Tuesday, November 3, 2026

22 வருடங்களாக...


ஹோட்டல் பார்ட்டியில் மனம் லயிக்காத ரம்யா கிருஷ்ணன் பால்கனியில் எட்டிப் பார்க்கிறார் . தெருவோரமாக காதில் ஒரு கையும் ஆர்மோனியத்தில் ஒரு கையுமாக பாடிக்கொண்டிருக்கும் அவன் கண்ணில் விழ, கைகாட்டி உள்ளே வர சொல்லுகிறார். நன்றியும் மகிழ்வும் முகத்திலாட, ஹாலில் நுழையும் அவன் பாட ஆரம்பிக்கிறான்.
"தனிமையில் உள்ளம் தவிக்கையில் அதை என் குரலாக்குவேன்!
மனவலி எல்லை தாண்டும்போது அந்தக் குரலெடுத்து பாடிடுவேன்!"
அடுத்த மூன்று நிமிடத்தில் அவர்கள் எல்லாரையும் தன் பாட்டுக்கு ஆட வைக்கிறான். அவள் நெஞ்சுக்குள் புகுந்து தேடவைக்கிறான்... (படம்: Chahat பாடல்: 'Dil ki awaz...")
அந்த எளிமை.. அந்த innocence.. அந்தத் துள்ளல்! உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது . அந்த நடிப்பில் எல்லார் இதயத்திலும் சம்மணம் இட்டு உட்கார்ந்து விடுகிறார் அவர்! கிங் கான் என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை.
ஷாரூக் கான்... Nov. 2. பிறந்த நாள்!
தேவ் ஆனந்த், ராஜ்கபூர், திலீப்குமாருக்குப் பிறகு ரசிகர்களின் மன ராஜ்யத்தைப் பிடித்துக்கொண்ட பெரிய நட்சத்திரம்!
சேல்ஸ்மேன் ஆகத் தொடங்கியவரின் படங்களின் சேல்ஸ் வானைத் தொடுகிறது.
முறையாக நடிப்பைப் பயின்று கொண்டவர் முதலில் தொடங்கியது டிவி சீரியல்களில். திரையுலகில் நுழையும் போதே சிறந்த புதுமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டை பாக்கெட்டில் செருகிக் கொண்டவர் ('Deewana'). அடுத்த வருடமே சிறந்த நடிகராக 'Baazigar' படத்துக்காக, அதே வருடத்தில் சிறந்த வில்லனுக்காக நாமினேஷன் 'Darr' படத்துக்காக என்று அசத்தியவர்.
அப்புறம் DDLJ ('Dilwale Dulhaniya Le Jayenge') வந்ததும் ஷாரூக் நம்ம வீட்டு பையன் ஆனதும் ஊருக்குத் தெரியும். Tom Cruise நடிக்கவிருந்த படம் அது. என்னவொரு வெற்றி! வருடங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தன, படம் தியேட்டரை விட்டு மாறவில்லை. 22 வருடங்களாக... ஆகப் பெரிய ரிகார்ட்!
Kuch Kuch Hota Hai... Devdas... Chak De! India...சொல்லணுமா ஒவ்வொன்றாக?
உலகின் 50 பிரபல மனிதர்களின் ஒருவராக Newsweek தேர்ந்தெடுத்தது. திரையில் முன்னால் இருக்கும் இவர் ஏராளமான நற்பணிக் காரியங்களுக்குப் பின்னால் இருக்கிறார்.
அங்கே ஒரு படத்தில் ('Shakthi') கழுத்தைக் காயப்படுத்திக் கொண்டது, இங்கே ஒரு படத்தில் ('Darr')விலா எலும்பை உடைத்துக் கொண்டது என்று ஒன்றி விடும் நடிப்புக்கான விலையை ஒன்றுவிடாமல் கொடுத்தவர்.
ரொம்பவே மெனக்கெட்டது ‘My Name Is Khan’ படத்துக்குத்தான்! 'Titanic' ஜேம்ஸ் காமெரான் பாராட்டிய நடிப்பு அது. Asperger’s Syndrome இல் பாதித்தவரின் பாத்திரம். காரக்டராகவே வாழ்ந்து, விவரம் படித்துக் குவித்து, பாதித்தவர்களுடன் பழகி..
திலீப் குமார் 1957இல் Filmfare Best Actor Award வாங்கிய அதே தேவதாஸ் பாத்திரத்துக்கு 2003இல் இவர் வாங்கினார். அவர்போல் மிகவும் அதிகமுறை அந்த அவார்டை வாங்கியது இவரென்பதும் ‘ஷா’தனை தான். இதுவரை 8. (25 நாமினேஷன்)
மறுத்ததற்காக வருந்திய படம் '3 Idiots'. What a miss!
"என்னை முதலிடத்தில் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்? கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பதுதான்!"
அமிதாப்! கமல்! நஸிருதீன் ஷா! நானா படேகர்! என்று வியக்கிறார் இவர். "நான் எவ்வளவோ தூரம் போகணும்!" என்னவொரு தன்னடக்கம்!


Monday, November 2, 2026

30 வயதுக்கு மேல் ...



