Monday, April 25, 2022

ஹாலிவுட்டின் ஒரு பானுமதி...



புகை என்றால் தன் காதலனுக்குப் பகை என்பதால், தான் சிகரெட் பிடிப்பதை எப்படியாவது நிறுத்த வழி கேட்டு அந்த சைக்கோதெரபிஸ்டிடம் வருகிறாள் டெய்சி. அவர் அவளை ஹிப்னாடைஸ் செய்ததில் அவளுடைய முன் பிறவிகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே போய் வருகிறாள். அதில் ஒன்றில் அவள் பிரபல நாட்டியக்காரி மெலிண்டாவாக இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. மெலிண்டாவின் தீவிர அபிமானியான டாக்டர் மிரண்டார், இதாண்டா நான் தேடின பெண்ணென்று! உடனே டெய்சியை காதலிக்கிறார். அவளும் அவரை.

ஆனால் பாருங்கள் அவர் காதலிப்பது தன்னை அல்ல, தன்னுள் இருக்கும் மெலிண்டாவைன்னு தெரிய வந்ததும் - எந்தப் பெண்ணாவது சம்மதிப்பாளா? - உதறி விடுகிறாள். அவரோ விடாப்பிடியாக கெஞ்சுகிறார். மறுபடி தன்னுள்ளே சஞ்சரித்து வந்தவள் அவருக்கு அந்த சந்தோஷச் செய்தியை கொடுக்கிறாள்: “கவலைப்படாதீங்க, என் அடுத்த பிறவி லாரா உங்களைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள் அம்பது வருஷத்துக்குப் பிறகு!”


‘On a Clear Day You can See Forever’ (1970) படத்தில் டெய்சியாக வந்து கலக்கியவர்…
Barbara Streisand. இன்று பிறந்த நாள்..

ஹாலிவுட்டின் ஒரு பானுமதி. ஆம், பாடகியும் நடிகையும்!.. ஏன் டைரக்டரும் திரைக்கதாசிரியரும் கவிஞரும் தயாரிப்பாளரும் கூட. சென்ற நூற்றாண்டின் மிக அதிக ரெக்கார்டு விற்பனையான பாடகி!
நைட் கிளப் பாடகியாக துளிர்த்து, பிராட்வே நாடகங்களில் மிளிர்ந்து, டிவி சிரீஸில் ஒளிர்ந்து, திரைக்கு வந்தார் மனம் குளிர்ந்து. ஒமர் ஷரிஃபுடன் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஆஸ்கார்! பென்ஹர் புகழ் வில்லியம் வைலர் டைரக்ட் செய்த படமாச்சே? ஒரே படத்தில் நட்சத்திரமானார். அதே பிறந்தநாள் கொண்ட ஷர்லி மக்லீனுக்குப் போவதாயிருந்த ரோல் அது.
இவரின் ‘The Way We Were’ படப் பாடலை கேட்டால் மிகச் சிறிய விமானமொன்றிலேறி மிக உயரத்தில் வளைய வருவது the way you will feel! லிங்க் கீழே.
இவர் இயக்கிய ‘Yenti’ படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். வேறென்ன வேண்டும் திறமையை சொல்ல?
ஆஸ்கார், கிராமி, எம்மி, டோனி, கோல்டன் க்ளோப் என்று நடிப்பு, பாட்டு, நாடக மேடைக்கான அத்தனை டாப் அவார்டுகளையும் அள்ளிக் கொண்ட ஒரே நடிகை.
இவ்வளவும் சாதித்தவர் சொன்னது: நான் உருப்படுவேன்னு எங்க அம்மா நெனைக்கவே இல்லை.

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

தகவல்கள் சிறப்பு.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அட! அங்கும் முற்பிறவி நம்பிக்கை எல்லாம் இருக்கிறதே? அவர்கள் பேய்ப்படங்கள் எடுப்பது தெரியும். பெரும்பான்மையானவர்கள் கடைசி வரிக்குச் சொந்தமானவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன்.

நல்ல விவரங்கள்

கீதா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!