Thursday, April 30, 2020

கணித மேதை...


‘அறிவது அல்ல, கற்றுக்கொள்வதே;
அடைவது அல்ல, முயற்சிப்பதே;
அங்கே இருப்பது அல்ல, அங்கே செல்வதே
ஆகப் பெரும் சந்தோஷம் தருவது!’


‘ஒரு விஷயத்தைத் தெளிந்தறிந்து சோர்ந்தவுடன்
அதிலிருந்து விலகுகிறேன்,
மறுபடியும் அறியாமையின் இருளுக்குள் செல்ல.’

‘ஒருபோதும் திருப்தி அடையாததே
மனிதனின் இயல்பு.
ஒன்றைக் கட்டி முடித்தான் என்றால்
அதில் அமைதியாக உறைவதில்லை,
அடுத்ததைக் கட்டத் தொடங்குகிறான்.’

‘மிகக்குறைந்த வார்த்தைகளில்
எத்தனை அதிகம் சொல்ல முடியுமோ
அத்தனை சொல்லும் வரை
நான் திருப்தி அடைவதில்லை.
சுருக்கமாக எழுதுவது,
நீளமாக எழுதுவதைவிட
அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.’

சொன்னவர் Carl Friedrich Gauss.
உலகின் தலைசிறந்த கணித மேதைகளில் ஒருவர்.
Ap. 30.  பிறந்தநாள்!

Wednesday, April 29, 2020

நம்முள்ளே.. நம்முள்ளே...

“ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்தி"ருக்கும் யேசுதாஸ் குரலுக்கு “மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து..” என்று எசப்பாட்டு கொடுக்க இவர் குரல் தான் பொருத்தம். வீணைத் தந்தியின் மென்மையுடன் போட்டியிடும் அளவுக்கு ஒடுங்கியெழும் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து..’வை அவர் பாடும் நேர்த்தி! அந்த “உன்னாலே தூக்கம் போயாச்சு, உள்ளார ஏதேதோ ஆயாச்சு!” போயாச்சு -வை அவர் இழுக்கிற இழுப்பில் நம் கவலையெல்லாம் போயாச்சு! “மாமன் நினைப்பில் சின்னத் தா...யிதான்,” என்று இழுத்துப் பாடிவிட்டு “மாசக் கணக்கில் கொண்ட நோ...யிதான்” பாடும்போது நானோ மீட்டர் குறையாது.
ஸ்வர்ணலதா! இன்று பிறந்தநாள்.
இசைக் குடும்பம். இசை பயின்றவர். 3 வயதில் பாட ஆரம்பித்தவர். note உணர்ந்து noteworthy ஆகப் பாடக் கேட்கணுமா?
இவர் பாடல்களில் போவோமா ஒரு ஊர்கோலம்? “போவோமா ஊர்கோலம்.. பூலோகம்ம்ம்ம்ம்ம்…” எத்தனை ம்முக்கு நீண்டாலும் குறையாத மென்மை, உம் போட்டு கேட்க வைக்கும்.
எந்தப் பாட்டு? ‘காட்டு குயில் பாட்டு’ச் சொல்லவா? ‘கானக்கருங்குயிலை கச்சேரிக்கு வரச்’ சொல்லவா? ‘அக்கடா’ன்னு இவர் தொடங்கினால் ‘துக்கடா’ன்னு நாம விட முடியாம கட்டிப் போட்டு விடும் பாடல்கள்!
மாஸ்டர்பீஸ் “என்னுள்ளே..!" ஒரு பூ விரிவதைப் போல அந்த குரல் மெல்ல எழுகிறது. “என்னுள்ளே.. என்னுள்ளே..” என்று ராகத்தின் ஜீவனுக்குள் இட்டுச்செல்லும் குரல்! “கூடு விட்டு கூடு.. ஜீவன் பாயும் போது..” இந்த வரி! குரலின் சிலிர்ப்பில் தனிமையின் தவிப்பை உணர வைக்க முடியுமா? முடிகிறது. அடுத்த வரியில் அவரே பாடுவது போல ‘ஒரு வார்த்தை இல்லை கூற!’
“மாலையில் யாரோ..”வில் “நெஞ்சமே பாட்டெழுது, அதில் நாயகன் பேரெழுது..” என்று உச்ச ஸ்தாயியில் பாடும்போது எந்த உயரத்துக்கு எடுத்துச் செல்லணுமோ அதுவரை எடுத்துச் சென்று நிறுத்துகிறார். அதற்கு ஒரு அங்குலம் கூட மேலெழாமல்… மூன்று முறையும்… awesome! அந்த மாபெரும் இசைக் கோலத்துக்கு முழு நியாயமும் வழங்கியிருப்பார் தான் பாடிய விதத்தால்.
அந்த அசத்தல் பாட்டு! “ஆட்டமா தேரோட்டமா?” ஆடறேன், வலை போடறேன் என்று வார்த்தைகளை இசைவாக, இசையால் முடிச்சுப் போடும் ஸ்டைல்! இவருக்காகவே இசையமைத்ததோ என்று திகைக்க வைக்கும் பாடல் அது. அந்த ஓங்கி ஒலிக்கும் ‘ராக்கம்மா’வில் “அட, ராசாவே பந்தல் கட்டு, புது ரோசாப்பூ மாலை கட்டு…” வை எப்படித்தான் சற்றும் டோன் குறையாமல் கிசு கிசுப்பாகப் பாட முடிகிறதோ?
சொல்ல வேண்டியதில்லை. “போறாளே பொன்னுத்தாயி...” பற்றி. நேஷனல் அவார்டே கிடைத்துவிட்டது. ஜானகிக்கு ஒரு ‘தூரத்தில் நான் கண்ட இதயம்..’ என்றால் இவருக்கு ஒரு ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்.’
மாசி மாசம் பாடலில் ‘ஆகா பிரமாதம்’ சொல்ல வைக்கும் அந்த "ஆசை ஆகா ப்ரமாதம் ... மோக கவிதா ப்ரவாகம் !" அடுத்து “உலகம் உறங்குது, மயங்குது, ஆஹாஹா…” என்று இழுப்பது, ஆஹாஹா! அருண்மொழியுடன் ‘சக்தி வேலி'ல் 'மல்லிகை மொட்டு மனதைத் தொட்டு…'விட்ட பாடல்!
எஸ் பி பியுடன் போட்டி போட்டு இனிமையை வீசுவார் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்” பாடலில். கார்த்திக்குடன் “ஒன்னப்புதட்டு புல்லாக்கு..” பாடலில் (சின்ன ஜமீன்) “பொழுதன்னிக்கும் குழந்தையைப்போல் இருந்திட்டயே..” வரியில் அப்படியே எம் எஸ் ராஜேஸ்வரியின் குழைவு கொஞ்சும்.
ராவை அவர் உச்சரிக்கும் ரகங்களில் “ர்ர்ராஜாவைப் போல் ஐயராத்துப் பிள்ளை” தனி ரகம். “மாசி மாசத்"தில் “நாளை எண்ணி நான் காத்திருந்தேன், மாமன் உனக்குத்தானே!”வில் உனக்குத்தானேவை அவர் ஒலிக்கும் பாங்கு தனி... “சந்திரரே வாரும்..” பாடும் அழகைக் கண்டு ‘அந்தி வானம் தந்தனத்தோ பாடும்’. வளமான “விடலைப் புள்ளை நேசத்துக்கு..” ராகத்துக்கு இவர் குரல் தனி சோபை தரும். ரஹ்மானின் “முகாப்லா..” பாடலின் வித்தியாச ராகம் இவரிடமிருந்து ஒரு வித்தியாச குரலை கொண்டு வந்திருக்கும்.
அப்புறம் இவருக்காகவே பிறந்த பாடல் ஒன்று உண்டு. “ஆத்தோரம் தோப்புக்குள்ளே..” ('பாஞ்சாலங்குறிச்சி') இந்தப் பாட்டை யாராலும் ஒரு முறை கேட்க முடியாது, ஆமாம், நிறுத்த முடியாது நூறு முறை கேட்கிற வரை. பிழிந்து விடும் இதயத்தை. கழுகு கவ்வும் இரையாக கொண்டு போகப்பட்டு விடுகிறோம் பாட்டோடு.
“மேகாத்து மூலையில மேகம் கருக்கையில சுக்குத் தண்ணி வெச்சுத் தர ஆசைப் பட்டேன்..” இப்படி நாயகியின் ஒவ்வொரு ஆசையையும் அவர் பாட, வரிக்கு வரி நம் உணர்வு பிசையப்பட, "அத்தனையும் பொய்யாச்சு ராசா.."ன்னு சொல்லும்போது குரலின் சோகம் உலுக்கும். “ஒத்தயிலே நிற்குதிந்த ரோசா..”ன்னு முடிக்கும்போது அப்படியே நிற்கிறோம் அவரை இழந்து விட்டோமே என்று...

