Monday, October 12, 2026

ஆர்வம் இல்லாமலே...


நடிப்பதில் அவருக்கு துளி ஆர்வம் இல்லை. ஸ்டூடியோ லேபரட்டரியில் அசிஸ்டன்டாக தான்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை பிடித்து தள்ளாத குறையாக கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். புக் செய்திருந்த ஹீரா நடிகருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால். நடிக்க வேண்டியதோ பிரபல நடிகை தேவிகா ராணியுடன். தயங்கித் தயங்கி நடித்து முடித்தவர் லேபரட்டரியில் வந்து ரஷ் பார்த்தபோது அவருக்கே ஆச்சரியம்! அட, நன்றாகவே நடித்திருக்கிறோமே? அவருடனேயே அடுத்த படம் நடித்தபோது அந்த ‘அச்சுத் கன்யா’ உச்சத்துக்குக் கொண்டு போனது அவரை.
அசோக் குமார்… இன்று பிறந்த நாள்!
தாதா மோனி (சகோதர ரத்தினம்) என்று அன்போடு அழைக்கப்பட்டவர். இயல்பாக நடிக்கும் வெகு சில நடிகர்களில் ஒருவர்.
அவருக்கு நீங்கள் எந்த பட்டம் கொடுக்க நினைத்தாலும் அது பொருந்தும். பெஸ்ட் ஹீரோ... பெஸ்ட் வில்லன்... பெஸ்ட் ஃபாதர் காரக்டர்.... பெஸ்ட் காமெடி நடிகர்....
மள மளவென்று தேவிகா ராணியுடன் பல படங்கள்... அடுத்து லீலா சிட்னிஸுடன் வரிசையாக… மீனா குமாரியுடன் பதினேழு... நளினி ஜெய்வந்துடன் நாலைந்து... 1940 களின் அசைக்க முடியாத நாயகனாக.
நாயகன் இமேஜை உடைத்து ஆன்டி ஹீரோவாக முதலில் கலக்கியதும் அசோக் குமார்தான்.... படம்: ‘Kismet’. கண்ட அபார வெற்றியில் அது தெலுங்கிலும் தமிழிலும் (பிரேம பாசம்) ரீமேக்.. அடுத்து வந்த ‘Mahal’ சூபர் ஹிட் சஸ்பென்ஸ் படம்.. “Aayega.. Aanewala..” பாடலைப் பாடி லதா மிகப் பிரபலமானது இந்தப்படத்தில் தான்.
பிச்சுவாப் பக்கிரி ஷேக் முக்தார், ஜெயிலில் இருந்து தப்பிய பிரதீப் குமாருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது பின்னால் சத்தமில்லாமல் வேவு பார்த்துக் கொண்டிருப்பார் அசோக் குமார். சி.ஐ.டி என்று நினைக்கும்போது சீஃப் வில்லனாக வெளிப்பட்டு நம்மைத் திகைக்க வைப்பார் ‘Ustadon Ki Udtad’ படத்தில். (‘வல்லவனுக்கு வல்லவன்’)
‘பாசமலர்’ ஹிந்தியில் ‘ராக்கி'யான போது சிவாஜி ரோலில் இவர். கிடைத்தது Filmfare அவார்ட். ‘க்ரஹஸ்தி' தமிழில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ ஆனபோது இவர் ரோலில் சிவாஜி.
‘நானும் ஒரு பெண்’ இந்தியில் (‘Main Hun Ladkhi’) ரங்கராவ் ரோலை அதே கனிவுடன் அழகாக பண்ணியிருப்பார். இவரின் மாஸ்டர்பீஸ் ‘Jewel Thief’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
‘Mamta’ ‘Intaqaum’ ‘Kanoon’ ‘Bhai Bhai’ ‘Chitralekha’ ‘Bheegi Raat’....மறக்க முடியாத படங்கள். மறக்க முடியாத நடிப்பு.
இவர் ஊக்குவித்து பின்னால் மிகப் பிரபலமானவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஷக்தி சமந்தா. இயக்கிய ‘Howrah Bridge’ அசோக் குமாரை ஸ்டைலிஷ் ஹீரோவாக்கியது. 2. பி.ஆர்.சோப்ரா. இவரை இயக்கிய ‘Gumrah’ அமோகமான பெயரை வாங்கித் தந்தது. 3.ரிஷிகேஷ் முகர்ஜி. இவரை இயக்கிய ‘Ashirvad’ படத்தில்தான் நேஷனல் அவார்டு கிடைத்தது இவருக்கு. (அதில் இவர் பாடிய ‘Rail Gadi...’ தான் திரையுலகின் முதல் rap song!)
பாம்பே டாக்கீஸ் தயாரிப்பாளர்களில் இவரும் இருந்த போது இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் தேவ் ஆனந்த். படம் ’Ziddi’ அதே படத்தில் அறிமுகமான மற்றொரு பிரபலர் பிரான்.
1987 -லிருந்து தன் பிறந்த நாளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டார். தம்பி கிஷோரின் மறைவு நாளாக அது ஆனதால்.
ஹோமியோபதி படித்திருந்த இவர், நோயுற்று காலை எடுக்கவிருந்த ஓர் இளம் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாராம்.
பலரின் ஃபேவரிட் ஆக சிலர் இருப்பார்கள். இவர் எவ்ரி ஒன்ஸ் ஃபேவரிட்!

Sunday, October 11, 2026

வழி தவறி...


வழி தவறி வந்த சிறுமியை குழந்தை பாக்கியம் இல்லாத செல்வத் தம்பதி எடுத்து வளர்க்கிறார்கள். பிள்ளையார் பக்தையாக வளரும் அந்தப் பெண், வேண்டாத திருமண வாழ்விலிருந்து தப்பிக்க வேண்டுகிறாள் பிள்ளையாரை. முதியவளாக மாறிவிடுகிறாள். அவ்வையார். ஜெமினியின் பிரமாண்ட தயாரிப்பு. நடித்தவர்? கட்டபொம்மன் என்றதும் சிவாஜி நினைவு வருவது போல ஔவையார் என்றதும் இவர்.

கே.பி.சுந்தராம்பாள்… இன்று பிறந்த நாள்!

