Thursday, July 2, 2020

விவேகமாக வாழ்ந்தவர்...


“இந்த நான்கு வயது பையனுக்குள் ஏராளமான திறமையும் சக்தியும் பொதிந்து கிடக்கிறது. கோபமும் குமுறல்களும் கூட. கடவுளின் அருள் இருந்தால் அவை பிரமாதமாக வெளிப்படலாம். தவறாக வளர்க்கப்பட்டு விட்டால் என்ன ஆவான் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது..” என்று அம்மா தன் பையனைப் பற்றி அவன் அப்பாவுக்கு எழுதினாள்.
வளர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கினார் Hermann Hesse.
இன்று பிறந்த நாள்! (1877-1962)
நம்ம சஷி கபூர், சிமி நடித்து 1972ல் வெளிவந்த சித்தார்த்தா படம் நினைவிருக்கா? அது இவர் 1922 இல் எழுதிய 'சித்தார்த்தா' நாவலே.
12 வயதில் செய்யுள்கள் எழுத விரும்பினார். வெளியிட 19 வயதாயிற்று. தோற்று வெறுத்துப்போன எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய நாவல் வெற்றி பெற்றது. தன்னுடைய புத்தகங்கள் விற்க ஆரம்பித்ததும் புத்தகம் விற்கிற வேலையை விட்டார்.
"நீங்கள் ஒருவரை வெறுக்கிறீர்கள் என்றால் அவரிடம் இருக்கும் ஒன்றை, உங்களிடம் இருக்கும் அதே ஒன்றை வெறுக்கிறீர்கள். உங்களின் அங்கமாக இல்லாதது எதுவும் உங்களைத் தொந்தரவு செய்யாது."
(என்னவொரு பொன்மொழி அது! இந்த ஒன்றை மட்டும் உணர்ந்து கொண்டோமென்றால் யாரையுமே நம்மால் வெறுக்க முடியாது.)
விவேகமான இன்னும் சில..
'விவேகத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. ஓர் விவேகி பகிர்ந்து கொள்ள முயலும் விவேகம், முட்டாள்தனமாகத் தோன்றும் வேறொருவருக்கு. அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம், விவேகத்தை முடியாது. விவேகத்தை ஒருவர் கண்டுபிடிக்கலாம். அதைக்கொண்டு வாழலாம், வைத்து அதிசயங்கள் புரியலாம், ஆனால் அதைப் பகிரவோ கற்றுக் கொடுக்கவோ முடியாது.'
'பற்றிக் கொண்டிருப்பது தான் பலமானது என்று சிலர் நினைக்கிறார்கள்.. சிலநேரங்களில், விட்டுவிடுவதுதான் பலமானது.'
'நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஏற்பட்டதல்ல காதல். அது இருப்பது நம்மால் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை நமக்குக் காட்டுவதற்காகவே என்று நினைக்கிறேன்.'
'வார்த்தைகள் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்திய உடனேயே அவை வேறுமாதிரியாக மாறி விடுகின்றன. சற்றே திரிந்ததாக. கொஞ்சம் மடத்தனமாக.'
'சத்தத்துக்கு பதிலாக சங்கீதத்தை, சந்தோஷத்துக்கு பதிலாக மகிழ்ச்சியை, தங்கத்துக்குப் பதிலாக ஆன்மாவை, வியாபாரத்துக்குப் பதிலாக படைப்புத்திறனை, முட்டாள் தனத்துக்குப் பதிலாக வேட்கையை விரும்புபவர்களுக்கு இந்தச் சில்லறை உலகில் இடமில்லை.'
><><><

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் நன்று.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!