மாதர்குல மாணிக்கம், எங்கள் வீட்டு மகாலட்சுமி .. எல்லாம் சக்கை போடு போட்டபோது இந்த வசன இளைஞரை யாரும் கவனிக்கவில்லை. இளங்கோவன் புனரமைத்த திரை வசன பாணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது இவர்தான். 'உத்தம புத்திரன்' வசனம் பத்தி மொத்தமும் எழுதணும்னா இங்கே இடம் பத்தாது... அந்த பட்டாபிஷேக சிவாஜி ஸ்பீச் ஒண்ணு போதுமே!
பாடல் காட்சிகளை படமாக்குவதில் இணை இல்லை. ‘நெஞ்சிருக்கும் வரை’யில் கடற்கரை சாலையில் சிவாஜி, முத்துராமன், கோபி அவங்க பாட்டுக்கு, எம்.எஸ்.வி. பாட்டுக்கு ஆடிக்கொண்டே வர, ட்ராலியில் நம்மை அழைத்துக்கொண்டு, (துளி கிரௌட் இல்லை ஃபீல்டில்) ஜங்ஷனுக்கு ஜங்ஷன் ஆடவைத்து... அத்தோடு திருப்திப்படுபவர் அல்லவே அவர்? லாரியை உபயோகித்தாரோ, இல்லை அசலையே கொண்டு வந்தாரோ, நடு பீச் ரோட்டில் க்ரேன் ஷாட்டும் வைத்துவிட்டார்!
பெண் பார்க்க வந்திருக்கும் போது அடுத்த வீட்டில் காப்பி பொடி கடன் வாங்க ஓடும் ‘சுமைதாங்கி’ காட்சியாகட்டும், ( மிடில் கிளாஸ் ஃபீலிங்கை ஒரே காட்சியில்!) அரை அடி உயரத்தில் ஹெலிகாப்டர் சிவாஜியை அடித்துப் போட முயல்வதை பள்ளத்திலிருந்து காட்டி பிரம்மாண்டத்தை ஒரே காட்சியில் தரும் ‘சிவந்த மண்’ காட்சியாகட்டும் இவர் ரேஞ்ச் படுவிசாலம்! ‘சிவந்த மண்’ (நம்பியார் இதில் கம்பீரர்!) என்ன ஒரு ஸ்டைல் பீரியட் ஃபில்ம்!
‘விடிவெள்ளி’ விமர்சனத்தில் ‘விழுந்த யானை எழுந்தது’ என்று இவரைக் குறிப்பிட்டது குமுதம். பங்களா மாடியில் குதித்து சிவாஜி திருடச் செல்லும் அந்த அசத்தல் ஆரம்பக் காட்சிகள்! சிவாஜியின் யானைப் பசிக்கு சுமாராகவேனும் தீனி போட்ட சிலரில் முக்கியமானவர். அற்புதமான ஒரு இசையமைப்பாளர் தந்தார் நமக்கு: ஏ. எம். ராஜா.
சிவாஜி, முத்துராமன், விஜயா என்று யாருக்குமே துளி மேக்கப் இல்லாமல் இவர் எடுத்திருந்த அந்தப்படம் மட்டும் முழு வெற்றி பெற்றிருந்தால் பேன் கேக்குக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும் ‘நெஞ்சிருக்கும் வரை’யோடு!
‘கா. நேரமில்லை’யில் நாம் பார்ப்பது ‘சிரிதர்’ என்றால் போலீஸ்காரன் மகளில் நாம் பார்ப்பது சீரியஸ்தர். ‘தேன் நிலவி’ல் காஷ்மீர குளிர் குன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது வைஜயந்திமாலாவிடம் ஜெமினி கேட்பார் குறும்பாக: ‘இன்னும் கொஞ்சம் மேலே போவோமா?’ அது ரொமான்டிக் ஸ்ரீதர்!
காட்சிகளை நயமாக அமைப்பதில் கில்லாடி. ‘Saathi’யில் (பாலும் பழமும்’ இந்தி) ராஜேந்திரகுமார். வைஜயந்திமாலா தம்பதி ஊட்டியில் உலாவும்போது சஷி கபூர் லவ் சீன் ஷூட்டிங் பார்த்து வெட்கப்படுவார் வைஜு அழகாக. ஹிந்தி திரையுலகத்திற்கு இவர் தந்த Nazrana, Dil Ek Mandir இரண்டு மைல் கல்லும் போதும் இதமாக வழிகாட்ட.
Wit and Wisdom கலந்த அவர் வசனங்களுக்கு சாம்பிள் சொல்றது கஷ்டம். அத்தனை அதிகமாக! ‘நெஞ்சிருக்கும் வரை’யில், ‘கொஞ்சம்கூட கண்கலங்காம ஒரு துளி கண்ணீர் கூட விடாம உன்னால எப்படிடா இருக்க முடியுது?’ன்னு கேட்கும் கோபியிடம் சிவாஜி, with a smile: ‘வேதனையையும் துன்பத்தையும் சுமந்துகொண்டு என்ன மாதிரி கோடிக்கணக்கான பேர் இந்த உலகத்தில இருக்கிறாங்கடா, அத்தனைபேரும் கண்ணீர் சிந்த ஆரம்பிச்சா இந்த உலகமே அந்த கண்ணீரில மூழ்கிடும். Just to save the world, நான் கண்ணீரே சிந்தறதில்லே!’
இத்தனை எழுதிய பிறகும் அவரைப் பற்றி ஒன்றுமே எழுதாதது போல் தோன்றுகிறதே, அவர்தான் ஸ்ரீதர்!
-கே.பி.ஜனார்த்தனன்

Monday, July 21, 2025

மிகச் சிறிய விடை ...


அவரை மறந்தாலும், அவர் எழுதிய அந்த நாவலை மறக்க முடியாது. அந்த நாவலை மறந்தாலும் அதில் வரும் அந்த வாக்கியத்தை மறக்கமுடியாது.
‘தோற்பதற்காக படைக்கப்பட்டவன் அல்ல மனிதன். ஒரு மனிதன் அழிக்கப்படலாம்; ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது.’
Ernest Hemingway… அவர் காலத்துக்கு way too advanced writer.
இன்று பிறந்த நாள்!
அந்த நாவல்தான் ‘The Old Man and the Sea.’ உடனடியாக வாங்கிக் கொடுத்தது கதைக்கான புலிட்சர் பரிசு. உதவியது அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவதில்.
84 நாட்கள் எந்த ஒரு மீனும் சிக்காமல் துரதிர்ஷ்டசாலி என்று முத்திரை குத்தப்பட்ட வேதனை, கிழவன் ஸாண்டியாகோவுக்கு. இன்றைக்கு எப்படியும் மீனோடு வருவேன் என்று கிளம்புகிறான், அந்த சிறிய படகில். சிக்குகிறது ஒரு பெரிய மெர்லின் மீன். திமிறும் முரட்டு மீனை இழுத்தெடுக்க முடியாத அவனையும் படகையும் அது இழுத்துச் செல்கிறது. இருவருக்குமான அந்தப் போராட்டம் இரண்டு நாளுக்கு மேல் நீள்கிறது. நேர்ந்த காயங்களில் உடல் உருக்குலைந்தாலும் மன உரம் குறையவில்லை. ஒருமித்த உக்கிரத்தில் குத்தீட்டியால் அதைக் கொன்று விடுகிறான், ஆனால் அதைக் கொண்டு வருவதற்குள் சுறாக்கள் அதைத் தாக்க அந்தப் போரில் இன்னும் தளர்கிறான். அவை தின்றது போக, கரைக்கு வரும் மீனின் பதினெட்டடி எலும்பைக் கண்டு வியந்து நிற்கிறார்கள் எல்லாரும்.
ஸான்டியாகோ தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் வார்த்தைகள் அற்புதமானவை.
‘நான் நினைக்கிற அளவுக்கு வலிமை இல்லாதவனாக இருக்கலாம்; ஆனால் என்னிடம் ஏராளமான தந்திரங்கள் இருக்கின்றன. வைராக்கியம் இருக்கிறது.’.
‘என்ன இல்லை உன்னிடம் என்று யோசிப்பதற்கான தருணம் அல்ல இது. உன்னால் என்ன செய்ய முடியும், உன்னிடம் இருக்கிறது என்பதை யோசி.’
‘ஏ மீனே, நான் சாவது வரை உன்னை விட போவதில்லை!’
திரைப்படமானபோது Spencer Tracy நடித்தார். கியூபாவிலிருந்த ஹெமிங்வேயை நேரில் சந்தித்து சம்மதம் வாங்கினாராம். ஆஸ்கார் நாமினேஷன்! டிவி படமானபோது நடித்த Anthony Quinn அதைத் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக கேட்டு வாங்கினாராம்.


படிக்கிற காலத்திலேயே பள்ளி பத்திரிகையில் எழுத ஆரம்பித்தவர் ஹெமிங்வே. Kansas City Star பத்திரிகை இவர் எழுத்தை செதுக்கியது. இரண்டாம் உலக யுத்தத்தில் பணியாற்றியதோடு பத்திரிகைகளுக்கும் பல கட்டுரைகள்.. அட்வெஞ்சர் காற்றடைக்கப்பட்ட அனுபவங்களால் ஆனது அவரது வாழ்க்கை.
இவருடைய ஸ்டைலும் நடையும் தமக்கென்று ஒரு பெயரை வாங்கிக் கொண்டன, ஏராளம் எழுத்தாளர்கள் பின்பற்றும் அளவுக்கு! அவர் சொல்வது… ‘நடந்த, நடக்கிற விஷயங்களிலிருந்தும் தெரிந்த, தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களில் இருந்தும் நீங்கள் முயன்று கண்டுணருவது முற்றிலும் புதிதான விஷயம் மட்டுமல்ல, அது அசல் விஷயங்களை விட அசலானதும் துடிப்பானதுமான ஒன்று. அதற்கு நீங்கள் உயிர் கொடுக்கிறீர்கள். செம்மையாகச் செய்யும்போது அதற்கு அழியாத் தன்மையும் கொடுக்கிறீர்கள்.’
காதலித்த ஆக்னஸ் தன்னை விட்டுச் சென்றதில் உருவான கதையின் பெயர் ‘A very short Story.’
படைத்த மற்றொரு காவியம் அறிவீர்கள்: ‘A Farewell to Arms.’ முதல் உலக யுத்த பின்னணியை வைத்து எழுதிய அந்த நாவலின் முடிவை ஒன்பது முறை திருத்தி எழுதினாராம். பிரமாதமான விற்பனையுடன் மகத்தான இடத்துக்கு அவரைக் கொண்டு சென்றது அது.
Quotes?
'மிகச் சிறிய விடை என்பது அந்த வேலையை செய்து விடுவது.'
'நம்பலாமா ஒருவரை என்பதை நன்கறிய நல்ல வழி அவரை நம்புவதே.'
'புத்திசாலிகளிடம் சந்தோஷம் நானறிந்தவரை அதிசயம்!'

Wednesday, July 16, 2025

நிறைய 'முதல்'கள். ..


M.G.M. பாரமௌண்ட் , யுனிவர்சலுக்கு இணையாக தமிழ்நாட்டில் ஒரு ஸ்டூடியோ கொடிகட்டிப் பறந்தது. சென்னையில் கூட அல்ல. சேலத்தில். 130க்கு மேலான படங்கள் தயாரான அந்த மாடர்ன் தியேட்டர்ஸை நிறுவியவர்..
T. R. சுந்தரம்.. இன்று பிறந்த நாள்.
லீட்ஸ் யூனிவர்சிடி லண்டனில் டெக்ஸ்டைல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு வந்தவர் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை லீட் செய்தவர்களில் ஒருவரானார். பேசும் படம் ஆரம்பித்த காலம் அது. சினிமா ஒரு பிஸினஸ் ஆக களம் இறங்கியிருந்தது. நண்பருடன் சேர்ந்து படம் தயாரிக்க ஆரம்பித்தவர் அடுத்து தொடங்கியதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
நிறைய 'முதல்'கள். தமிழின் முதல் கலர் படம், ('அலிபாபாவும் 40 திருடர்களும்') மலையாளத்தின் முதல் பேசும் படம், ('பாலன்'), தென்னிந்தியாவின் முதல் ஆங்கிலப் படம் ('ஜங்கிள்' - இதில் நம்பியார் நடித்தாராக்கும்!) தமிழின் முதல் இரட்டை வேடப் படம் ('உத்தம புத்திரன்' - P. U. சின்னப்பா)
தயாரான படங்களில் நிறைய பிரபலம்! 'சர்வாதிகாரி' ‘திகம்பர சாமியார்', 'மந்திரி குமாரி' ‘திரும்பிப்பார்', ‘பாசவலை’, 'இல்லற ஜோதி', ‘வல்லவனுக்கு வல்லவன்' ‘இரு வல்லவர்கள்'...
பேரைச் சொன்னாலே நினைவு வருவது அவரது ஒழுங்கும் நேர்த்தியும் தான்.ஒவ்வொரு நிமிடத்தையும் சரி, ஃப்ரேமையும் சரி, திட்டமிட்டு உபயோகித்த இவர் இயக்கிய படங்களே 50 க்கு மேல். நடித்த படம்கூட உண்டு: 'பர்மா ராணி'. உதவி டைரக்டராக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் K. S. சேதுமாதவனும், முக்தா சீனிவாசனும்.
><><><

Sunday, July 13, 2025

அவன் விருப்பம்…


அவன் விருப்பம்… (ஒரு குட்டிக் காமெடி)

கே.பி.ஜனார்த்தனன்

“உட்கார், விஜி. கொஞ்சம் பேசணும்.”
“ஐய, இப்ப டைம் இல்ல, மெஷின்லேருந்து துணி எடுத்துக் காயப் போடணும், மழை வரதுக்குள்ள.”
“பரவாயில்லை, உட்காரு பத்து நிமிஷம் தான்!”
“சரி என்ன விஷயம்?”
“இல்ல, நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே? ரெண்டு பேரும்தான் ஆபீஸ் போறோம். ரெண்டு பேருக்கும் ஒரே டைம் தான் மீதி இருக்கு. இப்படி வீட்ல இருக்கிற எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு நீயே செய்துட்டிருந்தா நான் ஒரு ஆளு சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்காதா?”
“அப்படி நான் என்ன பெரிய வேலை பார்த்துட்டு?”
“பின்ன? முழு சமையலையும் நீதான் பார்த்துக்கிறே. நான் வாக் போகும்போது வழியில காய் வாங்கிட்டு வருவதோடு சரி.”
“இப்ப என்ன சொல்ல வர்றே? என் சமையல் நல்லா இல்லையா?”
“ஏ ஒன்னா இருக்கு. அதுக்கே உனக்கு நேரம் பத்தாது. ஆனா பாத்திரத்தைக் கழுவறது? அதையும் நீ தான் பண்றே!”
“லேசா அலசி டிஷ் வாஷர்லதானே போடறேன்?”
“சரி, துணியெல்லாம் அயன் பண்றதும் நீதான்!”
“நல்லாயிருக்கே கதை… நீ அயன் பண்ணினா பளிச்சுன்னு இருக்குன்னு சொன்னது யாரு?”
“நான் தான்! நான் தான் சொன்னேன். சரி தோட்டத்துல தண்ணி ஊத்த சொல்லலியே? எல்லா செடிக்கும் தண்ணி ஊத்தறதும் நீதானே?”
“அதை ஒண்ணும் சொல்லாதே! அது எனக்கு பிடிச்ச வேலை. இந்த பூக்களை எல்லாம் நான் எப்படி ரசிக்கிறேன் தெரியுமா?”
“சரி, நீயாக ஒத்துக்க மாட்டே! அன்னைக்கு பெங்களூரிலேருந்து என் ஃப்ரெண்டு சந்தோஷ் வந்திருந்தான் இல்லை வீட்டுக்கு? ரெண்டு நாள் தங்கி இருந்தான்ல? ஊருக்கு போனவன் ஃபோன்ல என்னை வறுத்து எடுத்துட்டான். என்னதான் ஆதர்ச தம்பதின்னாலும் இப்படியா? உன்னை மாதிரி தானும் ஒரு வேலைக்குப் போகும் ஜீவன் இல்லையா? ஒரு லிமிட் இல்லையா? எங்க வீட்டிலேயும் நடக்கறதுதான், ஆனா இது டூ மச்! வருஷம் இது 2021. எங்களுக்கு உரிமை வேணும்னு அவங்க சங்கம் வெச்சு பேச ஆரம்பிச்சு எத்தனை வருஷம் ஆச்சு? நீ என்னன்னா.. வக்கீல் நோட்டீஸ்ல போய்த்தான் முடியப் போகுது பாரு! அப்படி இப்படின்னு விளாசிட்டான்.”
“இத பாரு, வெளியில உள்ளவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கிற மாதிரியா நாம இருக்கோம்?”
“அப்ப அதை விடு. ஊரிலேருந்து உங்கம்மா வந்திருந்தாங்களே நாலு நாளைக்கு? அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? வீட்டில ஒரு தட்டு கழுவினதில்லேயே விஜி? இங்கே என்னடான்னா வண்டி வண்டியா எம்மாம் வேலை? பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலைன்னு அந்த நாலு நாள் தானும் டிஷ் வாஷ் பண்ணல? அப்போ உனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சுதா இல்லையா? அது எப்பவும் கிடைக்கணுமா வேண்டாமா?”
“ஐய, அந்த நாலு நாளும் எனக்கு வீட்ல நேரமே போகலே..”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. முன்களப் பணியை மாதிரி பின் களப் பணியையும் நாம பகிர்ந்துக்க வேண்டாமா? நான்தான் அதைச் செய், இதைச் செய்னு சொன்னேன். ஆனா நானும் ஏதாவது செய்யணும் இல்லையா?”
“சொல்றதை கேளு, எல்லாம் நான் பாத்துக்குறேன்!”
“அதெல்லாம் முடியாது. நாளைலேருந்து ரோஜாச் செடிக்கு மட்டும் நான் தான் தண்ணீர் ஊத்துவேன். நீ ஒண்ணும் சொல்லப்படாது, ஆமா, சொல்லிட்டேன்!”
“ஓகே, மைதிலி, இஃப் யூ இன்ஸிஸ்ட்!” என்று எழுந்தான் விஜி.
><><

இரண்டாவது வாரம்...


கரப்ஷனுக்கு எதிராகப் போராடும் கடுமையான போலீஸ் அதிகாரியின் கதையைப் படமாக்க விரும்பினார் அந்த டைரக்டர். ஷோலே கதாசிரியர்கள் சலீம்-ஜாவேத் எழுதியது. டயலாக் டெலிவரி முக்கியம். அதற்குப் பிரபலமான ராஜ்குமாரைத் தேடிக்கொண்டு போனார். மறுத்துவிட்டார். தர்மேந்திராவிலிருந்து தேவானந்த் வரை கேட்டுப் பார்த்தார். நடக்கவில்லை. ரொமாண்டிக் சீசன் அது. ஹீரோவுக்கு டூயட் இல்லாத கதை இது. விரும்பி வருவார்களோ? நான் ஒரு நடிகரை காட்டுகிறேன் என்று பிரான் அவரை அழைத்துக்கொண்டு போனார் ஒரு படத்துக்கு: ‘மதராஸ் டு பாண்டிச்சேரி’ ரீமேக்கான ‘பாம்பே டு கோவா’. அந்த உயரமான நடிகரை புக் பண்ண முன்வந்தார். விநியோகஸ்தர்கள் பின்வாங்கினர். வேறு வழி? சொந்தமாக ரிலீஸ் பண்ணினார். முதல் வாரம் ஆள் இல்லை. இரண்டாவது வாரம் டிக்கட் இல்லை. கூட்டம் அலைமோதிற்று. Blockbuster என்று சொன்னால் understatement!
‘ஆங்க்ரி யங் மேன்’ பிறந்தார். அமிதாப் நமக்கு கிடைத்தார்.
படம் Zanjeer. அவர் Prakash Mehra. இன்று பிறந்த நாள்..
ஐந்து வயதில் அம்மா இறந்து விட, எட்டு வயதில் அப்பா கைவிட, பதின்மூன்று ரூபாயுடன் பம்பாய்க்கு ஓடி வந்தவர். ஸ்டுடியோவில் சின்னச் சின்ன வேலைகள் .. புரடக் ஷன் அசிஸ்டன்ட்.. அசிஸ்டன்ட் டைரக்டர் என்று வளர்ந்தவர் எடுத்த முதல் படம் சஷி கபூர் நடித்த ‘Haseena Maan Jayegi.’
‘Zanjeer’ பாதை வகுக்க, வரிசையாக ஹிட் படங்கள் அமிதாப்புடன்: Namak Halaal, Laawaris, Mugaddar Ka Sikandar (தமிழில் சிவாஜி), Hera Pheri, Khoon Pasina. கமல், ஜெய் கலக்கிய ‘சவால்’ இவரது ‘Haath Ki Safai’ ரீமேக்.

><><><

Friday, July 11, 2025

ஏழாம் முறை ...


அந்தக் கதையில் வரலாற்றின் சதவிகிதம் நமக்கு தெரியாது, ஆனால் நம் எல்லார் மனதிலும் இடம் பிடித்து விட்ட, உரம் தந்து விட்ட கதை.
இங்கிலாந்து மன்னரால் பலமுறை தோற்கடிக்கப்பட்டு நாட்டைவிட்டே துரத்தப்பட்டு அயர்லாந்து மலைகளில் ஒளிந்து வாழ்ந்து வாழ்ந்தார் அந்த ஸ்காட்லாந்து மன்னர்.
மனம் சோர்ந்து இனி அவ்வளவுதான் என்று ஒரு குகையில் படுத்திருந்தவர் பார்வையில் பட்டது தன் வலையைப் பின்ன முயன்ற அந்தச் சிலந்தி.
எதிர்ச் சுவற்றுக்கு எட்டித் தாவிய அது பட்டுப் பட்டென்று தோற்று விழுந்தது. ஆனால் எள்ளளவும் தயங்காமல் அடுத்து அடுத்து என முயன்றது. ஏழாம் முறை எட்டியே விட்டது சுவற்றை. கட்டியே விட்டது கூட்டை.
பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு பற்றிக் கொண்டது உத்வேகம்!
தன் வீரர்களைத் திரட்டிக்கொண்டு சகோதரர்களின் உதவியுடன் மறுபடியும் யுத்தக் களத்தில் இறங்கினார், மொத்தமாக நாட்டை வென்றார்.
Robert the Bruce! இன்று பிறந்த நாள்!
பிரமாதமாகப் பேசப்பட்ட ‘Outlaw King’ (2018) படத்தில் ராபர்ட் ப்ரூஸாக நடித்தவர் Chris Pine.
><><><

பேரைச் சொன்னாலே ...


அந்த நாடகத்தில் நடிக்கும்போது அவர் யாரையும் தன்னை மேடைக்குப் பின்னால் சந்திக்க விடுவதில்லை. 4000 தடவைக்கு மேல் நடித்து அவர் பிரபல டோனி அவார்டு வாங்கிய நாடகம் ஆயிற்றே? "சிஸில் பி டிமிலி என்று ஒருத்தர் வந்திருக்கிறார், அதி முக்கிய விஷயமாம்!" விட்டால், உள்ளே வந்தவர், 'உங்க பேரப் பிள்ளைகள் பார்த்து ரசிக்க போகிற படத்தில் நடிக்க விருப்பமா?' என்று கேட்டார். இவர் தலையாட்ட, அவர் அளித்த அதி உன்னத ரோல் தான் ‘The Ten Commandments’ படத்தின் Rameses.
அந்த நடிகர்… Yul Brynner இன்று (11 July) பிறந்த நாள்.
பேரைச் சொன்னாலே நினைவுக்கு வருவது அவரின் மழித்த தலையும் விழித்த கண்களும் தாம்! கம்பீரக் குரல் நம் காதில் ஒலிக்கும். ரொம்ப விசேஷம் அவரது அசத்தல் நடை.
அந்த நாடகம் (‘The King and I’) படமானபோது ஆஸ்கார் அவார்ட் காத்திருந்தது. பரிசை வாங்கும் போது இவர் சொன்னது: நல்லா பார்த்துத்தான் கொடுத்திருக்கீங்கன்னு நம்புகிறேன், ஏன்னா என்ன தந்தாலும் இதை நான் திருப்பித்தர மாட்டேன்!
The Magnificent Seven இலும் Return of Seven இலும் மேக்னிஃபிஸன்டாக நடித்த யுல் ப்ரைனர் புகைப்படங்கள் எடுப்பார். படத்தின் ஸ்டில்களாக உபயோகிக்கும் அளவுக்கு அட்டகாசமாக!
தன்னை விட ஐந்தே வயசு சின்னவரான Tony Curtis க்கு அப்பாவாக, டாரஸ் பல்பாவாக நடித்த படம் ‘Taras Bulba’. அற்புதமான நாவல்.
அப்படியே திரையில் பிரதிபலிக்க அரும்பாடு பட்டவருக்கு அவர் காட்சிகளைக் குறைத்ததில் சற்று வருத்தம்தான். 'Escape From Zahrain' -இல் பாலைவனத்தினூடே தன் ஆட்களை அழைத்துக் கொண்டு தப்பித்து வரும் காட்சிகளில் பதைபதைக்க வைத்திருப்பார்.
தற்கொலை செய்யவிருந்த பெண்ணைக் காப்பாற்றுகிறான் அவன். கருணையினால் அல்ல. அவளை ஓர் இளவரசியாக நடிக்க வைத்து அவள் பேரில் போடப்படும் பணத்தை அபகரிக்க. பிரபல Ingrid Bergman உடன் இவர் நடித்த ‘Anastasia’....
மற்றொரு படம் ‘Morituri’. இரண்டாம் உலகப் போர்க்காலம். அந்த சரக்குக் கப்பலை கைப்பற்ற அதிலேயே ஆபீஸராக, பிளாக் மெயில் செய்யப்பட்டு அனுப்பப்படும் மார்லன் பிராண்டோவுக்கும் கப்பலைக் காப்பாற்ற போராடும் கேப்டன் யுல் ப்ரைன்னருக்கும் கதையிலும் நடிப்பிலும் நடக்கும் போராட்டத்தில் இருவருக்குமே வெற்றி என்பது அந்தக் க்ளைமாக்ஸ் காட்சியே சாட்சி. கப்பலில் இருந்தவர்கள் அனைவருமே இறந்துவிட, இவர்கள் இருவர் மட்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் நடந்ததை சொல்லி நகைப்பதும்..
‘Westworld’(1973) -ல் ரோபோவாக நடித்ததுதான் கடைசி ரோலோ என்றால் ஆம்.
><><><

Tuesday, July 8, 2025

எண் கைப் பூதம்...


 I Q test என்று ஒன்று வைக்கிறார்களே, அவரவர் திறமையை அங்குலம் சுத்தமாக அளந்து சொல்ல? அதை ஆரம்பித்து வைத்தவருக்கு இன்று (july 8) பிறந்த நாள்! Alfred Binet... (1857 - 1911)


சட்டம் பயின்ற இந்த பிரெஞ்சுக்காரர் சட்டென்று அதை உதறக் காரணமாயிருந்தது ஹிப்னாஸிஸ் பற்றி அவர் படித்த ஒரு புத்தகம். சைகாலஜியில் பையக் காலை வைத்தார். தானே பயின்றார். இருநூறு புத்தகம் எழுதியது அதில்தான்.

பள்ளியில் கற்றுக் கொடுப்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத மாணவர்களை கண்டெடுத்து தனியே பயிற்சி கொடுக்க, ஒரு டெஸ்ட் தயாரிக்கச் சொல்லிவந்தது ஓர் வேண்டுகோள் அரசிடமிருந்து அவருக்கு. நண்பர் சைமனுடன் சேர்ந்து முதலாவது ஐ.க்யூ. டெஸ்டை அவர் தயாரித்த வருடம் 1905.

அதை அடியொற்றி ஏகப்பட்ட இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் வந்து விட்டன. பத்து வருடத்தில் அமெரிக்காவில் காலை வைத்த இவரது டெஸ்ட், ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியால் வார்த்தெடுக்கப்பட்டு இன்றளவும் பாப்புலர்.

