Monday, June 22, 2026

பேசும் அந்த ஸ்டைல்...


விரல்களைச் சொடுக்கி, ‘முகாம்பா குஷ் ஹுவா!’ என்றபடி என்டர் ஆகும் Mr India நடிப்பு எல்லோரையும் குஷிப்படுத்தி விட்டது.
Amrish Puri… இன்று பிறந்தநாள்!
‘Meri Jung’ படத்தில் கோர்ட்டில் குஷ்பூவை இவர் விசாரிக்கும் காட்சி. பயந்த பெண்ணிடம் கனிவாக கர்ச்சீப்பை நீட்டி, கண்ணைத் துடைத்துக் கொள்ள விட்டு, ஈசியான சின்ன கேள்விதான் கேட்கப் போறேன்னு சொல்லி, மிருதுவுக்கும் மிருதுவான குரலில் கேட்பதும், இடையில் அப்ஜெக்ஷன் சொல்லும் அனில் கபூருக்கு சட்டென்று டோனை மாற்றி கண்டிப்பான குரலில் மறுப்பதும்... மறுபடி கனிவாக குஷ்பூவிடம் தொடருவதும்... தனக்கு வேண்டிய பாயிண்டை அவர் வாயிலிருந்து வரவழைத்ததும் குரலை உயர்த்தி மடக்குவதும்.. ஆஹா, Here is a real actor! என்று சொல்ல வைக்கும்.
Steven Spielberg வாயாலேயே உலக பெஸ்ட் வில்லன் பட்டம் வாங்கியவர். ‘Indiana Jones and the Temple of Doom’ இல் ‘அந்தக் கற்களை கீழே போட்டு விடுவேன்,’ என்று சொல்லும் ஹீரோவிடம் சர்வ அலட்சியமாக சொல்லும், ‘Drop them Doctor, They will be found. You will not!’ நினைவுக்கு வருதா?
Gunda raj படத்தில் அஜய் தேவ்கனை மிரட்டும் காட்சி. வெண்கல வாய்ஸ் ஒரு புறம் மிரட்டிக் கொண்டிருக்க, இமைக்காத கண்களில் விழிகள் உருள இந்த வில்லன் சீனை ஆக்கிரமித்து விடுவார். இவரைச் சமாளித்து ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசுவதற்குள்...
அடிக்கடி வந்து அவார்ட் வாங்கிக் கொள்வார் Filmfare விழாவில். மொத்தம் பன்னிரெண்டு. 1993, 94, 96 மூன்று வருடங்களும் விசேஷம். Best Villain, Best Supporting Actor இரண்டும் இவரே.
Raaj Kumar -க்கு பிறகு இவர்தான் வசன உச்சரிப்புக்கு! With due modulation, of course! இருவருமே மோதிக் கொள்ளும் காட்சி ‘Surya’ படத்தில் வரும்.
ரவுண்ட் ட்ராலி ஷாட்டுக்கென்றே பிறந்தவர். சுற்றி வரும் காமிராவின் முன் சாய்த்த தலையுடன் ‘Dhivya Shakti’படத்தில் பேசும் அந்த ஸ்டைல் இவருக்கே வரும்.
நம் திரை உலக வழக்கப்படி பிற்பாடு நல்லவர் ரோலுக்கு வந்து விட்டார். Dilwale Dulhania…,China Gate, Virsat… காமெடி ரோலும் தனக்கு வரும் என்று காட்டியது ‘Sangram’ படத்தில். கமலஹாசனும் அவருடைய நளின பகுதியை Chachi 420 -இல் (‘அவ்வை ஷண்முகி’) ஜெமினி ரோலில் வெளிப்படுத்தினார்.
மறக்க முடியாதது மணிரத்னம் அளித்தது. ‘தளபதி’ ரஜினியை தன்னோடு அழைக்கிற காட்சியில் அளவான பாடி லேங்குவேஜில், குரலை ஏற்றி இறக்கி பேசுவது.. நல்லா இரு என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கும் கர்வம்.. . தேவராஜ் விடுதலையாகும் போது காட்டும் இறுக்கமான முகம்... அப்புறம் அந்த confrontation! படிக்கட்டுகளில் தேவராஜை நேருக்கு நேர் சந்திக்கும்போது…’நீ மாறவே இல்லே!’ நிறுத்தி அழுத்தமாக பேசுகிறார். அவர் ‘எதையுமே மறக்கலை’ என்றதும் ஒரு ரியாக் ஷனை முகத்தில் வடியவிடுகிறார். தலையை நிமிர்த்துகிறார். முகத்தை உயர்த்துகிறார். ‘நூறு வருஷம் வாழணும்!’ என்று தோளைத் தட்டுகிறார். பேசிக்கொண்டே உடல் அசைவுகள் காட்டுவது ஒரு ரகம் என்றால் அவசியமான இடத்தில் இடைவெளி விட்டு அந்த vital அசைவுகளைக் கவனிக்க வைப்பது இவர் ரகம். கேமிராவுக்கு முகம் காட்டும் consciousness இல்லாமல் பேசும் அந்த confidence!
முதல் ஸ்க்ரீன் டெஸ்டில் தோற்ற எத்தனையோ முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர். அண்ணன் மதன்புரி already, an established villain ஹிந்தி படவுலகில்.

மீண்டு வந்து...



