Saturday, August 22, 2026

வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான...


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!
வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)

Aug. 23. பிறந்த நாள்! 

><><><

Wednesday, August 19, 2026

பறப்பது வசீகரமானது...


யார் இந்த முன்னேற்ற வாசகங்களைச் சொல்லியிருப்பார் என்று ஊகிக்க முடிகிறதா?
'பறக்கக் கற்றுக் கொள்வது வசீகரமானது அல்ல. ஆனால் பறப்பது வசீகரமானது'
'ரசிக்க முடிகிற வரையில் உங்கள் வேலையை நன்றாகவும் மனப்பூர்வமாகவும் நேர்மையான நோக்கத்துடன் செய்யுங்கள், வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.’
‘ஒவ்வொரு மனிதரும், நிறுவனமும், ஏன், சமூகமும் ஒரு கட்டத்தை அடைந்தவுடன் தங்கள் நோக்கத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் - புத்துணர்ச்சியூட்டிக்கொள்ள, புதிதாக கட்டமைத்துக் கொள்ள, மீண்டும் சிந்திக்க வேண்டும்.’
‘புதியவைகளை நோக்கித் தாவா விட்டால் நீங்கள் ஜீவிக்க முடியாது.’
‘உங்கள் போட்டியாளர் மீது எப்போதும் மதிப்பு வைத்திருங்கள், அவர்களை வியந்து பார்க்க வேண்டியதில்லை.’
‘நமக்கு வேண்டியது புத்திசாலித்தனமான இயந்திரங்கள் அல்ல, புரிந்துகொள்ள எளிதானவை. செயற்கை நுண்ணறிவு அல்ல, கூட்டு அறிவு.’
‘உங்களுக்கு என்று நீங்கள் வகுத்துக் கொள்ளும் பார்வை, நீங்கள் வாழ்க்கையை நடத்தும் விதத்தை வெகுவாக பாதிக்கிறது.’
‘தினமும் உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். சிலசமயம் வெற்றியடைவீர்கள், சிலசமயம் அடைவதில்லை. இரண்டின் சராசரி என்னவோ அதுதான் முக்கியம்.’
‘உலகில் இருக்கும் நிலையற்ற தன்மையை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டால், மனதில் ஒரு சமநிலையை வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் உயர்வுகளும் வீழ்ச்சிகளும் திகைக்க வைக்காது. அப்போதுதான், சுற்றியுள்ளவர்களின் மீது ஆழமான பரிவையும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.’
‘எந்தப் பழக்கங்களால் முதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அந்தப் பழக்கங்களையே மக்கள் மறந்துவிடச் செய்கின்றன வெற்றிகள்.’
‘நாம் செய்வது வேலை அல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது என்பதை அறியும் போதுதான் அது மிகச் சிறந்த வேலை ஆகிறது.’
… சொன்னவர் Satya Nadella. மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் சி. இ. ஓ. இவரின் பிரபல ‘Hit Refresh’ புத்தகம் படித்திருப்பீர்கள்...
இன்று பிறந்த நாள்!
வாழ்த்துக்கள்!

Tuesday, August 18, 2026

The One Better..


The One Better.. (One minute story)

K.B.Janarthanan

"It's either Kannan or Madhavan, sir, for the team leader," said the manager, "We have to fix who."
"OK," said Parasuram, the Managing Director, "What's your opinion? Tell me about Kannan first."
"M.B.A plus M.S... Hard-working... Has the experience of about fifty projects."
"Good."
"And what's unique about him, he's never come to me seeking advice or suggestion in the midst of any project."
"Splendid. Now what about Madhavan?"
"He's also hard-working... M.B.A and M.S... Fifty or so projects."
"Go on."
"One difference. He'd come to me often enough seeking suggestions, telling about the errors made," said the manager.
He was sure the M.D. would select Kannan.
But Parasuram said, "OK, Send the order to Madhavan."
"Sir?"
"I can see you're surprised. Look at it this way. Team leaders should be efficient, no doubt. But it is equally important that they should be trustworthy. Men who consult with us at phases, though they make some mistakes, are much better than persons going about their way and managing on their own."
"True," said the manager.

Sunday, August 16, 2026

எதிர்பாராத இசை...


