Wednesday, July 15, 2020

மேக்னிஃபிஸெண்ட் நடிகர்..

அந்த நாடகத்தில் நடிக்கும்போது அவர் யாரையும் தன்னை மேடைக்குப் பின்னால் சந்திக்க விடுவதில்லை. 4000 தடவைக்கு மேல் நடித்து அவர் பிரபல டோனி அவார்டு வாங்கிய நாடகம் ஆயிற்றே? "சிஸில் பி டிமிலி என்று ஒருத்தர் வந்திருக்கிறார், அதி முக்கிய விஷயமாம்!" விட்டால், உள்ளே வந்தவர், 'உங்க பேரப் பிள்ளைகள் பார்த்து ரசிக்க போகிற படத்தில் நடிக்க விருப்பமா?' என்று கேட்டார். இவர் தலையாட்ட, அவர் அளித்த அதி உன்னத ரோல் தான் ‘The Ten Commandments’ படத்தின் Rameses.
அந்த நடிகர்… Yul Brynner.
பேரைச் சொன்னாலே நினைவுக்கு வருவது அவரின் மழித்த தலையும் விழித்த கண்களும் தாம்! கம்பீரக் குரல் நம் காதில் ஒலிக்கும். ரொம்ப விசேஷம் அவரது அசத்தல் நடை.
அந்த நாடகம் (‘The King and I’) படமானபோது ஆஸ்கார் அவார்ட் காத்திருந்தது. பரிசை வாங்கும் போது இவர் சொன்னது: நல்லா பார்த்துத்தான் கொடுத்திருக்கீங்கன்னு நம்புகிறேன், ஏன்னா என்ன தந்தாலும் இதை நான் திருப்பித்தர மாட்டேன்!
The Magnificent Seven இலும் Return of Seven இலும் மேக்னிஃபிஸன்டாக நடித்த யுல் ப்ரைனர் புகைப்படங்கள் எடுப்பார். படத்தின் ஸ்டில்களாக உபயோகிக்கும் அளவுக்கு அட்டகாசமாக!
தன்னை விட ஐந்தே வயசு சின்னவரான Tony Curtis க்கு அப்பாவாக, டாரஸ் பல்பாவாக நடித்த படம் ‘Taras Bulba’. அற்புதமான நாவல். அப்படியே திரையில் பிரதிபலிக்க அரும்பாடு பட்டவருக்கு அவர் காட்சிகளைக் குறைத்ததில் சற்று வருத்தம்தான். 'Escape From Zahrain' -இல் பாலைவனத்தினூடே தன் ஆட்களை அழைத்துக் கொண்டு தப்பித்து வரும் காட்சிகளில் பதைபதைக்க வைத்திருப்பார்.
தற்கொலை செய்யவிருந்த பெண்ணைக் காப்பாற்றுகிறான் அவன். கருணையினால் அல்ல. அவளை ஓர் இளவரசியாக நடிக்க வைத்து அவள் பேரில் போடப்படும் பணத்தை அபகரிக்க. பிரபல Ingrid Bergman உடன் இவர் நடித்த ‘Anastasia’....
மற்றொரு படம் ‘Morituri’. இரண்டாம் உலகப் போர்க்காலம். அந்த சரக்குக் கப்பலை கைப்பற்ற அதிலேயே ஆபீஸராக, பிளாக் மெயில் செய்யப்பட்டு அனுப்பப்படும் மார்லன் பிராண்டோவுக்கும் கப்பலைக் காப்பாற்ற போராடும் கேப்டன் யுல் ப்ரைன்னருக்கும் கதையிலும் நடிப்பிலும் நடக்கும் போராட்டத்தில் இருவருக்குமே வெற்றி என்பது அந்தக் கடைசிக் காட்சியே சாட்சி. கப்பலில் இருந்தவர்கள் அனைவருமே இறந்துவிட, இவர்கள் இருவர் மட்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் நடந்ததை சொல்லி நகைப்பதும்.. Allies க்கு தகவல் அனுப்பச் சொல்கிறார் பிராண்டோ. மறுக்காமல் ரேடியோவை இயக்குகிறார் பிரைன்னர்.
‘Westworld’(1973) -ல் ரோபோவாக நடித்ததுதான் கடைசி ரோலோ என்றால் ஆம்.

