Thursday, July 23, 2026
கடைசிக் குடம்
Wednesday, July 15, 2026
அக்காவின் ஆவி… (சிறுகதை)
Saturday, May 30, 2026
அவரின் அல்காரிதம்…
Friday, May 14, 2021
அந்த அரை ஏக்கர்...
Tuesday, April 14, 2020
உண்மைக்கு நூறு புனை பெயர்கள்...
எண்ணை அழுத்தி சபேஷை செல்லில் பிடித்தான்.
"எல்லாத்துக்கும் தலையாட்டறே. சொல்ற வேலையெல்லாம் செய்யறே. ஆனா குடும்ப சம்பந்தமான எந்தப் பிரசினையிலும் தலையிடாம ஒதுங்கியே இருக்கே. எந்த முடிவானாலும் என் இஷ்டம்னு விடறே பார், அதான் எனக்குப் பெரிய தலைவலியா.. தாங்க முடியலே. ஏன் இப்படிப் பட்டும் படாமலுமிருக்கே. இதுக்காவது வாயைத் திறந்து ஏதாவது பதில் சொல்லித் தொலையேன்!"
"பெண்னைப் பெத்த யாருமே தங்களால முடிஞ்ச அளவு தங்கள் பெண்ணுக்கு கண்டிப்பா சீர் செய்யத்தான் செய்வாங்க. ஆனா நீங்களோ... நீங்கன்னா உங்கப்பா. அப்பா கேட்டா என்ன, மகன் கேட்டா என்ன? அதோடு திருப்தி அடையாம உங்க அந்தஸ்தை மனசில் வெச்சு பெருந்தொகை கேட்டீங்க. அந்தப் பணத்தைப் புரட்டித் தரக் கொஞ்சம் தாமதம் ஆனப்போ, அத்தனை தகுதியுள்ளவளாக நீங்க தேர்ந்தெடுத்த என்னை வேண்டாம்னு ஒதுக்கவும் தயாராயிட்டீங்க. எங்கப்பா அங்கே இங்கே அலைஞ்சு அந்தப் பணத்தைப் புரட்டித் தந்த பிறகுதான் உங்க செலெக்ஷனையே நீங்க ஏத்துக் கிட்டீங்க. இப்படி இந்த வீட்டில நுழைஞ்ச எனக்கு நீங்க சொல்ற அந்த முழு ஈடுபாடு எப்படிங்க வரும்? பணம் கட்டித்தான் உங்க வாழ்க்கைப் பயணத்தில நான் பங்கேற்க முடியும்னா, அந்தப் பங்கு எப்படிங்க ஆத்மார்த்தமா இருக்கும்?
"இப்ப நீங்க அனுபவிக்கிற இதே வேதனையைத்தானே நான் இங்கே வந்த நாளா அனுபவிச்சிட்டிருக்கேன்! உங்க தகுதியையும் திறமையையும் நல்லா எடைபோட்டு வேலை கொடுத்த கம்பெனி, அதுல முதலீடு செய்தால்தான் வேலைன்னதும் அதை எத்தனை பெரிய குறையா நீங்க நினைக்கறீங்க? அந்த நிமிஷமே அந்தக் கம்பெனியில உங்க ஈடுபாடு அடியோடு விட்டுப் போச்சுங்கறீங்களே..! அப்படி இருக்கிறப்போ அதுக்கு நேர் மாறா என்கிட்ட மட்டும் எப்படிங்க உங்களால எதிர்பார்க்க முடியுது?"
Sunday, February 6, 2011
மூன்று கண்கள்...

மாலினிக்கு கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை, நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் தான்...
கணினியின் வெண்திரையில் லதிகாவின் இமெயில் அவளைப் பதில் கேட்டது.
'...பாருடி, ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆப்பர்சூநிட்டி! பத்மாவிலேர்ந்து சரளா வரை ஒவ்வொருத்தர் அட்ரஸ் கண்டு பிடிக்க நான் பட்ட பாடு! இருபது வருஷத்துக்கப்புறம் நாம எல்லாரும் ஒண்ணா லூட்டி அடிக்கப் போறோம், ஜெய்ப்பூர், சிம்லான்னு கலக்கப் போறோம். முன்னால நாம காலேஜ் டூர்ல கலக்கின அதே இடங்களுக்கு! எல்லாரும், 'எஸ்' கொடுத்திட்டாங்க. எவ்ரிதிங் அரேஞ்ச்ட். இந்த இருபதாம் தேதி புறப்படறோம். உனக்கும் சேர்த்துத்தான் இடம் போட்டிருக்கு. எதுக்கும் ஒரு ஒ.கே., மெயில் கொடுத்திடு... பை...'
