Sunday, June 29, 2025

நாவல் அறிமுகம்...


‘வைரமாலை.’ 1954-இல் வெளியான படம்.
“கூவாமல் கூவும் கோகிலம் .. “ என்று பத்மினியுடன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த கண்ணதாசன் பாடலை பாடியபடியே வந்த அந்த நாயகர் பின்னாட்களில் பிரபல வில்லனாக வருவார் என்று எதிர்பார்த்திருப்பார்களா? ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டிக்கொள்ளாமல் வரும் பாலிஷ் வில்லன்...
ஆர். எஸ் மனோகர். இன்று பிறந்த நாள்!
அறிமுகமான படம் ‘ராஜாம்பாள்’. ஜே. ஆர். ரங்கராஜுவின் அந்தப் பிரபல நாவல்தான் கதை. கல்கியின் ‘பொய்மான் கரடு’ படமானபோது பதில் அதிலும் நாயகன்.
நல்லவனாக சில படங்களில் நடித்து முடித்துவிட்டு வில்லன் வேடத்திற்கு நகர்ந்தார் மாடர்ன் தியேட்டர்ஸின் அபிமான நடிகர். அவர்களின் ‘வண்ணக் கிளி'யில்தான் வில்லனாக மாறினார்.
மரப்படிகளில் இறங்கி நின்று புறங்கையில் மது பாட்டிலைத் தட்டி உடைத்தபடி என்ட்ரி தருவாரே பிச்சுவாப் பக்கிரியாக ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில்.... அந்த நல்லவனுக்கு நல்லவன் ரோலில் அசத்தியது அடுத்த திருப்பு முனை. அந்தப் பாடல்! 'பாரடி கண்ணே கொஞ்சம்... பைத்தியமானது நெஞ்சம்...'
திரை அவருக்கு இரண்டாவதுதான். முதலிடம் மேடை. மேடையில் பிரம்மாண்டம் என்றால் அது மனோகர்தான்! ‘நாடகக் காவலர்' மனோகரால் நன்கு அறியப்பட்ட புராண சரித்திர புருஷர்கள் நிறைய. 1800 தடவைக்கு மேல் நடிக்கப்பட்ட ‘இலங்கேஸ்வரன்’ அதில் மிகப் பிரபலம். தவிர ‘துரோணர்', ‘துரியோதனன்', 'சூரபத்மன்', 'சாணக்கிய சபதம்', 'இந்திரஜித்'...
கண் மூடித் திறப்பதற்குள் நாடகக் காட்சி மாறுவது ஸ்பெஷாலிட்டி என்றால் நாடகத்தில் சினிமாஸ்கோப் இவருடைய அறிமுகம். திரையிலும் சரி மேடையிலும் சரி அந்தக் கணீர்க் குரலும் பளிங்குத் தெளிவு உச்சரிப்பும் அவருக்கு ஒரு தனி இடத்தை கொடுக்கத் தவறவில்லை.
‘நான்’, ‘சொர்க்கம்’ (இரட்டை வேடத்தில் ), ‘குழந்தைக்காக’, ‘அடிமைப்பெண்' ‘நான்கு கில்லாடிகள்' சந்திரபாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்'.... பர்ஃபெக்ட் பர்ஃபாமன்ஸ் தந்த படங்கள் நிறைய. இந்தி ராஜ் குமார் போல இவர் நடை ஒரு தனி ஸ்டைல்.
குறிப்பாக சொல்லணும்னா உடனே தோன்றுவது ‘ராஜா’ தான். சிவாஜி உண்மையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று பாஸ் ரெங்க ராவிடம் நிரூபிக்க மனோகர் படும் பாடு! ‘ஒண்ணு மட்டும் ஞாபகத்தில் வெச்சுக்குங்க. அந்தத் தாயை நான் கடத்தி வெச்சிருக்கிறதாலதான் நான், நீங்க, எல்லாரும் இப்போ உயிரோட இருக்கோம்!’ என்று அழுத்தமாக சொல்வதும்… ‘ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க பாஸ்’னு கேட்டு ரங்கராவ், ‘சரி விடுங்கடா அவனை’ன்னதும் பிடித்திருந்த அடியாட்களிடமிருந்து விடுவித்த கைகளை உதறிக் கொண்டு, தளர்ந்திருந்த டையை முறுக்கிக் கொண்டு, கோட்டை சரி செய்தபடியே நடந்து சிவாஜியிடம் பேசியபடியே பண்டரி பாயை அடிக்க ஆரம்பிப்பதும், அந்த முயற்சியிலும் தோற்றுவிட... அந்த நெடு நீளக் காட்சி நெடுக தான் சொல்வதை நிஜமாக்க அவர் துடிக்கிற நடிப்பு க்ளாஸ் ரகம்.

Saturday, June 28, 2025

தோற்காத கதை...