"எதிர் பார்த்தேன்.. இளங்கிளியைக் காணலியே...
இளம் காற்றே.. ஏன் வரலே தெரியலியே..."
எதிர் + பார்த்தேன் என்ற இரண்டு வார்த்தைகளை சுண்டிப் போட்டு பிடிக்கும் அந்த இசை, ’இளம்கிளியைக் காணலியே ..’ என்று குழைந்து ஏங்கிப் பின்வாங்கும் இனிமையாக.
மயக்கும் அந்த இசை மகாதேவனுடையது. 1950, 60களில் தமிழ் திரை இசையுலகை அசத்திய கே வி மகாதேவன், 80 களிலும் தன் அற்புத இசையை அளிக்கத் தவறவில்லை என்பதற்கு சாட்சி.
படம்: ஆர். சுந்தர ராஜனின் ’அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை’
எஸ்.பி.பி.யின் அட்டகாச சோலோ அமர்க்களங்களில் ஒன்று. ‘எதிர் பார்த்தே……..ன்’ என்று தன் மோகனக்குரலில் இழுக்கும்போது மனசு அப்படியே இழுக்கப்பட்டு விடும். 'ஏன் வரலே தெரியலியே..' எனும்போது குரலின் ஏக்கம் நம் மனதுக்கு தொற்றிக்கொண்டு விடும்.
One of the Eighties' delicacies we missed to enjoy and appreciate...

Friday, August 14, 2026

முழுமையாக ஒரு வார்த்தை...


முழுமையாக ஒரு வார்த்தை...

கே.பி.ஜனார்த்தனன்

(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')


"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”

“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு.  அப்பா.  ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"

சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.

”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"

"கண்டிப்பா."

"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’

”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”

”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”

கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’

><><


சட்டென்று....


திரையின் அட்டகாசமான கேரக்டர்கள் கதாசிரியரால் define செய்யப்பட்டு, டைரக்டரால் refine செய்யப்பட்டு, நடிகர்களின் நடிப்பால் fine செய்யப்பட்டு நமக்கு ரசிக்கக் கிடைக்கிறது. ஆனால் வெகுசில கேரக்டர்களை நடிகர்கள் தங்கள் rare performance கொண்டு வேறு லெவலுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். எழுதியவர், இயக்கியவர், நடித்தவர் மூவரையும் தாண்டி அந்த கேரக்டர் தனியே நின்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறது.
சட்டென்று நினைவுக்கு வருவது ‘மூன்றாம் பிறை’ விஜி.
ஶ்ரீதேவி… Aug.13. பிறந்தநாள்!

Thursday, August 13, 2026

தெளிவைஸர்!...


அது இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது நம்ம வாழ்க்கை. ஆனால் அந்த ‘டி.வி.’யை கண்டு பிடித்தவர், அதன் தந்தை என்று அழைக்கப்படுபவர், முதல் பேசும் சினிமா வெளிவருவதற்கு முந்தைய வருடமே அதைச் செய்து காட்டியவர்...
John Logie Baird. இன்று பிறந்த நாள்! (1888 - 1946)
லண்டன் Royal Institution -இல் 1926 ஜனவரியில் நடந்தது அந்த டெமோ. நகரும் பொருட்களை திரைக்கு நகர்த்தி காட்டினார் ஜான். விநாடிக்கு 5 வேகத்தில் படங்கள் வந்து விழுந்தன திரையில். அப்ப அதற்கு அவர் சொன்ன பெயர் டெலிவைஸர்!
அடுத்த வருடமே லண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு அசைவுகளை ஓசையுடன் டெலிபோன் ஒயர்களின் வழியே டெலிகாஸ்ட் செய்தார். அடுத்த வருடம் லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு. அதே வருடம் கலர் டெலிவிஷனையும்!
ஒளியை மின்சாரமாக மாற்றும் தன்மை selenium -க்கு உண்டு என்பதைப்பற்றி படித்ததுதான் அந்த ஸ்காட்லாண்ட் இளைஞனை டெலிவிஷனைப் பற்றி சிந்திக்க வைத்தது.
பாவம், ஃபண்ட்ஸ் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆபீஸில் சென்று தன் ஐடியாவை சொன்னால் பைத்தியம் மாதிரி பார்த்தார்கள். தன் முதல் டி.வி. மாடலை செய்தபோது தையல் ஊசியிலிருந்து சைக்கிள் லைட் வரை கையில் கிடைத்த பொருளை எல்லாம் உபயோகிக்க வேண்டியதாயிற்று.
சுழலும் டிஸ்குகள் அசைவுகளை ஸ்கேன் செய்து மின் சிக்னல்களாக கம்பிகளில் அனுப்ப, வேறோரிடத்தில் அவை திரையில் பதிக்கப்படுகின்றன. முதலில் திரையில் அசைந்த பிம்பம் ஒரு பொம்மையின் தலை. பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்தார்.
டி.வி.க்கான அந்த ஒரிஜினல் ஐடியா Nipkow உடையது. ஆனால் அதை மேம்படுத்தி தெளிவான பிம்பம் கொண்டுவந்தது இவரது டெலிவைஸர் தான். தெளிவைஸர்!
முதலில் ஐந்து வருடத்திற்கு அவருடைய டெக்னிக்கை உபயோகித்தது BBC. இரண்டு மடங்கு லைன்களுடன் இவருடன் போட்டியிட்டது மார்க்கோனி டிவி. இவருடையது மெக்கானிக்கல் என்றால் அவருடையது எலக்ட்ரானிக்.
டி.வி. உலகத்தின் எந்த சாத்தியதையையும் ஜான் விட்டு வைக்கவில்லை. HD TV, 3D TV.... ஏன், வீடியோவையும் தொட்டார். Phonovision என்று பெயர் வைத்தார்.

