Wednesday, October 7, 2026

ஒரே ஒரு வரி டயலாக்...


1997இல் அவர் நாயகனாக நடித்த ‘Goodwill Hunting’ படத்துக்கு அமோக வரவேற்பு. 9 ஆஸ்கார் நாமினேஷன். ஆனால் அவர் பெற்றது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார். ஆம், அவரும் மற்றொரு நடிகரும் சேர்ந்து எழுதிய திரைக்கதை அது. அவர் ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் படிக்கும்போது மனதில் விழுந்த வித்து.
நடிகர் Matt Damon... இன்று பிறந்த நாள். இனிய வாழ்த்துக்கள்!
அடுத்த வருடம் Spielberg இன் 'Saving Private Ryan' இல் ரியான் ஆக செமத்தியான ரோல். யாராலும் மறக்க முடியாத படமாச்சே?
Born Actor என்பாங்க இல்லையா? இவரு 'Bourne' Actor! ஆம், அப்புறம் Bourne ஆக வரிசையாக.. ‘Bourne Identity’ ... ‘Bourne Supremacy’ ... ‘Bourne Ultimatum’. டாப் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார்களில் கலந்தார்.
ஆரம்ப காலத்தில் Julia Roberts உடன் ‘Mystic Pizza’ வில் நடித்தபோது ஒரே ஒரு வரி டயலாக் பேசியவர் அதே ஜூலியாவுடன் பின்நாட்களில் ‘Ocean's Eleven’ இல் முக்கியமான வேடத்தில்… பேர் வாங்கித்தந்த மற்றொரு படம் பிரபல Francis Ford Coppola வின் 'The Rainmaker'.
உலகின் அழகிய 50 மனிதர்களில் ஒருவர்: People பத்திரிகை தேர்ந்தெடுத்தது. நினைத்தால் இளைப்பார். ‘Courage Under Fire’ படத்துக்காக 47 பௌண்ட். வேண்டுமெனில் பருப்பார். ‘The Informant’ க்காக 30.
படத்தில்தான் டுமீல் டுமீல். நிஜத்தில் துப்பாக்கி பிடிக்காதாம்.

Sunday, October 4, 2026

மனைவிக்கு வாய்ப்பு...


1994 -இல் பிரபல நாவலான ‘Little Women’ படமாக வந்தபோது அந்த நான்கு சகோதரிகளின் அம்மாவாக நடித்தவர் எல்லோருடைய மனங்களையும் அள்ளிக் கொண்டார்.
கணவர் சிவில் யுத்தத்திற்கு சென்றுவிட, தன் நான்கு பெண்களையும் கவனித்து வளர்க்க வேண்டிய பொறுப்பு மாமி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு. அதை எத்தனை அழகாய், தன் உறுதியான மனதுடன் நிறைவேற்றுகிறார்!
எழுத்தாளராகத் துடிக்கும் தன் மகள் ஜோவை தனியே வெளியூர் அனுப்ப முடிவு செய்தபோது ‘நீ இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்னு தெரியலே. ஆனா நீ போ. உன் திறமையை உபயோகி. சுதந்திரத்தை தழுவு. அப்புறம் பார் எத்தனை அற்புதம் நடக்குதுன்னு!’ என்று சொல்லும் போதும்...
மகள் Meg காதலை மற்ற சகோதரிகள் எதிர்த்த போது, ‘என் மகள் செல்வத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து சுயகௌரவத்தை இழப்பதை விட காதலுக்கு மதிப்பு கொடுத்து ஒரு ஏழையை மணப்பதையே நான் விரும்புகிறேன்,’ என்று தட்டிக் கொடுக்கும் போதும் Louisa May Alcott தன் நாவலில் உருவகித்த தாயை நம் கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.
Susan Sarandon… இன்று பிறந்த நாள்.
கணவனும் மனைவியுமாக ஆடிஷன் சென்றபோது மனைவிக்கு வாய்ப்புக் கிடைக்க, நடிகையானவருக்கு கிடைத்த ஆஸ்கார் நாமினேஷன் நாலு. அவார்ட் கிடைத்தது, தூக்குத் தண்டனைக் கைதி ஒருவனுக்காக அவன் தண்டனையைக் குறைக்கப் போராடும் பெண் துறவியாக நடித்திருந்த ‘Dead Man Walking’ படத்துக்கு.
‘Stepmom’ படத்தில் இவருக்கு சரியான போட்டி Julia Roberts. டிவோர்ஸுக்குப் பின் குழந்தைகள் தன் கணவனின் ரெண்டாவது மனைவியுடன் ஒட்டிக் கொள்ளவில்லையே என்று கவலையும் எரிச்சலும் படும் அன்னையாக ஒரு திடமான நடிப்பை வழங்கியிருந்தார்.
Richard Gere யுடன் நடித்த ‘Shall We Dance?’ படத்திலும் கைதட்டல் நடிப்பை வழங்கினார். வாழ்க்கை போரடிக்குது என்று டான்ஸ் கற்றுக்கொள்ள சென்ற ரிச்சர்ட் அழகிய ஆசிரியை ஜெனிஃபர் லோபஸுடன் ஆட்டம் போடும் போது அதை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், இறுதியில் ரிச்சர்ட், ‘என் பார்ட்னர் இருப்பது இங்கே தான்!’ என்று தன்னிடம் நன்றி சொல்லும் போது காட்டும் பரவசமும்!
அந்தக் காட்சி! கணவனைத் துப்பறிய அனுப்பிய ஆளிடம் அவள் சொல்கிறாள், போதும், வேண்டாம் என்று. “நம்ம வாழ்க்கைக்கு ஒரு சாட்சி வேணும். கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகத்திலே. அதில ஒருத்தரோட வாழ்க்கை என்ன கவனம் பெறுது? கல்யாணம் செய்யும்போது நாம் உறுதிமொழி எடுக்கிறோம், எல்லாத்தையும் கவனிக்கிறதா. அவரோட நல்லது, கெட்டது, விசித்திரமானது, வித்தியாசமானது எல்லாத்தையும்! எல்லா நேரமும்! நீங்க அப்ப அவர்ட்ட சொல்றீங்க, உங்க வாழ்க்கை கவனிக்கப்படாது போகாது, ஏன்னா நான் அதைக் கவனிக்கிறேன்னு. உங்க வாழ்க்கைக்கு சாட்சியில்லாம போகாது, ஏன்னா நான் அதுக்கு சாட்சியா இருப்பேன்னு!"
2006 ஒலிம்பிக்கில் சோபியா லாரனுடன் கொடியேந்தி நடந்த இவர் Robert Redford உடன் கை கோர்த்தது ‘The Great Waldo Pepper’ படத்தில். Marlon Brando வுடன் ‘A Dry White Season’
சொன்னது: ‘எப்படி நடித்தாலும் நாம் திருப்தி அடையமாட்டோம். அதுதான் நான் நடிகையாக நீடிக்க ஒரே காரணம்.’
‘குழந்தைகள் உங்களுக்கு ஓர் புதிய உலகை சிருஷ்டிக்கின்றன.’

