'எனக்குன்னு சொந்தமா ஒரு ஜமா இருக்கணும், அதுவும் எங்கப்பா இழந்த அந்த ஜமாவா இருக்கணும்,' என்ற ஒரே ஏக்கத்தில் வாழும் கல்யாணம் அந்த ஜமாவை அடைய படும் பாடு கொஞ் ஜமா? நஞ் ஜமா? ‘ஜமா’… ரொம்ப நாளைக்கப்புறம் ஜமா சேர்ந்து பார்க்க ஒரு படம்…
ஒரு படத்துக்கு நடிப்பு எத்தனை முக்கியம் என்று இந்த படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறார்கள். தாண்டவமாக வரும் நடிகர் தாண்டவம் ஆடி இருக்கிறார் நடிப்பில். ஆர்ப்பாட்டம் செய்கிறார், ஆத்திரப்படுகிறார், ஆவேசமாக கத்துகிறார்! ஆனால் துளி மிகையில்லாமல்! இதான்யா நடிப்பு என்கிறார் 'சத்தமாக'!
அந்த ஏழு நிமிட ஒரே ஷாட் காட்சி! அர்ஜுனன் வேஷம் கேட்டு இன்னொரு ஆள் வந்து அவமானப்பட்டு திரும்பிய விஷயம் தெரியாமல் ஹீரோ கல்யாணம், அதையே கேட்க உள்ளே நுழைந்து, ஜமா தலைவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதும்.. அர்ஜுனனா வர்றவன் எப்படி அடவுல நிப்பான் தெரியுமான்னு அவனுக்கு ஆக்ரோஷமாக நடித்துக் காட்டி, அவன் அழ ஆரம்பிக்க, அண்ணன் தானேடா திட்டினேன்னு சமாதானப்படுத்தி, பொம்பளை வேஷம் போடறதுதாண்டா கஷ்டம்னு நம்ப வெச்சு, உன் கல்யாணத்தைப் பத்திக் கவலைப்படாதே, நான் பார்த்துக்கிறேன்னு தேத்தி ஏமாத்தி, அவன் திருப்தியானதும் பெருமூச்சு விடும் தாண்டவம் (சேத்தன்) அனாயாசமாக சேர்ந்து விடுகிறார் ரங்காராவ், டி.எஸ். பாலையா வரிசையில்! அந்தச் சிறிய வீட்டுத் திண்ணைக்கும் புறவாசலுக்கும் இடையே பாத்திரங்களோடு பாத்திரமாக கேமராவும் குறுக்கே நெடுக்கே நடந்து காட்சியின் முழு உக்கிரத்தையும் கவர் பண்ணி இருப்பது கை தட்ட வைக்கிறது என்றால் அதைத் தொடர்ந்து அரை நிமிடத்திற்கு வரும் அசாதாரண பின்னணி இசை அசர வைக்கிறது.!
வசனம்னு தனியா இல்லாதது அழகு. எல்லாமே சூழ்நிலை உதிர்க்க வைக்கும் யதார்த்த வார்த்தைகளே. (“நமக்கு திறமை இருக்கா இல்லையான்னு நாம தாண்டா சொல்லணும்! அடுத்தவன் சொல்ல மாட்டான்!”)
அந்த அம்மாக்காரியை விட்டு மனம் லேசில் வெளிவர முடியாது. ஆம்பிளை மகனை ஆம்பிளையாக்க அந்தப் பொம்பிளை படற பாடு! நிஜ ரீயாக்ஷன்களை நிமிடத்தில் கொட்டி கண் கலங்க வைத்து விடுகிறார்!
ஜன்னல் சூரிய வெளிச்சத்தில் புழுதிகள் பறப்பதைக் காட்டும் துல்லியமாகட்டும், ஹீரோ முகத்தில் ஒளி டாலடிக்கும் அழகாகட்டும், ஓசைப்படாமல் தன் இருப்பை ஒளியில் பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர். தீப்பந்த வெளிச்சத்தை வைத்து மட்டும் எடுத்து இருக்கும் அந்த கடைசி காட்சி சிகரம்.
இன்னொரு பக்கம் இளையராஜாவும் பாரல்லலாக இசையில் கதையை சொல்கிறார். 16 வயதினிலே மாதிரி அந்த ஆழமான தீம் மியூசிக் படத்தின் மூடுக்கு சட்டென்று நம்மை இட்டுச் செல்கிறது. ஆரம்பக் காட்சிகளில் படத்தின் மையப்புள்ளியை நோக்கி எத்தனை அழகாக கதையை நகர்த்தி செல்கிறது பின்னணி இசை என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. கல்யாணம் அர்ஜுனன் கிரீடத்தை தலையில் வைக்கும் போது ஒலிக்கும் அந்த ஓங்கார இசை! அப்பாவின் சத்தியத்தை நினைவு கூரும்போது பின்னால் ஒலிக்கும் அந்த ஆங்கார இசை, அப்பப்பா! படத்தில் ஒரு பாடல்தான் என்று சொல்ல முடியவில்லை, முக்கியமான இடங்களில் எல்லாம் ராஜா அந்த உணர்வு கொப்பளிக்கும் ஒரு அற்புதமான ட்யூனை பிஜிஎம்மில் வழங்கி விடுகிறார். நாயகி அவனைப் பிரிந்து படிக்கச் செல்ல, அவன் அரிதாரம் பூச ஆரம்பிக்க அப்போது அவர் கொடுக்கும் பின்னணி இசையில் அந்த சோகம் அப்படியே நம் மனதுக்குத் தாவுகிறது.