அவரு எவ்வளவு பெரிய ப்ரொடியூசர்.. ஆனா அவரை, 'நம்ம தேவர் அண்ணன், நம்மள நெனச்சு படம் எடுத்திருக்கார், நாலு நல்ல விஷயம் காட்டுவார்'னு நம்பி படக் கொட்டகைகள் நோக்கிப் படையெடுப்பார்கள் ஜனங்கள். ஏமாந்ததே இல்லை. இருவருமே!
சாண்டோ சின்னப்ப தேவர்… இன்று பிறந்த நாள்!
தம்பி உடையான் படமெடுக்க அஞ்சான்னு சொல்ற மாதிரி டைரக் ஷனைப் பார்த்துக்கொள்ள ஒரு தம்பி. எம்.ஏ.திருமுகம். ஒரு ஃபிரேமில் கூட அவர் கை தெரியாத படி காட்சிகள் ரொம்ப இயல்பாக மலரும், கதையை மட்டும் பகரும். வர்மாவின் காமிரா வழுக்கிக் கொண்டு நகரும்.
முருகன் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்கு கொஞ்சமும் குறையாதது கதை மேல் அவர் வைத்திருந்ததும். பாருங்களேன். ‘தெய்வச் செயல்’ என்று ஒரு படம் எடுத்தார். நாலு யானைகளை வளர்க்கும் செல்வந்தர் சுந்தர ராஜன் நொடித்துப் போனபோது தானும் வாழ்ந்து அவற்றையும் வாழ வைக்கும் அந்தக் கதை நன்றாகப் போகவில்லை.
எப்படித் தோற்க முடியும் இந்தக் கதை என்று யோசித்தார். எழுதினார் அதற்கு இன்னொரு திரைக்கதை. அப்போதுதான் டாப்புக்கு வந்து கொண்டிருந்த பிரபல கதாசிரியர் Salim - Javed -இடம் சீன்கள்எழுதி வாங்கி ஹிந்தியில் வெளியிட்டார். ‘ஹாத்தி மேரே சாத்தி’. ஆத்தி, அது கலக்கிற்று வசூலை. குலுக்கிற்று பாலிவுட்டை. அதை அப்படியே தமிழிலும்! ‘நல்ல நேரம்.’ இங்கேயும் ஹிட்.
டீம் வைத்துக்கொண்டு கதை டிஸ்கஷன் செய்யும் முறையை அனேகமாக இவர்தான் கொண்டு வந்தார். Tell the gist. Get the best. Leave the rest. That's it.
பக்தி சிரத்தையுடன் தியேட்டரில் நுழைந்ததும, பரமன் லீலைகள் பார்த்து பரவசத்துடன் வெளிவர முடிந்தது இவர் காலத்தில்தான்.
ஆஹா, வரிசையாக அவர் தந்த எம் ஜி ஆர் படங்கள்! ஜஸ்ட் பதினோரு நாளில் முடித்துவிட்டார் ‘முகராசி' ஷூட்டிங்கை.
எந்தப் பிராணியைத்தான் கூர்ந்து கவனித்து இருப்போம்? இதயம் என்று அதற்கும் ஒன்று இருக்கும் என்று எண்ணி இருப்போம்? ஆனால் ‘ஆட்டுக்கார அலமேலு’வையும் ‘கோமாதா என் குலமாதா’வையும் பார்த்ததும் நம் அபிப்பிராணியமே எத்தனை மாறிப் போச்சு!
நம்ம எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம சின்னப்ப தேவரைப் பத்தி நாஞ்சொல்ல தனியா என்ன இருக்கு? மறக்க முடியாத மனிதர்!


><><><

Friday, June 27, 2025

ஆர்ப்பரிக்கும் இசை....


அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார். சட்டென்று அவரை புக் செய்து விட்டார். இசைப் பேரலையொன்றை இயக்கி விட்டிருக்கிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது. படம் ‘Chote Nawab.' பாடல்கள் வெற்றி.