Tuesday, July 14, 2020

மிஞ்சும் இனிமை...


ஹ்ருத்திக் ரோஷன் 2000-த்தில் ‘Kaho Na Pyar Hai’ என்று கலக்கிய திரையுலகை அவர் தாத்தா 1963 -இலேயே கலக்கியிருந்தார். ஒரு மியூசிக் டைரக்டராக! அந்த வருடம் வெளியான அவரின் ‘Taj Mahal’ பாடல் “Jo Wada Kiya Hai…” ஒலிக்காத திசை இல்லை. ஃபிலிம்ஃபேர், பினாகா கீத்மாலா என்று முதலிடம் பெறாத போட்டியில்லை.
ரோஷன்.. இன்று பிறந்த நாள்.
கொஞ்சம் படங்களே, ஆனால் மிஞ்சும் இனிமை பாடல்களில். அரை நூற்றாண்டு காலம்தான் வாழ்ந்தார். குறைவில்லாத மியூசிக் தந்தார்.
ரேடியோவில் ஒலித்த தன் இசை, திரை ஆடியோவில் ஒலிக்கவேண்டும் என்று மும்பை வந்தவரின் திறமை பார்த்து கிதார் சர்மா தன் படத்தில் வாய்ப்பு தந்தார் “Khayalon Mein Kisi Ka…” என்ற அந்த ‘Bavre Nain’ (Raj Kapoor) பாடல் அவரை உச்சியில் கொண்டு நிறுத்தியது.
மன்னாடேயின் அதி சிறந்த பாடல்களில் ஒன்றாக எல்லோரும் சொல்வது இவர் பாடலைத்தான். கேட்டுக் கொண்டே இருக்கலாம் அதை.. “Laaga.. Chunri Mein Daag.." (Dil Hi To Hai) ராஜ்கபூர் பாட ஆடுவது, ஆம், பத்மினி பிரியதர்சினி! “என் முகத்திரையின் களங்கத்தை எப்படி ஒளிப்பேன்? எப்படி என் வீட்டில் என் முகத்தைக் காட்டுவேன்?” என்று தொடங்கும் அந்தப் பாடல் ஆழமான பொருள் கொண்டதும் கூட (“உலகின் இன்பங்களில் சுகம் கண்ட நான் எப்படி சொர்க்கத்தில் நுழைவேன்..”) . (முதல் கமெண்டில் லிங்க்)
‘காவியத்தலைவி'யின் இந்தி மூலமான ‘Mamta’வில் வரும் “Rahena Rahe Ham.." பாடல் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கக்கூடும். சொல்லாவிட்டாலும் நினைவு வரும் பாடல்கள்...“Dil Jo Na Kah Saka Hai…”( Bheegi Raat) “Baharon Ne Mere..." (Devar)
இசைக்கருவிகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்ற ரோஷன், ஒரே பாட்டிலேயே ரிதம் மாற்றிக் கொடுப்பதில் வல்லவர். அற்புதமாய் Gazal அமைப்பார் என்பதை “Ab Kya Misaal Doon…” என்ற ‘Aarti’ பட பாடல் சொல்லும்.
Ira Roshan, இவரது மனைவி, Krishna Kanhaiya Ram Ramaiya என்ற பஜனைப் பாடல் தொகுப்புக்கு இசையமைத்திருக்கிறார். பாடியது அனுராதா படுவால் & சுரேஷ் வடேகர். கணவரின் கடைசி படத்தின் இசையை நிறைவு செய்தது இவர் இசையே.
மூத்த மகன் ராகேஷ் ரோஷன் நடிகர் என்றால் இளைய மகன் ராஜேஷ் ரோஷன் மிகப்பெரிய மியூசிக் டைரக்டர்.

தேடிய ஹீரோ....