ஹார்ட் அட்டாக்கில் இருந்து மீண்டு வந்த வக்கீல் ராபர்ட்ஸ் நிராதரவாக நிற்கும் லியோவின் கேஸை எடுத்துக்கொள்கிறார். ஒரு பணக்கார பெண்மணியை பணத்துக்காக கொன்றுவிட்டதாக அவன் மேல் வழக்கு. மனைவியே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வருகிறாள். அப்படியும் அவனைக் காப்பாற்றிய தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இவர்...
நினைவுக்கு வருகிறதா அகதா கிரிஸ்டியின் ‘Witness for the Prosecution’? பிரமாதமான அந்த நாவலைத் திரையில் படுபிரமாதப்படுத்தியவர் அந்த டைரக்டர். அதைப் பார்த்துவிட்டு நிறைய பேர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கிடம் அவர் படம் என்று நினைத்து விட்டு பாராட்டினார்களாம்.
அந்த டைரக்டர்... Billy Wilder. இன்று பிறந்த நாள்!
1950, 60 களின் பத்துப் பன்னிரண்டு புகழ் பெற்ற படங்களை அடுக்கினால் அதில் இவர் படம் ஒன்றிரண்டாவது இருக்கும். மொத்தம் 22 முறை ஆஸ்கார் நாமினேஷன்! அவார்டை வாங்கியது அதில் ஏழு முறை. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட் தேர்ந்தெடுத்த 100 சிறந்த படங்களில் நாலு இவருடையது.
இவருடைய எல்லா படங்களுக்கும் மூன்றே ஒற்றுமை. வித்தியாசம். விறுவிறுப்பு. ஊடாடும் நகைச்சுவை. ரசிகர்களுக்கு போர் அடிக்க கூடாது என்பதுதான் அவர் தியரி. ‘நான் பார்க்க விரும்புகிற மாதிரி இருக்கும் படங்களையே நான் எடுத்திருக்கிறேன். என் படத்தை பார்த்துவிட்டு ஒரு 15 நிமிஷம் அதைப் பற்றிப் பேச முடிந்தால் அதைவிட வேறென்ன பரிசு?’

இவர் இயக்கியவைதாம் மர்லின் மன்றோவின் அந்த பிரபல ‘The Seven Year Itch’ , & ‘Some Like It Hot’ (1959 இல் இவர் எழுதி இயக்கிய இந்தப் படத்தை இதுவரை வந்ததில் பெஸ்ட் காமெடி படமாக 2000 ஆம் வருடத்தில் அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்ந்தெடுத்தது.)
அப்புறம் ஜாக் லெமன் - ஷர்லி மெக்லீன் ஜோடியின் அந்த இரண்டு பிரபல படங்கள்: ‘The Apartment’ & ‘Irma la Douce’ (ஹிந்தியில் மனம் கவர்ந்த ‘மனோரஞ்சன்’) கிர்க் டக்ளஸின் ‘Ace in the Hole’... ஆட்ரி ஹெப்பர்னின் ‘Sabrina’...
ரயில் டிக்கட்டுக்கு பணம் இல்லாத நாயகி சின்னப் பெண்ணாக நடித்து அரை டிக்கட் எடுப்பார் இவரது ‘The Major and the Minor’ 1942 படத்தில். அந்த வேடத்தில் ஜெர்ரி லூயி நடிக்க ‘You’re Never Too Young’ என்று 1955 இல் எடுத்து அதுவும் சக்கைப் போடு போட்டது.
‘யார் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையே அவர்தான் மிகச்சிறந்த டைரக்டர்.’ என்னும் இவர், வளரும் இயக்குனர்கள் உணரும் வார்த்தைகள் நிறைய சொல்கிறார்:
‘உங்கள் உள்ளுணர்வின்படி செய்யுங்கள். தப்பாக போனாலும் அது உங்களுடையதாக இருக்கும்.’
‘ஒரு நடிகர் கதவை திறந்து கொண்டு வந்தால் ஒன்றும் இல்லை. ஜன்னல் வழியாக நுழைந்தால் அது ஒரு சம்பவம்!’
‘க்ளோஸப் என்பது ஒரு துருப்புச் சீட்டு.’
‘தனித்தனியே பார்த்தால் ஆடியன்ஸ் ஒரு இடியட்டாக தோன்றும். ஆனால் மொத்தமாக பார்த்தால் அவர்கள் ஒரு ஜீனியஸ்.’
ரிட்டையர் ஆன பிறகு டைரக்ட் செய்ய மிகவும் ஆசைப்பட்ட படம் Schindler's List ஆனால் ஸ்பீல்பர்க் -க்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.
1970 களில், ‘என்ன இந்தக் காலத்தோடு அவுட் அஃப் டச் ஆகி விட்டீர்களே என்று கேட்டதற்கு இந்தக் காலத்தோடு டச் ஆக யார் விரும்புகிறார்கள்?’ என்றாராம்.

Sunday, June 21, 2026

ரொம்ப புத்திசாலியாக...



காலியாக நிற்கும் ஜெயன்ட் சைஸ் விளம்பரப் பலகையை பார்த்தவுடன் அதில் நம் பேர் பெருசா ஒளிர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கத் தோன்றுமா உங்களுக்கு? அப்படிக் கற்பனை செய்கிறாள் கிளாடிஸ். அரை இஞ்ச் அதிக இடுப்பால் மாடல் வேலை இழந்து நியூ யார்க்கில் வந்து இறங்கியிருந்த அவளுடன் பழகிய பீட்டர் (டாகுமெண்டரி எடுப்பவன்) கொஞ்சம் முந்திதான் அவளிடம் சொல்லி இருந்தான், ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மட்டுமல்ல, மார்க்கம் ஒன்று தெரிந்தால் அதைப் பிடித்துக்கொண்டு கூட மேலே வந்து விடலாம்!’ என்று.
வாழ்க்கையில் பெரிய ஆளாக நினைத்தவளுக்கு இந்த மான்ஹாட்டன் போர்டு ஒரு மார்க்கமாக தெரிந்தது. கையிலிருந்த கொஞ்சமே காசைக் கொண்டு மூணு மாசத்துக்கு அதை வாடகைக்குப் பிடித்து தன் பெயரை படத்துடன் பெருசா அதில் ஒளிர விடுகிறாள். பார்த்துப் பார்த்து மகிழ்கிறாள். பைத்தியம்பாங்க உன்னை என்று அவளைக் காதலிக்கும் பீட்டர் சொன்னது எடுபடவில்லை.
முக்கியமான விளம்பர இடம் போயிடுச்சே என்று ஓடிவரும் சோப்பு கம்பெனி இவான் அவளிடம் கேட்டுப் பார்க்கிறான். 500 டாலர் அதிகம் கொடுத்தாலும் தர மறுக்கவே ஆறு இடங்களை கொடுக்கிறான் அதற்கு பதிலாக. இப்போது ஆறு இடங்களிலும் அவள் பெயர் சூப்பர் ஹையாக. ('8 கேட்டிருக்கலாமோ?') சிற்றி முழுவதும் அவள் பெயர் பாப்புலராகி விடுகிறது. கடைக்குப் போனால் ஆட்டோகிராப் வாங்குகிற அளவுக்கு. டி.வி.யில் தோன்றும் அளவுக்கு.
அவளையே தங்கள் சோப்புக்கு மாடலாக உபயோகிக்கலாம் என்று கம்பெனிக்கு தோன்ற அவள் தேடிய பெரிய கேரியர் கிடைத்து விடுகிறது. ஆனால் அதற்கு விலையாக இவான் அவளிடம் நெருங்க, கையை தட்டிவிட்டு விலகுகிறாள். வீட்டுக்கு வந்தால் பீட்டரின் குட் பை கடிதம். ஏங்கிய பணமும் புகழும் இப்போது வந்தாலும் மனதில் வெறுமை. அப்பவே பீட்டர் சொன்னானே, ஏன் நீ கூட்டத்தோடு கூட்டமாக சந்தோஷமாக இருப்பதை விட்டுவிட்டு தனியாக செல்ல நினைக்கிறேன்னு? யோசிக்கிறாள். கட் பண்ணினால், ஜூவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பீட்டர், பிளேன் சத்தம் கேட்டு மேலே பார்க்க, ‘கிளாடிஸைக் கூப்பிடு பீட்டர்!’ என்று விமானத்தில் பெரிய எழுத்துக்களில்! ஒன்று சேர்கிறார்கள். காரில் செல்லும்போது எதிர்ப்படும் காலி விளம்பரப்பலகை இப்போது அவளைக் கவரவில்லை.
1954, ஆமாம், 54 இல் வந்த ‘It should Happen to You’ படத்தின் அமர்க்களமான கதை அது. கிளாடிஸாக நடித்தவர் Judy Holliday. இன்று பிறந்த நாள்!
Rotten Tomatoes ரேட்டிங் 100% கிடைத்த படம் அது. பீட்டராக வந்தவர் பிரபல Jack Lemmon. முதல் படம் அவருக்கு. 'My Fair Lady' டைரக்டர் George Cukor இயக்கியது..
‘எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் படத்தில்,’ அப்படின்னு கேத்ரின் ஹெபர்ன் இவரைப் பற்றிச் சொல்லியது உதவ, கொலம்பியாக்காரர்கள் ‘Born Yesterday’ படத்தில் இவரைப்போட, ஆஸ்கார் வாங்கி விட்டுத் தான் ஓய்ந்தார் ஜூடி.
‘Every day’s a Holliday with Judy Holliday...’ என்று ஆரம்பமாகும் இவர் பட ட்ரெய்லர் ஒன்று.
Quote? "திரும்ப திரும்ப அசட்டு அழகியாக வந்து ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் நீங்கள் ரொம்ப புத்திசாலியாக இருக்க வேண்டும்!"

Saturday, June 20, 2026

‘சும்மா’வா சொன்னாங்க…


‘சும்மா’வா சொன்னாங்க…
கே.பி.ஜனார்த்தனன்.

ரிடயரானதும் ஆனந்தம் பிடிபடவில்லை. ஆஹா ஜாலி! இனி ஃப்ரீ! 24 மணியும் நமக்கேன்னு நினைத்தபடி மாமாவைப் போய்ப் பார்த்தேன். “ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா!” என்றேன்.
“அட, ரிடயராயிட்டியா? இனிமேதான் கவனமா இருக்கணும். ஐடிலா இருக்கவேபடாது. நோய் வந்துரும். உடனே போய் ஒரு சோஷியல் கிளப்பில சேர்ந்துரு. ஆக்டிவிடி! அதான் மருந்து!” என்று அட்வைஸை வழங்கினார் ஆசியாக, ஆசையாக.
என்னடா இதுன்னு அண்ணாவைப் பார்க்கப் போனேன். “என்னிக்கு ரிடயரானே?”
“போனவாரம்..”
“ஒரு வாரமா எங்கே போனே? சும்மாவா இருந்தே?”
“இப்பதானேண்ணா சும்மா இருக்க முடியும்?”
“இப்பதான் படாது. சுறுசுறுப்பா இருக்கணும். இல்லன்னா உடம்பு கெட்டுடும். அதனால நீ என்ன பண்றே, நாளைக்கே என் கடையில ஜாயின் பண்ணிரு. வேணா உன்னை ஒரு 10% பார்ட்னரா போட்டுக்கறேன்.”
“பிசினஸ்லாம் எனக்கு வராதே?”
“அதனால தான் உன்னை போடறேன், இல்லன்னா கவிழ்த்துருவேல்ல?”
எப்படியோ நழுவி வந்து மனைவியிடம் சொன்னபோது… “நான்கூட படிச்சேங்க… சும்மாவே இருக்கப்படாதாம். சுகர் வந்துருமாம்.. உங்களுக்குத்தான் மேத்ஸ் நல்ல வருமே? நம்ம தெருவிலேயே பத்து பதினஞ்சு பசங்க தேறுவாங்க.. டியூசன் சொல்லித் தரலாமே.. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு…” என்று இடியை இறக்கினாள், “நாலு காசு வந்தால் நாலு புடவை எடுக்கலாமில்ல? உங்களுக்கு ஒரு வேட்டி…”
எனக்கு தெள்ளத் தெளிவா விளங்கிப் போச்சு. மறுநாளே போய் எங்க எம் .டியைப் பார்த்தேன்.
“என்ன சொல்றே, ஏதாவது வேலை வேணுமா?”
“ஆமா, காண்ட்ராக்டில் சில வேலைக்கு ஆள் எடுக்கிறீங்கல்ல? அது மாதிரி.”
“அது இப்ப… நல்ல வேலை ஒண்ணும்… செக்யூரிடி வேலை மட்டும்தானே காலியாயிருக்கு. வந்து சும்மாதான் இருக்கணும்!"
“போதும்!” என்றேன், ரொம்பவே செக்யூர்டாக உணர்ந்தேன்.
><><

1349 பக்கங்கள்...


1349 பக்கங்கள். கிட்டத்தட்ட 6 லட்சம் வார்த்தைகள். உலகின் ஆகப்பெரிய நாவலாக 1993 இல் வெளியானது. தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேடும் இளம்பெண்ணின் கதை அது. காதலும் நகைச்சுவையும் இழையோடும் நாவலை கொல்கத்தாவில் பிறந்த அந்த எழுத்தாளர் எழுத எடுத்துக் கொண்ட காலம் 10 வருடங்கள். 'A Suitable Boy’ என்ற அந்த நாவலுக்கு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு. புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. அந்த மாடர்ன் கிளாசிக்கை டால்ஸ்டாய், டிக்கன்ஸ் எழுத்தின் ரேஞ்சில் வைத்தார்கள்.
Vikram Seth! இன்று பிறந்த நாள்... இனிய வாழ்த்துக்கள்!
'A Suitable Girl' என்ற sequel நமக்குக் கிடைக்கப் போகிறது. கதாநாயகி வயதாகி தன் பேரனுக்கு பெண் தேடும் கதையாக விரியுமாம் அது.
வயலின் இசைக்கும்இளைஞனுக்கும் பியானோ வாசிக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதலையும் பிரிவையும் மறு சந்திப்பையும் வலம் வரும் ‘An Equal Music’ ஐரோப்பிய க்ளாஸிக் இசை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நாவல்.
‘Arion and Dolphin’ குழந்தைகளுக்காக இவர் எழுதிய நாவல். அத்தை மாமாவின் கதையை ‘Two Lives’ என்று எழுதியது ஆட்டோபியாக்ரஃபி ரகம்.
Silicon Valley கதை ஒன்றை 690 sonnet களாக எழுதிய அவரது முதல் நாவலே சாஹித்ய அகாடமி அவார்டு வாங்கிற்று. ‘The Golden Gate.’
Quotes?
‘மிருதுவான விஷயங்களை கரடு முரடாக ஆக்கவும், கரடுமுரடான விஷயங்களை மிருதுவாக ஆக்கவும் தெரிந்து வைத்திருப்பது காதல் ஒன்று தானே?’
‘நிறைய விஷயங்களை யோசி. உன் சந்தோஷத்தை கொண்டுபோய் ஒரு நபரின் கையில் வைக்காதே. உனக்கு நீ நேர்மையாக இரு.’
‘நீ விழைவது உனக்கு கிடைக்கும். ஆனால் நீ கண்டிப்பாக விழைந்திட வேண்டும். வெறுமே விரும்பினால் போதாது.’

Saturday, June 13, 2026

‘ரோல்' மாடல் ...


ஷெர்லாக் ஹோம்ஸ் & வாட்ஸனை வைத்து நிறைய ஜோக்குகள் உலாவுவது உண்டு. அதில் ஒன்று.
பக்கத்து காட்டில் உலா போன ஷெர்லாக் ஹோம்ஸும் வாட்ஸனும் அங்கே டெண்ட் அடித்து தங்கினார்கள். ராத்திரி 3 மணிக்கு கண்விழித்த ஹோம்ஸ் வாட்ஸனை எழுப்பினார். “வாட்ஸன், மேலே பாருங்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது?”
“நட்சத்திரங்கள் அழகாக அணிவகுத்திருக்கின்றன.”
“வேறென்ன தெரிகிறது?”
“நிலா இன்றைக்கு மிக அழகாக இருக்கிறது.”
“வேறென்ன தெரிகிறது?”
“ஒன்றும் தெரியவில்லையே?”
“நல்லா பாருங்க, நம்ம டெண்டை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க!”
><><
ஹோம்ஸ் கதைகளிலும் துணுக்குகளிலும் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சம்பாஷணை..
“எப்படி கண்டுபிடித்தீர்கள் அதை?” என்று கேட்பார் வாட்ஸன்.
“எலிமெண்டரி, மை டியர் வாட்ஸன், எலிமெண்டரி!” என்று சொல்லிவிட்டு ஹோம்ஸ் விளக்குவார்.
ஆனால் ஒரிஜினல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் இந்த 'எலிமெண்டரி... மை டியர் வாட்ஸன், எலிமெண்டரி!' வரியே கிடையாது என்பார்கள்.
><><
எத்தனையோ பேர் ஷெர்லாக் ஹோம்ஸ் வேடத்தில் நடித்தாலும் இவரை மறக்க முடியாது. திரையின் ஹோம்ஸுக்கு அட்டகாசமான ‘ரோல்' மாடல் கொடுத்தது இவர்தான்! நடித்த 14 படங்களும் ரசிகர்களின் ஃபேவரிட்.
Basil Rathbone...இன்று பிறந்த நாள்!
மௌனப் படக் காலத் திரையில் ஆரவாரம் ஏற்படுத்திய இவர், முதலில் கலக்கியது நாடக மேடையை. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இவர் நடிக்காத முக்கிய கதாபாத்திரமே இல்லை. (23 நாடகம், 52 பாத்திரம்)
தெளிவான உச்சரிப்பு! ஓங்கி ஒலிக்கும் குரல்! மேலும் பிரகாசிக்க வசதியாக பேசும் படம் வந்திட, காசும் சம்பாதித்தார். ஹரர் படங்களும் சரித்திரப் படங்களும்.
திரையில் Errol Flynnதான் ஜெயிப்பார். கதாநாயகன் ஆயிற்றே? ஆனால் வில்லனாக வரும் இவர்தான் வாள் சண்டை போடுவதில் திறமைசாலி வெளியே.
ஒரு கட்டத்தில் சீன் கானரி போலவே இவருக்கும் ஷெர்லாக் ரோல் அலுத்துப் போக, (வெளியே இறங்கினால் ‘ஹலோ பேஸில்!’ சொல்லலை, ‘ஹலோ ஷெர்லாக்!’ தான் சொன்னாங்க என்கிறார்.) நிறுத்திவிட்டு மறுபடியும் ஃபான்டஸி, ஹரர் படங்களில் இறங்கினார்.
சின்ன வயதில் இவரது குடும்பம் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பல் வருவதற்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தபோது... அந்தக் கப்பல் மூழ்கி விடுவதாக அம்மா கண்ட கனவு! வேறு கப்பலுக்கு மாற்றி வந்தார்கள். அதேபோல் அந்த கப்பல் மூழ்கி விட்டது. அதிலிருந்து இவருக்கு E.S.P. -இல் அபார நம்பிக்கை!