டி.வி. வரலாற்றில் இவருடையது மெகா சீரியல்!

Monday, August 10, 2026

எண்ணிச் சிந்திடுவோம்... (அன்புடன் ஒரு நிமிடம் -1)



அன்புடன் ஒரு நிமிடம் -1

எண்ணிச் சிந்திடுவோம்...

கே. பி. ஜனார்த்தனன்

“மணி எட்டரை ஆச்சு. இன்னும் நீங்க புறப்படலையா கல்யாணத்துக்கு? என்ன இப்படி உட்கார்ந்திருக்கீங்க? கிளம்புங்க சீக்கிரம்,” என்றாள் தலையை வாரிக் கொண்டு வந்த யமுனா. அவள் தொடர்ந்து சொன்னது: “ஒரு அவசரம் விசேஷம் என்றால் உங்களைப் புறப்பட வைக்கிறதே எனக்குப் பெரிய வேலையாப் போகுது!”
வினோத் தன் லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தான். “எத்தனை மணிக்கு முகூர்த்தம்? மண்டபம் எது?”
“பத்தரை. ஸ்ரீநிவாஸ் மண்டபம்.”
“முகூர்த்தம் பத்தரைக்குத்தானே? இப்ப அரைமணியில் ரெடியாயிட்டேன்னா ஒரு மணி நேரத்துல அங்க போயிடலாமே?” என்றான். அவன் தொடர்ந்து சொன்னது: “நான் என்ன சும்மா தூங்கிட்டா இருக்கேன்? ரெண்டு வாரமாச்சு. ப்ராஜெக்ட் வேலை முடியலை. அதைத்தான் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.”
“சரி சரி, இட்லி ரெடியாயிருக்கு. எடுத்து சாப்பிட்டுக்குங்க. நான் டிரஸ் பண்ணிக்கிறேன்,” என்றாள் அவள். வேலை ரொம்ப பாக்கின்னா வீட்டிலிருந்து கொஞ்சம் பார்க்கலாமே என்று சொன்னது அவள்தான். ஆகவே அவளுக்கு உறுத்திற்று. நீ சொன்னதைத்தானே நான் செய்தேன் என்கிறானோ? அவள் தொடர்ந்து சொன்னது: “ஆமா, எங்க மாமா வீ டடு கல்யாணமாச்சே, அப்பத்தான் ப்ராஜெக்டைப் பார்க்கிறதுக்கு உட்காருவீங்க!”
“உடனே அப்படிப் போயிருமே நினைப்பு? அதெல்லாமில்லே,” என்று மறுத்தான். ஷேவிங்கை ஆரம்பித்தவன் தொடர்ந்து சொன்னது: “நீதான் சில சமயத்தில் அப்படி சிறுபிள்ளைத்தனமா நடந்துக்குவே, நானில்லை.”
இதற்குப் பிறகு இந்த உரையாடல் எப்படி போயிருக்கும் என்பதை ஊகித்து விடலாம்.
மேலே உள்ள உரையாடலில் எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையும் கவனிக்கவும். அவற்றைச் சொல்லுமுன் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் ‘இப்ப இப்படிச் சொல்லணுமா? சொல்லலாமா? சொன்னால் அது என்ன எதிர் விளைவை அல்லது பக்க விளைவை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்லவா வேண்டாமா என்று முடிவு எடுத்திருந்தால் அநேகமாக அந்த எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையுமே நிச்சயமாக தவிர்த்திருப்போம் இல்லையா? அந்த இடங்களில் அவை அவசியப்படவும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
தான் சொல்வது சரி என்று வாதாடுகையில் ஒருவரை ஏதும் குறை சொல்லும் முன், அப்படிச் செய்திருக்கணும் என்று அறிவுரை வழங்கும் முன், ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை யோசித்துவிட்டுப் பேசினால் உறவுகளும் நட்புகளும் எப்போதும் இனிக்குமே? எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை…!
(‘அமுதம்’ ஏப். 2012 இதழில் வெளியானது)

><><><

Sunday, August 9, 2026

ஓவியரும் கூட....


‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’
சொன்னவர் யார்?
மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)
பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. இன்று பிறந்தநாள்!
இன்னும் சொன்னவை சுவையானவை:
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’

கடவுளின் செல்ல சப்ஜெக்ட்...


