Sunday, May 24, 2020

என் இதயம் அடித்துக் கொள்கிறது...

அப்பா அறுபதுகளின் பிரபல மியூசிக் டைரக்டர். அற்புதமான பாடல்களை அந்தக்காலத்தில் வழங்கியவர். கண்ணைக் குளமாக்கும் ட்யூன்கள் முதல் காதல் சிலிர்க்கும் டியூன்கள் வரை நம் காதுக்குத் தந்தவர். ஒரு மகன் பிரபல நடிகர், தயாரிப்பாளர். அடுத்த மகன் அடியொற்றியது அப்பாவின் இசை வழியை. அவரைப்போலவே பிரபல மியூசிக் டைரக்டர்... தெரிந்திருக்கும் யார் என்று. ரோஷன்.. ராகேஷ் ரோஷன்.. ராஜேஷ் ரோஷன்.
Rajesh Roshan.. மே 24. பிறந்த நாள்.
மலையாளத்தில் லட்சுமி நாயகியாக நடித்த முதல் படம் ‘சட்டைக்காரி’. சக்கைப்போடு போட்டது. மாஸ்டர் தேவராஜன் தான் மியூசிக். அற்புதமான ட்யூன்கள். ஆங்கில பாடலொன்றுடன். அது இந்தியில் அதே லட்சுமியுடன் ‘Julie’ ஆனபோது அதி அற்புத ட்யூன்களைக் கொடுத்தார் ராஜேஷ் ரோஷன். அந்த ஆங்கிலப் பாடலைச் செல்லும்போதே மை ஹார்ட் இஸ் பீட்டிங்.. “My heart is beating…” பாடல்தான் அது. கிஷோர் பாடும் “Dil Kiya Kare..” புதுவிதமான பீட்ஸுடன் பீடு நடை போடும். அந்த வருட ஃபில்ம் ஃபேர் அவார்ட்!
ஆர். டி. பர்மனை ‘Chote Nawab’இல் அறிமுகப்படுத்திய பிரபல காமெடி நடிகர் மெஹ்மூத் தான் இவரையும் அறிமுகப்படுத்தினார் தன் ‘Kunwara Baap’ -இல். அந்த டைடில் ஸாங்… ‘நான்தான் குதிரை.. இதுதான் வண்டி..’யில் ஏறியவர் சென்றது வெகு தூரம். never looked back. படத்தின் கடைசியில் வரும் சோகப் பாட்டு, (“Aare Aaja Nindiya..”) நௌஷத், சங்கர் ஜெய்கிஷன் ரேஞ்சுக்கு இருந்தது.
Loot Maar, Mr Natwarlal, Kala Pathar, Des Parades… என்று ஆரம்பித்து வெற்றிப் பாடல்கள். My Fair Lady ஸ்டைலில் தேவ் ஆனந்த் எடுத்த பாடல் படத்தில் (‘Man Pasand’) தென்றலில் மிதக்கும் பாடல்களின் அனுபவம்...
முக்கிய திருப்பம்... ராகேஷ் ரோஷனின் மகன் ஒரு கதா நாயகனாக உருவெடுத்தார். Hrithik Roshan! லாஞ்சிங் படமான ‘Kaho Na Pyar Hai’ யில் சித்தப்பா போட்டுக் கொடுத்தார் சத்தான எட்டு ட்யூன்களை. அடுத்த பிலிம்பேர் அவார்ட்! விரைந்தோடி ரசிகர்கள் வாங்கியது ஒரு கோடி இசைத்தட்டுகள்.
பின் (முன்?) குறிப்பு: ”Jo Wadha Kiya Woh Nibhana Padega..” 1963 ஆம் வருடம் பிலிம்பேர் அவார்ட் வாங்கிய Binaca Geet Mala வில் பலப்பல வாரம் முதல் பாடலாக பவனி வந்த ‘தாஜ்மஹால்’ படப் பாடல் நினவிருக்கா? அப்பா ரோஷனுடைய அனேக முத்துக்களில் ஒன்று!

Wednesday, May 20, 2020

நானே நானாக...

விபத்தில் அடிபட்டு தன் ஒரு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு வீல் சேரில் நாளை ஓட்டுகிறார் போட்டோகிராபர் ஜெஃப். அவ்வப்போது வந்து பார்க்கும் காதலியும் நர்சும்... நேரம் போகணுமே? அபார்ட்மெண்ட் ஜன்னலோரம் பைனாகுலரில் எதிர் ஜன்னல்களில் மற்றவர்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு உதிக்கிறது ஒரு விபரீத சந்தேகம். இடி மழையின் இடையே கேட்டதே ஒரு சின்ன அலறல், என்ன அது? நோயாளி மனைவியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரன், தோர்வால்ட், நீளக் கத்தி ஒன்றை கழுவுகிறானே ஏன்? ஒரு பெரிய ட்ரங்கு பெட்டியை வீட்டிலிருந்து அவன் நகர்த்துவது எதற்காக இருக்கும்? சத்தமில்லாமல் மனைவியை காலி பண்ணி விட்டான் என்று சந்தேகம்! துப்பறியும் நண்பனிடம் சொன்னால், விசாரித்து, அவள் ஊருக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது என்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர் நாயை யாரோ கொன்றுவிட ஜெஃப்புக்கு மட்டும் சந்தேகமே இல்லை அது அவன் தான் என்று. ‘உடலை புதைத்த இடத்தை நாய் தோண்ட ஆரம்பித்திருக்கும், அதான்!’ பொய்யாக ஒரு போன் கால் கொடுத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார். அந்த நேரத்தில் காதலி சுவர் ஏறி குதித்து அவன் வீட்டில் நுழைந்து ஆராய்கையில் அவன் வந்துவிடுகிறான். காதலியை காப்பாற்றணுமே? வேறு வழியின்றி போலீஸுக்கு போன் செய்கிறார் ஜெஃப். அவர்கள் வந்து அவளைப் பிடிக்க, விரல்களைப் பின்புறமாக வைத்து ஜெஃப்புக்கு சைகை காட்டுகிறாள் காதலி. விரலில் தோர்வால்டின் மனைவியின் கல்யாண மோதிரம். பார்த்துவிடுகிறான் தோர்வால்ட் இவர் பார்ப்பதை.
அடுத்து என்ன? ஜெஃப்பைத் தீர்த்துக்கட்ட இரவில் அவர் வீட்டில் நுழைகிறான் அவன். தன் காமிராவின் ஃபிளாஷ்களை அவன் முகத்தில் அடித்துத் தப்ப முயல்கிறார் வீல் சேர் ஜெஃப். முடியவில்லை. தள்ளி விடுகிறான் அவரை ஜன்னல் வழியே. சரியாக போலீஸ் வந்து சேர, மாட்டிக் கொள்கிறான். கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறான்.
கடைசி காட்சி: அதே ஜன்னல் ஓரம். அதே வீல்சேரில் ஜேம்ஸ். ‘இரண்டு காலிலும்’ கட்டுப் போட்டுக் கொண்டு!
ஹிட்ச்காக்கின் பிரபல ‘Rear Window’’வில் ஜெஃப் ஆக வந்து, அந்த வீல் செயரில் நம்மையும் நகர வைத்தவர்...
James Stewart.. மே 20. பிறந்த நாள்!
ஒரு மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 36 மில்லியன் குவித்தது. (ஏன் எல்லோரும் சினிமா எடுக்க ஓடுகிறார்கள் என்று புரிகிறதா?)
‘பின் ஜன்னல்' தவிர இவர் பின்னியெடுத்த படம், ‘என்னவொரு அற்புதம், வாழ்க்கை!’ (‘What A Wonderful Life’) துடிப்பான நடிப்பு!
ஹிட்ச்காக்கின் ‘Vertigo’விலும் ஹீரோ இவரே. உயரம் என்றால் துயரம் அவருக்கு அதில். ‘Rope’ என்ற ஒரே ஷாட் ஹிட்ச்காக் படத்திலும்!
கையில் அடுத்த வேலைக்கான கட்டிடக் கலை டிகிரியை வைத்திருந்தவர், ஆரம்பத்தில் கலக்கியது கௌபாய் படங்களில். ஒரே தொப்பியுடன் என்பது விசேஷம்.
1934 இல் ‘Art Trouble’ முதல் படத்தில் நடித்தபோது டைட்டிலில் பெயர் வரவில்லை. ஆனால் 32 வயதில் ஆஸ்கார் வாங்கி விட்டார். ‘The Philadelphia Story’ க்காக வாங்கிய அந்த ஆஸ்காரை அப்பாவின் இரும்பு கடையில் பார்க்க வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர். அப்போது இவர் பிரபல நடிகர். அழைப்பு வரவே, குறைந்த 5 பவுண்டை நிறைய சாப்பிட்டு சரியாக்கிவிட்டு ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அப்படி என்ன எழுதினாரோ தெரியவில்லை, அப்பா அப்போது கொடுத்த கடிதத்தை தப்பாமல் பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கடைசிவரை. பிரிகேடியர் ஜெனரல் ஆன ஒரே நடிகர்!
திலீப் குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் இவருக்கு அளித்தது 50 திரை சாதனையாளர்களின் மூன்றாவது ரேங்க் என்றால், பிரிமியம் மேகஸின் அளித்தது மாபெரும் நடிகர்களில் ஒன்பதாவது இடம்.
Quote?
‘I don't act, I react….பாத்திரங்களுக்கு உள்ளேபோய் குழப்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை நான். கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நான் ஆகவே எல்லா படத்திலும் வருகிறேன்!’

Tuesday, May 19, 2020

எத்தனை அற்புதம், வாழ்க்கை!


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.
செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946) படத்தின் இந்த அழகிய அதிசயக் கதையை தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்.
Frank Capra… மே 18. பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Another Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி...  போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.

Sunday, May 17, 2020

ராகத்தின் ராணி...


“ஓ.. தேவதாஸ்..” என்று 17 வயது சாவித்திரி பாடிக்கொண்டே வரும்போது கூடவே நம் மனதில் நுழைந்த 15 வயது குரல் இவருடையது. அதற்கு முன்பே 7 வயதிலேயே ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் பாட ஆரம்பித்திருந்தார்.
ஜமுனா ராணி. இன்று பிறந்தநாள்!
இந்த வயலின் குரலுக்கு சொந்தக்காரரின் அம்மா ஓர் வயலினிஸ்ட். தந்தை ஆபீஸர் தனியார் நிறுவனத்தில். கிட்டத்தட்ட 6000 பாடல்கள். 1950, 60 களில் அனைத்து இசையமைப்பாளர்கள் பாடல்களிலும்..
முத்திரை பதித்த முதல் பெரிய ஹிட் ‘குலேபகாவலி’யில். கெஞ்சலும் கொஞ்சலுமாக அந்தப் பாட்டு! “ஆசையும்… (விக்கல்) என் நேசமும்..” அந்த அட்டகாசமான பாடலை இந்திப் பதிப்பிலும் அதே அழகுடன் பாடியிருந்தார். (“Aaj Tu In Nainan…”) இப்போது கேட்டாலும் குரலின் வசீகரம் தனியே தெரியும்.
அதே ராஜ சுலோச்சனா “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா.. பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா!” என்று ‘ஆசை’ படத்தில் ஆடிக்கொண்டே வருவதும் இவர் பாட்டு தான்.
நீங்கள் "பாட்டொன்று கேட்டு பரவசமானால்..." அது அனேகமாக ‘பாசமலரி’ல் இவர் பாடியதாக இருக்கும். ‘அன்பு எங்கே’யில் “பூவில் வண்டு போதை கொண்டு தாவு”வது இவர் குரலினிமையாலும் இருக்கலாம். ‘மாலையிட்ட மங்கை’யில் பாடிய “செந்தமிழ் தேன்மொழியாள்..” நீண்ட காலத்துக்கு அந்தத் தேன்மொழியை நினவில் வைத்திருந்தோம்.
மூன்று பாடகிகள் பாடும் “யாரடி நீ மோகினி” பாடலில் இவர் குரல் தன் தனித்தன்மையால் கவரும். “தேன் வேணுமா? நான் வேணுமா?”
‘கவலை இல்லாத மனிதனி'ல் இவரது “காட்டில் மரம் உறங்கும்..” கானத்தில் மனம் கிறங்கும். ‘ராணி சம்யுக்தா’ வில் உருக்கமாகப் பாடினார் ஒரு பாடல்: “சித்திரத்தில் பெண்ணெழுதி..” கேட்டால் மறக்க முடியாதது.
லிஸ்டில் டாப் சாங் “மாமா.. மாமா.. மாமா..”தான்.(‘குமுதம்') “சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி..” சூபர் ஹிட்!
சந்திரபாபுவுடன் இவர் டூயட்கள் தனி களை கட்டும். “குங்குமப் பூவே…”யானாலும் சரி, "தடுக்காதே.."யானாலும் சரி! ‘பாண்டித் தேவன்’ படத்தில் ச.பாபுவுடன் "நீயாடினால்..." பாடலில் அந்த பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை இவர் பாடும் அழகு இருக்கிறதே..
“சீமான்கள் கொண்டாடும் மேடை..
செண்டாலே காற்றெங்கும் வாடை...
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை..."
நாயகன் நாயகி டூயட்டுகளில் ஞாபகம் அகல மறுப்பவை.. மனதை உருக்கும் ‘மன்னாதி மன்னன்’ பாட்டு! “நீயோ நானோ யார் நிலவே?” ‘செல்வம்’: “எனக்காகவா.. நான் உனக்காகவா?” ‘கொடுத்து வைத்தவள்’: “பாலாற்றில் சேலாடுது..”
‘அத்திக்காய்..’ பாடலில் “ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்..” என்று இவர் எண்ட்ரி ஆவது நினைவிருக்கா? அதோடு “ஆதிமனிதன் காதலுக்குப் பின்..”
நீண்ட இடைவெளிக்குப் பின் “நான் சிரித்தால் தீபாவளி..” என்று மறுபடியும் அவர் பாட்டொன்று கேட்ட பரவசத்தைத் தந்தார்.