இந்த ஐடியாவை லதிகாவிடம் போட்டுக் கொடுத்ததே மாலினி தான். இப்ப அவளாலேயே வர முடியாதுன்னு சொல்ல வேண்டியிருக்கு.
மகள், கணவன், மாமனார் என்று என்நேரமும் இயங்குகிறவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்... மனசு கெக்கலி பண்ணிற்று.
.
நடந்தது நிஜம் தானா? அவளால் நம்ப முடியவில்லை...
நேற்று மாலை...
''ஐயோ, அப்ளை பண்ணிட்டீங்களா? அது பத்தி நாம டிஸ்கஸ் பண்ணவே இல்லையே இன்னும்?''
''அதான் நீ இருக்கியே, அப்புறம் என்ன கவலை? போன வருஷம் எல்லா ஹெல்பும் நீ தானே பண்ணினே... நாளையிலேருந்து உன் வேலை தொடங்குது. ரெண்டு மாசம்... அவ்வளவுதான். வெற்றி நமதே!'' என்று சொல்லிவிட்டார். இனி என்ன சொல்றது... என்னத்தை கேக்கிறது? மெல்ல சொல்லிப் பார்க்கலாமா அடுத்த வருஷம் கூட எழுதலாமேன்னா, கேட்க மாட்டார். வந்த ஸ்பிரிட் போயிடுச்சு உன்னாலம்பார்...
''அடிப்பாவி, என்கிட்டே ஏதும் கேக்க வேணாமா?''
''உன்கிட்ட கேட்டா என்ன மறுக்கவா போறே என் செல்ல அம்மா?''
இந்தப் பக்கம் வந்தால் மாமனார் அவர் பங்குக்கு...
'செண்ட்'- பட்டனை கிளிக் செய்யப் போகுமுன் 'டக்'கென்று 'ஹேங்' ஆகிவிட்டது கணினி.
முகத்தைப் பார்க்காமலேயே கிச்சனுக்குப் போனாள்.
கம்பெனியிலிருந்து கணேசனின் போன் கால் வந்தது.
இந்தப் பக்கம் மாமாவும் கையில் ஏதோ ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு..
''ஒண்ணுமில்லே, மாநாடைஒத்தி வெச்சுட்டாங்கம்மா . இனி இங்கே மத்த வேலைகளை நான் பார்த்துக்கறேன்!''
மூடிய அதே வேகத்தில் திறக்கிற கதவுகள்!
போட்டதும் திரை திறந்தது. விட்ட இடத்திலேயே...
எட்டிப் பார்க்கிற மாதிரி பார்த்து விட்டு, ''அட, சூப்பர் கெட் டுகெதர்! அம்மா... போயிட்டு வாம்மா. என்னம்மா இது, வர முடியாதுன்னு பதில் அடிச்சு வெச்சிருக்கே? அதை டெலிட் பண்ணும்மா... ஒரே வார்த்தை! ஒகே! கொடு....''
Saturday, November 13, 2010
பதில் ஒன்றே!
(ஈரோடு திண்டல் ரோட்டரி சங்கமும் 'சிகரம்' இதழும் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை ) மாதவன் அவரே காரை ஒட்டிக்கொண்டு வந்திருந்தார் கிராமத்துக்கு. அவருக்கு இரண்டு பிரசினைகள். அவைதாம் அப்பாவைத் தேடிக்கொண்டு வரவைத்தது. ஏதாவது வழி சொல்லுவார் என்ற நம்பிக்கை.
அம்மா காலமான பிறகும் அப்பா தன் ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பையும் தோட்டத்தையும் பார்த்துக்கொண்டு, அவருண்டு அவரின் புத்தகங்கள் உண்டு என்று அந்த கிராமத்து வீட்டில் தனியாக வாழ்ந்தார். வற்புறுத்திய மகனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார், ''என்னையும் உங்களோட வெச்சுக்க ஆசைப்பட்டா நீங்களும் கிராமத்தில தங்கிடறது தான் ஒரே வழி.''என்று. அது அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.
மாதவன் சென்னையில் ஒரு கணினி கம்பெனியில் டிவிஷனல் மானேஜராக நல்ல சம்பளம், ஃப்ரீ க்வாட்டர்ஸ், கார், சமூகத்தில் நல்ல அந்தஸ்து, அழகான மனைவி, காலேஜில் படிக்கிற இரு பையன்கள், பெண்...
ஆனால் இன்னொரு பக்கம்...
அதுதான் பிரசினை. அதுதான் அப்பாவைத் தேடி கொண்டு வரவைத்தது.காரை ஊருக்குள் விடாமல் தோப்புக்குச் செலுத்தினார். இந்நேரம் அவர் எங்கே இருப்பார் என்று தெரியும்.
வெண்டைக்காய் தோட்டத்தில் களை பறித்துக் கொண்டிருந்த சுப்பையா ஆச்சரியமே இல்லாது பார்த்தார் மகனை. ''என்ன விஷயம்? ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே...''
''உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு தான். கொஞ்சம் பிரசினை எனக்கு... வீட்டுக்குப் போகலாமாப்பா?''
''இல்லை, இதை முடிச்சிட்டுப் போகலாம்,'' என்று ஒரு கூடையை மகன் பக்கம் நகர்த்தினார்.
அப்பா! மாறவே மாட்டார் இவர்! இவருக்கு இந்தத் தோட்டம் தான் டிஸ்னி லேண்ட்... களை பறிப்பது தான் கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்... முணுமுணுத்த படியே பறிக்க ஆரம்பித்தார்.
''சொல்லு.''
''ரெண்டு பிரசினைப்பா எனக்கு. ரெண்டும் என்னைப் பிய்க்குது.'' ஆரம்பித்தார்.
''எல்லா வசதியும் இருக்கு. ஆனா நிம்மதியில்லே.''
''ஏண்டா?''
''செலவு. அதிக செலவு! என்னால முடிஞ்ச வரை போராடறேன். முடியலே.''
''உனக்குத்தான் நல்ல சம்பளம் வருதுன்னு சொல்வியே?''
''தாராளமாவே வருது. ஆனா அதைக்கொண்டு சமாளிக்க முடியலியே... எந்த செலவையும் கட்டுப் படுத்த முடியலே.''
''இப்படி மொத்தமா சொன்னா எப்படி? ஏதாவது ஒரு அம்சத்தை சொல்லேன்.''
''மாசா மாசம் பெட்ரோல் செலவு மட்டும் ரெண்டாயிரம் ரூபாய் வருது.''
''ரெண்டாயிரமா?''
''ஆமா, ரெண்டு கார் இருக்கில்ல? ஒரே சமயத்தில் நானும் ஆபீஸ் போகணும்.சாயந்தரம் ரேவதி கிளப் போவாள். மத்தவங்க ட்யூஷன். அதான் இன்னொரு வண்டி வாங்கினேன்.''
''ஓஹோ? சரி, உன் அடுத்த பிரசினை?''
''அது கொஞ்சம் வேறே மாதிரி.'' கை வலிக்கவே கூடையை கீழே வைத்தார்.
''வர வர உடம்பு மோசமாயிட்டே போகுது. டயபடிஸ், கொலேஸ்ட்ரால் ரெண்டும் இருக்குது. பிரஷர் ஒருபக்கம் ஏறிட்டே போகுது.''
''டாக்டர் என்ன சொல்றார்?''
''இதையெல்லாம் கண்ட்ரோல் பண்ணலேன்னா இருதயத்தை பாதிக்கும்கிறார். ஹைபர்டென்ஷன் வந்து ஸ்ட்ரோக் வந்துரும்கிறார்... ஏற்கெனவே வீட்டு செலவுப் பிரசினையினால சோர்ந்து போயிருந்தேனா, இதுவும் சேர்ந்து தூக்கமே இல்லாம போச்சு. டிப்ரஷன் இருக்கலாம்னு சொல்றார் டாக்டர்...''
களைகளை களைந்தபடியே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் சுப்பையா. எதுவும் சொல்லவில்லை.
வீட்டுக்கு திரும்பினார்கள். மனசுக்குள் லேசாக உணர்ந்தார் மகன். அப்பாவிடம் கொட்டிய திருப்தி.
மறு நாள். மாதவனையும் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு கிளம்பினார். மண்பாதை வழியே நடக்கையில்...
''மாதவா, சின்ன வயசில் உனக்கு நிறைய விடுகதைஎல்லாம் போடுவேனே ஞாபகமிருக்கா?''
''ஆமாப்பா.'' நினைவு வந்தது. நிலா நாட்களில் மாடியில் அமர்ந்து தினுசு தினுசாக விடுகதைகள், புதிர்கள்...
''எருக்கம் இலை பழுப்பதேன்? எருமைக் கன்று அழுவதேன்? அப்படீன்னு எல்லாம் கேட்பேனே?''