விஞ்ஞானம் கடவுளின் செல்ல சப்ஜெக்ட்! உள்ளே செல்லச் செல்ல சுவாரசியம் விரிந்துகொண்டே போகும்...
இப்ப பாருங்க… ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன்... எல்லாம் வாயுக்கள். தெரியும். எல்லா வாயுவும் மாலிக்யூல்களால் ஆனது. அறிவோம். ஒரு கப் ஹைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக் கணக்கில் ஹைட்ரஜன் மாலிக்யூல்கள் இருக்கும். ஆமா, சரிதான். போலவே ஒரு கப் நைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக்கணக்கில் நைட்ரஜன் மாலிக்யூல்கள். இந்த ரெண்டு கணக்கும் எக்ஸாட்லி ஒரே நம்பராக இருக்கும்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா? ஒண்ணாதான் இருக்கும். ஒரே கன அளவுள்ள எந்த வாயுவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே எண்ணிக்கை மாலிக்யூல்கள்தாம் இருக்கும் (ஒரே வெப்பம் & அழுத்தத்தில்) அது தான் 'ஆவாகாட்ரோ' விதி. ஆரோ அது? அவருதாங்க அதைக் கண்டு பிடிச்சது.. 200 வருஷம் முன்னாடியே…
Amedeo Avogadro... இன்று பிறந்த நாள்!
படித்தது முதலில் சட்டம். ஆர்வத்தில் நுழைந்தது விஞ்ஞானம். வாழ்ந்த காலத்தில் உரிய பாராட்டு வழங்கப் படாதவர்களில் ஒருவர்.

Saturday, August 8, 2026

இதயம் தொடுவார்...


79 இல் வந்த படம்... அதன் பின் அதே மாதிரி கதை நிறைய வந்துவிட்டனதான். என்றாலும்...
வேலைப் பிரியரான கிரேமர் பிரமோஷன் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஜோனா அவனைப் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறாள். அப்பாவை வெறுக்கும் மகனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு! வீட்டையும் மகனையும் கவனிப்பதில்லையாம் அவன்!
அம்மாவும் ஆகி, திணறும் கணவன் வேறு வழியில்லாமல் சாதாரண வேலைக்கு இறங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறான்.
இப்போது அவள் வருகிறாள் மகனைக் கேட்டு. வழக்கில் அவன் பக்க நியாயங்கள் வெளிப்பட்டாலும் முடிவு அவளுக்கு சாதகமாக. அப்பீலுக்கு போகலாம்தான், ஆனால் சின்ன பையன் தலையில் தேர்ந்தெடுக்கும் பெரிய சுமை விழுமே என்று விட்டுக் கொடுக்கிறான்.
பையனை அழைத்து போக மறுநாள் காலை வருகிறாள் ஜோனா. அவள் விட்டுப் பிரிந்த முதல் நாள் தயாரித்த அதே காலை டிபன். அப்பாவும் மகனுமாக தயாரிக்கிறார்கள். தன்னைவிட அவனிடமே பையன் ஹோம்லியாக இருப்பதைச் சொல்லி விட்டு வெளியேறுகிறாள் தனியே.
கிரேமராக நடித்தவருக்கு எப்படியோ, நமக்கு ‘Kramer Vs Kramer’ மறக்க முடியாத படம். அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆஸ்கார் வாங்கித் தந்தது ஆயிற்றே?
Dustin Hoffman... Aug. 8 பிறந்த நாள்.
‘என்னாலே தானே அம்மா பிரிந்து போனாள்?’ என்று கேட்கும் மகளிடம் பொறுமையாக, ‘உன் அம்மாவை அவளாக இருக்க விடாமல் என் விருப்பப்படி அவளை மாறச் செய்தேன். அவளைக் கவனிக்கவோ கேட்கவோ எனக்கு நேரமில்லை. முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டுத்தான் அகன்றாள். உனக்காகத்தான் இன்னும் சில நாள் இருந்தாள்..’ என்று அரவணைக்கும் காட்சியில் பையனின் & நம் இதயம் தொடுவார். ஆஸ்காரையும்!
ஆரம்பப் படங்களில் ஒன்றான ‘The Graduate’ படத்திலேயே எல்லோரையும் தன்னைக் கவனிக்க வைத்தவர். 1967 இன் நம்பர் ஒன் வசூல் படம் அது.
'Midnight Cowboy' படத்தின் ஹீரோ ரோலை அவர் கைப்பற்றிய விதமே அலாதி. காஸ்டிங் டைரக்டரை இவர் ஒரு தெருமுனையில் சந்திப்பதாக ஏற்பாடு. கந்தல் ஆடையும் கிழிந்த கோட்டும் பிய்ந்த ஷூவும் அணிந்து வர்றவர் போகிறவரிடம் காசு கேட்டுக்கொண்டிருந்த ஹாஃப்மேனை அடையாளம் கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆயிற்று அவருக்கு. அந்த மாதிரியான ஒரு ரோல் அது.
இளைஞராக இருந்த போதும் சரி வயதானவரான போதும் சரி, பிரதான காரெக்டர்களில் பிரமாதமாகப் பண்ணியவர். ‘Kung Fu Panda’ வில் Shifu வின் வாய்ஸ் இவருதான்.
வாங்கிய மற்றொரு ஆஸ்கார் Tom Cruise உடன் நடித்த 'Rain Man'-க்காக.
கூட உட்கார்ந்து திரைக்கதை எழுதுவார் ஆனால் திரையில் பேர் போட்டுக்கொள்ள பிரியப் பட்டதில்லை.
தமாஷான ஒரு Quote? ‘வெற்றி அடைஞ்சதில ஒரு சந்தோஷம் என்னன்னா சாவதைப் பற்றிய பயம் போயிடுச்சு. ஸ்டார் ஆயிட்டீங்கன்னா, ஏற்கனவே நீங்க செத்துப் போயாச்சு. பாடம் பண்ணியாச்சு.’

