அணில் சொன்ன சேதி..
கே பி ஜனார்த்தனன் (‘சுட்டி விகடன்' 31-8-07)
அணில் சொன்ன சேதி கேட்டு மிருகங்கள் கவலையில் உறைந்து போய் நின்றன.
“நிஜமாவா?” என்றது மான்.
“சே, என்னைவிட தந்திரசாலியா இருக்கிறாங்களே?” வியந்தது நரி.
யானை மட்டும் மீண்டும் அணிலிடம் விசாரித்தது.
“நீ கேள்விப்பட்டதை மறுபடியும் தெளிவாக சொல்லு!”
“இந்த பூமியிலே இனி வாழ முடியாது, செவ்வாய்க் கிரகத்திலே எல்லா வசதிகளையும் உருவாக்கிக்க முடியும், பூமிக்கு இனி குட்பை சொல்லிவிட வேண்டியதுதான்னு மனிதர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்,” என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் சோகத்தில் ஆழ்ந்து போயின.
சந்தனக் காட்டில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. நகரில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்திற்கு தினமும் சென்று அணில் தகவல்களை திரட்டி வரும். அணிலுக்கு அங்கு ராஜ மரியாதை!
விஞ்ஞானிகள் கொடுக்கும் பழம் கொட்டைகளைத் தின்றுவிட்டு அங்கேயே சுற்றி வரும். அப்போது காதில் விழும் சேதிகளை காட்டுக்கு வந்து மற்ற மிருகங்களிடம் சொல்லும். இதனால் அணில் மீது மற்ற விலங்குகளுக்கும் அலாதியான பிரியம். சில நாட்களாக அணில் சொன்ன சேதிகள் மற்றவைகளைக் கவலையடையச் செய்தது. வேற்றுக் கிரகங்கள் பற்றிய மனிதர்களின் ஆராய்ச்சி, அங்கே குடியேற அவர்கள் திட்டமிடுவது பற்றி விலங்குகள் பரபரப்பாக பேசிக்கொண்டன. இப்போது ஒரேயடியாக பூமியை விட்டு மனிதர்கள் செவ்வாயில் குடியேறப் போகிறார்கள் என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் கவலை கொண்டன.
“எதற்காக இந்த அழகிய பூமியை விட்டுப் போறாங்க?” வினவியது முயல்.
“அதுவா? அவங்க இந்த பூமியை ஏற்கனவே பாழ் படுத்திட்டாங்க. இயற்கையின் சுழற்சியையும் கெடுத்துட்டாங்க. இதுக்கு மேலே இங்கே இருக்கிறது ஆபத்துன்னு வேற இடத்துக்கு போறாங்க.”
“நாமும் அவங்களோடு போக முடியாதா?” கேட்டது மான்.
“ஊஹூம்! அவங்க தங்களைக் காப்பாத்திக்கத்தான் நினைக்கிறாங்களே தவிர நம்மளைப் பத்தி யோசிக்கவே இல்லை.”
“அப்போ நாம என்ன பண்றது?”
“நாம இங்கேயே அழிய வேண்டியதுதான்.”
அன்று முழுவதும் எந்த விலங்கும் எதுவுமே சாப்பிடவில்லை அடுத்த நாளும் அணில் ஆய்வுக்கூடத்திற்கு விரைந்தது சில தகவல்களுடன் மாலை காட்டுக்கு திரும்பியது.
“நம்மையும் அழைத்துச்செல்ல அவங்க தீர்மானம் பண்ணிட்டாங்க,” என்று அணில் சொன்னவுடன் விலங்குகள் ரொம்பவும் ஆர்வமாயின.
“அப்படியா?” என்று மயில் கேட்க, “உண்மையாகவே நம்மை அழைச்சிட்டுப் போறாங்களா?” என்றது ஆமை.
“ஆமா. அந்தக் கிரகத்திலும் நாம அவங்களுக்குத் தேவைன்னு நினைக்கிறாங்க, அதனாலதான்!”
“அட, புரிஞ்சிக்கிட்டாங்களா?”
“ஆமாம்! பொதி சுமக்கவும், பால் கறக்கவும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டவும்னு இப்படிப் பல விஷயங்களுக்கு அவங்களுக்கு நாம தேவை. அதனால நம்மையும் அங்கே கொண்டு போறாங்க. இனி நாம கவலைப்பட வேண்டாம்.” இதைக் கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ந்தன.
மறுநாள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே வந்தது அணில்
“அவங்களுக்கு நாம தேவைதான். ஆனால் நம்மை அழைச்சிட்டுப் போகாமலேயே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்குவாங்களாம்!” எல்லாரும் விழிக்க அணில் விளக்கியது.
“தங்களுக்குத் தேவையான விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிக்குவாங்களாம்!”
அதைக்கேட்டு எல்லாரும் அசந்து போய் நிற்க, மூத்த விலங்கான யானை பேச ஆரம்பித்தது.
“எனக்கென்னவோ இது வருத்தப்பட வேண்டிய விஷயமா தெரியலே! நிஜமாகப் பார்த்தால் நாம் சந்தோஷப்படணும். இதைக் கொண்டாடணும்!”
“என்ன சொல்றீங்க?” கேட்டது நரி.
“இதோ பாருங்க, மனுஷங்கதான் பூமியைத் பாழ் படுத்தினது. அவங்க இங்கேயிருந்து போயிட்டா அப்புறம் இயற்கை தன் இயல்பு நிலைக்கு வந்துடும். பூமி மறுபடியும் ஒழுங்காயிடும். அதனால அவங்க நம்மையும் தங்களோட கூட்டிப்போக நினைத்தால்தான் நாம கவலைப்படணும்,” என்று யானை நிதானமாகச் சொன்னது.
இதைக்கேட்டு மற்ற விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன.