Wednesday, October 28, 2020

நேர்த்தியான சிந்தனையாளர்...

 ‘Prevention is better than cure.’

இப்போது நாம் உணர்ந்து கொண்டாடும் இந்த வாசகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னவர் அவரே.
Desiderius Erasmus… நெதர்லேண்டில் உதித்த நேர்த்தியான சிந்தனையாளர். இன்று பிறந்த நாள்!
சொன்ன எல்லாமுமே ஃப்ரேம் போட்டு மாட்ட வேண்டியவை. என்றாலும் சில மட்டும் இங்கே...
‘மனித மனம் உண்மையை விட பொய்யினால் மிகவும் கவரப்படுகிற மாதிரி அமைந்துள்ளது.’
‘காலம் மனிதர்களின் துக்கத்தை கரைத்து விடுகிறது.’
‘அதீத துணிச்சல் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும்.’
‘எழுதும் ஆசை எழுத எழுத வளரும்.’
‘நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே ஆக விரும்புவதில் தான் மகிழ்ச்சியின் விதை இருக்கிறது.’
‘மிகச் சிறந்த புத்தகங்கள் முதலில் படித்து விடு. எவ்வளவு விஷயங்கள் தெரியும் உனக்கு என்பது முக்கியமல்ல. அந்த விஷயங்களின் தரமே முக்கியம்.’
‘ஒளியைச் சிந்துங்கள். இருட்டு தானே மறைந்துவிடும்.’
‘சிக்கனம் ஒரு வசீகர வருமானம்.’
‘ஒரு ஆணியை இன்னொரு ஆணியால் பிடுங்குவது போல ஒரு பழக்கத்தை இன்னொரு பழக்கத்தை வைத்து மாற்ற முடியும்.’
‘எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால் புத்தகங்கள் வாங்குகிறேன். மீதம்இருந்தால் உணவுக்கும் உடைகளுக்கும்.’
‘கழுகுகள் ஈக்களைப் பிடிப்பதில்லை.’
‘உங்கள் நூலகம் உங்கள் சொர்க்கம்.’
‘எடுத்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கடவுள் இருக்கிறார்.’
‘பெண்கள்… அவர்களோடு வாழ்வது கஷ்டம், அவர்கள் இல்லாமல் வாழ்வதும் கஷ்டம்.’
‘எதுவும் தெரியாமல் இருப்பதே ஏற்றவும் சந்தோஷமான வாழ்க்கை.’
‘ஆளுக்கொரு பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறோம் திரை கீழே விழும் வரை, என்பதைத் தவிர வாழ்க்கை வேறென்ன?’

><><><

Tuesday, October 27, 2020

மௌனத்தின் மௌனம்...


‘எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காவிடில் எந்த ஏமாற்றமும் இல்லை.’

இந்த சுந்தர மேற்கோளுக்குச் சொந்தக்காரர் Sylvia Plath. அமெரிக்க எழுத்தாளர். இன்று பிறந்த நாள்!
ஆங்கிலக் கவிதை இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவர். முதல் கவிதை பிரசுரமான போது வயது எட்டு.
கவிதைத் தொகுதிக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது, ஆனால் மறைந்து 19 வருடங்களுக்குப் பிறகு. எழுதிய ஒரே நாவல் சற்றே சுயசரிதை கலந்தது... ‘மணி ஜாடி’.
மணந்து கொண்டதும் ஒரு கவிஞரையே. Ted Hughes. சொந்தக்கதை சோகமானது. ஆறு வருடமே மண வாழ்க்கை. கணவரின் பிரிவில் கடுமையான மன அழுத்தம். மறு வருடமே மறைந்தார். 30 வயதே ஆகியிருந்தது.
2003 இல் இவர் கதை திரைப்படமானபோது நடித்தவர் Gwyneth Paltrow.
சொன்ன இன்னும் சில...
‘எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் கடந்த காலத்தைப் பற்றிய வருத்தமும், இந்த நேரத்தைப் பாதிக்காமல் இப்பொழுதில் வளமாக வாழ்வதுதான் ஆகச் சிரமமான விஷயம் உலகில்.’
‘மௌனம் என்னை மன அழுத்தத்தில்ஆழ்த்தியது. அது மௌனத்தின் மௌனம் அல்ல. என்னுடைய மௌனம்.’
‘உங்களுக்கான ஓர் ஆக்கபூர்வமான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், மற்றவர்கள் உங்களுக்கெனத் தயாராக வைத்திருக்கும் ஒன்றைத் தருமுன்.’
‘படைப்புத் திறனின் மோசமான எதிரி சுய சந்தேகமே.’
‘இளம் பருவத்தின் மின்னொளிக்கும் மன முதிர்வின் பிரகாசத்துக்கும் இடையே நான் பாலம் அமைக்க வேண்டும்.’
‘உங்கள் இதயத்தை முழுவதாக ஒருவருக்கு அளிக்கிறீர்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளாவிடினும் உங்களால் அதை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. அது போனது போனதுதான்.’
‘ஆண் யாரென்றால் எதிர்காலத்தில் போய்த் தைக்கும் ஓர் அம்பு. பெண் யாரென்றால் அந்த அம்பு புறப்படும் இடம்.'
<><><>