ஏகாந்தமாக குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கிறாள் அந்த லேடி. குதிரை வழியில் மக்கர் பண்ணுகிறது. ஆளற்ற வனாந்திர பகுதி! என்ன செய்வது? விழிக்கிறாள். அந்த நேரம் அங்கே வரும் இளம் ஷெரீஃப் அதன் காலைப் பார்த்து, அடிபட்ட இந்த குதிரையால் இனி நடக்க முடியாது என்று தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு செல்வதாக சொல்கிறார்.
‘நல்ல வேளை, நீங்கள் தற்செயலாக இங்கே வந்தீர்கள்!’ என்கிறாள் அவள் நன்றியுடன். ‘நான் தற்செயலாக வரவில்லை,’ புன்னகைக்கிறார், ‘தினசரி காலையில் நீங்கள் இப்படி செல்வீர்கள் என்று தெரியும்.’ புரிந்து கொண்டு வெட்கம் அடைகிறாள்.
‘Gunfight at the O K Corral’ படத்தில் வரும் இனிய காட்சி. அந்த நடிகர்…
Burt Lancaster. இன்று பிறந்த நாள்…
ஐரிஷ்காரர்களை சிக்கனத்துக்கு பேர் போனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஐரிஷ் வம்சாவழி நடிகர் தாராளமாக நடிப்பை வாரி வழங்கினார் பல வித்தியாசமான ரோல்களில்.
உதட்டின் கடைவாயில் ஒரு மென் சிரிப்பு ஒளிர்ந்து கொண்டே இருக்கும். தீர்க்கமான உச்சரிப்பும் சரி, அந்த இன்னொசன்ட் சிரிப்பும் சரி ஏகப்பட்ட ரசிகர்களை திரட்டி இருந்தது.
30 வயதுக்கு மேல் திரைக்கு வந்தாலும் முதல் படமே பராசக்தி அவருக்கு. ஆமா, ‘The Killers’ அவரை உயரத்துக்கு ஏற்றி விட்டது. தன் வீரத்தை சர்க்கஸில் காட்டிவிட்டு தீரத்தை ரெண்டாம் உலக யுத்தத்தில் காட்டிவிட்டு திறமையை நடிப்பில் காட்ட வந்தவர். சர்க்கஸ் அனுபவத்தை பிற்பாடு ‘The Trapeze’ இல் சக்சஸ்ஃபுலாக பிரயோஜனப் படுத்தினார்.
‘Rainmaker’ ஒரு அற்புதமான படம். வறட்சி வாட்டும் கிராமத்தில் வாடும் தன் ஆடு மாடுகளுக்காக வருந்துகிறாள் லிஸி. வயதாகியும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருந்துகிறார்கள் அவள் பெற்றோர். அவள் காதலிக்கும் அந்த ஊர் ஷெரீஃப் உள்பட யாருமே அவளை கண்டுகொள்ளவில்லை. வந்து சேருகிறான் அந்த ஊருக்கு ஒரு செப்புடு வித்தைக்காரன். மழை வரவழைக்கிறேன் பேர்வழி என்று. அவள் அப்பாவும் அவனை நம்பி பணம் கட்டுகிறார். அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்புகிறார் ஷெரீஃப். ஆனால் அவன்தான் லிஸியைக் கண்டு கொள்கிறான். உற்சாகமாக அவளிடம் பழகுகிறான். தன்னை ஒருவன் விரும்பும்போது ஒரு பெண்ணின் மனம் எத்தனை அழகாக பூக்கிறது! கடைசியில் மழையும் பெய்து விடுகிறது! வித்தைக்காரனாக நடிப்பில் வித்தை காட்டியிருப்பார்.
‘பென்ஹர்’ ஹீரோவாக நடித்திருக்க வேண்டியவர். 10 லட்சம் டாலருடன்வந்த சான்ஸை உதறி விட்டார். ஆனால் இவர் முயற்சித்தும் கிடைக்கவில்லை ‘Godfather’ ரோல்.
அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டியூட் ஐம்பது அமோக நட்சத்திரங்களில் முப்பத்தி ஒன்பதாவது என்றது. எம்பயர் பத்திரிகையும் என்டர்டெய்ன்மென்ட் வீக்லியும் போட்டி போட்டுக்கொண்டு இவரை தங்கள் டாப் லிஸ்ட்களில் ஏற்றிக்கொண்டனர்.
மசாலா படங்களில் நடித்து மௌஸை ஏற்படுத்திக்கொண்டு அதைவைத்து தரமான பாத்திரங்களை நடிக்கத் துடித்தவர் இந்த கென்னடியின் நண்பர். நாலு அகாடமி நாமினேஷனில் ‘Elmer Gantry’ ஆஸ்கார் அவார்டு வாங்கி தந்தது.
டீன் மார்டினுடன் நடித்து அமோக வசூலைக் குவித்த படம் அந்த ‘ஏர்போர்ட்’ (1970). ஆனால் அதெல்லாம் ஒரு படமா என்கிறார்.
கிளார்க் கேபிளுடன் நடித்த ‘Run Silent, Run Deep’ படமாகட்டும்... ஆட்ரி ஹெபர்னுடன் நடித்த ‘The Unforgiven’ ஆகட்டும், தன் முத்திரை தான் பதித்துவிடுவார் அழகாக. பொதுவாக பிரபல நடிகர் பெயரைச் சொன்னதும் அவருடன் நடித்த பிரபல ஹீரோயின் நினைவுக்கு வருவார். ஆனால் இவர் பெயரைச் சொன்னதும் பலர் நினைவுக்கு வருவது Kirk Douglas! ஏழு படங்களில் இவருடன் நடித்த மற்றொரு பிரபல நடிகர். போட்டி போட்டுக்கொண்டு கலக்குவார்கள்.
H G Wells இன் பிரபல நாவல். ‘The Island of Dr. Moreau’ படத்தில் விலங்குகளை அரை மனிதர்களாக மற்றும் விசித்திரமான டாக்டரின் பாத்திரத்தில் இவர். இதே படத்தின் ரீமேக்கில் மார்லன் பிராண்டோ செய்தார் அதை.
‘List of Adrian Messenger’ படத்தில் 12 பிரபல நடிகர்களுடன் இவரும் கேமியோவாக வந்தார். முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
அப்பாவுக்கு மகன் திரைக்கதை எழுதும் சந்தோஷம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? இவருக்கு கிடைத்தது. படம் ‘The Bad News Bears’ மகன் Bill Lancaster.
Quotes? ரொம்ப அழகாக வாழ்க்கையை சொல்லிவிட்டார், ‘வாழ்க்கை என்பது நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்களோ அதை உங்கள் அறிவின் வட்டத்துக்குள் வாழ வேண்டியது’ என்று.
'கொஞ்ச நாளில் நாம் எல்லோரும் மறக்கப்பட்டு விடுவோம். ஆனால் நம் சிறந்த படங்கள் நிற்கும். அந்த நினைவுச் சின்னங்கள்தான் வேண்டியது.'

Friday, October 30, 2026

இதற்காகத்தானா...


இதற்காகத்தானா...

(அன்புடன் ஒரு நிமிடம் - 5)

'அமுதம்' மே. 2012 இதழில்...



நண்பன் தியாகு வீட்டில் இருந்தான் வினோத். ஒரே ப்ராஜெக்டில் தற்போது இருவரும்.   அதைப்பற்றித்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளே தியாகுவின் மனைவி சித்ரா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். மகன் ரவீன் விளையாடிக் கொண்டு…


“...எப்படியும் அந்த டேட்டாவை நாளைக்குள்ளே வாங்கிடணும்…” சொல்லிக் கொண்டிருந்தான் தியாகு. பலத்த சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ரவீன் தான் தன் கையிலிருந்த கார் பொம்மையை தூக்கி எறிந்தது. எழுந்து சென்ற தியாகு அவனை ஒரு அதட்டல் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தான். “இவன் இப்படித்தான் திடீர்னு எதையாவது தூக்கி எறிவான்.”


பேச்சு தொடர்ந்தது. கொஞ்ச நேரம் பேசுவதற்குள் ரவீன் அழ ஆரம்பித்தான். காலில் எதையோ போட்டுவிட்டான்போல. ஓ’வென்று அழுகை. எழுந்து சென்ற தியாகு அவனை லேசாய் கடிந்து விட்டு எடுத்து வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். விளையாட ஒரு புது பொம்மையையும் கொடுத்தான். 


பார்த்துக் கொண்டிருந்த வினோத், “பாருடா அவன் ஏன் அழறான்னா…” என்று தொடங்கவும் அவன் செல் அலறியது. “என்னங்க, தண்ணீர் வரலை குழாயில்..” என்றவள் யமுனா, அவன் மனைவி. “வந்து பார்க்கிறேன்,” என்றான்.


அவர்கள் ப்ராஜெக்டை பற்றி பேச ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரவீன் இவன் சட்டையைப் பிடித்து பின்னாலிருந்து இழுக்க, இவனால் தொடர்ந்து பேச முடியாது போயிற்று. கோபம் தலைக்கு மேல் ஏறிற்று. “சித்ரா, வந்து இவனை கொஞ்சம் உள்ளே எடுத்துப் போயேன்,” என்று குரல் கொடுத்தான், “என்னமோ தெரியலே, ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான்.”