தாராளமாகச் சொல்லலாம், தமிழ்த் திரையுலகின் முதல் கிரேட் ஸ்டார் என்று. ஆம், 1935-இலேயே ஒரு லட்சம் வாங்கிய நட்சத்திரம்.(பக்த நந்தனார்)

‘வாழ்க்கை என்னும் ஓடத்தி’ல் நம்மை அழைத்துச் சென்றவர் (பூம்புகார்). ‘ஞானப்பழத்தை’ மொழிந்து தந்தவர் ( திருவிளையாடல்). ‘காலத்தில் அழியாத’ பாடல்கள் தந்தவர் (மகாகவி காளிதாஸ்). ‘கேள்விகள் ஆயிரம்’ பாப்பாவை கேட்கச் செய்தவர் (உயிர் மேல் ஆசை). ‘வாசி வாசி என்று’ தமிழ் வாசித்தவர் (திருவிளையாடல்). ‘எங்கேயும் சக்தி உண்டு’ என்று காட்டியவர் (சக்தி லீலை) ‘கூப்பிட்ட குரலுக்கு’ யார் வராதது? ( துணைவன்)

அந்த கம்பீரக் குரலை கேட்டதும் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும்... அந்த கணீர்க் குரல் காதில் விழுந்ததும் பரவசம் பொங்கும்... அந்தப் பாசக் குரலில் மனம் அப்படியே இளகும்.

ஆரம்பத்தில் டிராமா ட்ரூப்பில் இருந்தபோது, தரப்பட்ட ஆண் வேடங்களையும் ஏற்று நடித்தார். ஒரு மைல் தூரம் கேட்கும் அவர் பாடினால் என்பார் நடிகர் சாரங்கபாணி.

செம பாராட்டில் இருந்தபோது சம புகழில் இருந்தவர் S.G.கிட்டப்பா. ரெண்டு பேரையுமே வேண்டியவர்கள் எச்சரித்தார்கள் அவருடன் பாடினால் உங்கள் பாட்டு எடுபடாது என்று. காதில் போட்டுக் கொண்டால் தானே? கொழும்பில் சந்தித்தபோது நேராக அவரிடமே கேட்டு விட்டார் கிட்டப்பா, ரிகர்சல் ஆரம்பிக்கலாமா என்று. சேர்ந்து பாடிய மேடைகள் கைதட்டலில் மூழ்கின. ‘வள்ளி திருமணம்’ படத்தில் சேர்ந்து நடிக்க, அது அவர்கள் திருமணத்தில் முடிந்தது. எதிர்பாராத கிட்டப்பாவின் 27 வயது மரணம்! மீண்டும் தனிமையில் அவர்.

எப்போதும் கதர் அணியும் இவர், 750 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். ஆறு மணி நேர கச்சேரி எல்லாம் அவருக்கு சாதாரணம்.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான நேஷனல் அவார்டு, துணைவன் படத்துக்காக 1969 இல். M.L.C. ஆக பதவி பெற்றது 1951 இல். அவ்வகையில் கலைஞர்களில் முதலாமவர். 

Friday, October 9, 2026

நானும் ஒரு மனுஷி..