Friday, August 7, 2026

நயமான காட்சி...


ஸ்டீவ்! அவனைப் பழிவாங்க வேண்டும் ஸ்டெல்லாவுக்கு. அவனும் அவள் தகப்பன் பிரிட்ஜெரும் இன்னும் நாலு பேருமாக வெனிஸில் 35 மில்லியன் டாலர் தங்கக் கட்டிகளை கொள்ளையடித்த போது அவரை கொன்றுவிட்டு கட்டிகளுடன் ஓடிவிட்டான் ஸ்டீவ். அதைக் கேள்விப்படும் அவளுடன் அந்த நாலு பேரும் சேர்ந்து கொள்ள, தீட்டுகிறார்கள் திட்டம். வசதியாக அவன் வாழும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். டிவி மெக்கானிக் போல அவன் வீட்டினுள் நுழைகிறாள். வீட்டின் சேஃப்டி சிஸ்டத்தை அவள் சட்டைப் பையின் நுண் கேமரா அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது. அழகான அவள் யார் என்று அறியாதவன், அவங்க எதிர்பார்த்தது போலவே, டேட்டுக்கு அழைத்து டேட் பிக்ஸ் பண்ணுகிறான்.
சந்திக்கிறாள். அவளைத் தன்னுடன் தங்க அழைக்கிறான் ஸ்டீவ். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என மறுக்கிறாள். ‘என் மீது நம்பிக்கை இல்லையா?’ என்கிறான். ‘நான் எந்த நபரையும் நம்புவேன். ஆனால் அவருக்குள் இருக்கும் சாத்தானைத்தான் நம்ப மாட்டேன்,’ என்கிறாள் புன்னகையுடன். அவன் முகம் மாறுகிறது. அவள் கையை மடக்கி கீழே கையை முறுக்குகிறான். ‘நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. பிரிட்ஜெர் மகள் தானே நீ? அவன் தான் இந்த வார்த்தைகளை இதே மாதிரி அடிக்கடி சொல்வான்!’ சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். அதற்குள் மற்ற நண்பர்கள் வந்து விட, ஸ்டீவைப் பார்த்து சொல்கிறாள்: ‘திருடனை விட மட்டமான ஒரே ஆள் யார் தெரியுமா? கோழை தான். நீ ஒரு கோழை!’
புகழ்பெற்ற ‘The Italian Job’ படத்தில் வரும் நயமான இந்த காட்சியில் ஸ்டெல்லாவாக வருபவர் Charlize Theron. எல்லா கட்டத்திலும் எழிலாகக் கொடுத்திருப்பார் தன் எக்ஸ்பிரஷன்களை.
Charlize Theron… இன்று பிறந்த நாள்.
முதல் பெரிய வாய்ப்பு Al Pacino வுடன் ‘The Devil's Advocate’ தவிர Tom Hanks உடன் ‘That Thing You Do.’
‘Monster’ படத்தில் சீரியல் கில்லர் வேடத்தில் நடிப்பதற்காக 20 கிலோ எடையைக் கூட்டியபோது இந்த ரோலுக்காகவா உன் லுக்ஸைக் குறைச்சுக்கறேன்னு அனுதாபித்தார்கள். ஆனால் அந்த ரோலுக்கு ஆஸ்கார் அவார்ட் ரோலானது அவர் கைக்கு. சந்தோஷமாக தன் சொந்த இடமான தென் ஆப்பிரிக்காவில் கொண்டாடினார்.
எளிய வாழ்க்கையை விரும்பும் ஷர்லீஸ் டிரோன் மிக வசீகரமானவர் லிஸ்டுகளில் மிக அதிகமாக இடம் பெற்றவர்.

Thursday, August 6, 2026

ஹாலிவுட்டின் மனோரமா...


