Saturday, May 30, 2026

அவரின் அல்காரிதம்…


அவரின் அல்காரிதம்…
கே. பி. ஜனார்த்தனன்
('ஆரண்ய நிவாஸ்' மார்கழி 2023 இதழில்...)
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த மெயிலையே வெறித்தான். அப்பா என்ன இப்படிப் பண்ணிட்டாரு?
பிரக்யா முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்தது அந்தக் கடிதம். ‘... உங்கள் தந்தை ரவிகாந்தன் தன் மெம்பர்ஷிப்பை கான்சல் செய்துவிட்டார். ஆகவே ஆகஸ்ட் ஒன்றிலிருந்து நீங்கள் மாதப் பணம் அனுப்ப வேண்டியதில்லை.’
“சரிதான், பழையபடி இங்கே வரப் போறாரு…” சண்டைக்கு தயாரானாள் ஜமுனா.
“வெய்ட். இங்கே வர்றதானா, கேட்காமல் அங்கே நின்னிருக்க மாட்டாரு.” ஜாக்கிரதையாக ‘உன்னைக் கேட்காமல்’ என்று சொல்வதைத் தவிர்த்தான்.
“போன் பண்ணுங்க… கேளுங்க மானேஜரை.” ஆவல், மாதம் 15000 மிச்சமாவதை கன்ஃபர்ம் செய்ய.
பண்ணினான். ஓனரே போனை எடுத்தார். “ஆமாங்க. நிறுத்திட்டாரு.”
“எங்கே போனாரு?”
“எங்கே போனாரா? அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு. ‘தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்’னு மட்டும் சொல்லச் சொன்னாரு.”
அவனுக்கு நினைவு வந்தது. அப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம். அவன் ஸ்கூல் டேய்ஸிலிருந்தே கேட்டது.
அந்த நாட்கள்… அவரின் டாண் டாண் வாக்கியங்களை அக்கம் பக்கத்தில் வியக்காதவர் இல்லை.
விச்சு மாமா ஒரு பிரச்சினையோடு வந்தது ஞாபகம் வந்தது. ‘மைத்துனன் கடை ஆரம்பிக்கனும்கிறான். அனுபவம் சுத்தமா கிடையாது. காசும்! லோன் போடலாம்கிறான். மேற்கொண்டு கணிசமா ஒரு அமவுண்ட் போட்டா அள்ளிடலாம்கிறான். என்ன கடைன்னு கேட்டால் இப்ப செல்போன் சீசன், அதான்கிறான். ஜங்ஷன், டவுன் ரெண்டு இடத்தில ஓபன் பண்ணலாமாம். என்ன சொன்னாலும் கேட்கிறதா இல்லை… மகள் கல்யாணத்துக்கு வெச்சிருக்கிற சேவிங்ஸ், எப்படி கைவெக்க அதில்?”
சொல்லி முடிக்குமுன் பட்டென்று பதில் வந்தது. “முதல்ல ஒரு இடத்தில கடை ஓபன் பண்ணி ஒரு வருஷம் ப்ராஃபிட் காட்டி லோன் கட்டறதிலும் ஸ்டெடினெஸ் காட்டு, கட்டாயம் உதவறேன்னு சொல்லுங்க. ஒருநாளும் அந்த சந்தர்ப்பம் வராது. தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்.”
அப்ப சொன்ன அதே வாக்கியம்!
சொல்யூஷன் தர்றதில் மட்டிமில்லை, ஏதாச்சும் ப்ளான்னிங் பண்ணணும்னாலும் பக்காவாக… ஆன்மிகம் பத்திக் கேள்விகள் கேட்டால் ரெண்டே ஆப்ஷனில், அதாவது வாயை மூடற அல்லது பிளக்கிற மாதிரி பதில் வரும்.
பட்டு பட்டுன்னு வரும் அந்த பதில்கள்…. ‘தலைக்குள்ள என்னமா ஒரு அல்காரிதம் வெச்சிருக்கார்’னு அவன் ஃப்ரண்ட்ஸே தலையைப் பிய்ச்சுப்பாங்க.
ஆனா வீட்டில் ஓயாமல் சண்டைதான். எப்ப என்ன விஷயம் பண்ணிட்டு வந்து நிற்பார்னு சொல்ல முடியாது. ஒருதடவை ரோட்டோட போயிட்டிருந்த பாரவண்டிக்காரனை வீட்டுக்குள் அழைத்து உட்காரவெச்சு தன் சாப்பாட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்லி… (“என்ன வருண், நான் இனி இவரை பட்டினி போடமுடியுமா, மறுபடி சமைக்கணும்…”)
சொந்தக்காரங்க யாருக்கு என்ன ட்ரபிள்னாலும் முந்திட்டுப் போய் உழைச்சிட்டு வந்து காய்ச்சல்ல படுக்கிறது… இந்த வயசிலே கீபோர்ட் படிக்கணும்னு அடம் பிடிக்கிறது… பூனை வளர்க்கிறது… ராத்திரி போய் மரத்துக்கு அடியில படுத்துக்கறது, அவனுக்கு உதவி செய் இவனுக்கு உதவி செய்னு கெஞ்சறது…
கடைசியில் ஒருநாள் வெடித்தது. அவர் இருக்கட்டும், நான் போறேன் என்றாள் ஜமுனா. அதற்குக் கிடைத்த விடைதான் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தது.
‘நீயாடா?’ ‘என்னையாடா?’ எல்லாம் காற்றில் கரைந்தது. பாசமாவது நேசமாவது. மாசம் ஒன்றரை லட்சம் கொண்டுவரும், கொஞ்சக் கொஞ்சக் கூடிக்கொண்டே செல்லும் அழகை ஆடெட் அட்ராக்‌ஷனாகவும் தரும் ஜமுனாவின் முன் எவாப்ரேட் ஆன வேகம்!
ஆனால் மனசு தவித்தது. கையில காசில்லாம ரோட்டில எங்கே அலையறாரோ… என்ன பண்ணுவார்? நண்பர்கள் உண்டு, ஆனா எத்தனை நாளைக்கு சோறு…. ரோஷக்காரர் வேறு…
* * *
நிர்வாகி என்ற போர்ட் கீழே அமர்ந்திருந்த நபரைக் கைகாட்டினான் செக்யூரிடி. கோபத்துடன் வேகமாக வந்து எதிரில் நின்று செல்போனில் மெயிலை ஓபன் பண்ணிக் கேட்டான், “என்ன இது?”
“அதிலேயே இருக்கே?”
“கொண்டுவந்து சேர்த்த என்னை ஒண்ணும் கேட்காம நீங்களே இப்படிப் பண்ணினா எப்படி?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லே, அவரேதான் முடிவெடுத்தார். சொன்னார். அதைத்தான் மெயில்ல தெரிவிச்சோம்.”
“அவரேயா…” தடுமாறினான். “தெரிவிச்சோமா?”
“ஆமாம் அவரேதான். தன்கிட்ட மிச்சம் மீதி இருக்கிற திறமைக்கு ஏதாச்சும் வேலை கிடைக்காதான்னு யோசித்து… முயற்சி பண்ணினதில் இங்கேயே ஒரு வேலை கிடைச்சது. அந்த வேலையிலிருந்த ஆள் நாலு நாள் லீவு போட்டப்ப ஹெல்புக்கு வந்தவர் அதை இன்னும் அழகா பார்த்துக்கிட்டதை பார்த்து நிர்வாகமே அதை அவருக்குக் கொடுத்திட்டது. அவரும் ஜம்முனு ஏத்துக்கிட்டார். பக்கத்தில ஒரு சின்ன வீட்டை வாடகைக்கும் பார்த்துட்டார். யாரும் தேவையில்லேன்னு தீர்மானிச்சிட்டார்.”
“இது இது… உங்களுக்கே நல்லாருக்கா? சரி சரி, நான் பண்ணினது தப்புத்தான். வாங்கப்பா வீட்டுக்கு.”
“ஸாரி,” என்றார் மானேஜர் ரவிகாந்தன், “தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்.”
><><><



