இல்லாத வீடு இல்லை அது தொடராக வந்தபோது. சொல்லாத நபரே இல்லை அது படமாக வந்தபோது.
'தில்லானா மோகனாம்பாள்'. எழுதியவரின் பிறந்த நாள் இன்று.
கொத்தமங்கலம் சுப்பு!
அவர்யாரென்றால் அவ்வையாரை இயக்கியவர். ரெண்டு வருடம் நன்றாக ஆராய்ச்சி செய்துவிட்டே படம் பிடிக்க க(த)ளம் இறங்கினார்.
வாசனின் வலது கையாக வலம் வந்தவர் ஜெமினியில். டைரக்ட் செய்த மற்றொரு படம் மிஸ் மாலினி. ஆர்.கே.நாராயணனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான ‘Mr.Sampath’தான் அது. நாயகனும் இவரே. ஆம், நடிகராகவும் தடம் பதித்தார். நடித்த 'தாசி அபரஞ்சி' அபார வெற்றி.
திரைக்கதை வசனத்திலும் பங்குண்டு. கைவண்ணம் பெற்று மிளிர்ந்தவை நிறைய. ‘சந்திர லேகா’ விலிருந்து ‘இரும்புத் திரை’ வரை.
ஒரு ச. க. வல்லவர் என்பதை இவர் எழுதிய பாடல்கள் சொல்லும். ‘சபாஷ் சரியான போட்டி!’ என்று பாடல் துறை இவரை வரவேற்றது. ஆமாம், அந்தப் பாடல் இவர் எழுதியதுதான்: "கண்ணும் கண்ணும் கலந்து... சொந்தம்கொண்டாடுதே..."(வஞ்சிக்கோட்டை வாலிபன்).
அப்புறம் 'ஆடிப் பெருக்கி'ல் வருமே அந்த பட்டிமன்றப் பாடல், பெண்களா ஆண்களா என்று, ("பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?") "மனமே முருகனின் மயில் வாகனம்..." ('மோட்டார் சுந்தரம் பிள்ளை')
இவருடைய மற்றொரு நாவலும் அதே சிவாஜி பத்மினி ஜோடி நடிக்க வண்ணப் படமாக வந்தது. "சொல்லாமல் தெரிய வேண்டுமே?" படம்: 'விளையாட்டுப் பிள்ளை' நாவல்: 'ராவ்பகதூர் சிங்காரம்'
வில்லுப் பாட்டு வல்லுநர் என்பது சொல்லும் இன்னொரு விஷயம். அதில் பிரபலம் இவர் சொல்லும் காந்தி மகான் கதை.
ஆட்டோபயாக்ரஃபியை சுவையாக பேசும்படம் இதழில் எழுதியபோது வைத்த தலைப்பு 'பாரு பாரு பயாஸ்கோப்பு பாரு.'
"ஊதும், ஓடும் ரயில்,
அதன் நீளம் ஒண்ணரை மையில்,
உங்கள் ஊரில் நிற்காது, மெயில்!"
50 களில் சிறுவர்களிடையே பிரபலமான பாடல் அது. படம்: 'வள்ளியின் செல்வன்' கதை வசனம் பாடல் இயக்கம் என்று இவர் களமாடிய படம்.
'படிக்காத மேதை'யிலிருந்து 'சில நேரங்களில் சிலமனிதர்கள்' வரை பல படங்களில் நடித்தாரே சுந்தரி பாய்? இவரது மனைவி.