'இப்படி எல்லாம் ஒன்றும் புத்திசாலித்தனத்தை ஒரு நம்பருக்குள் கொண்டுவந்துவிட முடியாது, பல்வேறு திறமைகளை உள்ளடக்கியது அது, காலம் சூழ்நிலை மோடிவேஷன் போன்ற ஏகப்பட்ட காரணங்கள் அதை எளிதாக மாற்றிவிடும், ஒரே மாதிரி பின்னணியில் உள்ள குழந்தைகளையே ஒப்பிட இயலும்' என்ற கருத்தையும் அவரே விட்டு சென்றிருக்கிறார்.

உதா ஒன்று: பெற்றெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட சகோதர சகோதரிகளின் ஐ. க்யூ., தத்தெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டவர்களைவிட அதிக ஒற்றுமையாக இருக்குமாம். இப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள் இப்போது.

ஆக, ஐ க்யூவை ஒரு ஹைக்கூவாக சொன்னால்…

‘எண் பாட்டிலில்
அடைக்க முடியவில்லை அதை.
எண் கைப் பூதம்.’

Sunday, July 6, 2025

அணில் சொன்ன சேதி..

அணில் சொன்ன சேதி..
கே பி ஜனார்த்தனன் (‘சுட்டி விகடன்' 31-8-07)
அணில் சொன்ன சேதி கேட்டு மிருகங்கள் கவலையில் உறைந்து போய் நின்றன.
“நிஜமாவா?” என்றது மான்.
“ஐயையோ, அப்படியா?” என்றது முயல்.
“சே, என்னைவிட தந்திரசாலியா இருக்கிறாங்களே?” வியந்தது நரி.
யானை மட்டும் மீண்டும் அணிலிடம் விசாரித்தது.
“நீ கேள்விப்பட்டதை மறுபடியும் தெளிவாக சொல்லு!”
“இந்த பூமியிலே இனி வாழ முடியாது, செவ்வாய்க் கிரகத்திலே எல்லா வசதிகளையும் உருவாக்கிக்க முடியும், பூமிக்கு இனி குட்பை சொல்லிவிட வேண்டியதுதான்னு மனிதர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்,” என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் சோகத்தில் ஆழ்ந்து போயின.
சந்தனக் காட்டில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. நகரில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்திற்கு தினமும் சென்று அணில் தகவல்களை திரட்டி வரும். அணிலுக்கு அங்கு ராஜ மரியாதை!
விஞ்ஞானிகள் கொடுக்கும் பழம் கொட்டைகளைத் தின்றுவிட்டு அங்கேயே சுற்றி வரும். அப்போது காதில் விழும் சேதிகளை காட்டுக்கு வந்து மற்ற மிருகங்களிடம் சொல்லும். இதனால் அணில் மீது மற்ற விலங்குகளுக்கும் அலாதியான பிரியம். சில நாட்களாக அணில் சொன்ன சேதிகள் மற்றவைகளைக் கவலையடையச் செய்தது. வேற்றுக் கிரகங்கள் பற்றிய மனிதர்களின் ஆராய்ச்சி, அங்கே குடியேற அவர்கள் திட்டமிடுவது பற்றி விலங்குகள் பரபரப்பாக பேசிக்கொண்டன. இப்போது ஒரேயடியாக பூமியை விட்டு மனிதர்கள் செவ்வாயில் குடியேறப் போகிறார்கள் என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் கவலை கொண்டன.
“எதற்காக இந்த அழகிய பூமியை விட்டுப் போறாங்க?” வினவியது முயல்.
“அதுவா? அவங்க இந்த பூமியை ஏற்கனவே பாழ் படுத்திட்டாங்க. இயற்கையின் சுழற்சியையும் கெடுத்துட்டாங்க. இதுக்கு மேலே இங்கே இருக்கிறது ஆபத்துன்னு வேற இடத்துக்கு போறாங்க.”
“நாமும் அவங்களோடு போக முடியாதா?” கேட்டது மான்.
“ஊஹூம்! அவங்க தங்களைக் காப்பாத்திக்கத்தான் நினைக்கிறாங்களே தவிர நம்மளைப் பத்தி யோசிக்கவே இல்லை.”
“அப்போ நாம என்ன பண்றது?”
“நாம இங்கேயே அழிய வேண்டியதுதான்.”
அன்று முழுவதும் எந்த விலங்கும் எதுவுமே சாப்பிடவில்லை அடுத்த நாளும் அணில் ஆய்வுக்கூடத்திற்கு விரைந்தது சில தகவல்களுடன் மாலை காட்டுக்கு திரும்பியது.
“நம்மையும் அழைத்துச்செல்ல அவங்க தீர்மானம் பண்ணிட்டாங்க,” என்று அணில் சொன்னவுடன் விலங்குகள் ரொம்பவும் ஆர்வமாயின.
“அப்படியா?” என்று மயில் கேட்க, “உண்மையாகவே நம்மை அழைச்சிட்டுப் போறாங்களா?” என்றது ஆமை.
“ஆமா. அந்தக் கிரகத்திலும் நாம அவங்களுக்குத் தேவைன்னு நினைக்கிறாங்க, அதனாலதான்!”
“அட, புரிஞ்சிக்கிட்டாங்களா?”
“ஆமாம்! பொதி சுமக்கவும், பால் கறக்கவும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டவும்னு இப்படிப் பல விஷயங்களுக்கு அவங்களுக்கு நாம தேவை. அதனால நம்மையும் அங்கே கொண்டு போறாங்க. இனி நாம கவலைப்பட வேண்டாம்.” இதைக் கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ந்தன.
மறுநாள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே வந்தது அணில்
“அவங்களுக்கு நாம தேவைதான். ஆனால் நம்மை அழைச்சிட்டுப் போகாமலேயே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்குவாங்களாம்!” எல்லாரும் விழிக்க அணில் விளக்கியது.
“தங்களுக்குத் தேவையான விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிக்குவாங்களாம்!”
அதைக்கேட்டு எல்லாரும் அசந்து போய் நிற்க, மூத்த விலங்கான யானை பேச ஆரம்பித்தது.
“எனக்கென்னவோ இது வருத்தப்பட வேண்டிய விஷயமா தெரியலே! நிஜமாகப் பார்த்தால் நாம் சந்தோஷப்படணும். இதைக் கொண்டாடணும்!”
“என்ன சொல்றீங்க?” கேட்டது நரி.
“இதோ பாருங்க, மனுஷங்கதான் பூமியைத் பாழ் படுத்தினது. அவங்க இங்கேயிருந்து போயிட்டா அப்புறம் இயற்கை தன் இயல்பு நிலைக்கு வந்துடும். பூமி மறுபடியும் ஒழுங்காயிடும். அதனால அவங்க நம்மையும் தங்களோட கூட்டிப்போக நினைத்தால்தான் நாம கவலைப்படணும்,” என்று யானை நிதானமாகச் சொன்னது.
இதைக்கேட்டு மற்ற விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன.

