Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, July 6, 2025

அணில் சொன்ன சேதி..

அணில் சொன்ன சேதி..
கே பி ஜனார்த்தனன் (‘சுட்டி விகடன்' 31-8-07)
அணில் சொன்ன சேதி கேட்டு மிருகங்கள் கவலையில் உறைந்து போய் நின்றன.
“நிஜமாவா?” என்றது மான்.
“ஐயையோ, அப்படியா?” என்றது முயல்.
“சே, என்னைவிட தந்திரசாலியா இருக்கிறாங்களே?” வியந்தது நரி.
யானை மட்டும் மீண்டும் அணிலிடம் விசாரித்தது.
“நீ கேள்விப்பட்டதை மறுபடியும் தெளிவாக சொல்லு!”
“இந்த பூமியிலே இனி வாழ முடியாது, செவ்வாய்க் கிரகத்திலே எல்லா வசதிகளையும் உருவாக்கிக்க முடியும், பூமிக்கு இனி குட்பை சொல்லிவிட வேண்டியதுதான்னு மனிதர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்,” என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் சோகத்தில் ஆழ்ந்து போயின.
சந்தனக் காட்டில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. நகரில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்திற்கு தினமும் சென்று அணில் தகவல்களை திரட்டி வரும். அணிலுக்கு அங்கு ராஜ மரியாதை!
விஞ்ஞானிகள் கொடுக்கும் பழம் கொட்டைகளைத் தின்றுவிட்டு அங்கேயே சுற்றி வரும். அப்போது காதில் விழும் சேதிகளை காட்டுக்கு வந்து மற்ற மிருகங்களிடம் சொல்லும். இதனால் அணில் மீது மற்ற விலங்குகளுக்கும் அலாதியான பிரியம். சில நாட்களாக அணில் சொன்ன சேதிகள் மற்றவைகளைக் கவலையடையச் செய்தது. வேற்றுக் கிரகங்கள் பற்றிய மனிதர்களின் ஆராய்ச்சி, அங்கே குடியேற அவர்கள் திட்டமிடுவது பற்றி விலங்குகள் பரபரப்பாக பேசிக்கொண்டன. இப்போது ஒரேயடியாக பூமியை விட்டு மனிதர்கள் செவ்வாயில் குடியேறப் போகிறார்கள் என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் கவலை கொண்டன.
“எதற்காக இந்த அழகிய பூமியை விட்டுப் போறாங்க?” வினவியது முயல்.
“அதுவா? அவங்க இந்த பூமியை ஏற்கனவே பாழ் படுத்திட்டாங்க. இயற்கையின் சுழற்சியையும் கெடுத்துட்டாங்க. இதுக்கு மேலே இங்கே இருக்கிறது ஆபத்துன்னு வேற இடத்துக்கு போறாங்க.”
“நாமும் அவங்களோடு போக முடியாதா?” கேட்டது மான்.
“ஊஹூம்! அவங்க தங்களைக் காப்பாத்திக்கத்தான் நினைக்கிறாங்களே தவிர நம்மளைப் பத்தி யோசிக்கவே இல்லை.”
“அப்போ நாம என்ன பண்றது?”
“நாம இங்கேயே அழிய வேண்டியதுதான்.”
அன்று முழுவதும் எந்த விலங்கும் எதுவுமே சாப்பிடவில்லை அடுத்த நாளும் அணில் ஆய்வுக்கூடத்திற்கு விரைந்தது சில தகவல்களுடன் மாலை காட்டுக்கு திரும்பியது.
“நம்மையும் அழைத்துச்செல்ல அவங்க தீர்மானம் பண்ணிட்டாங்க,” என்று அணில் சொன்னவுடன் விலங்குகள் ரொம்பவும் ஆர்வமாயின.
“அப்படியா?” என்று மயில் கேட்க, “உண்மையாகவே நம்மை அழைச்சிட்டுப் போறாங்களா?” என்றது ஆமை.
“ஆமா. அந்தக் கிரகத்திலும் நாம அவங்களுக்குத் தேவைன்னு நினைக்கிறாங்க, அதனாலதான்!”
“அட, புரிஞ்சிக்கிட்டாங்களா?”
“ஆமாம்! பொதி சுமக்கவும், பால் கறக்கவும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டவும்னு இப்படிப் பல விஷயங்களுக்கு அவங்களுக்கு நாம தேவை. அதனால நம்மையும் அங்கே கொண்டு போறாங்க. இனி நாம கவலைப்பட வேண்டாம்.” இதைக் கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ந்தன.
மறுநாள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே வந்தது அணில்
“அவங்களுக்கு நாம தேவைதான். ஆனால் நம்மை அழைச்சிட்டுப் போகாமலேயே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்குவாங்களாம்!” எல்லாரும் விழிக்க அணில் விளக்கியது.
“தங்களுக்குத் தேவையான விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிக்குவாங்களாம்!”
அதைக்கேட்டு எல்லாரும் அசந்து போய் நிற்க, மூத்த விலங்கான யானை பேச ஆரம்பித்தது.
“எனக்கென்னவோ இது வருத்தப்பட வேண்டிய விஷயமா தெரியலே! நிஜமாகப் பார்த்தால் நாம் சந்தோஷப்படணும். இதைக் கொண்டாடணும்!”
“என்ன சொல்றீங்க?” கேட்டது நரி.
“இதோ பாருங்க, மனுஷங்கதான் பூமியைத் பாழ் படுத்தினது. அவங்க இங்கேயிருந்து போயிட்டா அப்புறம் இயற்கை தன் இயல்பு நிலைக்கு வந்துடும். பூமி மறுபடியும் ஒழுங்காயிடும். அதனால அவங்க நம்மையும் தங்களோட கூட்டிப்போக நினைத்தால்தான் நாம கவலைப்படணும்,” என்று யானை நிதானமாகச் சொன்னது.
இதைக்கேட்டு மற்ற விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன.

Friday, October 4, 2013

கண்ணாடி அரண்





வசரமாக பைக்கில் விரைந்து கொண்டிருந்த நான் ‘டம் டமா... டம் டமா...’ என்ற உடுக்கைச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

ரோட்டோரமாக இரு புறமும் பலர் கூடி நின்று பார்த்துக் கொண்டிருக்க... அந்தரத்தில் கயிற்றின் மீது ஒரு சிறுமி. அஞ்சு வயசு கூட இருக்காது. கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு லாகவமாக அடி மேல் அடி வைத்து அந்த ஒற்றைக் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்த காட்சி என்னை உலுக்கியது.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.

சாலையோரமாக தரையில் முளையடித்துக் கட்டிய கயிற்றை ரெண்டு பக்கமும் பெருக்கலாக நிறுத்திய மூங்கில்களின் மேலாகக் கொண்டு போயிருந்தார்கள். அதன்மேல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் சிறுமி.

இறங்கப் போகிறாள் என்று நினைத்தால், குனிந்தவள் தலையில் ஒரு சின்னச் சொம்பை வைத்தான் அந்தச் சிறுமியின் தகப்பன். அதையும் வைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சொம்பு கீழே விழுந்து விடாமல் மீண்டும் கயிற்றில் அடிகளை எடுத்து வைத்துத் திரும்பி நடந்தாள்.

எங்கே தலை குப்புற விழுந்து விடப் போகிறாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.

மூன்றாவது முறையாக அவன் ஓர் அலுமினியத் தட்டைக் கயிற்றின் மீது வைக்க அதை ஒரு காலால் அழுத்திக் கயிற்றின் மேல் நகர்த்தியபடி மறு முனை வரை நடந்து சென்றாள் அந்தச் சிறுமி.

இதோடு இது முடிந்து அந்தப் பெண் குழந்தை கீழே இறங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன். கீழே அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தாய் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு காசு வாங்கக் கிளம்பினாள். அப்பாடா, இதுதான் கடைசி ரவுண்ட்!