Wednesday, May 13, 2020

மங்காத சிங்கார வேலன்...

இந்தப் பத்துப் பாடல்களுக்கும் ரெண்டு ஒற்றுமை.
முதலாவதை ஈசியா சொல்லிடுவீங்க: எல்லாமே அருமையான & ஹிட் பாடல்கள்! ரெண்டாவது?
1.சிங்கார வேலனே தேவா...
2.குங்குமப் பூவே... கொஞ்சும் புறாவே…
3. யாரடீ நீ மோகினி… கூறடீ என் கண்மணி..
4. சித்திரம் பேசுதடி... என் சிந்தை மயங்குதடி…
5. மாசிலா நிலவே நம்.. காதலை மகிழ்வோடு....
6. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?
7. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
8. ஏமாறச் சொன்னதும் நானோ? என் மீது கோபம் ஏனோ?
9. அமுதைப் பொழியும் நிலவே.. நீ அருகில் வராததேனோ?
10. உன்னைக் கண் தேடுதே.. உன் எழில் காணவே..
யூகித்தீர்களா ரெண்டாவதை?
இந்தப் பாடல்களையெல்லாம் எழுதியவர் ஒருவரே!
கு. மா. பாலசுப்ரமணியம். இன்று பிறந்தநாள்!
சின்னவயதில் தந்தையை இழந்து, மேலே படிக்க வழியின்றி, சின்ன சின்ன வேலைகள் பார்த்து, கதைகள் எழுதி, உதவி ஆசிரியராகி...
'ஓர் இரவு' படத்துக்கு உதவி டைரக்டராக சேர்ந்தவர் ஒரு பாடலை எழுதிக் காட்ட, எல்லாருக்கும் பிடித்துப் போக, மேலும் இரு பாட்டெழுதி... விரைவில் பிரபல பாடலாசிரியர்!
ஒன்றிரண்டு படத்துக்கு வசனமும்! அதிலொன்று பிரபல 'கொஞ்சும் சலங்கை.'

Tuesday, May 12, 2020

கம்பீரமும் கனிவும்...


எட்டு வயதிலேயே பாட்டுப் போட்டியில். தங்க மெடலை எட்டிவிட்டார் என்பதும், 14 வயதிலேயே தனிக் கச்சேரி நடத்தி விட்டார் என்பதும் நாம் தெரிந்துகொண்டு பிரமிக்கும் விஷயம். ஆனால் எப்படி அவர் பாட்டைக் கேட்டதும் ஒரு உற்சாகம் மனதில் தோன்றுகிறது என்பது தெரியாமலேயே பிரமிக்கும் விஷயம்.
அருணா சாய்ராம். இன்று பிறந்த நாள்!
இசைக் குடும்பம். அம்மாவே முதல் குரு. அம்மா ஆலத்தூர் சகோதரர்களின் சிஷ்யை. அப்பா வீட்டில் அழைத்து வராத கலைஞர் இல்லை. அவர்களில் சங்கீத கலாநிதி பிருந்தா அறிமுகமாக, அவரிடம் இசை பயின்றார். குரலில் உணர்வையும் புதுமையையும் கொண்டு வர துணை புரிந்தவர் ஒரு ஜெர்மானியர். (Eugene Rabine)
லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடக்கும் BBC Proms, அப்புறம் பாரிஸ், நியூயார்க் என்று உலக அளவில் ஒலித்த பாடல்கள் இவருடையவை. தென்னிந்திய கர்நாடக சங்கீதத்தின் சுகந்தம் உலக அளவில் வீச இவரும் காரணம். சங்கீத கலாநிதி பட்டம், பத்மஶ்ரீ விருது...
ஏற்றமும் இறக்கமும் அந்த கணீர்க் குரலில் இசைந்து வரும் கம்பீரம்! கனிவும் உருக்கமும் அந்தக் காந்தக் குரலில் கலந்து வரும் பிரவாகம்!
"ஹிமகிரி தனையே ஹே மனசே..." என்று தொடங்கும் போது மனசை அப்படியே இழுத்துச் செல்லும்.
'ஸ்வாகதம் கிருஷ்ணா..' பாடலில் 'மதுரா புரி...' 'மது ராபுரி...' என்று பாடுகையில் அவர் அழைத்துச் செல்லும் இரண்டு அழகிய மதுராபுரியில் எதில் திளைக்க?
'வெங்கடரமணனே பாரோ..' பாடலும் சரி 'தசரத ராம கோவிந்தா..' பாடலும் சரி சரியான பிரார்த்தனை மனநிலைக்கு அழைத்துச் செல்லும்.
"எனகுவானே ரங்கா... நினகுவானே..." பாடும் போதும் காதருகே புஷ்பக விமானம் புறப்படுகிறாற்போல இருக்கிறதென்றால் "லலிதலவங்க லதா பரிசீலன..." பாடும்போது அந்த விமானம் அழகாய் தரையிறங்குகிற மாதிரி...
'எப்படி பாடினரோ?' பாடலை மற்றவர்கள் எப்படி பாடினரோ, இவர் பாடும்போது இப்படியும் பாடலாமோ கனிவாக என்று..
'இகோ நம்ம ஸ்வாமி... 'தருவது ஒருவித இதம் என்றால், மறவாமல் கேட்பது, 'பிறவா வரம் தாரும் பெம்மானே..'
கேட்க மனம் சிறகடிக்கும் மற்றொரு பாடல் 'காக்கை சிறகினிலே...' இவருக்குப் பிடித்த பிருந்தாவன சாரங்காவாயிற்றே அது?
"பக்கத்து வீட்டு பெண்ணை அழைப்பான், முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கு இழுப்பான்.. எனக்கது தெரியாதென்றால், நெக்குருக கிள்ளி விட்டு, அவள் விக்கி விக்கி அழும் போது இது தாண்டி முகாரி என்பான்!" என்று அவர் பாடும்போது ('விஷமக்காரன் கண்ணன்..' பாட்டில்) அந்த நாட்டுப்புறப் பாடலின் முழு அழகும் முன்னால் வந்து நிற்கும்.
சிகரமாக.. எல்லார் காதுகளிலும் நர்த்தனமாடும் அவரது 'காளிங்க நர்த்தன தில்லானா...'
'எப்போதும் இசையிலேயே ஆழ்ந்திருக்க விரும்புகிறேன்.' என்னும் அவர் சொல்வது, 'இலக்கணம் என்று இருந்தாலும் ராகம் பெரும்பாலும் உணர்வு பூர்வமானது. நம்பிக்கையுடனும் நேச பாவத்துடனும் பாடும்போது அது கேட்பவரை சென்றடைகிறது. கேட்பவர் அந்த உணர்வை திருப்பி அனுப்ப, பல முறைஅங்கும் இங்கும் பரிமாறப்பட்டு, அது நம்மை மேம்படுத்தும் அனுபவமாகிறது. அதில் எல்லாவற்றையும் நாம் மறக்கிறோம்!'

Monday, May 11, 2020

ஷூட்டிங் ஸ்கிரிப்ட்...

தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமா பயின்றவர் தென்னிந்தியாவின் முன்னோடி டைரக்டர்களில் ஒருவராகத் திகழ்ந்து எம்ஜியாரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.எஸ்.பாலையாவையும் அறிமுகப்படுத்தினார்.
Ellis R Dungan... இன்று பிறந்தநாள்!
உலகம் அப்பவே ரொம்பச் சின்னது. தமிழ் ‘நந்தனாரை’ கல்கத்தாவில் இயக்கிக்கொண்டிருந்த பம்பாய்க்காரர் மணிக் லாலை (இவருடன் அமெரிக்காவில் சினிமா படித்தவர்) பார்க்க வந்த இவரை, ‘சதிலீலாவதி’ படத்தை இயக்கக் கேட்டுத் தன்னிடம் வந்த தயாரிப்பாளரிடம் அவர் அறிமுகம் செய்ய, நம்ம ஊர் டைரக்டரானார் டங்கன்.
‘ஷூட்டிங் ஸ்கிரிப்டை’ தமிழ் பட உலகத்துக்கு அறிமுகம் செய்தார். டெக்னிக்கலாக வேறு லெவலுக்கு எடுத்துப் போனார்.
மீரா! எம்.எஸ்.சுப்புலஷ்மி நடித்த காவியம். இயக்குநர் இவரே. குன்னூரில் ஒரு மாதம் தங்கி அதன் ஷூட்டிங் ஸ்கிரிப்டை எழுதினார். முன்பே எம்.எஸ்.நடித்த ‘சகுந்தலை’யை இயக்கியிருந்தார். கச்சேரிகளிலும் விழாக்களிலும் பிஸியாக இருந்தவரைக் காத்திருந்து படப்பிடிப்பை நடத்தினார். தன் ஊரிலிருந்து கொண்டுவந்த ஸ்பெஷல் உபகரணங்களைப் பயன்படுத்தி அற்புத லைட்டிங் அமைத்தார்.
சொல்ல வேண்டியதில்லை, ‘மந்திரி குமாரி' பற்றி. அதுதான் இவரின் கடைசிப் படம். அமெரிக்கா திரும்பியவர் அங்கே 30 வருடம் டாகுமெண்டரிகளை இயக்கினார்.
பல வருடங்களுக்குப் பின் 1994-இல் அவர் சென்னை வந்தபோது தமிழ் திரையுலகின் அத்தனை பிரபலங்களும் அளித்த அமோக வரவேற்பில் திக்குமுக்காடிப் போனார். உடல் நலமில்லாதபோதும் எம்.எஸ்சும் அவர் கணவர் சதாசிவமும் வந்திருந்தனர். நெகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணில் நீர் துளிர்க்க நின்றவரைப் பேச அழைத்தபோது அவரால் பேச முடியவில்லை!

நடன நாயகர்....





‘இவருக்கு நடிக்க தெரியவில்லை, பாடத் தெரியவில்லை, வழுக்கை ஆரம்பிச்சாச்சு, கொஞ்சம் டான்ஸ் மட்டும் வருது.’ -இதுதான் ஸ்கிரீன் டெஸ்டில் அவருக்கு எழுதப்பட்ட ரிமார்க்.
எண்ணி சில வருடங்களில் அவர், ஃப்ரெட் அஸ்டேர், பிரபல ஸ்டார்!
Fred Astaire.. மே 10. பிறந்தநாள்.
நடன நாயகர்களின் முன்னோடி. மைக்கேல் ஜாக்சனுக்கு ஆதர்சர். என்டர்டெயின்மென்ட் வீக்லி தேர்வில் 19 வது மாபெரும் நடிகர்! அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த 50 திரை நாயகர்களில் ஐந்தாமவர்.
Tap dance இல் Top star ஆன அவரின் கால்கள் ஒரு மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்யப்பட்டிருந்தன.
1933. ‘Dancing Lady’ இல் தொடங்கியவர் 1974 இல் The Towering Inferno’, 1981 இல் ‘Ghost Story’ வரை கலக்கினார்.
படம்: 'Top Hat'. உடன் நடித்த நடிகை உடுத்தியிருந்தது தீப்பறவை காஸ்டியூம். இறகுகளில் ஒன்று பறந்து வந்து, நடனமாடிய இவர் கண்ணெதிரே நடனமாடிற்று! பிற்பாடு அதையே ஒரு காமெடி காட்சியாக இன்னொரு படத்தில் வைத்தார்கள்.
Daddy Long Legs’ படத்தின் சில காட்சிகளில் அவர் கண் சிவந்து போயிருக்கும். மனைவி இறந்த சமயம் அது. இடையிடையே கேரவானுக்குள் போய் அழுது விட்டு வந்ததால் நேர்ந்தது. பிரபல அகிரோ க்ரோஸாவாவுக்குப் பிடித்த படம் அது.
Audrey Hepburn-ம் இவரும் நடித்த ‘Funny Face’. ஒப்பந்தம் செய்தது நல்ல வேடிக்கை. இவர் நடிக்கிறார் என்று சொல்ல அவர் சம்மதித்தார். அவர் நடிக்கிறார் என்றதும் இவர்…!

