Monday, January 23, 2023

புத்தகமே எழுதலாம்...


அவர் இயக்கிய அந்த ஒரே ஒரு படம் போதும் அவர் பேர் சொல்ல. இந்தியாவிலேயே மிக அதிக வசூல் ரிகார்ட் இன்றுவரை.

படம் ‘Sholay’ அவர் Ramesh Sippy. இன்று பிறந்த நாள்!
முதல் ரெண்டு வாரம் கூட்டமே இல்லை. பத்திரிகைகள் உதட்டைப் பிதுக்கின. க்ளைமாக்ஸை திரும்ப எடுத்து அமிதாப்பை பிழைக்க வைக்கலாமான்னு அவர் யோசிக்க... பார்த்தவர் வாய்மொழி வழி புகழில் அள்ளத் தொடங்கிய கூட்டம் நிற்கவேயில்லை. மராத்தா மந்திர் தியேட்டரில் ஐந்து வருடத்துக்கு மேல் ஓடிற்று..
அப்பா பெரிய புரட்யூஸராயிருந்தும் ஏழு வருஷம் அஸிஸ்டண்ட் டைரக்டராக இருந்தபின்னரே இயக்குனரானார்.
ஹேம மாலினி, ராஜேஷ் கன்னா, ஷம்மி கபூர் காம்பினேஷனில் இயக்கிய முதல் படமே (‘Andaz’) ஹிட்! அடுத்து ஹேமமாலின் தர்மேந்திரா சஞ்சீவ் குமாருடன் ‘Seeta Aur Geeta’. அதைவிட பெரிய ஹிட். அடுத்து Sholay. அதிரடி ஹிட்.
அப்புறம் நிறைய... குறிப்பாக 'Shakti'. லேசாய்'தங்கப் பதக்கம்' ஜாடை. திலிப் குமார், அமிதாப் இணைத்து memorable movie கொடுத்தார். ஷாருக்கானை இயக்கிய படம் ‘Zamaana Deewana’.
இன்னொரு படம். அது பெரிய ஹிட் ஆகவில்லை ஆனால் கமல் நடிப்பு அற்புதமாக இருக்கும். ‘Saagar’. தான் காதலிக்கும் டிம்பிள் நேசிப்பது ரிஷி கபூரை என்றறிந்ததும் அதை அப்படியே ஜாலி நட்பாக முகத்தில் பிரதிபலிப்பாரே கமல், அந்த சீன் கமல் மட்டுமே அத்தனை அழகாகச் செய்ய முடியுமென்று அறிந்திருந்தார் போலும்.
‘ஷோலே’ படத்தை பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். அதற்கு 'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?' என்று தலைப்பு வைக்கலாம். பிரம்மாண்டமான படங்களை எடுத்து வெற்றி பெறுவதற்கு வித்திட்ட படம் அது.

>><<

Sunday, January 22, 2023

ஆசானுக்கு ஆசான்...



நம்ம எல்லாருக்கும் ஆசான் அவர் என்று ஆசான் சார்லி சாப்ளினே புகழும் ஒருவர் உண்டு. ஆரம்ப சினிமாவின் பேரன்பர்.

D W Griffith... (1875 - 1948) இன்று பிறந்த நாள்!
எழுதிக் கொண்டு போய் கொடுத்த கதையை நிராகரித்து விட்டார் தயாரிப்பாளர். இருந்தாலும் மனம் தளராமல் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டு காத்திருந்தார் வாய்ப்புக்காக. வந்தது. டைரக்டர் ஆனார். முதல் ஐந்து வருடத்தில் கிட்டத்தட்ட 400 (மௌனப்)படங்களை தயாரித்தார். பெரும்பாலும் 12 நிமிட படங்கள்.
இன்றைக்கு திரையில் பயன்படுத்தப்படும் ஏராளம் உத்திகளுக்கு அன்றைக்கு வித்திட்டவரும் சத்திட்டவரும் இவரே. முக்கியமாக க்ளோஸப். மற்றொன்று fade in, fade out உபயோகித்து செக்வன்ஸ் பிரிப்பது. அப்புறம் கிராஸ் கட்டிங்: வேறு வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து ஒரே நேரத்தில் நடப்பதாக காட்டுவது. Flashback இவரது இன்வென்ஷன்.
கதையைச் சொல்லும் குரல் பின்னால் ஒலித்துக் கொண்டு இருந்ததை மாற்றி இசைக்கு இடம் பெற்றுத் தந்தார்.
1910 இல் இவர் தயாரித்த ‘In Old California’ என்ற சிறிய படம் தான் ஹாலிவுட்டில் தயாரான முதல் படம். ‘Lights! Camera! Action!’ முதன் முதலில் சொல்லப்பட்டது அப்போது தான்!
United Artists கம்பெனி பிறந்தது. சார்லி சாப்ளின் முதலானோருடன் சேர்ந்து ஆரம்பித்தார் அதை.
வரலாறு காணாத வசூல் என்பார்களே, வரலாறு கண்ட முதல் ஏகப்பட்ட வசூல் படம் இவருடைய ‘The Birth of a Nation’. அடுத்த பிரபல படம் ‘Intolerance.’ பிரம்மாண்ட செட்டுகள். அப்போதே 3000 துணை நடிகர்கள்! மற்றொரு முக்கியமானது இவரது முதல் பேசும் படம் ‘Abraham Lincoln’.
பெரிய பட்ஜெட்டாக போடுவார்... அதனாலேயே பின்னர் பெரிய நஷ்டம் அடைந்தார்.
>><<