Friday, May 29, 2026

ஏழு கதவுகளை...


செல் போன்கள் டவரின் ஸிக்னலைப் பிடிப்பது போல, நம் உடலின் செல்களும் ஹார்மோன்களை சிக்னல் பிடித்து செல்லுக்குள் இருக்கும் G Protein க்கு அனுப்பும் மாலிக்யூல்களை வைத்திருக்கின்றன. GPCR என்று பேர் (G Protein Coupled Receptor)
அது எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்து சக விஞ்ஞானியுடன் நோபல் பரிசு பெற்றவர் அவர்.
Brian Kobilka.. இன்று பிறந்த நாள். வாழும் விஞ்ஞானியை வாழ்த்துவோம்!
வந்திருக்கும் தயாரிப்பாளரை அளவெடுத்து நடிகருக்கு ஐடியா கொடுக்கும் மேனேஜர் போல இந்த GPCRகள். சூழலை அறிந்து செல் தன்னை அடாப்ட் செய்ய வைப்பவை.
நாம் உபயோகிப்பதில் பாதி மருந்துகளை இந்த வழியில்தான் பிரயோகித்து செல்களை குறிப்பிட்டபடி செயல்பட வைக்கிறார்கள்.
ரெஸப்டர்களை முதலில் ஆராய்ந்ததில் அவை தம்முள் ஏழு கதவுகளை வைத்திருப்பது தெரிந்தது.
அடுத்து இவர் கையில் எடுத்துக் கொண்டது அட்ரினலினை உணர்ந்தறியும் ரெஸப்டரை. (அதாங்க, உணர்வைப் பொறுத்து இதயத்துடிப்பை எகிற வைக்கிறதே அது). அந்த ஹார்மோன் ஒரு ரெஸப்டரைத் தூண்டி சிக்னல் அனுப்புவதை இவர் கையும் கடத்தலுமாக HD லெவலுக்கு படம் பிடித்தார். உபயோகித்தது X Ray Crystallography-யை.
கண்டு பிடித்தது அதன் அமைப்பை. அதை உருவாக்கும் DNA செயினை முழுசாக அளவெடுத்தார். தொடர்ந்து பல ரெஸப்டரின் ஜாதகம் கிடைத்தது.
எங்கே உதவுகிறது இது? பக்க விளைவு இல்லாத மருந்துகள்! குறிப்பிட்ட ரெஸப்டரைக் கண்டு பிடித்து அதை மட்டும் தொடர்பு கொள்ளும் மருந்துகளை உருவாக்க எத்தனை உதவி!
‘Science’ பத்திரிகையில் ‘Breakthrough of the Year Award’ போட்டியில் ரெண்டாவது இடம் பெற்றது இவர் கண்டுபிடிப்பு.

Thursday, May 28, 2026

இத்தனை அழகா..?


Panchayat.’ டி.வி. ட்ராமா தொடர்… (Amazon Prime)
அந்தக் குக் குக்கிராமத்துக்கு பஞ்சாயத்து செகரெட்டரியாக ஹீரோ வந்து சேரும்போது நம் மனதில் காதல், மோதல், காமெடின்னு பல ஒன்லைன்கள் உதிக்க, நடப்பது என்ன? எல்லாம் அமைதியாக, எல்லோரும் அவரவர் ஆக. இயல்பாக எழும் பிரசினைகள்! அழகாக வந்து விழும் முடிச்சுக்கள்! இழையோடும் நகைச்சுவை!
பல ஆயிரம் ‘ஒரே’ படங்களைப் பார்த்துப் பார்த்து பார்முலாக்களை ஏற்றிவிட்டிருக்கிற மனது சற்றுத் துவளுகிறது. சற்றே நேரத்தில், இந்த ‘பார்முலா இல்லாமை’ இத்தனை அழகா என்று வியந்து போகிறோம்!
ஹீரோவுடன் அந்த கிராமத்துக்குள் நுழைந்து ஒவ்வொருத்தரையா சந்திச்சிட்டே வர்றோம். கொஞ்ச நேரத்துல பார்த்தால், அந்தப் பஞ்சாயத்து பிரசிடெண்ட் வீட்டில திண்டில நாமும் உட்கார்ந்து இருக்கிறோம். எப்படி வந்தோம்னே தெரியல. அப்படி ஒரு இயல்பான மூவ்மெண்ட்.
ஹீரோவின் பெர்ஸ்பெக்டிவில் தொடங்கிச் சென்றது, கொஞ்ச நேரத்தில் எல்லாருடைய பார்வையிலும் நகர்கிறது. ஹீரோயின்னு ஒருத்தர் இல்லாம எட்டு எபிசோட்... ஆஹா நாம் காண்பது என்ன எபிசோடா அல்லது எபிக்கா?
எத்தனை இன்னஸண்ட் ஆக இருக்கிறதோ அத்தனை விவரமாக! எத்தனை எளிமையாக இருக்கிறதோ அத்தனை ஆழமாக!
12 சோலார் விளக்கு எங்கே போடணும்ன்னு தீர்மானிச்சாச்சு. 13-வதுக்காகத்தான் இந்த மீட்டிங் என்று ஆரம்பிக்கிறது ஒரு எபிஸோட். ஹீரோவுக்கு படிக்க லைட் வேணும். பஞ்சாயத்து ஆபீஸ் முன்னால் போடச் சொல்ல, பேய் பிடிக்கிற மரத்தின் பக்கத்துல போட்டா ஊரார் பயம் அகன்று வோட்டு குவியுமேன்னு பிரசிடெண்ட் சொல்ல... ஒரே வழி, வேறே வழியில அந்த பயத்தை அகற்றறதுதான்னு ஹீரோ பேயின் பூர்வாங்கத்தை தூர் வாங்கக் கிளம்புவதும் சந்திக்கும் இயல்பான வினோதங்களும் சந்திப்பவர்களின் வினோதமான இயல்புகளும்... கச்சிதமான கதை வட்டம்.
நேர்த்தியா இழை பின்னின பட்டுச் சேலை மாதிரி கதைகள். பாந்தமாப் போட்ட பார்டர் மாதிரி ஊடாடும் காமெடி. அந்தந்த எபிசோடின் மையக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு வார்த்தை, வசனம் வரணுமே? என்னா கவனம்யா!
யாருய்யா அது அந்த பஞ்சாயத்து பிரசிடெண்ட் கணவர்? பாலையாவை பார்வையிலேயும் ரங்காராவை வார்த்தையிலேயும் கொண்டு வருகிறார். நட்புக்கும் குடும்பத்துக்கும் இடையே, பாலிடிக்ஸ்க்கும் நியாயத்துக்கும் இடையே புருவத்தை நெறிப்பது சுவாரசியமாகவும் அழகாகவும் இருக்கிறது.
டௌரி வாங்கமாட்டேன்னு சொல்லும் ஹீரோவை வரனாக்க ஆசை அவருக்கு. அவன் சொல்ற மாதிரி ஒரு லட்சம் ஸாலரி வாங்குவானா? பரிட்சையில தேறணும்னா பிரைய்ன் வேணும்கிறாளே மனைவி? இருக்கா பார்த்துடுவோம்னு கேள்வியைக் கொடுத்து யுவர் டைம் ஸ்டார்ஸ் நவ் சொல்லும் பிரசிடெண்டு புருஷன்! அவர் குழம்பும்போது கூடவே குழம்புகிறோம். தவிக்கும்போதும் கூடவே நாமும்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைக்கிற மாதிரி அந்த கடைசி எபிசோட். ஒண்ணுமே சொல்ல வேண்டாம் அதைப் பத்தி. பார்த்துத்தான் ரசிக்கணும்.
எந்த இடத்திலும் தன்பால் கவனம் ஈர்க்காத கேமரா! அதுதானே நல்ல கேமரா மேனுக்கு இலக்கணம் என்பார் பிரபல காமிராமேன் மார்கஸ் பார்ட்லி?
நாடகத்தனமான நடிப்பு மருந்துக்குக் கூட இல்லையே என்று வருந்துகிறவங்களுக்கு ஆறுதலாத் தேடினால் ரிங்குவின் அம்மா பாத்திரம் மட்டும் ஆங்காங்கே சற்று ஆறுதல் வழங்குகிறது.
அத்தனை விஷயங்களும் மாற்றாத அவன் மனதை மாற்ற வரும் பெண் , ஆமா நாம தேடிக்கொண்டே இருந்த பெண் வருகிறாள்... எப்போ? அது சஸ்பென்ஸ்!
மொத்தத்துல நாம எதைப் பார்த்தெல்லாம் இதுவரை கைதட்டிட்டு, ரசிச்சிட்டு இருந்திருக்கோம்னு நாண வெச்சிடுது. எபிசோட் எட்டையும் பார்த்தபின் பழகிய நிஜ மனிதர்களைப் பிரியும் உணர்வு தோன்றுவது தொடருக்கும் வெற்றி, நமக்கும் திருப்தி என்கிறது.

Wednesday, May 27, 2026

பயங்கரமே நடிப்பாக ...



நடிப்பு பயங்கரமாக இருந்ததுன்னு சொல்லுவாங்க. பயங்கரமே நடிப்பாக இருந்தது அவருக்கு.
1957 இல் ‘The Curse of Frankenstein’ வந்தது. ரசிகர்கள் நெர்வஸ் ஆனார்கள். அவர் பிரபலம் ஆனார். 58 இல் ‘Horror of Dracula’. எல்லாரும் நடுங்கினார்கள். ஸ்டார் ஆனார்.
பிரபல டிராகுலா நடிகர் Christopher Lee… இன்று பிறந்த நாள்!
‘Star Wars’, ‘The Hobbit’ படங்களில் கலக்கியதோடு The Lord of the Rings இலும் வந்தார்.
முதல் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் Dr. No ஆக இவர்தான் நடித்திருக்க வேண்டும். எழுதிய Ian Fleming-ம் (இவருக்கு மச்சான்) விரும்பினாராம். ஆனால் வேறொருவருக்குப் போய்விட்டது. என்றாலும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தார் வில்லனாக. ‘The Man with the Golden Gun.’
இவரது முக்கிய காஸ்ட்யூம்களில் ஒன்று - ரத்தம் ஒழுகும் பற்கள் - ஒரு ஐரிஷ் டெக்னீஷியனால் உருவாக்கப்படுவது.
கின்னஸில் இடம் பெற வைத்தது இவரது உயரம். ஆறடி ஐந்து அங்குலம். மிக உயரமான நடிகர் என்று! ஆரம்பத்தில் சாதாரண பாத்திரங்களில் நடிக்கும்போது அந்த உயரத்தினாலேயே துயரப்பட்டார், கூட நடித்த ஹீரோக்கள் எரிச்சல் பட்டதால்.
70 வருட ஸ்பானில் 230 படங்களில் நடித்தவரின் இன்னொரு ரிகார்ட் என்னவெனில் மிக அதிக காரக்டர்களில் நடித்தவர் என்பது.
ஷெர்லாக் ஹோம்ஸாக நடித்தது விசேஷம் என்றால் அது மட்டுமன்றி மைக்ராஃப்ட் ஹோம்ஸ், ஹென்றி பாஸ்கர்வைல் என்ற கானன் டாயில் கதாபாத்திரங்களாகவும்....
வஞ்சகமில்லா நடிப்பில் பஞ்சமில்லை காயங்களுக்கு! வளைந்தே காணப்படும் விரல், இவர் 1955 இல் எரால் ஃப்ளைனுடன் வாள் சண்டைக் காட்சியில் பட்ட காயம் சொல்லும். ‘The Mummy’ (1959) படத்தில் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு பாய்ந்ததில் கழுத்தில் அடி. போதாததற்கு நடிகையைத் தூக்கிகொண்டு 80 அடிபோல நடந்ததில் தோள்களில் பாதிப்பு.
பத்து படங்களில் டிராகுலாவாக நடித்தவர் 1972ல் அதை நிறுத்தி விட்டார் இனியும் அப்படி நடிப்பதில் அர்த்தமில்லை என்று.
Quotes? ‘நடிப்பு என்பது உள்ளுணர்வு, கற்பனை, கண்டுபிடிப்பு மூன்றும் சேர்ந்தது. வெளியே கற்றுக் கொள்ள முடிவது எல்லாம் வெறும் அடிப்படை டெக்னிக்ஸ் மட்டுமே.’
‘ஹீரோவை போரடிக்காத கேரக்டராக காட்ட நீங்கள் ரொம்பவே சிரமப்பட வேண்டும். ஆனால் வில்லனில் விதவிதமான குணாதிசயங்களைக் காட்டலாம் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்ப.