யாரும் மறக்காத...


அந்தப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஜீவனாம்சம் கொடுக்கத் திணறிக் கொண்டிருக்கும் தன் காதலனை மணம் செய்து கொள்ள பணம் வேணும். கம்பெனியில் நம்பி ஒப்படைத்த நாற்பதினாயிரம் டாலரை அபேஸ் பண்ணிக் கொண்டு காரில் விரைகிறாள் அவள். மழை, புயல்.. மோட்டல் ஒன்றில் தங்க வேண்டியதாகிறது. நார்மல் அல்லாத நார்மன் தான் அதன் ஓனர். ஷவரில் குளிக்கும் போது மெல்லக் கொல்லப் படுகிறாள்... ஆம், அதேதான். ‘Psycho.’
ஹிட்ச்காக்கின் ஹிட் டாக்கி.
‘மெயின் பிக்சர் ஆரம்பித்தபின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று தியேட்டர்களில் அறிவிக்கப்பட்ட அந்தப் படத்தில் ஹீரோயினாக வந்தவர்...
Janet Leigh... இன்று ( July 6) பிறந்த நாள்.
அந்த சின்னதானாலும் முக்கியமான வேடத்திற்கு ஆஸ்கார் நாமினேஷன் பிளஸ் கோல்டன் க்ளோப் அவார்ட் கிடைத்தது. ஒரு வாரம் எடுக்கப்பட்டது அந்த ஷவர் காட்சி. நடிக்கும்போது தெரியவில்லை ஆனால் அதை திரையில் பார்த்ததும்? ஷவரில் குளிப்பதையே நிறுத்திவிட்டார்.
பிற்பாடு ‘Hitchcock’ என்று படம் எடுத்தபோது அதில் இவராக நடித்தது நடிகை Scarlett Johansson.
‘Houdini’ படத்தில் நடிக்கும்போது கணவர் Tony Curtis -ஐ விட இவர் பிரபலமாக இருந்தார். ஆனாலும் அவர் பெயரை முதலில் போட வைத்தார்.
தம்பதிகள் சேர்ந்து நடித்த படங்களில் முக்கியமானது The Vikings. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் Jamie Lee Curtis. அவரும் பிரபல நடிகை (‘True Lies’)
அந்த ப்ரஃபசரிடம் படிக்கிற மாணவி ஒருத்தி அவரை முத்தமிட்டுவிட, பார்க்கும் அவர் மனைவி பத்ரகாளியாகிறாள். தப்பிக்க, தான் ஒரு சீக்ரட் போலீஸ் என்று ஒரு பொய் சொல்கிறார். அது யாரடா என்று நிஜப் போலீஸ் துரத்த… காமெடி ரகளை! கணவர் டோனியுடன் நடித்த ‘Who Was That Lady?’
பிரபல டைரக்டர் நடிகர் Orson Welles இன் ‘Touch of Evil’ படத்தில் நடித்தது பெருமிதம் தரும் அனுபவம்.

கவலைகளை உன்னிடத்தில் ...


பேச்சிழந்த சிறுவன் ராமு... நம்பிக்கையிழந்த தந்தை ஜெமினி... தாளாமல் கடலில் விழலாம் என்று அலைகளில் இறங்க... தூரத்தில் ஒலிக்கிறது பாடும் குரல், கோவிலிலிருந்து.
“கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்!
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்."
கால்கள் தம்மையறியாமல் இழுத்துச் செல்கிறது சன்னதிக்கு."பசிக்கு விருந்தாவான், நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு!"
அங்கே குருக்கள் நாகையா பாடிக் கொடிருக்கிறார்.
"..கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்!
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!"
கண்ணன் எப்படியெல்லாம் வந்தான் என்பதை கண்ணதாசனைவிட யாரால் அத்தனை அழகாகச் சொல்ல முடியும்?
எங்கோ ஒரு மதகு திறந்து, ஒரு திவலை விடாமல் மனக் கவலை வடிந்துவிட்ட மாதிரி…தானாய் ஓர் ஊற்று சுரந்து அன்பு வெள்ளம் நிறைந்து பெருக்கெடுத்தாற்போல உணர்ந்து…
இப்போது ஜெமினியும் சேர்ந்து பாடுகிறார்.
"கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்!
காவல் என்னும் கைநீட்டிக் காக்க வேண்டும்!"
கனிவும் ஏக்கமுமாக அவர் குரலும் (டி.எம்.எஸ்.) அன்பும் ஆதரவுமாக இவர் குரலும்... (சீர்காழி)
உருகி உருகி பாடுகிறார்கள். மருகி மருகி கேட்கிறோம்.. படம்? 'ராமு.'
அந்தக் கடைசி வரிகள்! விஸ்வநாதனின் இசை இங்கே விஸ்வரூபம் எடுக்கிறது.
"கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா..!"
எல்லோருடைய உள்ளமுமே வேண்டுவதல்லவா அது!