உலகம் புரியாத வயதில் அந்தச் சிறுமி உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்திய சாகசத்தில் உருகிப் போயிருந்தேன் நான்.

அவரவர் ஐம்பது காசு, ஒரு ரூபாய், அதிக பட்சம் ஐந்து ரூபாய் வரை தட்டில் போட, நான் முழு ஐம்பது ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, அந்தத் தாய் எவ்வளவு சந்தோஷப் படுகிறாள் என்று ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்த அவள், சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ரொம்பச் சின்னதாக ஒரு விசும்பல் கேட்ட மாதிரி இருந்தது. தட்டில் ஒரு கண்ணீர்த் துளி விழுந்து தெறித்தது. இடுப்பிலிருந்த கைக்குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

அவள் செயல் எனக்குப் புரியவில்லை. ஏன், எதற்காக அவள் அழ வேண்டும்?

வீடு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.

''இதில் புரிய என்னங்க இருக்கு? பார்த்திட்டிருந்த யாரோ ஒருத்தராகிய உங்களுக்கே அந்தச் சிறுமி செய்த சாகசம் அவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியிருந்ததுன்னா, பெத்த தாயான அவளுக்குத் தினம் தினம் அந்தக் குழந்தையை அப்படி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறது எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? கல்லாலானதுன்னு அவள் மனசுக்குப் போட்டிருந்த அரண், வெறும் கண்ணாடிதான்கிறது எப்பவாவது உங்களை மாதிரி சில பேர் இப்படி அதீதக் கருணைங்கிற கோலியை எறியும்போதுதானே அவளால் தெரிஞ்சுக்க முடியுது?''

என்ன தெளிவாகச் சொல்லிவிட்டாள் என் மனைவி! ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?
<><><>
(விகடனில் 2002 -ஆம் ஆண்டு பவழவிழா பரிசு பெற்ற குட்டிக் கதை.)
<<>>

(படம்- நன்றி: விகடன்)

Monday, January 21, 2013

காற்றோடு போயாச்சு...





முனா, நில்லு. நான் சொல்றதைக் கேளு! கத்தினான் பரசு.

முடியாது நான் சாகப்போறேன். ஆகாஷ் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்! தண்ணீரில் குதிக்க முன்னேறிச் சென்றாள் யமுனா.

பரந்து கிடந்த குளத்தின் நீரலைகள் ஆழத்தைப் பொதிந்து வைத்தபடி, வா, வா,’ என்று அவளை வரவேற்றன. பரசுவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ஆனாலும் யமுனாவைக் கோபப்பட மனசில்லை.

சிறு வயது சிநேகம் காதலாக மாறி உள்ளுக்குள் அலை வீசிக்கொண்டிருக்க, தன் விருப்பத்தை வெளியிட பரசு சமயம் பார்த்துக் கொண்டிருந்தபொதுதான் திடீர்ப் பிரவேசமாகக் குறுக்கிட்டான் ஆராய்ச்சியாளன் ஆகாஷ்.

 அதுவரை பரசு, பரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்த யமுனா அடியோடு மாறிப்போனாள். ஒரே ஒருநாள் தனியே சந்தித்து பத்து நிமிஷம் பேசினான் ஆகாஷ். அப்படி என்னதான் பேசினானோ, அடுத்த வினாடியிலிருந்தே அவன் மீது மையலாகி விட்டாள் யமுனா.

அவர்கள் காதல் நாளொரு மேனியாக வளர இவனது மனம் பொழுதொரு வண்ணமாக பட்டுப்போனது. ஆகாஷ் மீது பைத்தியமாக மாறிப்போன யமுனா சாதாரணமாகக் கூட தன்னுடன் பேசாமல் போனதுதான் பரசுவுக்குத் தாங்கொணா வேதனையைக் கொடுத்தது.
அப்போதுதான்...

பெரிய தனக்காரர் தன் மகள் சிவகாமியை ஆகாஷுக்கு பெண் பேசும் படலத்தைத் தொடங்கினார். அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாத ஆகாஷ், யமுனாவிடம் மட்டும் சுருக்கமாக, என்னை மறந்து விடு,” என்று சொல்லிவிட்டுக் காணாமல் போய்விட்டான்.

இடிந்து போன யமுனா இப்போது தேடிக்கொள்ளப் பார்க்கும் முடிவு...

ஆழமான குளம் அது. இதுவரை ஆறு பேரைப் பலி கொண்டது. தற்செயலாக அங்கே வந்த பரசு பார்த்துப் பதறிவிட்டான். காதல் தோல்வியின் ஆவேசம் அவளைச் செலுத்த, வேகமாக அவள் முன்னேற, இவனால் பிடிக்க முடியாத இடைவெளி. அப்போதுதான் அது நடந்தது.  

குளத்தின் மறுகரையில் நின்றிருந்த தென்னை மரங்களினூடே பிரகாசமான ஒளியுடன் விண்கலம் மேலே எழும்பியது. அதன் வாசலில் ஆகாஷ். அவன் பேச்சு அசரீரி வார்த்தைகள் போல் வந்து விழுந்தன.

மிஸ் யமுனா, நான் விடை பெறுகிறேன். உங்கள் பூமியில் நிலவும் காதல் என்கிற விசித்திரத்தை ஆராய்ச்சி செய்ய வந்த லிபிகா கிரகவாசி நான்.  மனிதர்களின் மனதை மயக்கும் வித்தை தெரிந்தவர் நாங்கள். ஆகவே உன் மனதில் இருந்த பழைய நினைவுகளை அழித்துவிட்டு என் மீது காதலை உருவாக்கி சோதித்துப் பார்த்து விட்டேன். சோதனைக்கு உன்னைப் பயன்படுத்திக் கொண்டதற்கு என்னை மன்னித்துவிடு. என் பணி முடிந்தது. இந்த நிமிஷமே என் நினைவுகளை உன் மனதிலிருந்து அகற்றி விடுகிறேன்...

கையசைத்துவிட்டு கண்ணாடிக் கதவுக்குள் அவன் சென்றதும் புள்ளியாகி மறைந்தது கலம்.  மந்திரக் கட்டுகளிலிருந்து விடுபட்டவளாகத் திரும்பினாள் யமுனா. பரசுவை அவள் பார்த்த பார்வையில் பழைய அன்பும் வாஞ்சையும் தெரிய சிலிர்த்தான் அவன்.

('ஆனந்த விகடன்' 2006 தீபாவளி மலரில், ஓவிய மேதை மாதவன் அவர்கள் புகழ் பெற்ற உமா பத்திரிகைக்கு வரைந்த பிரபல அட்டைப் பட ஓவியங்களுக்கான சிறுகதைகளை எழுத்தாளர்களிடம் வாங்கி வெளியிட்டிருந்தார்கள். எனக்கு தரப்பட்ட படத்துக்கு நான் எழுதி வெளியான கதை இது.   நன்றி: ஆனந்த விகடன்.)

<<<>>>

Tuesday, April 3, 2012

வேண்டாத வேலை!



