Wednesday, June 17, 2020

ரசிக்காத நாட்டியமுண்டோ....


ஆஸ்தான நர்த்தகி யாரென்று அரசவையில் போட்டி நடனங்கள். ஆடல் கலையில் தேர்ந்த அந்தப் பெண்ணும் ஆடுகிறாள். ஆனால் தாளம் தவறி விடுகிறது. ஆட்டம் தவிக்கிறது. தாளக்காரர்கள் வேண்டுமென்றே செய்தது. தனக்கு வேண்டியவளைக் கொண்டுவர தளபதி மனோகரின் சதி. அந்தப் பெண்ணை நிராகரிக்கையில் ஜெமினி குறுக்கிடுகிறார். தாளம்தான் தவறென்று வாதாடுகிறார். வேறு தாளக்காரர்களை அழைக்கிறார். ‘சாந்தா, நீ பாடு!’ சாவித்திரியை பாடச் சொல்கிறார். “கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு…” என்று இவர் பாட, அவை மயங்க ஆடுகிறார் அந்த நர்த்தகி.
அவர்தான் குமாரி கமலா. பரத நாட்டிய வித்தகி.
June 16. பிறந்த நாள்!
பரத நாட்டியத்தை பரதமறியச் செய்தவர்களில் ஒருவர். ஐந்து வயதில் நடனம் கண்டு நடிக்க அழைக்கப்பட்டவர். ‘ஶ்ரீவள்ளி’(1945)யில் பால வள்ளி. ‘மீரா’வில் பால கிருஷ்ணர்.
1947. A.V.M.-இன் முதல் படம். ‘நாம் இருவர்'. ஆடியன்ஸ் கைதட்ட ஆடிய நடனங்கள் இவருக்கு புகழ் அளித்தன. “மஹான், காந்தி மஹான்!” “வெற்றி எட்டுத் திக்கும்..” எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பாடல்: “ஆடுவோமே.. பள்ளுப் பாடுவோமே..” இசையரசி டி.கே. பட்டம்மாள் பாடலை இரட்டை வேடத்தில் இவர் ஆட, படுநேர்த்தியாக synchronize செய்திருப்பார்கள்.
ராஜ் கபூரின் ‘Chori Chori’ -யில் எம்.எல். வசந்தகுமாரி பாடும் தில்லானாவுக்கு ஆடும் நடனம் பிரமாதம் என்றால் ‘சுமைதாங்கி’யில் அந்த மயில் டான்ஸ் (“வானுலகம்.. தெய்வ சுகம்..”) மற்றொரு அழகு.
மருது பாண்டியரின் வீரம் சொல்லும் ‘சிவகங்கைச் சீமை’. கண்ணதாசனின் காவியம். “கனவு கண்டேன்.. நான் கனவு கண்டேன்..” என்று தன்னுடன் பாடிய கணவன் தூக்கிலிடப்படும்போது இங்கே இவர் கோவில் முன் ஓர் அதிராட்டம் ஆடுவார் பாருங்கள், அப்பப்பா! எத்தனை ஆக்ரோஷம்! எத்தனை அற்புதம்! பார்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய வசனம் இதுவாகத்தான் இருக்க முடியும்: ‘இதுபோன்ற ஒரு நடனம் முன்பும் வந்ததில்லை பின்பும் வரப்போவதில்லை’. விழிகளை உருட்டுவது என்ன.. விரல்களை மடக்குவது என்ன.. கைகளை வீசும் லாவகம் என்ன.. கால்கள் துள்ளும் உயரம் என்ன.. சுழன்று சுழன்று ஆடும் வேகம் என்ன... நாலரை நிமிடத்தின் கடைசிப் பகுதியில் இடி மின்னல் மழையில் ஆடியபடியே படிகளில் தவ்வி ஏறி, இறுதியில் படிகளில் உருண்டு விழுந்து மாய்வது வரை மண்டபம் குலுங்குகிறதோ, மனம் குலுங்குகிறதோ, கண்களைத் திரையில் இருந்து கணமும் எடுக்க முடியாது. இன்று வரை மனதில் இருந்து வெளியேற மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது அந்த நாட்டியம்!
அகிலனின் ‘பாவை விளக்கு’ 1960 -இல் படமானபோது செங்கமலம் பாத்திரம் இவருக்கு. மூன்று வித்தியாச நடனங்கள். “வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி..” “சிதறிய சலங்கைகள் போலே…” தவிர, "நான் உனை நினைக்காத நேரமுண்டோ.." பாடலில் ஆறு கமலாக்கள் ஆடுவது அச்சுப் பிசகாமல் அபாரமாக...
New York யூனிவர்சிடி ஒன்றில் பேராசிரியராக நாட்டியம் கற்றுக் கொடுத்தவர் பின்னர் அங்கே நாட்டியப் பள்ளி ஆரம்பித்தார். ‘பாரத் பூஷன்’ பெற்றது 1970 இல்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் சிறப்பு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!