நானும் ஒரு மனுஷி..
கே. பி. ஜனார்த்தனன்
('தேவி' 7 9 2005 இதழில்)
ரயிலில் ஏறியதிலிருந்தே அந்த முதியவள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“சே, ஏன்தான் என் புத்தி அப்படிப் போச்சோ? .... நான் பாட்டுக்குப் போக வேண்டியதுதானே?” சில வார்த்தைகள் காதில் விழுந்தன.
வலது காலில் பெரிய கட்டுப் போட்டிருந்தது. பாதத்திலிருந்து முட்டிவரை மூணு இஞ்ச் கனத்துக்குத் துணி சுற்றியிருந்தது. உள்ளே தடவியிருந்த எண்ணெய், துணியை நனைத்துக் கசிந்திருந்தது. காலைக் கீழே தொங்க விட முடியாமல் சீட்டின் மேல் மடித்து வைத்து அமர்ந்திருந்தாள். பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
திருச்சி செல்வதற்காக அந்தப் பகல் நேர ரயிலில் ஏறியிருந்தேன். வழியில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போதுதான் இந்தப் பாட்டி தட்டுத்தடுமாறி ஏறினாள். என்னருகே காலியாக இருந்த இடத்தில் சிரமப்பட்டு உட்கார்ந்தாள்.
அத்தனை பெரிய கட்டைப் பார்த்தபிறகு கேட்காமலிருக்க முடியவில்லை. “என்ன பாட்டி, காலில் என்ன காயம்?”
“என்னன்னுய்யா சொல்றது அதை? ரெண்டு நாள் முந்திதான் நடந்தது…. ம், எல்லாம் என் கொழுப்பு!” முனகிக்கொண்டே தொடர்ந்தாள். “நான் பாட்டுக்கு சாப்பாட்டுக் கூடை எடுத்துட்டு கலெக்டர் ஆபீசுக்கு போயிட்டிருந்தேன். அதான் என் தொழிலு. புருஷன் செத்து போனாரு. புள்ளை கவனிக்கலே. இப்படி கூடை சுமந்துதான் பிழைக்கிறேன்.
“நேரமாயிடுச்சேன்னு விரசா நடையை போட்டிருந்தேன். பிரிட்ஜாண்டை நாலஞ்சு ரவுடிப் பசங்க ஒரு பெண்ணை சுத்தி வளைச்சு கலாட்டா பண்ணிட்டிருந்தாங்க. அந்தப் பொண்ணு பரிதாபமா மாட்டிட்டு முழிச்சிட்டிருந்தது. ஏதோ கிராமத்து பொண்ணு. டவுனுக்குப் புதுசு போல. அந்த வழியா போயிட்டிருந்தவளை நிறுத்தி கலாட்டா பண்றாங்கன்னு புரிஞ்சது.
“அக்கம்பக்கத்தில போனவங்க யாரும் கண்டுக்காம போயிட்டிருந்தாங்க. எனக்கும் அவசரம் தான். ஆனா எப்படி விட்டிட்டுப் போறது? நேராப் போய் அந்தப் பசங்ககிட்ட சத்தம் போட்டேன். அக்கா தங்கச்சியோட பொறக்கலியான்னேன். நீ போம்மான்னு அவளை இழுத்து இந்த பக்கம் விட்டேன். அந்தப் பசங்களை திட்டிட்டு அவ போயிட்டா. அவனுங்களுக்கு இன்னும் ஆத்திரமாயிடுச்சி. இன்னா, நீ பெரிய இவளா, சப்போர்ட் பண்ண வந்துட்டியயான்னு ஒருத்தன் என்னைப் பிடிச்சுத் தள்ள, இன்னொருத்தன் இந்தப் பக்கம் இடுப்பிலிருந்த கூடையை உதைச்சான். கூடை பொத்துன்னு லோடோடு என் கால்ல விழுந்ததில கணுக்கால் எலும்பு முறிஞ்சு போச்சு!”
“அடப்பாவமே!”
“அதான் எங்க சொந்த ஊருக்கு போய் வைத்தியர்ட்ட கட்டு போட்டுட்டு திரும்பிட்டிருக்கேன். என் தொழிலும் போச்சு! ஆண்டவனே, இனி நான் என்ன செய்யப் போறேன்?”
என்னோடு சேர்ந்து பக்கத்தில் இருந்தவர்களும் அனுதாபத்துடன் கேட்டு ச்சூ கொட்டினார்கள்.
“இந்த வயசிலே ஏன் பாட்டி உனக்கு இதெல்லாம்?” என்றேன்.
“அதானே? என் கொழுப்பு! ரோட்டிலே எத்தனை பேரு போயிட்டிருந்தாங்க? எவனாவது தலையிட்டானா? எனக்கு மட்டும்தானே புத்தியில்லாம போச்சு? இப்ப அவதிப்படறேன். ம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. இனி எங்கேயாவது யாராச்சும் கஷ்டப்படறதைப் பார்த்தா அந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்!” என்றாள்.
யாருக்கும் எதுவும் உதவி செய்யறதுன்னா ஒரு முறை யோசிச்சு செய்யணும்னு நினைத்திருந்த நான், இனிமேல் பத்து முறை யோசிச்சு செய்யணும்னு நினைத்தேன்.
அடுத்த ஸ்டேஷனில் ஒரு நடு வயது தம்பதி ஏறினர். உட்கார்ந்த வேகத்தில் அந்தப் பெண்ணின் கை, தெரியாமல் பாட்டியின் கால் மீது பட்டுவிட, “அம்மா!” என்று அலறிவிட்டாள் பாட்டி.
“ஐயோ, தெரியாம பட்டுடுச்சு!” அந்தப் பெண் பதறினாள்.
“வலி பிராணன் போகுதே!” என்று அரற்றியவளை ஆசுவாசமாய் பேசி சமாதானப்படுத்தினாள்.
“எப்படிப் பாட்டி இது நேர்ந்திச்சு?” என்று அவள் கேட்டதற்கு “அதை ஏன் கேக்கறே? எல்லாம் என் மடத்தனம்…” என்று தொடங்கி நடந்ததை வேதனையுடன் சொன்னாள்.
“இனி இந்த மாதிரி எங்கேயும் யாருக்காக வேண்டியும் எதிலேயும் மூக்கை நுழைக்க மாட்டேன். படற பாடு போதுண்டியம்மா! போதும் ஒரு ஜென்மத்துக்கும்!” அரற்றிக்கொண்டே இருந்தாள்.
கொஞ்ச நேரம் பொறுத்து..
கொய்யாப்பழம் விற்றுக்கொண்டே வந்தார் ஒரு கிழவர்.
அறுபது வயதுக்கு மேல் இருக்கும். மடித்துக் கட்டிய வேட்டி. மேலே ஒரு துண்டு மட்டும். சுமக்க முடியாமல் ஒரு கூடை.
ஜன்னலருகே அமர்ந்திருந்த பெரியவர் பழம் வாங்கினார். இருபது ரூபாய் நோட்டு நீட்டவே, கிழவர் கூடையை முழங்கால் மீது வைத்துக்கொண்டு மடியைத் திறந்து சில்லறை எடுத்துக் கொடுக்கப் போனார். ரயில் ஆட்டத்தில் அவர் ஒரு வினாடி திணற, மடி அவிழ்ந்து சில்லரைகளும், மடித்து வைத்திருந்த நோட்டுகளும் கீழே சிதறின.
ஆளுக்கொரு பக்கம் குனிந்து தேடி எடுத்துக் கொடுத்தோம். அந்த நேரம் வலப்பக்க ஓரத்திலிருந்த மீசைக்கார ஆள் குனிந்து எடுத்த ஐம்பது ரூபாய் நோட்டை லபக்கென்று தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டதைப் பார்த்துவிட்டேன்.
ஆள் வாட்டசாட்டமான உருவம். பெரிய கடா மீசை, வலை பனியன், முரட்டு செயின் என்று பார்க்கவே பயம் தருபவராக இருந்தான்.
நமக்கு எதற்கு வம்பு? பாட்டி சற்று முன் சொன்ன கதையும் வேறு சேர்ந்து கொண்டு என்னை தடுத்தது.
வேறு யாராவது சொல்ல மாட்டார்களா என்று பார்த்தேன். என்னைப்போலவே அதை கவனித்த சிலரும் அந்த ஆளையே பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் வாயைத் திறக்கவில்லை. என்னை மாதிரியே தானே எல்லாரும் நினைப்பார்கள்?
ஆனால் அடுத்த வினாடி ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
“ஏண்டா, அந்தப் பாவப்பட்ட கிழவனோட காசை அபகரிக்க நினைக்கறியே, நீ உருப்படுவியா? பொசுக்குன்னு ரூபாயைத் தூக்கி பைக்குள்ளே போட்டுக்கிட்டியே? கொடுய்யா அந்த ஐம்பது ரூபா நோட்டை!”
படபடவென்று பொரிந்தவள் வேறு யாருமல்ல, அந்தப் பாட்டியேதான்.
“என்ன கிழவி, உளர்ற? நீ பார்த்தியா?” என்று முதலில் சற்று எதிர்த்துப் பாய்ந்தாலும், அவள் தொடர்ந்து கத்தவே, வேறுவழியின்றி எடுத்துக் கொடுத்து விட்டான் அந்த ஆள். அடுத்த ஸ்டேஷனிலேயே இறங்கிப் போய் விட்டான்.
வெளியேறும்போது அவள் காலை, தெரியாமல் மிதித்தது மாதிரி ஒரு மிதி மிதித்துவிட, பாட்டு துடித்துப்போனாள். கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அவள் பக்கம் திரும்பினேன் ‘என்ன பாட்டி, இப்பதானே சொன்னே, என் கொழுப்புன்னு? உனக்கு இதெல்லாம் தேவையா?’ என்றது என் பார்வை.
என் பார்வையிலிருந்த கேள்வியைப் புரிந்து கொண்டு சொன்னாள்.
“என்ன பண்ண சாமி? வாயைத் திறக்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன் ஆனா கண்ணெதிரே ஒரு அக்கிரமம் நடக்கிறப்போ எப்படிப் பார்த்துட்டு சும்மா இருக்கிறது? ஒரு அப்பாவி பாதிக்கப்படறப்போ எப்படி கண்டுக்கிடாம இருக்கிறது? அப்புறம் நானும் ஒரு மனுஷின்னு எப்படித்தான் சொல்லிக்கிறது?”
அவள் சாதாரணமாகக் கேட்டாள். அந்த வார்த்தைகள் என் மனதை ஆழமாகத் தாக்கின.

Wednesday, October 7, 2026

ஒரே ஒரு வரி டயலாக்...


1997இல் அவர் நாயகனாக நடித்த ‘Goodwill Hunting’ படத்துக்கு அமோக வரவேற்பு. 9 ஆஸ்கார் நாமினேஷன். ஆனால் அவர் பெற்றது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார். ஆம், அவரும் மற்றொரு நடிகரும் சேர்ந்து எழுதிய திரைக்கதை அது. அவர் ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் படிக்கும்போது மனதில் விழுந்த வித்து.
நடிகர் Matt Damon... இன்று பிறந்த நாள். இனிய வாழ்த்துக்கள்!
அடுத்த வருடம் Spielberg இன் 'Saving Private Ryan' இல் ரியான் ஆக செமத்தியான ரோல். யாராலும் மறக்க முடியாத படமாச்சே?
Born Actor என்பாங்க இல்லையா? இவரு 'Bourne' Actor! ஆம், அப்புறம் Bourne ஆக வரிசையாக.. ‘Bourne Identity’ ... ‘Bourne Supremacy’ ... ‘Bourne Ultimatum’. டாப் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார்களில் கலந்தார்.
ஆரம்ப காலத்தில் Julia Roberts உடன் ‘Mystic Pizza’ வில் நடித்தபோது ஒரே ஒரு வரி டயலாக் பேசியவர் அதே ஜூலியாவுடன் பின்நாட்களில் ‘Ocean's Eleven’ இல் முக்கியமான வேடத்தில்… பேர் வாங்கித்தந்த மற்றொரு படம் பிரபல Francis Ford Coppola வின் 'The Rainmaker'.
உலகின் அழகிய 50 மனிதர்களில் ஒருவர்: People பத்திரிகை தேர்ந்தெடுத்தது. நினைத்தால் இளைப்பார். ‘Courage Under Fire’ படத்துக்காக 47 பௌண்ட். வேண்டுமெனில் பருப்பார். ‘The Informant’ க்காக 30.
படத்தில்தான் டுமீல் டுமீல். நிஜத்தில் துப்பாக்கி பிடிக்காதாம்.

Sunday, October 4, 2026

மனைவிக்கு வாய்ப்பு...


1994 -இல் பிரபல நாவலான ‘Little Women’ படமாக வந்தபோது அந்த நான்கு சகோதரிகளின் அம்மாவாக நடித்தவர் எல்லோருடைய மனங்களையும் அள்ளிக் கொண்டார்.
கணவர் சிவில் யுத்தத்திற்கு சென்றுவிட, தன் நான்கு பெண்களையும் கவனித்து வளர்க்க வேண்டிய பொறுப்பு மாமி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு. அதை எத்தனை அழகாய், தன் உறுதியான மனதுடன் நிறைவேற்றுகிறார்!
எழுத்தாளராகத் துடிக்கும் தன் மகள் ஜோவை தனியே வெளியூர் அனுப்ப முடிவு செய்தபோது ‘நீ இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்னு தெரியலே. ஆனா நீ போ. உன் திறமையை உபயோகி. சுதந்திரத்தை தழுவு. அப்புறம் பார் எத்தனை அற்புதம் நடக்குதுன்னு!’ என்று சொல்லும் போதும்...
மகள் Meg காதலை மற்ற சகோதரிகள் எதிர்த்த போது, ‘என் மகள் செல்வத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து சுயகௌரவத்தை இழப்பதை விட காதலுக்கு மதிப்பு கொடுத்து ஒரு ஏழையை மணப்பதையே நான் விரும்புகிறேன்,’ என்று தட்டிக் கொடுக்கும் போதும் Louisa May Alcott தன் நாவலில் உருவகித்த தாயை நம் கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.
Susan Sarandon… இன்று பிறந்த நாள்.
கணவனும் மனைவியுமாக ஆடிஷன் சென்றபோது மனைவிக்கு வாய்ப்புக் கிடைக்க, நடிகையானவருக்கு கிடைத்த ஆஸ்கார் நாமினேஷன் நாலு. அவார்ட் கிடைத்தது, தூக்குத் தண்டனைக் கைதி ஒருவனுக்காக அவன் தண்டனையைக் குறைக்கப் போராடும் பெண் துறவியாக நடித்திருந்த ‘Dead Man Walking’ படத்துக்கு.
‘Stepmom’ படத்தில் இவருக்கு சரியான போட்டி Julia Roberts. டிவோர்ஸுக்குப் பின் குழந்தைகள் தன் கணவனின் ரெண்டாவது மனைவியுடன் ஒட்டிக் கொள்ளவில்லையே என்று கவலையும் எரிச்சலும் படும் அன்னையாக ஒரு திடமான நடிப்பை வழங்கியிருந்தார்.
Richard Gere யுடன் நடித்த ‘Shall We Dance?’ படத்திலும் கைதட்டல் நடிப்பை வழங்கினார். வாழ்க்கை போரடிக்குது என்று டான்ஸ் கற்றுக்கொள்ள சென்ற ரிச்சர்ட் அழகிய ஆசிரியை ஜெனிஃபர் லோபஸுடன் ஆட்டம் போடும் போது அதை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், இறுதியில் ரிச்சர்ட், ‘என் பார்ட்னர் இருப்பது இங்கே தான்!’ என்று தன்னிடம் நன்றி சொல்லும் போது காட்டும் பரவசமும்!
அந்தக் காட்சி! கணவனைத் துப்பறிய அனுப்பிய ஆளிடம் அவள் சொல்கிறாள், போதும், வேண்டாம் என்று. “நம்ம வாழ்க்கைக்கு ஒரு சாட்சி வேணும். கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகத்திலே. அதில ஒருத்தரோட வாழ்க்கை என்ன கவனம் பெறுது? கல்யாணம் செய்யும்போது நாம் உறுதிமொழி எடுக்கிறோம், எல்லாத்தையும் கவனிக்கிறதா. அவரோட நல்லது, கெட்டது, விசித்திரமானது, வித்தியாசமானது எல்லாத்தையும்! எல்லா நேரமும்! நீங்க அப்ப அவர்ட்ட சொல்றீங்க, உங்க வாழ்க்கை கவனிக்கப்படாது போகாது, ஏன்னா நான் அதைக் கவனிக்கிறேன்னு. உங்க வாழ்க்கைக்கு சாட்சியில்லாம போகாது, ஏன்னா நான் அதுக்கு சாட்சியா இருப்பேன்னு!"
2006 ஒலிம்பிக்கில் சோபியா லாரனுடன் கொடியேந்தி நடந்த இவர் Robert Redford உடன் கை கோர்த்தது ‘The Great Waldo Pepper’ படத்தில். Marlon Brando வுடன் ‘A Dry White Season’
சொன்னது: ‘எப்படி நடித்தாலும் நாம் திருப்தி அடையமாட்டோம். அதுதான் நான் நடிகையாக நீடிக்க ஒரே காரணம்.’
‘குழந்தைகள் உங்களுக்கு ஓர் புதிய உலகை சிருஷ்டிக்கின்றன.’