மூன்றாமவர்…


1. வட்டத்தை வரைந்து விடலாம், ஆனா ஓவல் ஷேஃபை எப்படி சரியாக வரைவது? விழித்துக் கொண்டிருந்தார் அந்தக் கலைஞர். அப்ப அவரைச் சந்தித்த பையனுக்கு 14 வயதிருக்கும். ஆவலுடன் ஆராய்ந்து, ஓவலுடன் எலிப்ஸ் முதலான எல்லா வளைவுகளையும் ஒரு பின்னையும் நூலையும் பிடித்து எப்படி வரைவது என்று பின்னி விட்டான் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை. எடின்பர்க் யூனிவர்சிட்டியில் அது பப்ளிஷ் ஆனது. அந்தச் சிறுவன்…
2. கையில் இருக்கும் மொபைல், காதில் ஒலிக்கும் ரேடியோ, காணும் டி.வி. எல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது இப்போது நமக்கு. இவற்றுக்கெல்லாம் ஆதார வித்திட்டவர் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறார் இன்னும். ஆம். ஒளி, மின்சாரம், காந்தம் மூன்றுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று முதன் முதலில் அறிவித்த அந்த வித்தகர்…
3. அறிவியலில் முதல் மூவர் வரிசையில் ஐன்ஸ்டீன், நியூட்டனை அறிவீர்கள். மூன்றாமவர்…
4. முதல் வண்ணப் புகைப்படத்தை வழங்கியவர்...
James Clerk Maxwell... இன்று பிறந்த நாள்!
‘அறிவியலின் தந்தை’.. ‘ஒளியின் தந்தை’… அவரை எடை போட்டவர்கள் அளித்த அடை மொழிகள்!
மின்காந்த வீச்சு என்ற இயற்கையின் மாபெரும் பெட்டகத்தை திறந்து வைத்தார் இவர். ரேடியோ அலைகளில் தொடங்கி எத்தனையோ அலைகள் அதிலிருந்து எழுந்தன. அந்த எலக்ட்ரோ மேக்னடிஸம் தியரி! அதன் சமன்பாடுகளை வைத்துத்தான் ஐன்ஸ்டீன் தன் ஸ்பெஷல் தியரி அஃப் ரிலேட்டிவிட்டியைக் கண்டுபிடித்தார்.
‘இவருடன் தொடங்கியது அறிவியலின் புதிய சகாப்தம்,’ என்றார் ஐன்ஸ்டீன், ‘நியூட்டன் காலத்துக்கு பிறகு அறிவியலில் நேர்ந்த மிகச் சிறப்பான, மிகப் பிரயோஜனமான கண்டுபிடிப்புகள் இவருடவையே.’
ஆராய்ந்து சொன்ன மற்றொன்று, சனியைச் சுற்றியுள்ள வட்டங்கள் துகள்களே என்பது.
இந்த விஞ்ஞானிக்குள் ஒரு கவிஞரும் இருக்கிறார். சாம்பிளுக்கு 'மனைவிக்கு' என்ற ஒரு கவிதையின் தொடக்கம்:
‘இந்தத் தனி அறையிலிருந்து கிளம்பி அடிக்கடி
நிலம் மேலும் நீர் மேலும் பறக்க விரும்புகிறேன்,
இருளைக் கிழித்து துயரைத் துளைத்து
என்னை உன்னுடன் இணைக்க…’
48 வருடங்களே வாழ்ந்த இவர் நாலைந்து வருடங்கள் கூட வாழ்ந்திருந்தால் ஏகப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வேலை இல்லாமல் இருந்திருக்கும் என்பார்கள்.

Thursday, June 11, 2026

மூன்று மொழிகளில்...


1952. அந்தப் படத்தின் டைரக்டருக்கு கடைசி அசிஸ்டன்டாக வந்து சேர்ந்தார் அவர். கதாநாயக நடிகருக்கு நெருங்கிய நண்பரானார். 13 வருடங்களுக்கு பின் இவரை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை தான் டைரக்ட் செய்வோம் என்று அவருக்கும், தனக்கு ஒரு வித்தியாசமான படத்தைத் தரப்போகிறார் அவர் என்று இவருக்கும் அப்போது தெரியாது. ‘அன்பே வா’வென்று வரவேற்றார்கள் ரசிகர்கள் அந்த படத்தை. அந்த டைரக்டர்...
A. C..திருலோகசந்தர். இன்று பிறந்த நாள்.
போரில் குண்டடிபட்ட ஜெமினியை ஐம்பது மைல் சுமந்து காப்பாற்றிவிட்டு, தான் சரணடையும் சிவாஜி, பிற்பாடு அவர் குடும்பத்தையும் சுமக்கிறார். அதற்காகத் தன் காதலையும் வாழ்க்கையையும் தியாகம் செய்யக்கூட தயாராகிறார். யாராலும் மறக்க முடியாத கதையைப் ‘பார்த்ததில்’ நம் கதைப் ‘பசி தீர்ந்தது’. ஆம், அவர் எழுதிய கதைதான் அது. அதற்கு முன்பே அவர் ‘விஜயபுரி வீரன்’ கதையை கொடுத்திருந்தார் சிட்டாடல் ஜோசப் தளியத்துக்கு.
முதல் டைரக்‌ஷன் ‘வீரத்திருமகனை’யே வித்தியாசமான கோணங்களில் படமாக்கினார் திரிலோக். S.பாலச்சந்தரிடம் பயின்றவர்ஆயிற்றே? தடாகத்தில் மிதக்கும் தாமரைப்பூக்களில் சச்சுவும் தோழிகளும் ஆடும் அந்த நடனத்தை, நீரில் அரை அடி மூழ்கி மிதக்கும் மரத்தில் அவற்றை அமைத்து, அற்புதமாக படமாக்கி இருந்தார்க்கள்.
நடிப்பின் டிக்ஷனரியை மூன்று மொழிகளில் வெளியிட அவருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. பிரமாதமாகப் பிரிண்ட் போட்டுக் கொடுத்துவிட்டார். ஆம், ‘தெய்வமகன்’. சத்தான சுமார் 10 காட்சிகளில் படத்தை முத்தாகக் கொடுத்துவிட்டார் இந்த வித்தகர். ஆஸ்கார் பிறமொழி அவார்டுக்கு முதல் தென்னிந்திய entry!
சுமார் 25 படங்கள் சிவாஜியை இயக்கினார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தை வேறு யார் இவ்வளவு கம்பீரமாக தந்திருக்க முடியும்?
Subtle humour ஒன்று இவர் காட்சிகளில் இழையோடும். ‘தங்கை’ படத்தில் தாராளமாகப் பார்க்கலாம் அதை. அதில் ACTION ஹீரோவாக சிவாஜியை மாற்றினார் A.C.T.
'நானும் ஒரு பெண் படத்தில் இரவில் யாருக்கும் தெரியாமல் டயாபட்டிக் ரங்காராவ் இனிப்பு சாப்பிட வரும் போது, மருமகள் விஜயகுமாரி மடக்கி அந்த இனிப்பை வார்த்தையில் கொடுக்கும்போது நெகிழ்வையும், அழகின்மையால் புறக்கணிக்கப்பட்ட தெய்வ மகன் சிவாஜி, தன் அழகு அன்னையைத் தூர இருந்து, பார்த்து வணங்கும் போது உருக்கத்தையும் வினாடிகளுக்குள் நம்மிடம் பிறப்பித்த திறமைசாலி! எல்லாமே வித விதமான படங்கள்! 'ராமு'வும் 'பாபு'வும் ஒரு ரகமென்றால் 'இரு மலர்களு'ம் 'அவன்தான் மனிதனு'ம் மற்றொரு. 'தெய்வமகனு'ம் 'எங்கிருந்தோ வந்தாளு'ம்… 'எங்க மாமா'வும் 'அன்பளிப்பு'ம்… 'அதே கண்களு'ம் 'என் தம்பி'யும்… 'பைலட் பிரேம்நாத்'தும் 'டாக்டர் சிவா'வும்…

Sunday, June 7, 2026

அவரவருக்கென ஒரு பொய்கை...



எங்கோ ஒரு சமுத்திரத்தில் எல்லாவற்றையும் தேக்கி வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் அளித்துக் கொண்டிருப்பதை விட, அவரவருக்கென ஒரு பொய்கையை அமைத்துத் தந்தால் எத்தனை நல்லாயிருக்கும் என்று எங்கோ ஒருவர் யோசித்தார் . அதன் பலன் தான் இப்போது நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
www… அந்த மூன்று டபுள்யூக்களை உங்கள் முன்னம் வைத்தவர்…கொண்டாட வேண்டாமா அவரை?
Tim Berners-Lee… இன்று பிறந்த நாள்!
1980. ஜெனீவாவில் CERN-இல் (World’s Largest Particle Physics Lab) பணியாற்றிக் கொண்டிருந்தார் அந்த கோடிங் மன்னர். தகவல்களை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள பைல்களில் கோர்க்க முயன்றதில் hypertext என்றொரு ப்ரோக்ராமை அமைத்தார். பின்னர் அதையே இன்னும் விரிவாக.. கம்ப்யூட்டர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், அறிஞர்கள் அளிக்கும் தகவல்களை ஆர்வலர்கள் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவும் வழி தேடியதில், இன்டர்நெட்டை இணைத்து, பேர் சொல்லும் தளம் (DNS) சேர்த்துப் பின்னிய வலைதான் அந்த 3w. அந்தப் பத்து வருட உழைப்பில் உருவானதுதான் உலகளாவிய வலை. முதல் வெப்சைட் info.cern.ch
முக்கியத்திலும் முக்கிய விஷயம் எந்த ராயல்டியும் எடுத்துக்கொள்ளாமல் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ததுதான். ஆனால் ஒரு ஆகஸ்ட் நாளில் தன் கண்டுபிடிப்பை வெளியிட்டபோது யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். (எப்போதுதான் அலட்டிக் கொண்டாடினார்கள் அறிஞர்களை?)
பின்னர்... டைம் பத்திரிகையின் உலகின் 100 மிக முக்கிய மனிதர்கள் லிஸ்டில் இடம் பெற்றுக்கொண்டார் அவர். உலகை உருவாக்கிய 80 தருணங்களின் பட்டியலில் முதலாவது இடம் பெற்றுக் கொண்டது அந்த நிகழ்வு.
2012 ஒலிம்பிக்ஸில் 'This is for every one' என்று அவர் ட்வீட் செய்ய உட்கார்ந்திருந்தவர்களின் ஒவ்வொரு நாற்காலியிலும் ஒளிர்ந்தது அது! இன்னும் தெரிந்துகொள்ள அவர் புத்தகம் ‘Weaving the Web’ படிக்கலாம்.
இவர் ஒரு ‘ferroequinologist’ என்றால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள், ‘ரயில் ஆர்வலர்’ என்றால் சிரமமாயிருந்தால்! சின்ன வயதில் ரயில் மாடல்களை வைத்து விளையாடும்போது எலெக்ட்ரானிக்ஸ் கற்றுக் கொண்டாராக்கும்!
சர் பட்டம் தவிர அவர் பெற்ற பல பரிசுகளில் ஒன்று கம்ப்யூட்டிங்கின் நோபல் பரிசு எனப்படும் AM Turing Award.