Friday, October 2, 2026

நச் பதில் நாயகர்...


‘ஏன் உங்களுக்கு அந்த நாடகம் பிடிக்கவில்லை?’ என்று கேட்டபோது அவர் சொன்னார்.
‘அதுவா? அதை நான் பார்த்த சந்தர்ப்பம் அப்படி! திரை உயர்ந்திருந்தது!’
Quick Retort-க்குப் பேர் போனவர்கள் பலர் இருந்தாலும் ‘நச் பதில் நாயகர்’ என்ற பட்டம் சிலருக்கே உண்டு. அதில் பிரபலமானவர் இவர்.
Groucho Marx.. இன்று பிறந்த நாள். (1890 - 1977)
‘படிப்புக்கு டி.வி. மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை யாராவது அதை போடும் போதும் நான் பக்கத்து அறைக்கு போய் விடுகிறேன், புத்தகம் படிக்க.’ - இவர் சொன்னது.
அமெரிக்காவின் தலை சிறந்த நகைச்சுவையாளர் என்று இவரைக் குறிப்பிட்டவர் பிரபல காமெடி நடிகர் Woody Allen.
‘You Bet Your Life’ என்ற இவர் நடத்திய ஷோ டிவி.யிலும் ரேடியோவிலும் மகா பாப்புலர்.
அள்ளித் தெளித்த காமிக் பஞ்ச் அனேகம். சிரிக்க மட்டும் இதோ சில…
‘ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கே செல்வது எதை குறிக்கிறது என்றால் அந்தப் பூனை எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்பதை.’
‘அவளுடைய அழகிய முகம் அவள் தன் தந்தையிடம் இருந்து பெற்றது. ...அவர் ஒரு பிளாஸ்டிக் சர்ஜன்.’
‘நான் சாகாமல் என்றும் வாழ விரும்புகிறேன். ...அந்த முயற்சியில் செத்தாலும் சரி.’
‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். ...அவளுக்குப் பின்னால் அவன் மனைவி இருக்கிறாள்.’
‘என்னைப் போன்றவர்களை மெம்பராக ஏற்றுக் கொள்ளும் எந்த கிளப்பிலும் இருக்க நான் விரும்பவில்லை.’
‘ஒருவன் நேர்மையானவனா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. அவனையே கேளுங்கள். அவன் ஆமாம் என்றால் அவன் ஒரு மோசமான பேர்வழி.’
‘நான் சொல்கிற இந்த கதையை ஏற்கனவே கேட்டிருந்தால் என்னை நிறுத்தாதீர்கள், ஏன்னா நான் இன்னொரு முறை அதை கேட்க விரும்புகிறேன்.’
‘ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து நான் ரொம்பப் பாடுபட்டு மிக ஏழ்மை என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.’
‘இதெல்லாம் என் கொள்கைகள். உங்களுக்கு அவற்றைப் பிடிக்கவில்லையானால் சொல்லுங்கள், வேறு சில இருக்கிறது என்னிடம்.’
‘விவாகரத்து நடப்பதற்கு முக்கிய காரணம் விவாகம்.’
‘ஒருவன் தன் விதியை தானே நிர்ணயிப்பதில்லை. அவன் வாழ்வில் வரும் பெண்கள் அவனுக்காக அதை செய்கிறார்கள்.’
‘அவன் பார்க்கிறதுக்கு முட்டாள் மாதிரி இருக்கலாம், முட்டாள் மாதிரி பேசலாம், அதை வெச்சு ஏமாந்திராதீங்க. அவன் நிஜமாவே முட்டாள்தான்.’

Tuesday, September 29, 2026

யார் அவர்?


1.தர்மேந்திரா நடித்ததில் உங்களால் மறக்க முடியாத படம் எது என்றால் ‘Satyakam' (தமிழில் 'புன்னகை') -ஐச் சொல்லத் தயங்க மாட்டீர்கள்.
2.ஜெயா பாதுரி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது 'Guddi'தான்.
3.ராஜேஷ் கன்னாவின் 'Anand’! ஆரால் மறக்க முடியும்?
4.அமிதாப் பச்சனின் பேர் சொல்லும் படங்களில் 'Abhiman' தவறாமல் இருக்கும்.
5.அமோல் பலேகரின் அட்டகாச காமெடி படம் என்றால் அது 'Gol Maal'(தமிழில் 'தில்லு முல்லு').
6.ராஜ் கபூர், நூடன் ஜோடியாக நடித்ததில் முதலில் நிற்பது ‘Anari’.
7.ரேகாவின் stellar performance -ஐ பார்த்து நாம் வியந்தது ‘Khubsoorat’ -இல்.
8.சஞ்சீவ் குமாரின் மிக முக்கியமான படங்களில் ஒன்று ‘Arjun Pandit.’
9.அசோக் குமார் அமர்க்களமாக நடித்து தானே ஒரு பாடலும் பாடிய படம் ‘Aashirvad.’
10.அமிதாப்பும் தர்மேந்திராவும் சேர்ந்து படம் முழுக்க காமெடியில் கலக்கிய படம் ’Chupke Chupke’
என்னன்னா... இந்த 10 படங்களையும் டைரக்ட் செய்தவர் ஒருவரே. எடிட்டிங்கும் அவரே!
யார்?
Hrishikesh Mukherjee!
இன்று பிறந்த நாள். (1922- 2006)

உண்மையில் எளிதானது...