Friday, October 2, 2026

நச் பதில் நாயகர்...


‘ஏன் உங்களுக்கு அந்த நாடகம் பிடிக்கவில்லை?’ என்று கேட்டபோது அவர் சொன்னார்.
‘அதுவா? அதை நான் பார்த்த சந்தர்ப்பம் அப்படி! திரை உயர்ந்திருந்தது!’
Quick Retort-க்குப் பேர் போனவர்கள் பலர் இருந்தாலும் ‘நச் பதில் நாயகர்’ என்ற பட்டம் சிலருக்கே உண்டு. அதில் பிரபலமானவர் இவர்.
Groucho Marx.. இன்று பிறந்த நாள். (1890 - 1977)
‘படிப்புக்கு டி.வி. மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை யாராவது அதை போடும் போதும் நான் பக்கத்து அறைக்கு போய் விடுகிறேன், புத்தகம் படிக்க.’ - இவர் சொன்னது.
அமெரிக்காவின் தலை சிறந்த நகைச்சுவையாளர் என்று இவரைக் குறிப்பிட்டவர் பிரபல காமெடி நடிகர் Woody Allen.
‘You Bet Your Life’ என்ற இவர் நடத்திய ஷோ டிவி.யிலும் ரேடியோவிலும் மகா பாப்புலர்.
அள்ளித் தெளித்த காமிக் பஞ்ச் அனேகம். சிரிக்க மட்டும் இதோ சில…
‘ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கே செல்வது எதை குறிக்கிறது என்றால் அந்தப் பூனை எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்பதை.’
‘அவளுடைய அழகிய முகம் அவள் தன் தந்தையிடம் இருந்து பெற்றது. ...அவர் ஒரு பிளாஸ்டிக் சர்ஜன்.’
‘நான் சாகாமல் என்றும் வாழ விரும்புகிறேன். ...அந்த முயற்சியில் செத்தாலும் சரி.’
‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். ...அவளுக்குப் பின்னால் அவன் மனைவி இருக்கிறாள்.’
‘என்னைப் போன்றவர்களை மெம்பராக ஏற்றுக் கொள்ளும் எந்த கிளப்பிலும் இருக்க நான் விரும்பவில்லை.’
‘ஒருவன் நேர்மையானவனா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. அவனையே கேளுங்கள். அவன் ஆமாம் என்றால் அவன் ஒரு மோசமான பேர்வழி.’
‘நான் சொல்கிற இந்த கதையை ஏற்கனவே கேட்டிருந்தால் என்னை நிறுத்தாதீர்கள், ஏன்னா நான் இன்னொரு முறை அதை கேட்க விரும்புகிறேன்.’
‘ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து நான் ரொம்பப் பாடுபட்டு மிக ஏழ்மை என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.’
‘இதெல்லாம் என் கொள்கைகள். உங்களுக்கு அவற்றைப் பிடிக்கவில்லையானால் சொல்லுங்கள், வேறு சில இருக்கிறது என்னிடம்.’
‘விவாகரத்து நடப்பதற்கு முக்கிய காரணம் விவாகம்.’
‘ஒருவன் தன் விதியை தானே நிர்ணயிப்பதில்லை. அவன் வாழ்வில் வரும் பெண்கள் அவனுக்காக அதை செய்கிறார்கள்.’
‘அவன் பார்க்கிறதுக்கு முட்டாள் மாதிரி இருக்கலாம், முட்டாள் மாதிரி பேசலாம், அதை வெச்சு ஏமாந்திராதீங்க. அவன் நிஜமாவே முட்டாள்தான்.’

Tuesday, September 29, 2026

யார் அவர்?


1.தர்மேந்திரா நடித்ததில் உங்களால் மறக்க முடியாத படம் எது என்றால் ‘Satyakam' (தமிழில் 'புன்னகை') -ஐச் சொல்லத் தயங்க மாட்டீர்கள்.
2.ஜெயா பாதுரி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது 'Guddi'தான்.
3.ராஜேஷ் கன்னாவின் 'Anand’! ஆரால் மறக்க முடியும்?
4.அமிதாப் பச்சனின் பேர் சொல்லும் படங்களில் 'Abhiman' தவறாமல் இருக்கும்.
5.அமோல் பலேகரின் அட்டகாச காமெடி படம் என்றால் அது 'Gol Maal'(தமிழில் 'தில்லு முல்லு').
6.ராஜ் கபூர், நூடன் ஜோடியாக நடித்ததில் முதலில் நிற்பது ‘Anari’.
7.ரேகாவின் stellar performance -ஐ பார்த்து நாம் வியந்தது ‘Khubsoorat’ -இல்.
8.சஞ்சீவ் குமாரின் மிக முக்கியமான படங்களில் ஒன்று ‘Arjun Pandit.’
9.அசோக் குமார் அமர்க்களமாக நடித்து தானே ஒரு பாடலும் பாடிய படம் ‘Aashirvad.’
10.அமிதாப்பும் தர்மேந்திராவும் சேர்ந்து படம் முழுக்க காமெடியில் கலக்கிய படம் ’Chupke Chupke’
என்னன்னா... இந்த 10 படங்களையும் டைரக்ட் செய்தவர் ஒருவரே. எடிட்டிங்கும் அவரே!
யார்?
Hrishikesh Mukherjee!
இன்று பிறந்த நாள். (1922- 2006)

உண்மையில் எளிதானது...


உண்மையிலேயே மகிழ்வோடும் மன நிறைவோடும் இருக்கவேண்டுமானால் மகிழ்வுக்கும் மனநிறைவுக்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.’
சொன்னவர் Confucius... நம் பல கன்ஃப்யூஷன்களைத் தகர்த்தவர்...
Sep. 28 பிறந்தநாள்!
இன்னும்…
‘வாழ்க்கை உண்மையில் எளிதானது, ஆனால் அதை சிக்கலாக்கிக் கொள்வதென்று அடம் பிடிக்கிறோம்.’
‘வீழாதிருப்பதில் அல்ல நம் மகிமை, வீழும்போதெல்லாம் எழுவதில்.’
‘எத்தனை மெதுவாக நகருகிறாய் என்பது முக்கியமல்ல, நீ நிற்காத வரையில்.’
‘துயருற வேண்டியதுதான், ஆனால் மூழ்கி விடக்கூடாது அதன் அழுத்தத்தில்.’
‘எங்கே நீ சென்றாலும் எல்லா உன் இதயத்தோடும் செல்.’
‘தன்னை வெற்றி கொள்பவனே தலைசிறந்த படைவீரன்.’
‘எல்லாவற்றுக்கும் ஒரு அழகு உண்டு, ஆனால் எல்லோரும் அதை பார்ப்பதில்லை.’
‘நீ நேசிக்கும் ஒரு வேலையை தேர்ந்தெடு. உன் வாழ்க்கையில் ஒரு நாளும் வேலை செய்ய வேண்டியிருக்காது.’
‘மூன்று விதங்களில் நாம் விவேகம் அடையலாம் 1. சிந்தித்து, அது உயர்வானது. 2. மற்றவரைப் பார்த்து. அது எளிதானது. 3. அனுபவத்தால். அதுதான் கசப்பானது.’
‘மனிதன்தான் சத்தியத்தை மேன்மையுறச் செய்ய வேண்டும்; சத்தியம் மனிதனை அல்ல.’
‘மௌனம்: ஒருபோதும் வஞ்சிக்காத உண்மையான நண்பன்.’
‘தீங்கிழைக்கப்படுவது ஒன்றுமேயில்லை, நீங்கள் அதை நினைக்காத வரையில்.’