ஆர்ப்பரிக்கும் இசை! ஆர் அது? என்று எல்லாரும் பார்க்க ஆரம்பித்த அவர் ஆர். டி. பர்மன். இன்று பிறந்த நாள்!
அந்தக் குழந்தை முகம்! அதன் பின்னே ஒரு இசைமேதை.. ‘Pancham’ இவர் செல்லப் பெயர். அஞ்சாவது நோட். பஞ்சமி.
மெஹ்மூதின் அடுத்த ‘Bhoot Bangla’ வில் கலக்கிவிட்டார். ‘Aavo Twist Karen…’’வும் ‘Pyar Karta Jaa..’ வும் இளைஞர்களை அப்படி ஈர்த்தன என்றால் ‘O Mere Pyar Raja...’ உருக வைத்தது.
அப்புறம் ‘மூன்றாம் வீடு’ (Teesri Manzil) வந்தது. முதலிடத்துக்கு இவர் போனார். ‘Aajaa Aajaa…’ என்று ஷம்மி கபூர் பாட, ரசிகர்கள் ஆட, இசை உலகம், 'இது என்னடா புது மாதிரி துள்ளலிசையென்று துள்ளி எழுந்து உட்கார்ந்தது. ‘தம் மோரா தம்… ‘ வந்ததும் 1971 -ன் இசைக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது. ராஜேஷ்கன்னா வந்து சேர்ந்து கொள்ள கிஷோர் குமாருடன் ஹிட்டுக்களை இசைத் தட்டுக்களில் அடுக்கினார்.
Electronic Rock -ம் Jazz -ம் அவர் இசையில் விளையாட, சங்கர் ஜெய்கிஷன், நய்யாரெல்லாம் தந்து கொண்டிருந்த கலகலப்பான இசையை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றார்.
அல்ரெடி ‘Chalti Ka Naam Gadi’ யிலிருந்தே அப்பாவின் சில படங்களுக்கு அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்தவர். தேவ் ஆனந்தின் பிரபல பாடல் ‘Hey Apna Dil..’ பாட்டில் மவுத் ஆர்கன் வாசித்திருக்கிறார்.
சின்ன வயதில் நண்பர்களுடன் சினிமா பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தப் பாடலை கேட்டதும் துள்ளி எழுந்து ஹேய், அது என் டியூன் என்று ஆர்ப்பரித்தார். இவர் வாசித்துக்கொண்டிருந்த ட்யூனைக்கேட்ட அப்பா அதை தன் படத்தில் போட்டிருக்கிறார். அதைவிட வேறு என்ன ஆனந்த அங்கீகாரம் வேண்டும் அவருக்கு?
9 வயதில் இவர் போட்ட டியூனைத்தான் ‘Aye Meri Topi…’ என்று தேவ் ஆனந்த் பாடினாராம் ‘Funtoosh’ படத்தில். Pyaasa படத்தில் வந்த ‘Sar Jo Tera Chakraya…’ பாடலும் இவர் ஆரம்பப் பாடல்களில் ஒண்ணுன்னு சொல்வாங்க.
ஒவ்வொருத்தர் டேஸ்டுக்கும் அவரிடம் ஒரு பாட்டு இருக்கும். உங்களுக்கு ‘Tere Bina Zindagi Se Koi...’ பிடிக்கும் என்றால் எனக்கு 'Goyake Chunanche..’ உயிர். அவளுக்கு ‘O Mere Sona Re..’ ஃபேவரிட் என்றால் இவனுக்கு ‘Hum Dono Do Premi..’ பிரியம். ‘எப்படி போட்டேன் என்று தெரியாது, அதுவாக அமைந்தது..’ என்பார் எப்போதும் அடக்கமாக.
நீங்களே பாடுங்க என்று ரமேஷ் சிப்பி சொல்லி இவர் பாடிய ‘மெஹபூபா மெஹபூபா…’ அத்தனை பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கொரு குரல் வைத்திருந்தார் என்றால் அமிதாப்புக்கு இன்னொரு குரல் வைத்திருந்தார். ‘Pukar’ படத்தில்அமிதாப், ரந்திர் சேர்ந்து பாடும் அந்த ‘Buchke Rehna Re Baba..’ பாடலில் எது கிஷோர் எது ஆர்.டி. என்று கண்டு பிடிப்பது மகா கடினம்.
70 களில் வருஷா வருஷம் நாமினேஷன் பெற்றாலும் filmfare அவார்டை வாங்கியது 1983 இல் கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ படத்தில் தான்.
அப்படி ஒரு டைட்டில் இசையை யாருமே போட்டதில்லை. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆம், ‘ஷோலே’ படத்தில் வரும் இசையைத்தான் ஷொல்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து மெல்ல அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றிக் காட்டும் அந்த இசை படத்தின் tone -ஐ அற்புதமாக கொடுத்துவிடும்.
எப்போதும் இசையே சிந்தனை. ஃப்ளைட்டில் சென்றுகொண்டிருந்தபோது முணுமுணுத்த டயூனை கவனித்த ராஜேஷ் கன்னா பிற்பாடு ஞாபகமாக அதைக் கேட்டு வாங்கினாராம் ‘Kati Patang’ படத்துக்காக. பாடல், ‘Yeh Jo Mohabbat Hai..’
வித்தியாசமாக எதையாவது வழங்கிக் கொண்டே இருப்பதுதான் அவரது இசை. ‘தனியே நாம் எதுவும் செய்ய விட்டால் தனியாக நம்மை கவனிக்க மாட்டார்கள்,’ என்பாராம். தேவ் ஆனந்தின் ‘Ishq Ishq Ishq’ படத்தில் ‘Wallah Kya Najara Hai..’ பாடல் பல்லவி முதல் வரியை அதே படத்தின் வேறிரு பாடலின் சரணங்களில் அழகாகக் கொண்டு வந்து முடிச்சிட்டிருப்பார்.
‘ஆர். டி. பர்மன் இன்றைக்கு இருந்தால் நான் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவர் இசையமைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன் நாளெல்லாம்,’ என்கிறார் பிரபல பாடகர் அர்மான் மாலிக்.
Amar Prem படத்தில் அப்படி ஒரு கிளாசிக்கல் மியூசிக் கொடுத்திருப்பார். அந்த ‘Raina Beet Jaye..’ பாடலை ஆரால் மறக்க முடியும்?
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல இவரது கார் கதவும் கானம் இசைக்கும். சோடா பாட்டில்களை உடைத்து, ‘Churaliya..’ (Yadon Ki Bharat) பாடலுக்கும், சீப்பை மேஜையில் உரசி ‘Tere Samne Wale... ‘ (‘Padosan’) பாடலுக்கும் என்று கையில் கிடைக்கிற வஸ்துக்களிலிருந்து விதவிதமான தாளங்கள்...மூச்சு வாங்குவதைக் கூட பாடலின் வீச்சு ஆகியிருப்பார், ‘Piya Tu...’ (‘Caravan’) பாடலில்! ‘Hoga Tumse Pyare Kaun..’ (Zamane Ko Dhikana Hai) பாடலில் ஊட்டி ரயில் விசிலை உசிதமாகக் கொடுத்திருக்கும் அழகே தனி!
கிஷோர்குமார்தான் இவரது ஆஸ்தான பாடகர் என்றாலும் ரபியின் மறு வருகையை ஜொலிக்க வைத்த பாடல்களில் பல இவருடையது. ‘Zamane Ko Dikhana Hai’ யில் வரும் ‘Pucho Na Yaar Kiya Hua ..’ பாடல் ஒன்று போதுமே?
‘அந்தப் பெண்ணை பார்த்தேன்.. அவள் ஒரு மலரும் ரோஜாவை போலே... கவிஞனின் கனவைப்போலே... காட்டின் மானைப்போலே... பௌர்ணமி இரவைப்போலே... வீணையின் ராகம்போல... காலையின் அழகைப்போலே… அலைகளின் விளையாட்டைப்போலே... ஆடும் மயிலைப்போலே... பட்டு நூலைப் போலே…’ என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அந்த ‘1942, A Love Story’ யின் ‘Ek Ladkhi Ko Dekha..’ பல்லவிகளை மட்டும் அடுக்கி என்னவொரு இசைச் சிலிர்ப்பு! Filmfare அவார்டுக்காக ஒரு பாடலை விட்டு விட்டுத்தான் மறைந்தார்.

