Friday, May 8, 2020

காதல் க(வி)தை..


இங்கே இளைஞன் ராபர்ட். எழுதியவற்றுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தன் கவிதைகளுக்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட  முயன்று கொண்டிருக்கிறான். நல்ல ஒரு இடம் மெல்ல எழும் வேளை..
அங்கே எலிசபெத். 12 வயதிலேயே தன் கவிதைகளை எழுத ஆரம்பித்தவள். என்னவொரு சோகமெனில், குதிரையிலிருந்து தவறி விழுந்து முதுகில் அடி. டி.பி.யும் சேரவே, முழு நேர நோயாளியாக அறைக்குள்ளேயே வாசம். தண்ணீரில் மூழ்கி இறந்த தம்பியின் சோகம். எல்லாம் மறக்க எழுதினாள். மொழி நயம்! புதுமையான எண்ணங்கள்! துணிச்சலான கருத்துக்கள்! பிரபலமாகிவிட்டிருந்தாள். தன் தொகுப்பொன்றில் ராபர்டின் கவிதைகளைப் பற்றி குறிப்பிட...
நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ராபர்ட்.  அவள் கவிதைகளின் மீதான தன் ஹார்ட்டின்களையும் சேர்த்து. ‘என் இதயபூர்வமாக நேசிக்கிறேன் உங்கள் கவிதைகளை..’ என்று தொடங்கிற்று அது. தொடர்ந்தது நட்பு. 2 வருடத்தில் 600 கடிதங்கள்! அவளது நண்பர் (Kenyon) உதவியால் ஒரு கோடை நாளில் சந்தித்தார்கள். கல்யாணம் என்றாலே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவள். ரகசியமாகவே சந்திப்பு. காதலுக்கு இதைவிட கிரியா ஊக்கி உண்டா? மலர்ந்தது.
ஆற்றொணா துயரிலிருந்து தன்னை மீட்டவர் மேல் மாற்றொணா அன்பு. ஆனாலும் ஆயிரம் தயக்கம் எலிஸபெத் மனதில். அனுதாபத்தில் வந்த காதலா? நீடிக்குமா? அப்பால் வருந்த நேருமா? 6 வயது அதிகம் இல்லையா அவளுக்கு? அப்பாவின் ஆதரவில் இருக்கும் நோயாளியாயிற்றே நான்? ஆனால் ராபர்ட் திடம் தந்தார். காதலில் விளைந்த அவள் கவிதைகள் பல. அதிலொன்று பிற்பாடு காதல் இலக்கியமானது. “எப்படியெல்லாம் உன்னைக் காதலிக்கிறேன்? எண்ணப் போகிறேன் அந்த வழிகளை!...” 14 வரி ஸானட். 
அவளைக் கவனிக்கும் தாதி சாட்சியாக வர, ஒரு செப்டம்பர் 12 இல் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டனர். பாரிசில் தேனிலவு முடிந்த கையோடு டாக்டர்கள் ஏற்கெனவே சொல்லியபடி, (அப்பா செய்ய மறுத்தது) வெப்பமான இத்தாலிக்கு அழைத்துச் சென்று ஃப்ளாரன்ஸில் குடியமர்த்தினார் ராபர்ட். அப்பா கடைசி வரை பேசவேயில்லை. 
மனைவியின் கவிதைகளுக்கு மவுசு ஏற்பட உழைத்தார் இவர். அவளும் அதுபோல். இருவர் எழுத்திலும் முன்னேற்றம். Wordsworth மறைந்தபோது அவைக் கவிஞர் இடத்துக்கு  Tennyson, எலிஸபெத்துடன் போட்டியிட வேண்டியதாயிற்று. Aurora Leigh என்ற தன் மிகப் பெரும் கவிதை நாவலை அப்போதுதான் எழுதினார்.
ஆரோகணத்திலிருந்து அவரோகணத்துக்கு வந்த ஆரோக்கியம்… 1861. மணவாழ்வின் 15 வது வருடம்..மெலிவுற்று நலிவுற்று கணவன் மடியிலேயே உயிர் விட்டார். ஆனந்தப் புன்னகையொன்று அவள் முகத்தில்.. ‘பியூட்டிஃபுல்!’ என்றொரு வார்த்தை உதடுகளில். கடைசி வார்த்தை! 
Robert Browning and Elizabeth Barrett…

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தெய்வீகக் காதல் எனச் சொல்வது இதைத் தானோ...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!