Saturday, September 26, 2026

பிடித்த படம்...3


எனக்குப் பிடித்த படம்...3
JEWEL THIEF
ஒரு பார்ட்டியில் ஓடிவந்து தன்னை உலுக்கி, ஏன் மறந்துட்டே அமர்? என்று ஒரு பெண் கேட்கும்போதுதான் வினய்க்கு தெரிகிறது, தன்னைப் போலவே உள்ள அமர் என்ற ஜுவல் தீஃப் பற்றி! அமர் என்று நினைத்து இவனை அனைவரும் துரத்த... ஆரம்பமாகிறது 'அமர்'க்களம்!
எந்தப் படத்திலும் இப்படி காட்சிக்குக் காட்சி வில்லனைத் தேடியிருக்க மாட்டார்கள் ரசிகர்கள். கடைசியில் அந்த 'திடுக்' உண்மையை நாயகி சொல்ல, நாயகனுக்கும் நமக்கும் சரியான அதிர்ச்சி.
தேவ் ஆனந்தின் இந்தப் படத்தை ரெண்டே ஜோடி வார்த்தையில் சொன்னால் 'சூபர் ஸ்டைல்! சூபர் திகில்!' தவிர, கிளாமரும் இன்னிசையும் போனஸ்! ஹீரோ தேவ் ஆனந்த் அணிந்த மாடல் தொப்பி இளைஞர்களிடையே craze ஆகி அமோகமாக விற்றது.
ஹோட்டல் அறையில் தன் டூப்ளிகேட்டைத் தேடிவரும் தேவ் ஆனந்த் கையில் ரிவால்வருடன் வெளியில் வர எதிரே மற்றொரு தேவ் ஆனந்த், கையில் ரிவால்வருடன்! அடுத்த வினாடி புன்னகைக்கிறார். கண்ணாடி!
அண்ணன் (தேவ் ஆனந்த் ) ஹீரோ. தம்பி (விஜய் ஆனந்த்) திரைக்கதை, எடிட்டிங், டைரக்‌ஷன். அப்பா (S.D. பர்மன்) இசை, மகன் (R.D. பர்மன்) உதவி.
ஆறு வருஷத்துக்குப் பின் தேவ் ஆனந்துக்கு கிஷோர் மீண்டும் பின்னணி பாடினார். அந்த "ஆஸ்மான் கே நீச்சே.."யை வேறு யார் அத்தனை கெஞ்சலாக... அந்த "யே தில் ந ஹோதா பேஜாரா.."வை வேறு யார் அத்தனை கிண்டலாக பாட முடியும்?
-----

சிந்திப்பது இல்லை...


'இந்தச் சிந்தனை சூழ் காலத்தில் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம் இன்னும் சிந்திப்பது இல்லை என்பதுதான்!’
'வசிப்பது என்பது தோட்ட வேலை பார்ப்பது.'
‘மிகப்பெரும் சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி மிகப்பெரும் தவறுகளை செய்கிறார்கள்.’
‘இயற்கைக்கு சரித்திரம் இல்லை.’
‘சாவைக் கையில் எடுத்து அதை ஒத்துக் கொண்டு நேருக்கு நேராக நோக்கினால்தான் சாவின் கவலையிலிருந்தும் வாழ்வின் சிறுமையிலிருந்தும் விடுபட்டு நான் நானாக முடியும்.’
‘காலமும் இருப்பும் ஒன்றை ஒன்று நேர்மாறாக விதிக்கின்றன. இருப்பை காலம் சார்ந்ததாகவோ காலத்தை இருப்பதாகவோ கருத முடியாது.’
‘மொழியை வடிவமைப்பதும் வழி நடத்துவதும் தானே என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் மொழிதான் அவனை நடத்துகிறது.’
‘ஒவ்வொரு மனிதனும் பல நபர்களாகப் பிறக்கிறான்; ஒற்றை ஆளாக இறக்கிறான்.’
‘அடிப்படையில் டெக்னாலஜி மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல.’
‘எல்லாமும் ஏன் இருக்க வேண்டும்? ஒன்றுமே இல்லாமல் இருந்திருக்கலாமே? அதுதான் கேள்வி.’
சொன்னவர்: Martin Heidegger. ஜெர்மன் தத்துவ மேதை. Sept. 26. பிறந்தநாள்!
இவரின் 'Being and Time' மிகப் பிரபல புத்தகம்.

Thursday, September 24, 2026

அவள் போட்ட கணக்கு…


அவள் போட்ட கணக்கு…
கே. பி. ஜனார்த்தனன்
(தமிழ்நாடு இ பேப்பர் காம் இதழில்.. 24 9 24)

