Tuesday, August 21, 2018

அந்தப் பக்கமிருந்து...

அன்புடன் ஒரு நிமிடம் - 126

”என்னவெல்லாமோ பண்ணிப் பார்க்கிறேன் மாமா, சேல்ஸை பழைய நிலைக்கு கொண்டு வர முடியலே..." என்றான் மிக்க கவலை ரேகைகளுடன் வந்த சோமு...அவனின் சோப் தயாரிப்பு தொழிலில் தற்போது விற்பனை வீழ்ச்சி. 
”அதுக்கு நீ என்னென்ன நடவடிக்கை எடுத்தே?” கேட்டார் வாசு.
”என்னவெல்லாம் முடியுமோ அது.. வழக்கமா செய்யற விளம்பரத்தை 25% அதிகரிச்சுப் பார்த்தேன். புதுசா சில விளம்பர யுக்தி பண்ணினேன்.” 
”அப்புறம்?”
”விலையை 10% குறைச்சேன், கட்டுப்படியாகாதுன்னாலும்...” 
”அப்புறம்?”
”மார்கெட்டிங்க் சைடில் இன்னும் நாலு ஆளைப்  போட்டேன்..”
அப்போதுதான்...
வெளியே கூக்குரல். பசங்க சத்தம். “அப்படித்தான்! போடு, போடு!”
“இன்னும் நல்லா வீசு!” எட்டிப்பார்த்தார்கள். 
பையன்கள்.. ஒரு தொட்டிலை மரத்தில் கட்ட முயன்றுகொண்டு... கீழேயிருந்து கயிற்றை வீச வீச அது அந்த வேப்ப மரக் கிளையில் அந்தப் பக்கம் விழாமல் அதன்மேல்கிளை இலைகள் தட்டிவிட  கீழேயே திரும்பிற்று.
”கொஞ்சம் இருடா,” என்றொருவன் மாடிக்கு ஓடினான்.
அங்கிருந்து பார்த்துவிட்டு அவன் கத்தினான், ”டேய் அப்படிப் போடறதை நிறுத்து. இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் கயித்தை வீசு... ஏன்னா மேல் கிளை அந்தப் பக்கமா சாய்ஞ்சிருக்கு.”
அப்படியே போட, கயிறு அழகாய் அந்தப் பக்கம் ஜம்மென்று விழுந்தது.
”பார்த்தியா, இதைத்தான் உன்கிட்ட சொல்ல நினைச்சேன்...” என்றார் வாசு இவனிடம்.
”அந்தக் கயிறு மேலே போகணும். போகலே. எங்கே போகணுமோ அங்கேயிருந்து பார்த்தால்தான் என்ன பிரசினை, என்ன செய்யணும் அதுக்குன்னு தெரியும். அதேபோலத்தான் உன் பிரசினையும் உன் சைடிலிருந்தே பார்த்தால் போதாது. என்ன நம் இலக்கோ அந்தப் பக்கமிருந்து பார்த்தால்தான் அதுக்கு என்ன வழி, என்ன தடை, அதை அகற்ற, இலக்கை அடைய என்ன செய்யணும்னு தெளிவா தெரியும்.  
”அதைத்தான் இப்ப அந்த பையன் செய்தான். இப்ப நீயும் அதை செய்யறே. உன் பிரசினை என்ன? சேல்ஸ் டௌன். இலக்கு என்ன? முன்னே மாதிரி அதை நிறைய பேர் வாங்கணும். உன் சைடிலிருந்தே பார்த்து நீ இதுவரை செய்ததையே திரும்பத் திரும்ப அதிகமா செய்துட்டு இருக்கிறதில்லை.. அந்த எண்ட்லேயிருந்து பார். அவங்க வேறே எதையோ வாங்கறாங்க. என்ன காரணத்தால் நம்ம ப்ராடக்டை வாங்கலேன்னு யோசி. அவங்க வாங்கற மாற்று சோப்பில் இப்ப ஏதோ ஒண்ணு அதிகமா இருக்கலாம், ஆரோக்கியத்துக்கு உதவற ஒன்றோ, ஒரு அதி நறுமணமோ..  அப்ப நாம என்ன செய்யலாம்? அவங்களை சந்திச்சு பேசணும். நீ சில ஏஜெண்டுகளுக்குக் கொடுக்கறே. அவங்க சில்லறைக் கடைகளுக்குக் கொடுக்கறாங்க. அவங்கதானே கஸ்டமரோட பழகறாங்க? அவங்க மூலமா கஸ்டமர்களை அணுகினால் தானே  தெரிந்துவிடும் பிரசினையின் மையம். விஷயத்தை சரி செய்ய வழியும்!”
”முதல்ல அதை செய்யறேன்,” என்று புறப்பட்டான் அவன்.
><><
('அமுதம்' அக்டோபர் 2015 இதழில் வெளியானது)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்லப்பட்ட உதாரணமும் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனை தான் சொல்லி இருக்கிறார்....

அன்புடன் ஒரு நிமிடம் - தொடரட்டும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!