உண்மையிலேயே மகிழ்வோடும் மன நிறைவோடும் இருக்கவேண்டுமானால் மகிழ்வுக்கும் மனநிறைவுக்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.’
சொன்னவர் Confucius... நம் பல கன்ஃப்யூஷன்களைத் தகர்த்தவர்...
Sep. 28 பிறந்தநாள்!
இன்னும்…
‘வாழ்க்கை உண்மையில் எளிதானது, ஆனால் அதை சிக்கலாக்கிக் கொள்வதென்று அடம் பிடிக்கிறோம்.’
‘வீழாதிருப்பதில் அல்ல நம் மகிமை, வீழும்போதெல்லாம் எழுவதில்.’
‘எத்தனை மெதுவாக நகருகிறாய் என்பது முக்கியமல்ல, நீ நிற்காத வரையில்.’
‘துயருற வேண்டியதுதான், ஆனால் மூழ்கி விடக்கூடாது அதன் அழுத்தத்தில்.’
‘எங்கே நீ சென்றாலும் எல்லா உன் இதயத்தோடும் செல்.’
‘தன்னை வெற்றி கொள்பவனே தலைசிறந்த படைவீரன்.’
‘எல்லாவற்றுக்கும் ஒரு அழகு உண்டு, ஆனால் எல்லோரும் அதை பார்ப்பதில்லை.’
‘நீ நேசிக்கும் ஒரு வேலையை தேர்ந்தெடு. உன் வாழ்க்கையில் ஒரு நாளும் வேலை செய்ய வேண்டியிருக்காது.’
‘மூன்று விதங்களில் நாம் விவேகம் அடையலாம் 1. சிந்தித்து, அது உயர்வானது. 2. மற்றவரைப் பார்த்து. அது எளிதானது. 3. அனுபவத்தால். அதுதான் கசப்பானது.’
‘மனிதன்தான் சத்தியத்தை மேன்மையுறச் செய்ய வேண்டும்; சத்தியம் மனிதனை அல்ல.’
‘மௌனம்: ஒருபோதும் வஞ்சிக்காத உண்மையான நண்பன்.’
‘தீங்கிழைக்கப்படுவது ஒன்றுமேயில்லை, நீங்கள் அதை நினைக்காத வரையில்.’

Saturday, September 26, 2026

பிடித்த படம்...3


எனக்குப் பிடித்த படம்...3
JEWEL THIEF
ஒரு பார்ட்டியில் ஓடிவந்து தன்னை உலுக்கி, ஏன் மறந்துட்டே அமர்? என்று ஒரு பெண் கேட்கும்போதுதான் வினய்க்கு தெரிகிறது, தன்னைப் போலவே உள்ள அமர் என்ற ஜுவல் தீஃப் பற்றி! அமர் என்று நினைத்து இவனை அனைவரும் துரத்த... ஆரம்பமாகிறது 'அமர்'க்களம்!
எந்தப் படத்திலும் இப்படி காட்சிக்குக் காட்சி வில்லனைத் தேடியிருக்க மாட்டார்கள் ரசிகர்கள். கடைசியில் அந்த 'திடுக்' உண்மையை நாயகி சொல்ல, நாயகனுக்கும் நமக்கும் சரியான அதிர்ச்சி.
தேவ் ஆனந்தின் இந்தப் படத்தை ரெண்டே ஜோடி வார்த்தையில் சொன்னால் 'சூபர் ஸ்டைல்! சூபர் திகில்!' தவிர, கிளாமரும் இன்னிசையும் போனஸ்! ஹீரோ தேவ் ஆனந்த் அணிந்த மாடல் தொப்பி இளைஞர்களிடையே craze ஆகி அமோகமாக விற்றது.
ஹோட்டல் அறையில் தன் டூப்ளிகேட்டைத் தேடிவரும் தேவ் ஆனந்த் கையில் ரிவால்வருடன் வெளியில் வர எதிரே மற்றொரு தேவ் ஆனந்த், கையில் ரிவால்வருடன்! அடுத்த வினாடி புன்னகைக்கிறார். கண்ணாடி!
அண்ணன் (தேவ் ஆனந்த் ) ஹீரோ. தம்பி (விஜய் ஆனந்த்) திரைக்கதை, எடிட்டிங், டைரக்‌ஷன். அப்பா (S.D. பர்மன்) இசை, மகன் (R.D. பர்மன்) உதவி.
ஆறு வருஷத்துக்குப் பின் தேவ் ஆனந்துக்கு கிஷோர் மீண்டும் பின்னணி பாடினார். அந்த "ஆஸ்மான் கே நீச்சே.."யை வேறு யார் அத்தனை கெஞ்சலாக... அந்த "யே தில் ந ஹோதா பேஜாரா.."வை வேறு யார் அத்தனை கிண்டலாக பாட முடியும்?
-----

சிந்திப்பது இல்லை...


'இந்தச் சிந்தனை சூழ் காலத்தில் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம் இன்னும் சிந்திப்பது இல்லை என்பதுதான்!’
'வசிப்பது என்பது தோட்ட வேலை பார்ப்பது.'
‘மிகப்பெரும் சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி மிகப்பெரும் தவறுகளை செய்கிறார்கள்.’
‘இயற்கைக்கு சரித்திரம் இல்லை.’
‘சாவைக் கையில் எடுத்து அதை ஒத்துக் கொண்டு நேருக்கு நேராக நோக்கினால்தான் சாவின் கவலையிலிருந்தும் வாழ்வின் சிறுமையிலிருந்தும் விடுபட்டு நான் நானாக முடியும்.’
‘காலமும் இருப்பும் ஒன்றை ஒன்று நேர்மாறாக விதிக்கின்றன. இருப்பை காலம் சார்ந்ததாகவோ காலத்தை இருப்பதாகவோ கருத முடியாது.’
‘மொழியை வடிவமைப்பதும் வழி நடத்துவதும் தானே என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் மொழிதான் அவனை நடத்துகிறது.’
‘ஒவ்வொரு மனிதனும் பல நபர்களாகப் பிறக்கிறான்; ஒற்றை ஆளாக இறக்கிறான்.’
‘அடிப்படையில் டெக்னாலஜி மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல.’
‘எல்லாமும் ஏன் இருக்க வேண்டும்? ஒன்றுமே இல்லாமல் இருந்திருக்கலாமே? அதுதான் கேள்வி.’
சொன்னவர்: Martin Heidegger. ஜெர்மன் தத்துவ மேதை. Sept. 26. பிறந்தநாள்!
இவரின் 'Being and Time' மிகப் பிரபல புத்தகம்.