பரக்கப் பரக்கத் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ராஜி. டாக்டர் ரவிசங்கரின் அந்த இ.என்.டி. கிளினிக்கில் வேலை அவளுக்கு. வருகிற பேஷண்டுக்கு சீட்டு எழுதி டோக்கன் கொடுக்கணும்.
கொஞ்ச நேரம் தாமதம் ஆனாலும் டாக்டர் கோபித்துக் கொள்வார். பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அவருக்கு.
தவிப்பாக இருந்தது மனதில். வீட்டில் தம்பி ரவி தனியே இருப்பான். “அக்கா, அக்கா இந்த நாலு கணக்கை போட்டு முடிக்கிற வரையாவது கூட இரேன்,” என்று கெஞ்சினான். டாக்டரின் கோபப் பார்வை கண்ணில் வந்து நிற்க உதறிவிட்டு ஓடிவந்தாள்.
கணக்கு என்றாலே அவனுக்கு சிம்ம சொப்பனம். ஆனால் புத்திசாலி. பக்கத்தில் இருந்து கொஞ்சம் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினால் போதும், மளமளவென்று போட்டு விடுவான் எல்லா கணக்கையும். கணக்குதான் என்றில்லை, ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம் எதுவானாலும் சற்றே அவள் ஊக்குவித்தால் சாதித்து விடுவான். தாய் இல்லாத பையனுக்கு அக்காதான் எல்லாம். குடிகார அப்பாவை தலைவராக கொண்ட ஏழைக் குடும்பத்தின் பிரதிநிதியாக வேலைக்கு வந்தவள் ஆயிற்றே அவள்?
ஆனால் இரவு 9 மணி வரை கிளினிக்கில் இருக்க வேண்டும் அவள். அது மட்டுமா? இங்கே இன்னொரு பிரசினை இருந்தது.
“ஹாய் ராஜி!” என்ற குரல் நாராசமாய் ஒலித்தது காதில். வந்துவிட்டது அந்த பிரசினை.
ஒரு ஸ்டூலைத் தூக்கி அவள் எதிரில் போட்டு அமர்ந்து கொண்டான் மதன். டாக்டரின் மைத்துனன் அவன். “என்ன இன்னிக்கு ரஷ் ஏதும் இல்லை, ஃப்ரீயா தான் இருக்கே போல?”
ராஜி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏதாவது பேஷண்ட் வந்தாலாவது இவன்கிட்டேயிருந்து தப்பிக்கலாம்.
“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கேட்டவுடனே சிரிப்பு வந்திரும்…” என்று தொடங்கினான்.
இவன் தான் அந்த இன்னொரு பிரசினை. டாக்டரின் மைத்துனன் என்ற உரிமையில் தினமும் அங்கே ஆஜராகி விடுவான். பி.பி.எம். முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பவன். பெரும்பாலும் பெண்கள் பின்னால்.
வந்து உட்கார்ந்தான் என்றால் அவளை அசத்துவதற்காக அதையும் இதையும் பேசி... அதுவும் கூட்டம் இல்லை என்றால் அந்த தனிமையை உபயோகித்து ரொம்ப தாராளமாக பேச ஆரம்பித்து விடுவான். டாக்டர் மனைவியின் செல்லத் தம்பியாச்சே, இவனைப் பற்றிப் புகார் செய்தால் இருக்கிற வேலையும் போய்விடுமே என்கிற கவலை அவளுக்கு.
அந்த நேரம் இரண்டு நோயாளிகள் வந்து விட, அவனிடமிருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்தது. அப்போதுதான் அந்த யோசனை மனதில்… டாக்டரின் அறையில் நுழைந்தாள். தான் கேட்க வந்ததை மெல்லக் கேட்டு விட்டாள்.
“அதற்கென்ன, ஓகே!” பச்சைக்கொடி காட்டிவிட்டார் அவர்.
^^ ^^ ^^
மறுநாள் மாலை. கிளினிக்கில்…
“ஏழாவது கணக்கை போட்டுட்டியா? சூப்பர்! இப்ப எட்டாவதைப் பார்த்து ஸ்டெப் எழுது,” என்று தம்பிக்கு சொல்லிக் கொண்டு அடுத்த டோக்கனை எடுத்து வைத்தாள் ராஜி. பக்கத்தில் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் ரவி.
“ஹாய்!” என்று உள்ளே நுழைந்த மதன் இந்த திடீர் சூழ்நிலை மாற்றத்தால் தாக்குண்டு அதிர்ந்து நின்றான்.
தன் தம்பியையும் தன்னுடன் அழைத்து வந்து ஒரு ஓரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொள்ள பெர்மிஷன் கேட்டு வாங்கி ஒரே ஐடியாவில் இரண்டு பிரசினைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட்ட தன் சாதுரியத்தை தனக்குள் வியந்து கொண்டாள் ராஜி.
><><><

Monday, September 21, 2026

காதுக்கு ஏ.ஸி.