பிரமிக்கிற இமேஜ்...



Schindler’s List என்று சொன்னால் ஆஹா, ஆஸ்கார் வாங்கிய ஸ்பீல்பெர்க் படமாயிற்றே என்பீர்கள், Saving Private Ryan என்றால் ஓ,ரெண்டாவது ஆஸ்காரை ஸ்பீல்பெர்க் வாங்கிய படமாயிற்றே என்போம். ஆனால் அந்த ரெண்டு படத்துக்கும் ஒருவர் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் ஓசைப்படாமல் அவையிரண்டும் சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த ஒளிப்பதிவுக்கான படங்களில் சேர்ந்து கொண்டன என்பதும் நாமறியோம்.
அவர்… யானஸ் கவின்ஸ்கி. (Janusz Kavinski) உலகின் டாப் 10 ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இன்று பிறந்தநாள்!
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் தன் மாஸ்டர் டிகிரியை வாங்கிக் கொண்டவர் ‘Wild Flower’ என்ற டிவி படத்தில் ஒளியோடும் நிழலோடும் விளையாடியதைப் பார்த்து பிரபல Steven Spielberg தன்னோடு இணைத்துக் கொண்டார்.
“பார்த்தால் பிரமிக்கிற மாதிரி இமேஜ்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருக்கும், ஆனால் கடைசியில் என் தலையாய கவனம் எல்லாம் அந்தக் காட்சியின் கதை ஓட்டத்திற்கு நேர்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான்,” என்று அவர் சொல்வது ஒளிப்பதிவாளர்களுக்கான பாட வரிகள்.
இதை அவர் எப்படிச் சாதிக்கிறார் என்றால் அந்தக் காட்சியின் கதையை அழுத்தமாகக் பிரதிபலிக்கிற மாதிரி, அந்தக் காட்சியில் நடிகர்கள் பிரதிபலிக்கும் உணர்ச்சிக்கு அடிக்கோடு இடுகிற மாதிரி தன் ஒளிப்பதிவை வைத்துக்கொள்கிறார். வேறெப்படி? நீங்களே சொல்லுங்க.
காமிராவை கவனிக்கிற மாதிரியெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். கண் எப்படி அந்த நேரம் பார்க்க வேண்டியதைப் பார்க்கிறதோ அப்படிச் சென்றுகொண்டிருக்கும் அவரது கேமரா. நின்று பார்த்து ரசித்து விட்டு வருகிற மாதிரி ஒரு திருப்தியைக் கொடுத்துவிடுவார் நமக்கு. ஒரு டைரக்டருக்கு இதைவிட வேறென்ன உதவி வேண்டும்?
வெறுமே துரத்திக்கொண்டு ஓடாது காமிரா. துரத்திக்கொண்டு ஓடுவதைப் பார்க்கும்போது நீங்கள் எதை எப்படிப் பார்ப்பீர்களோ அதை அப்படிப் பார்க்கும். ஒரு ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
கேமராவை ரசிக்க இவர் படம் பார்க்க வேண்டாம். படத்தை ‘மேலும் மேலும் ரசிக்க’ இவர் படம் பார்க்க வேண்டும்! Backlighting ஐக் கொட்டிக் கொடுத்து காட்சிகளைத் தட்டிக் கொடுப்பார். வழக்கமான 180 டிகிரி ஷட்டருக்குப் பதிலாக 90, 45 டிகிரி உபயோகிப்பதன் மூலம் இன்னும் நறுக்காக யதார்த்தமாக...
இவரது படங்களைப் பாருங்கள். பனி மூட்டங்களையும் பலகணி வழி பாயும் ஒளிக்கற்றைகளையும் கொண்டு தன் காட்சிகளைப் பின்னியிருப்பார். எந்தக் கோணத்தில் காட்டினால் ஏற்படுத்த வேண்டிய உணர்ச்சி அப்படியே ஏற்படுமோ அந்தக் கோணத்தில்... நடிகர்கள் மீது பாய வேண்டிய ஒளியையும் நிழலையும் எங்கே எத்தனை வேண்டுமா அங்கே அத்தனை துளி பிசகாமல்... ஒளிப்பதிவு என்றாலே நிழலுக்கும் ஒளிக்கும் உண்டான விகிதம்தானே?
நடிகர்களில் எங்கே, எப்படி நிறுத்துவார் என்று தெரியாது, ஆனால் பார்க்கிறபோது அழகாக இருக்கும். முகம் ஒரு புறம் திரும்பும்போது காமிரா இன்னொருபுறம் திரும்பும் அழகு… ‘Catch Me If You Can’ படத்தில் Leonardo DiCaprio ஃபிரேமுக்கு ஃபிரேம் விசேஷ அழகுடன் ஜொலிப்பதை எப்படி மறக்க முடியும்?

