Monday, December 20, 2021

உருள ஆரம்பித்த எதிர்காலம்...


மாமாவின் குதிரை வண்டிக் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வண்டியின் எதிர்காலம் சக்கரத்திலும் சக்கரத்தின் எதிர்காலம் ரப்பரிலும் இருக்கிறது என்றும் கண்டுகொண்டார் அவர். உடனே ஒரு பேடண்ட் வாங்கிக் கொண்டார் ரப்பர் டயருக்கு.   நடத்த ஆரம்பித்த தன் குதிரை வண்டிக் கம்பெனியை 20000 டாலருக்கு விற்று டயர் கம்பெனி தொடங்கினார். ‘உருள’ ஆரம்பித்தது எதிர்காலம். உயரத்தில் கொண்டு சேர்த்தே ஓய்ந்தது.

ஓடிவந்து பார்த்த ஹென்றி ஃபோர்ட் ஒரு ஜயண்ட்  சைஸ் ஆர்டர் கொடுக்க சுழன்றது அதிர்ஷ்டச் ‘சக்கரம்’.

ரிம்மோடு சேர்த்து கழற்றும் டயரை இவர் கண்டு பிடித்தாரோ, ஸ்பேர் டயர் பிறந்ததோ.. ட்ரிம்மாக வளர்ந்தது Firestone Tyre கம்பெனி.

Harvey Firestone.. இன்று பிறந்தநாள்! 

1937 இல் அமெரிக்காவின் தலை சிறந்த பிசினஸ்மேன். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் உபயோகிக்கப்பட்ட டயர்களில் நாலில் ஒன்று இவரின் Firestone Tyre கம்பெனி தயாரிப்பு. போடும் காசுக்கு ஓடும் மைலேஜை அதிகரிப்பதே தாரக மந்திரம்.

மூலதனம் அல்ல முக்கியம் வியாபாரத்துக்கு. அனுபவமும் அத்தனை முக்கியமல்ல. ஐடியாக்கள் தான் முக்கியம் என்கிறார். ‘அவையே உங்கள் பிரதான சொத்து. வாழ்க்கையிலும் சரி வியாபாரத்திலும் சரி அவற்றை வைத்துக்கொண்டு அளவற்ற காரியங்களை நீங்கள் ஆற்ற முடியும்.’

உதாரணம் அவரே. ரப்பர் விலை உயர்ந்தபோது தளராமல் அவர் கண்ட தீர்வு: சொந்த ரப்பர் ப்ளாண்டேஷன்.

எந்தத் தொழிற்சாலைக்கு உள்ளேயும் ஒரு முறை முழுவதுமாக நுழைந்து வெளியே வந்து விட்டால் போதும்  அந்த தொழிற்சாலை லாபம் சம்பாதிக்கிறதா இல்லையா என்று தன்னால் சொல்லிவிட முடியும் என்பார், ‘அது நடக்கிற விதத்தையும் தொழிலாளர்களின் முகத்தையும் பார்த்து சொல்லிவிடுவேன்!’

அடிப்படை நாணயம் தான் வியாபாரத்தின் அடிக்கல் என்று நம்புகிறார். மற்றவர்களை முன்னேற்றும் போதுதான் நம் வெற்றி நிரந்தரமாக ஆகிறது என்று நினைப்பவர் சொல்வது ‘என்னுடைய வெற்றியின் ரகசியம் இரண்டே வார்த்தைகள்: மனிதர்களை அறிந்துகொள்.’

கஷ்டங்களைச் சமாளிக்க மிகச்சிறந்த வழி நேருக்கு நேர் மோதுவதுதான் என்பதிவர் திரிபு. ‘நீங்கள் ஈடுபட்டிருக்கும் காரியம் முழுக்க முழுக்கச் சரியானதுதான் என்று உங்களுக்குத் தெரியுமானால் அதை நீங்கள் உரிய காலத்தில் செய்து முடிப்பது உறுதி.’

'வருங்காலத்தை வடிவமைப்பதில் உள்ள ஒரே ஆபத்து, திட்டங்களை வளைக்க முடியாததாக போடுவதுதான்!' என்பதொரு அட்வைஸ்.

’உங்களின் மிகச் சிறந்ததை நீங்கள் வெளிக்கொணரும்போது மற்றவர்களின் மிகச் சிறந்ததையும் வெளிக்கொணருகிறீர்கள்!’ என்பது இவர் புரிந்து கொண்ட விஷயம். ‘கையில் பணம் சேர்ந்ததும் ஏன் மனிதன் தன் தேவைக்கு மீறிய பெரிய வீட்டை கட்டுகிறான்?’ என்பது புரியாத விஷயம்.

மின்சாரத்தைப் ‘பற்ற வைத்த’ எடிசனும் காரைச் ‘சுற்ற வைத்த’ ஃபோர்டும் உற்ற நண்பர்கள் இவருக்கு. 

64 வது வயதில் டயரிலிருந்து  ரிடயரானார்.


Saturday, December 18, 2021

தூள் கிளப்பிய துகள்...


Atom தான் ஆகச் சிறிய பொருள் அவனியில் என்றிருந்தபோது அதை உடைத்து உள்ளிருக்கும் Electron-ஐ நமக்குக் காட்டிய விஞ்ஞானி...

