Sunday, May 8, 2016

ஓர் அழகு, ஓர் நகைச்சுவை...

அன்புடன் ஒரு நிமிடம் - 102

சோமுவின் சோர்ந்திருந்த முகமே சொல்லிற்று சாத்வீகனுக்கு, சென்ற வாரம் அவர் குமுறிக் கொண்டிருந்த பிரசினையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை என. இப்பவும் அந்த துன்பத்தை சொல்லி ஆறுதல் தேடியே வந்திருக்கிறார்...

அதனால் அந்த விஷயத்தையே தொடவில்லை சாத்வீகன். பொதுவாக சில விஷயங்களைப் பேசினார். திடீரென்று சொன்னார், ”ஒரு புதிர்.  நீங்க வரும்போது பார்த்திட்டிருந்தேன். வாங்க, நீங்களும் ட்ரை பண்ணலாம்.’

மனசுக்கு கொஞ்சம் மாற்று என்று நினைத்தாரோ என்னவோ, தலையாட்டினார்.

”இந்த நாலு நிமிஷ விடியோவைப் பாருங்க. பிரசினையான ஐந்து சிச்சுவேஷன். ஒவ்வொண்ணா பாருங்க. முதல்ல மிஸ்டர் ரகு. அவனுக்கு ஊரில தனியா திண்டாடற வயசான அப்பாவை தன்னோட டவுன்ல வெச்சுக்கணும்னு ஆசை.  ஆனா மனைவி அனிதா சம்மதிக்க மாட்டேங்கிறா. தவிக்கிறான்.” 

விடியோவை பார்க்கிறார்கள். ”சரி இப்ப கேள்வி என்னன்னா இந்த கஷ்டமான சூழ்நிலைக்குள்ளேயே இருக்கிற ஒரு அழகையும் ஒரு நகைச்சுவையும் கண்டு பிடிச்சு சொல்லணும்.”

கொஞ்ச நேர யோசனைக்குப் பின் சொன்னார் சோமு. “அழகு என்னன்னா அவன் தூரத்தில், மும்பையில் இருந்துகொண்டே ஊரிலுள்ள தன் ஃப்ரண்ட்ஸ் மூலமா அப்பாவுக்கு மெடிகல் ஹெல்ப் அப்பப்ப கிடைக்கிறதுக்கு ஏற்பாடு பண்றது.”

“சரியா சொல்லிட்டீங்க. அப்புறம் அந்த ஹ்யூமர்?”
“அந்த அப்பா தினம் போன் செஞ்சு ரவா உப்புமா எப்படி பண்றது, அவியலுக்கு காய் எப்படி வெட்டறதுன்னு கேக்கிறதும் அவங்க சொல்லித் தர்றதும் அவர் தப்புதப்பா பண்றதும் ஒரு விதத்தில தமாஷாத்தான் இருக்கு.”

”அதுவும் ரைட்தான்.”    

 அடுத்தாற்போல அந்த தம்பதி. பிரசினை? அவன் சக்திக்கு மீறின செலவாளி. அதனால் உறவினர்களிடம் கடன் மேல் கடன். திணறுகிறான். மனைவிக்கு அவனை அடக்கத் தெரியவில்லை. திணறுகிறாள். 

தேடிப் பார்த்துவிட்டு சோமு அவர்களின் பிரசினைக்குள் இருந்த ஓர் அழகை - தேவையே இன்றி அவன் வாங்கி வரும் சில பொருட்களை அவள் காதும் காதும் வெச்ச மாதிரி கடைக்கே திருப்பிக் கொடுத்தனுப்பி காசு வாங்குவது- சொல்லியதோடு, ஓர் நகைச்சுவையையும் - கடன் வாங்க நேர்ந்த நாட்களில் மட்டும் அவன் அவளை ஐஸ் வைத்து பேசி அதனாலேயே அவள் ஊகித்துவிடுவது - கண்டுகொண்டு சொன்னார்.

மூன்றாவது பிரசினையிலும்  சில நிமிட யோசனைக்குப் பின் வெகுசரியாக ஓர் அழகையும் நகைச்சுவையையும் கண்டுபிடித்துவிட்டார்.

நாலாவது ஐந்தாவது என்று தொடர, இன்னும் சீக்கிரத்தில் அவர் சொல்லலானார். சாத்வீகன் வியந்து கைகுலுக்க, அடுத்த நிமிடம் எழுந்து கொண்டார். ”நான் வர்றேன்.”

“என்ன அதுக்குள்ளே? உங்க பிரசினையைப் பத்தி ஏதோ சொல்ல வந்தீங்களே...”

”பரவாயில்லை. எல்லா பிரசினைக்குள்ளேயும் ஒரு அழகும் நகைச்சுவையும் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். அதை ரசித்தபடியே அந்த பிரசினையை ஏற்றுக் கொண்டு சமாளிக்கறதுதான் வாழ்க்கைன்னும்! எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றார், “ இப்ப!” 
(’அமுதம்’ ஃபெப்.2015 இதழில் வெளியானது)       

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

//எல்லா பிரசினைக்குள்ளேயும் ஒரு அழகும் நகைச்சுவையும் இருக்கு//

அதே தான். அதைப் புரிந்து கொள்வது தான் கடினமாக இருக்கிறது நம்மில் பலருக்கும்.

”தளிர் சுரேஷ்” said...

அழகு!

கோமதி அரசு said...

”பரவாயில்லை. எல்லா பிரசினைக்குள்ளேயும் ஒரு அழகும் நகைச்சுவையும் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.//

இப்படி புரிந்து கொண்டால் கவலை இல்லை வாழ்வில்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!