''ஆமா. ரெண்டுக்கும் ஒரே ஆன்ஸர் தான். பாலின்றி!''
''அது மாதிரி உன் ரெண்டு பிரசினைக்கும் ஒரே தீர்வு தான்.''
மாதவன் திடுக்கிட்டு நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தார்.
''இப்படி உட்கார், சொல்றேன்!'' கால்வாய்க்கரை ஓரமாக அமர்ந்தனர்.
''உங்களை மாதிரி காரிலும் ஆபீசிலும் கான்ஃப்ரன்ஸிலுமாக உட்கார்ந்தே நாளைக் கழிக்கிறவங்க சீக்கிரமே உடல் தளர்ந்திடறாங்க. தசைகள் கட்டுவிட்டுப் போகுது. ரத்த ஓட்டம் குறையுது. எடை அதிகமாகுது. டயபடிஸ் வருது. பி.பி. ஏறுது. இதுக்கெல்லாம் காரணம் போதுமான உடலசைவு இல்லாதது தான். உடற் பயிற்சி தான் இதற்கு நிவாரணம். ஏரோபிக் எக்ஸர்சைஸ்னு எல்லாம் கேள்விப்பட்டிருப்பியே...''
இந்த மாதிரி சங்கதிகளை எல்லாம் படிக்க எங்கே நேரம் இருக்கு அவருக்கு? அப்பாவுக்கோ படிப்புதான் முதல் உணவு.
''ஒழுங்கா உடற் பயிற்சி செய்யறதால உடலின் கெமிஸ்டரியில் ஏற்படற மாற்றம் ஏராளம். நம்ம உடம்பில மொத்தம் ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு ரத்தக் குழாய்கள் இருக்கு. தசைக்குப் பாசனம் செய்கிற வாய்க்கால்கள்! தசைகள் சும்மா இருக்கும்போது இதில கொஞ்சம் தான் திறந்து மூடுது. ஆனால் உடற் பயிற்சி செய்யறபோது 50 மடங்கு அதிகம் குழாய்கள் திறந்து மூடுது. ஏன், புது ரத்தக் குழாய்களே உருவாகுது... மூளைக்கும் எத்தனையோ நன்மைகள். ஞாபகசக்தி அதிகமாகுது. ஆராய்ந்து தெளியும் திறன் சக்தி கூடுது. ஒரு மன இளக்கம் ஏற்படும். அப்புறம் எப்படி டிப்ரஷன் அங்கே இருக்கும்?''
இவ்வளவு விஷயம் இருக்கா? வியந்தார். ''அப்ப நான் கொஞ்சம் இதெல்லாம் செய்ய நேரம் ஒதுக்கணுமே..?''
''தனியே நேரம் ஒதுக்க வேணாம்னு தான் சொல்ல வந்தேன். நீ ஆபீஸ் போய் வர்ற நேரம் தான் இருக்கே?''
''என்னது?''
''ஆமா. உலகத்திலேயே சிறந்த எளிமையான பாதுகாப்பான உடற் பயிற்சியை நீ அப்ப செய்யலாமே! தினம் ஆபீசுக்கு நடந்து போய் வா. வேகமா கையை வீசி... ஸ்ட்ரைடிங்னு சொல்லுவாங்க, அப்படி. தவறாம இதை தொடர்ந்து செய்து பார்.''
''பார்த்தா?''
''உன் ரெண்டாவது பிரசினையும் தீர்ந்திடும்.''
''அப்படியா?''
''எஸ். பெட்ரோலுக்காக செலவாகிற ஒரு கணிசமான தொகை மிச்சமாயிடும். நீ இப்படி நடந்து போகிறதைப் பார்த்தா நிச்சயம் ரேவதியும் பிள்ளைகளும் காரை தேவையில்லாம எடுக்கிறதைக் குறைச்சுக்குவாங்க. பெட்ரோல் பில்லும் சரி, டாக்டர் பில்லும் சரி, குறைஞ்சிரும்.''பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாதவன். மனதில் ஏராளம் மாற்றங்கள். தீர்மானங்கள்.
''அது மட்டுமில்லே. இப்படி செய்யறதில உனக்கொரு ஆத்ம திருப்தியும் உண்டாகும் பார். பெட்ரோலை இப்படி உபயோகிக்கிறதால உலகத்தில மிஞ்சி இருக்கிற ஏரிசக்தியை வேகமா அழிச்சுத் தீர்க்கிறோம். இயற்கையின் சுழற்சியில் அளவோடு உண்டாகிற அபூர்வ சக்திகளை இப்படி அபரிமிதமா வீணாக்கிறது பாவம் இல்லையா? இந்த மாதிரி நம்ம காரியங்களை நாமே செய்யறதன் மூலம் அதை தவிர்க்கலாம். அதில நமக்கொரு சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். விலை மதிக்க முடியாத விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்தை விட்டுறணும்னு சொல்லலை.ஆனா அது நம்மை சுகபோகங்களுக்கு அடிமையாக்கிடக் கூடாது இல்லையா?''