Monday, June 1, 2026

இன்னும் நல்ல...


‘THE BIG COUNTRY’
"இன்னும் நல்ல பண்ணுங்க," என்று மட்டுமே சொல்வாராம் டைரக்டர் வில்லியம் வைலர். ஆனா எப்படின்னு சொல்லமாட்டார். ரீடேக் எடுப்பதில் புகழ் பெற்றவர். டைரக்‌ஷனிலும்தான்! ‘பென்ஹர்' டைரக்டர் ஆயிற்றே?
இதனால் நடிகர்கள் பட்ட பாடு! ஹீரோ கிரிகரி பெக் தினம் அவரோடு சண்டைதான். அப்புறம் மூணு வருஷம் அவர் பக்கமே போகவில்லையாம் பெக்.
ஆனால் உருவானதோ ஒரு அருமையான கௌபாய் படம்!. ‘THE BIG COUNTRY' மிகச் சிறந்த 500 படங்களில் 187 ஆவதாக தேர்வானது.
இரண்டு கூட்டங்களுக்கிடையே பகை. அவர்களின் கால்நடைகளுக்கான தண்ணீர் தரும் நதிக்கரை ஒரு டீச்சருக்கு சொந்தம். அவளைப் பயமுறுத்தும் வில்லன். பாதுகாக்க விழையும் ஹீரோ என்று படிப்படியாக பில்ட் அப் ஆகும் திரைக்கதை... டுமீல் டுமீலிலிருந்து கௌபாய் படங்கள் கதைக்கு நகர வித்திட்ட படம்.
பேச்சில் அதிகம் காட்டாமல் பேசாத இடங்களில் கிரிகரி பெக் காட்டும் உணர்வு முக பாவனைகள் அலாதி.

அப்படி ஒரு புன்சிரிப்பு...


அவரைப் பிடிக்காத ரசிகர் இல்லை. அப்படி ஒரு ஆளு. ஆளுமை. தோற்றத்திலும் நடிப்பிலும்... அப்படி ஒரு புன்சிரிப்பு! முகத்திலும் கண்ணிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Morgan Freeman…. இன்று பிறந்த நாள்!
நாலாவது ஆகப் பெரும் வசூல் நடிகர். படங்களின் மொத்த வசூல் 10 பில்லியன் டாலர். இவர் ஒரு ஆஸ்கார் வாங்கியது தவிர இவர் நடித்த மூன்று படம் சிறந்த பட ஆஸ்கார்!
அவர் ஓட்டுவதானால் காரில் ஏற மாட்டேன் என்று அடம் பிடிக்கும், மாற்றத்தை விரும்பாத அந்தப் பெண்மணியின் மனதில் நட்பிடம் பிடித்து காரையும் படத்தையும் அழகாக ஓட்டிச் செல்வார் ஆஸ்கார் பெஸ்ட் ஆன Driving Miss Daisy படத்தில்.
நெல்சன் மண்டேலாவாக நடிக்க ஆசைப்பட்டார். சாத்தியமானது. அதுவும் Clint Eastwood டைரக்‌ஷனில்! ‘Invictus.’
சொல்லவே வேண்டாம், The Shawsank Redemption பற்றி! அனைவரின் ஃபேவரிட்! ‘மனதுக்கு ஏது கூண்டு?’ என்பதுதான் மெஸேஜ். Tim Robbins -ம் இவரும் நம்மை அழைத்துப் போவது புதியதோர் உலகுக்கு.
‘10 Items or Less’ படத்தில் Morgan Freeman ஆகவே வருவார். அறியாத சிற்றூரில் காசின்றி மாட்டிக்கொள்வார். இருக்கும் ஒரே கடையைச் சுற்றி சுற்றி வருகையில் அங்கே வேலை பார்க்கும் ஒரு பெண்.. கணவனிடம் வதைப் பட்டுக் கொண்டு வாழ்வில் பிடித்தமில்லாமல் கஷ்டப்படுவதைப் பார்க்கிறார். அவள் காரில் இவர் ஊருக்கு லிஃப்ட் தர, அவள் தன்னம்பிக்கையை லிஃப்ட் செய்து நல்ல வேலை கிடைக்க உதவிவிட்டு டாட்டா சொல்கிறார். அமைதியான நடிப்பில் அள்ளிக் கொள்வார் நம் உள்ளத்தை.
ரொம்பவே சிரிக்க வைத்தது 'The Bucket List'. டெர்மினல் பேஷண்ட்ஸ் ஆன Jack Nicolson-ம் இவரும், ‘எப்படியும் கொஞ்ச நாள், ஏன் படுக்கைக்குள்?’ என்று கிளம்புவார்கள் கூத்தடிக்க!
படப்பிடிப்பில் அடி பட்டதா தெரியாது. ஆனால் ஒரு முறை வீட்டருகே கார் மறிந்ததில் தோள் முறிந்துபோனது..
தன் படங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடிக்காது. ‘என்னைத்தான் எப்பவும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே?’