Sunday, May 24, 2026

குணசித்திர நடிகையாகவும்...


படம்: தெய்வப் பிறவி.
பார்த்திருக்கும் பெண் வீட்டுக்குச் சென்று அவளைச் சந்தித்து வருவார் எஸ் எஸ் ராஜேந்திரன். போன இடத்தில் அவள் காபி எடுத்துத்தர, வெட்கப் போட்டியில் இருவர் தலையும் இடித்துக் கொள்ள..
வீட்டுக்கு வந்ததும் தம்பியை அக்கா பத்மினி விசாரிப்பாள். 'என்ன நெத்தியில வீங்கியிருக்கு?'
'அது வந்து..கேட்டு (gate) இடிச்சிடுச்சு!'
'கேட்டுத்தானே இடிச்சா? கேட்காம இடிக்கலியே?' என்பார் பத்மினி.
அந்தப் பெண்..
எம். என் ராஜம். இன்று பிறந்த நாள்.
1950 படங்களின் தவிர்க்க முடியாத நடிகர் எம். என். நம்பியார் என்றால் நடிகை எம். என் ராஜம்.
தமிழ் படங்களின் முதல் நட்சத்திர வில்லி அவர்தான். ரத்தக் கண்ணீர் காந்தாவை மறக்க முடியுமா?
உச்சரிப்பில் அப்படியொரு தெளிவு! சொல்லழகு மட்டுமல்ல, பல்லழகும்!
குணசித்திர நடிகையாகவும் முத்திரை பதித்தார். அரங்கேற்றம் படத்தில் அரளிக்காயை அரைக்கும்போது அந்த இறுகிய முகபாவம்! அதை மகள் பார்த்துவிட்டதும் அந்த பதைபதைப்பு! எத்தகைய பண்பட்ட நடிகை என்பதை சொல்லும் காட்சி.
பிரேம் நசீரிலிருந்து சிவாஜி வரை எல்லா நாயகர்களுடன்... நம்பியாரிலிருந்து வீரப்பா வரை எல்லா வில்லன்களுடன்... டி ஆர் ராமச்சந்திரனிலிருந்து தங்கவேலு வரை எல்லா காமெடியன்களுடன்… நடித்த ரேஞ்ச் விசாலமானது.
மணந்தவரை முன்பே நம் காதறியும். ஆம், ஏ.எல்.ராகவன்.

Saturday, May 23, 2026

என்னைக் கேளுங்கள்'...


இவர் என் வாழ்வோடு கலந்தவர். கதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தே என் கருத்தையெல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். ‘கல்கண்டு’ படிக்காமல் கண்ணுறங்கியதில்லை. வடக்கே பாபுராவ் படேல் போல இங்கே இவர் ’கேள்வி பதிலு’க்காகவே ('என்னைக் கேளுங்கள்') ஒரு பெரும் வாசக வட்டம்...
சங்கர்லால்! இதை இங்கர்சால் பேரிலிருந்த மதிப்பில் வைத்ததாக அவர் குறிப்பிட்ட ஞாபகம். சங்கர்லால்தான் எங்கள் எல்லாருக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ். சங்கர்லால் மனைவி இந்திரா, டீ (தேனீர் என்றே குறிப்பிடுவார்) போட்டுத்தரும் மாது, உதவிப் பையன் கத்திரிக்காய் என்ற அந்தக் குடும்பமே எல்லாருக்கும் ஃபேவரிட்.
1950 களில் வந்த தொடர். ‘நிழல் மனிதன்’. பயங்கரமான திருடனான நிழல் மனிதனை எப்படியாவது பிடிக்க வேண்டிய ஆகக் கடின அஸைன்மெண்டை பிரபல துப்பறியும் நிபுணர் சங்கர்லாலுக்கு அளிக்கிறார் உதவிப் போலீஸ் கமிஷனர் வஹாப்.
ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த நபரிடம் ஒரு பெரியவர் வந்து, தான் ஒரு திருடன் என்றும் தன்னைப் பிடிக்க போலீஸ் வெளியே நிற்கிறது என்றும் சொல்கிறார்.. நீங்கதான் நிழல் மனிதன்னு எனக்குத் தெரியும், எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க, என்று அவர் கெஞ்ச அவன் பயப்படாதே சொல்கிறான்.
’பேசாமல் என் பின்னால் வா,’ என்றவன் ஒரு அட்டையை எடுத்து அதில் ‘நான்தான் நிழல்மனிதன்’ என்று எழுதி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வாசல் நோக்கி நடக்கிறான். போலீசும் மற்றவர்களும் அசந்து அப்படியே நிற்க, அவர் அவனுடன் நடந்து சென்று காரில் ஏறுகிறார். அடைக்கலமாகும் அந்தப் பெரியவர் அவனுடன் சேர்ந்துகொள்ள அவர்தானே சங்கர்லால் என்று ஆவல் சிந்திக் குவிந்த ஆயிரமாயிரம் கடிதங்கள்!
தமிழ்வாணன்! - சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
திருப்பங்களுடன் தொடர்களை அமைத்துச் செல்வதில், 100 கிராம் சுவாரசியத்துக்கு 150 கிராம் ஆவலை கலந்து கொடுப்பதில் நிகரில்லாதவர்.
கல்கண்டில் 1950களில் ’கண்ணம்மா’ என்றொரு தொடர் எழுதினாரே, அதில் ஒரு அத்தியாயத்தில் ’தொடரும்’ பகுதிக்கான அந்தப் பத்தி இன்னும் என் மனதில் ஒரு அபாரமான எழுத்தாக நிற்கிறது.
சிரமங்களை சந்தித்துவரும் ஏழைச் சிறுமியான கண்ணம்மா அந்த அத்தியாயத்தில் கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பாள். இனி அந்தப் பாரா இப்படி செல்லும்: ‘...என்ன செய்வது என்று யோசித்தபடியே தன் தெருவுக்குள் நுழைந்தாள் கண்ணம்மா. தன் வீட்டுக்கு பக்கத்து வீடு தீப்பிடித்து எரிவதையும் கூச்சலும் பரபரப்புமாக சிலர் ஓடுவதையும்பார்த்தாள். எங்கும் புகை. அருகில் நெருங்க நெருங்கத்தான் எரிவது பக்கத்து வீடு அல்ல தன் வீடு என்று தெரிந்தது அவளுக்கு. (தொடரும்)
கல்கண்டில் முழு எழுத்துக்கும் பொறுப்பேற்ற நேரத்திலும் குமுதத்தில் இவரின் சித்திரக்கதைத் தொடர் வெளியாகி வாராவாரம் கலக்கிற்று. சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிய சிறுவன் வளர்ந்து, மாறுவேடத்தில் வந்து அந்த குடும்பத்துக்கே உதவும்போது அவன் உண்மையை சொல்லவேண்டுமே என்று வாசகர்கள் தவித்த தவிப்பு!
அவர் இயற் பெயரை ஊகிக்க எத்தனையோ வாசகர்கள் முயன்றார்கள். ‘உங்க பெயரைக் கண்டு பிடித்து விட்டேன். ராமசாமி தானே உங்கள் பெயர்? என்ற வாசகருக்கு தமாஷாக பதிலளித்தார்: ‘பாதி சரி..’
திடீரென விகடனில் அறிவிப்பு. ”தமிழ்வாணன் எழுதும் ’மணிமொழி நீ என்னை மறந்துவிடு!’ தொடர்கதை ஆரம்பம்..." பெற்ற வரவேற்பு கலக்கிற்று. மாயா ஓவியம் மனதில் இன்னும்!
எழுதாத ஜானர் இல்லை. இறங்காத துறை இல்லை. 'காதலிக்க வாங்க!' அவர் எடுத்த படம்தான்.
அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணிய 'இன்சுவை' 'தமிழ் பல்பொடி' எல்லாம் ஏக பாப்புலர் அப்போது...
தமிழ்வாணன்... மே 22. பிறந்த நாள்.

Wednesday, May 20, 2026

அதே ஜன்னல் ஓரம்...


விபத்தில் அடிபட்டு தன் ஒரு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு வீல் சேரில் நாளை ஓட்டுகிறார் போட்டோகிராபர் ஜெஃப். அவ்வப்போது வந்து பார்க்கும் காதலியும் நர்சும்... நேரம் போகணுமே? அபார்ட்மெண்ட் ஜன்னலோரம் பைனாகுலரில் எதிர் ஜன்னல்களில் மற்றவர்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு உதிக்கிறது ஒரு விபரீத சந்தேகம். இடி மழையின் இடையே கேட்டதே ஒரு சின்ன அலறல், என்ன அது? நோயாளி மனைவியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரன், தோர்வால்ட், நீளக் கத்தி ஒன்றை கழுவுகிறானே ஏன்? ஒரு பெரிய ட்ரங்கு பெட்டியை வீட்டிலிருந்து அவன் நகர்த்துவது எதற்காக இருக்கும்? சத்தமில்லாமல் மனைவியை காலி பண்ணி விட்டான் என்று சந்தேகம்! துப்பறியும் நண்பனிடம் சொன்னால், விசாரித்து, அவள் ஊருக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது என்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர் நாயை யாரோ கொன்றுவிட ஜெஃப்புக்கு மட்டும் சந்தேகமே இல்லை அது அவன் தான் என்று. ‘உடலை புதைத்த இடத்தை நாய் தோண்ட ஆரம்பித்திருக்கும், அதான்!’ பொய்யாக ஒரு போன் கால் கொடுத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார். அந்த நேரத்தில் காதலி சுவர் ஏறி குதித்து அவன் வீட்டில் நுழைந்து ஆராய்கையில் அவன் வந்துவிடுகிறான். காதலியை காப்பாற்றணுமே? வேறு வழியின்றி போலீஸுக்கு போன் செய்கிறார் ஜெஃப். அவர்கள் வந்து அவளைப் பிடிக்க, விரல்களைப் பின்புறமாக வைத்து ஜெஃப்புக்கு சைகை காட்டுகிறாள் காதலி. விரலில் தோர்வால்டின் மனைவியின் கல்யாண மோதிரம். பார்த்துவிடுகிறான் தோர்வால்ட் இவர் பார்ப்பதை.
அடுத்து என்ன? ஜெஃப்பைத் தீர்த்துக்கட்ட இரவில் அவர் வீட்டில் நுழைகிறான் அவன். தன் காமிராவின் ஃபிளாஷ்களை அவன் முகத்தில் அடித்துத் தப்ப முயல்கிறார் வீல் சேர் ஜெஃப். முடியவில்லை. தள்ளி விடுகிறான் அவரை ஜன்னல் வழியே. சரியாக போலீஸ் வந்து சேர, மாட்டிக் கொள்கிறான். கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறான்.
கடைசி காட்சி: அதே ஜன்னல் ஓரம். அதே வீல்சேரில் ஜேம்ஸ். ‘இரண்டு காலிலும்’ கட்டுப் போட்டுக் கொண்டு!
ஹிட்ச்காக்கின் பிரபல ‘Rear Window’’வில் ஜெஃப் ஆக வந்து, அந்த வீல் செயரில் நம்மையும் நகர வைத்தவர்...
James Stewart.. இன்று பிறந்த நாள்!
ஒரு மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 36 மில்லியன் குவித்தது. (ஏன் எல்லோரும் சினிமா எடுக்க ஓடுகிறார்கள் என்று புரிகிறதா?)
‘பின் ஜன்னல்' தவிர இவர் பின்னியெடுத்த படம், ‘என்னவொரு அற்புதம், வாழ்க்கை!’ (‘What A Wonderful Life’) துடிப்பான நடிப்பு!
ஹிட்ச்காக்கின் ‘Vertigo’விலும் ஹீரோ இவரே. உயரம் என்றால் துயரம் அவருக்கு அதில். ‘Rope’ என்ற ஒரே ஷாட் ஹிட்ச்காக் படத்திலும்!
கையில் அடுத்த வேலைக்கான கட்டிடக் கலை டிகிரியை வைத்திருந்தவர், ஆரம்பத்தில் கலக்கியது கௌபாய் படங்களில். ஒரே தொப்பியுடன் என்பது விசேஷம்.
1934 இல் ‘Art Trouble’ முதல் படத்தில் நடித்தபோது டைட்டிலில் பெயர் வரவில்லை. ஆனால் 32 வயதில் ஆஸ்கார் வாங்கி விட்டார். ‘The Philadelphia Story’ க்காக வாங்கிய அந்த ஆஸ்காரை அப்பாவின் இரும்பு கடையில் பார்க்க வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர். அப்போது இவர் பிரபல நடிகர். அழைப்பு வரவே, குறைந்த 5 பவுண்டை நிறைய சாப்பிட்டு சரியாக்கிவிட்டு ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அப்படி என்ன எழுதினாரோ தெரியவில்லை, அப்பா அப்போது கொடுத்த கடிதத்தை தப்பாமல் பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கடைசிவரை. பிரிகேடியர் ஜெனரல் ஆன ஒரே நடிகர்!
திலீப் குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் இவருக்கு அளித்தது 50 திரை சாதனையாளர்களின் மூன்றாவது ரேங்க் என்றால், பிரிமியம் மேகஸின் அளித்தது மாபெரும் நடிகர்களில் ஒன்பதாவது இடம்.
Quote?
‘I don't act, I react….பாத்திரங்களுக்கு உள்ளேபோய் குழப்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை நான். கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நான் ஆகவே எல்லா படத்திலும் வருகிறேன்!’

Monday, May 18, 2026

உலகின் தலை சிறந்த ...


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.
செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946)
தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்...
Frank Capra… இன்று பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய, ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி. போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.

சின்னஞ்சிறு கிளியே...


“சின்னஞ்சிறு கிளியே.. கண்ணம்மா.. செல்வக் களஞ்சியமே…”
பாரதியாரின் அந்தப் பாடலுக்கு அதைவிடச் சிறந்த இசையை யாரும் அளிக்க முடியாது. ராகமாலிகையில் அமைந்த அந்தப் பாடலில் ஒன்றிலிருந்து அடுத்ததற்கு ராகம் மாறும் அழகே அழகு! அந்த காலத்து பாடல்களின் ஆகச் சிறந்த பாடல்களில் ஒன்றானது அது. (‘மணமகள்')
தந்தவர் இசை மேதை சி. ஆர். சுப்பாராமன்… இன்று பிறந்தநாள்.
மூன்று கட்டங்களாக மேலெடுத்துச் செல்லப்பட்ட தமிழ்த் திரையிசையின் முதலாவதில் முக்கியமானவர்.
ராஜேஸ்வரராவ் வர முடியாததால் எச்.எம்.வி. இவரை அழைத்து செஞ்ச படம் ‘செஞ்சு லஷ்மி’. முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்து விட்டார். இசையமைத்த பத்து வருடத்தில் புரிந்த சாதனை சொல்லப் பத்தாது.
மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த தேவதாஸ் பாடல்கள்:
“உலகே மாயம்.. வாழ்வே மாயம்..”
“துணிந்த பின் மனமே..”
“ஓ.. ஓ.. தேவதாஸ்..” அழியாப் புகழை அளித்தன அவருக்கு.
‘லைலா மஜ்னு’, ‘காதல்' ‘சண்டிராணி’ என்று பானுமதி தயாரித்த படங்களுக்கும் வரிசையாக இசையமைத்தவர் தானும் ஒருவரானார் ‘தேவதாஸ்' படத்தில்.
சுண்டி இழுக்கும் பார்வையுடன் ஒய்யாரமாக மரத்தில் சாய்ந்தபடி பானுமதி நிற்க என். டி. ராமராவ் ஸ்டைலாகப் பாடுவாரே…“வான்மீதிலே.. இன்பத் தேனாறு பெய்யுதே..” (‘சண்டிராணி')
வயலின் வாசிக்க வந்த அந்த இளைஞரின் திறமையைப் பார்த்து தன் அசிஸ்டண்டாக்கிக் கொண்டார்: டி.கே.ராமமூர்த்தி. மற்றொரு அசிஸ்டண்ட் ஆனவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எம்.எல்.வசந்தகுமாரியை அறிமுகப்படுத்திய இவர் கண்டசாலாவை தமிழுக்கு அழைத்து வந்தார்.
ஆரோக்கியம் மட்டும் இருந்திருந்தால் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி பல பத்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் இசையமைப்பாளராகத் திகழ்ந்திருப்பார்.. தன் 36 வது வயதில் உலகை..
அன்பர்கள் அறிந்ததே: இசையமைப்பாளர் சங்கர் (சங்கர் கணேஷ்) இவரது தம்பி.

Saturday, May 16, 2026

ஜம்மென்று ஒலிக்கும் அந்தக் குரல்...

“ஓ.. தேவதாஸ்..” என்று 17 வயது சாவித்திரி பாடிக்கொண்டே வரும்போது கூடவே நுழைந்த 15 வயது குரல் இவருடையது. அதற்கு முன்பே 7 வயதிலேயே ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் பாட ஆரம்பித்திருந்தார்.
ஜமுனா ராணி... ஜம்முனு ஒலிக்கும் அந்தக் குரல்... இன்று பிறந்தநாள்!
இந்த வயலின் குரலுக்கு சொந்தக்காரரின் அம்மா ஓர் வயலினிஸ்ட். தந்தை ஆபீஸர் தனியார் நிறுவனத்தில். கிட்டத்தட்ட 6000 பாடல்கள். 1950, 60 களில் அனைத்து இசையமைப்பாளர்கள் பாடல்களிலும்..
முத்திரை பதித்த முதல் பெரிய ஹிட் ‘குலேபகாவலி’யில். கெஞ்சலும் கொஞ்சலுமாக அந்தப் பாட்டு! “ஆசையும்… (விக்கல்) என் நேசமும்..” அந்த அட்டகாசமான பாடலை இந்திப் பதிப்பிலும் அதே அழகுடன் பாடியிருந்தார். (“Aaj Tu In Nainan…”) இப்போது கேட்டாலும் குரலின் வசீகரம் தனியே தெரியும்.
அதே ராஜ சுலோசனா “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா.. பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா!” என்று ‘ஆசை’ படத்தில் அழகாய் ஆடிக்கொண்டே வருவதும் இவர் பாட்டு தான்.
நீங்கள் "பாட்டொன்று கேட்டு பரவசமானால்..." அது அனேகமாக ‘பாசமலரி’ல் இவர் பாடியதாக இருக்கும்.
'அன்பு எங்கே’யில் “பூவில் வண்டு போதை கொண்டு தாவு”வது இவர் குரலினிமையாலும் இருக்கலாம். ‘மாலையிட்ட மங்கை’யில் பாடிய “செந்தமிழ் தேன்மொழியாள்..” நீண்ட காலத்துக்கு அந்தத் தேன்மொழியை நினவில் வைத்திருந்தோம்.
மூன்று பாடகிகள் பாடும் “யாரடி நீ மோகினி” பாடலில் இவர் குரல் தன் தனித்தன்மையால் கவரும். “தேன் வேணுமா? நான் வேணுமா?”

‘கவலை இல்லாத மனிதனி'ல் இவரது “காட்டில் மரம் உறங்கும்..” கானத்தில் மனம் கிறங்கும்.
‘ராணி சம்யுக்தா’ வில் உருக்கமாகப் பாடினார் ஒரு பாடல்: “சித்திரத்தில் பெண்ணெழுதி..” கேட்டால் மறக்க முடியாதது.
லிஸ்டில் டாப் சாங் திக்கனைத்தும் ஒலித்த “மாமா.. மாமா.. மாமா..”தான்.(‘குமுதம்') “சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி..” சூபர் ஹிட்! தெலுங்கிலும்!
சந்திரபாபுவுடன் இவர் டூயட்கள் தனி களை கட்டும். “குங்குமப் பூவே…”யானாலும் சரி, "தடுக்காதே.."யானாலும் சரி! ‘பாண்டித் தேவன்’ படத்தில் ச.பாபுவுடன் "நீயாடினால்..." பாடலில் அந்த பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை இவர் பாடும் அழகு இருக்கிறதே..
“சீமான்கள் கொண்டாடும் மேடை..
செண்டாலே காற்றெங்கும் வாடை...
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை..."
நாயகன் நாயகி டூயட்டுகளில் ஞாபகம் அகல மறுப்பவை.. மனதை உருக்கும் ‘மன்னாதி மன்னன்’ பாட்டு! “நீயோ நானோ யார் நிலவே?” ‘செல்வம்’: “எனக்காகவா.. நான் உனக்காகவா?” ‘கொடுத்து வைத்தவள்’: “பாலாற்றில் சேலாடுது..”
‘அத்திக்காய்..’ பாடலில் “ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்..” என்று இவர் எண்ட்ரி ஆவது நினைவிருக்கா? அதோடு “ஆதிமனிதன் காதலுக்குப் பின்..”
நீண்ட இடைவெளிக்குப் பின் “நான் சிரித்தால் தீபாவளி..” என்று மறுபடியும் அவர் பாட்டொன்று கேட்ட பரவசத்தைத் தந்தார்.

அவர் சம்மதித்தால்...


‘For Your Eyes Only’(James Bond) படத்தில் நடித்துக் கொண்டிருந்த மனைவி Cassandra Harris ஐப் பார்க்க செட்டுக்கு வந்தார் அந்த நடிகர். 'அவர் சம்மதிச்சா என் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் அவர்தான்,' என்றாராம் அதன் தயாரிப்பாளர் Albert Broccoli.
அந்த நடிகர் Pierce Brosnan. இன்று பிறந்தநாள்!
ஆனால் நடிகர் விரும்பியும் அது கைகூடவில்லை அப்போது. 'The Living Daylights' -இல் நடிக்க முடியாது போயிற்று, பிரபல ‘Remington Steele’ சீரியலில் காண்ட்ராக்டில் நடித்துக் கொண்டிருந்ததால்! இவரைவிட வருந்தியது இவர் மனைவி.
1995. 'Golden Eye'-இல் தொடங்கி நச்சென்று நாலு படம். 'Tomorrow Never Dies', 'The World is not Enough', 'Die Another Day'.
Sean Connery க்குப் பின் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ஒரு தனி ஸ்டைலை கொடுத்த நடிகர் இவர்தான் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிடித்த பாண்ட் நடிகரும் கானரிதான். அதனால் ரோல் நல்ல சவாலாக இருந்ததாம்.
வாயின் வலது மேல் ஓரமாக வடு ஒன்று இருக்கும். புண்ணியம் கட்டிக் கொண்டது 'Tomorrow Never Dies' படத்தின் சண்டைக் காட்சி!
உலகின் 50 அழகிய மனிதர்களில் ஒருவராக People’s Magazine தேர்ந்தெடுத்தது இவரை. (1991).
‘நான் முதன் முதலில் பார்த்த படமே ஜேம்ஸ்பாண்ட் படம்தான்!’ என்கிறார். 'Goldfinger'. நடிகராக வேண்டும் என்ற ஆசையைத் துளிர்க்க விட்டதும் அந்தப் படம்தான். அப்பா பிரிந்து சென்று விட்டதால் அதீத அன்புடன் அம்மாவால் வளர்க்கப் பட்டவர். பதினொரு வயதிலேயே ஆறடி உயரம்.
தவிர, ஜேம்ஸ் அல்லாமலும் ரசிகர்களுடன் பாண்ட் ஏற்படுத்திக்கொண்ட வெற்றிப் படங்கள் நிறைய! ‘Dante’s Peak’, ‘The Thomas Crown Affair,’ பிரபல Roman Polanski யின் ‘The Ghost Writer.’ அப்புறம் 2017 இல் The Foreigner. (Jackie Chan உடன்) மிகப் பிடித்திருந்ததாம் 'Mrs. Doubtfire' இல் நடித்தது.
Quote? ‘வெற்றியை விரும்பினேன் அதற்காக உழைத்தேன் கொஞ்சம் திறமை இருந்தது. தீட்டிக் கொண்டேன். அதிர்ஷ்டமும் சேர்ந்துகொண்டது.’

Friday, May 15, 2026

பாட்டுக்கு பல ராகம்..


இவர்களின் வருகைக்குப் பிறகுதான் தமிழ் திரை ரசிகர்கள் இசையமைப்பாளரை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள் எனலாம்.
மூன்று நிமிட பாடலின் ஒவ்வொரு வினாடியையும் அலங்கரித்தார்கள். Orchestration -ஐ வேறு லெவலுக்கு எடுத்துப் போனார்கள்.
பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பாசமலர், பார்த்தால் பசி தீரும், ஆலயமணி, பாசம், நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், காதலிக்க நேரமில்லை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, ஆயிரத்தில் ஒருவன், எங்கவீட்டுப்பிள்ளை, புதிய பறவை... திக்குமுக்காடி போனோம் தேன் பலாச்சுளை விருந்தில்!
மெல்லிசை மன்னர்கள்...
T. K. ராமமூர்த்தி. இன்று பிறந்த நாள்!
அப்பாவும் சரி தாத்தாவும் சரி திருச்சியில் பிரபல வயலினிஸ்ட். 14 வயதிலேயே இவரின் திறமையைப் பார்த்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார் இசை மேதை சி ஆர் சுப்பாராமன். மீதிக்கதை திரையறியும்.
இணைந்தளித்த பாடல்களை சொல்லலாமென்றால் இடம் எங்கே இருக்கிறது?
“தன்னந்தனியாக நான் வந்த போது..” இந்தப் பாடல் காதில் வந்தது 'சங்கமம்' படத்தில். கூடவே “ஒரு பாட்டுக்கு பல ராகம்..”
மறக்க முடியாத பாட்டு ஒன்றைத் தந்தார், ‘மறக்க முடியுமா?’ படத்தில். “காகித ஓடம்.. கடலலை மேலே.. போவது போலே.. மூவரும் போவோம்!” மூவருமா? நாமும்தான், அந்த இசையோடு இசைவோடு!
அத்தனை பாடல்களுமே அருமையாக இருந்தது ‘நான்’ படத்தில்....அந்த அசத்தல் "அம்மனோ சாமியோ..." ஒவ்வொன்றாய்ச் சொல்வதற்குப் "போதுமோ இந்த இடம்.."?
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்தது" போல் வந்தன பாடல்கள் ‘தங்கச் சுரங்கத்தி’ல்.
“காதலன் வந்தான்.. கண்வழி சென்றான்.. கண்களை மூடு.. பைங்கிளியே..” மெல்ல மெல்ல இன்னும் இன்னும் இறங்கிக் கொண்டே போகும் இனிமை -‘மூன்றெழுத்து’
“விழியால் காதல் கடிதம்.. வரைந்தாள் ஆசை அமுதம்..” (தேன்மழை), “எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன மோகமோ?” (மதராஸ் டு பாண்டிச்சேரி), “நாடகமே இந்த உலகம்.. ஆடுவதோ பொம்மலாட்டம்..” (சாது மிரண்டால்), “நிச்சயம் நானே.. நேச்சுரல் பியூட்டி..” (சோப்பு சீப்பு கண்ணாடி.) ‘’உன் மேலே கொண்ட ஆசை.. உத்தமியே மெத்த உண்டு..” (காதல் ஜோதி) “கோயில் என்பதும் ஆலயமே.. குடும்பம் என்பதும் ஆலயமே..” (ஆலயம்)...
கர்நாடக இசையை இவர் கையிலெடுத்தால் அதைவிட இனிய "வசந்த காலம் வருமோ...?" ('மறக்க முடியுமா.')
“சாட்டைக் கையில் கொண்டு, ஓங்கக் கண்டு, காளை ரெண்டு, ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு, எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு, ஓடுறா ராஜா, ஓடுறா ராஜா, ஓடுறா, ஓடுறா, ஓடுறா ராஜா…” என்ற பல்லவியை ஒரே மூச்சில் ஒரே வீச்சில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவாரே, ரவிச்சந்திரன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வரும் பாடலை? அது ‘காதல் ஜோதி’யில் இவரின் சொடுக்கும் இசையில்...
இவரது பின்னணி இசையின் முழு வீச்சையும் ‘தங்கச் சுரங்கம்’ படத்தில் கேட்கலாம். வில்லனை (தன் தந்தை) பிடிக்கப்போய் ஏமாந்து திரும்பும் சிவாஜி வீட்டுக்குள் நுழையும் போது சந்தேகம் கண்ணில் கொப்பளிக்க, தாயை சந்திக்கும் காட்சியில் ஒரு உச்சகட்ட பின்னணி இசையை வயலின்களால் இழைத்திருப்பார். காமிராவும் அந்த இசையும் சிவாஜியின் புருவங்களும் சுழன்று சுழன்று மேலெழும்பும் ஆக்ரோஷம்!
“கண் போன போக்கிலே கால் போகலாமா..” (பணம் படைத்தவன்) பாடலில் அமைத்திருக்கும் அந்த அற்புத வயலின் இசைக்கோர்ப்பை இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக சொல்வார்கள்.

Tuesday, May 12, 2026

வயிறு குலு சிரிப்’ படம்...


தான் பூட்டிக்கொண்டிருக்கும் டினோஸர் எலும்புக்கூட்டைப் பூர்த்தியாக்கத் தேவைப்படும் ஒரே ஒரு எலும்புத் துண்டுக்காக அலைந்து கொண்டிருக்கும் புதைபடிவ ஆய்வாளர் டேவிட் (Cary Grant). தங்கள் மியூசியத்திற்கு ஃபண்ட் வாங்க அவன் எலிசபெத் என்ற பணக்காரியின் வக்கீலை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.
அவரை சந்திக்கப்போன இடத்தில் குறுக்கிட்டுத் தொந்தரவு செய்த சூஸனோடு (Katharine Hepburn) சண்டைகள்.
மனசில் காதல் இருந்தால் அதை இப்படி சண்டை போட்டு வெளிப்படுத்துவார்கள் என்று ஒரு சைக்கியாட்ரிஸ்ட் அவளுக்கு சொல்ல, அவள் அதை காதல் என்று எடுத்துக் கொண்டு விடுகிறாள். தன் அத்தைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி ‘பேபி’யைப் பார்த்துக்க அவன் ஹெல்பைக் கேட்கிறாள்.
வந்தவனை நைசாக அழைத்துக்கொண்டு தன் அத்தையின் பண்ணை வீட்டுக்குப் போகிறாள். அவன் தன்னை விட்டுப் போய் விடாமல் இருக்க, அவன் குளிக்கும்போது டிரஸ்ஸை எடுத்து லாண்டரிக்கு அனுப்பி வைக்கிற அளவுக்கு போய்விடுகிறாள். ஊரிலிருந்து அத்தை, அட அவள்தான் அந்த எலிசபெத் என்ற பணக்காரி! வந்து பார்க்கும்போது இவன் அவளின் கவுனுடன்! என்ன ஒரு இம்பிரஷன்!
தேடியலைந்த கடைசித் துண்டு டினோசர் எலும்பு கிடைக்கிறது அவனுக்கு. ஆனால் அத்தை வளர்க்கிற நாய் அதை லவட்டிக் கொண்டு போய் எங்கோ புதைத்து விடுகிறது. சிரத்தையுடன் அதை தாஜா பண்ணி, ஒளித்து வைத்த இடம் தேடுவதற்குள் சிறுத்தையுடன் அது எங்கோ ஓடிவிடுகிறது.
காணாமல் போன பேபியைத் தேடி அலையும் ஜோடி... ஊரில் முகாமிட்டிருக்கும் சர்க்கஸ் கம்பெனியின் சிறுத்தை குட்டியை பேபி என்று நினைத்து கூட்டைத் திறந்து விட்டுவிட, ரெண்டு பேரும் ஜெயிலில்.
ஆக அந்த ஒரு நாள் அமர்க்களத்தில் டேவிட்டுக்கு அவள்மேல் காதல் வந்துவிடுகிறது…
‘Bringing up Baby'.... டைரக்டர் Howard Hawks -இன் காமெடி கிளாஸிக்...
சீரியஸ் ரோல்களில் நடிக்கும் Katharine Hepburn கலக்கிய ‘வயிறு குலு சிரிப்’ படம். இன்று அவர் பிறந்த நாள்!
தொடர் ஆக் ஷன் காமெடியாக இப்படித் துள்ளிக் குதித்துச் செல்லும் படம். கேரி க்ராண்ட் கிட்டத்தட்ட டி ஆர் ராமச்சந்திரன் மாதிரி அசடு வழிய, கேதரின் பின்னே கேட்கவே வேண்டாம், சாவித்திரி மாதிரி சளைக்காமல் அசர வைப்பார்...