வினோத் சொன்னான்: “உனக்கு ஒண்ணு தெரியுமா? ரவீன் ஏன் இப்படி பண்ணறான்னு யோசிச்சியா? எல்லாமே காரணத்தோடுதான்! உன் கவனத்தை தன்பால் ஈர்க்கத்தான் அப்படியெல்லாம் செய்யறான். ஏன்னா நீ அவனை கவனிக்காம என்கிட்ட பேசிட்டிருக்கே. அவன் அம்மா காப்பி போட போயிட்டா. அதான் இப்படி எல்லாம் பண்ணி உங்களை அவன்கிட்ட இழுக்கிறான்!” என்று அதை விளக்கினதும் கேட்டுக் கொண்டிருந்த தம்பதிகள் முகத்தில் பிரகாசம். “அட சரியாச் சொல்லிட்டே!” என்ற தியாகு மனைவியிடம், “காபி எல்லாம் அப்புறம் போடலாம், நாங்க பேசி முடிக்கிறவரை ரவீனை நீ பார்த்துக்க!” என்று அவளிடம் பையனை ஒப்படைத்தான்.


நண்பர்கள் ப்ராஜெக்ட் விஷயம் தொடரலாயினர். அப்போது மறுபடி செல்லில் யமுனா அழைத்தாள். “என்னங்க அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் ஆயுத பூஜை கொண்டாடறதை பற்றி பேச வந்திருக்கிறாங்க. உடனே வாங்க.”


“ரைட், அப்புறம் பேசலாம்டா!” புறப்பட்டான் வினோத்.


“பாவம் முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணணும்னு வந்து உட்கார்ந்தார். பாதியிலே போகும்படி ஆகிவிட்டதே?” என்று வருந்தினாள் உள்ளிருந்து வந்த சித்ரா. “என்ன பிரச்சனையாம்?”


சொன்னான். ஒரு நிமிடம் யோசித்தாள் சித்ரா. “இதை அவங்களே சமாளிச்சிருக்கலாமே!”

அவள் தோளில் சாய்ந்திருந்த ரவீனை பார்த்தான் தியாகு. “எல்லாமே காரணத்தோடுதான்!” என்றான்.


><><><><

Wednesday, October 28, 2026

நேர்த்தியான சிந்தனையாளர்...


‘Prevention is better than cure.’
இப்போது நாம் உணர்ந்து கொண்டாடும் இந்த வாசகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னவர் அவரே.
Desiderius Erasmus… நெதர்லேண்டில் உதித்த நேர்த்தியான சிந்தனையாளர். இன்று பிறந்த நாள்!
சொன்ன எல்லாமுமே ஃப்ரேம் போட்டு மாட்ட வேண்டியவை. என்றாலும் சில மட்டும் இங்கே...
‘மனித மனம் உண்மையை விட பொய்யினால் மிகவும் கவரப்படுகிற மாதிரி அமைந்துள்ளது.’
‘காலம் மனிதர்களின் துக்கத்தை கரைத்து விடுகிறது.’
‘அதீத துணிச்சல் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும்.’
‘எழுதும் ஆசை எழுத எழுத வளரும்.’
‘நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே ஆக விரும்புவதில் தான் மகிழ்ச்சியின் விதை இருக்கிறது.’
‘மிகச் சிறந்த புத்தகங்கள் முதலில் படித்து விடு. எவ்வளவு விஷயங்கள் தெரியும் உனக்கு என்பது முக்கியமல்ல. அந்த விஷயங்களின் தரமே முக்கியம்.’
‘ஒளியைச் சிந்துங்கள். இருட்டு தானே மறைந்துவிடும்.’
‘சிக்கனம் ஒரு வசீகர வருமானம்.’
‘ஒரு ஆணியை இன்னொரு ஆணியால் பிடுங்குவது போல ஒரு பழக்கத்தை இன்னொரு பழக்கத்தை வைத்து மாற்ற முடியும்.’
‘எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால் புத்தகங்கள் வாங்குகிறேன். மீதம்இருந்தால் உணவுக்கும் உடைகளுக்கும்.’
‘கழுகுகள் ஈக்களைப் பிடிப்பதில்லை.’
‘உங்கள் நூலகம் உங்கள் சொர்க்கம்.’
‘எடுத்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கடவுள் இருக்கிறார்.’
‘பெண்கள்… அவர்களோடு வாழ்வது கஷ்டம், அவர்கள் இல்லாமல் வாழ்வதும் கஷ்டம்.’
‘எதுவும் தெரியாமல் இருப்பதே ஏற்றவும் சந்தோஷமான வாழ்க்கை.’
‘ஆளுக்கொரு பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறோம் திரை கீழே விழும் வரை, என்பதைத் தவிர வாழ்க்கை வேறென்ன?’

Sunday, October 25, 2026

அந்த ஒரு காட்சி...


அந்த ஒரு காட்சி! ‘DOROTHY’

The subtle art of film making....

