Wednesday, June 17, 2020

ரசிக்காத நாட்டியமுண்டோ....


ஆஸ்தான நர்த்தகி யாரென்று அரசவையில் போட்டி நடனங்கள். ஆடல் கலையில் தேர்ந்த அந்தப் பெண்ணும் ஆடுகிறாள். ஆனால் தாளம் தவறி விடுகிறது. ஆட்டம் தவிக்கிறது. தாளக்காரர்கள் வேண்டுமென்றே செய்தது. தனக்கு வேண்டியவளைக் கொண்டுவர தளபதி மனோகரின் சதி. அந்தப் பெண்ணை நிராகரிக்கையில் ஜெமினி குறுக்கிடுகிறார். தாளம்தான் தவறென்று வாதாடுகிறார். வேறு தாளக்காரர்களை அழைக்கிறார். ‘சாந்தா, நீ பாடு!’ சாவித்திரியை பாடச் சொல்கிறார். “கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு…” என்று இவர் பாட, அவை மயங்க ஆடுகிறார் அந்த நர்த்தகி.
அவர்தான் குமாரி கமலா. பரத நாட்டிய வித்தகி.
June 16. பிறந்த நாள்!
பரத நாட்டியத்தை பரதமறியச் செய்தவர்களில் ஒருவர். ஐந்து வயதில் நடனம் கண்டு நடிக்க அழைக்கப்பட்டவர். ‘ஶ்ரீவள்ளி’(1945)யில் பால வள்ளி. ‘மீரா’வில் பால கிருஷ்ணர்.
1947. A.V.M.-இன் முதல் படம். ‘நாம் இருவர்'. ஆடியன்ஸ் கைதட்ட ஆடிய நடனங்கள் இவருக்கு புகழ் அளித்தன. “மஹான், காந்தி மஹான்!” “வெற்றி எட்டுத் திக்கும்..” எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பாடல்: “ஆடுவோமே.. பள்ளுப் பாடுவோமே..” இசையரசி டி.கே. பட்டம்மாள் பாடலை இரட்டை வேடத்தில் இவர் ஆட, படுநேர்த்தியாக synchronize செய்திருப்பார்கள்.
ராஜ் கபூரின் ‘Chori Chori’ -யில் எம்.எல். வசந்தகுமாரி பாடும் தில்லானாவுக்கு ஆடும் நடனம் பிரமாதம் என்றால் ‘சுமைதாங்கி’யில் அந்த மயில் டான்ஸ் (“வானுலகம்.. தெய்வ சுகம்..”) மற்றொரு அழகு.
மருது பாண்டியரின் வீரம் சொல்லும் ‘சிவகங்கைச் சீமை’. கண்ணதாசனின் காவியம். “கனவு கண்டேன்.. நான் கனவு கண்டேன்..” என்று தன்னுடன் பாடிய கணவன் தூக்கிலிடப்படும்போது இங்கே இவர் கோவில் முன் ஓர் அதிராட்டம் ஆடுவார் பாருங்கள், அப்பப்பா! எத்தனை ஆக்ரோஷம்! எத்தனை அற்புதம்! பார்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய வசனம் இதுவாகத்தான் இருக்க முடியும்: ‘இதுபோன்ற ஒரு நடனம் முன்பும் வந்ததில்லை பின்பும் வரப்போவதில்லை’. விழிகளை உருட்டுவது என்ன.. விரல்களை மடக்குவது என்ன.. கைகளை வீசும் லாவகம் என்ன.. கால்கள் துள்ளும் உயரம் என்ன.. சுழன்று சுழன்று ஆடும் வேகம் என்ன... நாலரை நிமிடத்தின் கடைசிப் பகுதியில் இடி மின்னல் மழையில் ஆடியபடியே படிகளில் தவ்வி ஏறி, இறுதியில் படிகளில் உருண்டு விழுந்து மாய்வது வரை மண்டபம் குலுங்குகிறதோ, மனம் குலுங்குகிறதோ, கண்களைத் திரையில் இருந்து கணமும் எடுக்க முடியாது. இன்று வரை மனதில் இருந்து வெளியேற மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது அந்த நாட்டியம்!
அகிலனின் ‘பாவை விளக்கு’ 1960 -இல் படமானபோது செங்கமலம் பாத்திரம் இவருக்கு. மூன்று வித்தியாச நடனங்கள். “வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி..” “சிதறிய சலங்கைகள் போலே…” தவிர, "நான் உனை நினைக்காத நேரமுண்டோ.." பாடலில் ஆறு கமலாக்கள் ஆடுவது அச்சுப் பிசகாமல் அபாரமாக...
New York யூனிவர்சிடி ஒன்றில் பேராசிரியராக நாட்டியம் கற்றுக் கொடுத்தவர் பின்னர் அங்கே நாட்டியப் பள்ளி ஆரம்பித்தார். ‘பாரத் பூஷன்’ பெற்றது 1970 இல்.

Sunday, June 14, 2020

ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியவர்..