Saturday, January 21, 2023

மூன்று முறை...


மூன்று முறை மரணம் நெருங்கிற்று அந்தச் சிறுவனை. ஒரு முறை கார் மோதியது. மற்றொரு முறை குதிரையிலிருந்து தவறி விழுந்தான். ஒரு பூகம்பத்தின்போது, தொங்கிக் கொண்டிருந்த மூன்றாம் மாடியறையிலிருந்து மீட்கப்பட்டான்.
இப்படி உயிர் பிழைத்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு உடல் கட்டமைப்பில் நாட்டம் வரக் காரணமாயிருந்த க்ரேட் ஹீரோ.
ஸ்டீவ் ரீவ்ஸ் நடித்த என்று பெரிதாக போஸ்டரில் போட்டு விளம்பரம் வரும், 1950 களில்! ஆஜானுபாகுவான என்றால் இப்படீன்னு காட்டுகிற நடிகர். புஜபல பராக்கிரமத்தால் ஜெயிக்கிற வாள்சண்டைப் படங்கள்.
Steve Reeves… இன்று பிறந்த நாள்!
மார்பு 52''க்கு அகன்று உடம்பு 6' 1” க்கு உயர்ந்தவர். அள்ளிய கோப்பைகளிலும் படிப்படியாக உயர்ந்தார். 1946-இல் Mr. Pacific Coast, 1947-இல் Mr. America, 1948-இல் Mr. World, 1950-இல் Mr. Universe!
மிலிடரியில் இருந்தபோது செய்த ட்ரக் லோடிங் வேலையும் ஜிம் பயிற்சியும் மிகவும் உதவியிருந்தது கட்டான உடலமைப்புக்கு. 400பவுண்ட் எடையை ஜஸ்ட் நுனி விரல்களால் இடுப்பு வரை உயர்த்துவார் அனாயாசமாக. வாரம் 3 முறை பயிற்சி செய்து வாழ்நாள் முழுக்க உடலைக் கச்சிதமாக வைத்திருந்தவர்.
ஹீரோவாகலாம் என்று ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவரை முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய வேடங்கள்.
15 பவுண்ட் எடை குறைக்கச் சொன்னார் சிசில் பி டிமிலி. அந்தப் பிரசினையில் இழந்த படம் 'ஸாம்சன் அன் டிலைலா' ரொம்ப நாளாச்சு, அடுத்த சரியான ரோல் கிடைக்க.
அதான் 'ஹெர்குலிஸ்'! அந்த ஒரே படத்தில் உலக அளவில் ஸ்டார்! அடுத்து ‘Hercules Unchained.’ 25 நாடுகளில் வசூல் மன்னர். ஐரோப்பாவிலேயே அதிக சம்பள ஹீரோவானார். இவரது படமொன்று இரண்டு வருடமாக ஒரு தியேட்டரில் 24 மணி நேரமும் திரையிடப்பட்டு ஓடியதாம்.
கச்சிதமான உடலமைப்புக்கு காலாகாலத்துக்கு ரோல் மாடலாக இருந்தவர். கணக்கில்லா ரசிகர்கள். எங்கே சென்றாலும் ஆரவாரம். ஜம்மென்று ஜிம்முக்குப் போக ஆரம்பித்தனர் வாலிபர்கள். இன்றைக்கும் இருக்கிறது ரசிகர் மன்றம்.
வரிசையாக வந்தன... ‘Goliath and the Barbarians’, ‘The Thief of Baghdad’, ‘The Last Days of Pompeii’...
குதிரையில் துரத்தும் காட்சிகளுக்கு டூப் வேண்டாம், பிரமாதமாக ஓட்டுவார். Sylvester Stallone, Arnold Schwarzenegger-க்கு ரோல் மாடல் இவர்தான்.
‘The Last Days of Pompeii’ ஷூட்டிங்கில்.. ஓட்டிய ரதம் தடம் புரண்டு மரத்தில் மோத, தோள் பட்டை இடம் பெயர்ந்தது.
ஹெர்குலிஸ் படத்தில் செயினை உடைத்துக்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி. செயின் இரும்பு இல்லை, மரம்தான். என்றாலும் அடித்தால் காயம் பலமா இருக்குமே? அடிப்பது மாதிரி இழுத்தார். டைரக்டர் சொல்கிறார், பலமா அடிய்யா என்று.
காயம் படுமே சார்? - இவர்.
பட்டால்தான்யா அவங்களுக்கு சம்பளம்! என்று கத்தினாராம் அவர்.