ங்கே சென்றாலும் ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுபவர் ராகவன். ஆனால், இன்று...? இரவு ஒன்பது மணிக்கு தான் முன்பு வந்தேயிராத ஒரு இடத்தில், முன்பின் தெரியாத ஒரு தம்பதியரிடம், இரண்டு மணி முன்பு அறிமுகமான ஒரு இளைஞனுக்காக தான் வாதாடிக் கொண்டிருப்பதை அவராலேயே நம்ப முடியவில்லை.
கப கபவென்று ஏறிக்கொண்டேயிருந்தது நேரம். இனிமேல் கிளம்பி வெகுதூரம் தனியே வீடு செல்லணும் இவர். அவர்களோ அசைவதாக இல்லை. இவரோ விடுவதாக இல்லை.
அவரது அறுபத்தைந்து வயசுக்கு தேவைதானா இது? மனைவி சுமதி நிச்சயம் இவரை வாசலிலேயே மடக்கி வசை பாடுவாள். அவர்களின் ஒரே மகன் ஊரிலில்லாத நேரம். டிரெயினிங்குக்காக மூன்று நாள் டில்லி சென்றிருந்தான். போகும் போது படித்துப் படித்து சொல்லியிருந்தான், கவனம், கவனம் என்று.
அந்த நேரத்திலா இப்படி...
ராகவனின் சொந்தக்காரர் ஒருவர் அந்த மனநல மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அவரை பார்க்கத்தான் பார்வையாளர்கள் நேரத்தை கேட்டுத் தெரிந்துக் கொண்டு சாயந்திரம் சென்றிருந்தார். போனோம் பார்த்தோம் என்று வந்திருக்கலாம். காபி அருந்த கான்டீனுக்குள் நுழைந்தார். பக்கத்தில் தலை கவிழ்ந்து உட்காந்திருந்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்தார். தன்னைப் போல அவனும் ஒரு விசிட்டர் என்று நினைத்தார்.
“இல்லீங்க. இங்கே சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று குணமடைந்தவன் நான்,” என்று சொன்னான்.
“அப்ப செக் அப்புக்கு வந்தீங்களா?”
“அதெல்லாம் இல்லீங்க, நான் குணமாகி ஆறு வருஷமாச்சு. ஆனால், நான் இங்கேயேதான் இருக்கேன். சமையல் அசிஸ்டன்டா...”
“ஓ அம்மா அப்பா யாரும் கிடையாதா?”
“எல்லாம் இருக்காங்க...”
“வெளியூரிலா?”
“இங்கேயே தான் இருக்கிறாங்க... என்னை சேர்த்துக்க மாட்டேங்குறாங்க.” உடைந்து விட்டான்.
அழுது கொண்டே அவன் சொன்னதிலிருந்து அவன் பெற்றோர் அவனைக் கை கழுவி விட்டதாகத் தெரிந்தது. பூரண குணமடைந்து ஒரு நார்மல் மனிதனாக அவன் ஆன பிறகும் அவனை ஏற்றுக் கொள்ளும் அளவு அவர்கள் நார்மலாக இல்லை.
ராகவனால் அதைத் தாங்கி கொள்ளமுடியவில்லை. “எங்கேப்பா உன் வீடு? நான் சொல்லிப் பார்க்கிறேன்...” என்று விசாரித்தார். முகவரியை வாங்கிக் கொண்டார். மணி ஐந்து தான் ஆச்சு. பார்த்து பேசிவிட்டு எழு மணிக்குள் வீடு திரும்பி விடலாம் என்று நினைத்தார். ஆனால் கொஞ்சமாவது அவர்களை கன்வின்ஸ் பண்ண முடிந்தால் தானே?...
“இல்லைங்க உங்களுக்கு தெரியாது...” என்று தலையை ஆட்டி பலமாக மறுத்தாள் அந்த அம்மா. “தெளிவாயிட்டான்னு நீங்க சொல்றீங்க...”
“டாக்டரே சொல்றார்.”
“சரி டாக்டரே சொல்றார். நம்பறோம் ஆனா மறுபடி அதே மாதிரி ஆயிட்டான்னா?”
“அது எப்படீங்க?”
“முதல்லே தெளிவாயிருந்தவன் தானே அப்படி ஆனான்?... அவன் என்னென்ன பண்ணுவான்னு உங்களுக்கு தெரியுமா?”
“வெத்திலை குழவியை எடுத்து அவ மேலே எறிஞ்சுட்டான் சார், நம்புவீங்களா? நல்ல வேளை இரண்டு தையலோட போச்சு,” என்றார் அப்பா.
“இவரோட டிரஸ்ஸையெல்லாம் எடுத்து சாக்கடையில் வீசிட்டான் தெரியுமா?”
“பக்கத்து வீட்டுக்காரங்களோட தினம் ஒரு தகராறு!”
“சரிங்க மறுக்கலே. நீங்க பயப்படறது நியாயம் தான். ஆனா யோசிச்சு பாருங்க. உடம்பு சரியில்லாம இருக்கிறப்ப நாமளும் தான் என்னென்ன கலாட்டா பண்றோம்! அதையெல்லாம் மனசில வெச்சிட்டு, உடம்பு சரியான பிறகும் நம்மளை ஒதுக்கி வெச்சுடறதில்லையே?...”
“அது... அதுவும் இதுவும் எப்படி...”
“ஒண்ணாகும்னுதானே கேட்கறீங்க? ஏன் சார், ஒரு தடவை உங்களுக்கு தீராத வயிற்று வலி வந்து அவதிப்பட்டீங்களே, ஞாபகமிருக்கா?”
“உங்களுக்கு எப்படி... அவன் சொன்னானா?”
“யார் சொன்னா என்ன, வந்ததா?”
“ஆமா உயிரே போயிடுச்சு.”
“அந்த சமயத்தில் நீங்க பண்ணினதெல்லாம் ஞாபகமிருக்கா? எத்தனையோ தடவை இவங்களை, அதான் உங்க மனைவியை எட்டி உதைச்சிருக்கீங்க...”
“சில சமயம் வலி பொறுக்க முடியாம...”
“உங்களை நீங்க இழந்த சந்தர்ப்பங்களில் அப்படி நடந்தது. அது மாதிரி அவனும் அவனை இழந்த சந்தர்ப்பங்களில் தான் அப்படி நடந்து கொண்டான். உங்க மனைவி அந்த அடி உதையை வாங்கி கொண்டு உங்களோடு சேர்ந்து உங்க வயித்து வலியை எதிர்த்து போராடினாங்க. நீங்க உங்க மகனை சேர்த்த மாதிரி ஒரு ஆஸ்பத்திரியில் உங்களை சேர்த்திட்டு வீட்டுக்கு வந்திடலை.”
“என்ன சொல்றீங்க,”
“உங்களுக்கு குணமான பிறகு மறுபடி அந்த மாதிரி நோய் வந்திட்டா நீங்க மறுபடி உதைப்பீங்களேன்னு ஒரு தடவையாவது உங்களைவிட்டு ஒதுங்கியிருப்பாங்களா?”
பதிலில்லை.
“நமக்கும் நேர்றது தாங்க. உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஊறு வருது. அந்த சமயம் நாம படற வேதனையில உண்டாகிற எரிச்சலும் கோபமும்... அப்பெல்லாம் நாம நாமாகவே இருக்கிறதில்லே. அந்த வியாதி குணமானதும், டாக்டர் நாம நார்மல்னு சொன்னதும், நாமும் நம்மை சுத்தி இருக்கிறவங்களும் எவ்வளவு சந்தோஷமா, சகஜமா நம்ம வாழ்க்கைப் பயணத்தை தொடர்றோம்? அதே மாதிரி ஒரு உறுப்பு தானே மூளையும்? அதற்கு ஒரு ஊறு வரக்கூடாதா? அல்சரும் நெஞ்சு வலியும் மறைஞ்ச பிறகு வயிறும் இருதயமும் நார்மலா ஃபங்ஷன் பண்ற மாதிரி தானே மூளை என்கிற உறுப்பும் பண்ணும்? இதிலே என்ன சஞ்சலம் இருக்கு?”
அவர்கள் யோசிக்கற மாதிரி இருந்தது.
“கொஞ்சம் நினைச்சு பாருங்க. உங்க மகன் மேல கருணை வையுங்க, தயவு செய்யுங்கனு நான் சொல்லலே. அப்படி அவனும் எதிர் பார்க்கலே. லாஜிகலா யோசிச்சு பாருங்க. உங்களுக்கு சரின்னு படக்கூடிய ஒரு நியாயம் தான்! உண்மை தான்” சொல்லிக் கொண்டே போனார்...
“சார், நீங்க சொல்றது சரின்னு எனக்கு படுதுங்க.” என்றாள் தாய்.
தந்தையும் யோசிக்கிற மாதிரி இருந்தது.
இவர் மணியைப் பார்த்தார் ஒன்பதரை. இனி எப்ப பஸ் பிடித்து புதுநகர் போய்... சுமதி தவிச்சிட்டிருப்பா. இவருக்கு என்ன ஆச்சோன்னு பதைச்சிட்டுருப்பா. பக்கத்து வீட்டு போனும் இன்றைக்கென்று பார்த்து ரிப்பேர்...
ராகவனும் சுமதியும் மட்டுமே வீட்டில், ரிடயராகி ஐந்து வருடமாகிறது. மருந்து கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரே மகன் அபய். அவன் தான் இப்போது டெல்லிக்கு டிரெயினிங்குக்காக போயிருக்கிறான்.