Tuesday, April 28, 2020

அவரவ்ர் கோணம்...


‘அவருடைய கோணத்திலிருந்து யோசித்துப்
பார்த்தாலொழிய நீங்கள் ஒருவரைச்
சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.’

‘அதை இழந்து விடுவோமோ என்ற பயம்
தோன்றும் வரை நான் வாசிக்கவில்லை.
சுவாசிப்பதை நேசிப்பவர் எங்கே இருக்கிறார்கள்?’

‘உரிச்சொற்களைக் களைந்து விட்டால்
உண்மைகள் கிடைத்து விடும்.’

‘கண்ணுக்குத் தோன்றுகிற அளவுக்கு
மோசமானதல்ல விஷயங்கள்.’

‘சரியாய் யோசிக்கிறவர்கள் தங்கள்
திறமையில் பெருமை கொள்ள மாட்டார்கள்.’

‘ஒருவர் தன் விரோதிகளை கண்டனம் செய்யலாம்,
ஆனால் அவர்களை நன்கு அறிந்து கொள்வது
இன்னும் விவேகமானது.’

சொன்னவர் Harper Lee... ஏப்ரல் 28. பிறந்தநாள்!

Gregory Peck நடித்த, 3 ஆஸ்கார் வாங்கிய அற்புதப் படம், ‘To Kill A mocking Bird’ நினவிருக்கிறதா? அந்தப் புலிட்சர் பரிசு நாவலை எழுதியவர். வருடத்துக்கு 10 லட்சம் விற்றதோடு 40 மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தவிர, அவர் எழுதிய ஒரே நாவல் ‘Go Set A Watchman.’

Monday, April 27, 2020

தந்தியைத் தந்தவர்..

1825. வாஷிங்டனில் அமர்ந்து அந்த ஜெனரலின் உருவப்படத்தை அமைதியாக தீட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓவியர். இளம் மனைவிக்குத் திடீர் நோய் என்று தந்தை அனுப்பிய கடிதம் வந்தது குதிரைத் தபாலில். விரைந்தார் ஊருக்கு. சேதி கிடைக்குமுன்பே இறந்துவிட்ட மனைவியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. செய்தி வந்து சேர நாட்கள் ஆனதே காரணம். மாளாத சோகத்திலிருந்து மீளாத அவர் மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ‘துரிதம் உண்டாக்குவேன் கடிதம் செல்ல!’

நிகழ்வு 2. கப்பலில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அவர் ஐரோப்பாவிலிருந்து. சக பயணியான அமெரிக்க விஞ்ஞானி, எலெக்ட்ரோ மேக்னெடிஸத்தில் ஐரோப்பாவில் நடத்திய சோதனைகளைப் பற்றிச் சொல்லுகிறார். இவர் மூளையில் பளிச்! ‘தொலை தூரத்துக்கு சிக்னலைக் கொண்டு செல்ல உபயோகிக்கலாமே இதை?’ முயன்றார். தந்தியை முந்தி சிந்தித்தவர்கள் 36 வருடமாக 26 கம்பிகளுடன் போராடிக் கொண்டிருக்க, ஒரே கம்பிக்குள் கொண்டு வந்தார். அந்த Code -ஐ எழுதினார் Morse.
Samuel Morse…. ஏப். 27. பிறந்தநாள்!


Patent கிடைத்தாலும் patronage கிடைக்கவில்லை. ஆறு வருடம் போராடி அரசின் நிதி உதவி பெற்று அமைத்தார் ஒரு ஐம்பது மைலுக்குத் தந்திக் கம்பங்களை. உதவிக்கு போராடிய பேடண்ட் அதிகாரி மகள் அந்த பைபிள் வாசகத்தை சொன்னாள் முதல் தந்தியாக! ‘What hath God wrought?’

தந்திக்குப் பிந்திய விளைவுகள் அமோகம். சேதிகள் புறாக்களாகப் பறந்தன. யுத்தத்திலும் சத்தமில்லாமல் உதவிற்று சத்தமிட்டு! நிகழ்வுகளில் ஒன்று: லண்டனில் தன் காதலியை கொன்று விட்டு தப்பி ஓடுகிறான் ரயிலில் ஒருவன். தந்தியில் அடையாளம் கொடுக்கப்பட்டு அவன் இறங்கும் போது தயாராக அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில்!

அடுத்த 30 வருடத்துக்குள் அமெரிக்கா நெடுகிலும் நீண்ட தந்திக் கம்பி, அட்லாண்டிக்கையும் நீந்திச் சென்றது ஐரோப்பாவுக்கு. முதல் டெலிக்ராமை விக்டோரியா ராணி தந்தியித்தார் அமெரிக்க அதிபர் Buchanan -க்கு.

ஆங்காங்கே போட்டிக் கம்பங்களை நாட்டிய கம்பெனிகளிடமிருந்து போராடிப் பெற வேண்டியதாயிற்று உரிமைகளை. கப்பலில் வந்த விஞ்ஞானியும்கூட சொந்தம் கொண்டாட, சக பயணிகளின் சாட்சியால் ஜெயித்தார். மில்லியன்களை சந்தித்தார். ஐரோப்பாவில் மட்டும் கிடைத்தது 400000 ஃப்ராங்குகள். (இவருக்கு 18 வருட முன்பே வேறொருவர் கண்டுபிடித்துவிட்டார் தந்தியை என்றொரு வதந்தியும் உண்டு.)

சூபர் ஹிட் படம், A Beautiful Mind, அதில் Priceton University யில் வரவேற்று பேசும் புரஃபசர் ‘உங்களில் யார் மோர்ஸ் ஆகப் போகிறீர்கள்?’ என்பார்.

மரிப்பதற்குப் பத்து மாத முன் அவர் சிலையொன்றை நிறுவி, ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட மோர்ஸ் உலக முழுதுக்கும் ஒரு தந்தியைக் கொடுத்தார்: ‘குட் பை!’.

><><

Saturday, April 25, 2020

நெஞ்சில் குடியிருக்கும் இசை...