><><><

Tuesday, July 1, 2025

இசை ஜீனியஸ்...


‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள். கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க, கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..
நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!
தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது, இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.
'கல்யாண பரிசு' படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது, பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசைப் பரிசு.
“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரித்த படம்.. ‘தேன்நிலவு.’
கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும். “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம்…”
இவருடைய progression (பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” (தேன் நிலவு) பாடலிலும் சரி, “புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” (ஆடிப்பெருக்கு) பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.
பி.பி. ஸ்ரீனிவாஸின் மிக இனிமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').
இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த ஒரு நாள் விடாமல் ஒலித்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”
“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலோ அதிமதுரம்! “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.
வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கே.வி. மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.
பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? வேறு யாருக்காவது ராஜா பாடினால், 'அட, ஜெமினி இந்த நடிகருக்கு பின்னணி பாடியிருக்கிறாரே?' என்று ஒரு கணம் நாம் தடுமாறும் அளவுக்கு!
“கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..” என்று ராஜா-ஜெமினி இனிமை லிஸ்ட் பெருமை மிக்கது.
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி)
அதுபோன்ற ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது! “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு) “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா)
‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..” பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! "தேன் உண்ணும் வண்டு.." பாடலில் "வீணை இன்ப நாதம்.." “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் அந்த மயக்கும் என்ட்ரி “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”
ஜாலி பாடல்களிலும் கலீர் கலீரென ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..”
எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்) சேர்ந்து பாடியவர். ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை…
ராஜா - ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்து வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி.
ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு)
.எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..” “அன்பே.. நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே மனம் பிழியும் சோகம் வழியும் அந்தப் பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)
Re entry சில ஹிட்கள் பாடத் தந்தது. 'ரங்கராட்டினம்' படத்தில் வி. குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் 'அன்பு ரோஜா'வில் “ஏனடா கண்ணா..”
“மலரே ஓ மலரே..” வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்! 'நீ என் மலரல்ல..' எனும்போது என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!
‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் பாடினார் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.
சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்) “புதுமை நிலா அங்கே..” (கோமதியின் காதலன்)
ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை அப்லிஃப்ட் செய்ய முடியும்? சி. என். பாண்டுரங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள்.
மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர். தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். இழந்தது நாம்.
><><

ஒரே வருடத்தில் ...


ஏழு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. கார் ஒன்று மோதியதில் இடுப்பில் எலும்பு முறிவு. நடப்பதே கஷ்டம் என்றார் டாக்டர். பொய்யாக்கி ஒரே வருடத்தில் நடந்து காட்டினார். ஆனாலும் உயரம் குறைந்துபோன ஒரு காலை, ஷூவில் உயரம் வைத்து சரி பண்ணி நடக்க வேண்டியதாயிற்றாம். தோழிகளின் கிண்டல் எத்தனை வேதனையாக இருந்திருக்கும் அந்த பெண்ணுக்கு? ஆனால் பின்னாளில் அவரொரு மூவி ஸ்டார் ஆனபோது அதுவே அவரது அழகிய பாணி ஆகிவிட்டது.

அவர் Susan Hayward... ஜூன் 30. பிறந்தநாள்!
உலகம் முழுவதும் சொல்லப்படவேண்டிய உண்மைக் கதை இது என்ற ஆல்பர்ட் காம்யூவின் அழுத்தமான முன்னுரை வரிகளுடன் ஆரம்பிக்கிறார்கள் அந்தப் பிரபல படத்தை. ‘I Want to Live.’ வேதனையான குழந்தைப்பருவம், வீணான மணவாழ்க்கை, வேண்டாத சகவாசம் , எல்லாமாகச் சேர்ந்து அவளை ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க வைக்கிறது. மரண தண்டனை. நாற்காலியில் அமரும் கடைசி நிமிடம் வரை அவளது போராட்டம்.. அவள் படும் பாடு.. அவளுடன் சேர்ந்து நாம் படும் பாடு.. அத்தனை அற்புதமாக நடித்திருந்தார் சுஸன். அதுவரை நாமினேட் ஆவதும் நழுவிப் போவதுமாக நாலு முறை இருந்த ஆஸ்கார், நச்சென்று வந்து விழுந்துவிட்டது கையில். தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் லிஸ்டில்.
'Gone with the Wind' படத்திற்காக நாடெங்கும் நடந்த நாயகி தேர்வில் தோற்றவர். ஆனால் தேர்வான Vivien Liegh பெற்ற நட்சத்திர அந்தஸ்தை அடுத்த பத்து வருடங்களிலேயே இவரும் அடைந்துவிட்டார். நடிப்பும் க்ளாமரும் நல்லதொரு விகிதத்தில் கலந்து அளித்த நடிகை.
The Conqueror படத்தில் நடிக்கும் போதுதான் கேன்சர் வந்து இவரைக் கொண்டது. அந்தப் படத்தில் நடித்த JohnWayne -ம் டைரக்டரும் கேன்சரிலேயே முடிவு கொண்டனர்.
Quotes?
‘வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை மிகச் சின்ன வயதிலேயே அறிந்துகொண்டேன் நான். குடும்பம், சுற்றுப்புறம் எல்லாமே வறுமை. வறுமை. வாழ்க்கையின் எல்லா அவலங்களில் இருந்தும் நான் விடுபட, சினிமா தியேட்டர் தான் ஒரே வழியாக இருந்தது. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அப்போது தான் தீர்மானித்தேன். ஒரு உறுதியான பெண்மணியாக நான் உருவெடுத்தது அங்கேதான்.’
‘ஓய்வாக உட்கார்ந்ததே இல்லை நான். அது எப்படி என்றுகூட எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வாழ்க்கை மிகச் சின்னது, ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு!’