Thursday, October 13, 2016

அந்த இருபது நிமிடம்...

அன்புடன் ஒரு நிமிடம் - 108

”ரயில் சரியா பத்து முப்பதுக்கு. அரைமணி முன்னதா ஸ்டேஷன் போயிடணும்,” அறிவித்தார் வாசு.
”அப்ப வீட்டிலேர்ந்து எத்தனை மணிக்கு புறப்படணும்?” - ஜனனி.
”ஸ்டேஷன் போய்ச்சேர எப்படியும் இந்த ட்ராஃபிக் நெரிசல்ல நாற்பது நிமிஷமாவது ஆகும். அதனால சரியா ஒன்பது இருபதுக்கு எல்லாரும் ரெடியாயிரணும். போனதடவை மாதிரி கடைசி நேரத்தில்  லேட் பண்ணி டென்ஷனைக் கிளப்பக்கூடாது.” 
”ஆமா, சரியா ஒன்பது இருபதுக்கு ரெடியாயிடணும்க.”
எல்லாரிடமும் அதை சொன்னதோடு மட்டுமில்லாமல் ஹாலிலிருந்த கிளாக் அருகில் 9.20 என்று பெரிதாக ஒரு ஸ்டிக்கர் பேப்பரில் எழுதி ஒட்டிவைத்தார்.
அடுத்த சனிக்கிழமை குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஒரு கோவா டூர் போவதாக ஏற்பாடு. மொத்தம் ஒரு வாரம். ரயில் டிக்கட், ஹோட்டல் அறை எல்லாம் முன்கூட்டியே ரிசர்வ் செய்திருந்தார். 
ஜனனியிடம், ”இத பாரு, எல்லாரோட மருந்து மாத்திரையெல்லாம் கரெக்டா எடுத்து வெச்சுக்க...” அப்பாவிடம், ”கொஞ்சம் குளிராய்த்தானிருக்கும் உங்க ஸ்வெட்டரை....” அம்மாவிடம், ”அங்கே என்னென்ன வாங்கணும் உன் ஃப்ரண்ட்ஸுக்குன்னு லிஸ்டை முதலிலேயே...” ஒவ்வொருவருக்கும் முடிந்த வரையில் ஞாபகமூட்டலை செய்தார்.
ஒன்பது இருபது ஒன்பது இருபது என்று ஒன்பது தடவையாவது சொல்லியிருப்பார்.

சனிக்கிழமை காலை.
மணி ஒன்பது இருபது. எல்லாருமே ரெடியாகிவிட்டதோடு லக்கேஜும் வராந்தாவில் தயாராக எடுத்து வைத்துவிட்டார்கள்.
வாசு வந்தார் கையில் அவர் பெட்டி பையுடன்.  “எல்லாரும் ரெடியா? பேஷ்!” 
”ஓகே, கிளம்பலாமா...” என்ற ஜனனி வெளியே எட்டிப்பார்த்துவிட்டு, ”என்னங்க, டாக்சி  இன்னும் வரலியே?” 
”வரும்,” என்றவர் நிதானமாக சொன்னார், “ட்ரெய்ன் பத்து முப்பதுன்னு சொன்னேனில்லையா? சரியா பார்க்கலே நான். இப்பதான் கவனிச்சேன். பத்து ஐம்பதுக்குத்தான்.” 
எல்லாருக்கும் ஆச்சரியம். “என்னப்பா நீங்க...” அலுத்துக் கொண்டான் பரசு.
”சரி சரி, இப்ப இருபது நிமிஷம் எக்ஸ்ட்ரா, அவ்வளவுதானே?” என்றார்,  ”உட்காருங்க.  இந்த இருபது நிமிஷத்தில ஏதாவது ஞாபகம் வருதான்னு பாருங்க. எடுக்க மறந்த விஷயம்...” 
உட்கார்ந்து யோசித்ததில் பரசுவுக்கு தன் எஸ்.எல்.ஆர் காமிரா ஞாபகம் வந்தது. ஓடிப்போய் பக்கத்து வீட்டு நண்பனிடமிருந்து திருப்பி வாங்கி கொண்டு வந்தான். அம்மாவுக்கு தன் செல்போன் ஞாபகம் தட்ட விரைந்தாள் உள்ளே.  ஜனனியும், அட, அப்படி செய்யலாமே, மறந்துவிட்டோமே என்று காபி, பால்பவுடர், ஃப்ளாஸ்கை வழியில் உதவும் என எடுத்து வந்தாள். மறந்துவிட்ட தைல பாட்டிலை எடுத்துவைத்தார் தாத்தா. ”நல்ல வேளை திடீர்னு கொஞ்சம் நிமிஷம் கிடைத்ததோ என்னால் இதை எடுக்க முடிந்ததோ..” என்று கிட்டத்தட்ட எல்லாருமே சொன்னார்கள். ”என்னதான் பார்த்துப் பார்த்து எடுத்து வெச்சாலும் கடைசி கிளம்பறப்ப ஏதாவது ஒண்ணு மறந்துதான் போகுது...”
முதலிலேயே சரியாகத்தான் பார்த்திருந்தேன் ரயில் நேரத்தை என்று வாசு அவர்களிடம் சொல்லவேயில்லை.

(’அமுதம்’ ஏப்ரல் 2015 இதழில் வெளியானது)  

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதை சார். அதுவும் யதார்த்தம்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கோமதி அரசு said...

அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!