J J Thomson.. இன்று பிறந்த நாள்! (1856 - 1940)
அதாவது Element எதுவாயிருந்தாலும் அதன் மூலப் பொருள் ஒரேவிதத் துகளையே கொண்டிருக்கிறது என்ற உலுக்கும் உண்மை! எத்தனை பெரிய 'சிறிய' விஷயம்!
கையோடு பிளம் அப்பம் மாதிரி ஒரு மாடலை செய்துகாட்டி எல்லாரும் வாய் பிளக்க வைத்தார். கண்டுபிடித்த தூள், அறிவியலில் தூள் கிளப்பிற்று.
அணுவின் ஆயிரம் மடங்குக்கு மேல் சிறிய அந்த எலக்ட்ரானுக்கு அவரிட்ட பெயர் Corpuscles.
மட்டுமா? ஹைடிரஜனுக்கு ஒரே ஒரு எலக்ட்ரான்தான் என்பதையும் கண்டார்.
தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்தது நோபல் பரிசு, ‘Electrical Conductivity of Gases’ ஆராய்ச்சிக்காக! கெமிஸ்ட்ரியின் அதி முக்கிய கருவியான மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டரை அறிமுகித்தவரும் இவரே.
எஞ்சினீயராக வேண்டியவர் அப்பா இறந்துவிட, அந்தளவு பணமில்லாததால் காலேஜில் கணிதம் படிக்கச் சேர்க்கப்பட்டதில் நமக்கொரு நோபல் விஞ்ஞானி கிடைத்தார்.
21வருடத்துக்குப் பிறகு அதே இயற்பியலில் நோபல் பெற்றவர் வேறு யாருமல்ல, Thomson’s son தான். (George Paget Thomson)
தவிர, இவரிடம் பயின்ற ஏழு மாணவர்கள் (பிரபல ரூதர்ஃபோர்ட் அதிலொருவர்) நோபல் பரிசு வாங்கினர் என்றால் இவர் எத்தனை சிறப்பானதொரு ஆசிரியரும் கூட!
எல்லாவற்றையும் படித்துவிட்டு இறங்காதீர்கள், அது உங்கள் கருத்தை மாற்றிவிடும். உங்களுக்குத் தோன்றிய ஐடியா சரியா என்று ஆராய்ச்சி செய்துவிட்டு அப்புறம் அதைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள் என்பார்..
Quote?
‘மின்னுவதெல்லாம் பொன்னல்லதான், ஆனாலும் குறைந்தபட்சம் சுதந்திரமாய்ச் சுற்றும் எலெக்ட்ரான்ஸ் அதனுள் உண்டு!'

Wednesday, December 15, 2021

கதை படித்து கதைக்கு...




‘இப்ப எனக்குப் புரிகிறது,’ என்றான் உலகின் கடைசி மனிதன்.’

பிரபல Scince Fiction எழுத்தாளர் Arthur C Clarke -இன் ஒரு வரி இது.
கப்பல் பாரம் சரியா இருக்க, அடைத்துவந்த குப்பை நியூஸ் பேப்பர்களில் வந்த விஞ்ஞானக் கதைகளைப் படித்தவர், பின்னாளில் பிரபல Scince Fiction எழுத்தாளரானார்.
Arthur C Clarke.. இன்று பிறந்த நாள்!
அரும்பியது விஞ்ஞானம் மீது காதல் எனினும் விரும்பியதைப் படிக்க வசதி இல்லாத வறுமை. ஆடிட் க்ளார்க் ஆக வேலை பார்த்தபடி எழுத ஆரம்பித்து…
ஸாட்டிலைட் வைத்து உலகம் பூரா டெலிகாஸ்ட் செய்து சௌகரியமாக உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோமே, அதைக் கண்டு பிடிப்பதற்கு 20 வருஷம் முன்பே இவர் எழுதிவிட்டார் அதைப் பற்றி, ‘Extra Terrestrial Relays’ என்ற தன் கட்டுரையில்!
விண்வெளிப் பயணங்களின் சாத்தியதை பற்றி 1950களிலேயே எழுதிவிட்டார். ஏன், விண்கல விஞ்ஞானிகளே ஆலோசனை கேட்க இவரிடம் வருவதுண்டு.
‘2001 A Space Odyssey’! எல்லாரும் பார்த்து ரசித்தோமே அந்த பிரம்மாண்ட ஹாலிவுட் படம்! அது 1951-இல் இவர் எழுதிய ‘The Sentinel’ என்ற சிறுகதை. 'இந்தப்படம் உங்களுக்குப் புரிந்தால் எங்களுக்குத் தோல்வி,' என்று விளம்பரப் படுத்தினார்கள். 'நிறைய கேள்விகளை எழுப்பவேண்டும் அது!'
'ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, நான் தனுசு. நாங்க சந்தேகப் பிராணிகளாச்சே?' என்பார். எப்படி ஜோக்?
கொஞ்சம் இவரது Quotes...
‘மொத்தத்தில் இரண்டு சாத்தியதை தான் உண்டு: பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோம் அல்லது இல்லை. இரண்டுமே ஒரே அளவு பயங்கரமானது; திகில் ஊட்டுவது.’
‘எந்தப் புரட்சிகரமான முன்னேற்றமும்நான்கு படிகளில் அமைவது. 1. அது மடத்தனம், என் நேரத்தை வீணாக்காதே. 2. சுவாரசியமா இருக்கிறது, ஆனால் ரொம்ப முக்கியமில்லை. 3. அது ஒரு நல்ல ஐடியா என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். 4. நான் தான் அதை முதலில் சொன்னேன்!’
‘இந்த ஒரு காலக்ஸியில் மட்டுமே 87000 மில்லியன் சூரியன்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் மனிதன் எதிர்கொள்வது இயலாத காரியம். கோள்கள் ஒருநாள் அவன் வசமாகலாம். ஆனால் நட்சத்திரங்கள் மனிதனுக்கானவை அல்ல.’
‘இன்டர்நெட்டில் இருந்து தகவல் பெறுவது என்பது நயாக்ரா நீர் வீழ்ச்சியிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் பெறுவது.’
‘தகவல் அறிவு ஆகாது. அறிவு விவேகம் ஆகாது. விவேகம் தொலைநோக்கு ஆகாது. ஒன்றிலிருந்து ஒன்று... எல்லாமே வேண்டும் நமக்கு.’
‘இருப்பவர்களுக்கும் இறந்து போனவர்களுக்குமான விகிதத்தை வைத்துப்பார்த்தால் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் முப்பது ஆவிகள் நிற்க வேண்டும்!’
‘இப்போது நான் ஒரு அறிவியல் விற்பன்னர். அதாவது எதைப்பற்றியும் எனக்கு முழுமையாக தெரியாது.’
‘அடுத்து என்ன செய்வது என்பதே நிஜத்தில் வாழ்வின் ஒரே பிரசினை.’
‘உங்களால் என்ன முடியும் என்று கண்டுபிடிக்க ஒரே வழி அதையும் தாண்டி முயற்சிப்பது தான்.’

Sunday, December 12, 2021

ஒன் டேக் சார்லி...



உயிரில்லை என்று டாக்டர் அந்தக் குழந்தையை கிச்சன் மேடையில் வைத்துவிட்டு தாயைக் கவனிக்க, பாட்டி வந்து தனக்குத் தெரிந்த ஏதோ வைத்தியம் செய்ய, பிழைத்துக் கொண்ட குழந்தைதான்...