Thursday, June 26, 2025

‘பின்’ குறிப்பு

‘பின்’ குறிப்பு
கே. பி. ஜனார்த்தனன்
(விகடன் 28 11 2007 இதழில்)

அன்புள்ள அத்தானுக்கு,

உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக் கொண்டது. நான் இங்கு நலம். நீங்கள் நலமா?

இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு வந்து இன்றோடு நாற்பது நாள் ஆகிறது. இதுவரை உங்களிடமிருந்து ஒரு போன் கால் கூட வரவில்லை. ‘எப்படி இருக்கிறாய் மீனு?’ என்று விசாரித்து ஒரு கடிதம் கூட நீங்கள் எழுதவில்லை.

எப்படி எழுதுவீர்கள்? எங்கள் அப்பா அம்மா செய்ததென்ன மன்னிக்கக் கூடிய குற்றமா? ‘என் மகனுக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது, 12000 ரூபாயில் இருந்து ஒரே ஜம்பில் 20000 ரூபாயாக சம்பளம் உயர்ந்திருக்கிறது, எனவே மாப்பிள்ளைக்கு இப்போதைய அவன் அந்தஸ்திற்கு ஏற்ற மாதிரி ஒரு கார் வாங்கி கொடுங்கள், என்று உங்கள் பெற்றோர் கேட்டபோது, ‘ஆகட்டும், என் தலையை அடமானம் வைத்தாவது பணம் புரட்டி கார் வாங்கித் தந்து விடுகிறேன்,’ என்று என் அப்பா சொன்னாரே, சொன்னதுபோல் செய்தாரா?

கவலைப்பட்டு பட்டே முடியெல்லாம் கொட்டி வழுக்கை விழுந்த தன் தலை பத்துப் பைசாவாவது பெறுமா என்று இவர் யோசித்திருக்க வேண்டாமா?

சரி, நீங்களும்தான் கார் வரும், வரும் என்று எத்தனை காலம் பொறுமையாக இருப்பீர்கள்? நீங்கள் என்ன இளிச்சவாயரா? வேறு வழியில்லாமல் தானே வந்தால் காருடன் வா என்று என்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்!

அப்பாவின் 3000 ரூபாய் சம்பளத்தில் மிச்சம் பிடித்து பத்து வருஷமோ இருபது வருஷமோ அவரால் என்றைக்கு கார் வாங்கித் தர முடிகிறதோ அன்றைக்கு நான் வருகிறேன். அல்லது அடுத்த ஜென்மத்தில்தான் நாம் ஒன்று சேர முடியுமென்றாலும் சரி வேறு வழியில்லை, நான் காத்திருக்கத்தானே வேண்டும்?

அன்புடன், மீனாட்சி.

பின்குறிப்பு: அனேகமாக இதுவே என் கடைசிக் கடிதமாக இருக்கும். இங்கே, சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ரூ. 35000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அதனால் இனிமேல் உங்களுக்கு கடிதம் எழுதக் கூட எனக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.

Tuesday, June 24, 2025

சந்திக்காமலேயே...

சிலர் இருக்கிறாங்க. அவங்களை நாம சந்திச்சே இருக்க மாட்டோம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க வெகுவா ஊடுருவியிருப்பாங்க. இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்குவாங்க. உற்சாகத்தையும் ஆறுதலையும் அள்ளி வழங்கி இருப்பாங்க. ஆ, நீங்களே சொல்லிட்டீங்களே.. அவரு தாங்க...
கண்ணதாசன்... இன்று, ஜூன் 24, பிறந்த நாள்!
‘அவரு எழுதின பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாடல் சொல்ல முடியுமா?’ன்னு கேளுங்க.
உடனே மனசில ஓடறதிலேருந்து ஒரே ஒரு பாட்டை செலக்ட் பண்றதுக்குள்ளே முழி பிதுங்கிரும்.
யோசிக்க ‘ஒரு நாள் போதுமா?’
எந்தப் படமா இருக்கட்டும், கதையின் அடிநாதத்தை சில அடிகளில் தன் பாடலில் கொண்டு வந்து விடுவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி: படத்தின் ஒன் லைன் பாடலில்!
"தூக்கி வளர்த்தவள் தாயென்றால் அதை
ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
தாங்கிய தாயின் உறவென்ன?"
‘அன்னை’ படக்கதையை இதைவிட க்ளாஸிக்காக எப்படிச் சொல்ல முடியும்?
வானம்பாடி படத்தின் சுருக் இதோ இந்தப் பாடல் வரிகளில். (காதல் தோல்வியில் இருக்கும் கதாநாயகனுடன் கவியரங்கத்தில் போட்டியிடுகிறாள் தோழி... அவன் கேட்க அவள் பதில்.)
‘காதலித்தாள், மறைந்து விட்டாள், வாழ்வு என்னாகும்?”
‘அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்.’
‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு.’
‘அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது.’
‘வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?’
‘தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது.’
ஒன் லைனில் என்ன, சில சமயம் இரண்டொரு வார்த்தையிலேயே சொல்லிவிடுவார். படத்தின் கதையை. இதோ உதா.
“எங்கிருந்தாலும் வாழ்க..”
(’நெஞ்சில் ஒரு ஆலயம்’ : காதலித்தவள் எங்கிருந்தாலும் அவள் வாழவேண்டுமென்று எண்ணி அவள் கணவனைக் காப்பாற்றுகிறான் தன் உயிரைவிட்டு.)
நவரசமும் அபிநயம் பிடிக்கும் அவர் பாடல்களில்.. ‘பேசுவது கிளியா..’ என்று கொஞ்சும்! ‘வீடுவரை உறவு…’ என்று அஞ்சும்!
பறக்க ஆரம்பித்துவிட்டால் போதும். நாம்'பாட்டு’க்கு பறந்து கொண்டேயிருக்கலாம் மனதில். கடைசி வார்த்தை வரைக்கும்!. "காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா..."
அள்ள அள்ள வந்து கொண்டே…
‘சொன்னாலும் வெட்கமடா..
சொல்லாவிட்டால் துக்கமடா…
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா…’ (முத்து மண்டபம்)
‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்..
அந்த ஒருவரிடம் தேடினேன், உள்ளத்தைக் கண்டேன்..
உள்ளமெங்கும் தேடினேன், உறவினைக் கண்டேன்..
அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினைக் கண்டேன்..’ (தேன் நிலவு)
இலக்கியத்துக்கும் சாதாரண ரசிகனுக்கும் இடையே உள்ள தூரத்தை யாராவது இத்தனை டெஸிமலுக்குக் குறைத்திருப்பார்களா என்றால் இல்லை.
"நீரோடும் வைகையிலே..நின்றாடும் மீனே…" பாடலில் ஒரு வரி.
"உன் ஒருமுகமும் திருமகளின் உள்ளமல்லவா...?"
"உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா..?"
ஒரு முகத்தின் வெள்ளம் என்றால்? நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தை பொழி முகம் (Estuary) என்பார்கள். சங்க முகம் என்றும் சொல்வதுண்டு. அந்த முகம்! அதில் ஒன்றாய்ப் பாயும் இரு வெள்ளம்!
கவிதையிலும் ஓர் காவிய நயம்..
மதுரைவீரன், மன்னாதி மன்னன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, ரத்தத் திலகம், இல்லற ஜோதி, கவலை இல்லாத மனிதன்... மனதில் தடம்பதித்த படங்களையும் எழுதினார்.
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' தமிழ் திரையின் முதல் பிரபல பஞ்ச் டயலாக் அதுவே! அதுவும் வில்லனுக்கு!
காலம் அவருக்கு எத்தனையோ பரிசுகளை வழங்கி இருக்கலாம் ஆனால் காலத்துக்கு அவர் வழங்கிய பரிசு அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடக்கூடியது. ‘சிவகங்கைச் சீமை’ என்ற அவர் தயாரித்த படம். காலத்துக்கும் நிற்கும் காவியம்.
எத்தனையோ சொல்லலாம். ஆனால் இந்த ஒரு பாட்டு போதுமே? அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்!
“ஓஹோஹோஹோ மனிதர்களே,
ஓடுவதெங்கே சொல்லுங்கள்!
உண்மையை வாங்கி, பொய்களை விற்று,
உருப்பட வாருங்கள்!
1
அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது.
காலம் போனால் திரும்புவதில்லை, காசுகள் உயிரை காப்பதும் இல்லை...
2
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது.
கண்ணை மூடும் பெருமைகளாலே, தம்மை மறந்து வீரர்கள்போலே...
3
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
படிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டுப் போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது.
காற்றைக் கையில் பிடித்தவன் இல்லை, தூற்றித் தூற்றி வாழ்ந்தவரில்லை…”
('படித்தால் மட்டும் போதுமா?')

Saturday, June 21, 2025

அந்த விளம்பரம்...