சற்றே வித்தியாசமான...


டாக்டர் ஆனந்த்! சுற்றி நடக்கும் சம்பவங்கள் அந்த இளைஞனைப் பைத்தியமாக அடிக்கிறது. மழையில் நடுரோட்டில் சந்திக்கும் பெண்ணை காரில் ஏற்றுக்கொண்டால் வைப்பர் நின்றுவிடுகிறது. கண்ணுக்குப் புலப்படாத வழியை அவளே சொல்கிறாள். எங்கிருந்தோ கேட்கும் பாடலில் தொடங்கி ஏகப்பட்ட மர்மங்கள் அவனைச்சுற்றி. பாழடைந்த வீட்டுக்கு சென்று நோயாளியை காப்பாற்றினால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிறார்கள் பிற்பாடு. காதலி கொலை செய்யப்படுகிறாள். கல்யாணத்துக்கு அம்மா பார்க்கும் பெண் அவன் சந்திக்கும் மர்மப் பெண்ணை போலவே இருக்கிறாள். 'அவள் யார்?' (‘Woh Kaun Thi?’) என்ற அந்தப் படம் ஒரு மர்மப் பட சகாப்தத்தையே ஆரம்பித்து வைத்தது. (யாரால் மறக்க முடியும் அதன் தமிழ் பதிப்பை? 'யார் நீ?’)
அந்த trend setter படத்தின் டைரக்டர்தான்...
Raj Khosla.... May 31 பிறந்த நாள்!
சற்றே வித்தியாசமான படங்களைத் தருபவர். எல்லா வெரைட்டியிலும். அது மற்றவர்களால் பின்பற்றப்படும். கண் சுழலும் இடத்திலெல்லாம் அவர் காமிரா சுழலும். ஷாட் பிரிப்பதிலும் வடிவமைப்பதிலும் மன்னர்.
பாடகர் ஆகலாம் என்று வந்தவரை தேவ் ஆனந்த் உதவி டைரக்டராக்கினார் தன் பட டைரக்டர் குரு தத்துக்கு. அவர் இவரை டைரக்டராக்கினார் தன் தேவ் ஆனந்த் படத்துக்கு. 'C. I. D.' (வஹீதா ரஹ்மானின் முதல் ஹிந்தி படம்.)
இன்றைக்குப் பார்த்தாலும் மனம் துள்ளும் அந்தக்கால sub way -க்குள் தேவ் ஆனந்தும் மதுபாலாவும் பாடும் “Achha ji main haari chalo maan jao na..”--- அது ‘Kala Pani’ க்காக இவர் படமாக்கியதுதான்.
ஓ.பி.நய்யார் போட்டுக்கொடுத்த 10 பாட்டுக்களை வைத்துப் பின்னிய கதைதான் 'Ek Musafir Ek Hasina.’ சாதனா, ஜாய் முகர்ஜியையும் சதா நில்லாதோடும் காமிராவையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
கொள்ளைக்கார ஜப்பர் சிங்கிடமிருந்து(வினோத் கான்னா) கிராம மக்களைக் காப்பாற்றும் தர்மேந்திரா... 'Mere Gaon Mere Desh,' ஒரு blockbuster! என்றால் ‘Do Raastey’.. சொல்ல வேண்டியதில்லை... மும்தாஜை டாப் ஸ்டார் ஆக்கிய படம்!
Filmfare சிறந்த படம் அவார்ட் வாங்கிய இவரது 'Main Tulsi Tere Aangan Ki.'தான் Nutan க்கு சிறந்த நடிகை அவார்டும் வாங்கித் தந்தது.

உள்ளம் பேசும்...


அவர் பேச மாட்டார். அவருடைய உள்ளம் தான் பேசும் நம்மோடு. சற்று நேரத்தில் நம் உள்ளம் வெளிவந்து வந்து அவருடன் பேசிக் கொண்டிருக்கும். அத்தனை அந்நியோன்யமாக பழகுவார். அவருடன் பேசி மகிழ்ந்த தருணங்கள் என் வாழ்க்கையின் ஆக முக்கியமான கணங்கள்.
அட்வைஸ் பண்ணியதில்லை. சஜெஸ்டிவாகவே சொல்லுவார். ‘கலைமகள் அகிலன் நினைவு சிறுகதைப் போட்டி'யில் இரண்டாவது பரிசு பெற்ற என் சிறுகதையைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். அடுத்து சந்தித்தபோது, ‘இலக்கியப் பத்திரிகைகளில் எழுதலாமே நீங்கள் முயன்றால், கொஞ்சம் பயின்றால்,’ என்றார்.
எப்போது சந்தித்தாலும் தன்னுடைய மதிப்பான நேரம் வீணாவதை பற்றி கவலைப்படாமல் ஆத்ம சந்தோஷமாக உரையாடுவார். இதை அவரிடமிருந்து ஒரு பாடமாக நான் கற்றுக்கொண்டேன்.
சுந்தர ராமசாமி... May 30. பிறந்த நாள்!
நம் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உண்டு என்பது தெரியும். அந்த அர்த்தம் என்ன என்று கண்டுகொள்ள உதவியவர்களில் ஒருவர்.
அவர் எழுத வேண்டியதை அவர் எழுதி விட்டார். நாம் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியது தான் பாக்கி!