அவருடைய அப்பா மட்டும் மகனின் நம்பிக்கையை நம்பாமல் ஜோசியர் சொன்னதைக் காதில் போட்டிருந்தால் அறுபதுகளில் காதுக்கு அதிசுகம் அளித்த அந்த அற்புதப் பின்னணி குரல்களின் இனிமையில் இருபது பர்செண்டை இழந்திருப்போம். பி பி ஶ்ரீனிவாஸின் மயக்கும் “மயக்கமா?” குரல் நமக்குக் கிடைத்திருக்காது.
பி.பி.ஶ்ரீ… காதுக்கு ஏ.ஸி. இன்று பிறந்த நாள்...
ஆர் கே நாராயணனின் ‘மிஸ்டர் சம்பத்’ நாவலை மூன்று மொழியில் தயாரித்துக் கொண்டிருந்த நல் வேளையில் ஜெமினி வாசனிடம் முகமது ரஃபியின் பாடல் ஒன்றை அவர் பாடிக் காட்ட ஓகே ஆயிற்று. எடுத்த எடுப்பிலேயே கீதா தத், ஷம்ஷத் பேகமுடன் பாட வாய்ப்பு.
தமிழில் முதல் பாடல் ‘ஜாதகம்’ படத்தில் கோவர்த்தனம் இசையில் (அவருக்கும் அதுதான் முதல் படம்) “மூடநம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா..”
ரசிகர்களை கவர்ந்த முதல் பாடல் “அவன் அல்லால் புவி மேலே அணுவும் அசையாது…” (பிரேம பாசம் - ராஜேஸ்வர ராவ்)
பிரபலமானது “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?” (மக்களை பெற்ற மகராசி - மகாதேவன்) “இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…” (கட்டபொம்மன் - ராமநாதன்) “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா..” (ஆளுக்கொரு வீடு - விஸ்வநாதன்-ராமமூர்த்தி) “பண்ணோடு பிறந்தது தாளம்..” (விடிவெள்ளி - ஏ.எம்.ராஜா) “மாலையில் மலர் சோலையில்…” (அடுத்த வீட்டுப் பெண் - ஆதி நாராயண ராவ்) "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்.." (தெய்வ பலம் - அஸ்வத்தாமா)
மிகப் பிரபலமானது 1961 இல், அந்த இரண்டு பாடல்களால்! “காலங்களில் அவள் வசந்தம்...:” “காற்று வெளியிடை கண்ணம்மா…” ஜெமினிக்கு பாடும் ஜெம் குரல் ஆனார்.
அப்புறம்? நானும் சொல்லப் போவதில்லை. நீங்களும் கேட்கப்போவதில்லை. நாடறிந்த பாடல்கள்! நாம் அறிந்த கானங்கள்!
ஏ.எம்.ராஜாவின் மென்மையும், டி.எம்.எஸ்ஸின் தெளிவும், லோகநாதனின் நெளிவும், கண்டசாலாவின் உருக்கமும்! நாலும் இவர் நாவில்!
பானுமதியிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீ வரை, லதா மங்கேஷ்கரிலிருந்து ஜமுனாராணி வரை எல்லோருடனும் பாடிவிட்டார்.
கானமிசைப்பது கதாநாயகனுக்கு என்றாலும் ஆர்ப்பாட்டங்களோ அனாவசிய எக்காளங்களோ இவர் பாடலில் இரா. அவரைப் போலவே அவர் பாடலும்! Gentle!
ஒளிந்து கிடக்கும் முத்துக்களைப் பொறுக்குவதானால் முதலில் வருவது விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘தென்றல் வீசும்’ படத்தின் “அழகான மலரே.. அறிவான பொருளே..” இடையிசையில் வீணையும் அவர் குரலும் இழைந்து இழைந்து கீழிறங்கும் அழகே அழகு!
தனித்து நிற்கும் பாடல்களைச் சொல்லிவிட வேண்டும். “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..” பாடலில் ஒவ்வொரு வார்த்தையில் பதில் மட்டும் பாடும் அழகும் குழைவும்.
“முள்ளில் ரோஜா…”வில் (கலைக் கோவில்) "தா...தா.. ஆ..." என்று இருபது செகண்டுக்கு ஆலாபனை செய்யும் மெருகு...
கேட்டதும் மறந்து விடுகிற பாடலா அது? “கதையைக் கேட்டதும் மறந்துவிடு… கண்ணீர் வந்தால் துடைத்துவிடு..”? (நீங்காத நினைவு)
இளைய ராஜா இசையில் இனிமையாக... “தென்றலே நீ பேசு..” (கடவுள் அமைத்த மேடை)
ஜாலி பாடல்களும் வெளுத்து வாங்குவார் என்பதற்கு “ஜாவ்ரே ஜா… இந்த கேட்டுக்கு நீ ராஜா..” (குமரிப் பெண்) உதாரணம். தெலுங்கு "என்ன வேகம் நில்லு பாமா..." பாடலில் எடுக்கும் வேகம்! “மாடி மேலே மாடி கட்டி.."யவர்.
“அவள் பறந்து போனாளே..”வில் (பார் மகளே பார்) அவர் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது என்றால் இவர் குரல் காந்தமாக இழுக்கிறது. "பொன்னொன்று கண்டோம்..."! (படித்தால் மட்டும் போதுமா?)
அழியா வரம் பெற்ற அவர் டூயட்டுகளைச் சொல்லாமல் கழியாது இந்த 'நாளாம் நாளாம் திருநாள்'! "பொதிகை மலை உச்சியிலி"ருந்து புறப்பட்டால்... "நிலவே உன்னை நெருங்கி" விடலாம். அந்த "அனுபவம் புதுமை..."!
லதா மங்கேஷ்கருடன் ‘நானும் ஒரு பெண்’ இந்தியில் “Chandha Se Hoga Wo Pyaara..” என்று பாடி இந்தி ரசிகர்களையும் தன் குரலால் கட்டிப் போட்டார். கன்னடத்திலும் ராஜ்குமார் தன் சொந்தக் குரலில் பாட ஆரம்பிக்குமுன் அவரது ஆஸ்தான பாடகராக...
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டாலி"ல் ஆரம்பித்தால் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..”, “ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்..”(பனித்திரை) விமரிசையாகக் கொண்டாட வரிசையாக தத்துவப் பாடல்கள்!
சிவாஜிக்குப் பாடிய “என்றும் துன்பமில்லை…” (புனர் ஜென்மம்) என்றும் உருக வைப்பது என்றால் எம் ஜி ஆருக்குப் பாடிய “பால் வண்ணம் பருவம் கண்டு…” (பாசம்) என்றும் மயங்க வைப்பது. “ரோஜா மலரே ராஜகுமாரி..” யையும் இவரையும் பிரித்து ரசிக்க முடியாது. மற்றிரண்டு: “வளர்த்த கலை மறந்துவிட்டாள்…” “சின்னச் சின்ன கண்ணனுக்கு..”
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த ‘பந்த பாசம்' படப் பாடலின் இறுதியில் “இதழ் மொட்டு விரிந்திட…” என்று இவரும் சுசீலாவும் ஒரே நேரத்தில் இரு ட்யூனில் இணைந்து பாடும்போது அடடா என்ன அழகு!
குரலில் என்னதான் சொக்குப்பொடி வைத்திருப்பாரோ, நாயகி உருகுவதற்குள் நாம உருகிடறோம், “காதல் நிலவே... கண்மணி ராதா..”. என்றோ “நிலவுக்கு என் மேல். என்னடி கோபம்..” என்றோ அவர் குழையும்போது! “தோள் கண்டேன்... தோளே கண்டேன்…” என்றும் “கண்படுமே... பிறர் கண்படுமே…” என்றும் அவர் அடுக்கும்போது! “ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து?” என்றோ “உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?” என்றோ கேட்கும்போது! ”உன்னழகைக் கண்டு கொண்டால்..” என்றோ "மௌனமே பார்வையால் ..." என்றோ தொடங்கிவிட்டால் டோட்டல் சரண்டர்!
‘நான் அவனில்லை’யில் ஜெமினிக்காக சில வரி இந்தியில் பாடினார். (“நான் சின்னஞ்சிறு பிள்ளை..”) ‘தவப்புதல்வன்’ படத்தில் “உலகின் முதல் இசை தமிழ் இசையே..” என்று சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாட, திக்குறிச்சிக்காக “Sangeeth Bhulonki Baghiya Hai..” என்று ஹிந்தியில் இவர் பாடும் வரிகளும் இவர் எழுதியதுதாம். ‘நண்டு’ படத்தில் ரெண்டு இந்திப் பாடலும் கூட எழுதியிருக்கிறார்.(“Kaise Kahun...“”Hum Akele..”) இன்னும், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ஶ்ரீதேவி பாடும் “Tu Hai Raja...” தெரிந்த எட்டு மொழியிலும் பாட்டு எழுதி இருக்கிறார்.
எண்பதை நெருங்கும் போதும் 'பண்'பதை நிறுத்தவில்லை. யுவன் இசையில் ‘செவன் ஜி ரெயின்போ காலனி’யிலும் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆயிரத்தில் ஒருவனி'லும்.
அவர் பாடல்களிலேயே எனக்குப் பிடித்தது… மற்றொரு பிரபல பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜா மெட்டமைத்த ‘ஆடிப் பெருக்கு’ படப்பாடல் அது. P. B.S. குரல் மனதின் ஆழத்திற்கு ஊடுருவிச் செல்லும். .
“புரியாது... புரியாது…
வாழ்க்கையின் ரகசியம் புரியாது...
வளரும் ஆசைக்கு அளவேது…
முடிவேது முடிவேது
முடிந்தபின் உலகம் நமக்கேது
முடிந்ததை நினைத்தால் பயனேது…”