Frank Sinatra! இன்று பிறந்த நாள்…
1950 -களில் ஹாலிவுட்டின் ஐந்து மிகப் பணக்கார ஸ்டார்களில் ஒருவராக இருந்ததும் இவரே. வீழ்ச்சியின்போது தற்கொலை செய்ய முயன்றவரும் இவரே.
‘From Here to Eternity’ இல் அபாரமாக நடித்து வாங்கிய Best Supporting Actor தவிர பால் நியூமன் போல ஒரு Honarary Oscar -ம்.
'ரெண்டாம் உலகப் போரில் பிடிபட்ட அமெரிக்க பைலட் அவர். தன் மேல் நம்பிக்கையில்லாத மற்ற 600 போர்க் கைதிகளுடன் ரயிலொன்றில் தப்பிச் செல்லும் த்ரில்லிங் மூவீ அது. முடிவில் அவர் ட்ராக்கில் ஓடி ஓடி வர ரயிலில் ஏற முடியாமல் உயிரிழக்கும் காட்சி அற்புதமாக! உயிர் பிழைப்பதாக இருந்த நாவலின் முடிவை மாற்றியவரும் அவரே.
1960 இல் வந்த Ocean’s Eleven இல் Oceanஆக இவர்தான். ஹிட் படங்களில் சில…’Some Came Running’, ‘4 For Texas’, ‘Come Blow Your Horn’…
'One Take Charlie' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஏன்? ஒத்திகை அதிகமின்றி நேரே டேக் போய்விடுவதால்.
படம்: ‘Guys and Dolls.’ ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமலேயே மார்லன் பிராண்டோவும் இவரும் சேர்ந்து நடித்தார்கள். இவர் கேக் சாப்பிட்டபடி பேசும் காட்சி. வேண்டுமென்றே வரியை மறந்து இவரை 9 முறை கேக் சாப்பிட வைத்துவிட்டாராம் பிராண்டோ.
மிகப் பிரபல பாடகரும் கூட. “New York, New York…” “My Way…” இரண்டும் இவரது ஹிட்ஸ்.
இந்த நட்சத்திரத்தின் பேரை சிறு கோள் ஒன்றுக்கு வைத்தார் கண்டுபிடித்தவர். ‘7934 Sinatra' என்று.
செத்துப்போனபின் அடித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே உயிலில் ‘இதை எதிர்த்து வழக்கிடுபவர் உரிமை இழக்கிறார் என்றொரு ஷரத்தைச் சேர்த்தாராம்.

Wednesday, December 8, 2021

இந்த நாளைக் கைப்பற்று....


‘Carpe diem.’ (‘இந்த நாளைக் கைப்பற்றிக் கொள்!’)

அந்தப் பிரபல வாசகம் இவருடையதுதான். கி. மு. காலத்து மாபெரும்  ரோமாபுரியின் முன்னணி புலவர்களில் ஒருவர்.

Horace…. இன்று பிறந்தநாள்! (B.C. 65 - B.C.8)

புலவர்களால் கொண்டாடப்பட்ட புலவர். செய்யுளுக்கு இவர் வகுத்த வடிவமும் விதிகளும் பின் வந்தவர்களால் பின்பற்றப்பட்டது. 

அப்பாவே ஆயாவாக தன்னை பார்த்துக் கொண்டதில் தன் இளமை வளம் பெற்றது என்கிறார். 

சீசர் கொலை செய்யப்பட, யு டூ புகழ் புரூட்டஸின் ராணுவத்தில் ஆஃபீஸரானார். அடுத்த Philippi யுத்தத்தின் தோல்வியில் எல்லாம் இழந்து ஊரை விட்டு போக வேண்டியதாயிற்று. கருவூலத்தில் ஒரு வேலையை தேடிக்கொண்டு மனதில் கருவாகிய பாடல்களை எழுத ஆரம்பித்தது அப்போதுதான்.

அந்தப் போரில் ஜெயித்த அகஸ்டஸ் அளிக்க முன்வந்த அவரது உதவியாளர் பதவியை உதறிவிட்டார் நாசூக்காக. மணம் செய்து கொள்ளாமல், தானுண்டு தன் கவியுண்டு அதன் புகழ் உண்டு பழக நண்பர் உண்டு என்றானார்.

உதிர்த்த முத்துக்கள் ஏராளம். சில இதோ:

‘வளமான சமயங்களில் சோம்பிக் கிடக்கும் திறமைகளை வசமாக வெளிக்கொணர்வது நமக்கு நேரும் கஷ்ட காலம் தான்.’

‘நாளையை நம்பாதே. வாழ்வை முழுமையாக வாழ்ந்துவிடு. இருப்பதை வைத்து எத்தனை முடியுமோ அத்தனை செய்.’

‘தற்போதைய நிலையில் உற்சாகமாக இருக்கும் ஓர் மனம் எதிர்காலத்தின் கேள்விகளுக்கு செவி சாய்க்காமல், கசப்பான நிகழ்வுகளையும் சாந்தப் புன்னகையால் சமாளிக்கும்.’

‘மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது திருப்தியான மனம்தான்.’ 

‘அன்பும் சிரிப்பும் இன்றி ஆனந்தம் இல்லை, அவற்றினிடையே வாழ்.’

‘மனதை ஆட்சி செய் அல்லது மனம் ஆட்சி செய்யும் உன்னை.’

‘புத்தகங்களிலிருந்து மட்டுமே பெறும் அறிவு விவேகம் ஆகாது.’

‘எல்லாக் கோணங்களிலிருந்தும் எதுவும் அழகாயிராது’

‘பாத்திரம் சுத்தமில்லையெனில் விடும் அனைத்தும் புளிக்கும்.’

‘நல்லதொரு பயம் ஓர் அறிவுரையை விட சக்தி வாய்ந்தது.’

‘சிலவேளைகளில் முட்டாள்கள் சொல்வதும் சரியாக இருப்பது வாழ்க்கையில் அறியவேண்டிய மிகப்பெரிய பாடம்.’

‘ஒரு விஷயத்தை தொடங்கிவிட்டால் பாதி முடித்த மாதிரி, தெரிந்து கொள். தொடங்கு.’

‘ஒரு மனிதன் தனக்கு எத்தனை மறுக்கிறானோ அத்தனை அவன் கடவுளிடமிருந்து பெறுகிறான்.’

‘வாசகனை பிடித்துக் கொண்டு விடுங்கள், மேற்கொண்டு இழுத்துச் செல்லாத மந்தமான தொடக்கத்தினால் அவன் நகர்ந்து விடாமல்.’