“நெஞ்சில் குடியிருக்கும், அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?”
இந்த ‘இரும்புத் திரை’ சூப்பர் ஹிட்டுக்கு இசையமைத்தவர் யாரென்று தெரியுமா?
எஸ் வி வெங்கட்ராமன். இன்று பிறந்தநாள்!
1948 -இல் சிட்டாடலின்  ‘ஞானசௌந்தரி’ வெளியானபோது அந்தப் படத்தின் பாடல் ஒன்று தமிழ்நாட்டையே கலக்கியது நினைவிருக்கும்: “அருள் தாரும் தேவமாதாவே! ஆதியே, இன்ப ஜோதியே!” இவர் இசையே.
பி யு சின்னப்பா, தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், எம் எஸ் சுப்புலஷ்மி, எம் எல் வசந்தகுமாரி, பட்டம்மாள்… இவர் இசையில் பாடாத சங்கீத பிரபலம் இல்லை. 
புகழ் சேர்த்த படம், ‘மீரா.’ 11000 அடியில் 20 பாடல். அனைத்தும் எம்.எஸ். பாடினார். அதிலொன்று கல்கி எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்..’ ‘Toot Gayi Man Bina..’ என்ற இந்திப் பாடலிசையின் இன்ஸ்பிரேஷனில் அமைத்த பிரசித்தி பெற்ற சிந்து பைரவி  ராக பாடல். கேட்டாலே உருகும் ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ..?’
வாராய் என் தோழி வருவதற்கு முன் கல்யாணங்களில் தவறாது ஒலித்த ‘புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே, தங்கச்சி கண்ணே..’ இவரது ‘பண்’ணே!  அந்த ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’யின் மற்றொரு பாடல் ‘சோலைக்குள்ளே குயிலு குஞ்சு..சும்மா சும்மா கூவுது!’
‘சிங்காரப் பைங்கிளியே பேசு!’ என்றொரு பாடல் ஏ எம் ராஜாவின் தேன் குரலில் ஒலிக்குமே, ‘மனோகரா’வில்? அது...
ஸ்ரீதர் வசனம் எழுதிய ஜெமினி நடித்த ‘மாமன் மகள்’ படத்தில் ‘ஆசை நிலா சென்றதே.. அபலைக் கண்ணீரில் நீந்தியே!’ விக்கித்துப் போன நாயகி சோகம் ஜிக்கியின் குரலில். (கால் நிமிடத்துக்கு ஷெனாயுடன் தொடங்கும் அந்தப் பாடலின் orchestration ஒரு ட்ரெண்ட் செட்டர்!) அது நினைவுக்கு வராவிட்டாலும் அதே படத்தில் சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே!’ மறக்காது.
அந்தக் கால சிவாஜி பாடல்களின் எந்த லிஸ்டிலும் தவறாது தலை நீட்டும் ‘பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?’(‘மருத நாட்டு வீரன்)   ‘அறிவாளி’ படத்தில்  ‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்..’
சோழவந்தானில் பிறந்தவர்  நாற்பதுகளில் இசை ஆளவந்தார். மாஸ்டர் என்று அழைக்கப்படும் வெகு சிலர் இசையமைப்பாளர்களில் ஒருவர். 
ஐந்து வயதிலேயே அழகாக பாடுவார் தியாகராஜ கீர்த்தனைகளை. சங்கீத ஆசையில் சென்னை வந்தார்.  நாடக மேடையில் இசையமைத்ததோடு நாலைந்து படங்களிலும் நடித்தார்.  ஏற்பட்ட விபத்தில் படுக்கை வாய்ப்பட்டு நொந்தவருக்கு ‘நந்த குமார்’ படத்துக்கு இசை வாய்ப்பை இசைவாய்த் தந்தது ஏவிஎம். 

Wednesday, April 22, 2020

ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவாளர்!

‘மாயாபஜார்’ படத்தில் கடோத்கஜ ரங்கராவ் லட்டு விழுங்கும் காட்சி நினைவிருக்கிறதா? எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி எடுத்தார் என்று எல்லாரையும் புருவம் உயர்த்த வைத்தார் அவர்.
ஒளிப்பதிவாளர் மார்கஸ் பார்ட்லி... இன்று பிறந்தநாள்!
“ஆஹா இன்ப நிலாவினிலே..” பாடலில், இந்திய சினிமாவிலேயே முதல் முதலாக, முற்பகலில் படமாக்கிய காட்சிக்கு தன் லைட்டிங்கால் மூன் லைட் எஃபெக்ட் கொண்டு வந்திருப்பார்! அதில் ஸ்பெஷலிஸ்ட்.
கதையை கேட்டுத் தெரிந்து கொண்டு கதைக்கேற்ற ஒளிக் கலவையை அளிப்பவர். பர்ஃபெக்‌ஷன் இவர் மூச்சு. ரிசல்ட் வேண்டுமானால் இவர்தான் என்று தேடிவந்தார்கள்.
பானுமதியின் முதல் படமான ‘சுவர்க்க சீமா’தான் இவர் தடம் பதித்த முதல் படம். திறமையால் ‘விஜயா வாஹினி'யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகி மிஸ்ஸியம்மா, குணசுந்தரி, பாதாள பைரவி, மாயா பஜார் என்று ‘படம் பதித்தார்’.
Cannes International Film Festival -இல் பிரபல ‘செம்மீன்’ படத்துக்காக பெஸ்ட் ஃபோட்டோகிராபியின் தங்கப் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்தார். ஜெமினியில் பணி புரிந்து கொண்டிருந்த இவரை ‘செம்மீனு'க்காக டைரக்டர் ராமு காரியாட் விரும்பிக் கேட்டு அழைத்துச் சென்றார். கடற்கரைக் காட்சிகள் கண்ணில் ஒத்திக் கொள்கிறாற்போல இருக்கும். மணலில் நண்டு ஊருவதிலிருந்து மறையும் சூரியனின் கிரண வண்னம் வரை.. ‘Ryan’s Daughter’ -இன் அட்லாண்டிக் போல செம்மீனில் அரபிக் கடலின் இரண்டு மைலுக்கு 60 அடி உயர்ந்த்தெழும் அலகளைப் படம் பிடிக்க விரும்பினாராம், நடக்கவில்லை.
நாம் இவரது ட்ரீட்டை மிஸ் பண்ணினது ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில். அப்போது இவர் ஒளிப்பதிவு பற்றி படிக்க வெளிநாட்டுக்குப் போய் இருந்தராம். ஆனால் இந்திப் பதிப்பான ‘ராம் அவுர் ஷியாம்’ இவர்தான் பண்ணியிருப்பார். ஸ்ரீதர் இந்தியில் ‘பாலும் பழமும்’ (‘Saathi’) இயக்கியபோது கேமராவை இயக்க அழைத்தது இவரை.
மறக்க முடியாத மற்றொன்று ‘சாந்தி நிலையம்.’ இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் இறுதியில் காமிரா மேலே மேலே மேலே சென்று முடிவது ரம்மியமாக இருக்கும். ‘வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்..’ வரியில் வட்ட மரத்தைச் சுற்றி காமிரா வளைந்திறங்கும் அழகு ஒன்று போதும், எப்படியெல்லாம் படப்பிடிப்பில் நூதனம் சேர்க்கலாம் என்பதைக் கற்றுக் கொடுக்க. அந்த ராட்சத பலூன் காட்சிகளை யாரால் மறக்க முடியும்? பலரும் எதிர்பார்த்த மாதிரி நேஷனல் அவார்ட், ஸ்டேட் அவார்ட் இரண்டும் கிடைத்தது அந்தப் படத்துக்கு. 1989 இல் கிடைத்தது தமிழக அரசின் ராஜா சாண்டோ அவார்ட்.
ஒற்றை நெகடிவில் ஏழு மாஸ்கிங் எடுத்தவர். ஸாஃப்ட் லைட்டிங்கின் முன்னோடியாக இவரைக் கருதுகிறார் பி ஶ்ரீ ஶ்ரீராம். “கலரும் டெக்ஸ்சரும் சரியாகவும் அழகாகவும் இருக்கும்!”
காமிரா தானிருப்பது தெரியாமல் காட்சியையும் கதையையும் வலுப்படுத்த வேண்டும் என்பார் மார்கஸ் பார்ட்லி. “ஆஹா, நல்ல ஷாட் என்றால் போச்சு என்று அர்த்தம்!”
ஒரு வரியில் சொன்னால் ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவாளர்!

Tuesday, April 21, 2020

சோகத்திலிருந்து இலக்கியத்துக்கு...

