Friday, August 28, 2026

மின்னல் போலாகும் ...


1.ராகத்துக்கு ஏற்றபடியும், 2.டப்பிங் வாயசைப்புக்கு பொருத்தமாகவும் 3.மூலப் பாட்டின் அதே பொருள் வரும்படியும் எழுத வேண்டும் அந்தப் பாடலை...
"சோட்டீ ஸி யே ஜிந்தகானி ரே
சார் தின் கி ஜவானி தேரி ஹாயரே
ஹாய் கம் கி கஹானி தேரி..."
இதுவே முகேஷ் பாடிய மூலப் பாட்டு. ராஜ் கபூரின் பிரபல ’ஆ’ இந்திப் படத்தில் ராஜ் காதல் தோல்வியில் பாடுவது. ’அவன்’ என்று தமிழில் டப்பிங் ஆகி அதுவும் ஹிட்.
எத்தனை அழகாக எழுதினார் பாருங்க.. அதைவிட அழகாகவே...
‘மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே
வான் வில் போலவே இளமை ஆனதே
ஆம் துன்பக்கதை உனதே...’
எழுதியவர் கம்பதாசன். 1950'களின் அருங்கவி.

அதே படத்தில் இன்னும் சில மனம் தொடும் பாடல்கள்:
"கல்யாண ஊர்வலம் வரும்... உல்லாசமே தரும்..
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்.."

"ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே..."

"உன் பேரைக் கேட்டேன்
தென்றல் தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை..."

"கண் காணாததும் மனம் கண்டுவிடும்
வான் சந்த்ரன் வலம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கனலாச்சே..."

இவரது பெயர் சொல்லும் மாபெரும் பாடல் 'ஞான சௌந்தரி' யின் "ஆதியே இன்ப ஜோதி...அருள் தாரும் தேவ மாதாவே..." ஸ்ரீதர் வசனம் எழுதிய 'மாமன் மகள்' படத்தில் வரும் அந்த பிரபல சோகப் பாடலை ("ஆசை நிலா சென்றதே... அபலை கண்ணீரில் நீந்துதே...") தவிர நௌஷத் இசையமைத்த 'மொகலே ஆஸம்' தமிழில் 'அக்பர்' என்று வந்தபோது இவர் எழுதினார் "கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே.. நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே.. "

நடிகராக நினைத்து அப்புறம் கதை வசனம் எழுதி பின் பாடலாசிரியராக பரிமளித்தார். 'வானரதம்' படத்துக்கு இவர் எழுதிய பாடலை லதா மங்கேஷ்கரே பாடினார் என்றால், "பார்த்தால் பசி தீரும்.." என்று பி யூ சின்னப்பா 'மங்கையர்க்கரசி'யில் பாடியது இவர் பாடல்தான்.

No comments: