Saturday, October 29, 2011

சந்தோஷ முகம்



''என்ன வாத்தியார் ஐயா? மெடிகல் செக் அப்புக்கு சென்னை போறீங்களாமே? கேள்விப்பட்டேன்.  கண்டிப்பா நம்ம பையன் வீட்டில தான் தங்கணும்.'' பரிவோடு சொன்னார் பொன்னையா.
நீலகண்டன்  புன்னகைத்தார். ஏற்கெனவே  சோமு , பரதன்,லோகநாதன் -- எல்லாருமே தற்போது சென்னையில் இருக்கும் அவரது பழைய மாணவர்கள் -- இவர்களின் பெற்றோரும் அவரை சந்தித்து, தங்கள் மகன் வீட்டில் தங்கிக் கொள்ளச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போயிருந்தார்கள்.
''ஆமா, உங்க மாணவன் வெங்கட்டும் அங்கேதானே இருக்கான்?'' என்றாள் மனைவி மரகதம்.
''ஆமா, அவங்கப்பா, அம்மா அவனோட அங்கேயே இருக்காங்க.  இங்கே இருந்தா அவங்களும் வந்து என்னை அங்கே தங்கச் சொல்லியிருப்பாங்க''

ருக்குத் திரும்பியதும் மரகதம் ஆவலுடன் கேட்டாள், ''ஆமா, யார் வீட்டிலே தங்கினீங்க?''
''வெங்கட் வீட்டில் தான்!''
''என்னங்க, வீட்டுக்கு வந்து கேட்டுக் கொண்டவங்க பையன்களை விட்டுவிட்டு அவன் வீட்டில் எப்படி...?'' குழம்பினாள்.
''வெங்கட்டைத் தவிர மற்ற எல்லாரும் கல்யாணமானதும் பெற்றோரைத் தங்களோட அழைச்சிட்டுப் போகாம இங்கே கிராமத்திலேயே விட்டு வெச்சிருக்காங்க. பெத்தவங்களையே கவனிக்காதவங்க, என்னை எவ்வளவு தூரம் வரவேற்பாங்க? ஓர் ஆசிரியர் பார்க்க விரும்பறது தன் மாணவன் முன்னுக்கு வந்து நல்லா இருக்கிறதை மட்டுமில்லே, அவனைப் பெத்தவங்களோட சந்தோஷ முகத்தையும்தான். அதுக்கு நான் அங்கேதானே போகணும்?''

  ( 'குமுதம்'  28-09-2005 இதழில் வெளியானது )



Monday, October 17, 2011

பசித்தாலும்...


''என்னங்க, அந்த பி.இ.பையனையே பேசி முடிச்சிடலாம். நம்ம பொண்ணுக்குப் பொருத்தமா இருக்கான்.''
''எனக்கு மட்டும் என்ன ஆசை இல்லாமலா கௌரி? ஆனா அவங்க ரொம்பக் கேட்கிறாங்களே? பேசாம இந்த எம்.சி.ஏ.வையே பார்ப்போம். நமக்குத் தகுந்த இடம்.''
''அதில்லேங்க, நம்ம பையன் சேகர்தான் இப்ப சினிமாவில பிரபலமாகி நாலஞ்சு படத்தில நடிச்சிட்டு இருக்கானே, இப்ப அவனைப் போய்ப் பார்த்து தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு லட்சம் தான்னு கேட்டால் தரமாட்டேன்னா சொல்லப் போறான்?''
''சரிதான், படிப்பைப் பாதியில விட்டிட்டு குடும்பப் பொறுப்பில்லாம ஓடிப் போனான். என்னான்னு கேட்கலே இதுவரை.  இப்பபோனால் எப்படிப் பேசுவானோ?''
''அதெல்லாம் நம்ம பையன் அப்படி ஒண்ணும் சொல்லமாட்டான். உங்களைப் பார்த்தா போதும், உருகிடுவான்.''
ரை நம்பிக்கையோடு மாநகரம் வந்திறங்கியவர் கண்ணில் அந்த போஸ்டர். மகன் எழுதி இயக்கி நடித்த படம் ரிலீசாகியிருந்தது.
 பார்த்துவிட்டுப் போனால் ரசித்த காட்சிகளை அவனிடம் சொல்லலாம். சந்தோஷப் படுவான்.
உள்ளே நுழைந்தார். தொடங்கி விட்டிருந்தது. திரையில் சேகர். ஆவேசமாகப் பேசினான்.
''...எந்த மூஞ்சியை வெச்சிட்டு என் முன்னே வந்து நிற்கிறே? அன்னிக்குக் கேவலம் நாற்பது ரூபாய்க்கு  உன்னை எப்படியெல்லாம் கெஞ்சினேன்? கொஞ்சமாவது இரக்கப்பட்டியா? கண்டபடி திட்டினே. வீட்டை விட்டு ஓடினேன். பட்டணத்துக்கு வந்து தெருத்தெருவா அலைஞ்சு... இன்னிக்கு நல்லா இருக்கேன்னா அது என் சொந்தத் திறமை! இப்ப அதில குளிர் காய வந்திருக்கியா?''
இவருக்கு சேகர் ஒரு நாள் தன் அபிமான நடிகருக்கு கட் அவுட் வைக்க நாற்பது ரூபாய் கேட்டதும் தான் மறுத்ததும் நினைவில் ஓடிற்று. நம்மைத்தான் சொல்கிறானா? இருக்காது. இது வெறும் கதை தானே? அதற்கு மேல் படம் பார்க்க முடியவில்லை. வெளியே வந்தார்.
விசாரித்து மகனின் வீட்டுக்குள் நுழைந்தபோது...
''நான்தான் சேகரோட அப்பா,'' என்றதும் வேலையாள் பிரமாதமாக உபசரித்தான். ''இதோ வந்திருவாருங்க.குளிச்சிட்டிருக்கார்.''
டீப்பாயில் கிடந்த பேப்பரில் டைரக்டர் சேகரின் பேட்டி வெளியாகியிருந்தது.  ஆவலுடன் எடுத்துப் படித்தார்.
நிருபர்: உங்க படத்தில், வசனம் எல்லாம் தத்ரூபமா இருக்கே, காரணம்?
சேகர்: அதுவா? அனுபவம்தான். நான்  எல்லாவற்றையும்  என் அனுபவத்தில் இருந்துதான் எடுக்கிறேன்.
பேப்பரை மடித்து வைத்தார்.
''வாங்கப்பா, என்ன விஷயம்?'' தலையைத் துவட்டியபடியே வந்தான் சேகர். ''டேய், அப்பாவுக்குக் காபி கொடுத்தியா?''
''ஒண்ணுமில்லேப்பா, உன் தங்கச்சிக்கு கல்யாணம் பேசியிருக்கோம். பையன் எம்.சி.ஏ.  எங்களுக்குத் தகுந்த இடம். உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.''
கொஞ்சமும் தயக்கமின்றிப் பேசிய வார்த்தைகளில் அவரை அறியாமலேயே ஒரு பெருமிதம் சேர்ந்திருந்ததது!


