Sunday, November 20, 2016

அவள் - கவிதைகள்


341.
எப்படி ஜீவிக்க முடிகிறது உன்னால்,
எனக்கு மகனுக்கு மகளுக்கு என்று
இதயத்தை முழுவதுமாகப்
பங்கிட்டுக் கொடுத்துவிட்டு?

342
எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னை
சிலசமயம் 
எதற்கென்று தெரியாமலேயே.

343.
மாங்காய் வெட்டக்
கூராய் ஒன்றைத் தேடுகையில்
கண்ணில் படுகிறது உன் 
கண்.

344.
நீ சிரிக்கையில்
அழகு அதிகரிப்பதில்லை,
அது ஏற்கெனவே  
நூறு சதம் ஆகிவிட்டதால்.

345
இடவலமாகவும்
மேலும் கீழுமாகவும்
நகரும் உன் விழி
ரிமோட்டாக எனைப்
பந்தாடுகின்றனவே?

346
நீ
மிச்சம் வைத்த எழிலை
உலகம் பங்கிட்டுக் கொண்டது.

347
அழகு
சில வேளைகளில்
உன்னைப் போலிருக்கிறது.

348.
என் உலகத்தை
தயாரித்துவிட்டு
உனக்காகக் காத்திருக்கிறேன்.

349
உவப்பளிக்கிறதோ இல்லையோ உனக்கு,
உயிர் தருகின்றன எனக்கு
இக்கவிதைகள்.

350.
சிக்கனம் சிறிதுமின்றி
வாரியிறைக்கிறாயே,
எத்தனைதான் வைத்திருக்கிறாயோ 
அன்பு?

><><><

5 comments:

ரிஷபன் said...

எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

// அழகு
சில வேளைகளில்
உன்னைப் போலிருக்கிறது. //

ஆகா...!

கோமதி அரசு said...

அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துமே அருமை 342, 345, 348, 350 இன்னும் அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!