Thursday, January 21, 2021

தேவன் கோவில் மணி ஓசை...

எந்த நல்ல பாடலையும் எந்த நல்ல பாடகர் பாடினாலும் நல்லாத்தான் இருக்கும் என்பார்கள். ஆனால் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..." "எங்கிருந்தோ வந்தான்.. ரங்கன்.." "ஓடம் நதியினிலே.." இந்த மூன்று பாடல்களையும் வேறு யார் பாடுவதாகவும் ஏனோ நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. சொல்லப்போனால் இந்தப் பாடல்கள் அவர் பாடவென்றே எழுந்ததாக இருக்குமோ?

ஆம், சில பாடல்களுக்குப் பின்னணி இவர்தான் ஒரே சாய்ஸ் இசையமைப்பாளர்களுக்கு. வார்த்தைகளை பாடலில் தெளிவாக இவரை விட யாரும் உச்சரிக்க முடியுமா? அடிக்கடி தோன்றி செல்லும் வியப்பு!
சீர்காழி கோவிந்த ராஜன்... Jan 19. பிறந்த நாள்!
“சிரிப்புத்தான் வருகுதையா…” என்று சிரித்தபடியே தமிழ் திரையுலகில் நுழைந்தார். படம் ‘பொன்வயல்.’ அதுவே பெரிய ஹிட். அதைத் தாண்டிச் சென்றது “வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே.. நீயும் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே..” (‘கோமதியின் காதலன்’ ஜி. ராமநாதன்) அடுத்தது நம் வாழ்வில் கேட்டிராத அளவு சூப்பர் ஹிட்: “நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..” (‘ரம்பையின் காதல்.’ ஜி.ஆர்.)
“காதலெனும் சோலையிலே ராதே..” “நிலவோடு வான்முகில்…” "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்.." “உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா…” “ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…” என்று சில காலம் தன் கணீர் குரலில் எம்ஜிஆருக்கு ஆஸ்தான பின்னணிப் பாடகராக இடம் பெற்று வலம் வந்தார். அதில் மறக்க முடியாத மெலடி ஒன்று: “யாருக்கு யார் சொந்தம் என்பது.. என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது?” ('சபாஷ் மாப்பிளே’ கே.வி. மகாதேவன்)
பாடலும் இசையும் ஊட்டும் நம்பிக்கையைப் பன்மடங்கு அதிகரிக்க செய்யும் இவர் குரல். சாட்சி: “புதியதோர் உலகம் செய்வோம்..” “உலகம் சமநிலை பெற வேண்டும்..”
இவருடைய டைட்டில் சாங்ஸ் தனி விசேஷம். “ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது 'சுபதினம்'.” “அன்னையின் அருளே வா வா 'ஆடிப்பெருக்கே' வா வா வா!”(இசை: ஏ.எம்.ராஜா)
மகாதேவனின் “கல்லிலே கலைவண்ணம் கண்டான்..” கேட்கும்போது இவர் குரலின் இசை வண்ணம் காணமுடியும். கல்லில் சிலையை உளி செதுக்குவது போல அந்தப் பாட்டை செதுக்கி இருப்பார்.
“கோட்டையிலே......” என்று வெகுதூரம் இழுத்து அதில் ‘ஒரு ஆலமரத்தை’ அழகாக நடுவார் பாருங்கள், ‘முரடன் முத்து’வில்.. என்ன ஒரு ஓங்காரம்!
அதற்குச் சரியாக இவருக்கு இன்னொரு தணிந்த உருக்கமான குரல் உண்டு. மாயவநாதனின் அந்த பாடல்.. “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?” (‘பந்த பாசம்’) “காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது…” என்ற வரியில் அதை தெளிவாக உணரலாம்.
பக்திப் பாடல்கள் இவருடைய கோட்டை. “விநாயகனே, வினை தீர்ப்பவனே..” என்று அவர் தொடங்கும்போது மனதில் எழும் நம்பிக்கை பிரவாகம்! “நீயல்லால் தெய்வமில்லை, முருகா..” எனும்போது எழும் பக்திப் பரவசம்!
தனியே ஒரு ஜாலி குரலும் வைத்திருந்தார் போல ஸ்ரீதருக்கு... அவ்வுலகம் சென்று அமுதம் உண்டு வந்த இனிமை.. ‘காதலிக்க நேரமில்லை.’ அவ்வகையில் மற்றொன்று தங்கவேலுவுக்காக 'வல்லவனுக்கு வல்லவனி'ல் பாடும், "கண்டாலும் கண்டேனே உன்போலே..."
வீச்சுப் பாடல் ஒன்றை ஒரே மூச்சில் பாடியது நினைவிருக்கிறதா? “சாட்டைக் கையில் கொண்டு, வாங்கக் கண்டு, காளை ரெண்டு, ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு, எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு, ஓடுறா ராஜா, ஓடுறா ராஜா, ஓடுறா, ஓடுறா, ஓடுறா ராஜா…” என்ற நீளப் பல்லவியை ஒரே மூச்சில் ஒரே வீச்சில்! ரவிச்சந்திரன் மட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வரும் பாடல். (‘காதல் ஜோதி’ டி. கே. ராமமூர்த்தி)
அந்த “ஆடி அடங்கும் வாழ்க்கையடா..” இவரின் மாஸ்டர் பீஸ்! முதல் வரியை மூன்றாவது வரியில் ஆழப்படுத்திப் பாடுவது அழகு என்றால் 'தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை' என்று முடிப்பது சிலிர்க்க வைக்கும். நாலு வித்தியாச சரணங்களையும் நாலு வித உருக்கத்தில்!
காதலைக் கம்பீரமாகவும் வெளிப்படுத்துவார். “அமுதும் தேனும் எதற்கு?” என்று. கனிவாகவும்! ‘காதல் ஜோதி’யில் “உன் மேலே கொண்ட ஆசை, உத்தமியே மெத்த உண்டு..” ‘கொடுத்து வைத்தவளி’ல் “பாலாற்றில் சேலாடுது.. இரண்டு வேல் ஆடுது.. இடையில் நூல் ஆடுது.. மனது போராடுது!”
அந்தப் பாடலில் கடைசி சரணம் மட்டும் கணீர்க் குரலுடன் இவர் வந்து பாடும் போது பாடல் லிஃப்ட் ஆகும் அழகே தனி. எம் எல் வசந்தகுமாரியின் “மோகன ரங்கா என்னைப் பாரடா..” பாடலில் “அலைகடல் பெற்ற அருள் பெண் போலே..” எனப் பாடியபடி! நாலுவரி நச்சென்று!
எங்கிருந்தோ ஒலிக்கும் குரல் மாதிரி இராது இதயத்திலிருந்து ஒலிக்கும் அது. “எங்கிருந்தோ வந்தான்.. ரங்கன்..” பாடலில் “நண்பனாய்.. மந்திரியாய்.. நல்லாசிரியனுமாய்.. பண்பிலே தெய்வமாய்…” படிப்படியாக இப்படிக் குரலை ஏற்றிக்கொண்டே போய் விட்டு, “பார்வையிலே சேவகனாய்..” என்று இறகாய் இறங்கும் போது யார் மனம்தான் கிறங்காது?

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

என்னவொரு குரல் வளம் அவருக்கு. என்றைக்கும் மறக்க முடியாத குரல். எத்தனை எத்தனை பாடல்கள்! அனைத்தும் ரசிக்க வேண்டியவை.

கே. பி. ஜனா... said...

மகிழ்வுடன் நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!