Thursday, July 10, 2014

அவ்வளவாக...


அன்புடன் ஒரு நிமிடம் - 61 

பார்த்துக் கொண்டேயிருந்தாள் ஜனனி. பொறுக்கவில்லை அவளுக்கு. வாசுவின் இந்த வளவளாவுக்கு ஒரு எல்லையே கிடையாதா?
எப்ப பார்த்தாலும் என்ன இப்படி ஒரு சின்னப் பையனிடம் ஒரே விஷயத்தையே உச்சரித்துக் கொண்டு? சொல்லப்போனால்  நச்சரித்துக் கொண்டு?

ரகு சாப்பிட உட்கார்ந்தால் போதும். தானும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு வந்து பக்கத்தில் அமர்ந்து கொள்கிறார்.அவன் பாட்டுக்கு அஞ்சு நிமிஷத்தில் சாப்பிட்டு எழுந்து போகிறவனிடம்...

"பாருடா இந்த சுட்ட அப்பளம், படு டேஸ்டா இல்லே?" "காரக் குழம்பு இன்னிக்கு சுமார்தான் இல்லியா?" "இந்த வெண்டைக்காய் ஏன் இத்தனை ருசி தெரியுமா? பொறுக்கிப் பொறுக்கி எடுத்தேனாக்கும் கடையில?" "போச்சு, போச்சு! அவ்வளவுதான் பச்சடி! உப்பு ஜாஸ்தி! "

தொடர்ந்து இப்படியே சொல்லிக் கொண்டிருப்பார். பேச்சும் சாப்பாட்டை விட்டு ஒரு வார்த்தை வெளியே போகாது
அவனும் ஒவ்வொன்றாகப் பதில் சொல்லி... சப்புக் கொட்டி சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளே ஆகிறது மணி ஒன்று!

ரகு குளிக்கப் போகிறான் என்றால் ஓடி வந்துவிடுவார்.

"இந்தாடா புதுசா வாங்கினேன் இந்த டவலை... துவட்டும்போது பாரு, செம சாஃப்டா இருக்கும்!" "இந்த சோப் பாரு, நுரையே வராது, ஆனா எப்படி மணம்  தூக்குதுன்னு இதைப் போடறப்ப பாரு." "பக்குவமா இருக்குடா வெந்நீர், குளிச்சுப் பார்த்து கரெக்டா எத்தனை டிகிரி சென்டி கிரேட்னு  சொல்லணும்! ஒரு பந்தயம்! சரியா?"

டிவியில் படம் பார்த்தால் கிட்ட வந்து உட்கார்ந்துக்குவார். அவ்வளவுதான். "இந்த ஸாங்  சின்னதா இருந்தாலும் நல்ல  மெலடி இல்லையா?" "பைட் கொஞ்சமும் ரியலா இல்லே நீ என்ன சொல்றே?" "கொடுத்தான் பாரு சடார்னு ஒரு ட்விஸ்ட்!"

மொத்தத்தில்,  வளவள  வளவள ...அவன் எங்கே போய்  என்ன பண்ணினாலும்...

அதிலும் வேறு ஏதாச்சும் சப்ஜெக்ட் பேசாமல் அவன் செய்துட்டிருக்கிற விஷயத்தைப் பத்தியே மேலும் மேலும் பேசிப் பேசி...அவனை ஒரு வழி பண்றதில என்ன குஷியோ இவருக்கு? தாங்க முடியாமல் அவள் தாத்தாவிடம் புலம்பினாள்.

"எனக்குப் புரிந்துவிட்டது!" என்றார் அவர் கூலாக. "யோசிச்சுத்தான் இப்படி பண்றான். உன் வீட்டுக்காரனோட  ஐடியா என்ன தெரியுமா? நாம எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஈடுபாட்டோடு செய்யணும்.. அப்படி செய்வதற்கு முதலில்  அதில் கான்சென்ட்ரேஷன் இருக்க வேண்டியது முக்கியம். அதை சின்ன வயதிலேயே உன் பையனிடம் உண்டாக்கத்தான் அவன் பாடுபடறான்.   தான் செய்துட்டிருக்கிற விஷயத்தை அணு அணுவா ரசிச்சு ரசனையோடு செய்யறத்துக்குத்தான், அவன் கவனத்தை அதில் குவிக்கத்தான், இப்படி அவன் செய்திட்டிருக்கிற விஷயத்தின் ஒவ்வொரு கூறுகளை எடுத்து இயம்பி அவன் மனதை அதில் மூழ்க வைக்கிறான். சாப்பிடும்போது சாப்பாட்டிலும் குளிக்கும்போது குளித்தலிலும் டிவி பார்க்கும்போது டிவியிலும்... இப்படி முழு கவனமும் வரவழைக்கிறான். இது நாளைக்கு அவன் வாழ்க்கையில், என்ன படிப்பு படித்தாலும் அதில் வெற்றி பெறவும் என்ன வேலை பார்த்தாலும் அதில் வாழ்க்கையை வாழவும் உறுதுணையா நிற்கும் "

"இதில இப்படி ஒரு விஷயம் இருக்கா?" அதன்பிறகு  அவ்'வளவள' அவ்வளவா அவளை குழப்பவில்லை.

(’அமுதம்’ டிசம்பர் 2013 இதழில் வெளிவந்தது.)

><><
(படம்- நன்றி : கூகிள்)

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே அருமை
செய்வன திருந்தச் செய்

திண்டுக்கல் தனபாலன் said...

// எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஈடுபாட்டோடு செய்யணும்... //

அப்படிச் சொல்லுங்க...!

இராஜராஜேஸ்வரி said...

? நாம எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஈடுபாட்டோடு செய்யணும்.. அப்படி செய்வதற்கு முதலில் அதில் கான்சென்ட்ரேஷன் இருக்க வேண்டியது முக்கியம். அதை சின்ன வயதிலேயே உன் பையனிடம் உண்டாக்கத்தான் அவன் பாடுபடறான்.

அஸ்தீவாரம் பலமாய் போடப்படுகிறது..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாம எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஈடுபாட்டோடு செய்யணும்.. அப்படி செய்வதற்கு முதலில் அதில் கான்சென்ட்ரேஷன் இருக்க வேண்டியது முக்கியம். அதை சின்ன வயதிலேயே உன் பையனிடம் உண்டாக்கத்தான் அவன் பாடுபடறான்.//

வளவளன்னு இல்லாமல் நறுக்குன்னு நச்சுன்னு புரிய வைத்துவிட்டாரே ! சபாஷ்.

நல்ல அமுதமான படைப்பு ‘அமுதம்’ இதழில் வெளிவந்துள்ளதில் மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

Raghavan Kalyanaraman said...

அருமை சார். நல்ல விஷயம் சொல்லிக்கொடுத்திருக்கீங்க எங்களுக்கும்.

ரேகா ராகவன்
அரோரா (சிகாகோ) விலிருந்து.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!