Monday, October 26, 2020

ஓவிய விருட்சத்தை உலுக்கியவர்

ஓவிய விருட்சத்தை உலுக்கியவர்களில் ஒருவர்... மாடர்ன் ஆர்டின் தந்தை.

Pablo Picasso… Oct 25 பிறந்த நாள்!
20000 ஓவியங்களுக்கு மேல் வரைந்தவர், கவிதையும் தீட்டுவார் என்பது நி. பே. தெ. தகவல். 300 கவிதைகளுக்கு மேலேயே... ‘ஆசையின் வாலைப் பிடித்துக்கொண்டு’, என்றொரு நாடகமும்!
அப்பா ஓர் அபார ஓவியர். அவர்தான் பயிற்றுவித்தது. அம்மாவிடம் முதன்முதலில் வாயைத்திறந்து கேட்டதே பென்சிலைத் தான்! 13 வயதில் தன்னை மகன் மிஞ்சி விடவே, தான் பிரஷைக் கீழே வைத்து விடலாமா என்று யோசித்தாராம் தந்தை.
‘The Little Yellow Picador.’ ஏழு வயதில் வரைந்த இந்த ஓவியத்தை அவரே வைத்திருந்தார் இறுதிவரை. ஆரம்ப வறுமையில் குளிர் காய்வதற்காக தன் படங்களை எரிக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை இழப்பு!
கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது இவரிடம். ‘உன் ஓய்வு நேரத்தைப் போல உற்சாகம் அளிக்கக்கூடியதாக ஒரு வேலையைத் தேடிக் கொள்!’ என்பதே அவர் அட்வைஸ். தன் மன அழுத்தத்தை தானே வென்றவர். ‘அன்றாட வாழ்வின் அழுக்குகளை ஆத்மாவிலிருந்து அப்புறப்படுத்துவது தான் கலை... உற்சாகத்தை உருவாக்குவதே கலையின் நோக்கம்,’ என்பார். ‘படைப்பின் முக்கிய எதிரி அது சுவாரசியத்தை எதிர்பார்ப்பது.’
படைப்புத்திறனை வளர்த்துக் கொண்டே போனார் புதுப் புது ஸ்டைல் என்று. ஓவியக் கலையை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார். Braque -ம் இவருமாகப் பிரபலப்படுத்தியதுதான் Cubism.
‘குழந்தையாக இருக்கும்போது நான் பெரியவர்களை மாதிரி வரைவேன். ஆனால் ஒரு குழந்தை மாதிரி வரையக் கற்றுக் கொள்ள எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆகிவிட்டிருக்கிறது.’
‘மற்றவர்களெல்லாம் என்ன இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு ஏன் என்று கேட்டவர்கள். என்னை இருந்திருக்கக்கூடுமோ அதைக் கண்டு கொண்டு ஏன் கூடாது என்று கேட்டவன் நான்.’
இன்னும் சொன்னது...
‘கலை என்பது உண்மையை நாம் உணர வைக்கிற ஒரு பொய்.’
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். சிரமம் என்னவெனில் வளர்ந்த பிறகும் கலைஞனாக நீடிப்பதே.’
‘இசையும் கலையும் வாழ்க்கையை இன்னும் வசீகரமாக்கும் வெறும் அலங்காரங்கள் அல்ல; அவை இல்லாமல் வாழ முடியாத அளவு வாழ்வின் ஆதார தேவைகள்.’
ஒத்திப் போடுவதுபோடுவது இவருக்குப் பிடிக்காத விஷயம். ‘இப்படியே விட்டுவிட்டு இறக்கத் தயாராக இருக்கிற விஷயங்களை மட்டுமே ஒத்தி போடுங்கள்!’ என்பார்.
பிக்காஸோவின் வீட்டுக்கு விஜயம் செய்த ஓர் பிரமுகர் சுற்றிப் பார்த்துவிட்டுக் கேட்டார், “ஆமாம், சுவரில் உங்க ஓவியம் ஒன்றையும் காணோமே, உங்களுக்குப் பிடிக்காதா?”
“ரொம்பப் பிடிக்கும்,” என்றார் பிக்காஸோ, “ஆனா அதெல்லாம் ரொம்பக் காஸ்ட்லியாச்சே?”
><><