எந்த ஒரு மீட்டிங்கிலும் சரி, கூட்டத்தை நோக்கி, உங்களில் பள்ளிநாட்களில் ‘Jane Eyre’ படிக்காதவர்கள் விரல் உயர்த்துங்கள் என்று சொன்னால் விரல் உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை புகழ் பெற்ற அந்த (துணைப்பாடக்) கதையை எழுதியவர்
Charlotte Bronte... இன்று பிறந்த நாள்.
கதையில் ஜேன் படும் துன்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, அதனை உருவாக்கியவர் வாழ்க்கையில் பட்டது. சின்னவயதில் கொண்டு விடப்பட்ட பள்ளியில் சார்லெட்டும் 4 சகோதரிகளும் சந்தித்த கஷ்டங்கள்! தங்களில் இருவரைப் பறிகொடுத்தே மீண்டார்கள்
சார்லட்டுக்கு 10 வயது இருக்கும்போது அப்பா சில படை வீரர் பொம்மைகளை வாங்கி வந்தார். சகோதரிகள் அந்த பொம்மைகளுக்கு பெயரும், குணமும், உலவிட ஓர் உலகமும் கொடுத்தார்கள். அந்தக் கற்பனை உலகுக்கு Angria என்று பெயரிடப்பட்டது. அவர்களை வைத்து கதையும் கவியும் புனைந்தார்கள்.
ஆம், வாழ்வின் சோகத்திலிருந்து இலக்கியம்தான் அவர்களை வெளியில் எடுத்து சென்றது. பெண்கள் பெயரில் எழுதினால் வரவேற்பில்லை (ஆம் அப்படி ஒரு காலம் இருந்தது!) என்பதால் ஆண் புனைபெயர்களில் அவர்கள் எழுதினார்கள். அவர்களே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இரண்டு பிரதிகள்தாம் விற்றது என்றாலும் சோர்ந்து போகவில்லை.
சார்லட் அனுப்பி வைத்த கவிகளைப் பார்த்து அவர் திறமையை ஒப்புக்கொண்ட கவிஞர் Robert Southey, ஆனாலும் இதற்கெல்லாம் ஏது பெண்களாகிய உங்களுக்கு நேரம்? வேண்டாமே, என்று பதில் எழுதியதையும் பொறுத்துக் கொண்டார்.
எழுதிய முதல் நாவல் 9 முறை திரும்பி வந்தது. அடுத்ததுதான் Jane Eyre. உடனடி ஹிட்! By Currer Bell என்று வெளியிட்ட பப்ளிஷருக்கு அடுத்த வருடம் தான் தெரிந்தது அது பெண் என்று.
மற்றொரு சகோதரியின் நாவலுக்கும் மகத்தான வரவேற்பு. ஆம், ‘Wuthering Heights’ எழுதிய Emily Bronte தான் அவர்.
தந்தையின் உடல்நிலை, தம்பியின் கடன் என்று பல தடைகள் அவர் தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள. தம்பியையும் இரு சகோதரிகளையும் ஒரே வருடத்தில் பறி கொடுத்தார். மூன்று முறை தனக்கு வந்த பிரப்போசல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனவருக்கு இறுதியில் அந்த வாய்ப்பு கூடும்போது வயது 37 ஆகியிருந்தது. மாதங்களே நீடித்தது மண வாழ்க்கை. மறைந்தார் 38வது வயதிலேயே, தன் அம்மாவைப் போல.
இரண்டு Quotes ...
‘பகைமையை வளர்க்கவோ மற்றவர் தவறுகளை பட்டியலிடவோ
நேரமில்லாத அளவுக்கு வாழ்க்கை எனக்கு மிகச் சிறியதாகத் தோன்றுகிறது.’
‘மனித இதயத்தில் ரகசியப் புதையல்கள் உண்டு. காப்பாற்றும் ரகசியங்களில். மூடி வைத்த மௌனத்தில். நினைவுகள், நம்பிக்கைகள், கனவுகள், சந்தோஷங்கள். சொல்லிவிட்டால் அவற்றின் வசீகரம் நொறுங்கி விடும்!’

Sunday, April 19, 2020

ஆச்சரிய ஆஸ்திரியர்...

கேள்விப்பட்டிருக்கிறீர்களா, Birthday Paradox? ஒரு கூட்டத்தில் ஏதாச்சும் ரெண்டு பேரின் பிறந்த தினம் ஒன்றாக இருக்க வேண்டுமானால் குறைந்தது அங்கே 367 பேராவது இருக்கணும் இல்லையா? ஏன்னா வருஷத்துக்கு 365, (லீப்புக்கு 366) நாள் இருக்கிறதே? அதாவது அப்படி ஒரே பிறந்த தினம் இருவருக்கு வர 100% சான்ஸ் வேண்டுமானால் 367 பேர் வேண்டும். சரி, இப்ப 50% சான்ஸ் இருக்க எத்தனை பேர் தேவைப்படும்னு நினைக்கறீங்க? 

வெறும் 23 பேர் போதும்னு சொல்லுகிறது அந்த தியரி.

என்ன விளக்கம்?

முதல் நபரை எடுத்துக் கொள்ளுங்க. அவர் தன் பிறந்த தினத்தை மற்ற 22 பேருடன் ஒப்பிடுவார். அடுத்தவர் மீதி 21 பேரிடம், அடுத்தவர் மீதி 20 என்று மொத்தம் 253 ஒப்பிடுதல்கள் நடக்கும் இல்லையா? 
ஒரு நபரின் பி.தினம் மற்றவருடைய பி.தினமாக இல்லாதிருக்க 364/365 அதாவது 99.72 % சான்ஸ் இருக்கிறது. 253 ஒப்பிடுதல்களுக்கும் இதே சான்ஸ் என்பதால் 253 தடவைக்கு அதை வர்க்கப் படுத்தினால் மொத்தம் ஒன்றாயில்லாமலிருக்க 49.952 சான்ஸ் வருகிறது. அதாவது ஒன்றாயிருக்க  சுமார் 50% சான்ஸ் வருகிறது.

நம்புவதற்கு நிரம்பவே ஆச்சரியமான இந்த நிகழ் தகவு (probability) முதலில்  கண்டு சொன்னவர் Richard von Mises... இன்று பிறந்த நாள்.
Probability தவிர கணிதம், மெக்கானிக்ஸ், ஹைட்ரோ டைனமிக்ஸ், ஜியோமிதி, கால்குலஸ், ஃபிலாசஃபி, ஏரோ டைனமிக்ஸ் என்று பல்துறையில் சாதித்திருக்கும் இந்த ஆச்சரியர் ஓர் ஆஸ்திரிய விஞ்ஞானி. (1883-1953)

Saturday, April 18, 2020

அந்த வித்தியாசம்...(நிமிடக் கதை)

சாயங்காலம்தான் போக முடிந்தது அந்தக் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு.  ரொம்பகாலமாக அவர் குடும்பத்துக்கு பழக்கமானவர் கொத்தனார் முருகேசன்.  புது வீடு கட்டியிருந்தார்.
காலையிலேயே எல்லாரும் வந்துவிட்டுப் போயிருந்தனர். டிபனை முடித்துவிட்டு அவருடன் அமர்ந்து பேசலானார் சாத்வீகன். முருகேசனின் மனைவி பரிசுப் பொருட்களை எடுத்து ஒவ்வொன்றாகப் பிரித்தவள், ”அட, சூப்பராயிருக்கே...” அழகான மயில் சிற்பம். 
”ஆஹா, யாரோட கிஃப்ட் அது?” 
”உங்க மருமகன் சந்திரன்தான்... ஐநூறு ரூபாயாவது இருக்கும்.”
”பரவாயில்லையே? ஆமா, மாணிக்கமும் வந்தான் இல்லையா? அவன் என்ன..” 
”ஏதோ கவர் நீட்டின மாதிரி இருந்தது...”  அதை எடுத்தாள். நூறு ரூபாய்த் தாள் ஒன்று.
”பார்த்தீங்களா சார்,” என்றார் முருகேசன் சாத்வீகனிடம். ”ரெண்டு பேருமே என் மருமகன்கள்தான்.  சந்திரன் வேலை பார்க்கிறது ஒரு கம்பெனியில் கிளார்க்காக. மாணிக்கம் சூபர்வைசர் வேலை. ரெண்டு பேருக்குமே மாசம் இருபதாயிரம் வருமானம் வருது. ஆனா பாருங்க, அவன் ஐநூறு ரூபா மதிப்புக்கு கிஃப்ட் கொண்டுவந்திருக்கான். இவன் என்னடான்னா வெறும் நூறு. அந்த மனசு வித்தியாசத்தைப் பாருங்க.” தொடர்ந்து மாணிக்கத்தை விமரிசித்தார். “ரெண்டு பேரின் அன்பின் அளவை, அக்கறையின் அளவை இது காட்டுது.” 
”வெய்ட், வெய்ட்,” என்றார் இவர். ”பரிசுப் பொருளை வைத்து அன்பையோ அக்கறையையோ மதிப்பிடுவது சரியில்லை. தவிர, நேரத்தின் மதிப்பும் ஆளுக்கு ஆள் வேறுபடுவது. அதைவைத்தும் ஒப்பிடலாகாது. அது ஒருபுறமிருக்க, நீங்க மதிப்பிட்ட கணக்கும் சரியில்லை. முக்கியமான ஒரு விஷயத்தை மறந்திட்டீங்களே?”
”என்ன சொல்றீங்க?”
”கம்பெனியில் வேலை பார்க்கிற சந்திரனுக்கு மாத சம்பளம். இன்னிக்கு ஒரு நாள் லீவு எடுத்தாலும் அவன் சம்பளம் குறையாது. ஆனால் மாணிக்கம் தின சம்பளம் பெறுபவனாச்சே.. இன்னிக்கு அவனுக்கு எழுநூறு ரூபாய் இழப்பு.  ஆக, அவன் இந்த ஃபங்க்‌ஷனுக்காக செலவிட்டதுதானே அதிகம் என்றாகிறது?” 
அவசரப்பட்டு பேசிவிட்டதை அவர் உணர்ந்தார்.  
><><><
('அமுதம்' மே, 2016 இதழில் வெளியானது. 'அன்புடன் ஒரு நிமிடம்.')


ஜார்ஜ் ஹென்றி லூயிஸ்.

'துக்கத்துக்கு ஒரே மருந்து செயல்படுதல் தான்.'

'சுய அனுபவம் என்பதே எல்லா 
உண்மையான இலக்கியத்துக்கும் அடிப்படை.'

'இலக்கியம் என்பது சமூக முன்னேற்றத்தின் 
காரணமும் விளைவும் ஆகிவிடுகிறது.'

'கற்பனா சக்தி என்பது 
கலைஞர்களுக்கு மட்டுமே எழுதிக் கொடுத்த 
பட்டயமல்ல, எல்லா மனிதருக்குமே 
வெவ்வேறளவில் உரித்தானது.'

'நிறைய மேதைகளின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். 
ஆயிரம் ஆண்டுகள் நின்று பயன் தரும் மரங்கள் 
நாணல்களைப் போல் சட்டென்று எழும்புவதில்லை.'

'ஒரு மனிதனின் மூளைக்கும் மற்றொருவரின் மூளைக்கும் 
உள்ள வித்தியாசம் எத்தனை வேகமாக 
தம் அனுபவங்களைக் கோர்த்து அடுக்குகிறோம் 
என்பதைப் பொறுத்தது.'

'தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் 
மட்டுமே உருவாக்கப்படும் நேர்மையற்ற இலக்கியங்கள் 
மக்களை ஏமாற்றி ஜெயிக்கின்றன என்பது 
வருந்தத்தக்க உண்மை.'

முத்துக்களை உதிர்த்த தத்துவவாதி... 
George Henry Lewes. இன்று பிறந்த நாள்.

Friday, April 17, 2020

நம்புவோம், நல்லாகும்!

சின்னப் பையன் அலெக்சுக்கு அன்னிக்கு நாள் சரியாயில்லை. ஸ்கூலுக்குப் போனா அவன் கேலிப் படத்தை எல்லாருக்கும் அனுப்புகிறான் நண்பன். அடுத்த நாள் வரும் அவன் பெர்த்டே பார்ட்டிக்கு யாரும் வராமல் எல்லாரும் பணக்காரப் பையன் பிலிப் பெர்த்டே பார்ட்டிக்கு  போகிறாங்க. அவனுக்கு மட்டும் ஏன்? ராத்திரி படுக்கும்போது வேண்டிக் கொள்கிறான், அண்ணன், அக்கா, தங்கை, அப்பா, அம்மா எல்லாருக்கும் அடுத்த நாள் அதேபோல் மோசமாக அமையணும்னு! என்ன ஆச்சரியம்! அதேபோல் மறுநாள் அப்பாவுக்கு அவர் எதிர்பார்த்திருந்த இண்டர்வியூ ஊத்திக்குது. அம்மாவுக்கு டைப் அடித்துக்கொடுத்த புத்தகத்தில் நேர்ந்த தப்புக்களால் எக்கச்சக்க பிரசினை.  அண்ணனுக்கு கர்ல் ஃபிரண்டுடன் நட்பு முறிவு. அதேசமயம் பிலிப்புக்கு காய்ச்சலால் பார்ட்டி கான்சல். எல்லாரும் இவன் பார்ட்டிக்கு வர்றாங்க. ஓடிவந்து அப்பாவிடம் பார்ட்டியை ஏற்பாடு செய்யச் சொன்னால் இங்கே எல்லாரும் பிரசினையில்... 'ஐயோ, நான்தான் காரணம்னு அழுகை வருது அவனுக்கு. 'வெயிட், நாள் இன்னும் முடியலே, நம்புவோம் எல்லாம் நல்லாகும்'னு தேற்றுகிறார் அப்பா. அப்படியே ஆகிறது.

2014 -இல் வந்த இந்தப் படத்தின் பேர் ரொம்பச் சின்னது. 'Alexander and the Terrible, Horrible, No Good, Very Bad Day.'   28 மில்லியன் டாலரில் தயாரான படம் 102 மில். சம்பாதித்தது.

அம்மா கெல்லியாக அழகாக நடித்தவர் Jennifer Garner. இன்று பிறந்த நாள்.

'13 Going on 30' -இல் நடித்தவர் என்றால் தெரியும். அப்புறம் 'Juno'. சமீபத்திய 'Peppermint.' நட்சத்திரமாக்கியது 'Alias’ என்ற அஞ்சு வருஷ டி.வி. சிரீஸ்.
தன் மழலைக் குரலால் கவர்ந்தவரின் மாஜி கணவர் பிரபல நடிகர் Ben Affleck.

Quote?
"அம்மா சொல்வாள். 1. மகிழ்ச்சிங்கிறது அவரவர் பொறுப்பு. 2. ராத்திரி முழுக்க அழுகை நீடிக்கலாம், ஆனால் காலையில் சந்தோஷம் வந்து விடுகிறது. ரெண்டும் உண்மைதான்."

Thursday, April 16, 2020

இசையால் ஈர்த்தவர்...