''உண்மைதாம்பா. நேத்திக்கு உங்களோட கொஞ்ச நேரம் களை பிடுங்கினப்போ அதை நானே உணர்ந்தேன். முதல்ல கஷ்டமா இருந்தது, ஆனா கடைசியில வேறெப்போதும் உண்டாகாத ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் உண்டானது.''
''நல்லவே புரிஞ்சிக்கிட்டே. இந்த வேடிக்கையைப் பார். ஒரு பக்கம் ஏரி சக்தியை வீணாக்கிட்டு இன்னொரு பக்கம் மனித சக்தியை அளவுக்கு மீறி ஊளைச் சதையா உடம்பில தேக்கி வைக்கிறோம். நாளைக்கு ரெண்டினாலேயும் கஷ்டப்படப் போறோம்!'' என்று சிரித்தார்.
மாதவனும் சிரித்தார்.''உங்க விடுகதை புரியுதுப்பா!''
''ஆமா, உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்? குடும்பச் செலவு கூடுவதேன்? இது தானே உன் கேள்வி? என் பதில் என்ன தெரியுமா?''
''தெரியும்,'' என்றார் மாதவன், ''உழைப்பின்றி!''.
#####
Sunday, May 23, 2010
அப்பா ஒரு நாளும்...

('நம் உரத்த சிந்தனை' மாத இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை)
''என்னம்மா திடீர்னு குண்டைத் தூக்கிப் போடறே?'' ஆத்திரமாக அலைபேசியை முறைத்தான் விகாஸ்.
''இல்லேடா, ரொம்ப வேண்டியவராச்சேன்னு... ரெங்கசாமின்னு அவர் கூட படிச்சவராம். பக்கத்து டவுனில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. அவர் வாங்கின லோனுக்கு அப்பா ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்காரு. செக் எழுதிக் கொடுத்திட்டாங்க. அந்த ஆள் பணத்தைக் கட்டலே. ஊரை விட்டே ஓடிட்டாரு. இப்ப ரெண்டு லட்சம் எடுத்து வைக்கணும். இல்லேன்னா அப்பாவை அரெஸ்ட் பண்ணிருவாங்க.''
விகாஸ் சுற்றிலும் பாத்தான். ஐ.டி. கம்பெனியின் ஏஸி ஹால். என்னதான் மெல்லப் பேசினாலும் தெளிவாய்க் கேட்கும் மற்றவர்களுக்கு. தன் கியூபிகளை விட்டு வெளியே வந்தான்.
''என்னம்மா இது, என்ன நினைச்சிருக்கீங்க? ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?'' இரைந்தான்.
''இல்லேப்பா, வேணுமின்னா செய்தாரு? அவரும் எதிர்பார்க்கலே இப்படி ஆகுமின்னு. நீ சப்போர்ட் பண்ணுவேங்கிற நம்பிக்கையில இருக்காரு.''
கோபம் தலைக்கேறிற்று. ''இதான்! இதான் நீங்க எனக்கு செய்யக்கூடாதது! அதை செஞ்சிட்டாரு அப்பா! நான் படிச்சது, வேலை பார்க்கிறது, முன்னேறினது எல்லாத்தையும் இது அர்த்தமில்லாம செஞ்சிட்டுதில்ல?... சரி சரி, பிரசினையை ஏற்படுத்தியாச்சு. இனி நான் இதை பாடித்தானே ஆகணும்? என் சேமிப்பு எல்லாத்தையும் பொறுக்கிட்டு வர்றேன்''
''சரிப்பா.''
''ம், உங்களால எனக்கு என்ன பிரயோசனம்? இத பாரும்மா, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கறது எல்லாம் பெரிசில்லே. அப்புறம் அதுக்கு உலை வெக்கிறது கொஞ்சமும் சரியில்லே. அவர்ட்ட சொல்லு. இதான் கடைசி.'' படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டான்.
மறு நாள். மனைவியின் திட்டுக்களை காதில் போட்டுக் கொண்டு, அவளிடம் கெஞ்சி செக்கில் ஜாயின்ட் கையெழுத்தை வாங்கிக் கொண்டு பாங்கில் பணம் எடுக்க வந்தபோது..