கதாநாயகி? 'என்னடி எழுந்திருச்சி போயிட்டான், புடிக்கலையா'ன்னு தோழி கேட்கும்போது அவளைப் பார்க்கிற அந்த பார்வை ஒன்றே போதும்! ஆம்பளைன்னா யாருன்னு அவர் விளக்கம் கொடுக்கும் காட்சி அள்ளுகிறது.
தன்னைக் கேலி பண்ணுவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தன்னோடு நடக்கும் பொழுது எதிர்ப்படும் கேலிகளால் அவளுக்கு 'ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள்' மனசு கஷ்டப்படுமே என்று கல்யாணம் சொல்லும் பொழுது அவன் கேரக்டர் பளிச்சென்று மனதுக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது.
பிசிறில்லாத டைரக்ஷன். தன் கூட்டாளியிடம் பேசிக் கொண்டிருக்கும் அம்மாவை நோக்கி தூரத்தில் இருந்து வரும் மகன், ஃபிரேமில் இல்லாத, அப்போதுதான் வெளியே சென்ற பொம்பளைகளுடன் கையாட்டி ஏதோ பேசிக் கொண்டே வந்து சேரும் இடத்தில் கச்சிதமான காட்சியாக்கம்…
எல்லா முக்கியமான கேரக்டர்களுக்கும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு ஆளுக்கு ஒரு நியாயம் அளந்து கொடுத்திருக்கிறார் பாரி இளவழகன். அந்த அளவுக்கு மில்லிமீட்டர் மிகாமல் அவர்கள் நடிப்பு!
கிளைமாக்ஸ் காட்சியில்.. இன்று 17ஆம் நாள் பாரதப் போர்.. 'என்ன நடந்தது? யார் இறந்தாலும் இங்கே அழப்போவது நான்தான்,' என்று ஆரம்பித்து படிப்படியாக இன்டென்ஸிடியை அதிகரித்து அழுகையும் ஓலமுமாக கல்யாணம் குந்தியாக கதறும் காட்சியும் சரி, கடைசியில் அர்ஜுனனாக ஆடும் ஆட்டமும் சரி, கூத்துக் கலையின் ஜீவனை நம் கண் முன்னே வாரிக்கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் பாரி. scintillating!
‘எப்பவும் அந்த புள்ளையே வராது உன்ன தூக்கி விடறதுக்கு’ன்னு சொல்லி சப்போர்ட்டுக்கு வரும் ஒரே ஒருத்தனும் கூழ் ஊற்றினால்தான் தன் கல்யாணம் என்கிற சுயநலத்தினால்தானா? … இப்படி ஆங்காங்கே ரசிக்கிற மாதிரி திரைக்கதையில் cognitive முடிச்சுக்கள் நிறையவே.
விரசம் இல்லை, விறுவிறுப்பு இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கறது இல்லை, கெட்டிக்காரத்தனத்தில்தான் போட்டி.
ஏற்கனவே ஆங்காங்கே கோடி காட்டிவிட்ட ஃபிளாஷ்பேக் கதையை 20 நிமிடத்திற்கு சொல்லியிருக்க வேண்டியதில்லை. இன்னும் சுருக்கமாக காட்டியிருந்தால் விறுவிறுப்பு குறையாமலிருந்திருக்கும். பின்னணி இசைக்கு ஈடாக கூத்துப் பாட்டின் ஒலி சத்தமாக ஒலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.. இத்தனை அழுத்தமாக முகவுரை கொடுத்ததற்கு அந்தக் கடைசி இரண்டு கூத்துக் காட்சிகளில் இன்னும் கூட உக்கிரம் ஏற்றியிருக்கலாம்.
இந்தப் படம் தரும் அனுபவம் ஒரு சினிமா பார்த்து விட்டு வரும் அனுபவம் அல்ல. ஒரு கதையை ரசித்து விட்டு வரும் அனுபவமும் அல்ல. ஓசைப்படாமல் ஒரு கிராமத்துக்குள் நுழைந்து அங்குள்ள மக்களோடு மக்களாக உட்கார்ந்து அங்கேயுள்ள கூத்துக் கலைஞர்கள், அவங்க குடும்பங்கள், நண்பர்கள் எல்லாருமாக வாழும் வாழ்க்கையை, கலை வேட்கையும் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுமாகப் போராடுவதை ரொம்ப, ரொம்பக் கிட்ட இருந்து பார்த்துவிட்டு வரும் அனுபவம்.