Friday, July 15, 2016

சிலரிடம் சில உதவிகள்..(நிமிடக் கதை)அன்புடன் ஒரு நிமிடம் - 103இரண்டு நாட்களாக வாசு அந்தக் கவலையில் உழன்று கொண்டிருந்தார். ஜனனி மெல்ல அவரை அணுகி, "என்னங்க, உங்க நண்பர் சிவாவைக் கேட்டுப் பார்க்கலாமே ஏன் அது உங்களுக்குத் தோணலை?” என்று கேட்டாள்.
சிரித்தார். ”அது எப்படி எனக்குத் தோணாமல் இருக்கும்? முதல்ல அவர் ஞாபகம்தானே வரும்?
”பின்னே ஏன்...”
”ஒரு மாசமாச்சு அவர்ட்ட இனி ஏதும் உதவின்னு போகக் கூடாதுன்னு முடிவு பண்ணி . உன்கிட்ட சொல்லலே.” 
”என்ன நடந்திச்சு?”
”கொஞ்ச நாள் முந்தி எங்க கம்பெனியில் ஒரு சாவனிர் வெளியிட்டோமே ஞாபகமிருக்கா? அதில அவர் கடைக்கு ஒரு விளம்பரம் கொடுக்க சொல்லி கேட்டேன். பார்க்கலாம் பார்க்கலாம்னு சொல்லி நழுவிட்டார். கொடுக்கவே இல்லை. வெறும் ரெண்டாயிரம் ரூபாய் மேட்டர். அப்பவே  தீர்மானிச்சேன்...”
”நிஜமாவே தரலையா?” நம்ப முடியாமல் ஜனனி.
"ஆனாலும் என்னை நானே சமாதானப் படுத்திக்கிட்டேன். போனமாசம் நம்ம ரெங்கநாதன் கடைசிப்பையன் ஒருத்தன் பி.எஸ் சி படிச்சுட்டு வேலை கிடைக்காமல் அலைஞ்சிட்டிருந்தானே, அவனுக்கு சிவாவோட கடையில் கணக்கெழுதற வேலை பார்ட் டைம் போட்டுக்கொடுன்னு சொன்னேன். அது கொஞ்சம் கஷ்டம், இப்ப முடியாதுன்னு முகத்துக்கு நேரே...”
”ஓஹோ?’ 
”ரெண்டு விஷயத்திலேயும் இப்படி நடந்திட்டு அவன் எப்பவும் போல பழகறான். ஏன், போன வாரம் அவனுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டப்போ எதும் நடக்காத மாதிரி என்கிட்ட கேட்டான். நானும் கொடுத்தேன். ஆனா நான் தீர்மானமா இருக்கேன், இனி எந்த உதவியும் அவனிடம் வேண்டாம்கிறதில.”    
”ஆனா இப்ப நமக்கு வேறே வழி...’
”ஹூம்! சாதாரணமா ஒரு நெருங்கிய நண்பன் செய்யற விஷயங்கள்! அதையே செய்யாதவனிடம் இப்ப நான் போய்,  எங்கப்பாவை திருவனந்தபுரம் அழைச்சிட்டுப் போய் ஹார்ட் செக் அப் செய்துட்டு வரணும், அப்பாயிண்ட்மெண்ட் நாலாம் தேதி, எனக்கு அந்த நாட்களில் சென்னையில் கம்பெனி மீட்டிங் இருக்குன்னு எப்படி கேட்டு... இன்னொரு முறை அவமானப்படணுமாக்கும்?’ 
யோசித்தாள் ஒரு நிமிடம். பின், ”தாராளமா கேக்கலாம்.” 
”அந்த ரெண்டு சம்பவத்தையும் யோசிக்காததால் இப்படி சொல்றியா?” 
”யோசிச்சதாலதான் இப்படி சொல்றேன். போன் பண்ணுங்க, உடனே...”
முணுமுணுத்தபடியே செய்தார்.
”எப்ப புறப்படணும், நான் ரெடி,” என்று வந்தது பதில். அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அரை நிமிடத்திலேயே விஷயம் முடிந்தது.   
”பரவாயில்லியே உன் ஊகம்!” அவளை ஆச்சரியமாக...
”நீங்களுமே யோசிச்சு பார்த்திருக்கலாம்தான். சிலருக்கு சில விஷயம் செய்யமுடியாததாக இருக்கலாம். அதை அவங்க செய்யலேங்கிறதை வெச்சு அவங்களை எந்த உதவியும் செய்யாதவர்னு முடிவு கட்டக்கூடாது இல்லையா? தப்பா நினைக்கலாகாது இல்லையா? ஏன்னா உங்களுக்கு எளிதாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் அவர்களுக்கு கஷ்டமா இருக்கலாம். அதே போல உங்க பார்வையில் பெருசா தெரியற விஷயங்கள் அவர்களுக்கு சாத்தியமானதாக இருக்கலாம். ”
”எஸ், எஸ்... இருக்கலாம்,” என்றார் தவறுக்கு வருந்தியபடி.
(’அமுதம்’ ஃபெப் 2015 இதழில் வெளியானது)

1 comment:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!