எப்படி எடுத்தார் அதை? நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி அந்த ஷாட். படம்: நெஞ்சில் ஒரு ஆலயம். “சொன்னது நீதானா…” பாடல். தரையில் அமர்ந்து தேவிகா பாட, கட்டிலில் அமர்ந்திருக்கும் முத்துராமனுக்கு பின்னால் மேலிருந்து மெல்லக் கீழே இறங்கி வரும் கேமரா கட்டிலின் அடியில் ஊர்ந்து தேவிகாவின் முகம் வரை சென்று, பின் அப்படியே மேலெழும்பும்.. (இந்தி ரீமேக் ‘தில் ஏக் மந்திரி’லும் அதே பாடலில் வரும் அந்த prestigeous ஷாட்.) அந்த ஏ ஒன் ஷாட்டை எடுத்தவர்….
ஏ. வின்சென்ட். இன்று பிறந்த நாள்!
தமிழ் ரசிகர்களுக்கு ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியவர். காமிராவைக் கவனிக்க வைத்தவர்.
‘உத்தமபுத்திரன்’ படத்தில் “உன்னழகை கன்னியர்கள்..” பாடல். பிருந்தாவனத்தில் அமர்ந்திருக்கும் சிவாஜியைத் தூரத்திலிருந்து பார்க்கும் பத்மினி... இருவரையும் ஒரே பிரேமில் காட்டணும். Zoom லென்ஸ் அப்போது இந்தியாவில் வந்திருக்கவில்லை. அங்கே வந்திருந்த டூரிஸ்ட் லேடியின் கேமரா லென்சை இரவல் வாங்கி அதை தன்னுடைய ஒரு 16mm மூவீ காமிராவில் பொருத்தி Zoom ஷாட்டாக அதை எடுத்து விட்டார். அதை 35mm க்கு பிராசெஸ் செய்த லண்டன் லேப்காரர்கள் அசந்து போனார்களாம்.
இவர் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் படமும் நேஷனல் அவார்டு பெற்ற முதல் மலையாளப் படமும் ஒன்று தான்: ‘நீலக்குயில்’ (1954)
“யாரடி நீ மோகினி?” பாடல் தொடங்கி கிரேன் ஷாட் இவரது ஃபேவரிட். “துள்ளாத மனமும் துள்ளும்”போதும், “இந்த மன்றத்தில் ஓடிவரும்”போதும், “மலரென்ற முகமின்று சிரிக்கும்”போதும்!
‘கல்யாண பரிசி'ல் “காதலிலே தோல்வியுற்ற..” பாடலுக்கு இரவில் ரயில்வே ஸ்டேஷன் விளக்குகளினூடே சரோஜா தேவி நடந்து செல்லும்போதும் சரி, மரங்களிடையே நடந்து ஜெமினியின் உருவம் மறையும்போதும் சரி மனதில் அப்படியே ஒட்டிக் கொள்கிறது என்றால் அந்த மனிதரின் ஓவியம் நாணும் காட்சியாக்கம் தவிர வேறென்ன?
Lighting Mask முறையில் அனாயாசமாக ரெட்டை வேட காட்சிகளை எடுத்திருந்தார் ‘எங்க வீட்டு பிள்ளை’யில் என்றால் ‘உத்தமபுத்திரனி'ல் ஃப்ரேமின் நடுவில் ஒரு சிவாஜி நிற்க மற்றொரு சிவாஜி சுற்றி வருவார்.
‘திரை மொழியின் எழுத்துரு ஒளிதானே?’ என்று அவரது ஒவ்வொரு ஷாட்டும் கேட்கும். ‘கௌரவம்' படத்தில் சிவாஜி உயிர் துறக்கும் அந்த கடைசி காட்சியில் மஞ்சள் சூரியனை பின்னணியிலும் reflection -லும் காட்டி அந்த மறைவைக் காவியமாக்கியிருக்கும் அழகே அழகு.
உணர்வை ஆழமாக்கவும் விறுவிறுப்பை அதிகரிக்கவும் காட்சிக்கான mood கொண்டு வரவும் ஒளிப்பதிவை எப்படி பயன்படுத்த முடியும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டுமா? வின்சென்ட் படங்கள் நாலைந்து பார்த்தால் போதும். ஏன் அந்த ஒரு படமே.. ‘இரு துருவம்’.
கண்ணால் பார்க்க முடிகிற எல்லா கோணத்திலும் காமிராவால் பார்த்தவர். 60,70 -களில் நீங்கள் மிகவும் ரசித்த பத்து படங்களை லிஸ்ட் போட்டால் அதில் நாலில் இவர் இருப்பார். கல்யாண பரிசு, விடிவெள்ளி, நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி, காதலிக்க நேரமில்லை, எங்க வீட்டுப் பிள்ளை, அவன் ஒரு சரித்திரம், கௌரவம், வசந்த மாளிகை, சவாலே சமாளி.....
இடைவேளை. காமிராவை இயக்கியவர் நடிகர்களையும் இயக்கத் தொடங்கினார். முதல் படமே, 'பார்கவி நிலையம்' (மலையாளம்) மாபெரும் ஹிட். தொடர்ந்து சுமார் 30 படங்கள்.
துலாபாரம் மலயாளத்திலும் தமிழிலும் அபாரமாக ... என்றால் சிவாஜி, கமலை வைத்து இயக்கிய 'நாம் பிறந்த மண்' அற்புதமாக இருக்கும்.
'நெஞ்சம் மறப்பதில்லை' இந்தக் கலை விற்பன்னரை.