வேறு வழி தெரியாத சுப்பு கார்த்தியின் அம்மாவை தினசரி அவள் செல்லும் வழியில் யாருக்கும் தெரியாமல் சந்தித்து, ‘கார்த்தியிடம் என்னை அழைத்துப் போகச் சொல்லு,’ என்று சொல்லுகிற காட்சி.
சுப்புவை பார்த்ததும் அவள் அடையப் போகும் அதிர்ச்சி. என்ன சொல்வாள்? அவனுக்குத் தெரியாது. எப்படியாவது விஷயத்தை சொல்லிவிட வேண்டும் கார்த்திக்கு. இது சுப்புவின் நிலை.
அவள்? சுப்புவை திடீரென்று அந்த நிலையில் பார்க்கிறாள். அந்த அதிர்ச்சியை அவள் தாங்கிக்கொள்ள வேண்டும். மீறிக்கொண்டு அவளிடமிருந்து அந்த அன்பு வெளிப்பட வேண்டும்.அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். கார்த்தியை வர சொல்ல வழி சொல்லணும்.
இத்தனையும் பத்தே ஷாட்களில், சுமார் ஒரே நிமிடத்தில் நேர்த்தியாக அமைத்திருப்பார் கார்த்திக்.
ஷாட் 1. (Long shot) ஊருக்கு வெளியே. பாலத்துக்கும் புல்வெளிக்குமிடையே ஒற்றைப்பாதையை மையப்படுத்தி ஒரு composition. கார்த்தியின் அம்மா கையில் தன் பைகளுடன் சுவாதீனமாக நடந்து வருகிறாள். பாலத்தின் குறுகிய இருண்ட அடியில் திரும்பும் பொழுது சட்டென்று நிற்கிறாள். எதைப்பார்த்து? ஏன்? கேள்வி எழுகிறது.
2. உள்ளே நிற்கும் உருவத்தை யார் அது என்று பார்க்க, உள்ளே அரை இருட்டில் உருவம் மட்டும் தெரிகிறது நமக்கு. புரிகிறது சுப்பு என்று. இருவருக்கும் நடுவே பரிமாறவிருக்கும் உணர்வலைகளின் ஆரவாரமாக பலத்த சத்தத்துடன் மேலே ரயில் பாலத்தை கடக்கிறது
3 (medium long shot) மெல்ல அந்த உருவம் நடந்து சற்று முன்னால் வருகிறது. தீனமாக “அம்மா!” என்பதைப் பார்க்கிறாள். பின்னணியில் ரயில் சத்தம் தேய்கிறது.
4. சுப்புவின் பார்வையில் ஷாட். சுப்புவை அவள் அடையாளம் கண்டு கொள்கிறாள். ‘ஐயோ சுப்பு!’ என்று அலறுகிறாள்.
Time lapse தெரியாதபடி சட்டென்று அடுத்த ஷாட்டுக்கு. Low key lighting. இதுவரை எந்த இசையும் கிடையாது.
5. Medium close up இல் சுப்புவின் முகம். அம்மாவின் கை மட்டும் அவனை ஆதுரத்துடன் தடவுவது தெரிகிறது. அழுதபடி அவள் குரல் மட்டும் overlap: ‘நேரா நீ அம்மாகிட்ட வந்திருந்தா ஒன்னை இந்த மாரி சீரழிய விட்டிருப்பனா?’ இப்ப அந்த உணர்வுக்கான பின்னணி இசை மெதுவே ஆரம்பிக்கிறது.
6. Medium shot இல் இருவரும். ‘என் வீட்டாளுங்க என்னை நிம்மதியா இருக்க விடமாட்டாங்க,’ என்று அழும் சுப்பு தயங்கி, ‘கார்த்திக்கிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு போக சொல்றியாம்மா?’ என்கிறான். விம்மியபடி அவன் தலையை கோதுகிறாள். பின்னணி இசை தொடர்கிறது.
7,8. (combined shots in profile) சுப்பு close up. ‘அவன் ஒருத்தன்தான் அந்த நரகத்திலிருந்து என்னை காப்பாத்துவான்,’ என்கிறான். அவள் குரல்: ‘கார்த்தி ஒருக்க போன் பண்ணுவான்..’ அவள் close up. ‘நாஞ்சொல்றேன், அவன் வருவான் உன்னைக் கூப்பிட, இன்னா சாப்பிடு..’ஆறுதல் சொல்கிறாள். ஒரு வடையை ஊட்டுகிறாள். சுப்பு close up. அவள் ஊட்ட, சாப்பிடுகிறான். மெல்ல இசை மேலோங்குகிறது.
9. (Mid shot) விம்மியபடியே அவள் மடி சாய்கிறான். அவளும் விம்மலுடன்… இன்னொரு துண்டு ஊட்டுகிறாள். இசை இன்னும் மேலெழுந்து உச்சம் வந்து அந்த உணர்வை பேசுகிறது.
10. (Long shot) அழுதுகொண்டே அவன் தலை மீது தலை கவிழ்கிறாள் அம்மா. இருவரின் விம்மல்கள் தேய, இசை சட்டென்று நின்று காட்சியின் கனம் மேலோங்கச் செய்கிறது.
வேறு எதுவும் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. அழுகைகளில் உணர்வுகளை பங்கிட்டு கொள்கிறார்கள் உணவுடன் நம்பிக்கையும் ஊட்டுகிறாள்.
அதிர்ச்சி, அழுகை, கடைந்தெடுத்த சோகம் ஆனால் மிகை படாமல்!
குறைவான டயலாக்கும் நிறைவான நடிப்பும் நறுக்கான காட்சியமைப்பும் ஓவிய ஒளிப்பதிவும் அந்த உணர்வை வாசிக்கும் அளவான பின்னணி இசையும் சேர்ந்து எந்த மாயாஜாலமும் செய்ய முடியும் என்பதற்கு ஒரு காட்சி.

Saturday, October 24, 2026

'DOROTHY' ஒரு பார்வை...


'DOROTHY' ஒரு பார்வை... 


மெல்லத் தோளில் கைபோட்டு, கை கோர்த்து நமக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அந்தப் பூவிதழ் புதிதான உலகம் இத்தனை மென்மையானதா? மனதை இத்தனை வருடுவதா?  உரக்க ஏதும் சொல்லாமலேயே அதில் சற்று உறைய வைக்கிறார்கள்… 

(முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று நினைத்தால் ஒரு ஆரம்ப புள்ளியையும்..)

என்ன ஒரு நுட்பமான பார்வை! என்ன ஒரு கண்ணியமான பிரசன்டேஷன்! அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை


ஆரம்பத்தில் துண்டு துண்டு சீன்களாக கோர்த்து (ஏன்னா கதையே வேறு!)

போகப்போக காட்சிகளின் நீளத்தை அதிகரித்துக் கொண்டே போய் மையப் புள்ளியை நோக்கி நகருவது செமத்தி. மெயின் திருப்பத்தை முடிந்தவரை ஊகிக்க முடியாதபடி கொண்டுபோய் மொட்டவிழ்க்கிறார்கள் என்றால் முதலிலேயே flash forward காட்சி ஒன்றைச் செருகி அதை இறுதிக் காட்சியாக நினைக்க வைத்து, அடுத்த திருப்பத்தை அசத்தலாக்கி இருக்கிறார்கள். முடிவில் இனி என்ன, எப்படி என்ற ஆர்வம் இயல்பாக தொற்றிக் கொள்ள அதற்கு ஒரு முடிவை கொடுத்து… அப்புறம் அதுக்கு மேலே கிளைமாக்ஸைப் படர விட்டு… விளையாடியிருக்கிறார்கள் திரைக்கதையில்! distinction! 


ஃப்ளாஷ் பேக்குக்கு ஒரு கலரும்,  பிளாஷ் ஃபார்வர்ட்க்கு ஒரு கலரும் என்று தெளிவாக வைத்திருக்கிறார்களோ, குழம்பாமல் இருக்கிறோமோ? ஆனாலும் தாடிகளுக்குள் முகங்களை அடையாளம் கண்டு கதையை ஃபாலோ பண்றதுக்குள்ளே…

இன்னும் நிறைய வசனங்களை ரசித்திருக்கலாம், கொஞ்சம் தெளிவாக பேசி இருந்தால்!

(Slang அல்லவா?) கார்த்தி, ஆங்காரம் வேணும் என்பதும் அங்கீகாரம் என்று வடிவேலு திருத்துவதும் இயல்பாக…


அந்தக் கிணறு காட்சியில்  ஒளிப்பதிவாளருக்கு நல்ல வேட்டை.  சுப்பு கண்ணாடியில் தன் முகத்தையும் கார்த்தியையும் பார்ப்பதும் நல்ல ஃபோகஸ். அந்தத் தற்கொலைக் காட்சியின் அதிர்ச்சி, பரபரப்பு அனைத்தையும் கச்சிதமாக ஒரே ஷாட்டில் கொண்டு வந்து விடுகிறது காமிரா, இண்டு இடுக்குகளில் புகுந்தோடி. 

அந்த லா….ங் ஷாட்டில் திரையின் கீழ் ஓரத்தில் கார்த்தியும் வடிவேலும் பேசிக் கொண்டிருப்பது ஒற்றைத் தாளில் கீழே இரு முற்றுப் புள்ளிகளாக… எத்தனை அழகு! 


சிவாஜி மார்க் பாத்திரத்தை தூக்கி இரண்டு இளம் நடிகர்களிடம் நம்பிக்கை வைத்துக்  கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.  துளியும் ஏமாற்றாமல் பிற்பாதியில் பிழிந்து எடுக்கிறார்கள் உணர்வுகளை.


ஜாலியாய் சாப்பிடும் சகோதரர்கள் சாப்பாட்டை முடிப்பதற்குள் சண்டை போட்டு அரிவாளைத்  தூக்க நிற்க, அலட்டாமல் அடகு நகை மீட்க வரும் அபலையை வளைக்கும் அப்பன்… அவரும் அந்த திகில் விசிலும்! கதையின் பின்புலத்துக்கு ஏற்ற மாதிரி பாத்திரப்படைப்பு.


அது எப்படித்தான் கண்டு பிடிப்பாரோ எந்தக் காட்சிக்கு எந்த ப்ரேமில் தொடங்கி எங்கே நிறுத்தணும் இசையை என்று? இதமான காட்சிகளில் இறகால் வருடுகிற மாதிரியும் மிதமான காட்சிகளில் சரியான உணர்வு பீறிடுகிற மாதிரியும் மில்லி கிராம் சுத்தமாக, கச்சிதமாக கொடுத்திருக்கிறார். கற்றுக் கொள்ளலாம். பாத்திரங்களின் உணர்வுகளை இயக்குனர் சொல்லாமல் விடும் இடங்களில் எல்லாம் அவர் சொல்லி விடுகிறார். பின்னே கிளைமாக்ஸும் முத்து மணிச்சரம் பாடலும் நகமும் சதையுமாக… 


இந்தப் படத்திலே அது நல்லாருக்கு இது நல்லாருக்குன்னு சொல்றது கஷ்டமாயிருக்கு. ஏன்னா கிட்டத்தட்ட எல்லாமே நல்லாருக்கு. 


சும்மா இங்கே ஒரு ரவுடி அங்கே ஒரு ரவுடி மாதிரியை நிறுத்தி கோழிச்சண்டை காட்டிக் கொண்டிருக்கும் நம்ம சினிமாவுக்கு  அவ்வப்போதாவது தேவையான மறுபக்கம் தான்.. 

ஒரே மாதிரி கதையை 9999 தடவை படங்களில் பார்த்துவிட்டோம். அப்படி இல்லாத இது பத்தாயிரத்தில் ஒன்று


நம்மைச் சுற்றி சில  அழகிய  மென்மையான உலகங்கள் இருக்கிறது. நாம் அவற்றை கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை, கண்டு கொள்ளாமல் விட்டாலும் பரவாயில்லை, அறிந்துகொள்ளவாவது  வேண்டாமா? காலத்தின் எத்தனை அவசியம் அது! கார்த்திக் அதைத்தான் செய்திருக்கிறார். கும்பிடுகிறேன் அவரை. 


How to name it? Except by the word ‘Great’?


Wednesday, October 21, 2026

சொந்த அக்காவே...


நாலைந்து படங்களில் தலைகாட்டியிருந்தார் அந்த நடிகை. ஒரு பார்ட்டியில் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெரிய புரட்யூஸர் (‘Gone With The Wind’ எடுத்தவர்) தான் படமாக எடுக்கவிருக்கும் பிரபல நாவல் ஹீரோயினாக நடிக்க டெஸ்டுக்கு அழைத்ததும் உச்சி குளிர்ந்து போனார் உச்ச நட்சத்திரமாகும் அந்த வாய்ப்பில். ஆனால் அதே அழைப்பு பல பிரபல நடிகைகளுக்கும் சென்றிருந்தது. அடுத்து ஆறு மாசம் நடந்த பலத்த போட்டிக்கு இடையே அதைக் கைப்பற்றினார். உச்ச நட்சத்திரமாகவும் ஆனார்.
Joan Fontaine… 1940 களின் பிரபல ஹாலிவுட் நடிகை. இன்று பிறந்த நாள்!
மேலே சொன்ன ‘Rebecca’ அறிவீர்கள். டெஃபன் டி மாரியரின் ஆகப் பிரபல சஸ்பென்ஸ் நாவல். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்தான் அதன் டைரக்டர். கதை?
தற்கொலை செய்து கொண்ட மனைவியின் மறைவால் தானும் தற்கொலை செய்ய இருந்த அந்தப் பணக்கார வாலிபனை தடுத்து மனம் தேற்றிய அவள் அவனை மணம் செய்து கொள்கிறாள். அவனது கடலோர மாளிகையில் கால் எடுத்து வைக்கும் அவளுக்கு அயர்ச்சி தரும் அதிர்ச்சிகள். இன்னும் பழைய நிலையிலேயே அந்த மாளிகை! இன்னும் பழைய நினைவிலேயே அவன்! இன்னும் பழைய எஜமானியையே போற்றும் பணிப்பெண்! இவளைப் படாத பாடு படுத்துகிறாள். சுற்றிலும் மர்மம். அதே நேரம் முதல் மனைவியின் உடல் கிடைக்கிறது கடலிலிருந்து. கணவன்தான் கொன்றிருக்க வேண்டும் என்று அவனை சந்தேகிக்கிறார்கள். அப்படியல்ல, அவள்தான் சகிக்க முடியாத கொடூரப் பெண்மணியாக இருந்திருக்கிறாள் என்ற கதையை அவன் சொல்லும்போது, தன்னுடன் சேர்த்து அவனையும் காப்பாற்ற வேண்டிய நிலை இவளுக்கு.
தனக்கு வேண்டிய நடிகையை போடவில்லையே என்று ஹீரோ லாரன்ஸ் ஒலிவியருக்கு வருத்தம். செட்டில் அவர் ஒத்துழைப்பு எப்படிக் கிடைக்கும்? அந்தச் சங்கடத்தோடேயே நடித்தார் ஜோன். அது அந்தப் பாத்திரத்துக்கு இன்னும் வலு சேர்த்துவிட்டது. அந்தப் படத்தில் அபலை மனைவியாக கண்கலங்க நடித்தாலும் நடித்தார் ஜோன். அதிலிருந்து அபலை வேடமாக வந்து குவிந்தது. அவரே ஒரு கட்டத்தில் நிறுத்தும் அளவுக்கு.
1941 -இல் ‘Suspicion’ என்ற படத்துக்காக இவர் ஆஸ்கார் நாமினேஷன் பெற்றபோது போட்டியிட்ட மற்றொரு நடிகை வேறு யாருமல்ல, இவருடைய சொந்த அக்காவேதான். Olivia de Havilland! அவரும் பிரபல நட்சத்திரம். ‘Hold Back the Dawn’ படத்துக்காக நாமினேஷன் பெற்றிருந்தார். இவருக்கே கிடைத்தது ஆஸ்கார். (அக்கா பிற்பாடு 1946 இல் ‘To Each His Own’ படத்திற்காக அதை வாங்கினார்)
நடிகர்களுக்கு எந்த ஸ்பெஷல் மதிப்பும் தராதவர் ஆயிற்றே ஹிட்ச்காக்? அவரிடமே நடித்து அகாடமி அவார்டு வாங்கின ஒரே நடிகை இவர்தான்.
Orson Welles உடன் நடித்த க்ளாஸிக் 'Jane Eyre' இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது.
அக்கா ஒலிவியாதான் அம்மாவின் ஃபேவரைட் என்ற எண்ணம் இவருக்கு. அக்காவுக்கும் தங்கைக்கும் சின்ன வயதிலிருந்தே சச்சரவுதான்.
‘ரோஜாப் படுக்கை அல்ல.’ : அவரெழுதிய சுய சரிதையின் தலைப்பு. ‘எல்லாரும் பொறாமைப்பட என் வாழ்க்கையில் ஏராளம் உண்டுதான். இருந்தாலும் நான் வாழ்க்கையில் நீடித்த அன்பையோ நீடித்த மணவாழ்க்கையோ கண்டதில்லை. ஆக எல்லாம் வெறும் யோகம்தான்.’
நூற்றி ஐந்து வயதில் மேடையில் நடித்தபடியே உயிரை விட வேண்டும் என்று விரும்பினார். இரண்டுமே நடக்கவில்லை. நடந்தது 96 வயதில் இயற்கை மரணம். அக்கா மறைந்தது 104 வயதில்.

Tuesday, October 20, 2026

ஜாலி ஸ்வீட் நடிகர்...


ஜாலி நடிகர்... ஸ்வீட் நடிகர்... ஐம்பதுகளில் கொட்டகைகளை அதிரச் செய்தவர். இளசுகளின் அபிமான கதாநாயகன். ஜாலியாகப் பொழுது போக்கலாம் என்று வருபவர்களுக்கு ஏமாற்றம் இல்லாத திரைக்கதை. சூப்பர் ஹிட் பாட்டுகள். பெரும்பாலும் சங்கர் ஜெய்கிஷன்.
Shammi Kapoor… இன்று பிறந்த நாள்!
புகழ்பெற்ற சகோதரர்களில் நடுவர். மூத்தவர் ராஜ்கபூர். இளையவர் சஷிகபூர். மாபெரும் நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகன். என்றாலும் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக ஆகி விடவில்லை. அப்பாவின் Prithvi Theatres -இல் நாலு வருடம் துணை நடிகராக வேலை செய்தார்.
‘உன்னைப் போல் பார்த்ததில்லை’ (Tumsa Nahin Dekha) படத்தில் ஹீரோவாக வரும் வரை யாரும் இவரைப் பெரிய ஹீரோ போல் பார்க்கவில்லை. மீசையை அகற்றிவிட்டு, ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு டான்ஸிங் ஹீரோவாக வந்த ஷம்மி கபூரை புருவம் உயர்த்தி பார்த்தார்கள் ரசிகர்கள். இன்ஸ்டன்ட் ஸ்டார். அடுத்து ஆஷா பரேக்குடன் ‘மனதைக் கொடுத்துப் பார்' (Dil Dekha Dekho) வந்து அமர்க்களப்படுத்தி பாலிவுட்டின் எல்விஸ் பிரஸ்லி ஆக்கியது.
“யா…..ஹூ!” என்று பனிமலையில் குதித்தாடும் ‘Junglee’ இவரை வசூல் நடிகர் ஆக்கியது. ஷம்மி கபூர் ஹீரோ, சங்கர் ஜெய்கிஷன் பாட்டு என்று அது ஒரு இசையும் காதலும் இசைந்த வசந்த காலம்! Professor, Singapore, Janwar, Rajkumar...
Tumsa Nahin Dekha படத்தில் துள்ளல் பாடல்கள் கொடுத்து படத்தை தூக்கிவிட்ட ஓ பி நய்யாரின் இசையில் மற்றொரு ஹிட் பாடல் சரமாக வந்தது Kashmir Ki Kali . அதில் 'Yeh Chand Sa Roshan Chehra...' என்ற பாடலில் 'Tareef Karu Kiya Uski..' என்ற வரியை கடைசியில் திரும்பத் திரும்ப பாடினால் நன்றாயிருக்கும் என்று ரஃபி சொல்ல, தன் பாடலில் திருத்தமா என்று அவர் சம்மதிக்க வில்லை. ஷம்மிகபூர்தான் அவரிடம் எதற்கும் அப்படி ஒரு டேக் இப்படி ஒரு டேக் எடுக்கலாம், உங்களுக்குப் பிடிக்கலைன்னா அதை விட்டுடலாம்னு சொல்லி எடுக்க வைத்தாராம். எடுத்த பின்னர் ஓ.பி. நீங்க சொன்னது சரிதான், நல்லாவே இருக்கு என்று ஒத்துக் கொண்டாராம்.
தற்கொலை செய்து கொள்ளப் போன பெண்ணை காப்பாற்றி அவள் விரும்பிய மாமா மகளுடன் சேர்த்து வைக்கப் பாடுபடுகிறான், கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பாற்றி வளர்க்கும் அவன் என்று அழகாகத் தொடங்கும் ‘Brahmachari’ படத்திற்குத்தான் Filmfare அவார்டு வாங்கினார். “Main Gavun Tum So Jao..” பாடலையும் “Dil Ke Jarokhe…” பாடலையும் மறக்க முடியுமா? (தமிழில் ‘எங்க மாமா’)
சக்கை போடு போட்ட மற்றொரு படம் விஜய் ஆனந்த் டைரக்ஷனில் நடித்த Teesri Manzil. ஆர். டி. பர்மனின் “Ha Ha Ha Aajao…” பாடலுக்கு ஹோட்டல் ஸ்டேஜில் சுழன்றாடுவாரே அது! டான்ஸ் இவரது forte. தன் movements தானே அமைத்துக் கொள்ளுமளவு தேர்ச்சி. கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து தலையை ஒரு ட்விஸ்ட் கொடுப்பார் பாருங்கள், தனி ஸ்டைல்!
வருடங்கள் சென்றதும் சீனியர் ரோல்களுக்கு வசமாக தன் கலை வாசத்தை மாற்றிக் கொண்டார். இவரது இடத்தைப் பெற்றுக் கொண்ட ராஜேஷ் கன்னாவுடன் இவர் நடித்த Ramesh Sippy யின் ‘Andaz’ படத்தில் இவர் ஹீரோயின் ஹேமா மாலினி. அதில்தான் அவர்கள் ஆடும் அந்த சூபர் ஹிட்... “Dil Usse Do Jo Jaan...”
‘Junglee’ யில் தன் ஹீரோயினாக நடித்த சாய்ரா பானுவுக்கே அப்பாவாக நடித்தார் ‘Zameer’ படத்தில்.
தெரியாதது இவர் ஒரு இயக்குனரும் கூட. ‘Manoranjan’ (சஞ்சீவ் குமார், ஜீனத்) ‘BundalBaaz’(ராஜேஷ் கன்னா)
ரொம்ப ஹை டெக் இவர். அது வந்த காலத்திலிருந்தே இன்டர்நெட்டை பிடித்துக் கொண்டவர். I U C I (Internet Users Community of India) வை நிறுவியவர்.
நடித்த ஒரே தமிழ்ப்படம் ‘அமரன்.’
கடைசி சில வருடங்கள் நோயுற்று dialysis வாழ்வின் பகுதி ஆனபோதும் துளி உற்சாகம் குறையாமல் வாழ்ந்தவர்.
ஹீரோவாக நடித்த ‘வண்ண இரவுகள்' (Rangeen Raton) படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வந்த கீதா பாலிக்கும் இவருக்கும் இடையே மலர்ந்த காதல் கல்யாணத்தில் முடிந்த போது அவர் இவரை விட பெரிய ஸ்டார். பத்தே வருடத்தில் கீதா பாலி காலமாகி விட்டதில் தாங்கமுடியாத துயரம் இவருக்கு.

Monday, October 19, 2026

உறுதிகள் உச்சத்தில் ...


‘Nowhere’ Review (Spoiler Alert)
அந்த கர்ப்பிணிப் பெண் ஒரு கார்கோ ட்ரக்கில் மற்றவர்களுடன் கடத்தப்பட்டு தப்பிச் செல்கிறாள் நாட்டை விட்டு. வழியில் டிரக் நிறுத்தப்படுகிறது. திறக்கப்படுகிறது. துப்பாக்கியுடன் நுழைந்து பார்க்கிறான் அதிகாரி. சில சாமான்கள். அற்றம் தெரிகிறது. அற்றம் தானா? சந்தேகம் எழுகிறது. உள்ளே நடந்த அளவு வெளியே நடந்து பார்க்கிறான். பாதி டிரக்தான் வருகிறது. புரிந்துவிடுகிறது. 'ஷூட் தெம் ஆல்!' கட்டளை பிறக்கிறது. என்ன கொடுமையான காட்சி! எப்படி தப்புகிறாள் அந்தப் பெண்? தப்புகிறாளா என்ன?
‘Nowhere.’ (2023) அதன் வகையில் ஒரு அற்புதமான படம். நெட்ஃப்ளிக்ஸில்.
வயதானவர்களையும் குழந்தைகளையும் கர்ப்பிணிகளையும் காவு கொடுக்க தீர்மானிக்கிறது நாட்டைக் கைப்பற்றும் கூட்டம். தன் கர்ப்பிணி மனைவியைக் காப்பாற்ற துடிக்கும் கணவன். அவளுடன் ட்ரக்கில் மறைந்து தப்பிச் செல்லப்போனால்... அடுத்த காட்சியிலேயே அவளை விட்டு பிரித்து விடப் படுகிறான்.
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பாக்கியசாலிகள்… உயிர் பிழைக்க ஒரு வழியும் இல்லாதபோதும் போராடி மற்றொரு உயிரையும் பிழைக்க வைக்க முடியுமோ? எழுச்சியூட்டும் entertainer! நாலு ‘Titanic’ இன் கனம்!
சாவதன் உறுதிகள் உச்சத்தில் நிற்கையில்… நடுக் கடலில்… மிதக்கும் கன்டெய்னர்… உள்ளே குழந்தையிடம் அவள் முணுமுணுக்கிறாள் அந்தப் பாடலை...
“யாராவது உன்னிடம் சொன்னார்களா
நீ காணும் கனவுகள்
காலமும் இடமும் அற்றவை என்று?
உன் மனதில் மட்டுமே என்று?"
தொடர்ந்தொலிக்கும் அந்த ஸ்பானிஷ் பாடல்! (Rosalia வின் NANA Cap 9 Concepcion) ஒன்றிரண்டு வரிகளே. எந்த வார்த்தையும் புரியவில்லை என்றாலும் சுண்டியிழுக்கும் அதனுடைய பெருஞ்சோக இசை…! அப்பா! இசைக்கு மொழியேது, உணர்வுகள் மட்டுமே உண்டு. கனவுக்கு மனம் போலவே. அவள் சொல்வது மாதிரி.
துளை வழியே தெரியும் ஒளியை வைத்துக்கொண்டு விளையாடுகிறார் ஒளிப்பதிவாளர்.. ஆங்காங்கே ஓவிய ‘ஷாட்’களைத் தீட்டுகிறார். குறிப்பாக அந்த கன்டெய்னரின் உள்ளிருந்து கடல் வானத்தை காட்டும் பிரேம்கள்.

இறுதி காட்சியில் கிளர்ந்தெழும் அந்த ‘லா...லா... லா...லா..’ பி.ஜி.எம்., படம் முடிந்த 20 நிமிடத்திற்கு மேல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நிறுத்த முடியவில்லை. 

Saturday, October 17, 2026

குப்பையிலும் மலரும் பூக்கள்…


குப்பையிலும் மலரும் பூக்கள்…

கே.பி.ஜனார்த்தனன்

 

“ஏன் தாத்தா, குப்பைச் செடிக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?” கேட்டான் அபிஜித், “கிடையாது தானே?”

எட்டவே எட்டாத விஷயம் தன் ஐ.க்யூவுக்கு என்றால் அவன் ஓடி வருவது தாத்தாவிடம்தான்.

“சரி, நீ விஷயத்துக்கு வா,” என்றார் சாத்வீகன், “என்ன சந்தேகம் இப்போ?”

“நேற்று முழுக்க தலையைப்  பிய்ச்சுக்கிட்டேன்…” என்று ஆரம்பித்தான் அபிஜித். “அப்பா அம்மாவோட நம்ம ஏகாம்பரம் மாமா வீட்டுக்கு போயிருந்தப்பதான்… அப்பா இருக்காரே அவர் திடீர்னு பேச்சுக்கு நடுவில் அம்மாவிடம், ‘வர்ற வழியில் பார்த்தியா, குப்பை மேலே செடி செடியா வளர்ந்து கிடந்ததே?’ன்னு கேட்டார். நார்மலா வீட்டிலே வெச்சு இப்படி எல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாம அவர் பேசறதே கிடையாது.”

“அப்படியா?”

“ஆமாங்கிறேன். எனக்கு புரியலே. என்ன தாத்தா இது? இந்த அப்பா என்ன இப்படி எல்லாம் பெனாத்த ஆரம்பிச்சிட்டாரு?”

“யோசிச்சுப் பாரு, புலம்பினாரா என்ன?”

யோசிக்கையில் அப்படி இல்லை என்று தோன்றிற்று. 

”கொஞ்சம் விலாவாரியா சொல்லு. அப்ப என்ன பேசிட்டிருந்தாங்க?”

“அப்பா புது வீடு கட்டினப்ப வேலை முடியாம வெளியிலே வாங்கின கடனைப் பத்தி பேசிட்டிருந்தாங்க எல்லாரும். அது தப்புன்னு மாமா லெக்சர் விட்டுட்டிருந்தாங்க. அம்மா அப்ப ஏதோ ஒரு பாயிண்டை வேகமா சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பதான் இவரு, ‘வர்ற வழியில பார்த்தியா, குப்பை மேலே செடி செடியா வளர்ந்து கிடந்ததே, பார்க்க அழகா இருந்ததில்லையான்னு…”

“அப்புறம்?”

“அம்மா ஒரு நிமிடம் முழிச்சாங்க. அப்புறம் ஆமா ஆமான்னு பதில் சொன்னாங்க. அப்பா மாமாகிட்ட ஏதோ பேச ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாவும் தொடர்ந்து மாமாவிடம் விட்ட இடத்திலிருந்து பேசினாள். நான்தான் தலையை பிய்ச்சிக்கிட்டேன்.”

ஒரு நிமிடம்தான் யோசனை செய்தார் தாத்தா. ”டே, உங்கப்பா விவரமான ஆளுதான். ஒரே வார்த்தையில் எக்கச்சக்கமான சூழ்நிலையை சரி பண்ணிட்டாரே? வீடு கட்ட கடன் வாங்கினதை மாமா விமர்சிக்கிறார். அது அவர் ஐடியா. நம்மைக்  குற்றம் சொல்ற மாதிரி அதில் வார்த்தைகள் விழுந்தாலும் அவருக்குள்ள அக்கறையில் பேசறார். அவரோட ஐடியாக்களை சொல்றார். அதிலுள்ள நல்லதை எடுத்துவிட்டு மற்றதை விட்டுடணும். அதை உபயோகிச்சு நாம மேம்பட முடியுமான்னு பார்க்கணும். இதான் அப்பாவோட மெசேஜ் அம்மாவுக்கு. அழகா கொடுத்துட்டார். அவளும் புரிஞ்சிட்டு தன் பேச்சைத் தகுந்தாற்போல மாத்திக்கிட்டா. ஐடியல் தம்பதிதான்!”

“என்ன தாத்தா இது? அதுக்கு குப்பை செடின்னு சொன்னால்?”

“குப்பையிலே வளர்ற செடி என்ன பண்ணுது? அதிலுள்ள நல்ல சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, தான் அழகா வளருது இல்லையா?” என்று சிரித்தார் அழகாக.


அன்புடன் ஒரு நிமிடம் - 4

‘அமுதம்’ ஏப். 2012 இதழில்…

><><><><

Thursday, October 15, 2026

நல்ல அறிவுரையை...


’சிலர் தாங்கள் எந்த இடத்துக்கு செல்லும்போதும் அதன்

சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.

மற்றவர் தாங்கள் எந்த இடத்தை விட்டு செல்லும்போதும்!
>><<
'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே,
அதுவேதான் என்று அறிந்துகொண்டேன்.'
>><<
'நல்ல அறிவுரையை எப்போதுமே நான்
எவருக்கேனும் கொடுத்துவிடுகிறேன்.
அந்த ஒன்றைத்தான்
அதைவைத்து செய்ய முடியும்,
ஒரு போதும் தனக்கு அது உதவுவதில்லை.’
>><<
’கையாளக் கடினமான
இரண்டே விஷயம் வாழ்க்கையில்:
தோல்வியும் வெற்றியும்.’
>><<
'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடில்
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென
எண்ணிப் பாருங்கள்'
சொன்னவருக்கு இன்று பிறந்த நாள்… Oscar Wilde

Monday, October 12, 2026

ஆர்வம் இல்லாமலே...


நடிப்பதில் அவருக்கு துளி ஆர்வம் இல்லை. ஸ்டூடியோ லேபரட்டரியில் அசிஸ்டன்டாக தான்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து தள்ளாத குறையாக கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். புக் செய்திருந்த ஹீரா நடிகருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால். நடிக்க வேண்டியதோ பிரபல நடிகை தேவிகா ராணியுடன். தயங்கித் தயங்கி நடித்து முடித்தவர் லேபரட்டரியில் வந்து ரஷ் பார்த்தபோது அவருக்கே ஆச்சரியம்! அட, நன்றாகவே நடித்திருக்கிறோமே? அவருடனேயே அடுத்த படம் நடித்தபோது அந்த ‘அச்சுத் கன்யா’ உச்சத்துக்குக் கொண்டு போனது அவரை.
அசோக் குமார்… இன்று பிறந்த நாள்!
தாதா மோனி (சகோதர ரத்தினம்) என்று அன்போடு அழைக்கப்பட்டவர். இயல்பாக நடிக்கும் வெகு சில நடிகர்களில் ஒருவர்.
அவருக்கு நீங்கள் எந்த பட்டம் கொடுக்க நினைத்தாலும் அது பொருந்தும். பெஸ்ட் ஹீரோ... பெஸ்ட் வில்லன்... பெஸ்ட் ஃபாதர் காரக்டர்.... பெஸ்ட் காமெடி நடிகர்....
மள மளவென்று தேவிகா ராணியுடன் பல படங்கள்... அடுத்து லீலா சிட்னிஸுடன் வரிசையாக… மீனா குமாரியுடன் பதினேழு... நளினி ஜெய்வந்துடன் நாலைந்து... 1940 களின் அசைக்க முடியாத நாயகனாக.
நாயகன் இமேஜை உடைத்து ஆன்டி ஹீரோவாக முதலில் கலக்கியதும் அசோக் குமார்தான்.... படம்: ‘Kismet’. கண்ட அபார வெற்றியில் அது தெலுங்கிலும் தமிழிலும் (பிரேம பாசம்) ரீமேக்.. அடுத்து வந்த ‘Mahal’ சூபர் ஹிட் சஸ்பென்ஸ் படம்.. “Aayega.. Aanewala..” பாடலைப் பாடி லதா மிகப் பிரபலமானது இந்தப்படத்தில் தான்.
பிச்சுவாப் பக்கிரி ஷேக் முக்தார், ஜெயிலில் இருந்து தப்பிய பிரதீப் குமாருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது பின்னால் சத்தமில்லாமல் வேவு பார்த்துக் கொண்டிருப்பார் அசோக் குமார். சி.ஐ.டி என்று நினைக்கும்போது சீஃப் வில்லனாக வெளிப்பட்டு நம்மைத் திகைக்க வைப்பார் ‘Ustadon Ki Udtad’ படத்தில். (‘வல்லவனுக்கு வல்லவன்’)
‘பாசமலர்’ ஹிந்தியில் ‘ராக்கி'யான போது சிவாஜி ரோலில் இவர். கிடைத்தது Filmfare அவார்ட். ‘க்ரஹஸ்தி' தமிழில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ஆனபோது இவர் ரோலில் சிவாஜி.
‘நானும் ஒரு பெண்’ இந்தியில் (‘Main Hun Ladkhi’) ரங்கராவ் ரோலை அதே கனிவுடன் அழகாக பண்ணியிருப்பார். இவரின் மாஸ்டர்பீஸ் ‘Jewel Thief’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
‘Mamta’ ‘Intaqaum’ ‘Kanoon’ ‘Bhai Bhai’ ‘Chitralekha’ ‘Bheegi Raat’....மறக்க முடியாத படங்கள். மறக்க முடியாத நடிப்பு.
இவர் ஊக்குவித்து பின்னால் மிகப் பிரபலமானவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஷக்தி சமந்தா. இயக்கிய ‘Howrah Bridge’ அசோக் குமாரை ஸ்டைலிஷ் ஹீரோவாக்கியது. 2. பி.ஆர்.சோப்ரா. இவரை இயக்கிய ‘Gumrah’ அமோகமான பெயரை வாங்கித் தந்தது. 3.ரிஷிகேஷ் முகர்ஜி. இவரை இயக்கிய ‘Ashirvad’ படத்தில்தான் நேஷனல் அவார்டு கிடைத்தது இவருக்கு. (அதில் இவர் பாடிய ‘Rail Gadi...’ தான் திரையுலகின் முதல் rap song!)
பாம்பே டாக்கீஸ் தயாரிப்பாளர்களில் இவரும் இருந்த போது இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் தேவ் ஆனந்த். படம் ’Ziddi’ அதே படத்தில் அறிமுகமான மற்றொரு பிரபலர் பிரான்.
1987 -லிருந்து தன் பிறந்த நாளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டார். தம்பி கிஷோரின் மறைவு நாளாக அது ஆனதால்.
ஹோமியோபதி படித்திருந்த இவர், நோயுற்று காலை எடுக்கவிருந்த ஓர் இளம் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாராம்.
பலரின் ஃபேவரிட் ஆக சிலர் இருப்பார்கள். இவர் எவ்ரி ஒன்ஸ் ஃபேவரிட்!