1950 களில் கலக்கிய டிவி ஷோ அது. ‘I Love Lucy.’ பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. நாயகி பிரபல காமெடி நடிகை. அவரும் கணவரும்தாம் தயாரிப்பாளர்கள். தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதை அறிவித்தார் நாயகி, வேறு நடிகையைப் போடலாமென்று நினைத்து. அதையே கதையிலும் கொண்டு வந்துவிடலாம் என்றார் தலைமைக் கதாசிரியர். அப்படியே நடந்தது. அந்த 1953 ஜனவரி 19 அன்று நிஜத்தில் குழந்தை பிறந்த அன்று கதையிலும்!
அந்த நடிகை Lucille Ball… ஹாலிவுட்டின் மனோரமா! இன்று பிறந்த நாள்! (1911-1989)
நாலு வயதில் தந்தையை இழந்தவர். பள்ளிக்கூடத்தில் பென்சில்கூட வாங்க முடியாத வறுமையான இளமை. நாடகப் பள்ளியில் சேர்ந்தபோது, ரொம்ப வெக்கப் படறே, டயத்தை வேஸ்ட் பண்ணாதே என்று திருப்பி அனுப்பப் பட்டவர் மிகப் பிரபல நடிகையாகி இரண்டாம் வரிசை படங்களின் அரசியானார்.
மாடலிங், ரேடியோ, டிவி, சினிமா என்று கலக்கியவர். நாடகத்தில் நடிக்க நேரில் கேட்டபோது சேர்த்துக் கொள்ளாதவரை மாடலாக இருந்த போது வெளியான போஸ்டர் சினிமாவில் கொண்டு சேர்த்தது. Bob Hope உடன் ஜோடியாக உயர்ந்தார்.
சொந்த ஸ்டூடியோ வைத்த முதல் பெண்மணி. மூன்று கேமரா உபயோகித்து டிவி ஷோ எடுப்பதை முதலில் ஆரம்பித்து வைத்தது இவர்தான். பிரபல ‘Star Trek’ சீரியலை தயாரித்ததும் இவர் கம்பெனி தான்.
இவரது ‘Lucy and Superman’ எபிசோடில் George Reeves சூபர்மேனாக நடித்தார். டைட்டிலில் அவர் பேரைப் போட சம்மதிக்கவே இல்லையே இவர்? Superman இருக்கிறார்னு நம்பும் குழந்தைகளை ஏமாற்றலாகாது என்று!
“என்னை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே?”ன்னு கேட்க மாட்டார், ஏன்னா தன் காமெடி நடிப்புக்குக் காரணம் வசனகர்த்தாவும் டைரக்டரும்தாம் என்று சொல்பவராயிற்றே!
Quote?
‘அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பது கடும் உழைப்பும் எது சரியான சந்தர்ப்பம், எது இல்லை என்று புரிந்து கொள்வதும் தான்.’
‘உங்களுக்கு எது முடியாது என்பதைத் தெரிந்து இருப்பது உங்களுக்கு எது முடியும் என்பதைத் தெரிந்து இருப்பதைவிட முக்கியமானது.’
‘முதலில் உன்னை நேசி. எல்லாம் சரியாகிவிடும். எல்லா விஷயங்களையும் நடத்த வேண்டுமானால் உன்னை உண்மையாக நேசிக்க வேண்டும்.’

Tuesday, August 4, 2026

நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் ....


இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!

இன்று பிறந்த நாள்.

ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?

“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! ('பாத காணிக்கை')

பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.

பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்!

“காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.
ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது.
பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)
கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.

அந்தப் படம் மட்டும் நன்கு ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராகவும் ஜொலித்திருப்பார். ஆம், அவர் தயாரித்து இயக்கிய ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு ரொம்பவே அட்வான்ஸாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, சட்டென்று நிமிர்ந்து ரசிப்போம்.

அப்புறம் அந்த அட்டகாச ஷாட்: மாடியிலிருந்து மனோகரின் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு நம்மை நோக்கி வருவார்கள். அப்படியே அந்த ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலாக படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா: பி.எஸ்.லோகநாதன்) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். பாபு பாடும் அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)



ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."
ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!

சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')

நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.

“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் பிரபலம் yodelling-இல்.

இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.

அவர் நாயகனாக நடிப்பதற்காக அவரே எழுதிய கதையாம் அது. அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பீம்சிங் திரைக்கதையில் படம் வந்து வெற்றியும் பெற்றது: ‘பாவமன்னிப்பு'

சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும், பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..

அதே படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)

டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.

கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?

‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார். அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’ இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’

எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்! பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் ஆடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”
ஜமுனா ராணியுடன் பாடும் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)
“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)
“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)
“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)
“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)
“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)
“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)
ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”

Monday, August 3, 2026

மென்மையில் மேன்மை...