 


காலியாக நிற்கும் ஜெயன்ட் சைஸ் விளம்பரப் பலகையை பார்த்தவுடன் அதில் நம் பேர் பெருசா ஒளிர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கத் தோன்றுமா உங்களுக்கு? அப்படிக் கற்பனை செய்கிறாள் கிளாடிஸ். அரை இஞ்ச் அதிக இடுப்பால் மாடல் வேலை இழந்து நியூ யார்க்கில் வந்து இறங்கியிருந்த அவளுடன் பழகிய பீட்டர் (டாகுமெண்டரி எடுப்பவன்) கொஞ்சம் முந்திதான் அவளிடம் சொல்லி இருந்தான், ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மட்டுமல்ல, மார்க்கம் ஒன்று தெரிந்தால் அதைப் பிடித்துக்கொண்டு கூட மேலே வந்து விடலாம்!’ என்று.

வாழ்க்கையில் பெரிய ஆளாக நினைத்தவளுக்கு இந்த மான்ஹாட்டன் போர்டு ஒரு மார்க்கமாக தெரிந்தது. கையிலிருந்த கொஞ்சமே காசைக் கொண்டு மூணு மாசத்துக்கு அதை வாடகைக்குப் பிடித்து தன் பெயரை படத்துடன் பெருசா அதில் ஒளிர விடுகிறாள். பார்த்துப் பார்த்து மகிழ்கிறாள். பைத்தியம்பாங்க உன்னை என்று அவளைக் காதலிக்கும் பீட்டர் சொன்னது எடுபடவில்லை.
முக்கியமான விளம்பர இடம் போயிடுச்சே என்று ஓடிவரும் சோப்பு கம்பெனி இவான் அவளிடம் கேட்டுப் பார்க்கிறான். 500 டாலர் அதிகம் கொடுத்தாலும் தர மறுக்கவே ஆறு இடங்களை கொடுக்கிறான் அதற்கு பதிலாக. இப்போது ஆறு இடங்களிலும் அவள் பெயர் சூப்பர் ஹையாக. ('8 கேட்டிருக்கலாமோ?') சிற்றி முழுவதும் அவள் பெயர் பாப்புலராகி விடுகிறது. கடைக்குப் போனால் ஆட்டோகிராப் வாங்குகிற அளவுக்கு. டி.வி.யில் தோன்றும் அளவுக்கு.
அவளையே தங்கள் சோப்புக்கு மாடலாக உபயோகிக்கலாம் என்று கம்பெனிக்கு தோன்ற அவள் தேடிய பெரிய கேரியர் கிடைத்து விடுகிறது. ஆனால் அதற்கு விலையாக இவான் அவளிடம் நெருங்க, கையை தட்டிவிட்டு விலகுகிறாள். வீட்டுக்கு வந்தால் பீட்டரின் குட் பை கடிதம். ஏங்கிய பணமும் புகழும் இப்போது வந்தாலும் மனதில் வெறுமை. அப்பவே பீட்டர் சொன்னானே, ஏன் நீ கூட்டத்தோடு கூட்டமாக சந்தோஷமாக இருப்பதை விட்டுவிட்டு தனியாக செல்ல நினைக்கிறேன்னு? யோசிக்கிறாள். கட் பண்ணினால், ஜூவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பீட்டர், பிளேன் சத்தம் கேட்டு மேலே பார்க்க, ‘கிளாடிஸைக் கூப்பிடு பீட்டர்!’ என்று விமானத்தில் பெரிய எழுத்துக்களில்! ஒன்று சேர்கிறார்கள். காரில் செல்லும்போது எதிர்ப்படும் காலி விளம்பரப்பலகை இப்போது அவளைக் கவரவில்லை.
1954, ஆமாம், 54 இல் வந்த ‘It should Happen to You’ படத்தின் அமர்க்களமான கதை அது. கிளாடிஸாக நடித்தவர் Judy Holliday. 20, June. பிறந்த நாள்!
Rotten Tomatoes ரேட்டிங் 100% கிடைத்த படம் அது. பீட்டராக வந்தவர் பிரபல Jack Lemmon. முதல் படம் அவருக்கு. 'My Fair Lady' டைரக்டர் George Cukor இயக்கியது..
‘எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் படத்தில்,’ அப்படின்னு கேத்ரின் ஹெபர்ன் இவரைப் பற்றிச் சொல்லியது உதவ, கொலம்பியாக்காரர்கள் ‘Born Yesterday’ படத்தில் இவரைப்போட, ஆஸ்கார் வாங்கி விட்டுத் தான் ஓய்ந்தார் ஜூடி.
‘Every day’s a Holliday with Judy Holliday...’ என்று ஆரம்பமாகும் இவர் பட ட்ரெய்லர் ஒன்று.
Quote? "திரும்ப திரும்ப அசட்டு அழகியாக வந்து ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் நீங்கள் ரொம்ப புத்திசாலியாக இருக்க வேண்டும்!"

Thursday, June 19, 2025

சாமானியர் அல்ல...


பாரிஸ் ரேடியம் இன்ஸ்டிட்யூட்டில் பிரபல மேரி க்யூரியுடன் (ஆமா, ரெண்டு நோபல் வாங்கியவர், அவரேதான்) சேர்ந்து பயின்ற Stefania Maracineanu ஒரு ருமானிய விஞ்ஞானி. 19 June பிறந்தநாள்!.

