கொஞ்சம் எசகு பிசகான லாட்ஜ்கள் இருக்கும் தெரு அது. புதிதாக அந்தத் தெருவுக்கு இரவு பீட் வரும் நேர்மையான கான்ஸ்டபிள் நெஸ்டர் ஒரு ஹோட்டலில் நுழைந்து தொப்பியை கழற்றி வைத்து விட்டு ஒரு டீ சாப்பிடுகிறான். திறந்த தொப்பிக்குள் வரிசையாக புரோக்கர்கள் வந்து வழக்கம்போல் மாமூலை போட்டுச் செல்வதை அவன் கவனிக்கவில்லை. எடுத்துத் தலையில் வைத்துக் கொள்கிறான் சுவாதீனமாக. கொஞ்ச நேரத்திலேயே கண்டு கொண்டு விடுகிறான் அங்கே நடப்பதை. போனைச் சுழற்ற போலீஸ் வேன் வந்து நிற்கிறது. அத்தனை பெண்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்புகிறான். இன்ஸ்பெக்டருக்கு இஷ்டமே இல்லை கேஸ் புக் செய்ய. அவனை அதட்ட, அப்ப பார்த்தா தொப்பி கீழே விழுந்து பணம் சிதறவேண்டும்? அவ்வளவுதான்! வேலை இழந்து அடுத்த நாள் அதே தெருவில் பரிதாபமாக..
இப்படி ஆரம்பிக்கிறது ‘Irma La Douce’ கலகலப்பாக. அவருக்காகவே உருவாக்கப்பட்ட சீன் மாதிரி இருக்கும். அத்தனை அட்டகாசமாக நடித்திருப்பார்.
Jack Lemmon… இன்று பிறந்த நாள்!
காமெடி நடிப்பு ஜாக் லெமனுக்கு ஜாக் ஃப்ருட் சாப்பிடுவது மாதிரி என்றால் அப்பாவியாக நடிப்பதில் ஜாக் லெமன் எமன்.
ஹாஸ்பிடல் எலிவேட்டரில் பிறந்தபோது ஆருக்கும் தெரியாது பின்னால் இத்தனை எலிவேட் ஆவார் என்பது.
ஹார்வர்டில் படித்து நேவியில் பணியாற்றிய பியானோ பிளேயர், மேடையிலிருந்து திரைக்குத் தாவிய இந்த நடிகர்.
நடிக்க வந்த இரண்டாம் வருடமே ‘Mister Roberts’ படத்துக்காக ஆஸ்கார் வாங்கி அசத்திவிட்டார். 1973 இல் ‘Save the Tiger’ இல் இரண்டாவது ஆஸ்கார்.
The Great Race. மிக அதிக செலவில் எடுக்கப்பட்ட, 1965 இல் வசூலைக் குவித்த அதில் Prof. Fate ஆக… தானே தயாரித்த சொந்தக்காரில் நியூயார்க் டு பாரிஸ் ரேஸில் ஜெயிக்க அவர் படும் பாடு! படுத்தும் அமர்க்களம்! அப்போது போல் ரசிகர் கடிதம் அவருக்கு எந்த படத்துக்கும் வந்ததில்லை.
Marlyn Manroe வுடன் நடித்த பில்லி வைல்டரின் ‘Some Like It Hot’ இல் பெண் வேடம். வில்லன் செய்த கொலையை இவரும் நண்பனும் பார்த்துவிட்டதை வில்லன் பார்த்துவிட, அவன் கண்ணில் படாமல் ஊரை விட்டோட வழி தேடி, வெளியூர் கிளம்பும் மர்லினின் ஆல் வுமன் இசைக் கோஷ்டியில் விட்டுப்போன ரெண்டு பெண்களாக வந்து தொத்திக் கொள்கிறார்கள் ரயிலில். பிரபல பிரிமியர் மேகஸைன் 2006 இல் தேர்ந்தெடுத்த 100 தலை சிறந்த நடிப்புகளில் ஒன்று அது. (மேக்கப் போட்டதும் முதலில் ஸ்டூடியோவுக்குள் சுற்றிப் பார்த்து, பெண்களிடம் எந்த ரீயாக்ஷனும் இல்லாததும்தான் நடித்தனராம்.)
அதைவிடப் பிரமாதமான ரோல் ‘The Apartment’ இல். தான் காதலிக்கும் பெண் தன் பாஸுடன் பொழுதைக் கழிக்க தன் பேச்சலர் அபார்ட்மெண்டையே கொடுத்துவிட்டு பனியில் இரவில் உலாவும் பரிதாப வேடத்துக்கு அவர் கொடுத்த அப்பாவித்தனமான காமெடி நேர்த்திக்கு ஆஸ்கார் ஜஸ்ட் மிஸ், அந்தப் படம் அஞ்சு ஆஸ்கார் வாங்கியும்.
நடிகர் Walter Matthau -ம் இவரும் வித்தியாசமான ஜோடி. ‘The Odd Couple' இல் தொடங்கி ஆறேழு படங்களில் உயர் ரக காமெடி.
'Irma la Douce’ ஐத் தழுவி இந்தியில் ஷம்மி கபூரின் Manoranjan வந்தபோது இவர் ரோலில் கலக்கியவர் சஞ்சீவ் குமார். ஷர்லி மெக்லீன் ரோலில் ஜீனத்!

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!