அலை பேசி துடித்தது. எடுத்தான். அப்பா.
''அந்த பிரசினையை நானே சமாளிச்சிக்கிறேண்டா. உன் உதவி தேவையில்லை.''
''அப்பா வந்து நான் என்ன சொன்னேன்னா...''
''அதான் எல்லாம் சொல்லிட்டியே. அம்மா சொன்னா.''
வைத்துவிட்டார்.
தொடர்ந்த ஞாயிற்றுக் கிழமை கிளம்பி ஊருக்கு வந்தான். நடந்தது பற்றி யாரும் பேசவில்லை. சாப்பாடு, குளியல் என்று வழக்கம் போல் நடந்தது. அம்மா மார்க்கெட்டுக்குப் போய் அவனுக்குப் பிடித்த வஞ்சிர மீன் வாங்கி வந்து பொரித்தாள்...
நேராக சுந்தரம் மாமா வீட்டுக்கு வந்தான். அப்பாவின் நெருங்கிய நண்பர். நடந்ததை எல்லாம் சொன்னான். பொறுமையாகக் கேட்டார்.
''நீ அவசரப்பட்டுட்டே!'' என்றார்.
''புரியலியே மாமா.''
''கொஞ்ச நாள் முந்தி நீ ஏதோ ஒய்வு நேரத்தில் சாப்ட்வேர் பிராஜெக்ட்ஸ் எடுத்து செய்யப்போறேன், அதுக்கு சில லட்சம் பணம் வேணும், நம்ம பூர்விக வீட்டை வித்திடலாமான்னு கேட்டியா?''
''ஆமா.'' ஞாபகம் வந்தது. அப்பாவும் சரிப்பா, பண்ணிடுவோம்னு பச்சைக் கொடி காட்டியிருந்தார்.
''என்கிட்டே வந்து அதை சொன்னான். விக்கிறதுக்கு ஆள் பார்க்க சொன்னான். அப்ப நான் கேட்டேன், ஏண்டா, உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறதே அந்த வீடு ஒண்ணு தானே, வேறே எதுவுமே நீங்க வெச்சுக்கலியே அப்படீன்னு. அதுக்கு அவன் சொன்னான், இல்லேப்பா, நாளைக்கு எனக்கோ என் காலத்துக்குப் பிறகு அவன் அம்மாவுக்கோ ஏதும் ஆச்சுன்னா விகாஸ் பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்குன்னான். எதுக்கும் உன் நம்பிக்கை சரிதானான்னு ஒண்ணுக்கு நாலு தரம் யோசிச்சுப் பார்த்துக்கன்னு சொன்னேன்.''
''சரி மாமா இப்ப அதுக்கும்...''
''போன மாசம் அதை விலை பேசி அட்வான்சும் வாங்கிட்டான். ஸோ அவனுக்கிருந்த ஒரே சொத்தையும் உனக்குக் கொடுத்திட்டான். இது போன மாச நிலைமை.''
''அப்படியா?'' குழம்பினான்.
''இப்ப அவன் ஒரு பிரசினைன்னு உனக்கு போன் பண்ணினான். நீ அவசரப்பட்டு இப்படி பேசிட்டியே?''
''பின்னே என்ன மாமா, படிக்க வெச்சிட்டு, முன்னேறி வந்தப்புறம் இப்படி நம்ம நல்ல நிலைக்கு உலை வெச்சா...''
''இத பாரு, உன்னை படிக்க வெச்சது, ஆளாக்கினது எல்லாம் அவன் சக்திக்கு ரொம்ப மேலே! கல்யாணமான புதுசில் அவனுக்கு அட்டெண்டர் வேலைதான். ஆனா உன்னை பிரைவேட் ஸ்கூலில் சேர்த்தது, தினம் சைக்கிளில் கொண்டு போய் விட்டது, சின்னக் காய்ச்சல்னாலும் ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினது இப்படி எத்தனையோ விஷயங்கள்...! அதெல்லாம் உன்கிட்ட எதுவும் எதிர்பார்த்து செய்ததுன்னா நினைக்கிறே? நீ நாளைக்கு கஷ்டப்படக்கூடாது, உன் மனைவி குழந்தைகளோட சந்தோஷமா வாழணும்னு தானே? ரிடையரான பிறகும் உன்னோடு வந்து உட்காராமல் இங்கேயே அவங்க பாட்டைப் பார்த்துட்டு இருக்கிறதை நினைச்சுப்பாரு. ஒரு நாளும் அவன் உனக்கொரு பிரசினையை மனமறிஞ்சு செய்ய மாட்டான். ''
''அப்படீன்னா இப்ப பண்ணினது எனக்குப் பிரசினை இல்லையா?''