கரப்ஷனுக்கு எதிராகப் போராடும் கடுமையான போலீஸ் அதிகாரியின் கதையைப் படமாக்க விரும்பினார் அந்த டைரக்டர். ஷோலே கதாசிரியர்கள் சலீம்-ஜாவேத் எழுதியது. டயலாக் டெலிவரி முக்கியம். அதற்குப் பிரபலமான ராஜ்குமாரைத் தேடிக்கொண்டு போனார். மறுத்துவிட்டார். 
தர்மேந்திராவிலிருந்து தேவானந்த் வரை கேட்டுப் பார்த்தார். நடக்கவில்லை. ரொமாண்டிக் சீசன் அது. ஹீரோவுக்கு டூயட் இல்லாத கதை இது. விரும்பி வருவார்களோ? நான் ஒரு நடிகரை காட்டுகிறேன் என்று பிரான் அவரை அழைத்துக்கொண்டு போனார் ஒரு படத்துக்கு: ‘மதராஸ் டு பாண்டிச்சேரி’ ரீமேக்கான ‘பாம்பே டு கோவா’. அந்த உயரமான நடிகரை புக் பண்ண முன்வந்தார். விநியோகஸ்தர்கள் பின்வாங்கினர். வேறு வழி? சொந்தமாக ரிலீஸ் பண்ணினார். முதல் வாரம் ஆள் இல்லை. இரண்டாவது வாரம் டிக்கட் இல்லை. கூட்டம் அலைமோதிற்று. Blockbuster என்று சொன்னால் understatement!
‘ஆங்க்ரி யங் மேன்’ பிறந்தார். அமிதாப் நமக்கு கிடைத்தார்.
படம் Zanjeer. அவர் Prakash Mehra. 
ஐந்து வயதில் அம்மா இறந்து விட, எட்டு வயதில் அப்பா கைவிட, பதின்மூன்று ரூபாயுடன் பம்பாய்க்கு ஓடி வந்தவர். ஸ்டுடியோவில் சின்னச் சின்ன வேலைகள் .. புரடக் ஷன் அசிஸ்டன்ட்.. அசிஸ்டன்ட் டைரக்டர் என்று வளர்ந்தவர் எடுத்த முதல் படம் சஷி கபூர் நடித்த ‘Haseena Maan Jayegi.’
‘Zanjeer’ பாதை வகுக்க, வரிசையாக ஹிட் படங்கள் அமிதாப்புடன்: Namak Halaal, Laawaris, Mugaddar Ka Sikandar (தமிழில் சிவாஜி), Hera Pheri, Khoon Pasina. கமல், ஜெய் கலக்கிய ‘சவால்’ இவரது ‘Haath Ki Safai’ ரீமேக்.

Thursday, July 9, 2020

காகிதப் பூக்கள்....


அந்தப் பெரிய அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறாள் அந்தப் பெண். உள்ளே ஒரு தெருவே இருக்கிறது. ஓரமாய் ஒரு குடிகாரன். மிரட்சியுடன் அவள் நோக்க, அரை டஜன் விளக்கு வெளிச்சம் அவள் மீது பாய, காமிராவுடன் க்ரேன் ஒன்று கீழே இறங்கி வர, திகைப்பும் திகிலுமாக அவள். மழையில் உதவிய சினிமா டைரக்டரிடம் ரெயின் கோட்டைத் திருப்பித்தர ஸ்டூடியோ வந்தவள் அல்லவா அவள்?
ரஷ் பார்த்த டைரக்டர் அவள் முகபாவங்களில் அசந்து போக, அவர் தேடிய கதாநாயகி கிடைத்து விடுகிறாள். ஏற்கனவே மணமுறிவில் மனைவி, குழந்தைகளை பிரிந்து மனமுறிவில் இருக்கும் அவர் வாழ்வில் அவளால் மேலும் ஒரு முடிச்சு என்று தொடர்கிறது படம்.
‘Kaagaz Ke Phool’ இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படம். படத்தில் டைரக்டராக நடித்த படத்தின் டைரக்டர் குருதத். ஆம், மறக்கமுடியாது குருதத்! இன்று பிறந்த நாள்...
39 வயதில் மறைந்துவிட்ட முன்னணி நடிகர் -டைரக்டர். கமெர்சியல் படங்களை கலாபூர்வமாக எடுத்தவர். இவரின் ‘Pyasa’ டைம் மாகஸின் தயாரித்த உலகின் 100 சிறந்த படங்களில் ஒன்று. (திலீப் குமார் நடிக்க வேண்டிய படம். பூஜை நாளில் அவர் வரத் தாமதமாகிவிட, குருதத்தே நடித்தார்.) ‘Chaudvin Ka Chand..’ படத்தையும் சரி, பாடலையும் சரி மறக்கவே முடியாது. அப்புறம் ‘Sahib Bibi Aur Ghulam’, ‘Mr. & Mrs. 55’, ‘Aar Par’...

ஆரம்ப காலத்தில் தேவ் ஆனந்தும் இவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். தேவ் படமெடுத்தால் இவர் டைரக்டர், இவர் படம் எடுத்தால் தேவ் ஹீரோ என்று. அப்படி இவர் தேவ் ஆனந்தை வைத்து எடுத்த படம் தான் ‘C. I. D.’ என்ற மிகப் பெரும் ஹிட்.
அப்படி இவர் டைரக்ட் செய்த தேவ் படம் ‘Baazi’ அந்தப் படத்துக்கு பூஜை அன்று பாடவந்த கீதா ராய் பாடிய பாடலில் அசந்து போனார் குருதத். விரைவில் கீதாராய், கீதா தத் ஆனார்.
கார் ஆக்சிடெண்ட் ஒன்றினால் ஹைதராபாத்தில் மூன்று நாள் தங்க வேண்டி வந்தபோது இவர் காண நேர்ந்தது தெலுங்கு பட ஆடல் காட்சி ஒன்று. விளைவாக இந்தியில் அறிமுகமாவர்தான் வஹிதா ரஹ்மான்.
கமலுக்கும் இவருக்கும் ஓர் ஒற்றுமை. ஆரம்ப காலத்தில் நடன இயக்குநர்.
‘வாழ்க்கை என்கிறது ரெண்டே வார்த்தை தான்: வெற்றி, தோல்வி! இரண்டுக்கும் நடுவில் வேறு எதுவும் கிடையாது,’ என்பார் சிரித்துக் கொண்டே.
100mm லென்ஸைப் போட்டு இவ்ர் எடுக்கும் க்ளோஸ் அப் குருதத் ஷாட் என்றே பிரபலமாகிவிட்டது. பாடல்களை இவர் படமாக்குவது கிடையாது. எல்லாமே கவிதைகள்தான். ஃப்ரேம்களில் உணர்வு பூசப்பட்டிருக்கும். நிழல்களால் ஓவியங்கள் வரையப் பட்டிருக்கும்! 14 வயதினிலே விளக்கொளியில் விரல்களால் சுவற்றில் நிழல் பிம்பங்கள் காட்டியவராயிற்றே?
ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படம் ‘Love and God’ இவர் மறைவால் நின்றது. பின்னால் அதில் சஞ்சீவ் குமார் (இதே பிறந்த நாள்) நடித்தார்.

Wednesday, July 8, 2020

எண் கை பூதம்...

I Q test என்று ஒன்று வைக்கிறார்களே, அவரவர் திறமையை அங்குலம் சுத்தமாக அளந்து சொல்ல? அதை ஆரம்பித்து வைத்தவருக்கு இன்று பிறந்த நாள்!
Alfred Binet...
சட்டம் பயின்ற இந்த பிரெஞ்சுக்காரர் சட்டென்று அதை உதறக் காரணமாயிருந்தது ஹிப்னாஸிஸ் பற்றி அவர் படித்த ஒரு புத்தகம். சைகாலஜியில் பையக் காலை வைத்தார். தானே பயின்றார். இருநூறு புத்தகம் எழுதியது அதில்தான்.
பள்ளியில் கற்றுக் கொடுப்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத மாணவர்களை கண்டெடுத்து தனியே பயிற்சி கொடுக்க, ஒரு டெஸ்ட் தயாரிக்கச் சொல்லிவந்தது ஓர் வேண்டுகோள் அரசிடமிருந்து அவருக்கு. நண்பர் சைமனுடன் சேர்ந்து முதலாவது ஐ.க்யூ. டெஸ்டை அவர் தயாரித்த வருடம் 1905.
அதை அடியொற்றி ஏகப்பட்ட இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் வந்து விட்டன. பத்து வருடத்தில் அமெரிக்காவில் காலை வைத்த இவரது டெஸ்ட், ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியால் வார்த்தெடுக்கப்பட்டு இன்றளவும் பாப்புலர்.
இப்படி எல்லாம் ஒன்றும் புத்திசாலித்தனத்தை ஒரு நம்பருக்குள் கொண்டுவந்துவிட முடியாது, பல்வேறு திறமைகளை உள்ளடக்கியது அது, காலம் சூழ்நிலை மோடிவேஷன் போன்ற ஏகப்பட்ட காரணங்கள் அதை எளிதாக மாற்றிவிடும், ஒரே மாதிரி பின்னணியில் உள்ள குழந்தைகளையே ஒப்பிட இயலும் என்ற கருத்தையும் அவரை விட்டு சென்றிருக்கிறார்.
உதா ஒன்று: பெற்றெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட சகோதர சகோதரிகளின் ஐ. க்யூ. தத்தெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டவர்களைவிட அதிக ஒற்றுமையாக இருக்கும். இப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள் இப்போது.
ஆக, ஐ க்யூவை ஒரு ஹைக்கூவாக சொன்னால்…
‘எண் பாட்டிலில்
அடைக்க முடியவில்லை அதை.
எண் கை பூதம்.’