Thursday, October 6, 2011

வாழ்த்து

குநாதன் தீர்மானமாகச் சொன்னார், ''என்னால் அந்தக் கல்யாணத்துக்கு வரமுடியாது!''
சௌம்யா இடிந்து போனாள். இத்தனை எடுத்துச் சொல்லியும் இவர் நிர்த்தாட்சண்யமாக மறுக்கிறாரே!
அவளுடைய மாமா மகனுக்குக் கல்யாணம்.  மாமாவுக்கும் இவருக்கும் ஆகாது.  பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தி இருக்கிறார்.  தங்கள் பாட்டுக்கு ஒதுங்கியிருந்தபோதும் திமிர் என்று வர்ணிப்பார். அவர் பிள்ளைகளும் இவரை வயதுக்குக் கூட மதிப்பதில்லை.
''இத பாருங்க, கல்யாணம் காட்சின்னு வரும்போது  அவங்க நம்மை மதிச்சாலும் மதிக்காவிட்டாலும் நாம போய் தலையைக் காட்டிட்டு மணமக்களை வாழ்த்திட்டு வந்திடணுங்க.''
''ஐயோ சௌம்யா, அவங்க நம்மை மதிக்கலைங்கிற காரணத்தால நான் அங்கே வரத் தயங்கலே...''
''அப்புறம் என்ன யோசனை?''
''சௌமீ, நாம போறது எதுக்கு? மணமக்களை வாழ்த்தறதுக்குத்தானே? அந்த வாழ்த்து உதட்டிலேருந்து  வந்தா போதாது. மனசார நம்ம உள்ளத்திலேருந்து வரணும். நம்ம மனசிலே அவங்க பேரில் கோபமும் வருத்தமும் இருக்கும்போது எப்படி அது வரும்? அப்புறம் நாம போறதிலே என்ன அர்த்தம்? யாருக்கு என்ன பிரயோசனம்?''
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது அம்மா   சொன்னாள், ''இத பாரு ரகு, நீ சொல்றது சரிதான். உன் மனசில்விசனம் இருக்கும்.  வார்த்தைகள் வெளி உதட்டிலேயிருந்துதான் வரும். ஆனால் இது வெளியில் யாருக்காவது தெரியப்போகிறதா? இல்லையே? அவங்க கோணத்திலேயிருந்து பாரு. நீங்க சிரிச்சபடியே அங்கே வர்றீங்க. எல்லா நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கறீங்க. கைகுலுக்கி வாழ்த்தறீங்க. அதைக் கேட்டு அவங்க மனசு சந்தோஷம் அடையுது. பார்க்கிறவங்களும் சந்தோஷப்படறாங்க. அத்தனை பேரையுமே சந்தோஷப்படுத்த நம்மால முடியுதுன்னா அப்புறம் பிரயோசனமில்லைன்னு ஏன் நினைக்கிறே? யார் கண்டது? ஒரு வேளை அந்த சந்தோஷ சூழ்நிலையில் உன் மனசிலேயும் ஒரு மன்னிப்பு உண்டாகி  மனசார அந்த வாழ்த்தை வாழ்த்திடலாமில்லையா?''
அதுவும் சரிதானே? புறப்பட்டார் ரகுநாதன்.