ஸ்சிலிருந்து உதிர்ந்து அரையிருட்டில் புதுநகர் ரோட்டில் நடந்தார் ராகவன்.
“நாளைக்கு போய் அவனை அழைச்சிட்டு வந்திடறோம்,” என்று அவர்கள் உறுதியளித்தது உற்சாகத்தைக் கூட்டியது. மனதிலும் நடையிலும்
ரோட்டில் கிடந்த கல்லை கவனிக்கவில்லை. தடுமாறி விழுந்ததில் நல்ல சிராய்ப்பு. சமாளித்து எழுந்து நடந்து வீட்டை அடைந்து... விஷயத்தை சொன்னதும்...
“உங்களுக்கு கொஞ்சமாவது மதியிருக்கா? இப்படிப்போய் ராத்திரியில அலைஞ்சிட்டு வர்றீங்களே... நாம ரெண்டு கிழடுகளும் ஒரு சப்போர்ட்டும் இல்லாம இங்கே ஒதுக்குபுறமான வீட்டில் கிடக்கிறோம். அங்கே நம்ம பிள்ளை ஆயிரம் மைலுக்கப்பால தனியா இருக்கிறான்... மத்தவங்கல்லாம் அவங்க வேலையைப் பார்த்துட்டு நமக்கென்னன்னு இருக்கிறப்ப நீங்க மட்டும் ஏன் தான் இப்படி போய் அனாவசிய பிரச்சனைகளில் இறங்கறீங்களோன்னு தெரியலே. இந்த ஆறு வருஷமா அந்த ஆஸ்பத்திரிக்கு வந்த எத்தனை விசிட்டர்கள்கிட்ட அவன் சொல்லியிருப்பான். இதை? யாராவது அதில் தலையிட்டாங்களா? உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலை?..''
ராகவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் மனதில் தவறு செய்த உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எந்த வகையில் யோசித்தாலும் தான் செய்தது வேண்டாத வேலையாகத் தெரியவில்லை. கீழே விழுந்த வலி இன்னும் குறையாத போதும் கூட.
“எத்தனை தடவை சொன்னாலும் உங்களை திருத்த முடியாது. நம்ம மகன் வரட்டும், சொல்றேன். நாளைக்கு வந்துருவான்.''
ஆனால், அபய் வரவில்லை. தகவலும் வரவில்லை. போன் எதுவும் காணோம் அரண்டு போய்விட்டார்கள்.
கம்பெனிக்கு போன் செய்து கேட்டால் டிரெயினிங் முன் தினமே ஷெட்யூல்படி முடிந்து விட்டதே என்று அதிர்ச்சியான பதில் வந்தது. “எங்களுக்கு ஒரு தகவலும் வரலையே, என்ன ஆச்சு?” என்றார்கள்.
இரண்டு நாள் கழித்து பக்கத்து வீட்டுக்கு போன் வந்தது. அபய் தான் பேசினான்
“என்னடா ஆச்சு?”
“நான் ஓகேம்மா. ஒண்ணுமில்லை. முந்தாநாள் ஒரு ஆக்சிடெண்ட். ஒரு வேன்காரன் இடிச்சுட்டான்.”
“ஐயோ கடவுளே!”
“பரவாயில்லயேமா. ஒண்ணும் ஆபத்தில்லேயே!”
“எப்படிடா நடந்திச்சு, என் செல்லமே?” கேட்டாள் அழுகையினூடே.
“கிளாஸ் முடிஞ்சு வந்திட்டுருந்தேன். ஓரமாய்தான் நடந்து போயிட்டிருந்தேன். வேகமா வந்த வேன் டிரைவர் திடீர்னு இடது பக்கம் ஒடித்ததில் என் மேல் மோதி தூக்கி எறிஞ்சிட்டது. தலையில் நல்ல அடி. ஆனா... “
“ஐயையோ அப்புறம்,”
“அப்புறம் என்ன? எழுந்திருக்க முடியலே. அரை மயக்கமா கிடந்தேன். ஆங்காங்கே ஜனங்க போயிட்டிருந்த ரோடு தான் ஆனா, யாருமே கண்டுக்கலே. பஸ்சிலே போயிட்டிருந்த ஒரு ஆள் பஸ்சை நிறுத்தி இறங்கி வந்து என்னைப் புரட்டி பார்த்து தோள்ல கை கொடுத்து ஒரு ஆட்டோவில் ஏற்றி உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தார். கரக்ட் டயத்தில கொண்டு வந்ததால நான் பிழைச்சேன்னு டாக்டர் அவரை பாராட்டினார். எனக்கு வேண்டியவர்னு அவரை நினைச்சிட்டார் டாக்டர். ஆனா அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. எங்கேயோ கோயிலுக்கு போயிட்டிருந்தவர்...”
மனைவியின் முகத்தை பார்த்தார் ராகவன், ‘அந்த ஆளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று இப்போது அவள் கேட்கவில்லை.
<<<>>>

('அமுதம்' மார்ச் 2012 இதழில் வெளியானது)


Monday, October 17, 2011

பசித்தாலும்...


