Monday, May 18, 2026

சின்னஞ்சிறு கிளியே...


“சின்னஞ்சிறு கிளியே.. கண்ணம்மா.. செல்வக் களஞ்சியமே…”
பாரதியாரின் அந்தப் பாடலுக்கு அதைவிடச் சிறந்த இசையை யாரும் அளிக்க முடியாது. ராகமாலிகையில் அமைந்த அந்தப் பாடலில் ஒன்றிலிருந்து அடுத்ததற்கு ராகம் மாறும் அழகே அழகு! அந்த காலத்து பாடல்களின் ஆகச் சிறந்த பாடல்களில் ஒன்றானது அது. (‘மணமகள்')
தந்தவர் இசை மேதை சி. ஆர். சுப்பாராமன்… இன்று பிறந்தநாள்.
மூன்று கட்டங்களாக மேலெடுத்துச் செல்லப்பட்ட தமிழ்த் திரையிசையின் முதலாவதில் முக்கியமானவர்.
ராஜேஸ்வரராவ் வர முடியாததால் எச்.எம்.வி. இவரை அழைத்து செஞ்ச படம் ‘செஞ்சு லஷ்மி’. முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்து விட்டார். இசையமைத்த பத்து வருடத்தில் புரிந்த சாதனை சொல்லப் பத்தாது.
மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த தேவதாஸ் பாடல்கள்:
“உலகே மாயம்.. வாழ்வே மாயம்..”
“துணிந்த பின் மனமே..”
“ஓ.. ஓ.. தேவதாஸ்..” அழியாப் புகழை அளித்தன அவருக்கு.
‘லைலா மஜ்னு’, ‘காதல்' ‘சண்டிராணி’ என்று பானுமதி தயாரித்த படங்களுக்கும் வரிசையாக இசையமைத்தவர் தானும் ஒருவரானார் ‘தேவதாஸ்' படத்தில்.
சுண்டி இழுக்கும் பார்வையுடன் ஒய்யாரமாக மரத்தில் சாய்ந்தபடி பானுமதி நிற்க என். டி. ராமராவ் ஸ்டைலாகப் பாடுவாரே…“வான்மீதிலே.. இன்பத் தேனாறு பெய்யுதே..” (‘சண்டிராணி')
வயலின் வாசிக்க வந்த அந்த இளைஞரின் திறமையைப் பார்த்து தன் அசிஸ்டண்டாக்கிக் கொண்டார்: டி.கே.ராமமூர்த்தி. மற்றொரு அசிஸ்டண்ட் ஆனவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எம்.எல்.வசந்தகுமாரியை அறிமுகப்படுத்திய இவர் கண்டசாலாவை தமிழுக்கு அழைத்து வந்தார்.
ஆரோக்கியம் மட்டும் இருந்திருந்தால் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி பல பத்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் இசையமைப்பாளராகத் திகழ்ந்திருப்பார்.. தன் 36 வது வயதில் உலகை..
அன்பர்கள் அறிந்ததே: இசையமைப்பாளர் சங்கர் (சங்கர் கணேஷ்) இவரது தம்பி.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!