‘சந்தோஷத்தை தேடி அலைகிறாய். அது எல்லார் கைக்கும் எட்டுவது தான். திருப்தியுற்ற மனம் அதை எல்லாருக்குமே கொடுக்கிறது.’

‘எந்த அறிவுரை கொடுத்தாலும் சுருக்கமாக கொடுங்கள்.’

‘நாம் தேடும் பொருள் இங்கே இல்லை; எங்கேயும் இல்லை.’

‘துன்பக் காலங்கள் மேதமையை வெளிப்படுத்துகிறது. வளமான காலங்கள் அதை மறைக்கிறது.’

‘எதைக் கற்றுக் கொடுத்தாலும் சுருக்கமாகச் சொல். வேகமாகச் சொல்வதை தயாராக மனம் ஏற்றுக் கொள்கிறது. சிரத்தையோடு மனதில் வைத்துக் கொள்கிறது. மேலாக சொல்வதெல்லாம் வழிந்தோடி விடுகிறது.’

‘கண்ணில் ஊறு நேர்ந்தால் உடனே அகற்ற துடிக்கும் நீ ஆத்மாவிற்கு ஊறு நேரும்போது அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போடுவது ஏன்?’

Last but not least…

'முக்கியமான திட்டங்களுடன் சற்றே முட்டாள் தனத்தையும் கலந்து கொள்ளுங்கள். தேவையான நேரம் அசடாக இருப்பதும் அழகுதான்.’

><


Saturday, December 4, 2021

அனைத்தறிவின் ஆரம்பம்...


எதிர்பார்த்த நல்ல வேலை எதுவும் கிடைக்கவில்லை அவருக்கு. சேமிப்பு தீர்ந்ததும் என்ன செய்வது? மனைவியுடன் கலங்கும் அந்த வேளையிலும் முடிவெடுக்கிறார் தன் கனவுப் புத்தகத்தை எழுத வேண்டுமென்று! நண்பர் மில் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு தன் ஒரு வருஷ உழைப்பில் உருவான கையெழுத்துப் பிரதியை மில்லிடம் கொடுக்கிறார். அடுத்த வாரம் அவர் வந்து அவை அனைத்தும் ஒரு தீவிபத்தில் கருகிவிட்டதை சொல்கிறார். எப்படி இருக்கும்?

ஆனால் மனம் தளரவில்லை. மறுபடி முதலிலிருந்து எழுத ஆரம்பிக்கிறார். ரெண்டே வருடத்தில் மீண்டும் உருவாகி, சரித்திரம் படைக்கிறது அந்த சரித்திர புத்தகம்: ‘The French Revolution’
சாதித்தவர் Thomas Carlyle.
Dec. 4. பிறந்தநாள்!
அர்த்தமுள்ள அழகான வாக்கியங்களுக்கு சொந்தக்காரர். இதோ:
‘எவ்வளவு தூரத்திற்கு பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் வரை செல். அங்கே சென்ற பிறகு இன்னும் வெகுதூரம் பார்க்க முடியும்.’
‘அனுபவம்தான் சிறந்த பள்ளிக்கூட வாத்தியார். என்ன, ஸ்கூல் பீஸ் தான் கொஞ்சம் அதிகம்.’
‘ஆரோக்கியம் இருப்பவனிடம் நம்பிக்கை இருக்கிறது; நம்பிக்கை இருப்பவனிடம் எல்லாமே இருக்கிறது.’
'அன்புள்ள இதயமே அனைத்தறிவின் ஆரம்பம்.'
‘எப்போதுமே அறிவு பார்ப்பதற்கு முன் மனம் தான் முதலில் பார்க்கிறது.’
‘சரித்திரம்: வடிகட்டப்பட்ட வதந்தி.’
‘கடவுள் படைத்த உயிரினங்களிலேயே மனிதன் மட்டும் தான் ஏழை.’
‘மனிதனின் முதல் கடமை அச்சத்தைத் தனக்கு அடிபணிய வைப்பது தான்.’
‘தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவர்களே விவேகிகள்.’
‘அவ நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கையின் யுத்தம் ஒருபோதும் நிற்பதில்லை.’
‘தூரத்தில் மங்கலாகத் தெரிவதைப் பார்ப்பதல்ல நம் வேலை; கையில் தெளிவாக இருப்பதை செய்வது தான்.’
‘என்னை கோபப்படுத்தும் அளவுக்கு எந்த மனிதனும் முக்கியமான மனிதன் அல்ல.’

Friday, December 3, 2021

திரை அமைத்த கடல்...



‘பெண்ணாயிருப்பது பெரும் சிரமமான காரியம், ஏனெனில் அதன் முக்கிய வேலை ஆண்களை கையாளுவது என்பதால்.’

சொன்னவர் Joseph Conrad.