''என்னங்க, அந்த பி.இ.பையனையே பேசி முடிச்சிடலாம். நம்ம பொண்ணுக்குப் பொருத்தமா இருக்கான்.''
''எனக்கு மட்டும் என்ன ஆசை இல்லாமலா கௌரி? ஆனா அவங்க ரொம்பக் கேட்கிறாங்களே? பேசாம இந்த எம்.சி.ஏ.வையே பார்ப்போம். நமக்குத் தகுந்த இடம்.''
''அதில்லேங்க, நம்ம பையன் சேகர்தான் இப்ப சினிமாவில பிரபலமாகி நாலஞ்சு படத்தில நடிச்சிட்டு இருக்கானே, இப்ப அவனைப் போய்ப் பார்த்து தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு லட்சம் தான்னு கேட்டால் தரமாட்டேன்னா சொல்லப் போறான்?''
''சரிதான், படிப்பைப் பாதியில விட்டிட்டு குடும்பப் பொறுப்பில்லாம ஓடிப் போனான். என்னான்னு கேட்கலே இதுவரை.  இப்பபோனால் எப்படிப் பேசுவானோ?''
''அதெல்லாம் நம்ம பையன் அப்படி ஒண்ணும் சொல்லமாட்டான். உங்களைப் பார்த்தா போதும், உருகிடுவான்.''
ரை நம்பிக்கையோடு மாநகரம் வந்திறங்கியவர் கண்ணில் அந்த போஸ்டர். மகன் எழுதி இயக்கி நடித்த படம் ரிலீசாகியிருந்தது.
 பார்த்துவிட்டுப் போனால் ரசித்த காட்சிகளை அவனிடம் சொல்லலாம். சந்தோஷப் படுவான்.
உள்ளே நுழைந்தார். தொடங்கி விட்டிருந்தது. திரையில் சேகர். ஆவேசமாகப் பேசினான்.
''...எந்த மூஞ்சியை வெச்சிட்டு என் முன்னே வந்து நிற்கிறே? அன்னிக்குக் கேவலம் நாற்பது ரூபாய்க்கு  உன்னை எப்படியெல்லாம் கெஞ்சினேன்? கொஞ்சமாவது இரக்கப்பட்டியா? கண்டபடி திட்டினே. வீட்டை விட்டு ஓடினேன். பட்டணத்துக்கு வந்து தெருத்தெருவா அலைஞ்சு... இன்னிக்கு நல்லா இருக்கேன்னா அது என் சொந்தத் திறமை! இப்ப அதில குளிர் காய வந்திருக்கியா?''
இவருக்கு சேகர் ஒரு நாள் தன் அபிமான நடிகருக்கு கட் அவுட் வைக்க நாற்பது ரூபாய் கேட்டதும் தான் மறுத்ததும் நினைவில் ஓடிற்று. நம்மைத்தான் சொல்கிறானா? இருக்காது. இது வெறும் கதை தானே? அதற்கு மேல் படம் பார்க்க முடியவில்லை. வெளியே வந்தார்.
விசாரித்து மகனின் வீட்டுக்குள் நுழைந்தபோது...
''நான்தான் சேகரோட அப்பா,'' என்றதும் வேலையாள் பிரமாதமாக உபசரித்தான். ''இதோ வந்திருவாருங்க.குளிச்சிட்டிருக்கார்.''
டீப்பாயில் கிடந்த பேப்பரில் டைரக்டர் சேகரின் பேட்டி வெளியாகியிருந்தது.  ஆவலுடன் எடுத்துப் படித்தார்.
நிருபர்: உங்க படத்தில், வசனம் எல்லாம் தத்ரூபமா இருக்கே, காரணம்?
சேகர்: அதுவா? அனுபவம்தான். நான்  எல்லாவற்றையும்  என் அனுபவத்தில் இருந்துதான் எடுக்கிறேன்.
பேப்பரை மடித்து வைத்தார்.
''வாங்கப்பா, என்ன விஷயம்?'' தலையைத் துவட்டியபடியே வந்தான் சேகர். ''டேய், அப்பாவுக்குக் காபி கொடுத்தியா?''
''ஒண்ணுமில்லேப்பா, உன் தங்கச்சிக்கு கல்யாணம் பேசியிருக்கோம். பையன் எம்.சி.ஏ.  எங்களுக்குத் தகுந்த இடம். உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.''
கொஞ்சமும் தயக்கமின்றிப் பேசிய வார்த்தைகளில் அவரை அறியாமலேயே ஒரு பெருமிதம் சேர்ந்திருந்ததது!


Wednesday, January 27, 2010

அந்த ரகசியம்...

திகாலை ஐந்து மணி. வாகீஸ்வரன் எழுந்து கொண்டார். மேஜையடியில் அமர்ந்தார். நேற்று விட்ட இடத்திலிருந்து கதையை எழுத ஆரம்பித்தார்.

வாசலில் கோலமிட்டு வந்தாள் மனைவி. ''மளிகை சாமான் தீரப்போகுது. இந்த வாரம் வாங்கணும். பாக்கி முன்னூறு ரூபாய் தரணும்.''

திக்கென்றது. ''ம், சரி...'' தொடர்ந்து எழுதலானார்.

பத்து மணி. போஸ்ட்மேன் வீசிய கடிதத்தைப் படித்தாள் மனைவி.

''யாரு?''

''உங்க ஒன்றுவிட்ட ஒண்ணுவிட்ட தங்கச்சி மகன் ரகு பத்தித்தான். வேலை கிடைக்கலே, சீட்டு நடத்திப் பிழைக்கிறேன்னு உதவச் சொன்னவனை நம்பி கஷ்டப்பட்டு பணம் கட்டினீங்களே, அவன்தான்.. ஊரைவிட்டு ஓடிட்டானாம்...''

ரெண்டாயிரம் ரூபாய்! தலை சுற்றியது.

கதை தொடர்ந்தது.

பன்னிரண்டு மணி. தரகர் கந்தப்பன் எட்டிப் பார்த்தார்.

''மதுரைப் பக்கம் ஒரு வரன் வந்ததே உங்க பொண்ணுக்கு? அவங்களை நேத்து சித்திரைத் திருவிழாவில சந்திச்சு பேசினேன். வேறே தகைஞ்சுட்டதாம்.''

''அப்படியா? ம்,சரி...'' எழுத்து தொடர்ந்தது.

பிற்பகல் மணி மூன்று. நண்பர் மாதவன்.

''...அந்தப் பையன் சிவா ரொம்ப ஏழைன்னு வேலை வாங்கிக் கொடுத்தீங்களே. அவன் எல்லார்கிட்டேயும் உம்மைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிட்டிருக்கான்...''

அவனா? மனசு வலித்தது. தொடர்ந்து எழுதி முடித்தார் கதையை.

ந்தக் கதை வெளியான மறு நாள்...பரபரப்பாக அவர் வீட்டில் நுழைந்த வாசகர் அன்புராஜ் அவர் கையைப் பிடித்துக் குலுக்கித் தன் பாராட்டைத் தெரிவித்தார்.

''ரொம்பப் பிரமாதமாக இருந்திச்சு சார் கதை! காரக்டர்ஸ் மனசில எழும் வேதனைகளை, வலிகளை எப்படி சார் உங்களால இப்படி நுணுக்கமா தத்ரூபமா எழுத முடியுது?''

எப்படி என்பதை அவர் சொல்லவில்லை. ''ஏதோ வருது.''

Friday, January 8, 2010

அணுகு முறை


ண்பர் சேது வீட்டில் நான் நுழைந்த போது அவர் தன் பையனை வார்த்தைகளால் துவைத்துக் கொண்டிருந்தார். போன வருஷம் வாங்கிய ஐந்தாம் ராங்கை விட்டு இப்ப எட்டுக்கு வந்துட்டானாம்.
''வாத்தியார் என்ன சொன்னார்? பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா?'' என்று கேட்டேன்.
''இல்லை.''
''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''
''பையன் கணக்குல புலி.''
''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா?''
''வரவே வராது.''
''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே! கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா?''
''நெவர்.''
''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா?''
''அப்படி நான் பார்த்ததே இல்லே.''
''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்?''
கையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா!''


(குமுதம் 14-02-2007 இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை)





Wednesday, December 16, 2009

இந்நேரம் நம் கையில்!




'அமுதன், சிற்பக் கலைஞர்.' என்றது முன்பிருந்த போர்டு. சிறிய ஓட்டு வீடு. உள்ளே பத்தடிக்குப் பத்தடி வலிந்து பிரிக்கப்பட்டு அதுதான் அவரின் கலைக் கூடம்.

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை அவரது புலம்பல் வெளிப்பட்டது.

'ஆரம்பிச்சாச்சா?' எட்டிப் பார்த்தாள் பின்கட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ஜானகி.

கடைசியாகச் செய்து முடித்த வேலையில் கிடைத்த காசு கரைந்து விட்டிருந்தது. ஆச்சு இருபது நாள்! ஒரு ஆர்டரையும் காணோம்!

‘’சே, எப்படி சமாளிக்கப் போறோம் ஜானகி? யாரெல்லாமோ வந்து விசாரிக்கிறாங்க. ஆனால் ஆர்டர் தர ஒருத்தரும் வர மாட்டேங்கிறாங்களே! அஞ்சாம் தேதி வாடகை தரணும். பாலிலேருந்து மளிகைக் கடை வரை பாக்கி தீர்க்கணும். ஹரியோட ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்....''