படம்: Breakfast at Tiffany’s.(1961) டைப் அடித்துக் கொண்டிருக்கும் George Peppard விரல்கள் அப்படியே நிற்கும். ஜன்னல் வழி மிதந்து வரும் பாடல்! “Moo….n River…” என்று Audrey Hepburn கீழ்த் தளத்திலிருந்து பாட, எட்டிப் பார்க்கும் இவர். பாடி முடித்தவர் விழி உயர்த்தி இவரைப் பார்க்கிறதும் (ஒரு விநாடி) ரிகக்னைஸ் பண்ணுவதும் (அரை விநாடி)... ஒன்றரையாவது விநாடி அந்த மில்லியன் டாலர் ஸ்மைலை சிந்தியபடியே சொல்வார் பாருங்க ஒரு Hi ! இதைவிட க்ரேஸ்ஃபுல்லாக, கூலாக, காதலாக யாராலும் சொல்ல முடியாது. ஆங், சொல்ல வந்தது பாட்டைப் பற்றி! இந்தப் பாட்டுக்கு ஒன்று, படத்தின் இசைக்கு ஒன்று என்று ரெண்டு ஆஸ்கார் வாங்கினார் அந்த இசையமைப்பாளர். 
Henry Mancini. இன்று பிறந்த நாள்!
அந்தக் காலத்து ஹாலிவுட் இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (மற்றவர்கள்: Dimitri Tiomkin, Bernard Herrmann) ஆஸ்கார் நாலும் கிராமி இருபதும் அள்ளியவர். 
'The Pink Panther' என்றதுமே நினைவில் ஓடுவது அதன் டைட்டில் இசைதான். அந்த அட்டகாச காமெடி இசையை இட்டவர் இவரே.. 
Hatari படத்தில் John Wayne குட்டி யானைகளை நடக்க அழைத்துப் போகும் காட்சியில் பீறிட்டுக் கிளம்புமே ட்ரம்பெட்டில், "லாலலல்ல லாலல் லல்ல லாலா.." என்று? அந்த Baby Elephant Walk Song! உலகம் முழுக்க ஒலிக்கும் அது என்று ஹென்றியே எதிர்பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில் வந்த நம்ம ஊர் காமெடிப் படங்களிலெல்லாம் குண்டான பாத்திரங்கள் நடைக்குண்டான இசையாக பின்னணியில் ஒலிக்குமே அது!
சின்ன வயதில் இவர் எழுதி அனுப்பிய இசைக் குறிப்புக்களைப் பார்த்து விட்டு இவரை இசைத் துறையில்  இறங்கச் சொன்னார் ஒரு பிரபல இசையமைப்பாளர் பெனி குட்மன். அப்படியே செய்தார்.  
எல்லா ரக இசையிலும் விற்பன்னர். இறப்பதற்கு இரு வருடம் முன் போட்ட இசை ‘Tom and Jerry’ படத்துக்கு. போட்ட இசையிலேயே பிடித்தது எதுன்னு கேட்டதற்கு பிங்க் பாந்தர் என்றவர், ஏன்னா அதில பாதி உரிமை எனக்காச்சே, என்றாராம்.

Wednesday, April 15, 2020

காதல் கவிஞர்...

சின்ன வயசில் அவர் ஒரு காதல் கவிதை எழுதினார் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு, 'என் இந்தக் காதல் கடிதம் கண்டு,
நீ கொண்டு விடாதே கோபம்...' என்று. கடிதம் அவள் மனதில் போய் சேர்ந்ததோ இல்லையோ அவருக்குத் தெரியாது ஆனால் பாடல் பின்னாளில் 'Sangam' படத்தில் சேர்க்கப்பட்டு எல்லார் இதயத்திலும் சங்கமமானது. ("Yeh Mera Prem Pathr Padkar, Ke Tum Naraj Na Hona...")
Hasrat Jaipuri.. இன்று பிறந்த நாள். 
பஸ் கண்டக்டராகப் பயணத்தைத் தொடங்கியவர் எழுத்துக்கு ஹோல்டான் சொல்லவில்லை. கவிதையரங்குகளில் வாசித்தார். பிருத்விராஜ் கபூரின் கண்ணில், ஸாரி, காதில் பட்டு அவர் தன் மகன் ராஜ் கபூரிடம் சேர்த்தார். "Jeeya Bekaraar Hai…” - பட்டி தொட்டி எங்கும் ஒலித்த Barsaat பாடல்தான் முதல் பாட்டு. 
அவ்வளவுதான், பிரபல ஷங்கர் ஜெய்கிஷனுக்கு ஆஸ்தான பாடலாசிரியரில் ஒருவரானார். (மற்றவர் ஷைலேந்திரா.) ஜெய்கிஷன் அகால மறைவு இவரை பாதித்தது. 
பாடலாசிரியர் ஷைலேந்திரா சொந்தப் படம் எடுத்தபோது இவரையும் அழைத்து பாடல் எழுதச் சொன்னது நெகிழ்வு. 
Filmfare சிறந்த பாடல் அவார்ட் வாங்கித்தந்தது 'Suraj' படத்தின் "Baharon Phool Barsao..”வும், ‘Andaz’ படத்தின் “Zindagi Ek Safar Suhaana..”வும்.
50, 60களின் டாப் ஹிட்ஸ் லிஸ்டில் அனேக இவர் பாடல்கள்… 
"Tera Mera Pyaar Amar…" Asli Naqli
"Sayonara Sayonara.." (Love in Tokyo)
"Jaane Kahan Gaye Woh Din…" (Mera Naam Joker)
"Teri Pyari Pyari Soorat Ko…" (Sasural)
"Woh Chand Khila.." (Anari)
"Dil Ke Jharoken mein…" (Brahmachari)
"Kaun Ho Jo Sapno mein Aaya…" (Jhuk Gaya Aasman)
"Phoolon Ki Rani…" (Arzoo)
"Parden Mein Rahne Do…" (Shikar)
எளிமையான வார்த்தைகளில் ராகத்துக்குப் பொருத்தமாகப் புனைவதே இவர் ஷ்பெஷாலிடி.
"அமரத்துவம் வாய்ந்ததல்லவா நம் காதல்? பின்
ஏனிந்த அச்சங்கள் மனதில்?
ஏனென் நெஞ்சம் படபடக்கிறது?"
('Tera Mera Pyar Amar..’ - Asli Naqli) 
"நானுனக்குக் கடன் பட்டிருப்பேன் என்
உள்ளம் உள்ளுவதைச் சொல்ல விடுவாயானால்.
உன் இமைகளின் நிழலில் என்னைத் தங்க விடுவாயானால்."
(‘Eh Saan Tera Ho…’ - Junglee)
"மெல்லச் செல் வானில், மெல்லச் செல் நிலவே!
முடிந்து விடக்கூடாது இரவு! முறிந்து விடக்கூடாது கனவு!"
(‘Dheere Dheere Chal..’ - Love Marriage)

Tuesday, April 14, 2020

பாட்டுக் கோட்டை...


"இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே...
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கண்டு நீ
ஒருநாளும் நம்பிடாதே…!"
- அவரெழுதிய பாடல்களில் ஒன்று.
குறுகிய காலமே என்றாலும் கோலோச்சியிருக்கிறார் திரையுலகில் 'பாட்டுக் கோட்டை'யாக...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... இன்று பிறந்தநாள்!

எம். எஸ். விஸ்வநாதனை அசத்திய அவரின் நாலு வரிகள்: ('பாசவலை')
"குட்டி ஆடு தப்பி வந்தால்
குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி மாட்டிக் கிட்டா
கொறவனுக்கு சொந்தம்"

இசைக்கும் சரி, காதலுக்கும் சரி, பொருத்தமாக 'கல்யாணப் பரிசி'ல் அந்த பாடல் வரிகள்:
"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும்."

முரளி அல்ல, சந்திரபாபு ஆயிற்றே.. ஆகவே பளிச்சென்று சொல்லுகிறார் தன் காதலை!
"உனக்காக, எல்லாம் உனக்காக.. இந்தஉடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக!
எதுக்காக, கண்ணே, எதுக்காக? நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக? மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக!"

'உன்னை நினைக்கையிலே, கண்ணே..' பாடலில் அந்த வர்ணனை:
"பொன்னை உருக்கிய வார்ப்படமே... அன்பு
பொங்கிடும் காதல் தேன் குடமே."

தத்துவப் பாடல்களில் முத்துக்களைக் கொடுத்திருக்கிறார் என்றால் அவரின் பக்தி வரிகள் பரவசமூட்டும். பிரபல 'தில்லை அம்பல நடராஜா..' பாடலில் தொடக்க வரிகள்..
"கங்கை அணிந்தவா..
கண்டோர் தொழும் விலாசா..
சதங்கையாடும் பாத விநோதா..
லிங்கேஸ்வரா..
நின் தாள் துணை நீ தா."

திரைப் பாடல் வரிகளுக்கு ஒரு கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு கொடுத்தவர். வரிகளின் இறுதியை அவர் வரையும் விதமே அலாதி:
"காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி..
கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி."
"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அனேக நன்மையே!"
"துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே.."
"சீமான்கள் கொண்டாடும் மேடை
செண்டாலே காற்றெல்லாம் வாடை
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை.."
"மனிதனாக வாழ்ந்திட வேணும், மனதில் வையடா..
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா."
"ஆடைகட்டி வந்த நிலவோ? - கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?"
தறியில் நெய்து கொண்டே பத்மினி பாடும்..
"சின்னச் சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி..
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி."
><><

உண்மைக்கு நூறு புனை பெயர்கள்...