எத்தனையோ எழுத்தாளர்களின் ஆதர்ச எழுத்தாளரான ஹெமிங்வேயின் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர் இவர். இன்று பிறந்தநாள்!
கடல் தான் இவரது உடல் மொழி. எழுதிய கதைகளில் கடல் கதைகளே பிரதானம். 20 வருட வணிகக் கப்பல் பயண அனுபவம் இவர் எழுத்துக்கு நிறையவே 'திரை' அமைத்தது.
புனைவிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி படித்தவர்கள் மறக்க முடியாத நாவல் ‘Lord Jim.’ கோழைத்தனத்தால் தன் கப்பலைக் கைவிட்ட ஜிம்மின் கதை. தன்னை நிலை நிறுத்த அவனது துடிப்பும் முயற்சிகளும் விரிந்து பரவும் நாவலில்! பிரபல Peter O'Toole நடித்தார் Lord Jimஆக, பிரபல Richard Brooks டைரக்‌ஷனில். ஆல்பிரட் ஹிட்ச்காக் படமாக்கிய இவரது நாவல் தான் ‘Sabotage.’ (1936)
1924இல் மறைந்த இவரது Heart of Darkness நாவல் இந்த 2021ல் படம் ஆகிக்கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஸாக விட்டு மறைந்தார் சஸ்பென்ஸ் என்ற தன் கடைசி நாவலை.
ஆங்கிலத்தில் இத்தனை கதைகளைப் படைத்தவருக்கு இருபது வயதுவரை ஆங்கிலம் தெரியாதாம்.
‘சக மனிதர்களின் குறைபாடுகளின்பால் அக்கறையோ அனுதாபமோ இல்லாதவரை ஒரு எழுத்தாளர் என்று கொள்ள முடியாது,’ என்பவரின் இதர வார்த்தைகள்:
‘மற்றவரை ஒத்துக் கொள்ள வைக்க முயல்கிறவர் சரியான வாதத்தை விட சரியான வார்த்தையையே நம்ப வேண்டும். உணர்வின் சக்தியைவிட ஒலியின் சக்தி அதிகம்.’
‘அடுத்தவர்களின் பலவீனத்திலிருந்து தற்செயலாக எழுவதே பலம் என்பது.’
‘நாம் கனவு காண்பது போல, நாம் வாழ்வதும் தனியாகவே.’
'கேடு விளைவிக்கும் அபூர்வ சக்திகள் எங்கோ இருப்பதாக நம்பவேண்டாம், சகல வகை கெடுதலையும் செய்யும் சக்தியை மனிதர்களே நிறைய வைத்திருக்கிறார்கள்.'
‘எதிர் கொள்வது, எது வந்தாலும் எதிர் கொள்வது: அதுவொன்றே முன்னேறிச் செல்ல ஒரே வழி . எதிர் கொள்ளுங்கள்!’
‘கடல் என்றுமே ஒரு நண்பராக இருந்ததில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் மனிதனின் அலைபாயும் மனதுக்கு ஒரு துணையாக.’
‘மனிதரின் கற்பனையில்தான் சத்தியம் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்த, மறுக்க முடியாத உருவம் பெறுகிறது. கற்பனைதான் வாழ்க்கைக்கும் சரி, கலைக்கும் சரி மாபெரும் அதிபதி.’
‘ஒவ்வொரு புல்லின் இதழுக்கும் மண்ணில் ஓர் இடமுண்டு. தன் பலத்தை அதிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. அதுபோலவே மனிதனும் தன் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தான் வேரூன்றியிருக்கும் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறான்.’

Friday, November 12, 2021

காற்றின் மூன்றாவது...

வானம் ஏன் நீலமாக தெரிகிறது? 

யோசித்ததுண்டா நீங்கள்? யோசித்தார் அவர். கண்டு பிடித்தார். 

சூரியனிலிருந்து பாயும் ஒளி அலை அதைவிட மிகக் குறைந்த அலை நீளம் கொண்ட அணுத் துகள்களால் வளிமண்டலத்தில் சிதறடிக்கப் படுகிறது. அலையில் நீளம் குறைந்த நீலம் அதிகமாகச் சிதறடிக்கப் பட, அதை நாம் பார்க்கிறோம் நீலவானமாக.

அந்த முதல் விளக்கம் Rayleigh Scattering  என அவர் பெயரிலேயே வழங்கப் படுகிறது.

 

Lord Rayleigh...  இன்று பிறந்தநாள்.

 

ரொம்பச் சுவாரசியம் இவர் Argon என்ற வாயுவைக் கண்டு பிடித்தது. நைட்ரஜனின் அடர்த்தியைத்தான் அளக்க ஆரம்பித்தார் அவர். காற்றிலிருந்து மற்ற வாயுக்களைக் கழற்றி விட்டு அதைத் தனியே பிரித்தெடுத்தார். அளந்த அடர்த்தி லேபில் தயாரித்த நைட்ரஜனின் அடர்த்தியைவிட அதிகமா இருந்தது. வில்லியம் ராம்ஸே என்ற விஞ்ஞானியும் சேர்ந்து கொள்ள, காற்றில் கூடுதலா இருக்கும் அந்த ஏதோ ஒன்றைக் கண்டு பிடித்தார். அதான் ஆர்கன். காற்றின் மூணாவது முக்கிய வாயு.  ரெண்டு பேருக்கும் நோபல் கிடைத்தது.

 

சின்ன வயதில் நோஞ்சானாக உடல் பிரச்சனைகளோடு சிரமப்பட்du பிற்காலத்தில் சாதனையாளர்கள் ஆக மாறியவர்கள்லிஸ்ட் எடுத்தால் மிக நீளத்துக்கு வரும். இவரும் ஒருவர். 

 

அறிவியலில் அவர் கால் பதிக்காத அத்தியாயம் இல்லை எனலாம். அவர்களாலன்றொ நாம் இன்று சந்திரன் வரை கால் பதிக்கிறோம்?


Friday, November 5, 2021

இதோ உங்கள் நாயகி...


வாசகர் உலகைப் புரட்டிப்போட்ட அபார நாவல் அது. படமாக்கப்பட்டபோது எல்லாருக்கும் ஆவல். யார் அந்த அசத்தலான நாயகி ஸ்கார்லெட் வேடத்தில் நடிக்கப்போவது? பெட்டி டேவிஸ், கேத்தரின் ஹெபர்ன் என்று பிரபல நடிகைகள் போட்டியிட்ட ரோலாயிற்றே? பிரிட்டனில் இருந்து வந்த அந்த புது நடிகையை அழைத்துக் கொண்டு வருகிறார் ப்ரொட்யூஸரின் தம்பி. “இந்தாருங்கள் உங்க ஸ்கார்லெட்!” என்றார். ஃபில்ம் டெஸ்டில் வென்று அந்த அரிய வாய்ப்பை தட்டிக் கொண்டு போனவர் அற்புதமாக நடித்து அதற்காக ஆஸ்காரையும் தட்டிக் கொண்டு போனார்.

அவர் Vivien Leigh... இன்று பிறந்த நாள்!
அந்தப் படம், ஊகித்திருப்பீர்கள்,ஹாலிவுட்டின் தலைசிறந்த 10 படங்களில் தவறாது இடம்பெறும் ‘Gone with the Wind’. பிரிமியர் பத்திரிகை தேர்ந்தெடுத்த தலை சிறந்த 100 கதா பாத்திரங்களில் மூன்றவது ரேங்க் அவர் நடிப்புக்கு.
நடிப்பில் ரசிகர்களின் டார்லிங் ஆனவர் பிறந்தது டார்ஜிலிங்கில். ஆறு வயதில் லண்டன் பயணம். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கிடைத்தது அனுபவம். எப்படியும் பிரபலம் ஆவேன் என்று சொன்னவர் நடித்த முதல் படம் ‘எல்லாம் நல்லதுக்குத்தான்.’
தான் மேடையில் நடித்த அதே ‘A Streetcar named Desire’ நாடகக் கதையில், பின்னாளில் ஹாலிவுட்டின் பிரபல மார்லன் பிராண்டோவுடன் நாயகியாக நடிக்கும் நாள் வரும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதில் தன் ரெண்டாவது ஆஸ்கார் அவார்டும் பெற்றார்.