Sunday, July 5, 2020

களமாடியதில் உளமாடியவர்...

சர்க்கஸ் கூடாரம் ஒவ்வொன்றும் சொல்லும் பெயர் பார்னம். இத்தனைக்கும் அவர் தன் 60 வயதுக்கு மேல், இறங்கிய ஒவ்வொரு தொழிலிலும் சக்சஸ் பெற்றபின் தான் சர்க்கஸ் தொடங்கினார். .
அட்வெர்டைஸிங்கின் ஷேக்ஸ்பியர் என்கிறார்கள் அவரை. விளம்பர மன்னர்.
P T Barnum... இன்று பிறந்த நாள்!
மிட்டாய் தின்னும் வயதிலேயே மிட்டாய் விற்க ஆரம்பித்தவர். வயது 21 -இல் ஒரு  ஸ்டோர், ஒரு லாட்டரி பிசினஸ், ஒரு பத்திரிகை (Herald of Freedom) மூன்றுக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டிருந்தார்.
விசித்திர, புராதன, அதிசய பொருள்களைக் கொண்டு தொடங்கினார் தன் மியூசியத்தை 31 வயதில். அமெரிக்காவின் முதல்  அக்வேரியம் அவருடையதுதான். Fejee Mermaid என்ற மச்சக்கன்னி மற்றொரு ஹிட். 1871-இல் அது நடமாடும் மியூசியமானது. மொத்த அயிட்டங்களின் எண்ணிக்கை எட்டரை லட்சம்.
ஒட்டிப் பிறந்த பிள்ளைகளை Siamese Twins என்று சொல்லுவதற்குக் காரணமாயிருந்த அந்த ஒரிஜினல் சயாமீஸ் ரெட்டையர்களைப் ( Chang, Eng )  பற்றிக் கேள்விப்பட்டாரோ இல்லையோ, ஓடிச்சென்று சேர்த்துக் கொண்டார் அவர்களைத் தன் குழுவில் . 
ஐரோப்பியர் காதுகளை தன் soprano-க்களால் குளிர்வித்துக் கொண்டிருந்தார் ஜென்னி லிண்ட்.  ஒபேரா  பாடகி. ஒப்பேறுமா இங்கே என்று ஒரு கணமும் தயங்கவில்லை. ஒப்பந்தம் போட்டார். ஒன்றுக்கு 1500 டாலர் என்று150 நாளைக்கு. ‘ஸ்வீடிஷ் நைட்டிங்கேல்’ என்று அட்டகாசமாக அட்வெர்டைஸ்மெண்ட் செய்ய, நியூ யார்க்கில் லிண்ட் காலை வைத்தபோது முண்டியடித்துக் கொண்டு காண வந்தவர்கள் முப்பதாயிரம் பேர்.  ஆக, ஐந்து லட்சம் டாலர் வசூலித்து விட்டார். இருவரிடையே காதல் என்று வந்தது வெறும் வதந்தி. 
ரெண்டு முறை தீ விபத்து என்று விதி சர்க்கஸ் காட்ட, சர்க்கஸ் பிசினஸில் காலை வைத்தார். Arena இன்னும் விரிந்தது.
ஜம்போ சைஸ் என்று சொல்கிறோமே, அந்த வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? லண்டனில் இருந்து இவர் வாங்கி வந்த பத்தடி உயர யானைக்கு இவர் இட்டபெயர் ஜம்போ. மூன்று வருடம் அது இவர் சர்க்கஸில் முக்கிய அட்ராக் ஷன். 25 அங்குல உயர மனிதர் சார்லஸ் ஏற்படுத்திய விற்பனை மட்டுமே ரெண்டு கோடி டிக்கட்.  சேர்த்து மொத்தம் எட்டு.
ப்ரூக்லினில் புதிதாய்ப் போடப்பட்ட பாலம் பலவீனம் அல்ல என்று காட்ட, அதில் தங்கள் பட்டாளத்தை, யானை 21 ஒட்டகம் 17, நடக்க விட்டதில் பணத்தோடு போனஸாக கிடைத்தது சரியான விளம்பரம்!

இவர் கதை படமாக 2017 இல் வந்தது ‘The Greatest Showman’.  பார்னம் அவர்களை படா ஸ்டைலாக அமர்க்களப் படுத்தியவர் Hugh Jackman. அதில் பார்னம் சொல்லும் பஞ்ச் லைன் ஒன்று: "வெளிப்படையா ஒத்துக்காவிட்டாலும் வெளிநாட்டிலேர்ந்து வந்ததாவோ, பயங்கரமாவோ இருந்தா மக்கள் அதால கவரப் படறாங்க. கண்ணை அகல விரிச்சுப் பார்க்கிறது அதனாலதான்."
1891 இல் அவர் மறைய, அவர் காலத்துக்குப் பின்னும் பல்லாண்டு நீடித்த அந்த உலகின் முதல் த்ரீ ரிங் சர்க்கஸ் தன் கதவை மூடியது 2017 இல்தான்.

Friday, July 3, 2020

மனதில் மங்காத ‘வாவ்’!

அப்பா ரோலுக்கான ஜிப்பா, தப்பாமல் பொருந்துவது இவருக்குத்தான்.
கம்பீரம், கண்டிப்பு, கனிவு மூன்றையும் கொடுப்பதில் அப்படி ஒரு கச்சிதமான மிக்ஸ்!
பாத்திரத்தின் பாதியை முக பாவமே நிரப்பி விடும். மீதியை அந்தக் குரல்.
ரங்கா ராவ்...இன்று பிறந்த நாள்!
இவரை நினைத்தாலே போதும் அப்பாவின் வசனம் தானாக தோன்றிவிடும் வசனகர்த்தாவுக்கு!
ஏழை அப்பாவாக ரங்கா ராவ் என்றால் இ'ரங்கா'த மனமே இராது.
'படிக்காத மேதை'யில் அந்த ரங்கனோடு சேர்ந்து இந்த ரங்கா நம்மை உருக்கிய உருக்கம்!
விரக்தி, வேதனை, தோல்வி, இயலாமை அத்தனையும் அழுத்த மகள் சாவித்ரியிடம் வெடிப்பாரே கடைசிக் காட்சியில்… ‘கை கொடுத்த தெய்வத்'துக்கு அது எத்தனை கை கொடுத்தது!
நளினமாகப் பொருந்திக் கொண்டார் நரசிம்ம பல்லவராக, பார்த்திபன் கனவில். ‘அன்னை’யில் ஆனானப்பட்ட பானுமதியை சமாளிக்கும் விதமே அலாதி…
கேரக்டர் இவருக்குள் நுழைகிறதா, இவர் கேரக்டருக்குள் நுழைகிறாரா.. அது அந்த கேரக்டருக்குத்தான் வெளிச்சம்.
நாயகனுக்கு (சிவாஜி) நெஞ்சுவலி. டாக்டருக்கு போன் பறக்கிறது. ஏற்கெனவே ஜோசியர் கெடு வைத்த நேரம் வேறு நெருங்குகிறது. கொஞ்ச நேரத்தில் தான் செத்துப் போய்விடுவோம் என்ற நிச்சயமான பயத்தில் சிவாஜியும் சுற்றியுள்ளவர்களும் கதி கலங்க...
அப்போது கதவு திறக்கிறது. என்டர் எமன்! "எம்மா, எமன் வந்துட்டான்!" என்று அவர் அலற.. விடமாட்டேன்னு தாய் கதற..
"எல்லாருமா சேர்ந்து என் உயிரை வாங்கிடுவீங்க போலிருக்கே? விலகுங்க நான் டாக்டர்!"
நாடகத்திலிருந்து நேராக எமன் வேடத்தில் வந்து இறங்கும் ரங்கா ராவ் கிளப்பும் சிரிப்பலை! காமெடியிலும் தூள்! ('செல்வம்')
ரங்கா ராவ்! மனதில் மங்காத ‘வாவ்’!

Thursday, July 2, 2020

விவேகமாக வாழ்ந்தவர்...


“இந்த நான்கு வயது பையனுக்குள் ஏராளமான திறமையும் சக்தியும் பொதிந்து கிடக்கிறது. கோபமும் குமுறல்களும் கூட. கடவுளின் அருள் இருந்தால் அவை பிரமாதமாக வெளிப்படலாம். தவறாக வளர்க்கப்பட்டு விட்டால் என்ன ஆவான் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது..” என்று அம்மா தன் பையனைப் பற்றி அவன் அப்பாவுக்கு எழுதினாள்.
வளர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கினார் Hermann Hesse.
இன்று பிறந்த நாள்! (1877-1962)
நம்ம சஷி கபூர், சிமி நடித்து 1972ல் வெளிவந்த சித்தார்த்தா படம் நினைவிருக்கா? அது இவர் 1922 இல் எழுதிய 'சித்தார்த்தா' நாவலே.
12 வயதில் செய்யுள்கள் எழுத விரும்பினார். வெளியிட 19 வயதாயிற்று. தோற்று வெறுத்துப்போன எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய நாவல் வெற்றி பெற்றது. தன்னுடைய புத்தகங்கள் விற்க ஆரம்பித்ததும் புத்தகம் விற்கிற வேலையை விட்டார்.
"நீங்கள் ஒருவரை வெறுக்கிறீர்கள் என்றால் அவரிடம் இருக்கும் ஒன்றை, உங்களிடம் இருக்கும் அதே ஒன்றை வெறுக்கிறீர்கள். உங்களின் அங்கமாக இல்லாதது எதுவும் உங்களைத் தொந்தரவு செய்யாது."
(என்னவொரு பொன்மொழி அது! இந்த ஒன்றை மட்டும் உணர்ந்து கொண்டோமென்றால் யாரையுமே நம்மால் வெறுக்க முடியாது.)
விவேகமான இன்னும் சில..
'விவேகத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. ஓர் விவேகி பகிர்ந்து கொள்ள முயலும் விவேகம், முட்டாள்தனமாகத் தோன்றும் வேறொருவருக்கு. அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம், விவேகத்தை முடியாது. விவேகத்தை ஒருவர் கண்டுபிடிக்கலாம். அதைக்கொண்டு வாழலாம், வைத்து அதிசயங்கள் புரியலாம், ஆனால் அதைப் பகிரவோ கற்றுக் கொடுக்கவோ முடியாது.'
'பற்றிக் கொண்டிருப்பது தான் பலமானது என்று சிலர் நினைக்கிறார்கள்.. சிலநேரங்களில், விட்டுவிடுவதுதான் பலமானது.'
'நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஏற்பட்டதல்ல காதல். அது இருப்பது நம்மால் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை நமக்குக் காட்டுவதற்காகவே என்று நினைக்கிறேன்.'
'வார்த்தைகள் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்திய உடனேயே அவை வேறுமாதிரியாக மாறி விடுகின்றன. சற்றே திரிந்ததாக. கொஞ்சம் மடத்தனமாக.'
'சத்தத்துக்கு பதிலாக சங்கீதத்தை, சந்தோஷத்துக்கு பதிலாக மகிழ்ச்சியை, தங்கத்துக்குப் பதிலாக ஆன்மாவை, வியாபாரத்துக்குப் பதிலாக படைப்புத்திறனை, முட்டாள் தனத்துக்குப் பதிலாக வேட்கையை விரும்புபவர்களுக்கு இந்தச் சில்லறை உலகில் இடமில்லை.'
><><><