அவரைப் பார்க்கப் பார்க்க மனதைப் பிழிந்தது அவளுக்கு. செதுக்கும் கல்லின் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டரும் ஏராளம் கலை நுட்பத்தைப் பறை சாற்றும். எழில் மன்றத்தைக் கடை விரிக்கும். அப்பேர்ப்பட்ட மேதாவி இப்படி மாய்ந்து போன கடந்த காலத்தையும் தேய்ந்து தோன்றும் எதிர்காலத்தையும் நினைத்து ஓய்ந்து கிடக்கிறாரே?

எப்படி அவருக்கு உணர்த்துவது?
ம்... அதுதான் சரி. அவரின் வழியிலேயே...

ஸ்பூனை எடுத்து பாத்திரத்தின் மீது சிற்றுளி போல் கொத்த ஆரம்பித்தாள். டொங் டொங் என்றெழுந்த அந்த ஓசை அவர் கவனத்தை ஈர்க்க, முனகலை நிறுத்திவிட்டு காதைக் கூர்மையாக்கினார்.

வருடக் கணக்காக சிற்பங்களின் கீழ் எழுத்தைப் பொறிக்கிற அவர் புலன்களுக்கு மனைவி பொறித்த அந்த மூன்று வார்த்தைகளையும் சப்தத்தை வைத்தே அறிந்து கொள்ள முடிந்தது.

மறு நிமிடமே துள்ளி எழுந்தார். மகனை அழைத்துக்கொண்டு தன் கலைக் கூடத்தில் நுழைந்தார். ஓரமாய்க் கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்தார். பென்சிலால் சில கோடுகள் கிழித்தார். கத்தியால் செதுக்கத் தொடங்கினார். இடையிடையே மகன் ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்க, விளக்கினார்.

கொஞ்ச நேரத்தில் அழகான சின்ன ரயில் எஞ்சின் மாடல் ஒன்று மகன் கையில். உலகமே கையில் கிடைத்த மாதிரி சிறுவன் ரசித்து விளையாட மகனும் தந்தையுமாக மகிழ்ச்சி பொங்கும் கணங்களைப் பரப்பியதில் அந்தச் சின்ன வீடு தஞ்சைப் பெரிய கோவிலளவு விரிந்தது. அந்த உற்சாகத்தில் தானும் பங்கு கொண்டாள் ஜானகி.

மகிழ் நிமிடங்கள் ஜெட்டாகப் பறக்க...

''ஐயோ. மணி நாலு! நாம இன்னும் சாப்பிடலை!'' மகனை அழைத்துக்கொண்டு மனைவியுடன் சாப்பிட உட்கார்ந்தார்.

எப்படியிருந்த தந்தை எப்படி மாறிவிட்டார்! வியப்பு நீங்காத ஹரி, ''அப்பா, கணக்கு பாடம் சொல்லித் தாங்கப்பா!'' என்று கேட்க, ''கொண்டா, கொண்டா!'' என்று அன்போடு அதில் புகுந்தார் அமுதன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தனர் இரு முதியவர். அவர்களின் கல்விக்கூடத்தில் நிறுவவிருந்த ஸ்தாபகரின் சிலை செய்ய அவரைப் பணித்தனர்.

'அட, எல்லாம் காலா காலத்தில் எப்படி சரியாகவே நடக்கிறது! இதற்கிடையில் வெம்பி மாய்ந்து பொழுதை வீணாக்க இருந்தேனே!'

சரியான சமயத்தில் சரியான சேதியை மூன்றே வார்த்தைகளில் தன் காதுக்கு அனுப்பிய அந்தத் தேவதையை - தன் மனைவியை - நன்றியுடன் பார்த்தார், 'இந்நேரம் நம் கையில்!' என்ற அந்த மூன்று வார்த்தைகளை நினைவு கூர்ந்தபடி.

Friday, December 11, 2009

தனிமை





மெல்லச் சுவரேறிக் குதித்த ரங்கன், பைப்பைப் பிடித்து மாடி ஜன்னலுக்கு ஏறினான். ஜன்னலைப் பற்றிக்கொண்டு கவனித்தான். பேச்சுக் குரல் கேட்டதும் திடுக்கிட்டான்.

என்ன இது? 'அந்தப் பொண்ணு மட்டும் தான் தனியா இருப்பா. கணவன் வெளிநாட்டில். மாமனார், மாமியார் ஊருக்குப் போயிருக்காங்க'ன்னு அடித்துச் சொல்லியிருந்தானே துரை? அப்புறம் எப்படி...? கூர்ந்து கேட்டான்.

''ஹாய் ப்ரீத்தி, அப்பவே வந்து காத்திட்டிருக்கேன். எங்கே போனே?''

''சமைச்சிட்டிருந்தேன்.''

''வாவ்! இந்த சிவப்பு சுடிதாரைப் பார்த்தா எனக்கு என்னென்னவோ தோணுது.''

''தோணட்டும். ஆனா இப்ப உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.''

''ஓஹோ? அப்படீன்னா ஏன் இந்த மாதிரி சூப்பர் டிரெஸ்ஸா போட்டு எனக்குக் காட்டறே?''

''பார்த்து ரசிக்கத்தான்!''

கேட்டுக் கொண்டிருந்த ரங்கன் மெதுவாகப் பின் வாங்கி பைப்பில் இறங்கினான், ஏமாற்றத்துடன்.

மாடியில்...
வெப்காம் ஆன் செய்து நெட்டில் கணவனிடம் பேசிக் கொண்டிருந்த ப்ரீத்தி, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள்.


('குமுதம்' 8-10-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

Friday, December 4, 2009

பாடம் ஒன்று




''என்னடா பண்ணினே? இருக்கிற வேலைகளுக்கிடையில இது வேற...'' எரிந்து விழுந்தாள் ரமா தன் பையன் மேல்.

அந்த ஸ்கூலில் அட்மிஷன் வாங்கறதுக்குள்ள அவள் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும். யார் யாரை எல்லாமோ பிடித்து எவ்வளவோ ஃ பீஸ் கட்டி... எல்லாம் எதற்காக? ஒரு தடவை அங்கே சேர்த்து விட்டுட்டா அப்புறம் ஒரு சின்னக் கவலை கூட படவேண்டியிருக்காது குழந்தையைப் பற்றி என்று அவள் அலுவலகத்தில் எல்லாரும் சொன்னதை நம்பித்தான் அப்படி செய்தாள். இப்ப என்னடான்னா சேர்ந்து ஒரு மாசம் ஆகலே, பேரன்ட்ஸ்கிட்டேயிருந்து லெட்டர் வாங்கிட்டு வர சொல்லியிருக்கிறார்கள்.

நவீன் மௌனமாக இருந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க ரமாவுக்கு எரிச்சல் தான் ஏற்பட்டது.

''என்னடா வால்தனம் பண்ணினே அங்கே?''

''ஒண்ணுமே பண்ணலேம்மா,'' அதற்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இவனை விசாரித்து பிரயோசனமில்லை என்று நினைத்தாள். அவளுக்குத் தெரியும். ரொம்ப சென்சிடிவான பயல். லேசா கோபிச்சாலே கண்ணீர் வந்துவிடும். விஷயத்துக்கு வந்தாள். ''என்னடா எழுதித் தரச் சொன்னாங்க?''

''இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டான்னு...''

''இனிமே அப்படி நடந்துக்குவியா?''

''மாட்டேம்மா! மாட்டவே மாட்டேன்.''

