Wednesday, May 16, 2018

காரணம் ஆயிரம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 125

சொல்லிக் கொண்டேயிருந்தான் சுந்தர்.  ஃபங்ஷன் முடிந்து சாப்பாட்டுக்காக காத்திருந்த உறவினர், நண்பர்கள் காது கொடுத்தனர். பார்த்துக் கொண்டேயிருந்தார் சாத்வீகன். 

“...இத்தனை வருஷம் ஆச்சு. கணேசன் இன்னும் சொந்த வீடு கட்டாமல்... நேற்று கல்யாண வீட்டில் எல்லாரும் சந்திச்சபோது கேட்டேன் என்ன காரணம்னு. கடன் வாங்கறது பிடிக்காதாம் அவனுக்கு. சொன்னான். நாமெல்லாம் லோன் வாங்கி வீடு கட்டலையா? இதெல்லாம் ஒரு காரணமா? இத்தனை வருஷம் வேலை பார்த்தும் இன்னும் சொந்தமா ஒரு வீடு கட்டலைன்னா என்ன மதிப்பு இருக்கும்? இப்ப கட்டினால் அவங்கப்பா, அம்மாவுக்கு வயசான காலத்தில எத்தனை சௌகரியமா இருக்கும்! கையில எப்ப காசு சேர்ந்து.. அதுவரை அவங்க நல்லா இருக்கணும். அப்ப வேறே செலவு வந்து நின்னா என்ன பண்ணுவான்? எம். எஸ்சி வரை படிச்சு என்ன, கொஞ்சம் கூட விவரமே இல்லே.. ”

அதை ஆமோதித்து சில குரல்கள், ’அதானே என்ன இவன் இப்படி..’ என எழுமுன் சாத்வீகன் எழுந்து சுந்தரைத் தள்ளிக் கொண்டு போனார் அப்புறமாக.

"உட்கார்,’ என்றார், ”நம்ம கணேசன் வீடு கட்டாததற்குக் காரணங்கள்... ஒண்ணு, அவனுக்கு இப்போது ஒரு முக்கியமான பெரிய செலவு இருக்கு. ரெண்டு. இப்ப அவன் வாடகை வீட்டில் இருந்தாலும் பெற்றோரோடு இருக்க வசதியா இருக்கு, அதே வசதியில் வீடு கட்ட நிறைய ஆகும். மூணு. சொந்த ஊரில் அதைக் கட்ட ஆசை. அந்தப் பக்கம் டிரான்ஸ்ஃபர் ஆகிறப்ப கட்டினா பார்த்து சிக்கனமா கட்டலாம். நாலு. ஊர்ப்பக்கம் அவன் வாங்கிப் போட்டிருக்கிற மனை ரொம்பத் தள்ளியிருக்கு. ஆள் புழக்கம் வர சில வருஷமாகும். அஞ்சு...”

பன்னிரண்டு காரணம் சொன்னார். “இன்னும் இருக்கலாம். நீ ஒரு பொது இடத்தில வெச்சு திடீர்னு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறப்ப அவன் அப்ப தோணின ஒரு பதிலை சொல்றான். அந்த இடத்தின் சூழ்நிலையில் எல்லார் முன்னாலும் அவனால் எல்லா காரணத்தையும் சொல்ல முடியணும்னு எதிர்பார்க்கிறது சரியா? இடம் பொருள் ஏவல் பார்த்தல்லவா கேட்கணும்? ஒரு வேளை நீ அவனிடம் தனியாக கேட்டிருந்தால் அவன் விலாவாரியா சொல்லியிருக்கலாம். பொதுவாக யார் எதைசெய்தாலும் அதற்கு ஒரு காரணம்தான் இருக்கும்னு நாமாக நினைத்துக் கொள்கிறோம். அது அவர்கள் சொல்லும் ஒரு காரணம், அவ்வளவுதான். எல்லா காரணங்களும் எப்போதும் நம்மிடம் சொல்லக் கூடியவையாகவும் இருக்காது.  அப்படி நாம் எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. நபர் எப்படிப்பட்டவர் என்று மட்டுமே பார்க்கணும். சராசரி விவரமுள்ள ஒருவர் ஒரு விஷயத்தை செய்யவோ செய்யாமலிருக்கவோ சரியான, அவருக்கேயான காரணங்கள் இருக்கும். அதை நம்மிடம் அவங்க சொல்ல விரும்பலாம், விரும்பாமலுமிருக்கலாம். ஏதோ ஓரிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அவங்க சொல்கிறதை வைத்து அவர்களை மற்றவர் முன் விமரிசிப்பது என்பது நம்மையும் ஏமாற்றுவதோடு அவரையும் சங்கடப் படுத்தும். அது தேவையில்லைங்கிறது என் கருத்து.”

><><
('அமுதம்' செப்.2015 இதழில் வெளியானது)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கருத்து...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!