Saturday, October 16, 2021


’சிலர் தாங்கள் எந்த இடத்துக்கு செல்லும்போதும்

சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.

மற்றவர் தாங்கள் எந்த இடத்தை விட்டு செல்லும்போதும்!
>><<

'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே,
அதுவேதான் என்று அறிந்துகொண்டேன்.'
>><<

'நல்ல அறிவுரையை எப்போதுமே நான்
எவருக்கேனும் கொடுத்துவிடுகிறேன்.
அந்த ஒன்றைத்தான்
அதைவைத்து செய்ய முடியும்,
ஒரு போதும் தனக்கு அது உதவுவதில்லை.’
>><<

’கையாளக் கடினமான
இரண்டே விஷயம் வாழ்க்கையில்:
தோல்வியும் வெற்றியும்.’
>><<

'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடில்
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென
எண்ணிப் பாருங்கள்'
சொன்னவருக்கு இன்று பிறந்த நாள்… Oscar Wilde.

Sunday, October 10, 2021

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ராஜேஸ்வர ராவும்...

 


“பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ?” பாடலுக்கு அவர் அமைத்த இசையும் அப்படியே! தமிழ் தெலுங்கு இந்தி மூன்றுக்கும் சொந்தமானது. எல்லோர் மனதுக்கும் பந்தமானது. இன்றைக்கும் மிஸ் பண்ணாமல் கேட்கும் ‘மிஸ்ஸியம்மா’ படப் பாடல்.

எஸ். ராஜேஸ்வர ராவ்.. தென்னிந்திய திரை உலகில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர்.. இன்று பிறந்த நாள்!
“தெரிந்து கொள்ளணும் பெண்ணே… அதைப்போல், நடந்து கொள்ளணும் பெண்ணே…” என்று சாவித்திரி பாட, “பழகத் தெரிய வேணும்.. உலகில், பார்த்து நடக்க வேணும்..” என்று ஜெமினி பாட அந்தப் படமே ஒரு இசை விருந்து. “எல்லாம் உனக்கே தருவேனே, இனிமேல் உரிமை நீ தானே..” என்ற ஏ எம் ராஜா பாடும்போது மயங்காதார் யார்? கடைசியில் வரும் “மாயமே நான் அறியேன்..” அற்புதமான மெலடி.
எத்தனை முறை கேட்டாலும் புதிதாகத் தெரியும், புத்துணர்ச்சியும் காதல் உணர்வும் அள்ளித் தெளிக்கும் அந்தப் பாடல்: “ஓஹோ வெண்ணிலாவே...விண்ணாளும் வெண்ணிலாவே…வீசும் தென்றலிலே.. கதை, பேசும் வெண்ணிலவே..” ஜெமினி, சாவித்திரி ‘பிரேம பாசம்’ படத்தில் நடிக்கும் அந்த கண்டசாலா, லீலா பாடல் ஒலிக்காத திசையில்லை.
“எங்கிருந்து வீசுதோ.. இனிதாகவே தென்றல்..” என வீசிய ‘கடன் வாங்கி கல்யாணம்’ படப்பாடல். இந்தப் படத்தில்தான் ஜாலியான அந்த “கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே..” இசையில் ஜாலம் செய்த, “போதும் உந்தன் ஜாலமே..”
‘அவர் யார்?’ என்று கேட்க வைத்த, மயக்கும் குரல் கொண்ட ரகுநாத் பாணிகிரஹி தமிழில் பாடிய அந்த இரண்டே பாடல் ‘அவள் யார்?’ படத்தில் இவர் இசையமைத்தவைதான். (“நான் தேடும் போது.. நீ ஓடலாமோ?” “கண் காணும் மின்னல் தானோ?”)
1976 இல் கே எஸ் கோபாலகிருஷ்ணன் ‘தசாவதாரம்’ எடுத்தபோது இவர்தான் இசையமைத்தார்.
“சேலாடும் நீரோடை மீதே... தேனின்பப் பண் பாடுவோமே..” என்ற கண்ணதாசன் பாடல் ராஜா சுசீலாவின் குரலில் வந்தது. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’
பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆரம்பத் தமிழ்ப் பாடல்களில் ஒன்றான, அவரை பிரபலப்படுத்திய “அவனல்லால் புவி மேலே அணுவும் அசையாது…” இவரது ‘பிரேம பாசம்’ படத்தின் பாடல்.
எல்லா வகை வாத்தியங்களும் வாசிக்கத் தெரிந்த இவர் எல்லா வகை பாடல்களும் இசையமைக்கத் தெரிந்தவர். “காப்பியிலே பல் தேய்க்கிறார்... மாப்பிள்ளை டோய்..” அந்தக் காமெடி பாடல் ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் வருவது.

Monday, October 4, 2021

மனங்களை அள்ளிய மாமி...


1994 -இல் பிரபல நாவலான ‘Little Women’ படமாக வந்தபோது அந்த நான்கு சகோதரிகளின் அம்மாவாக நடித்தவர் எல்லோருடைய மனங்களையும் அள்ளிக் கொண்டார். 

கணவர் சிவில் யுத்தத்திற்கு சென்றுவிட, தன் நான்கு பெண்களையும் கவனித்து வளர்க்க வேண்டிய பொறுப்பு மாமி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு. அதை எத்தனை அழகாய், தன் உறுதியான மனதுடன் நிறைவேற்றுகிறார்!

எழுத்தாளராகத் துடிக்கும் தன் மகள் ஜோவை தனியே வெளியூர் அனுப்ப முடிவு செய்தபோது ‘நீ இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்னு தெரியலே. ஆனா நீ போ. உன் திறமையை உபயோகி. சுதந்திரத்தை தழுவு. அப்புறம் எத்தனை அற்புதம் நடக்குதுன்னு பார்!’ என்று சொல்லும் போதும்

மகள் Meg காதலை மற்ற சகோதரிகள் எதிர்த்த போது, ‘என் மகள் செல்வத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து சுயகௌரவத்தை இழப்பதை விட காதலுக்கு மதிப்பு கொடுத்து ஒரு ஏழையை மணப்பதையே நான் விரும்புகிறேன்,’ என்று தட்டிக் கொடுக்கும் போதும் Louisa May Alcott தன் நாவலில் உருவகித்த தாயை நம் கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.