Thursday, September 24, 2026

அவள் போட்ட கணக்கு…


அவள் போட்ட கணக்கு…
கே. பி. ஜனார்த்தனன்
(தமிழ்நாடு இ பேப்பர் காம் இதழில்.. 24 9 24)

பரக்கப் பரக்கத் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ராஜி. டாக்டர் ரவிசங்கரின் அந்த இ.என்.டி. கிளினிக்கில் வேலை அவளுக்கு. வருகிற பேஷண்டுக்கு சீட்டு எழுதி டோக்கன் கொடுக்கணும்.
கொஞ்ச நேரம் தாமதம் ஆனாலும் டாக்டர் கோபித்துக் கொள்வார். பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அவருக்கு.
தவிப்பாக இருந்தது மனதில். வீட்டில் தம்பி ரவி தனியே இருப்பான். “அக்கா, அக்கா இந்த நாலு கணக்கை போட்டு முடிக்கிற வரையாவது கூட இரேன்,” என்று கெஞ்சினான். டாக்டரின் கோபப் பார்வை கண்ணில் வந்து நிற்க உதறிவிட்டு ஓடிவந்தாள்.
கணக்கு என்றாலே அவனுக்கு சிம்ம சொப்பனம். ஆனால் புத்திசாலி. பக்கத்தில் இருந்து கொஞ்சம் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினால் போதும், மளமளவென்று போட்டு விடுவான் எல்லா கணக்கையும். கணக்குதான் என்றில்லை, ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம் எதுவானாலும் சற்றே அவள் ஊக்குவித்தால் சாதித்து விடுவான். தாய் இல்லாத பையனுக்கு அக்காதான் எல்லாம். குடிகார அப்பாவை தலைவராக கொண்ட ஏழைக் குடும்பத்தின் பிரதிநிதியாக வேலைக்கு வந்தவள் ஆயிற்றே அவள்?
ஆனால் இரவு 9 மணி வரை கிளினிக்கில் இருக்க வேண்டும் அவள். அது மட்டுமா? இங்கே இன்னொரு பிரசினை இருந்தது.
“ஹாய் ராஜி!” என்ற குரல் நாராசமாய் ஒலித்தது காதில். வந்துவிட்டது அந்த பிரசினை.
ஒரு ஸ்டூலைத் தூக்கி அவள் எதிரில் போட்டு அமர்ந்து கொண்டான் மதன். டாக்டரின் மைத்துனன் அவன். “என்ன இன்னிக்கு ரஷ் ஏதும் இல்லை, ஃப்ரீயா தான் இருக்கே போல?”
ராஜி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏதாவது பேஷண்ட் வந்தாலாவது இவன்கிட்டேயிருந்து தப்பிக்கலாம்.
“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கேட்டவுடனே சிரிப்பு வந்திரும்…” என்று தொடங்கினான்.
இவன் தான் அந்த இன்னொரு பிரசினை. டாக்டரின் மைத்துனன் என்ற உரிமையில் தினமும் அங்கே ஆஜராகி விடுவான். பி.பி.எம். முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பவன். பெரும்பாலும் பெண்கள் பின்னால்.
வந்து உட்கார்ந்தான் என்றால் அவளை அசத்துவதற்காக அதையும் இதையும் பேசி... அதுவும் கூட்டம் இல்லை என்றால் அந்த தனிமையை உபயோகித்து ரொம்ப தாராளமாக பேச ஆரம்பித்து விடுவான். டாக்டர் மனைவியின் செல்லத் தம்பியாச்சே, இவனைப் பற்றிப் புகார் செய்தால் இருக்கிற வேலையும் போய்விடுமே என்கிற கவலை அவளுக்கு.
அந்த நேரம் இரண்டு நோயாளிகள் வந்து விட, அவனிடமிருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்தது. அப்போதுதான் அந்த யோசனை மனதில்… டாக்டரின் அறையில் நுழைந்தாள். தான் கேட்க வந்ததை மெல்லக் கேட்டு விட்டாள்.
“அதற்கென்ன, ஓகே!” பச்சைக்கொடி காட்டிவிட்டார் அவர்.
^^ ^^ ^^
மறுநாள் மாலை. கிளினிக்கில்…
“ஏழாவது கணக்கை போட்டுட்டியா? சூப்பர்! இப்ப எட்டாவதைப் பார்த்து ஸ்டெப் எழுது,” என்று தம்பிக்கு சொல்லிக் கொண்டு அடுத்த டோக்கனை எடுத்து வைத்தாள் ராஜி. பக்கத்தில் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் ரவி.
“ஹாய்!” என்று உள்ளே நுழைந்த மதன் இந்த திடீர் சூழ்நிலை மாற்றத்தால் தாக்குண்டு அதிர்ந்து நின்றான்.
தன் தம்பியையும் தன்னுடன் அழைத்து வந்து ஒரு ஓரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொள்ள பெர்மிஷன் கேட்டு வாங்கி ஒரே ஐடியாவில் இரண்டு பிரசினைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட்ட தன் சாதுரியத்தை தனக்குள் வியந்து கொண்டாள் ராஜி.
><><><

Monday, September 21, 2026

காதுக்கு ஏ.ஸி.