>><<

Thursday, January 19, 2023

ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்தவர்..



அவருடைய திரைக் காலத்தை அவ்வளவு எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது. இன்றைக்கு நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் ஃபார்முலாவாக இருக்கும் ஹரர் படங்களுக்கு. அந்தக்காலத்திலேயே ராஜாவாக இருந்தவர். ஆடியன்ஸ் பல்ஸ் அறிந்து பதார்த்தம் பரிமாறியவர்.

பி. விட்டலாச்சார்யா… ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்தவர் வெள்ளித் திரையில். இன்று பிறந்தநாள்!
1978 -ல் வெளியான ஜெகன் மோகினியை யாரால் மறக்க முடியும்? பெரிய நட்சத்திரங்களின் படங்களையே வசூலில் ஓரம் கட்டிய படமாச்சே? சில்வர் ஜூப்ளி ஹிட், தெலுங்கிலும் தமிழிலும்! முன் ஜென்மத்தில் காதலித்து கைவிட்ட அரசனை அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்து பழிவாங்கும் பெண்ணின் கதை மீது யாருக்குத்தான் பிரேமை இராது? 2009 -இல் மறுபடியும் ரீமேக் ஆகிற அளவுக்கு பாப்புலராகிய படம். (இளையராஜா இசையில் என் கே விசுவநாதன் இயக்கினார். ஜெயமாலினி 'ரோலி'ல் நடித்தார் நமிதா..)
‘ஸ்ரீனிவாச கல்யாணம்’... ‘வீராதி வீரன்’... பக்தி படங்கள் சில. ஸ்டண்ட் படங்கள் பல… ’நாடோடி மன்னனை’ தெலுங்கில் எடுத்தார். அதைத்தவிர என் டி ராமராவை வைத்து 18 படங்கள் இயக்கினார்.
எளிய ரசிகரின் பொன்னான நேரத்தை ஃபன்னாக்கி மகிழ்வித்த வித்தகர். ‘மாயாஜால மன்னன்’ என்று ரசிகர்கள் அழைத்த விட்டலாச்சாரியாவின் படங்கள் துட்டள்ளியதில் ஆச்சர்யம் இல்லை.
கிராபிக்ஸ் இல்லாத காலத்தில் வெறும் மார்ஃபிங்கை வைத்தே திரையில் சாகசம் வரைந்தவர். டப்பிங் படங்கள் தப்பாமல் வசூல் தர ஆரம்பித்தன. ஐம்பதுகளில் ஆரம்பித்த இவர் சாம்ராஜ்யம் தொண்ணூறுகள் வரை நீடித்ததென்றால் வேறென்ன சொல்ல வேண்டும்?

கனவையும் வாழ்வையும்...



உலக சினிமாவில் உயர் தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவர்... 12முறை நாமினேட் செய்யப்பட்டு 4 முறை best foreign film ஆஸ்கார்!