பாடலெழுத வாய்ப்புக் கேட்டு தன்னிடம் வந்தவரிடம் பிரபல இசையமைப்பாளர் நௌஷத், “உங்க மொத்த கவிதைத் திறமையையும் ரெண்டே வரியில சொல்லுங்க பார்ப்போம்!” என்றாராம். சொன்னார் அவர்:
“வலியின் வேதனையை இந்த உலகம் கேட்கச் செய்வோம்;
அன்பின் நெருப்பை ஒவ்வோர் இதயத்திலும் பற்ற வைப்போம்.”
உடனே தான் இசையமைக்கும் படத்துக்கு அவரைப் பாடலெழுதச் சொல்லிவிட்டார் நௌஷத். அந்தக் கவிஞர்...
Shakeel. மென்மையான கவிதைகள் எழுதுவதில் மேன்மையானவர். இன்று பிறந்த நாள்.
நௌஷத் அவர்களின் ஆஸ்தான பாடலாசிரியர் ஆனார். 'கங்கா ஜமுனா'வில் வைஜயந்திமாலா பாடும் அந்த ‘Do Hanson Ki Joda… Bichchad Gayo Re..” ஆல் இந்தியா ஹிட் பாடல். ஒலிக்காத திசையில்லை, உருகாத நெஞ்சமில்லை.
ஷகீல் எனறதுமே கைகள் தாமாகத் தட்டும் பாடல் ‘மொகலே ஆஸம்’ படத்தின் மகா பிரபல “Pyar Kiya To Darna Kiya..” 100 தடவைக்கு மேல் எழுதினாராம் இந்தப் பாடலை!
தவிர ஹேமந்த் குமார், ரவி, S.D.பர்மன் படங்களுக்கும் பரிசுப் பாடல்கள்…
திலீப் குமாருக்கு மிகவும் பிடித்த பாடல் இவரது "Madhuban Mein Radhika...” இந்தப் பாடல் காட்சியில் நடிக்க திலீப் 6 மாதம் சிதார் கற்றுக் கொண்டாராம்.
1961, 62, 63 என்று அடுத்தடுத்து மூன்று வருடமும் சிறந்த பாடல் Filmfare அவார்ட் இவருக்குத்தான். (Chaudwin Ka Chand, Gharana, Bees Saal Baad) பங்கஜ் உதாஸ் பாடிய சில கஜல்கள் இவர் எழுதியவை.
பரிசு பெற்ற இவரது “Husnvale Tera Jawab Nahi..” (Gharana) பாடலின் ஒரு வரி: “காற்றில் கரைந்திருக்கும் கதைகளின் மௌனம் உன் அதரங்களில் உறைந்திருக்கும்…”
மற்றொரு பாடலான “Chaudwin Ka Chand...” பற்றி சொல்லத் தேவையில்லை. “பதினான்காம் நாள் நிலவோ நீ... அல்லது பகலவன் தானோ?”
ரசியுங்கள், அந்த 'கங்கா ஜமுனா' பாடல் வரிகளை தமிழில் தருகிறேன்:
"அன்னமிரண்டு பிரிக்கப்பட்டன..
என்ன நியாயம்? என்னே துயரம்!
மகிழ்வில் இணைந்திருந்தோம்,
துயரில் சேர்ந்தில்லையே?
கண்ணீரோடையில் கண்கள் மூழ்கின
கனவுகளனைத்தும் கண்ணில் நொறுங்கின!"

Sunday, August 2, 2026

அட்டகாச காமெடி ...