Susan Sarandon… இன்று பிறந்த நாள்.

கணவனும் மனைவியுமாக ஆடிஷன் சென்றபோது மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க நடிகையானவருக்கு கிடைத்த ஆஸ்கார் நாமினேஷன் நாலு. அவார்ட் கிடைத்தது தூக்குத் தண்டனைக் கைதி ஒருவனுக்காக அவன் தண்டனையைக் குறைக்கப் போராடும் பெண் துறவியாக நடித்திருந்த ‘Dead Man Walking’ படத்துக்கு.

 

‘Stepmom’ படத்தில் இவருக்கு சரியான போட்டி Julia Roberts. டிவோர்ஸுக்குப் பின் குழந்தைகள் தன் கணவனின் ரெண்டாவது மனைவியுடன் ஒட்டிக் கொள்ளவில்லையே என்று கவலையும் எரிச்சலும் படும் அன்னையாக ஒரு திடமான நடிப்பை வழங்கியிருந்தார்.

Richard Gere யுடன் நடித்த ‘Shall We Dance?’  படத்திலும் கைதட்டல் நடிப்பை வழங்கினார்.  வாழ்க்கை போரடிக்குது என்று டான்ஸ் கற்றுக்கொள்ள சென்ற  ரிச்சர்ட்  அழகிய ஆசிரியை ஜெனிஃபர் லோபஸுடன் ஆட்டம் போடும் போது அதை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், இறுதியில் ரிச்சர்ட், ‘என் பார்ட்னர் இருப்பது இங்கே தான்!’ என்று தன்னிடம் நன்றி சொல்லும் போது காட்டும் பரவசமும்!

அந்தக் காட்சி! கணவனைத் துப்பறிய அனுப்பிய ஆளிடம் அவள் சொல்கிறாள், போதும், வேண்டாம் என்று.  “நம்ம வாழ்க்கைக்கு ஒரு சாட்சி வேணும். கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகத்திலே.  அதில ஒருத்தரோட வாழ்க்கை என்ன கவனம் பெறுது? கல்யாணம் செய்யும்போது நாம் உறுதிமொழி எடுக்கிறோம், எல்லாத்தையும் கவனிக்கிறதா. அவரோட நல்லது, கெட்டது, விசித்திரமானது, வித்தியாசமானது எல்லாத்தையும்! எல்லா நேரமும்! நீங்க அப்ப அவர்ட்ட சொல்றீங்க, உங்க வாழ்க்கை கவனிக்கப்படாது போகாது, ஏன்னா நான் அதைக் கவனிக்கிறேன்னு. உங்க வாழ்க்கைக்கு சாட்சியில்லாம போகாது, ஏன்னா நான் அதுக்கு சாட்சியா இருப்பேன்னு!"

2006 ஒலிம்பிக்கில் சோபியா லாரனுடன் கொடியேந்தி நடந்த இவர் Robert Redford உடன் கை கோர்த்தது ‘The Great Waldo Pepper’ படத்தில்.  Marlon Brando வுடன்  ‘A Dry White Season’ 

சொன்னது:  ‘எப்படி நடித்தாலும் நாம் திருப்தி அடையமாட்டோம். அதுதான் நான் நடிகையாக நீடிக்க ஒரே காரணம்.’

‘குழந்தைகள் உங்களுக்கு ஓர் புதிய உலகை சிருஷ்டிக்கின்றன.’


Tuesday, August 31, 2021

அனுபவம் தாண்டாத அறிவு...


‘எந்த ஒரு மனிதனின் அறிவும் அவன் அனுபவத்தை தாண்டியதல்ல.’

சொன்னவர் John Locke. பதினேழாம் நூற்றாண்டில் தலைசிறந்த தத்துவவாதிகளில் ஒருவர். அறிவியலாளரும் கூட.
John Locke... ஆகஸ்ட் 29. பிறந்த நாள். (1632 - 1704)
இன்னும் சொன்னவை:
‘எதற்குக் கவலைப்படுகிறாயோ அது உனக்கு எஜமானாகி விடுகிறது.’
‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சொத்து அவனுக்குள்ளாக உண்டு. அவனைத் தவிர யாருக்கும் உரிமையில்லாத சொத்து.’
‘பெரியவர்களின் சொற்பொழிவுகளில் இருந்து பெறுவதைவிட குழந்தையின் எதிர்பாராத கேள்விகளிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.’
‘ஓடை நீர் ஏன் கசக்கிறது என பெற்றோர் வியக்கிறார்கள், ஊற்றை அவர்களே மாசுபடுத்திவிட்டு.’
‘உலகுக்கு நாம் இடும் ஒரே வேலி அதைப் பற்றிய முழு அறிவு தான்.’
‘நாம் பச்சோந்திகள் மாதிரி. நம் சாயலையும் வண்ணத்தையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம்.’
‘கல்வி ஒரு மனிதனை தொடங்கி வைக்கிறது. ஆனால் வாசிப்பும் யோசிப்பும் நல்ல நட்பும்தாம் அவனைப் பூர்த்தி செய்கிறது.’
‘தைரியமே மற்ற நற்குணங்களின் துணையும் பாதுகாப்பும்.’

‘நாம் புரிந்து கொள்வதை விருத்தி செய்வது இரண்டு காரணத்துக்காக. முதலில் அறிவை அதிகரிக்க. இரண்டாவது அந்த அறிவை மற்றவர்களுக்கு அளிக்க.’

>><<


ஒரு மழை நாளில்...


“ஆளுக்கு ஒரு பேய் கதை எழுத வேண்டும். உன்னால் முடியுமா?” பிரபல கவிஞர் பைரன் கேட்கிறார் அந்த சின்னப் பெண்ணை. காதலனுடன் ஓடி வந்திருந்த அந்த அந்தப் பதினெட்டு வயது பெண்ணை. 1816 -இன் மழை நாளொன்றில் சுவிட்சர்லாந்தில். யோசித்து யோசித்து பார்க்கிறாள். மறுநாள் இரவு கனவொன்று. இன்ஸ்பயர் ஆகி எழுந்து எழுத ஆரம்பிக்கிறாள். உலகின் முதல் சயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் Frankenstein கதை பிறக்கிறது. எழுதியவர் பெண்ணென்றால் நம்பவில்லை. 'கணவர்தான் எழுதியிருப்பார்!' என்றார்கள்.

அந்தப் பெண் .. Mary Shelley... (1797-1851) ஆகஸ்ட் 30. பிறந்த நாள்!
சாதாரண கதையா அது? ரொம்ப ரகசியமாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிதான் ஃப்ராங்கென்ஸ்டீன். சடலத்துக்கு உயிர்கொடுக்கும் மாய ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தவர் அற்புதமான ஒரு மனிதனை உருவாக்க எண்ணுகிறார். என்ன, எடுத்துக்கொண்ட உடலுக்கு மூளைப் பகுதி சேதமுற்றிருக்கிறது. வேறொரு நல் மூளையைக் கொண்டுவந்து விட்டாலும் அது மாறிப்போய் விடுகிறது. எழுந்து கொண்டது மனிதனல்ல, மான்ஸ்டர். தப்பாய்ப் போனவனை தடுப்பதற்குள் தப்பி விடுகிறான். அதிர வைக்கிறது அவரையும் அவனது கொடூரங்கள். எப்படி ஒழிக்கிறார்கள் என்பது கதை. கடவுளின் படைப்பை எதிர்க்கும் மனிதச் செயலின் விளைவு நாசம்தான் என்பது மெசேஜ்.

பிரபல Boris Karloff தான் முதல் ஃப்ராங்கென்ஸ்டீன் மான்ஸ்டர். அசத்தி (அச்சுருத்தி) விட்டார் மனிதர்!
எதைவிட எது பெட்டர் என்று விவாதிக்கிற அளவுக்கு ஏகப்பட்ட ஃப்ராங்கென்ஸ்டீன் திரைப்படங்கள் வந்துவிட்டன. அமுதசுரபி மாதிரி ஒரு அடிப்படை லைன் கொடுத்துவிட்டாரா, அடியொற்றி வந்த புதினங்களும் அனேகம். தமிழில் கூட இந்த பாணியில் நான் வணங்கும் தெய்வம் என்று வந்ததாய் ஒரு ஞாபகம்.
மேரி ஷெல்லியின் வாழ்க்கையோ? பிறந்ததுமே மரித்து விட்ட தாய்.. கடன் சுமையில் அப்பா.. சித்தி கொடுமை..என்று சுத்திச் சுத்தி சோகம். காதலித்தவரும் வேறொருத்தியின் கணவர். பிறந்த குழந்தைகளில் பிழைத்தது ஒன்றே. 24 வயதில் நீரில் மூழ்கி கணவர் மரணம்... ஆனால் எழுத்தாளராக மட்டும் வாழ்வில் வெற்றி. எழுதிய ‘கடைசி மனிதன்’ நாவலும் பின் நாட்களில் பிரபலமாகிப் போனது.
Elle Fanning நடித்து 2017 இல் படமாக வந்த இவரின் கதைக்கு (‘Mary Shelley’) அமோக விமரிசனம்!
>><<

Saturday, August 21, 2021

ஒற்றை அடியில் உலகம்...

 


எந்த ஒன்று மட்டும் இல்லை என்றால் திணறித் திண்டாடிப் போவோமோ, அந்த ஒன்றை உருவாக்கிய ரெண்டு பேரில் ஒருவர் அவர்.

தகவல் என்ற மலையை எல்லார் கைக்குள்ளும் அடங்கும்படி செய்த இருவர். சிறு கூழாங்கல்லாக.. ஆம், கூகிளாக..

Google! உலகின் மொத்த விஸ்தீரணமும் ஒற்றை அடியாகி விட்டது. அதாங்க உங்க உள்ளங்கைக்கும் லேப்டாப்புக்கும் உள்ள தூரம்.

Segey Brin… இன்று பிறந்த நாள்!

மேரிலாண்ட் யூனிவர்ஸிடியில் கணக்கிலும் கம்ப்யூட்டர் சயின்ஸிலும் ஹானர்ஸுடன் B.S. முடித்தவர் மேல்படிப்புக்காக சேர்ந்த ஸ்டான்ஃபோர்டில் அந்த இரண்டாமவரை (Larry Page) சந்தித்தார். 

ரெண்டு பேருமாக சேர்ந்து செய்த ரிஸர்ச்சில் உருவானது உலகின் மாபெரும் ஸர்ச் என்ஜின்.  ஒன்றுடன் நூறு சைபரை பின்னால் வரும் அடுக்கினால் வரும் மாபெரும் எண்ணைக் குறிக்கும் சொல் Googol. அதிலிருந்து தோன்றியது Google.

எத்தனை தூரம் ஒரு வெப்ஸைட் மற்றொன்றால் இணைக்கப்படுகிறது என்பதைக் கொண்டு அதைத் தரப் படுத்தலாம் என்று யோசித்தார்கள். Page Rank என்ற அதன் முதல் அல்காரிதத்தை எழுதினார்கள். சடுதியில் பதில் தரும் கூகுள் பிறந்தது, லாரி பேஜ் தங்கிய விடுதியில்.

குடும்பம் நண்பர்கள் என்று உதவிக்கு கிடைத்த ஒரு மில்லியனை கொண்டு உருவாக்கிய தேடல் என்ஜினை இன்று தினமும் ஒரு ட்ரில்லியன் பேருக்கு மேல் கிளிக்குகிறார்கள்.

வேக வளர்ச்சி. YouTube -ஐச் சொந்தமாக்கிக் கொண்டது 2006 இல். 2015 இல் கூகிள் Alphabet Inc இன் அங்கமானபோது அதன் தலைவரானார் ப்ரின். 

கவலையின்றி தகவல் பிடிக்கும் வலையை நமக்குத் தந்தவர்கள் தற்போது அக்கறை காட்டுவது உலகை மேம்படுத்தும் வழிகளில். மாற்று எரிசக்தி, மாசற்ற கார், மாறுபடாத க்ளைமேட் என்று. Artificial Intelligence -இல் காரை இயக்கிக் காட்டியது 2010இல்.

உடற் பயிற்சி என்றால் ப்ரின்னுக்கு உயிர். காலேஜில் படிக்கையில் ‘ஏதும் அட்வான்ஸ்ட் கோர்ஸ் எடுத்திருக்கியா’ன்னு அப்பா கேட்டபோது, ‘ஆமா, அட்வான்ஸ்ட் ஸ்விம்மிங்!’ன்னு பதிலளித்தாராம். 

><><

(தகவல் நன்றி: கூகிள்)