Friday, November 29, 2024

முதல் படத்திலேயே...


வயது 18 இல் முதல் படத்திலேயே வாங்கினார் ஆஸ்கார் நாமினேஷன்.
Cathy Moriarty…. இன்று பிறந்த நாள்!
அழகிப்போட்டியில் பங்கு கொண்டு ஜெயித்தவரை, வா, ராபர்ட் டி நீரோவுடன் நடிக்கலாமென்று அழைத்து வந்தார் நடிகர் ஜோ பெஸ்கி.
‘Raging Bull’ என்ற அந்தப் படம் De Niro வுக்கும் விசேஷமான படம். Jake La Motta என்ற நிஜ பாக்ஸருடைய கதை. தத்ரூபமாக இருப்பதற்காக அந்த பாக்ஸரருடனேயே பலநூறுமுறை ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டார். 27 கிலோ வெயிட் ஏற்றிக்கொண்டார். எந்த அளவுக்கு ஈடுபாடென்றால் அந்த சமயத்தில் நியூயார்க்கில் நடந்த மூன்று பாக்ஸிங் ஃபைட்டில் கலந்து கொண்டு ரெண்டு பந்தயத்தில் ஜெயித்தார். கடைசியில் அவர் முன் வரிசையில் அமர்ந்திருக்க இவர் ஆஸ்கார் அவார்ட் வாங்கினார்.
டைரக்டர் Martin Scorsese ஸ்போர்ட்ஸ் பக்கமே தலை வைத்துப் படுக்காதவர்! அவருக்கும் சவாலான படம். சாதித்தார். கடைசி பாக்சிங் ஃபைட்டை ஷாட் எடிட் பண்ணுவதற்கு மண்டையை உடைத்துக் கொண்ட மார்டினுக்கு வழிகாட்டியது எது தெரியுமா? ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ மர்டர் சீன்! ஒவ்வொரு punchக்கும் சத்தம் எடுத்தது எங்கேயிருந்து? தக்காளியில் இருந்தும் தர்பூசணியில் இருந்தும்…
2007 இல் மாபெரும் படங்களில் நாலாவது இடத்தை அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் கொடுத்தது .
Cathy -யிடம் வருவோம். … அடுத்த வருடமே கார் ஆக்ஸிடெண்டில் செத்துப் பிழைத்து ஆறு வருடம் கட்டாய ஓய்வு! பின், வரிசையாக தோல்விப் படங்கள். மறுபடி மார்க்கெட்டைப் பிடித்தது ‘Soapdish’இல் ஸ்ட்ராங் உமனாக. அப்புறம் திடம் கொண்ட பெண்ணாகவே படம் கொண்டார். பெரும்பாலும்! அவரை மனதில் வைத்தே எழுதிய கதைகள்!
எதிர்பார்த்த முதல் கல்யாணம் நடக்காதது சுவாரசியமான கதை. மணக்கவிருந்த Richard Palmer இவரோடு சேர்ந்து பீட்சா ஹோட்டல்களை நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு ஹோட்டலில் அவரை சந்தித்த தன்னைவிட 14 வருடம் மூத்தவரான பிரபல நடிகை Raquel Welch-ஐப் பார்த்து மனம் பறிகொடுத்து அவரை கல்யாணம் செய்து கொண்டு விட்டார். அந்த மற்றொரு ஹோட்டல் ஓனர் வேறு யாரும் இல்லை, இவருடன் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்த Robert De Niro வே தான். அலட்டவே இல்லை. பிசினஸ் பார்ட்னர்ஷிப் இன்றும் நீடிக்கிறது.
மூன்று குழந்தைகளில் இரண்டு twins. நடித்த படங்கள் பலவற்றை இவர் பார்த்ததே இல்லை.
ஒரு நடிகைக்கு வருகிற கஷ்டங்களை பாருங்கள்.. ‘Raging Bull’ இல் நடிக்கும் போது தலைமுடிக்கு மக்காச்சோள ஸிரப் பயன்படுத்தியிருந்தார். வெளிப்புற ஷூட்டிங்கில் தேனீக்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம்.

Thursday, November 21, 2024

மேஜிக் நடிப்பு...


தியோடர் ஒரு எதிர்கால பிரஜை. தன் தனிமையை போக்க ஒரு ஏ. ஐ. (Artificial Intelligence) பொருத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்குகிறான். பழகப் பழக சொக்கும் குரலில் பேசும் சமந்தாவை, அதுதான் அந்த ஓ.எஸ்ஸின் பெயர், நேசிக்கவே தொடங்கி விடுகிறான். ‘Her’ படத்தில் சமந்தாவின் குரலாக படம் முழுவதும் பேசி அசத்தியவர்…

Scarlet Johansson... இன்று பிறந்தநாள்!
கிறங்க வைக்கும் அழகுடன் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஹாலிவுட்டில் வலம் வரும் ஸ்டார்லெட், ஸ்கார்லெட்.
ஹாலிவுட்டின் highest grossing படங்களில் ஒன்றாகிய 'Avengers - Endgame' இல் நடித்தவர்.
ஏழு வயதில் நடிக்க வந்த இவர் ஒரு அட்டகாசமான பாடகி. டிஸ்னியின் 'ஜங்கிள் புக்'கின் “Trust in me..” -இலிருந்து “Set it free..” வரை நிறைய ஹிட்ஸ்! தன் ஃபேவரிட் Frank Sinatra மாதிரி பாடவேண்டும் என்று ஆசை...
பிரபல நடிகையான பின்னும் பிராட்வே நாடகம் ஒன்றில் நடித்தார் ஆசை ஆசையாக. தன் இமேஜ் காணாமல் போய்விடுகிற அளவுக்கு பாத்திரத்தில் ஆழ்ந்து நடித்ததாக பாராட்டு கூடை கூடையாக!
கடந்த காலத்தின் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும் ‘Black Widow’-வின் நடாஷாவை மறந்திருக்க மாட்டீர்கள்.

பிரபல Christopher Nolan இயக்கிய ‘The Prestige’ படத்தில் இரு பெரும் மேஜிக் நிபுணர்களின் சினேகத்தினூடே அவதியுறுபவராக, சிறிய பாத்திரம்தானெனினும் மனதில் பதிந்த மேஜிக் நடிப்பு!

><><><

Monday, November 18, 2024

மிக அழகிய...


‘படம் ஃபெயில்யர் என்பது ஜலதோஷம் மாதிரி. ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டு ஆறு நாட்கள் படுக்கையில் இருந்தும் நீங்கள் சரியாகலாம் அல்லது ஆறு நாட்கள் அதை அலட்சியப்படுத்தி நடமாடியும் சரியாகலாம்.’

சொன்னவர் திரையுலக வரலாற்றிலேயே மிக அழகிய பெண் என்ற பேரை ஹாலிவுட்டில் வாங்கிய Gene Tierney... இன்று பிறந்த நாள்!
நாயகி படம் தொடங்கும் முன் கொலை செய்யப்பட்டு விடுகிறாள். விளம்பரக் கம்பெனி நடத்தும் லாரா. டிடெக்டிவ் மார்க் வந்து துப்பறிந்தால், அவள் பழகிய எல்லாருமே அவளைக் காதலித்து இருக்கிறார்கள். அப்புறம் ஏன் யார் அவளை கொல்ல வேண்டும்? ஏன் துப்பறிய வந்த இவருக்கே அவள் மீது ஒரு காதல் பிறக்கிறது. அவளைக் கனவு கண்டபடியே அவள் அறையில் இவர் தூங்கிவிட சத்தம் கேட்டு விழித்து பார்த்தால் அங்கே லாரா! அப்படியானால் கொலைகாரன் கொன்றது யாரை?
சுவாரசியமாகச் செல்லும் ‘Laura.’வில் இவர்தான் லாரா. 1944 இல் வந்த Film noir Classic!
ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தன் முதல் நாடகத்தில் தண்ணீர் சுமந்து நடந்தபோது, நான் பார்த்ததிலேயே மிக அழகான தண்ணீர் சுமக்கும் பெண் என்று ஓர் விமரிசகர் எழுதினார்.
‘Close My Heart’, ‘The Razor’s Edge’ இப்படி நிறைய ஹிட் படங்களில் நடித்து 50களைக் கலக்கியவர். ‘Leave Her to Heaven’ படத்துக்கு ஆஸ்கார் நாமினேஷன்.
பிற்காலத்தில் மன நோயால் பாதிக்கப்பட்டவர் மீண்டு வந்து, மீண்டும் ஓர் அத்தியாயத்தை திரையில் எழுதினார்.
சொன்ன இன்னுமிரண்டு...
‘உன்னால் முடியாது என்று சொல்வதைப் போல ஒரு பெண்ணின் காதல் மீதான உறுதியை அதிகரிக்கச் செய்வது எதுவும் கிடையாது.’
‘ஒருவரை ஒருவர் காதலிப்பவர்கள் திடீரென்று நிறுத்தி விடுவதை குழந்தைகளால் புரிந்து கொள்ள முடிவதில்லை.’
><><><

200 நாட்கள்...


200 நாட்கள்! (1881) மிகக் குறுகிய காலமே அந்தப் பதவியில் இருந்தார்.. சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர். தனக்குப் பதவி தரவில்லை என்ற ஆத்திரம் கொலையாளிக்கு. 'கடவுளே! என்ன இது!'தான் இவரது கடைசி வாக்கியம்.

James A Garfield.. இன்று பிறந்தநாள்!
குண்டு பாய்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றபோது உதவிக்கு வந்தார் டெலிபோன் புகழ் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், தான் கண்டுபிடித்திருந்த மெடல் டிடெக்டரைக் கொண்டு. அது பலன் தரவில்லை.
இரண்டு கையாலும் எழுதுவார். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கூட அவரால் முடியும்!
'முதலில் நான் என்னை ஒரு மனிதனாக்க வேண்டும்,
அதில் வெற்றி பெற்றால் மற்ற
அனைத்திலும் நான் வெற்றியடைவேன்.'
இந்த மணி வாசகத்துக்குச் சொந்தக்காரர்...
இன்னும் சொன்னவை… ‘கடின வேலை செய்யும் ஆற்றல் ஓர் திறமை. அல்லது திறமைக்கு ஒரு சாத்தியமான மாற்று!’
‘எத்தனையோ தொல்லைகள் நேர்ந்து இருக்கின்றன எனக்கு. ஆனால் மிக மோசமான தொல்லை என்பது ஏற்படவேயில்லை.’
‘ஐடியாக்கள்தாம் உலகை ஆள்கின்றன.’
'விஷயங்கள் தானாக மலராது, யாராவது வந்து அதை மலர்த்தும் வரை.'
'நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நீங்கள் மிகப் பெரியவராக இல்லாவிடில் நீங்கள் அதற்கு மிகச் சிறியவர்.'
'உண்மை உங்களை விடுவிக்கும் ஆனால் அதற்குள் அது உங்களை ஒரு வழி பண்ணிவிடும்.'
><><><><