உண்மைக்கு நூறு புனை பெயர்கள்... ('விகடன்' 2. 7. 2008)
கே.பி. ஜனார்த்தனன். 

ஜெகனுக்கு குபுக்கென்று ஆத்திரம் பொங்கியது. சட்டென்று சூடாயிற்று உடம்பு. பிடித்திருந்த மவுஸ் தன் மைதானத்திலிருந்து கீழே விழுந்தது.
எண்ணை அழுத்தி சபேஷை செல்லில் பிடித்தான்.
சபேஷின் குரலில் உற்சாகம் கொட்டிற்று. "மெயில் பார்த்தியா? சந்தோஷம் பேயா அறைஞ்சிருக்குமே? ரொம்ப நாளா நீ குறிவெச்ச போஸ்டிங் ஆச்சே? கிடைக்கப் போகுதுன்னா சும்மாவா?"
"அந்த சந்தோஷத்தைத்தான் உன் பின் குறிப்பு அடிச்சுப் போட்டுடுச்சே?"
"ஓ... அந்த ஷேர் விஷயத்தைச் சொல்றியா?"
"ஆமா..!" ஜெகனின் பல் நற நறத்ததையும் சிக்னல் டவர் சிரத்தையாக வாங்கி சபேஷ் காதில் சமர்ப்பித்தது.
"அது ஒண்ணும் புதுசு இல்லையே? பல இடங்களிலும் நடக்கிறதுதானே? கம்பெனியில உன்னைக் கொஞ்சம் பங்கு வாங்கச் சொல்றாங்க, அவ்வளவுதானே?"
"அதான் ஏன்னு கேக்கறேன். இப்ப நான் பத்து வருஷமா வொர்க் பண்ற இதே க்ரூப்பின் இன்னொரு கன்சர்ன் தானே நீ இருக்கிறதும்? ஆன் லைன் டெஸ்டும் ஃபுல் டே இண்டர்வியூவுமா வெச்சு என் தகுதியை நானோ மீட்டர் சுத்தமா அளந்து பார்த்துட்டுத் தானே தர்றாங்க வேலையை? அப்புறம் என்ன, நம்பிக்கையில்லாம ஷேர் அது இதுன்னு?"
"சரி, விட்றா. நீ கஷ்டப்பட்டு முயற்சி பண்ணினது கிடைச்சிருக்கு. அதான் தகவல் கசிஞ்சதும் உனக்கு இமெய்ல் அனுப்பினேன். அடுத்த வாரம் ஆர்டர் வரும். தயாரா இரு."
செல்லை அணத்துவிட்டு மேனேஜரிடம் வந்தான் ஜெகன். லீவ் சொல்லிவிட்டுக் கிளம்பினான். வழி நெடுக சிந்தனை. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும்போல இருந்தது. மனைவி என்றொருத்தி வீட்டில் இருக்கிறாள்தான். ஆனால்…
இவன் உள்ளே நுழைந்து சோபாவில் விழுந்தான். உதயா சமையலறையில் இருப்பதைப் பார்த்தான். வருவாள், ஏன் லீவுன்னு கேட்பாள் என எதிர்பார்த்தான்.
அவள் மெதுவாக காபியை அவன் முன் வைத்தாள். உள்ளே போகத் திரும்பியவளை தடுத்து, "இன்னிக்கு லீவு!" என்றான். நின்று அமைதியாகப் பார்த்தாள்.
"அந்த சிஸ்டம் எஞ்சினீயர் வேலை கிடைச்சிட்டுது, உதயா! ஆனா, வரவேற்பே சரியில்லை. உள்ளே நுழையும்போதே கேவலப் படுத்தறாங்க. அப்படியே மனசு விட்டுப் போச்சு." 
ஏன், என்னாச்சு என்று அவள் எதுவும் கேட்கக் காணோம். பதிலேதும் சொல்லாமல் மரம் மாதிரி.. இவள் எப்போதும் இப்படித்தான்! சரியான ஜடம். கோபத்தை அடக்கிகொண்டு நடந்தது அத்தனையும் விவரித்தான். அப்போதும் தலையை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தாளே தவிர, ஒரு வார்த்தை உதிர்க்கணுமே? 
"இதப் பாரு உதயா, என் குமுறல்ல நியாயம் இருக்கா இல்லையான்னு நீயே சொல்லு. இந்த வேலையை எனக்கொண்ணும் ஜஸ்ட் லைக் தட் தூக்கிக் கொடுத்துடலை. என் தகுதியை ஒண்ணுக்கு மூணு தடவை இன்டர் வியூ பண்ணிப் பார்த்துட்டுத்தான் தர்றாங்க. நான் ஒண்ணும் எங்கிருந்தோ வந்து குதிச்சவனும் கிடையாது. அவங்க க்ரூப்பிலேயே இன்னொரு கம்பெனியில வேலை பார்க்கிறவன். நாலா பக்கமும் என்னைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டுத்தான் அப்ளிகேஷன் ஃபார்மே கொடுத்தாங்க. அதுக்கப்புறமும் என்னை ஒரு லட்சத்துக்கு ஷேர் வாங்கணும்னு சொல்றது எனக்கு எத்தனை கேவலம்? அப்படி லட்ச ரூபாயைப் போட்டு அந்தத் தகுதியில் நான் நுழைஞ்சா, என்னால் அந்த வேலையில எப்படி முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும்?"
நிறுத்திவிட்டு ஆவலோடு முகத்தைப் பார்த்தான். அப்போதும் பதில் சொல்லவில்லை. கொஞ்சம் பொறுத்து, "அப்ப அந்த வேலையில நீங்க சேரப் போறது இல்லையா?" என்றாள் மெதுவாக.
ஆத்திரத்தில் ரத்தம் சர்ரென்று தலைக்கேறியதை உணர்ந்தான். சே, என்ன இவள்.. இவளிடம் போய் அபிப்பிராயம் கேட்டது என் தப்பு. பிரசினை என்னன்னே புரிந்துகொள்ளாமல் மடத்தனமாக என்ன இது கேள்வி!
"சேரணும். சேர வேண்டியதுதான். இதை விடவா முடியும்? ஆனால் அதுவா பிரசினை?" என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
அவள் முகத்தைப் பார்த்தான். அவனது அந்த நிலைக்காக வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை. உள்ளூர ரசிப்பதுபோல் கூடத் தோன்றிற்று.
"சரி, என்ன செய்யப் போறீங்க?"
கேக்கிறதைப் பார்! 'என்ன செய்யப் போறீங்க?' ஏதோ தனக்குச் சம்பந்தம் இல்லாத மாதிரி. தாலி கட்டிய மனைவியின் பங்கு இவ்வளவுதானா? சலிப்பாக இருந்தது.
"இதப்பாரு, நீ இப்படியே இருந்தா..." சொல்ல வாயெடுத்தவன் நிறுத்திக் கொண்டான். ஆயாசமாக இருந்தது. எத்தனை முறை சொல்லியாயிற்று... என்ன பிரயோசனம்?
இட்ட பணியை தட்டாது செய்வாள். மற்றபடி எதிலும் ஒரு ஆர்வத்துடன் தன்னை நுழைத்துக்கொண்டு, இப்படி செய்யலாமே, அப்படி செய்தா இன்னும் நல்லா இருக்குமே என்று ஆலோசனை சொல்ல மாட்டாள். அபிப்பிராயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டாள். உத்தரவு, தேவா! தங்கள் சித்தம் என் பாக்கியம்! அவ்வளவுதான்.
இந்த வேலைக்கான ஆயத்தங்களில் கூட, ராத்திரி டீ போட்டுத் தருவதிலிருந்து, புத்தகங்களில் அவன் அடையாளப்படுத்தித் தந்த வரிகளைக் குறிப்பெடுப்பதுவரை அவன் சொன்னபடி எல்லாம் செய்து கொடுத்தாள். ஆனால் இப்ப என்ன இப்படி ஆகிப் போச்சு என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டேன் என்கிறாள்!
குடும்பம் என்பது இரண்டு பேர் சேர்ந்து செலுத்த வேண்டிய வாகனம் என்று நினைப்பவன் ஜெகன். ஆகவே ஒவ்வொரு விஷயத்திலும் அவள் கோணம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புவான். ஆனால் அவள் துளியாவது ஆர்வம் காட்டினால்தானே?
உதயாவை அவனுக்குப் பெண் பார்த்தபோது அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. "இதப்பாரு, நாகராஜன் எனக்கு ரொம்ப நாளா பழக்கம். உதயா அவனுக்குப் பொண்ணாப் பொறந்த நாள்லேர்ந்தே எனக்குத் தெரியும். ரொம்பச் சூட்டிகை. இந்தச் சம்பந்தத்தில் எனக்குத் திருப்தி."
அம்மாகூட..."எனக்குப் பிடிச்சிருக்குடா! குடும்பத்துக்கேத்த பொண்ணு. நல்ல படிச்சிருக்கா. ஆனா அந்தத் திமிர் இல்லாம மரியாதையா பழகறா. வீட்டு விஷயங்கள்லாம் தெரிஞ்சிருக்கு."
அழகாகவும் இருந்தாள். அவனுக்கும் பிடித்துப் போயிற்று. பெண்ணிடம் தனியே பத்து நிமிஷம் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு, தனிமையில் கேட்ட சில கேள்விகளுக்கும் அவன் எதிர்பார்த்தபடி மிகச் சரியாக பதில் சொன்னாள். அப்போதே அவளிடம், "உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. என் சம்மதத்தை இப்பவே உங்களிடம் தெரிவிச்சுடறேன்," என்றான்.
ஆனால் இதையெல்லாம் மீறி அவர்கள் திருமணம் நின்றுபோக இருந்தது. இவன் தந்தை கேட்டு அவள் அப்பா ஒப்புக்கொண்ட தொகையைப் புரட்டித்தர தாமதம் ஏற்பட்டுவிட்டது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்று எகிறிக் குதித்தார். அப்போதுகூட ஜெகன் தன் அப்பாவைப் பொறுமையாக காத்திருக்கச் சொன்னான். எப்படியோ ஒரு வாரத்துக்குள் நிலைமையை சரி செய்துவிட்டார்கள்.
இவ்வளவுதூரம் எதிர்பார்த்து மணந்து கொண்டவள் இப்படி விட்டேற்றியாக நடந்துகொள்வாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. எரிச்சலுடன் குறுக்கும் நெடுக்குமாக உலவினான். ஜன்னலைப் பார்த்திருந்தவனைத் தோளில் தொட்டுத் திருப்பினான்.
"இத பார் உதயா, நான் சொல்றதையெல்லாம் கேட்டு எனக்கு நீ ஆறுதல் சொல்லணும்னு இதை நான் உன்கிட்ட கொட்டலே. என் வருத்தத்தை நீ புரிஞ்சுக்குவேன்னுதான். அவ்வளவு ஏன், என் வருத்தத்தில் கொஞ்சம்கூட நியாயமில்லை, தப்புன்னு சொல்லி நீ வாதாடினாக் கூட எனக்கு ஒரு விதத்தில் திருப்தி கிடைச்சிருக்கும். ஆனா உன் மௌனம்? சொல்லு, ஏன் இப்படி நடந்துக்கறே?
"எல்லாத்துக்கும் தலையாட்டறே. சொல்ற வேலையெல்லாம் செய்யறே. ஆனா குடும்ப சம்பந்தமான எந்தப் பிரசினையிலும் தலையிடாம ஒதுங்கியே இருக்கே. எந்த முடிவானாலும் என் இஷ்டம்னு விடறே பார், அதான் எனக்குப் பெரிய தலைவலியா.. தாங்க முடியலே. ஏன் இப்படிப் பட்டும் படாமலுமிருக்கே. இதுக்காவது வாயைத் திறந்து ஏதாவது பதில் சொல்லித் தொலையேன்!"
நிமிர்ந்தாள் உதயா. இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்ததுபோலப் படபடவென்று பேசத் தொடங்கினாள்.
"சொல்றேங்க, ஒரு பொண்ணு தன்னைக் கல்யாணம் செய்துக்கப் போறவனுக்குத் தகுதியுள்ள ஒரு மனைவியா இருக்கணும்னுதான் நினைப்பாள். உங்களுக்கும் ஞாபகம் இருக்கும். என் வயசு, படிப்பு, குணம் எல்லாத்தையும் அலசிப் பார்த்துட்டுத்தான் நீங்க என்னைப் பெண் பார்க்க வந்தீங்க. உங்க அப்பாவுக்கு எங்க குடும்பத்தை ரொம்ப நாளாத் தெரியும். உங்கம்மா என்னை எத்தனையோ கேள்வி கேட்டு நான் உங்க குடும்பத்துக்கு சரி வருவேனான்னு பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் நீங்களும் உங்க பங்குக்கு தனியா பேசி என்கிட்ட நிறையக் கேட்டீங்க. இப்படி எல்லா விதத்திலும் நான் தகுதியானவள்னு தீர்மானிச்ச பிறகுதான் உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க. சந்தோஷம் அதே கையோடு என்னை உங்க மனைவியா ஏத்துக்கிட்டு இருந்தீங்கன்னா, இப்ப நீங்க எதிர்பார்க்கிறீங்களே அந்த முழு ஈடுபாடு என்கிட்ட இயல்பாவே இருந்திருக்கும்.
"பெண்னைப் பெத்த யாருமே தங்களால முடிஞ்ச அளவு தங்கள் பெண்ணுக்கு கண்டிப்பா சீர் செய்யத்தான் செய்வாங்க. ஆனா நீங்களோ... நீங்கன்னா உங்கப்பா. அப்பா கேட்டா என்ன, மகன் கேட்டா என்ன? அதோடு திருப்தி அடையாம உங்க அந்தஸ்தை மனசில் வெச்சு பெருந்தொகை கேட்டீங்க. அந்தப் பணத்தைப் புரட்டித் தரக் கொஞ்சம் தாமதம் ஆனப்போ, அத்தனை தகுதியுள்ளவளாக நீங்க தேர்ந்தெடுத்த என்னை வேண்டாம்னு ஒதுக்கவும் தயாராயிட்டீங்க. எங்கப்பா அங்கே இங்கே அலைஞ்சு அந்தப் பணத்தைப் புரட்டித் தந்த பிறகுதான் உங்க செலெக்‌ஷனையே நீங்க ஏத்துக் கிட்டீங்க. இப்படி இந்த வீட்டில நுழைஞ்ச எனக்கு நீங்க சொல்ற அந்த முழு ஈடுபாடு எப்படிங்க வரும்? பணம் கட்டித்தான் உங்க வாழ்க்கைப் பயணத்தில நான் பங்கேற்க முடியும்னா, அந்தப் பங்கு எப்படிங்க ஆத்மார்த்தமா இருக்கும்?
"இப்ப நீங்க அனுபவிக்கிற இதே வேதனையைத்தானே நான் இங்கே வந்த நாளா அனுபவிச்சிட்டிருக்கேன்! உங்க தகுதியையும் திறமையையும் நல்லா எடைபோட்டு வேலை கொடுத்த கம்பெனி, அதுல முதலீடு செய்தால்தான் வேலைன்னதும் அதை எத்தனை பெரிய குறையா நீங்க நினைக்கறீங்க? அந்த நிமிஷமே அந்தக் கம்பெனியில உங்க ஈடுபாடு அடியோடு விட்டுப் போச்சுங்கறீங்களே..! அப்படி இருக்கிறப்போ அதுக்கு நேர் மாறா என்கிட்ட மட்டும் எப்படிங்க உங்களால எதிர்பார்க்க முடியுது?"
மௌனம் இப்போது அவன் முறையாயிற்று.