அவருடைய அப்பா மட்டும் மகனின் நம்பிக்கையை நம்பாமல் ஜோசியர் சொன்னதைக் காதில் போட்டிருந்தால் அறுபதுகளில் காதுக்கு அதிசுகம் அளித்த அந்த அற்புதப் பின்னணி குரல்களின் இனிமையில் இருபது பர்செண்டை இழந்திருப்போம். பி பி ஶ்ரீனிவாஸின் மயக்கும் “மயக்கமா?” குரல் நமக்குக் கிடைத்திருக்காது.
பி.பி.ஶ்ரீ… காதுக்கு ஏ.ஸி. இன்று பிறந்த நாள்...
ஆர் கே நாராயணனின் ‘மிஸ்டர் சம்பத்’ நாவலை மூன்று மொழியில் தயாரித்துக் கொண்டிருந்த நல் வேளையில் ஜெமினி வாசனிடம் முகமது ரஃபியின் பாடல் ஒன்றை அவர் பாடிக் காட்ட ஓகே ஆயிற்று. எடுத்த எடுப்பிலேயே கீதா தத், ஷம்ஷத் பேகமுடன் பாட வாய்ப்பு.
தமிழில் முதல் பாடல் ‘ஜாதகம்’ படத்தில் கோவர்த்தனம் இசையில் (அவருக்கும் அதுதான் முதல் படம்) “மூடநம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா..”
ரசிகர்களை கவர்ந்த முதல் பாடல் “அவன் அல்லால் புவி மேலே அணுவும் அசையாது…” (பிரேம பாசம் - ராஜேஸ்வர ராவ்)
பிரபலமானது “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?” (மக்களை பெற்ற மகராசி - மகாதேவன்) “இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…” (கட்டபொம்மன் - ராமநாதன்) “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா..” (ஆளுக்கொரு வீடு - விஸ்வநாதன்-ராமமூர்த்தி) “பண்ணோடு பிறந்தது தாளம்..” (விடிவெள்ளி - ஏ.எம்.ராஜா) “மாலையில் மலர் சோலையில்…” (அடுத்த வீட்டுப் பெண் - ஆதி நாராயண ராவ்) "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்.." (தெய்வ பலம் - அஸ்வத்தாமா)
மிகப் பிரபலமானது 1961 இல், அந்த இரண்டு பாடல்களால்! “காலங்களில் அவள் வசந்தம்...:” “காற்று வெளியிடை கண்ணம்மா…” ஜெமினிக்கு பாடும் ஜெம் குரல் ஆனார்.
அப்புறம்? நானும் சொல்லப் போவதில்லை. நீங்களும் கேட்கப்போவதில்லை. நாடறிந்த பாடல்கள்! நாம் அறிந்த கானங்கள்!
ஏ.எம்.ராஜாவின் மென்மையும், டி.எம்.எஸ்ஸின் தெளிவும், லோகநாதனின் நெளிவும், கண்டசாலாவின் உருக்கமும்! நாலும் இவர் நாவில்!
பானுமதியிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீ வரை, லதா மங்கேஷ்கரிலிருந்து ஜமுனாராணி வரை எல்லோருடனும் பாடிவிட்டார்.
கானமிசைப்பது கதாநாயகனுக்கு என்றாலும் ஆர்ப்பாட்டங்களோ அனாவசிய எக்காளங்களோ இவர் பாடலில் இரா. அவரைப் போலவே அவர் பாடலும்! Gentle!
ஒளிந்து கிடக்கும் முத்துக்களைப் பொறுக்குவதானால் முதலில் வருவது விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘தென்றல் வீசும்’ படத்தின் “அழகான மலரே.. அறிவான பொருளே..” இடையிசையில் வீணையும் அவர் குரலும் இழைந்து இழைந்து கீழிறங்கும் அழகே அழகு!
தனித்து நிற்கும் பாடல்களைச் சொல்லிவிட வேண்டும். “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..” பாடலில் ஒவ்வொரு வார்த்தையில் பதில் மட்டும் பாடும் அழகும் குழைவும்.
“முள்ளில் ரோஜா…”வில் (கலைக் கோவில்) "தா...தா.. ஆ..." என்று இருபது செகண்டுக்கு ஆலாபனை செய்யும் மெருகு...
கேட்டதும் மறந்து விடுகிற பாடலா அது? “கதையைக் கேட்டதும் மறந்துவிடு… கண்ணீர் வந்தால் துடைத்துவிடு..”? (நீங்காத நினைவு)
இளைய ராஜா இசையில் இனிமையாக... “தென்றலே நீ பேசு..” (கடவுள் அமைத்த மேடை)
ஜாலி பாடல்களும் வெளுத்து வாங்குவார் என்பதற்கு “ஜாவ்ரே ஜா… இந்த கேட்டுக்கு நீ ராஜா..” (குமரிப் பெண்) உதாரணம். தெலுங்கு "என்ன வேகம் நில்லு பாமா..." பாடலில் எடுக்கும் வேகம்! “மாடி மேலே மாடி கட்டி.."யவர்.
“அவள் பறந்து போனாளே..”வில் (பார் மகளே பார்) அவர் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது என்றால் இவர் குரல் காந்தமாக இழுக்கிறது. "பொன்னொன்று கண்டோம்..."! (படித்தால் மட்டும் போதுமா?)
அழியா வரம் பெற்ற அவர் டூயட்டுகளைச் சொல்லாமல் கழியாது இந்த 'நாளாம் நாளாம் திருநாள்'! "பொதிகை மலை உச்சியிலி"ருந்து புறப்பட்டால்... "நிலவே உன்னை நெருங்கி" விடலாம். அந்த "அனுபவம் புதுமை..."!
லதா மங்கேஷ்கருடன் ‘நானும் ஒரு பெண்’ இந்தியில் “Chandha Se Hoga Wo Pyaara..” என்று பாடி இந்தி ரசிகர்களையும் தன் குரலால் கட்டிப் போட்டார். கன்னடத்திலும் ராஜ்குமார் தன் சொந்தக் குரலில் பாட ஆரம்பிக்குமுன் அவரது ஆஸ்தான பாடகராக...
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டாலி"ல் ஆரம்பித்தால் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..”, “ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்..”(பனித்திரை) விமரிசையாகக் கொண்டாட வரிசையாக தத்துவப் பாடல்கள்!
சிவாஜிக்குப் பாடிய “என்றும் துன்பமில்லை…” (புனர் ஜென்மம்) என்றும் உருக வைப்பது என்றால் எம் ஜி ஆருக்குப் பாடிய “பால் வண்ணம் பருவம் கண்டு…” (பாசம்) என்றும் மயங்க வைப்பது. “ரோஜா மலரே ராஜகுமாரி..” யையும் இவரையும் பிரித்து ரசிக்க முடியாது. மற்றிரண்டு: “வளர்த்த கலை மறந்துவிட்டாள்…” “சின்னச் சின்ன கண்ணனுக்கு..”
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த ‘பந்த பாசம்' படப் பாடலின் இறுதியில் “இதழ் மொட்டு விரிந்திட…” என்று இவரும் சுசீலாவும் ஒரே நேரத்தில் இரு ட்யூனில் இணைந்து பாடும்போது அடடா என்ன அழகு!
குரலில் என்னதான் சொக்குப்பொடி வைத்திருப்பாரோ, நாயகி உருகுவதற்குள் நாம உருகிடறோம், “காதல் நிலவே... கண்மணி ராதா..”. என்றோ “நிலவுக்கு என் மேல். என்னடி கோபம்..” என்றோ அவர் குழையும்போது! “தோள் கண்டேன்... தோளே கண்டேன்…” என்றும் “கண்படுமே... பிறர் கண்படுமே…” என்றும் அவர் அடுக்கும்போது! “ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து?” என்றோ “உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?” என்றோ கேட்கும்போது! ”உன்னழகைக் கண்டு கொண்டால்..” என்றோ "மௌனமே பார்வையால் ..." என்றோ தொடங்கிவிட்டால் டோட்டல் சரண்டர்!
‘நான் அவனில்லை’யில் ஜெமினிக்காக சில வரி இந்தியில் பாடினார். (“நான் சின்னஞ்சிறு பிள்ளை..”) ‘தவப்புதல்வன்’ படத்தில் “உலகின் முதல் இசை தமிழ் இசையே..” என்று சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாட, திக்குறிச்சிக்காக “Sangeeth Bhulonki Baghiya Hai..” என்று ஹிந்தியில் இவர் பாடும் வரிகளும் இவர் எழுதியதுதாம். ‘நண்டு’ படத்தில் ரெண்டு இந்திப் பாடலும் கூட எழுதியிருக்கிறார்.(“Kaise Kahun...“”Hum Akele..”) இன்னும், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ஶ்ரீதேவி பாடும் “Tu Hai Raja...” தெரிந்த எட்டு மொழியிலும் பாட்டு எழுதி இருக்கிறார்.
எண்பதை நெருங்கும் போதும் 'பண்'பதை நிறுத்தவில்லை. யுவன் இசையில் ‘செவன் ஜி ரெயின்போ காலனி’யிலும் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆயிரத்தில் ஒருவனி'லும்.
அவர் பாடல்களிலேயே எனக்குப் பிடித்தது… மற்றொரு பிரபல பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜா மெட்டமைத்த ‘ஆடிப் பெருக்கு’ படப்பாடல் அது. P. B.S. குரல் மனதின் ஆழத்திற்கு ஊடுருவிச் செல்லும். .
“புரியாது... புரியாது…
வாழ்க்கையின் ரகசியம் புரியாது...
வளரும் ஆசைக்கு அளவேது…
முடிவேது முடிவேது
முடிந்தபின் உலகம் நமக்கேது
முடிந்ததை நினைத்தால் பயனேது…”

கார்போ பேசுகிறார்...


‘நடிகை கார்போ பேசுகிறார்!’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது ‘Anna Christie’ என்ற அந்தப் படம். மௌனப் பட உலகின் ராணியாக திகழ்ந்த Greta Garbo முதல் முறையாக அந்தப்படத்தில் தன் முதல் வசனத்தை 'பேசியதை'க் கேட்டார்கள் ரசிகர்கள். “எனக்கொரு விஸ்கி கொடு. கூடவே ஜிஞ்சர் ஏல்!... பாரு, கஞ்சத்தனமா ஊத்தாதே!”
அவருக்குப் பெயரும் வாங்கித் தந்த படம் அது. 20 வருடத்துக்கு முன், தான் கைவிட்டுச் சென்ற மகளிடமிருந்து தந்தைக்கு ஒரு கடிதம் வருகிறது. தயாராகிறார் வரவேற்க. அவள் வருகிறாள். உற்சாகமான இளம்பெண்ணாக அல்ல. உடலும் மனமும் பாதிக்கப் பட்டவளாக. மினஸோட்டா வயல்களில் வேலை செய்து களைத்தவளாக. சிவப்பு விளக்கு விடுதியில் ரெண்டு வருடங்களைக் கழிக்க நேர்ந்தவளாக. தந்தையின் நண்பன் மாலுமி மாட் அவளைக் காதலிக்கிறான். எப்படிச் சொல்வது தன் பூர்வ கதையை அவர்களிடம்? சொல்ல முடியாமல் தவிக்கிறாள்… என்று போகிறது கதை.
Greta Garbo… செப்.18. பிறந்த நாள்! (1905 - 1990)
டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த டீனேஜ் பெண் அவர். கடைக்காரர் தயாரித்த விளம்பரப் படத்தில் காட்டிய முகத்தை ஒரு டைரக்டர் பார்த்துவிட்டுத் தன் படத்தில் சின்ன வேடம் கொடுக்க, நடிகையானார். உலகின் மிக அழகிய பெண் என்று கின்னஸ் ஒருமுறை சொன்னது இவரை…
தனியே ஒரு படத்துக்காக வாங்காத ஆஸ்கரை தன் மொத்த பங்களிப்புக்காக இவர் பெற்றது 1954-இல்.
காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் சரியாக 9.00 மணிக்கு மேக்அப்புடன் முதல் ஷாட்டுக்குத் தயாராக இருப்பார். அதேபோல் சரியாக மாலை 5 மணிக்கு, இன்னும் அஞ்சு நிமிஷ வேலைதான் என்று சொன்னாலும், ஸாரி, பைபை என்று கிளம்பிப் போய்க்கொண்டே இருப்பார். செட்டில் பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. சில சமயம் டைரக்டரையே வெளியே அனுப்பி விடுவதும் உண்டு. அப்பத்தான் அற்புத முகபாவங்களை இயற்கையாக என் முகம் காட்ட முடிகிறது என்பாராம்.
தன்னை விட்டுப் பிரிந்த கணவனை மீண்டும் அடைவதற்காக மீண்டும் அவனை சந்திக்கிறாள்அவள். தானே தன்னுடைய ட்வின் சிஸ்டர் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகி மாடர்ன் பெண்ணாக அவனை கவருகிறாள். ஜெயிக்கிறாளா என்பதுதான் அவரது கடைசிப் படத்தின் (‘Two Faced Woman’ 1941) கதை. சவாலாக அமைந்த, ஜெயித்த படம் ‘அன்னா கரீனினா’.
1949-இல் மீண்டும் திரைக்கு முயன்றார். ஃபிலிம் டெஸ்ட் எடுத்தார். ஏனோ நடக்கவில்லை. புகழ் காலம் முடிந்ததை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். ‘நீங்கதானே கிரேட்டா கார்போ?’ என்று கேட்ட ரசிகரிடம், ‘ஆமா, நான் தான் கிரேட்டோ கார்போவா இருந்தேன்,’ என்றாராம்.
தனிமை விரும்பியான இவருக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. ‘நம்பமுடியாத அளவுக்கு போர்,’ என்கிறார் ஹாலிவுட்டை.
வேறு?
'தொடர்ந்து புன்னகையை முகத்தில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளே பயங்கரமான முரட்டுத்தனத்தை கொண்டிருப்பார்கள்.'
'அதை வைத்து என்ன செய்வது என்பது மட்டும் தெரியுமானால் வாழ்க்கை எத்தனை அற்புதமாக இருக்கும்!'

'ஹாலிவுட்டுக்கு வர நினைப்பவர்களுக்கு அதன் சிரமங்கள் தெரிவதில்லை.' (இது ஆல் லிவுட்டுக்கும் பொருந்தும், இல்லையா?) 

Wednesday, September 16, 2026

கின்னஸ் பதினொன்று...


அது ஒரு மேஜிக் ஷோ. 1300 பவுண்டு எடையுள்ள இரும்புக் கம்பிகள் மேலே தொங்குகின்றன. பிணைத்திருக்கும் கயிறு 90 செகண்டில் எரிந்து துண்டிக்கப்பட்டு விடும். அவரது கை கால்களை விலங்கிட்டு இரும்புக் கம்பிகளுக்கு நேர் கீழாக இருக்கும் ஒரு பெட்டிக்குள் அடைத்து விடுகின்றனர். உடலைச் சுற்றிக் கட்டிய இரும்புச் சங்கிலியை பெட்டிக்கு கீழே பிணைத்து விடுகின்றனர். கை கால் விலங்குகளை இணைத்திருக்கும் இரும்புச் சங்கிலியை இருபுறமும் இழுத்துப் பிடித்தபடி நிற்கின்றார் இருவர். 90 செகண்டுக்குள் வெளிவரவில்லையானால் மேலிருந்து விடுபடும் கிராதகக் கம்பிகள் கிழித்துவிடும் உடலை. பெட்டியை திரை மூட, கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!...
கைவிலங்குடன் கட்டிய சங்கிலி உலுக்கப்படுவது தெரிகிறது. சில செகண்டுகளில் அது கீழே விழுகிறது. அடுத்து கால் விலங்குச் சங்கிலி. இழுத்து உலுக்கப்பட்டு வெளியே விழுகிறது. 60 செகண்ட் தாண்டியாயிற்று. கீழே இழுத்துக் கட்டியிருக்கும் சங்கிலியை இழுப்பது தெரிகிறது. அது வரவில்லை. நேரம் பறக்கிறது. ஆயிற்று. 88.. 89... 90...
படார்! செங்குத்தாய் விழுகின்றன கம்பிகள். அரங்கம் ஷாக்கில் அமைதி! அடுத்த விநாடி திரையை விலக்கிக்கொண்டு கம்பிகளின் மேலான பலகையிலிருந்து எழுந்திருக்கிறார். சிரித்தபடியே கை காட்டுகிறார். கைத்தட்டலில் அரங்கம் அதிர்கிறது.
David Copperfield.. உலகின் இணையற்ற மேஜிக் நிபுணர். இன்று பிறந்த நாள்!
கின்னஸ் ரெக்கார்டா? பதினொன்று! Emmy அவார்டா? இருபத்தி ஒன்று! உலகின் மிகப் பணக்கார, மிக வெற்றிகரமான மேஜிக் நிபுணர்!
நூற்றாண்டின் தலைசிறந்த மேஜிக் நிபுணராக The Society of American Magicians இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது..

'Terror Train' என்ற படத்திலும் வருவார் மேஜிக் நிபுணராகவே.. 

Thursday, September 10, 2026

பிரபல பஞ்ச் டயலாக்...

தன் முன் நின்ற அந்த வாலிபனைப் பார்த்தார் டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். காங்கேயம் சொந்த ஊர். கம்பீரமான உருவம். வில் புருவங்களின் கீழே கூர்மையான கண்கள். எகத்தாளம் தூக்கி நிற்கும் உதடுகள். அந்த கணீர்க் குரல். கே.பி.சுந்தராம்பாளின் சிபாரிசு தேவையே இல்லை. எடுத்துக் கொண்டார் அந்த நடிகரை. படம் 'மணிமேகலை.' தொடர்ந்து கிடைத்த படம் 'உதயணன் வாசவதத்தை.' உதயமானார் ஒரு வில்லன்.
யாரப்பா அது கர்ஜிப்பது என்று எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த
வீரப்பா...
பி.எஸ்.வீரப்பா... இன்று பிறந்த நாள்! (1911-1998)
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' கண்ணதாசன் எழுதிய தமிழ்பட உலகின் மிகப் பிரபல பஞ்ச் டயலாக்கைப் பேசியவர்.
ஸ்ரீராம், ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர். என்று எல்லோருக்கும் 'சபாஷ்! சரியான போட்டி!'யாக வந்தவர். அவரே 'சபாஷ்' சொன்ன 'சரியான போட்டி' பத்மினி, வைஜயந்தியுடையது. ('வஞ்சிக்கோட்டை வாலிபன்') மறக்க முடியுமா அதை?
சிரித்தாலும் சிரித்தார் ஒரு 'ஹா ஹா ஹா!' வில்லன் என்றால் ஹா ஹா ஹா என்றுதான் சிரிக்கணும் என்று கிளம்பிய பல 'ஹா ஹா ஹா'க்களைத் தாங்க வேண்டியதாயிற்று. அவர்போல் ஒன்றும் வரவில்லை.
நடிகர் எத்தனை பிரபலமோ அதற்குச் சற்றும் பிரபலம் குறையாத புரொட்யூசர். ஆம், ஓங்கி ஒலித்த அந்த ‘ஆலயமணி'! அதை நமக்குத் தந்தவராயிற்றே? திலீப்குமார் நடித்து அது இந்தியிலும் ‘ஆத்மி'யானது.
தயாரிப்பை ஆரம்பித்தது ‘பிள்ளைக் கனியமுது' படத்தில். (அந்த "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே..." பாடல்!) தொடர்ந்து ஜெமினியுடன் ‘வீரக்கனல்'. ‘ஆலயமணி’ ஒலித்தபின் ஒளிர்ந்தது ‘ஆனந்த ஜோதி' அப்புறம் “ஆறு மனமே ஆறு…” என்ற ‘ஆண்டவன் கட்டளை’... 'Woh Kaun Thi?' யைத் தமிழில் ‘யார் நீ?’ என்று தர, அதிரடி ஹிட், இந்தியைப் போலவே. ராம நாராயணன், எஸ் ஏ சந்திரசேகர், ராமராஜன் டைரக்‌ஷனில் சளைக்காமல் படங்களைத் தந்தவர்.

Sunday, September 6, 2026

பால்வெளியின் வான்மதி...


அவர் ஒரு பெண் எழுத்தாளர். தெலுங்கில் அவர் எழுதிய ‘அத்தகாரி கதாலு’ என்ற சிறுகதைத்தொகுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. அதன் சில கதைகள் குமுதத்தில் ‘அத்தகாரு’ என்று தமிழில் வெளியானது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் அவரை என்று தெரியாது. ஆனால் பானுமதி என்றால் அத்தனை பேருக்கும் நினைவு வந்துவிடும் அவரை.
ஆம், இந்தப் பக்கம் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். அந்தப் பக்கம் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
பி. பானுமதி. வெண் திரை பால்வெளியின் வான்மதி.
இன்று பிறந்தநாள்! (1924-2005)
‘வான் மீதிலே… ‘ என்று ராமராவ் முதல் வரியைப் பாடியதும் கிளையில் கையூன்றி நிற்கும் பானுமதி முகத்தைத் தாழ்த்தி உடலைப் பின்னிழுத்தபடியே, கண்களை உயர்த்தி, ஒரு பார்வையை வீசுவார் பாருங்கள், ஒரு நாயகி தன் களையை வெளிப்படுத்தும் கலையை அந்த ஐந்து விநாடி ஷாட்டில் கற்றுக் கொள்ளலாம்.
பாத்திரங்களைப் படைக்கும் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ பாத்திரங்களை புரிந்துகொண்டு காத்திரமான நடிப்பை வழங்கி விடுவார்.
‘அறிவாளி’ படத்தை ஷேக்ஸ்பியர் பார்த்தால், ஆஹா, இந்த நடிகை மட்டும் நடிப்பதாக இருந்தால் எத்தனை ‘Taming of the Shrew’ களை எழுதியிருக்கலாம்! என்பார்.
ஹாஸ்டல் மாடி பால்கனியிலிருந்து, கீழே சிவாஜி பாடும் ‘வெண்ணிலா ஜோதியே வீசுதே..’வுக்கு சந்திராவாக வெட்கப்பட்டு விட்டு, அந்தப் பக்க பால்கனிக்கு ஓடி, கீழே டி. ஆர். ராமச்சந்திரன் பாடும் ‘திண்டாடுதே என் கண்களே..’வுக்கு மாடர்ன் அபிநயம் காட்டி, ஒரே ஆள் இரண்டு நபராக அசத்துவார் பாருங்கள், தியேட்டர் அதிரும். ஆம், The Fabulous Senorita வில் Estelita வாக நடித்த Estelita வை விட Fabulous ஆக நடித்திருந்தார் ‘மணமகன் தேவை’யில்.
பீறிட்டுக்கொண்டு கிளம்பும் நடிப்பு அவருடையது. நம் நாட்டின் இன்க்ரிட் பெர்க்மன். ‘Gaslight’ (1944) இல் அவர் செய்ததை அனாயாசமாக ரங்கோன் ராதாவில்… கடைசி சீனில் அவரைப்போல் ஒரு வீல் அலறல் விட்டதும், படத்தில் அது கட்டாகி விட்டதும் அப்போது ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அப்புறம் அந்த நடிப்பின் எல்லை.. ‘அன்னை.’ “உன் பிள்ளையை அடிக்க நான் யாரு?” என்று சௌகார் விலகும்போது, அவன் தன் பிள்ளை இல்லை என்று தான் உணருவதையும் அதை நமக்கு உணர்த்துவதையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்துவார். “என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, தப்பு எம்மேலதான், மன்னிச்சுக்க, என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, இது உம்பிள்ளே, நீ அடி, கொல்லு, என்ன வேணாலும் பண்ணிக்கோம்மா, உன் புள்ளையாச்சு, நீயாச்சு, நான் பெரியவ, நான் பெரியவ..” என்று நகரும்போது ஒரு நடிகை வசனம் பேசுவதையா பார்க்கிறோம்? ஒரு வளர்ப்புத் தாயின் மனத் தளர்வும் வேதனையும் மட்டுமே அல்லவா தெரிகிறது?
ரோல் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடுவார். ‘Let me try…’ என்று சங்கர் கணேஷ் இசையில் அந்த ஆங்கிலப் பாடலையும்!(‘பத்து மாத பந்தம்’). ‘Meet my son…’ இன்னொரு அழகுப் பாடல் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யில்.
‘லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா..’ நாலு மொழிப் பாடலிலிருந்து ‘அன்னை என்பவள் நீதானா…’ வரை லட்டு லட்டாக பாடல்கள்.
அஷ்டாவதானி என்றால் அதான் எனக்கு தெரியுமே என்பீர்கள். என்ன அந்த எட்டு என்றால்? எழுத்தாளர், டைரக்டர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், நடிகை. (முதல் பெண் சூபர் ஸ்டார்.)
இவர் நடிப்பில் ஒரு இயல்பான குறும்பு கலந்திருக்கும். ‘ஏரு பூட்டி ஜோரு காட்டும் …’ ('ம.பெ.மகராசி') பாடலில் அந்தக் குறும்பை நாணத்துடன் சரிவிகிதத்தில் வழங்கியிருப்பார்.
‘கள்வனின் காதலி’யில் கல்கியின் கல்யாணியை அப்படியே கண்முன் கொண்டு வந்ததை நாலு வரி சொல்லலாமென்றால் ‘அம்பிகாபதி, ‘அலிபாபா’, ‘மதுரை வீரன்', ‘கானல் நீர்' எல்லாமாக சேர்ந்து நாற்பது வரி ஆகிவிடும்