Fellini. இன்று பிறந்தநாள்!
கனவையும் வாழ்வையும் தன் படங்களில் கலந்தளிப்பது ஃபெலினியின் பாணி. ‘Felliniesque’ என்று இவர் பாணியை ஒரு வகையாக்கி அதற்கொரு வார்த்தையையும் கொடுத்தாச்சு.
காமிக்ஸுக்குத்தான் முதலில் வசனம் எழுதிக் காமித்தார்.
பத்திரிகையில் வேலை. பேட்டி கண்ட பிரபல நடிகர் நண்பராகிவிட, அவர் நடித்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுத வாய்ப்பு. அப்படியே டைரக்டரானார்.
Paparazzi என்றால் அறிவீர்கள். பிரபலங்களைப் படம் எடுப்பவர்களை அப்படி அழைப்பாங்க. அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது இவரது ‘La Dolce Vita’ படத்தில் வந்த ஒரு போட்டோகிராஃபரின் பெயரிலிருந்துதான்.
உலகின் தலைசிறந்த படங்களில் 10 வது படமாக இவரது '8 1/2' என்ற படம் 1963 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப்படம் எடுக்க ஆரம்பிக்கும்போது இவருக்கு தான் என்ன எடுக்க வந்தோம் என்பதே மறந்துவிட அதையே ஒன் லைனாக தீர்மானித்து படத்தை எடுத்துமுடித்தார். (பிரபல Marcello Mastroianni தான் ஹீரோ.)
Amarcord, Roma: மற்ற இவரின் பிரபல படங்கள்.
பிரபல சுவிஸ் மனோதத்துவ நிபுணர் Carl Jung கருத்துக்களால் கவரப்பட்டார். இவரது படங்களில் அவை மிளிரும்.
Quote?
'இன்னொரு மொழி என்பது வாழ்வை இன்னொரு பார்வை.'
'எல்லா கலைகளுமே சுய சரிதைதான். முத்து என்பது நத்தையின் சுயசரிதை.'

Saturday, January 14, 2023

ஒரே வருடத்தில்...


ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்காக ஆஸ்கார் நாமினேஷன் பெற்ற ஹாலிவுட் டைரக்டர்! 60 வருடமாக எந்த டைரக்டருக்கும் கிடைக்காத பெருமை! படங்கள்: 'Traffic' & 'Erin Brockhovich'. அதில் ‘ட்ராஃபிக்' க்கு க்ரீன் சிக்னல் கிடைத்தது.

26 வயதிலேயே தன் படத்துக்கு Cannes Film Festival அவார்ட் வாங்கியது மற்றொரு ரிகார்ட். (‘Sex, Lies and Videotape’)
யார் இந்த அட்டகாஷ்? Steven Soderbergh! இன்று பிறந்த நாள்!
ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் தான் தெர்யும், இவர்..? என்று மருகுபவர்களுக்கு ‘Ocean’s Eleven’ படத்தின் டைரக்டர்னு சொன்னால் உடனே பரிச்சயமாகிவிடுவார்.
அப்புறம் வரிசையாக ‘Ocean’s Twelve’, ‘Ocean’s Thirteen’…அமர்க்களப்படுத்திய படங்களாயிற்றே!
நகரின் சுற்றுப்புற சூழ்நிலையை பாதித்த ஒரு பெரிய கம்பெனியை தனியொரு மனுஷி எதிர்த்துப் போராடி ஜெயிப்பதுதான் ‘Erin Brockovich’வின் கதை. நடித்த Julia Roberts க்கு கிடைத்த அகாடமி அவார்டுடன் வசூலையும் அள்ளிக் குவித்தது இந்த அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டின் அந்த வருட டாப் டென்னில் ஒன்று.
'Traffic' வேறு மாதிரி. போதைப் பொருட்கள் நடமாட்டத்துக்கு எதிரான போராட்டம் பற்றி சொல்வது. (படத்தில் ஒரு சீன் கூட சேர்ந்து தோன்றாத Michael Douglas-ம் Catherine Zeta-Jones-ம் படம் முடிந்ததும் மணந்து கொண்டார்கள்.)
பதின்ம வயதினிலே பதினாறு மி.மீ. குறும் படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்ட ஸ்டீவென் ஸாடெர்பெர்க் சிறந்த காமெரா மேன் கூட.
மறக்க முடியாத மற்றொரு படம் அவரது பிரபல ‘Gray’s Anatomy’
Quote? 'நியாயத்தை எதிர்பார்த்தால் நீங்கள் தவறான உலகத்தில் இருக்கிறீர்கள்!'
‘கூப்பிட்டு ‘எனக்கு பயமாயிருக்கு’ன்னு சொல்ல வாழ்க்கையில் ஒரு ஆள் உங்களுக்கு இல்லையெனில் உங்கள் வாழ்க்கை சுவையற்றது, நிறைவேறாதது, மேலோட்டமானது. நம்பிக்கையோடு சென்று உதவி கேட்க ஓர் ஆள் உங்களுக்கு வேண்டும்.’