Sunday, May 10, 2020

தப்பட்… (இந்தி)


‘பளார்!’ இந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு ‘பளீர்’ என்று ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள்.
லண்டன் பிராஞ்சுக்கு சி.இ.ஓ. ஆக அவனுக்கு கிடைத்துவிட்டது வாய்ப்பு. கொண்டாடுவதற்காக அந்த பார்ட்டி. ஓடியாடி ஏற்பாடு செய்யும் மனைவி. பார்ட்டி நடக்கும்போது போனில் அந்த செய்தி. சி.இ.ஓ அவனில்லையாம்! வருகிறது ஆத்திரம். வந்திருந்த சீனியரிடம் காலை வாரிட்டீங்கன்னு சாடுகிறான். குறுக்கே புகுந்து இழுத்த மனைவியை விடுகிறான் ஒரு பளார்!
விட்ட அறை விழுந்தது அவள் கன்னத்தில் அல்ல, உள்ளத்தில்!
‘அமு, உன்னோட இன்டர்நெட் சரியா வேலை செய்யலை,' என்று சொல்லும் கணவனிடம், 'எதெல்லாம் சரியா வேலை செய்யலையோ அதெல்லாம் என்னோடதாயிடும் இல்லையா?'ன்னு சிரிச்சிட்டே, 'யெஸ் சார்'னு அதை சரி பண்ணும் முதல் காட்சியிலேயே ஒரே வரியில் அவன் அறியாமல் செய்துவரும் ஆளுமையையும், உணராமலேயே நடந்து கொண்டிருக்கும் பாதையையும் விளக்கி விடுகிறார் டைரக்டர்.
அமுவின் விவாக ரத்து மனுவை ரெடி செய்த வக்கீல் தோழி அவளைக் கேட்கிறாள், "நல்லா யோசிச்சியா?"
அவள் கேட்கிறாள், ‘உனக்கு இது நடந்தா நீ என்ன பண்ணியிருப்பே?’
‘அவனை மன்னிச்சிருப்பேன்.’
‘அப்ப நான் செய்யறது தவறா?’
‘இல்லை!’ என்கிறாள்தோழி. படத்தின் ஜீவ நொடி அது. ஆமாம், எல்லாருக்கும் மனதில் தெரியும், அவன் செய்தது தப்புன்னு. ஆனா அடுத்த அடியெடுத்து வைக்க முடியாது அவங்களால். அந்த அடியைத்தான் அவள் எடுத்து வைக்கிறாள். அதை எப்படி தப்பென்று சொல்ல முடியும்?
ஒரு ஸ்க்ரிப்ட் எப்படி நகர வேண்டும்? எப்படி ஒவ்வொரு காரக்டரும் சுபாவமாக ரீயாக்ட் செய்ய வேண்டும்? சில பாடங்கள் இந்தப் படத்தில்.
படத்தின் ஹைலைட் டயலாக்தான். கதைக்குப் பொருத்தமோ, தேவையோ இல்லாமல் ஒரு வார்த்தை இருக்க வேண்டுமே? ஊஹூம்! வருடும் பின்னணி இசை! இல்லாமலிருந்து வலு சேர்க்கிறது நிறைய இடத்தில்.
படம் க்ளைமாக்ஸ் இல்லாமலே முடிகிறது… அமைதியாக. கதையே ஒரு நீண்ட க்ளைமாக்ஸாக இருக்கும்போது க்ளைமாக்ஸ் என்று ஒன்று தனியே வேண்டுமா என்ன?
டாப்ஸி.. Topஸி! முதல் மார்க் அவருக்குத்தான். வெறித்த, பிரமித்த, கனிந்த என்று விதவிதமாக வீசும் பார்வைகளே போதும்!
சிரிச்சிக்கிட்டே கிரிக்கெட் பந்தை எறியும் சுனிதா. அவளால அந்தப் பந்தைத் தான் எறிய முடியும், அதை ரசிச்சு அவள் இன்னும் இன்னும் உயரன்னு எறியும்போது அவள் முகத்தில கொப்பளிக்கும் சந்தோஷம், நம் உதட்டில புன்னகையாக… ஆனால் அவளுடைய பாத்திரத்துக்கு ஒரு முடிவு வேணுமேன்னு கடைசியில அவள் திருப்பி அடிச்சி நொறுக்கறதெல்லாம் தேவையா? அந்தப் பாத்திரத்துக்கெல்லாம் முடிவு ஏது என்பதே அதன் முடிவு, இல்லையா?
அவங்க செய்யறது சரியோ இல்லையோ ஆனால் எல்லாருமே ஒரு வித மெச்சூரிடியுடன் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, அமுவைப் போலவே, நமக்கும் இதமாக இருக்கிறது.
சில மைனஸ் பாயிண்டுகளும்... மெயின் காரக்டரை அந்தச் செதுக்கு செதுக்கினவர்கள் பேரல்லலாக வரும் பெண் வக்கீல் காரக்டரை எப்படி இத்தனை கவனக் குறைவாக.. எதற்கெல்லாம்தான் விட்டு வெளியேறுவது என்று ஒரு லிமிட் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறதே?
2020 ஐ நினைவில வெச்சு 20, 20 நிமிஷம் எடிட் பண்ணி எடுத்திருந்தால் படம் இன்னும் பளிச்சிட்டிருக்கும்.
தீம் சாங் உருக்கம். அதிலொரு வரி:
'உறவு உடைந்து நாம் பிரிந்தபோது
மிச்சம் இருந்தது கொஞ்சமே:
கதிரொளியில் ஒரு கற்றை,
பனித்துளியால் நிரம்பியதாக!'

Friday, May 8, 2020

காதல் க(வி)தை..


இங்கே இளைஞன் ராபர்ட். எழுதியவற்றுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தன் கவிதைகளுக்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட  முயன்று கொண்டிருக்கிறான். நல்ல ஒரு இடம் மெல்ல எழும் வேளை..
அங்கே எலிசபெத். 12 வயதிலேயே தன் கவிதைகளை எழுத ஆரம்பித்தவள். என்னவொரு சோகமெனில், குதிரையிலிருந்து தவறி விழுந்து முதுகில் அடி. டி.பி.யும் சேரவே, முழு நேர நோயாளியாக அறைக்குள்ளேயே வாசம். தண்ணீரில் மூழ்கி இறந்த தம்பியின் சோகம். எல்லாம் மறக்க எழுதினாள். மொழி நயம்! புதுமையான எண்ணங்கள்! துணிச்சலான கருத்துக்கள்! பிரபலமாகிவிட்டிருந்தாள். தன் தொகுப்பொன்றில் ராபர்டின் கவிதைகளைப் பற்றி குறிப்பிட...
நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ராபர்ட்.  அவள் கவிதைகளின் மீதான தன் ஹார்ட்டின்களையும் சேர்த்து. ‘என் இதயபூர்வமாக நேசிக்கிறேன் உங்கள் கவிதைகளை..’ என்று தொடங்கிற்று அது. தொடர்ந்தது நட்பு. 2 வருடத்தில் 600 கடிதங்கள்! அவளது நண்பர் (Kenyon) உதவியால் ஒரு கோடை நாளில் சந்தித்தார்கள். கல்யாணம் என்றாலே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவள். ரகசியமாகவே சந்திப்பு. காதலுக்கு இதைவிட கிரியா ஊக்கி உண்டா? மலர்ந்தது.
ஆற்றொணா துயரிலிருந்து தன்னை மீட்டவர் மேல் மாற்றொணா அன்பு. ஆனாலும் ஆயிரம் தயக்கம் எலிஸபெத் மனதில். அனுதாபத்தில் வந்த காதலா? நீடிக்குமா? அப்பால் வருந்த நேருமா? 6 வயது அதிகம் இல்லையா அவளுக்கு? அப்பாவின் ஆதரவில் இருக்கும் நோயாளியாயிற்றே நான்? ஆனால் ராபர்ட் திடம் தந்தார். காதலில் விளைந்த அவள் கவிதைகள் பல. அதிலொன்று பிற்பாடு காதல் இலக்கியமானது. “எப்படியெல்லாம் உன்னைக் காதலிக்கிறேன்? எண்ணப் போகிறேன் அந்த வழிகளை!...” 14 வரி ஸானட். 
அவளைக் கவனிக்கும் தாதி சாட்சியாக வர, ஒரு செப்டம்பர் 12 இல் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டனர். பாரிசில் தேனிலவு முடிந்த கையோடு டாக்டர்கள் ஏற்கெனவே சொல்லியபடி, (அப்பா செய்ய மறுத்தது) வெப்பமான இத்தாலிக்கு அழைத்துச் சென்று ஃப்ளாரன்ஸில் குடியமர்த்தினார் ராபர்ட். அப்பா கடைசி வரை பேசவேயில்லை. 
மனைவியின் கவிதைகளுக்கு மவுசு ஏற்பட உழைத்தார் இவர். அவளும் அதுபோல். இருவர் எழுத்திலும் முன்னேற்றம். Wordsworth மறைந்தபோது அவைக் கவிஞர் இடத்துக்கு  Tennyson, எலிஸபெத்துடன் போட்டியிட வேண்டியதாயிற்று. Aurora Leigh என்ற தன் மிகப் பெரும் கவிதை நாவலை அப்போதுதான் எழுதினார்.
ஆரோகணத்திலிருந்து அவரோகணத்துக்கு வந்த ஆரோக்கியம்… 1861. மணவாழ்வின் 15 வது வருடம்..மெலிவுற்று நலிவுற்று கணவன் மடியிலேயே உயிர் விட்டார். ஆனந்தப் புன்னகையொன்று அவள் முகத்தில்.. ‘பியூட்டிஃபுல்!’ என்றொரு வார்த்தை உதடுகளில். கடைசி வார்த்தை! 
Robert Browning and Elizabeth Barrett…

Thursday, May 7, 2020

வந்தாரா... வென்றாரா...


‘Jab We Met’ படத்தின் கடைசிக் காட்சி. படுத்திருக்கும் தாத்தா, பேத்தி கரீனா கபூரின் ரெட்டைக் குழந்தைகளிடம் சொல்வார்,  “உங்கம்மாவும் அப்பாவும் எங்கிட்ட திரும்பத் திரும்ப பொய் சொன்னாங்க, ஆனா அவங்க காதலைக் கண்ணிலிருந்தே கண்டு பிடிச்சிட்டேன் நான்!” அந்தத் தாத்தா யாரென்று தெரிகிறதா?   
இந்தியாவின் சூபர்மேன்... மல்யுத்தத்தில் ஒருபோதும் தோற்காத ரெக்கார்டை கொண்டவர்… சினிமாவின் நிஜ ஹீரோ. 
டயலாகில் அல்லாது நிஜமாகவே ஏராளம் பஞ்ச் விட்ட தாராசிங்!
மே 6. பிறந்த நாள்.   
203 கிலோ, ஆனானப்பட்ட கிங்காங்கை அசால்ட்டாக தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி வீசியவர். அந்த ஃபைட்டில், கிங் சைடில் கிங் சைஸுக்கு பெட் கட்டினவங்க அதிகம். ஆனால் கடைசியில் அவர் உதவிக்கு ரெஃப்ரீயை நோக்கிக் கத்த வேண்டியதாயிற்று.
அந்த நாட்களில் தாராசிங் Vs கிங் காங் என்றாலே போதும், எள் போட்டால் லெவலுக்கு கூட்டம் களைகட்டிவிடும். (நம்ம ஊரில் அந்த மல் யுத்தங்களை நடத்தியதில் ஒருவர் சின்ன அண்ணாமலை.)
பயில்வானி என்ற பல நூறாண்டு பழமை வாய்ந்த கலையைப் பயின்று வந்தவரை வெல்வாரில்லை. வந்தாரா, வென்றாரா, சென்றாரா என்றிருப்பார். (‘தாரா’ என்ற வார்த்தைக்கு ராஜா என்றல்லவா அர்த்தம்?) 
இந்த 53 இஞ்ச் நெஞ்சுக்கு ஆறடி ரெண்டு அங்குல வின்னர் ஃபார் எவர் வந்தது விவசாய குடும்பத்தில் இருந்து. இந்தியா சாம்பியன்.. காமன்வெல்த் சாம்பியன்.. கடைசியில் உலகச் சாம்பியன், 1968 இல் அமெரிக்க வீரரை (Lou Thesz) வென்று!
தயாரிப்பாளர்கள் அழைக்கவே, மேடையிலிருந்து திரைக்கு. அத்தனை பாட்டுக்களும் ஹிட்டான (Laxmikant Pyarelal) ’புயல் வந்தது' (‘Aaya Toofan’) போன்ற படங்களின் மூலம் புயலாக வந்தார்.  
மும்தாஜுடன் ஹீரோவாக ராஜேஷ் கன்னா அதிகபட்சம் 10 படங்களில் நடித்திருப்பார், ஆனால் 16 படங்களில் அவருடன் ஹீரோவாக நடித்தவர் இவர். செகண்ட் லெவல் படங்களில் ஃபர்ஸ்ட் லெவல் சம்பளம் வாங்கினார்கள் அவரும் மும்தாஜும்.
ஹெர்குலிஸ் ஃபிகர் எப்படி இருக்கும் என்று கேட்டால் தாராளமாக சொல்லிவிடலாம் தாராசிங் மாதிரி இருக்கும் என்று . Incidentally அவர் Hercules ஆகவும் நடித்தார். Anand படத்தில் தகராறு பண்ணும் பசங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ராஜேஷ் கன்னா அழைத்து வருவாரே அது தாராசிங்கைத்தான்!
பிரபல ராமாயணா டிவி தொடரில் இவர் ஹனுமானாக வந்தது அனுமானிக்க முடியாத புகழ் தந்தது. 
தம்பி ரந்தாவாவும் ஒரு மல்யுத்தர் & நடிகர். ‘ஜானி மேரா நாம்’ அல்லது ‘ராஜா’வில் பார்த்திருப்பீர்களே இவரை?
கால் நூற்றாண்டுக்கு மல்யுத்த மேடைகளின் ராஜாவாக வலம் வந்தவர்  1983-இல் அவார்ட் வாங்கிய கையோடு மேடைக்கு குட்பை சொன்னார்.
><><

Monday, May 4, 2020

ஸ்லிம்முக்கு எதுகை..

அரண்மனையின் சம்பிரதாய கெடுபிடிகள் பிடிக்காத இளவரசி அவள். ரோம் வந்தபோது இரவில் வெளியே நடக்கும் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்க எட்டி குதித்து வெளியே வருகிறாள். லேட்டாக வேலை செய்த தூக்க மாத்திரைகளால் நடு ரோட்டில் குழம்ப, சந்திக்கும் ரிப்போர்ட்டர் கிரிகரி பெக், போதை என்று நினைத்து அந்தப் பேதையை பத்திரமாக தன் அறைக்கு அழைத்து சென்றதினால், இளவரசி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கவர் செய்வதில் கோட்டை விடுகிறார். அவளேதான் அது என்றறிந்ததும், தனிப் பேட்டியே வாங்கி தருகிறேன் பார் என்று பத்திரிகை ஆசிரியரிடம் சவால் விட்டவர் ஊரைச் சுற்றி காட்டுகிறேன் என்று அவளை அழைத்துப்போய் அவர்கள் அடித்த லூட்டிகளை போட்டோவும் எடுத்து விடுகிறார். ஆனால் ஒரு பிரியம் பிறக்கவே அதைப் பத்திரிகைக்குத் தர மறுக்கிறார். காதல் மலர்ந்தாலும் கடமை அழைக்க 'இளவரசி'க்கு திரும்புகிறாள் அவளும். இளவரசியின் ஃபேர்வெல் விழாவில் அந்த போட்டோக்களை அவரிடம் கொடுத்துவிட்டு தன் தனிமைக்கு திரும்புகிறார் ரிப்போர்ட்டர் பெக்.
படங்களுக்கெல்லாம் படமான ‘Roman Holiday’ கதை அது. ஆமாம், அதையொட்டி நாலைந்து படங்கள் வந்துவிட்டன தமிழில் மட்டுமே.
இளவரசியாக Audrey Hepburn.. இன்று பிறந்தநாள்!
ஸ்லிம்முக்கு எதுகை இவர். பிளஸ் அந்த துரு துரு கண்கள்! ஒரு லுக் விட்டார், அவ்வளவுதான், அந்தப் பார்வைக்கு ஆட்ரே ஹெபர்ன் லுக் என்றே பேர் வந்திட்டது!
கிரிகரி பெக் அப்போ டாப் ஸ்டார். ஷூட்டிங் தொடங்கி நடக்கும் போதே புதுமுகமான ஆட்ரே பெயரை தனக்கு இணையாக போட சொல்லிவிட்டார். பதறிய ஏஜென்டிடம், ‘ஆஸ்கார் வாங்கப் போகிறாள் பார்!’ என்றார். அப்படியே வாங்கினார் ஆட்ரே.
கடைசி காட்சியில் அழுகை வரவில்லை அவருக்கு. டைரக்டர் வில்லியம் வைலர்(Ben Hur) போலியாகப் போட்ட அதட்டலில் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
Wait, அந்த ‘Wait Until Dark’ பத்தி சொல்லிடறேன்... அவளுக்கு கண் தெரியாது. தனியே இருக்கிறாள் வீட்டில். அங்கே கொள்ளையடிக்க மூன்று பேர் நுழைகிறார்கள். எப்படி தப்பிக்கிறாள்? வினாடிக்கு வினாடி த்ரில்! நுனி அல்ல, சீட்டுக்கு வெளியேவே வரவழைத்துவிடும் சஸ்பென்ஸ்! ஆஸ்கார் நாமினேஷன் வாங்குகிற அளவு அபாரமாக நடித்தார் ஆட்ரே.
அப்புறம் My Fair Lady. ப்ச்! வேறெதுவும் சொல்ல வேண்டாம். மனங்களை வாரி முடிந்து கொண்ட அந்த பூக்காரியை யாரால் மறக்க முடியும்?
ஜஸ்ட் 31 படங்கள்தான். முக்கிய கதாநாயகர்கள். பிரபல டைரக்டர்கள். ஏராளம் அவார்டுகள். யார் செய்வார்கள், உச்சத்தில் இருக்கும்போதே விலகிக் கொண்டதும், சொச்ச வருடங்கள் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக உழைத்ததும்.. கான்சர் வாரிக்கொண்டது வரை.
பிரபல பிரிட்டிஷ் பத்திரிகை நடத்திய உலகின் கண் கவர் பெண்களின் போட்டியில் நம்பர் ஒன்னாக வந்தார் என்றால் மற்றொரு போட்டியில் உலகின் இயற்கையான அழகிகளில் முதலாவதாக! 50 கிலோ தாஜ்மஹால் என்றிவரை வர்ணிக்க முடியாது. ஏன்னா 47 கிலோ தாண்டியதேயில்லை வாழ்நாளில், தான் வைராக்கியம் வைத்திருந்தபடியே.
சினிமாவால் பலரைப் பல்லைக் காட்ட வைத்திராவிட்டால் பல் ஆஸ்பத்திரியில் காட்ட வைத்திருப்பார், ஆம், முதலில் பல் டாக்டர் உதவியாளராகப் பயின்றிருந்தார்.
‘Cleopatra’ வுக்கு முதலில் யோசிக்கப்பட்டவர்.. ‘The Exorcist’ படத்தில் நடிக்கவில்லை, மகன்களுடன் இருக்கணும் என்று ரோமில் படப்பிடிப்பு வைக்கக் கேட்டதற்கு அவர்கள் சம்மதிக்காததால்.

இவர் பிரபலத்துக்கு ஒரு சாம்பிள், ‘Breakfast At Tiffany’s’ படத்தில் அணிந்த உடை சுமார் மில்லியன் டாலருக்கு ஏலம் போயிற்று.

Friday, May 1, 2020

மென் குரல் மன்னர்...

காரிருளில் மிதந்து வருகிறது காதலனின் பாட்டு. அந்த மீனவப் பெண் காதில் பட்டுத் தெறிக்கிறது. இதயத்தில் தைக்கிறது. தாள முடியாமல் தன் காதைப் பொத்துகிறாள். மயக்கும் அந்தக் குரலிருந்து மீள முடியாமல்!

“மானச மைனே வரு… மதுரம் நுள்ளித் தரு…” ‘செம்மீன்' மலையாளப் படத்தின் செம்மையான சீன். அந்த மெஸ்மெரிசக் குரல்! மன்னா டே!

இன்னாடே, இன்னாடேன்னு இனிமையா பாட்டுக்களைக் கொடுத்தவர். இன்று பிறந்த நாள்.

ஹிந்தி பின்னணி உலகின் டாப் 5 M களில் ஒருவர். (Mohamad Rafi, Mukesh, Mahendra Kapoor, Manna Dey, Talat Mehmood) க்ளாஸிகல் இசை பயின்றவர். ராஜ் கபூருக்கும் பாடியிருக்கிறார், ரிஷி & ரந்திர் கபூருக்கும்!

நாம் விரும்பிக் கேட்கும் ரஃபி விரும்பிக் கேட்பது இவர் பாடல்களைத்தான் (என்பாராம் ரஃபி.)

1942. டிகிரியை வாங்கிய கையோடு உதவி இசையமைப்பாளராக ஆரம்பித்தவர் நடிகை சுரையாவுடன் பாடிய பாட்டு ஹிட்டாக, பின்னணி பாடகர் ஆனார். 50 களும் 60 களும் பொற்காலம். 1957 -இல் மட்டும் 95 இந்திப் பாடல்கள்.

எதிர் வீட்டுப் பெண்ணுக்கு பாட்டு என்றால் உயிர். காதலிக்கிற இவனுக்கோ கானம் வராது. கட்டிலுக்கு அடியில் இருந்து நண்பன் பாட, வாய் அசைக்கிறான். காதல் கை கூடும் போதும் களத்தில் குதிக்கிறார் அவளது பாட்டு வாத்தியார். போட்டிப் பாட்டு ஆரம்பம். தாவி தவ்விக் குதித்துப் பாடி, மாடி ஜன்னலுக்கு வந்துவிடுகிறார் வாத்தியார் மெகமூத். அசத்தலாக அவருக்குப் பின்னணி பாடியவர் மன்னாடே. Padosan (இந்தி ‘அடுத்த வீட்டுப் பெண்') இல் ‘Ek Chatur Naar..’

How versatile a singer he was… என்பதைச் சொல்லும் (பாடும்) பாடல் ஒன்று உண்டு. கேட்கக் காது போதாது ரகம். Roshan இசையமைத்த ‘Laga Chunri Mein Daag..' (Dil Hi To Hai)  சங்கதிகளும் கமகங்களும் பொங்கி வழியும் அந்தப் பாடலை மிக என்றால் மிக அற்புதமாக.... High ptch பாடும்போது இன்னும் மிருதுவாகும் குரல்!

ராஜ்கபூரின் மிகப் புகழ் பெற்ற வேகப் பாடல்களை இவர்தான் பாடியிருப்பார். கேட்டுச் சலிக்காத ‘Dil Ka Hal Sune Dilwala..’‘Mud Mudke na Dekh…’ (Shree 420) ‘Aa ja sanam mathur chandni mein hum…’ (Chori Chori) ‘Ae Bhai Jara Dekh ke Chalo..’ (Mera Naam Joker)

‘Waqt’ படத்தில் பால்ராஜ் சாஹ்னி கிரஹப்பிரவேச விழாவில் தன் மனைவியை வர்ணித்து பாடும் ‘Yeh Mere Zohra Jabhi…’ பாடலில் இவர் குரல் ஒரு ஜாலியான இனிமையை வழங்கும் என்றால் ‘Mere Huzoor’ படத்தில் ராஜ் குமார் பாடுவதாக வரும் ‘Jhanak Jhanak Tore Bhaje..’ சரணத்தில் இன்னும் இன்னும் என்று இறங்கிக் கொண்டே போகும்போது சிலிர்க்கும்.

Sholay யில் அந்த ‘Yeh Dosti..’ Bobby யில் இந்த ‘Na Mangoon Sona Chandi..’ சொல்லிக் கொண்டே இருக்கலாம் அவர் பாடிக் கொண்டே இருந்ததை...

><><