Polonium அணுவின் நிலையற்ற வாழ்க்கையை ஆராயப் புகுந்தவர் அது, அது ஊடுருவும் உலோகத்தை பொறுத்தது என்றறிந்து கொள்ள, அது இவர் செயற்கைக் கதிரியக்கத்தை கண்டுபிடித்ததில் வந்து முடிந்தது. (புற்று நோய்க்கு உற்ற அஸ்திரம் என்பதில் தொடங்கி எத்தனை பயன்கள் அதற்கு!) நோபலுக்கு அவர் முயலவில்லை. இருந்தாலும் அதற்குப்பின் அந்த விஷயத்தில் ஜாயிண்ட் நோபல் பெற்ற கியூரியின் மகனும் மருமகனும் தன் பங்கைக் குறிப்பிடாதது அவருக்கு வருத்தம் தான்.
சாமானியர் அல்ல என்று ருமானியாவுக்கு வெளியே புகழ் பரவாவிட்டாலும் Rumanian Academy of Sciences அவரை உரிய முறையில் கௌரவிக்க தவறவில்லை.
மரித்தது கேன்சரில். கதிர் வீச்சுடன் சதிராடியது காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுவதை கேட்கையில் ஒரு நிமிடம் அதிர்ந்தாடுகிறது மனசு.

Wednesday, June 18, 2025

புரிந்து கொள்ள...


வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, வாழ்க்கையில் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று ஏதாவது ஒன்று உண்டானால் அது இந்த படம்தான். 1957-லேயே வந்து விட்டது என்பது விசேஷம். (பலர் பார்த்திருக்கலாம்)

அவரும் சேர்ந்து தயாரித்த படத்தில் ஆரும் தொடாத ஒரு நடிப்பு வட்டத்துக்குள் போய் இருக்கிறார் ஹென்றி ஃபோண்டா. இதாண்டா ஒரு நடிகன் தாண்ட வேண்டிய எல்லை என்கிறார்.
11 பேரை எதிர்த்து அவர் நிற்கிறார். அவர்களை கன்வின்ஸ் பண்ணணும் என்றில்லை, யோசிக்க வைக்கணும். ஆனால் அந்த 11 பேரில் பலருக்கு இருந்த ஆவேசம், கோபம் எதுவும் லவலேசமும் அவரிடம் வெளிப்படவில்லை. அமைதி.. அமைதி!
ஒரு கொலையைப் பற்றிய படம். ஆனால் க்ரைம் திரில்லர் இல்லை. கொலை செய்யப்பட்டவரையோ, கொலை செய்தவரையோ பற்றிய அலசல் இல்லை. ஆனால் தீர்ப்புக்கு உதவ வந்தவர்களின் மனதுக்குள்ளே புகுந்து கதவுகளைத் திறந்து நமக்கு காட்டும் சைக்கலாஜிக்கல் டிராமா.
அப்பாவுடன் ஏற்பட்ட தகராறு! அந்தப் பையன் அப்பாவைக் கொலை செய்து விட்டதாக வழக்கு. எதிர் வீட்டுப் பெண் ஊடே ஓடிய ரயிலின் ஜன்னல்கள் வழியே பார்த்து இருக்கிறாள். அங்கே கிடந்த கத்தி போல ஒன்றை பையன் வாங்கி இருக்கிறான் என்ற கடைக்காரன் சாட்சி இருக்கிறது. சினிமாவுக்கு போனேன் என்று சொல்லும் பையனுக்கு படத்தின் பெயர் உள்பட எதுவும் நினைவில்லை. ஆகவே ஓபன் அண்ட் ஷட் கேஸ் மாதிரி 11 ஜூரர்களுக்கும்! ஒரே ஒருவர் மாறுபடுகிறார். அவரும் ஐ ஆம் நாட் ஷ்யூர் என்று மட்டுமே சொல்கிறார்.
ஆரம்பிக்கிறது ஒரு அறிவு போராட்டமும் ஒரு மனப் போராட்டமும். ஒவ்வொருவருக்கும்! என்ன நடக்கிறது? எப்படி முடிகிறது? ஜூரர்களின் அறைக்குள் ஒன்றரை மணி நேரமாக அவர்கள் வாதாடுவது மட்டுமேதான் படம் முழுப் படமும். பார்த்து விடுங்கள் ஒருவாட்டி உங்கள் வாழ்க்கையில்.
நாம் முடிவெடுக்கும் போது அணிந்து கொள்ளும் கலர் சட்டைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கழட்டிப் போடுகிறது இந்தப் படம். மனதின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வைக்கிற காட்சிகள்!
ஒவ்வொருவருக்குள்ளும் நாம் பார்ப்பது அவரை அல்ல, நம்மை. கடைசியில் Lee J Cobb ஆவேசமாக பேசும் பொழுது அந்த கேரக்டருக்குள்ளும் நுழைந்து கொள்கிறோம். அவர் பேசப்பேச அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது ஃபிரேம் பிசகாமல் நமக்கு தெரிந்து விடுகிறது. அப்படியே செய்கிறார்.
சினிமாவின் ரசிகர்களுக்கு நான் இதை சிபாரிசு செய்கிறானோ என்னவோ, வாழ்க்கையின் ரசிகர்களுக்கு இதை பலமாக சிபாரிசு செய்கிறேன். 3 அகாடமியும் 4 கோல்டன் க்ளோப் நாமினேஷனும் பெற்ற இந்தப் படத்தின் பெயர்?
12 Angry Men.
And we!

--------------------