என்னவென்று தெரியாமலே எழுதிக் கொடுத்தாள். அந்த ஸ்கூலில் போய் விசாரிக்கலாம் என்றால் குறிப்பிட்ட நேரம், முன் அனுமதி என்று ஏகப்பட்ட ஃபார்மாலிடீஸ். யாருக்கு நேரம் இருக்கிறது இந்த அவசர யுகத்தில்? சாயந்திரம் ஆபீசில் ஒரு சென்ட் அஃப் பார்ட்டி. கலந்து கொள்ளவில்லை என்றால் மானேஜர் கோபப்படுவார். அவரைப் பகைக்க முடியாது. அடுத்த பிரமோஷன் லேட் ஆகும்...

மாதவனிடம் போய்ப் பாருங்க என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே கறாராகச் சொல்லியிருந்தான். ''இத பாரு, ஆபீஸ் விட்டு வந்தால் எனக்கு இன்ஷூரன்ஸ் கான்வாசுக்கே நேரம் சரியா இருக்கு. படிப்பு விஷயம் கம்ப்ளீட்டா உன்கிட்ட விட்டிருக்கேன்.''

ஃபீசை வாங்கிக் கொண்டு பொறுப்பை நம்மிடம் தள்ளும் அந்த ஸ்கூலை மனதில் வெறுத்தபடியே டி.வி.யை ஆன் செய்தாள். அவள் விரும்பிப் பார்க்கும் சீரியல் முடிந்து விட்டிருந்தது. ரிமோட்டைத் தூக்கி எறிந்தாள். பாட்டரி வெளியே வந்து விழுந்தது.
ஒரு நாவலைப் பிரித்து அதில் கவனத்தைக் கரைக்க முயன்றாள். முடிய வில்லை. தூக்கிப் போட்டாள்.

அப்போதுதான் உள்ளே நுழைந்த மாதவன் அவளிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.


லெட்டரை வாங்கிக் கொண்ட டீச்சர் அனுசூயா, அனுதாபமாகக் கேட்டாள், ''வீட்டில நல்ல திட்டு வாங்கினியா?''

''ஆமா டீச்சர்.'' நவீன் கண் கலங்கிற்று.

''இங்க என்னை வந்து பார்க்கணும்னு சொல்லியிருப்பாங்களே?''

''சொல்லலே.'' நடந்ததைச் சொன்னான்.

''பார்த்தியா, அவங்களுக்கு ஆயிரம் வேலை. நீ நல்ல பையனா நடந்து கொள்ளாட்டி எல்லாருக்கும் எத்தனை சிரமம் பார்த்தியா?''

''இனிமே புரிஞ்சிப்பேன் டீச்சர்.''

அவன் கண்ணைத் துடைத்தாள். ''போ, சமர்த்து!''


னால் அடுத்த வாரமே இன்னொரு கம்ப்ளைன்டுடன் வந்து நின்றான் நவீன். பல்லைக் கடித்தான் மாதவன். ''உன் செல்லப் புத்திரன் பண்ணியிருக்கிற காரியத்தைப் பார்த்தியா?'' இரைந்தான். ''எங்கேருந்துதான் இதெல்லாம் படிச்சுட்டு வர்றானோ?''

''என்ன பண்ணினானாம்?''

''பக்கத்துக்கு பெஞ்சு பையன்கிட்ட சண்டை போட்டிருக்கான். ஏதோ தகாத வார்த்தை எல்லாம் சொல்லியிருக்கானாம். உடனே வந்து பார்க்கணுமாம்.''

''கூப்புட்டுட்டாங்களா? ஆ ஊன்னா உடனே வரச் சொல்லிருவாங்களே! இவங்க என்னதான் நினைச்சுட்டிருக்காங்க? அங்கே சேர்த்திட்டாப் போதும், அப்படி ஒரு பையன் இருக்கிறதையே நீங்க மறந்துரலாம்னாங்களே... உங்க நண்பர் சந்துரு கூட அப்படித்தானே சொன்னார்? அவரைக் கூப்பிட்டு சொல்லுங்க. நாம கெட்டது போதும், இன்னும் எத்தனை பேர்கிட்ட சொல்லப் போறாரோ? அவங்களையாவது காப்பாத்துவோம்....'' படபடவென்று பொரிந்தாள்.

''சரி, ஸ்கூலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திரு. என்ன சொன்னாலும் கண்டுக்காதே. அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலாப் பார்த்து சேர்த்துற வேண்டியதுதான்.''

''ஆமா, இன்னொரு தடவை ஒரு தொகை அழணும். காசு என்ன கொட்டியா கிடக்கு?...'' என்று அவள் ஆரம்பிக்க, சங்கடமாகிவிட்டது மாதவனுக்கு. ரெண்டு நாள் முந்தித்தான் அவர்களுக்குள் பலத்த சண்டை. எதிலோ தொடங்கி எங்கோ போய் விட்டது. கன்னா பின்னாவென்று திட்டிவிட்டான்.

மறுபடி ஒரு சீன் இப்ப தேவையா என்று நினைத்தான். அவளை சமாதானப் படுத்தினான். தன் கோபத்தை மகனை நோக்கித் திருப்பினான்.

''குடும்ப மானத்தைக் கெடுத்திட்டியேடா! நாங்க போய் அங்கே கைகட்டி நிக்கணும். என்ன சொன்னான்னு கேக்கணும். 'ஐயய்யோ, அப்படியா சொன்னான்னு அவங்ககிட்டே சாரி கேக்கணும். அந்தப் பையனோட அப்பாம்மா கிட்ட, நம்ம ஸ்டேடசை விட்டு கெஞ்சணும். தலை குனிய வெச்சிட்டியேடா!''

அவன் நினைத்த மாதிரியே அவள் கொஞ்சம் வேகம் அடங்கி புறப்பட்டாள். ஆனால், ''நீங்களும் வாங்க, என்னால சமாளிக்க முடியாது அவங்களை,'' என்று சொல்லிவிட்டாள்

''சரி, அங்க அப்பாயின்ட்மென்ட் வாங்கணுமே...'' இழுத்தான்.

''அதெல்லாம் எச். எம்மையும் சேர்த்துப் பார்க்கிறதுக்குத் தானே? இப்ப முதல்ல டீச்சரைப் போய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துருவோம்.''


னுசூயா டீச்சர் கனிவாக எடுத்துரைத்தாள். ''முன்னாலேயே உங்களை ரொம்ப எதிர்பார்த்தேங்க. நல்ல படிக்கிற பையன். நல்ல நண்பர்கள் தான் இங்க அவனுக்கு. ஆனா தினம் தினம் ஏதாச்சும் பண்ணிடறான் கண்டிக்கிற மாதிரி. எங்கேர்ந்து இதெல்லாம் படிச்சுட்டு வர்றான்னு குழம்பற மாதிரி.... தெருப் பசங்க, பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாம் எப்படி?''

''ஐயோ வீட்டை விட்டு வெளியே விடறதே இல்லைங்க. எப்பவும் எங்க கூடத்தான் இருப்பான்.''

''இல்லைங்க, யாரோ எங்கோ தூண்டுகோலா இருக்கிறாங்க. சின்னப் பையன்களுக்கு இதெல்லாம் தானா வராது.''

''போன தடவை நீங்க இப்படிப் பண்ண மாட்டான்னு எழுதித் தரச் சொல்லியிருந்தீங்க. உடனே எழுதிக் கொடுத்தோம். அவனையும் வார்ன் பண்ணினோம்.''

''வார்ன் பண்றது பெரிய விஷயம் இல்லைங்க. அடிப்படையைக் கண்டு பிடிச்சு திருத்தணும் . அதுவும் அவனாக புரிஞ்சு அது நடக்கணும். அன்னிக்கே நீங்க வந்திருந்தா அவன் என்ன பண்ணினான்னு சொல்லியிருந்திருப்பேன் நீங்க கொஞ்சம் வாட்ச் பண்ணி இன்னும் மோசமாகிவிடாம பார்த்திருக்கலாம்.''

''டயமே இல்லைங்க.''