''தன்னை மீறி ஒரு கஷ்டம், பிரசினை எல்லாம் யாருக்கும் எப்ப வேணாலும் வரலாம். அதான் அவன் உனக்கு சொல்ல விரும்பின மெசேஜ்ன்னு நினைக்கிறேன்.''
''என்ன மாமா சொல்றீங்க?''
''அவன் உனக்கு செய்ய வேண்டியதை செய்துட்டான் . சொல்ல வேண்டியதையும் சொல்லிட்டான். இப்ப அவன் மனசில நம்பிக்கையை விதைக்கிறதும் ஒதுங்கிக்கிறதும் நீ எடுக்க வேண்டிய முடிவு. பார்த்து நடந்துக்க.''
இவனுக்கு லேசாய்ப் புரிந்த மாதிரி இருந்தது. அவர் தொடர்ந்தார். ''புரிஞ்சிருக்கும் உனக்கு. உங்கப்பா எனக்குத் தெரியாம எந்தக் காரியமும் பண்னினதிலலே. யாருக்கோ அவன் ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கான்னு சொன்னியே யார் அது?''
''ரெங்கசாமின்னு அவரோட நண்பர்...''
சிரித்தார். ''...அவனுக்கு ரெங்கசாமின்னு எந்த நண்பரும் கிடையாது. போயிட்டு வா.''
விகாஸ் அதிர்ச்சியில் நின்றான். ''என்னை மன்னிச்சுடுப்பா!'' மனம் இறைஞ்சிற்று...
Monday, January 11, 2010
ராத்திரியில் காத்திருக்கும்...
கணவனை இப்படி வேலை வாங்குவது பற்றி ராஷ்மியைக் குறை சொல்லாதவர்களே கிடையாது.ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர் அவன். அதிலும் பிராஜெக்ட் லீடர். கம்பெனியில் ராத்திரி ஒன்பது மணி வரை பிசியாக வேலை செய்துவிட்டு அலுத்துக் களைத்து வீடு திரும்பும் அவனை பத்துப் பாத்திரம் தேய்க்க அனுப்பி விடுவாள் ராஷ்மி.
''என்னங்க, தண்ணியிலே புழங்கறது என் ஸ்கின்னுக்கு சரிப்பட்டு வரலே! ராத்திரி மட்டும் பாத்திரங்களை நீங்க வாஷ் பண்ணிக் கொடுத்துடுங்களேன், பிளீஸ்!'' என்று நைசாக அவன் தலையில் கட்டிவிட்டாள் அந்த வேலையை. அவனும் மறுக்காமல் அத்தனையையும் இழுத்துப் போட்டுப் பளிச்சென்று தேய்த்து வைப்பான்.
கம்பெனியிலிருந்து அவன் எத்தனை லேட்டாக வந்தாலும் தேய்க்கவேண்டிய பாத்திரங்கள் அவனுக்காகக் காத்திருக்கும். கைலியைக் கட்டிக் கொண்டு புகுந்தான் என்றால் அடுக்களைக்குள் ஒரே தாம் தூம் தான். கரிசனத்துடன் அவள் தொங்க விட்டிருக்கும் ரேடியோவிலிருந்து எஃப். எம். கேட்டபடியே வேலையை முடித்து விட்டுத்தான் சாப்பிட உட்காருவான்.
வேலைக்காரி வழியாகக் கசிந்து விட்டது இந்த விஷயம். பக்கத்து ஃபிளாட்காரியும் ராஷ்மியின் சிநேகிதியுமான நான் இதை அவளிடமே ஒரு நாள் கேட்டு விட்டேன்.
கேட்டதும் ராஷ்மி கொஞ்சம் அசந்துதான் போனாள். பிறகு மெல்லச் சொன்னாள்...
''ஸாஃப்ட்வேர் கம்பெனி வேலையைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே? அதிலும் இவர் பிராஜக்ட் லீடர் வேறே. நாள் பூராவும் பரபரப்பா இருப்பாரு. மென்டல் டென்ஷன் ஜாஸ்தி. அது ரிலீசாகிறதுக்குத்தான் இப்படி ஒரு ஏற்பாடு. உண்மையில் இது மறைமுகமா ஒரு சைக்காலஜிகல் உதவிதான் அவருக்கு. பாத்திரங்களை அவர் இஷ்டப்படி உருட்டறதிலேயும் வெளுக்கறதிலேயும், நாள் முழுக்க அவர் மனசில் தேங்கியிருக்கும் டென்ஷன் எல்லாம் வடிஞ்சுடும். முன்னைவிட இப்பல்லாம் ரொம்ப ஃ ப்ரெஷ்ஷா, சந்தோஷமா வந்து சாப்பிட உட்கார்றாரு.''
பதிலைக் கேட்டு நான் அசந்துபோய் புன்னகைத்தேன்.
(விகடன் 09-10-2005 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)
Friday, October 30, 2009
கண்ணாடி அரண்

அவசரமாக பைக்கில் விரைந்து கொண்டிருந்த நான் ‘டம் டமா... டம் டமா...’ என்ற உடுக்கைச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.
ரோட்டோரமாக இரு புறமும் பலர் கூடி நின்று பார்த்துக் கொண்டிருக்க... அந்தரத்தில் கயிற்றின் மீது ஒரு சிறுமி. அஞ்சு வயசு கூட இருக்காது. கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு லாகவமாக அடி மேல் அடி வைத்து அந்த ஒற்றைக் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்த காட்சி என்னை உலுக்கியது.
பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.
சாலையோரமாக தரையில் முளையடித்துக் கட்டிய கயிற்றை ரெண்டு பக்கமும் பெருக்கலாக நிறுத்திய மூங்கில்களின் மேலாகக் கொண்டு போயிருந்தார்கள். அதன்மேல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் சிறுமி.
இறங்கப் போகிறாள் என்று நினைத்தால், குனிந்தவள் தலையில் ஒரு சின்னச் சொம்பை வைத்தான் அந்தச் சிறுமியின் தகப்பன். அதையும் வைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சொம்பு கீழே விழுந்து விடாமல் மீண்டும் கயிற்றில் அடிகளை எடுத்து வைத்துத் திரும்பி நடந்தாள்.
எங்கே தலை குப்புற விழுந்து விடப் போகிறாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.
மூன்றாவது முறையாக அவன் ஓர் அலுமினியத் தட்டைக் கயிற்றின் மீது வைக்க அதை ஒரு காலால் அழுத்திக் கயிற்றின் மேல் நகர்த்தியபடி மறு முனை வரை நடந்து சென்றாள் அந்தச் சிறுமி.
இதோடு இது முடிந்து அந்தப் பெண் குழந்தை கீழே இறங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன். கீழே அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தாய் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு காசு வாங்கக் கிளம்பினாள். அப்பாடா, இதுதான் கடைசி ரவுண்ட்!
உலகம் புரியாத வயதில் அந்தச் சிறுமி உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்திய சாகசத்தில் உருகிப் போயிருந்தேன் நான்.
அவரவர் ஐம்பது காசு, ஒரு ரூபாய், அதிக பட்சம் ஐந்து ரூபாய் வரை தட்டில் போட, நான் முழு ஐம்பது ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, அந்தத் தாய் எவ்வளவு சந்தோஷப் படுகிறாள் என்று ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்த அவள், சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
ரொம்பச் சின்னதாக ஒரு விசும்பல் கேட்ட மாதிரி இருந்தது. தட்டில் ஒரு கண்ணீர்த் துளி விழுந்து தெறித்தது. இடுப்பிலிருந்த கைக்குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சட்டென்று நகர்ந்துவிட்டாள்.
அவள் செயல் எனக்குப் புரியவில்லை. ஏன், எதற்காக அவள் அழ வேண்டும்?
வீடு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.
''இதில் புரிய என்னங்க இருக்கு? பார்த்திட்டிருந்த யாரோ ஒருத்தராகிய உங்களுக்கே அந்தச் சிறுமி செய்த சாகசம் அவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியிருந்ததுன்னா, பெத்த தாயான அவளுக்குத் தினம் தினம் அந்தக் குழந்தையை அப்படி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறது எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? கல்லாலானதுன்னு அவள் மனசுக்குப் போட்டிருந்த அரண், வெறும் கண்ணாடிதான்கிறது எப்பவாவது உங்களை மாதிரி சில பேர் இப்படி அதீதக் கருணைங்கிற கோலியை எறியும்போதுதானே அவளால் தெரிஞ்சுக்க முடியுது?''
என்ன தெளிவாகச் சொல்லிவிட்டாள் என் மனைவி! ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?
(விகடனில் பவழவிழா பரிசு பெற்ற குட்டிக் கதை.) -- கே. பி. ஜனார்த்தனன்.