1940-ல் வந்த படம் என்று சொன்னால் என்றால் நம்ப மாட்டீர்கள்.
ஆனால் ‘I Love You Again’ -ன் அட்டகாச காமெடி கதை இது:
அமைதியான பிசினஸ்மேன் வில்சன். கப்பலில் வந்து கொண்டிருக்கிறான். தவறிக் கீழே விழப்போன ஆளைக் காப்பாற்றப்போய் தலையில் அடிபடுகிறது. அம்போன்னு மயங்கியவன் விழிக்கும்போது ஒன்பது வருட அம்னீஷியா விலகி முன்பிருந்த ஜார்ஜுக்கு வருகிறான். 9 வருட முன் ரயில் ஆக்சிடென்ட்டில் நினைவிழந்த ஜார்ஜ். ஜாலியான ஃபிராடு ஜார்ஜ்!
இப்ப இந்த 9 வருட வாழ்க்கை மறந்துவிட்டது. இப்போது தான் யார் என்று ‘தன்’ லக்கேஜைக் குடைந்து பார்த்தபோது பணக்கார பிசினஸ்மேன் வில்சன்னு தெரியுது. பேங்க் பாஸ்புக்கில் ஒன்றரை லட்சம் டாலர். ‘ஆஹா! பணத்தை அடித்துவிட்டு கம்பி நீட்டி விடலாம்!’
கரையில் இறங்கினால் ஒரு இளம்பெண் வரவேற்கிறாள். மனைவி!
அடுத்த ஜாக்பாட் ஆக தெரிகிறாள் அந்த அழகி. மனைவியாமே.. அடடா, பேர் கூட தெரியாதே? எதற்கோ Okay, Okay என்றிவன் சொன்னப்போ யெஸ் என்று அவள் திரும்பிப் பார்க்க, அவள் பெயர் Kay என்று தெரிகிறது. ‘இப்பேர்ப்பட்ட அழகியோட கணவனா நான்?’
ஆனால் அவளோ அவன் கையெழுத்துக்காக காத்திருக்கும் டைவர்ஸ் பேப்பரை நீட்டுகிறாள். 'டல்லான வெறும் பிசினஸ் மக்கு! யார் வாழ்வார்கள் அவனோடு?' அதான் காரணம். திகைத்தவன் ஒரு மாசம் டைம் கேட்கிறான். பேங்கில் போனால் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி. அந்த பணம் கம்யூனிட்டி ஃபண்டு. கை வைக்க முடியாது.
வேறென்ன கவிழ்க்க முடியும் தன் ‘மறுபதிப்பி'டமிருந்து? யோசிக்கிறான். ஏகப்பட்ட நல்ல பேர் இருக்கிறது வில்சனுக்கு. சொந்தமா கொஞ்சம் நிலமும்! நண்பன் டியூக் ஐடியா தருகிறான். ‘அந்த நிலத்தில் பெட்ரோல் இருப்பதாக நம்ப வைத்து ஏகப்பட்ட விலைக்கு விற்றுவிடலாம்!’
இங்கே கே-க்கு ஆச்சரியம். படு ஜாலியான கணவனைப் பார்த்து! பார்ட்டி என்ன, டான்ஸ் என்ன? கலக்குகிறான். கருமியா இருந்தவனா இப்படி? தடுமாறுகிறாள் தன் முடிவில்.
பெட்ரோலை வாங்கி நிலத்தில் கொட்டிவிட்டு, பணக்காரப் பசங்களை அந்த இடத்துக்கு டூர் அழைத்துச் செல்வது போல அழைத்து வந்து ‘தற்செயலாக’ பார்க்க வைக்கிறான். அப்பாக்கள் ஓடிவந்து போட்டி போட்டு (ட்யூக் வந்து விலையை ஏற்றிவிட) அபார விலைக்குப் பேசுகிறார்கள். ‘அப்பாடா, பணம் வந்ததும் ஓட வேண்டியதுதான் பாக்கி!' ஆனால் இப்ப அவனுக்கு டிலெம்மா. கூடி வாழவா, ஓடி அவளை இழக்கவா? கே தான் ஜெயிக்கிறாள் மனதில்.
ஆனால் ட்யூக் விடுவதாயில்லை. மிரட்டுகிறான். அவனை எதிர்க்கும்போது தலையில் அடிபடுகிறது ஜார்ஜுக்கு. மறுபடி பழைய வில்சனாகிறான். ட்யூக், கே ரெண்டு பேருக்குமே ஏமாற்றம். ட்யூக் தன் திட்டம் பலிக்காதே இனியென்று அகலுகிறான்.
இப்பதான் கே-க்கு ஐடியா ஃப்ளாஷ் ஆகிறது. ஆக, தலையில் அடிபட்டால் போதும், தன் 'அடுத்தது'க்கு ஸ்விட்ச் ஓவர் ஆகிவிடுவான் அவன்! அகப்பட்ட ஃப்ளவர் வேஸை எடுத்து ஓங்குகிறாள் அடிக்க. “ஐயையோ, நடிச்சேனாக்கும் நானு!" என்கிறான், மறுபடி அம்னீசியா வந்த மாதிரி நடித்த ஜார்ஜ்.
கே ஆக நடித்தவர் Myrna Loy... 2 Aug. பிறந்த நாள்.



1940 இல் வந்த 'I love you again' எந்தளவு ஹிட் என்றால் இதே ஜோடியை வைத்து இதே போன்ற கதையில் அடுத்த படம் எடுக்கிற அளவுக்கு. படத்துல வர்ற எல்லா ஜோக்குகளும் கிடைக்கணும்னா, நீங்க படத்தை ரெண்டு தடவை பார்க்கணும்னு ட்ரெய்லர் சொல்லும்.
பிரபல Clark Gable -உடன் பல படங்களில் நடித்தவர். 1936 -இல் அவரை சினிமாவின் கிங், இவரை க்வின் என்று சொன்னாங்க. தன் வசீகரத்துக்கு முக்கிய காரணமாக ஒளிப்பதிவாளர்களை நன்றியுடன் கைகாட்டுவார்.
சொன்னார் பாருங்க, நச்சென்று ஒரு Quote!
‘Life is not a having and a getting but a being and a becoming.’