''என்னங்க, இப்படி சொல்றீங்க? உங்க குழந்தை, அவன் எதிர்காலம்! ஏன், அன்னிக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக மட்டும் என்னை வந்து பார்த்தீங்களே?''

''எஸ், எஸ்... சரி, என்னங்க பண்ணினான் அன்னிக்கு?''

''கையிலிருந்த ஜாமிட்ரி பாக்சை தூக்கி எறிஞ்சிட்டான். சிதறி விழுந்ததில ஒரு பொண்ணு காலில் காம்பஸ் குத்தி ரத்தமே வந்துட்டது. இவன் பதறிடக் கூடாதேன்னு இவன்கிட்ட அதை சொல்லலே. அந்தப் பொண்ணுக்கு மருந்து போட்டு... சமாதானப் படுத்தி...''
மாதவன் திரும்பி ரமாவைப் பார்த்தான். அவள் அடிக்கடி ரிமோட்டைத் தூக்கி எறிவது கண்ணில் நிழலாடிற்று...

அவன் குரல் நடுங்கியது. ''..அப்படியா?''

அந்தத் தகாத வார்த்தையைக் கேட்டதும்...

முந்தா நாள் சண்டையில் அவன் ரமாவைப் பார்த்து சொன்னது! வீட்டில் குழந்தையும் இருக்கிறான் என்பதைப் பற்றிக் கவலைப் படாமல்!

திரும்பினார்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டவர்களாக...

('தேவி' 25-11-2009 இதழில் வெளியான என் சிறுகதை.)

Tuesday, November 3, 2009

72877629 (சிறு கதை)










திப்புக்குரிய நிர்வாக இயக்குனர் அவர்களுக்கு,

இந்த மின்னஞ்சலை எழுதுவது மனித வள மேலாளர் மாற வர்மன்.

என் மீது நீங்கள் சுமத்தியிருக்கும், இதுவரையிலேயே முதல் முதலான புகாருக்கு விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு கொட்டைப்பாக்கு அளவில் அதை சொல்வதானால் சமீபத்திய ஆளெடுப்பில் நான் எங்கள் ஊர்ப் பையன் ஒருவனுக்கு சலுகை காட்டிவிட்டேன் என்பது.

எலுமிச்சம்பழம் உப்பில் ஊறியிருப்பதைப் போல விசுவாசத்தில் ஊறிப்போயிருக்கும் ஒருவனுக்கு இப்படி ஒரு குற்றச் சாட்டு அவன் மேல் சுமத்தப்படுகையில் எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதை ஒரு கணம் நீங்கள் எண்ணிப் பார்க்கக் கோருகிறேன்.

என் விளக்கத்தை ஒரே வரியில் அடக்குவதாக இருந்தால் திரு.கந்தன் என்ற அந்த நபரை எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்று நான் தெரிந்து கொண்டதே அவர் நம் கம்பெனியில் சேர்ந்த அன்று காலையில் தான்! உண்மை அப்படியிருக்கையில், முதற்கண் நான் எப்படி அவருக்கு உதவ எண்ணியிருக்க முடியும்? இனி அதற்கான சான்றுகளை நான் அளிக்கிறேன்.

1. விண்ணப்பிக்கிறவர்களின் அடிப்படைத் தகுதியை பரிசீலனை செய்து குறும் பட்டியல் தயாரித்து உதவியாளர்கள் என் பார்வைக்கு வைத்த பின்னரே நான் காட்சிக்கு வருகிறேன். அப்போதும் எனக்கு அவர்களின் கல்வி மற்றும் அனுபவத் தகுதி மட்டுமே பட்டியலில் அளிக்கப்படுகிறது. அந்த மின்னஞ்சலை இத்துடன் தங்களுக்கு முன்னனுப்பியுள்ளேன்.

அடுத்து அந்த நாற்பத்து மூன்று பேரில் அந்த வேலைக்காக குறும் பட்டியல் செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் நான் இந்த மாதம் இரண்டாம் தேதி தொலைபேசியில் பேட்டி கண்டதன் முழு உரையாடலும், கம்பெனி வழக்கம் அப்படி ஒன்றைக் கோரவில்லை எனினும், என்னுடைய சுய கண்ணியத்தின் உந்துதலின் பேரில் ஒரு வார்த்தை விடாமல் ஒலி நாடாவில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அதைத் தாங்கள் தங்கள் ஒய்வு நேரத்தின் எந்தக் கணத்திலும் கேட்டுப் பார்க்கலாம். அப்படிக் கேட்டுப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் தாங்கள் கீழ்க்கண்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

2. அந்தப் பேட்டிகளில் மிக நீளமானதும் அவற்றின் சராசரி நேரமான இருபத்தொன்று நிமிடங்களை விட ஏழு நிமிடம் அதிகமானதும் ஆன ஒரே பேட்டி திரு.கந்தனுடனானது தான்.

3. பொதுவான கேள்விகளைத் தவிர நான் அனைவரிடமும் அவர்களின் புத்தி சாதுரிய விகுதியை தீர்மானிக்கக் கேட்கும் கேள்விகளில் மிகக் கடினமான கேள்வி கேட்கப்பட்டவரும் அவருடைய துரதிர்ஷ்டவசமாக அல்லது இப்போது என்னுடைய அதிர்ஷ்டவசமாக திரு கந்தன் தான். மிகக் கடினமான அந்தக் கேள்வியின் விடை 72877629 என்கிற எட்டிலக்க எண் ஆகும்.

தாங்களே சொல்லுங்கள். அந்தச் சரியான பதிலை அந்தத் தொலைபேசியில் அடுத்த சில வினாடிகளிலேயே சொல்லுவதற்கு முடிகிற ஒரு விண்ணப்பதாரரின் புத்தி சாதுரிய விகுதியை நான் 180 என்று அளவிட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? அப்படி ஒரு பிரகாசமான நபர் அடையாளம் கண்டு கொள்ளப்படுகையில், நிறுவனத்தின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு 24x7 மணி நேரமும் உழல்பவனான ஒரு பணியாளனால் அவனை எப்படிப் புறக்கணிக்க முடியும்? மிக்க மகிழ்வுடன் மட்டுமே அல்லவா அவன் அந்த நபருக்கு நியமன உத்தரவை வழங்க முடியும்?

ஆகவே தாங்கள் என் மீது கொண்டுள்ள சந்தேகம் தவறானது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் என் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முழு விசுவாசத்துடன் என் பணியைத் தொடருவேன் என்றும் இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டு எதுவும் எழாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

நம்பிக்கையுடன்,

மாற வர்மன்.


2


ன்புள்ள மாறவர்மன்,

தங்கள் விளக்கத்தை சுருக்கமாக நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறேன் (அதற்கான காரணமும் இந்த மின்னஞ்சலிலேயே உங்களுக்கு விளங்கும் என்று நான் நம்புகிறேன்). எனினும், என்றும் நிறுவனத்துக்கு எந்த ஊறும் நேராத விதத்தில் பணியாற்றுவேன் என்ற தங்கள் கூற்றின் மீது மேலும் ஒரே ஒரு முறை நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளிக்க நான் உத்தேசித்திருப்பதால் உங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,

சத்தியமூர்த்தி.

பி.கு.: இத்துடன் நீங்கள் எனக்கு விளக்க அஞ்சல் எழுதும்போது அதனுடன் தவறுதலாக முன்னனுப்பிய, இந்த மாதம் ஒன்றாம் தேதியிட்ட, உரைப் பகுதியில் 72877629 என்ற எண் மட்டுமே கொண்டிருந்த, திரு.கந்தன் என்ற அன்பருக்கு நீங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலை உங்களுக்கு திருப்பியுள்ளேன்.

<><><>

--கே. பி. ஜனார்த்தனன்
(சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை)