Sunday, November 20, 2011

நாயகி



''ஸாரி சுமி, இன்னிக்கு ஆபீசில லேட் ஆயிட்டுது.  இன்னிக்கு சினிமாவுக்குப் போக முடியாது போல இருக்கு...'' என்றபடியே வந்தான் சேகர்.


''இது உங்களுக்கே நல்லாயிருக்கா? தவறாம ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி ரெடியா இருன்னு சொல்ல வேண்டியது. அப்புறம் லேட்டாயிடுச்சு, வா, அப்படியே பக்கத்துல பீச்சுக்குப் போயிட்டு வரலாம்னு சமாளிக்கிறது.... அப்புறம் இந்த போலி அழைப்பெல்லாம் தேவையா?'' படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.

ஒரு நிமிடம் பரிதாபமாக விழித்தான் அவன்.

''சரி, உண்மையான காரணத்தை சொல்லிடறேன். 'சினிமாவுக்குப் புறப்பட்டு இரு'ன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சிட்டு இருப்பே.  பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்.  ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி அழகு படுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''

''ஒரு நிமிஷம் இருங்க, இதோ புறப்பட்டு வர்றேன், பீச்சுக்கே போகலாம்!'' என்றாள் அவள்.

(குமுதம் 9 -4 -2008 இதழில் வெளியானது.)

Monday, November 14, 2011

அது வரை மட்டும்!


அது வரை மட்டும் 

எங்கோ ஒரு அசைவு
ஏதோ ஒரு சொல்
என்னுள் ஓர்  எழுச்சியை
ஏற்படுத்துகிறது சட்டென்று!
அதைத்தேடி நான்
அலைகிறேன், தவிக்கிறேன்...
அது வரை என் துக்கத்தை 
அடக்கிக் கொள்ள முடிந்தால் 
அதுவே போதும்!





இத்தனை தானா?

எப்படியோ மறு நாள்
சமாதானமாகி விடுகிறது
மனம்.
அல்லது அதற்கு மறு நாள்.
ஆனால் முதல் நாள்
அது படுத்தும் பாடு!
ஏற்றுக்கொள்ள
படும் சிரமமோ அது?
ஏற்றுக் கொண்டபின்
தோன்றுகிறது:
'இத்தனை தானா இது?'


Friday, November 4, 2011

நலம் வாழ...


டுத்த வாரம் பிறந்த நாள் மைதிலிக்கு.  என்ன பரிசு வாங்குவது என் இனிய மனைவிக்கு?  மண்டையை உடைத்துக் கொண்டேன்.

வாட்ச்? ஏற்கெனவே ரெண்டு இருக்கு. செல் போன்? காமிரா? எல்லாமே இருக்கு.  இருக்கிற வசதிக்கு எது  வாங்கிக் கொடுத்தாலும் அசர வைக்காது மைதிலியை.

புதுசா, உருப்படியா, மறக்க முடியாததாக...

அவள் ஷெல்ஃபைக் குடைந்தேன்.  ஆ, கிடைத்தது ஐடியா!

பிறந்த நாள் அன்று...

வாசலில் பைக் வந்து நிற்க, ''அய் வசந்தி! பார்த்து எத்தனை வருஷமாச்சு! எப்படிக் கண்டு பிடிச்சே என் அட்ரசை?  பிறந்த நாளும் அதுவுமா டாண்ணு வந்து நிற்கிறியே!  என்னங்க, இவள் தான் ஹைஸ்கூலில் என் டியர் சிநேகிதி.  அப்புறம் சந்திக்கவே முடியலே...''  சந்தோஷத்தில் பரபரத்தாள் இவள்.

''நான் எங்கே கண்டு பிடிச்சேன்? எல்லாம் உன் கணவர் ஏற்பாடு தான்!'' என்றாள் வசந்தி.

என் பக்கம் திரும்பினாள் மைதிலி. ''மறக்க முடியாத பரிசுதான்!''

('குமுதம்' 11-06-2008 இதழில் வெளியானது )