Friday, November 20, 2009

அன்றும் இன்றும்...




'அப்பா, அந்திச் சூரியன்
அப்புறம் எங்கே போகுது?'
'ரேடியோவின் உள்ளிருந்து
பாட்டு எப்படி வருது?'
'கமலாவின் அப்பா மட்டும் ஏன்
காலில செருப்பு இல்லாமல் போறாரு?'
மழலைச் சிறுவனாய்
அன்று அவன் கேட்ட போது
'போய்த் தூங்குடா.'
'ஸ்கூலுக்கு டயமாச்சு, புறப்படு.'
'போய் புஸ்தகம் எடுத்துப் படி.'
என்றேன் அப்பா.
இன்று
கம்ப்யூட்டரின் முன்னால்
கவிழ்ந்திருக்கும் மகனிடம்
'டபிள் கிளிக் எப்படி பண்றது?'
'ஈ மெயில் ஐ.டி. எங்கே கிடைக்கும்?'
'ஸீ டிரைவ்னா என்ன?'
என்று கேட்கும்போது
'போங்கப்பா நான் பிஸி.'
'உங்களுக்கு லேசில் புரியாது.'
'தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?'
விரட்டத்தான் செய்வான், இயற்கை.
விசனப்பட என்ன இருக்கிறது?

-- கே.பி. ஜனா
(21-12-2006 'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)

Saturday, November 14, 2009

நாளும் பொழுதும் நம்மோடு!




ரை மணி நேரம் தான் அந்த ஸெமினார். தலைக்கு ஐநூறு பீஸ் என்றாலும் அனைத்து சீட்டும் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே விற்றுத் தீர்ந்திருந்தது.

'நேரத்தை நன்றாகப் பயன் படுத்துவது எப்படி?' என்ற தலைப்பில் அந்தக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த டைம் மேனேஜ்மென்ட் நிபுணர் காலதேவன் இண்டர்நேஷனல் ரேஞ்சில் வெகு பிரபலம் என்பதால்தான் எகிறியிருந்தது ரெஸ்பான்ஸ்.

சரியாக 10. 10. 10 - க்கு உரை ஆரம்பிக்கப்படும் என்று பெரிய எழுத்தில் விளம்பரம் சொன்னது. நேரத்தைப் பற்றிப் பேச வருகிறவர் நேரத்தோடு வருகிறாரா என்று வாட்ச் மேல் விழி வைத்துக் காத்திருந்தனர் எல்லாரும். ஆனால் அவர் வரக் காணோம்!

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் கண்கள் அலை பாய்ந்தன. முணு முணுப்புக்கள். சலசலப்புக்கள். பெருமூச்சுக்கள்.

பத்தாவது நிமிடம் உள்ளே நுழைந்த காலதேவன், ''வணக்கம்,'' என்றார். பின் ஒவ்வொருவராக, ''உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார்? அதில் அவர் எந்த அளவு முன்னேறியிருக்கிறார் அல்லது சாதித்திருக்கிறார்?'' என்று வினவினார்.

விழித்தனர். யாருக்குமே தெரியவில்லை.

கனைத்துக் கொண்டார். ''அன்பர்களே! பேச வேண்டியவர் வரவில்லை. அந்தக் காலம் உங்கள் கையில் இருந்தது. வேறொன்றும் செய்ய இடமில்லை. ஸோ, முன்னேற வேண்டும் என்று வந்திருக்கும் நீங்கள் பக்கத்தில் இருப்பவரின் முன்னேற்றம் குறித்து அறிந்து அதை நான் கேட்ட விதத்தில் உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கலாமே? ஆக, இதுவரை நீங்கள் கற்றுக் கொண்டது நேரத்தை என்ன செய்யக்கூடாது என்பது.''

எல்லாரும் அசந்திருக்க, தொடர்ந்தார். ''உங்களை நான் மூன்றே கேள்விகள் தான் கேட்கப்போகிறேன்,'' என்றவர் ஒவ்வொருவராக, ''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?'' என்று கேட்டார்.

'' ஸி.இ.ஒ. ஆகணும்!''... ''என் பிசினசை பெரிய லெவலுக்குக் கொண்டு வரணும்!''... ''அஞ்சு லட்சம் சர்குலேஷன் உள்ள பத்திரிகை நடத்தணும்!'' உற்சாகம் கொப்புளிக்க உதட்டிலிருந்து உதிர்ந்தன பதில்கள்.

''கேள்வி ரெண்டு. அதற்காக நீங்கள் என்னென்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?''

''முதலில் ஒரு வொர்க் ஷாப் தொடங்கணும்''... ''டெஸ்ட் பாஸ் ஆகணும்.''... ''சிற்றிதழ் தொடங்கணும்.'' அட, எத்தனை புத்திசாலித்தனமான, சுவையான, கோளாறில்லாத திட்டங்கள் கோலார் சுரங்கமாக வெளிவந்தன!

இப்போது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். ''அப்படியானால் அதைச் செய்வதை விட்டுவிட்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அதைச் செய்வது தானே உங்களைப் பொறுத்த வரை டைம் மேனேஜ்மென்ட் அட் இட்ஸ் பெஸ்ட்? அதை நோக்கி நீங்கள் எந்த ஒரு அடி எடுத்து வைத்தாலும் அது, அது மட்டும் தானே உங்கள் நேரத்தை உரிய வழியில் உபயோகிப்பது?''

ஒரு நிமிடத் திகைப்பு. புரிந்துகொண்டனர்.

''காலம் என்பது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருள் அல்ல. காலம் என்பதே நீங்கள் தான். ஆகவே காலத்துடன் உங்கள் குறிக்கோள் கலந்துவிட வேண்டும். அதன் பின் காலம் நகர்ந்தது தெரியாமலேயே காலம் உங்களை உருவாக்கியிருக்கும், நீங்கள் உங்களை உருவகித்தது போலவே!''



-- கே. பி. ஜனார்த்தனன்

Tuesday, November 10, 2009

பறவைகள் ஏன் அதிகாலையில் பாடுகின்றன?


ம்.. அவசரம் அவசரம்...
நான் பாடி முடிக்க வேண்டும்.
ஆம்.
மனிதர்கள் விழித்துக்கொண்டு விடுமுன்
நான் முடித்தாக வேண்டும்
இந்தக் காலைக் கச்சேரியை.
அவர்கள் விழித்துவிட்டால்
சந்தோஷமாய்ப் பாடும் என்னைக் கண்டு விட்டால்
உடனே என்னைத் தங்கள்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு.
ஆம்.
சந்தோஷமான எதையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
சொந்தமாக்கிக் கொண்டுவிட்டபின்
எப்படி அதனிடம்
சந்தோஷம் இருக்க முடியும்
என்றறிய மாட்டார்.


-- கே. பி. ஜனார்த்தனன்
( 02-04-1987 குமுதத்தில் வெளியான என் கவிதை )

Tuesday, November 3, 2009

72877629 (சிறு கதை)










திப்புக்குரிய நிர்வாக இயக்குனர் அவர்களுக்கு,

இந்த மின்னஞ்சலை எழுதுவது மனித வள மேலாளர் மாற வர்மன்.

என் மீது நீங்கள் சுமத்தியிருக்கும், இதுவரையிலேயே முதல் முதலான புகாருக்கு விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு கொட்டைப்பாக்கு அளவில் அதை சொல்வதானால் சமீபத்திய ஆளெடுப்பில் நான் எங்கள் ஊர்ப் பையன் ஒருவனுக்கு சலுகை காட்டிவிட்டேன் என்பது.

எலுமிச்சம்பழம் உப்பில் ஊறியிருப்பதைப் போல விசுவாசத்தில் ஊறிப்போயிருக்கும் ஒருவனுக்கு இப்படி ஒரு குற்றச் சாட்டு அவன் மேல் சுமத்தப்படுகையில் எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதை ஒரு கணம் நீங்கள் எண்ணிப் பார்க்கக் கோருகிறேன்.

என் விளக்கத்தை ஒரே வரியில் அடக்குவதாக இருந்தால் திரு.கந்தன் என்ற அந்த நபரை எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்று நான் தெரிந்து கொண்டதே அவர் நம் கம்பெனியில் சேர்ந்த அன்று காலையில் தான்! உண்மை அப்படியிருக்கையில், முதற்கண் நான் எப்படி அவருக்கு உதவ எண்ணியிருக்க முடியும்? இனி அதற்கான சான்றுகளை நான் அளிக்கிறேன்.

1. விண்ணப்பிக்கிறவர்களின் அடிப்படைத் தகுதியை பரிசீலனை செய்து குறும் பட்டியல் தயாரித்து உதவியாளர்கள் என் பார்வைக்கு வைத்த பின்னரே நான் காட்சிக்கு வருகிறேன். அப்போதும் எனக்கு அவர்களின் கல்வி மற்றும் அனுபவத் தகுதி மட்டுமே பட்டியலில் அளிக்கப்படுகிறது. அந்த மின்னஞ்சலை இத்துடன் தங்களுக்கு முன்னனுப்பியுள்ளேன்.

அடுத்து அந்த நாற்பத்து மூன்று பேரில் அந்த வேலைக்காக குறும் பட்டியல் செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் நான் இந்த மாதம் இரண்டாம் தேதி தொலைபேசியில் பேட்டி கண்டதன் முழு உரையாடலும், கம்பெனி வழக்கம் அப்படி ஒன்றைக் கோரவில்லை எனினும், என்னுடைய சுய கண்ணியத்தின் உந்துதலின் பேரில் ஒரு வார்த்தை விடாமல் ஒலி நாடாவில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அதைத் தாங்கள் தங்கள் ஒய்வு நேரத்தின் எந்தக் கணத்திலும் கேட்டுப் பார்க்கலாம். அப்படிக் கேட்டுப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் தாங்கள் கீழ்க்கண்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

2. அந்தப் பேட்டிகளில் மிக நீளமானதும் அவற்றின் சராசரி நேரமான இருபத்தொன்று நிமிடங்களை விட ஏழு நிமிடம் அதிகமானதும் ஆன ஒரே பேட்டி திரு.கந்தனுடனானது தான்.

3. பொதுவான கேள்விகளைத் தவிர நான் அனைவரிடமும் அவர்களின் புத்தி சாதுரிய விகுதியை தீர்மானிக்கக் கேட்கும் கேள்விகளில் மிகக் கடினமான கேள்வி கேட்கப்பட்டவரும் அவருடைய துரதிர்ஷ்டவசமாக அல்லது இப்போது என்னுடைய அதிர்ஷ்டவசமாக திரு கந்தன் தான். மிகக் கடினமான அந்தக் கேள்வியின் விடை 72877629 என்கிற எட்டிலக்க எண் ஆகும்.

தாங்களே சொல்லுங்கள். அந்தச் சரியான பதிலை அந்தத் தொலைபேசியில் அடுத்த சில வினாடிகளிலேயே சொல்லுவதற்கு முடிகிற ஒரு விண்ணப்பதாரரின் புத்தி சாதுரிய விகுதியை நான் 180 என்று அளவிட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? அப்படி ஒரு பிரகாசமான நபர் அடையாளம் கண்டு கொள்ளப்படுகையில், நிறுவனத்தின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு 24x7 மணி நேரமும் உழல்பவனான ஒரு பணியாளனால் அவனை எப்படிப் புறக்கணிக்க முடியும்? மிக்க மகிழ்வுடன் மட்டுமே அல்லவா அவன் அந்த நபருக்கு நியமன உத்தரவை வழங்க முடியும்?

ஆகவே தாங்கள் என் மீது கொண்டுள்ள சந்தேகம் தவறானது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் என் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முழு விசுவாசத்துடன் என் பணியைத் தொடருவேன் என்றும் இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டு எதுவும் எழாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

நம்பிக்கையுடன்,

மாற வர்மன்.


2


ன்புள்ள மாறவர்மன்,

தங்கள் விளக்கத்தை சுருக்கமாக நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறேன் (அதற்கான காரணமும் இந்த மின்னஞ்சலிலேயே உங்களுக்கு விளங்கும் என்று நான் நம்புகிறேன்). எனினும், என்றும் நிறுவனத்துக்கு எந்த ஊறும் நேராத விதத்தில் பணியாற்றுவேன் என்ற தங்கள் கூற்றின் மீது மேலும் ஒரே ஒரு முறை நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளிக்க நான் உத்தேசித்திருப்பதால் உங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,

சத்தியமூர்த்தி.

பி.கு.: இத்துடன் நீங்கள் எனக்கு விளக்க அஞ்சல் எழுதும்போது அதனுடன் தவறுதலாக முன்னனுப்பிய, இந்த மாதம் ஒன்றாம் தேதியிட்ட, உரைப் பகுதியில் 72877629 என்ற எண் மட்டுமே கொண்டிருந்த, திரு.கந்தன் என்ற அன்பருக்கு நீங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலை உங்களுக்கு திருப்பியுள்ளேன்.

<><><>

--கே. பி. ஜனார்த்தனன்
(சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை)