Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, June 20, 2021

தந்தையர் தினம்...

 


அப்பா...

அப்பாடா என்று நாம் வாழ்க்கையில்

அமருகிற வரைக்கும் ஓயாதவர்.

><><

தந்தையர் தினம்...

போற்றப் படுவதில்லை வெகுவாக,

ஆயினும் உணரப்படுகிறார்...


எப்போதும் வருவதில்லை,

எனினும் தோன்றி விடுகிறார்.

சரியான தருணங்களில்...


அடுக்கடுக்காய் அறிவுரைதான்,

அவசியம் பிற்பாடுதான் தெரிகிறது...


அவரால் முடியவில்லை,

அவ்வப்போது மனதைத் தொட.

ஆனால் செய்தவை அறிய வரும்போது 

ஆக்கிரமித்துக் கொள்கிறார் மனதை.

><><


அப்பாவைவிட அம்மாவை

பிள்ளைகளுக்குப் பிடிக்கும்.

அப்பாவை ஏமாற்ற முடியாது.

அம்மா ஏமாறுவதுபோல

நடிப்பது தெரியாது.


><><


அப்பாவின் செருப்பு

ஒருநாளும் தேய்வதில்லை.

அவர் நடக்கிற தூரமோ

ஐந்தாறு கிலோமீட்டர் அனுதினமும்.

ஆனாலும் தேயாத மாயம்

அகப்படவேயில்லை

அவர் இறக்கும் வரையில்.

வந்திருந்த யாரோ சொன்னார்கள்

’அன்பான மனைவியும்

அருமையான பிள்ளைகளும்

வாய்த்ததில் அவருக்குத்

தரையில் கால் பாவவில்லை.’


><><


Saturday, November 24, 2018

அதுவாகவே... (கவிதைகள்)

அதுவாகத் தோன்றும் ஒரு வரி.
(அதுவரை காத்திரு)
அதைத் தொடர்ந்து போ.
புதிதாகத் தோன்றும் ஒரு எண்ணம்.
பொறுத்திரு.
மெதுவாக வந்து சேரும் வார்த்தைகள்.
செம்மைப் படுத்திட...
சுவையாகத் தெரிந்தாலும்
மெதுவாக நிறுத்தி இனி
படிப்பவரிடம் விடு.
><><><


அமைதியைத் தேடி  
ஆயிரமாயிரம் தூரம் கடந்து
அமைதியுற்றது மனம் 
தன்னைக் கண்டு கொண்டு.

><><><

ஓய்ந்துவிட்டன நினைவுகள்,
அவை எழுப்பிய 
ஓசைகள் அடங்கவில்லை 
இன்னும்...
><><


மனம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது..
மனம் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறது..
><><


காற்றில் கலந்திருந்த
காலை மலரின் வாசத்தை
நுகர்ந்து மகிழ்ந்த மனம்
நாளைத் தொடங்குகிறது
நாவில் பாடலுடன்.
><><


தேங்கிக் கிடக்கும் குட்டையின் தெளிந்த நீரில்
ஓங்கித் தெறித்த கதிரொளிச் சிதறல்கள்
ஆங்காங்கே வளர் கரையோர நாணல்களின்
ஆடும் இலைகளில் விழுந்தும் விழாமலும் 
காட்டிடும் ஜாலமோ அவன் தரும் காட்சி!
><><


இன்னும் எத்தனை முறை இப்படி 
சிரிக்க முடியும் வாழ்வில் என்று நினைத்ததும்
சிரிப்பு சிறிதாகிறது...
இன்னும் எத்தனை முறை இப்படி
அழவேண்டும் வாழ்வில் என்றதும்
அழுகை பெரிதாகிறது.
><><

Friday, October 5, 2018

வாழ்க்கை... (கவிதைகள்)

  
1
வாழ்க்கை என்பது
வாழ்ந்து பார்ப்பது;
பார்த்து வாழ்வது.

2.
வாழ்க்கை -
வார்த்தைக்கு வசப்படாதது


3.
நிறையும்போதும் வாழ்க்கைதான்
குறையும்போதும் வாழ்க்கைதான்.


4.
வாழ்க்கை -
ஒரு நிமிடத்துக்கு
ஒரு நிமிடம் மட்டுமே
கிடைக்கும் இடம்.

5.
வாழ்க்கை:
கொட்டிக் கிடக்கிறது
உள்ளேயும் வெளியேயும்.


6.
தோற்பவனுக்கும்
உண்டு வாழ்க்கை.

7.
கற்றுக் கொடுக்கச் சென்றவன்
வாழ்க்கையைக்
கற்றுக் கொண்டு வந்தான்.


8.
வாழ்க்கை -
அதன் முதலிரு எழுத்து.

9.
வாழ்க்கை என்பது
வீதியோர சிறு நடை.

10.
வாழ்க்கை -
முட்களிடையேயும்
முளைத்திடும் புற்கள்.

><><><

Friday, September 28, 2018

ஒன்றமுடியாத ஒன்றிரண்டு... (கவிதைகள்)



ஒன்றமுடியாத ஒன்றிரண்டு...

குடி தண்ணீர் பிடிக்கிற வரிசையில்
நாலாவதாய் நின்ற அக்காவுக்கும்
எட்டாவதாய் நின்ற மாமிக்குமிடையே
ஒன்றரை மணி நேரமாய் ஓயாத
குழாயடிச் சண்டையைப்
பார்த்து அதிர்ந்து படிக்கத் திரும்பிய
சின்னப் பையன் சிவதாணுவுக்கு
இரண்டு ஹைட்ரஜனும் ஓர் ஆக்ஸிஜனும்
சேர்ந்ததுதான் தண்ணீர் என்பதைப்
புரிந்துகொள்ள சிரமமாயிருந்தது.

அவளும்…

பாத்திரத்தை எட்டிப்பார்த்தால்
கொஞ்சம்போல சோறு மிச்சமிருந்தது
பயல் இலையில மிச்சம் வெச்ச
பச்சடி ஒரு மொளறு
எடுத்துப்போட்டு சாப்ட்டதில
ஏழெட்டு மணி மாடாக வேலை செஞ்சதுக்கு
அமுதமாக...
அரை வயித்தை திருப்தியா நெரப்பி
அம்மா வந்து பாத்தபோது
அப்பாவுக்கோ கொழம்பு நல்லா வரல,
பயலுக்கோ தொவரம் உப்பு ஜாஸ்தி.

><><><




Monday, September 24, 2018

மழலை... (கவிதைகள்)


1
காலையில் மெத்தை விரிப்பை
உதற முடியவில்லை மடித்துவைக்க.
இரவில் சொன்ன கதைகள்  
குழந்தைகளிடம் பெற்ற
ஏராளம் ஆச்சரியக் குறிகள்
எங்கும் சிந்திக் கிடந்தமையால்.
><><

2
கதையில் வரும் ராஜகுமாரியாக
தன்னை நினைத்துக் கொள்ளும் குழந்தையிடம்
சொல்ல மனசே வரவில்லை
அவள் படும் கஷ்டங்களை.
><><

3
நான் அவளுடன் பேச
மழலை மொழியொன்றை
வைத்திருக்க,
அவள் பொம்மைகளுடன் பேச
பொம்மை மொழியொன்றை
வைத்திருக்கிறாள்.
><><

4
அத்தனை பொம்மைகளையும்
தாண்டி நீடிக்கிறது
குழந்தையின் அன்புவட்டம்.
><><

Saturday, September 22, 2018

அன்பு ஆறு! (கவிதைகள்)

அன்பு - 1
அதன் அகலத்துக்கு
எல்லையில்லை.

அன்பு - 2.
எப்போது எங்கே
எத்தனை பாயும்
எனத் தெரியாதது.

அன்பு - 3.
பெரு வெள்ளம்.
ஆபத்து இல்லை.

அன்பு - 4.
நில்லாமல் கவனியாமல்
புறப்படுவது.

அன்பு - 5.
விண்ணையும் இணைக்கும்
கண்ணுக்குத் தெரியாத
கயிறு.

அன்பு - 6.
குடைகளால் தடுக்க முடியாத
மழை.
><><

Tuesday, December 29, 2015

அவள் - கவிதைகள்...


218
அசட்டுப் பட்டம் 
வாங்கிட ஆசை
உன்னிடமிருந்து.

219.
அநீதி நீ செய்வது,
நாலு முறை மட்டுமே பேசுவது
ஒரு நாளில் என்றால்?

220
ஏங்குகிறேன் நான்
எதையும் ரசித்திடும் உன் மனம்
எனக்கும் வேண்டுமென்று.


221
உன்னை சந்தித்ததும்
இனிப்பை விட்டுவிட்டேன்
வாழ்வில் எதற்கு 
இரண்டு இனிப்பு?

222
விழைகின்றேன் 
எப்போதும் நானிருக்க, உன்
விழி நோக்கும் இடத்தில்.


223
எனக்கென்று என்ன இருக்கிறது உன்
இதயத்தைத் தவிர? 
ஆனால் அதுவே
எல்லாமுமாக இருக்கிறது.

224
ஒரு கணம் எனினும்
உன் முகப் புன்னகை
எடுத்துச் சென்று விடுகிறது
என்னைத் தன்னுடன்.

><><><

Friday, December 18, 2015

அவள் (கவிதைகள்)



211
அன்பு உன்னை நெய்தது
அதன் ஒளி என் மேல் பெய்தது.
<>

212
நேற்று தவறவிட்ட உன் 
நினைவொன்று
இன்று காலை கிடைத்ததில்
நாள் என் வசமானது.
<>

213
எத்தனை தூரம் நீ
எனை விட்டு அகன்றாலும்
இழுத்து என் அருகில்
இட்டுவிடுகிறது
உன் மீதான நினைவுகள்.
<>

214
ஒரு நாள் லீவு கொடேன்
சிந்தனைக்கு வேறொரு வேலை
வந்திருக்கிறது.
<>

215
நத்தைகள் குதிரைகளாயின
காத்திருந்து உனைப் பார்த்த நேரம்.
<>

216
மனதின் கதவுகளை
அடைத்துவிட்டுத் திரும்பினால்
உள்ளே நீ.
<>

217
உன் முகத்திரையில்
நொடிக்கொரு ஓவியம்.

<><><>

Saturday, December 12, 2015

அவள் - (கவிதைகள்)


204
பரிகசித்து உன் சிரிப்பு
என் கவிதைகளுக்கோ பூரிப்பு.
<>

205
வாழ்வின் எல்லா வருத்தங்களும்
வறண்டு போனது
வசந்தமாய் நீ வந்தபோது.
<>

206
தென்றல் என்னை முந்திக்கொண்டது
உன்னிடம் தோற்பதில்.
<>

207
மனதில் உன் காலடித் தடம் இல்லை
ஆனால் நீ வந்து செல்கிறாய்
ஒவ்வொரு கணமும்.
<>

208
கால் இடறிற்று உனக்கு 
நான் கீழே விழுந்தேன்.
<>

209
எவரெஸ்ட் அளவுக்கு 
என் ஞாபக சக்தியை அதிகரித்தது
எதுவுமில்லை உன்போல.
<>

210
தேடிக் கொண்டிருக்கிறேன்
நம் சந்திப்பில் நழுவிச்சென்ற 
வருடங்களை.

<><><>

Sunday, December 6, 2015

அவள் (கவிதைகள்)



197
சிலிர்ப்பதை வைத்து 
சொல்ல முடியவில்லை
வருடுவது தென்றலா
உன் நினைவா என்று.
<>

198
தளிர் இலைகளினூடே 
தேடினேன் உன் 
தண்மையை.
<>

199
உன் விழிகளிலிருந்து
எட்டிப் பார்க்கிறது
உன் விழிகள்!
<>

200
உன்னை 
அதிசயிக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்.
<>

201
தொட்டு விடுவேனோ
ஆயிரம் கவிதை?
துடிப்பாக இருக்கிறது.
<>

202
எந்தப் பாடலும்
உன் உதடுகள் முணுமுணுக்கையில்
என் பாடலாகிறது.
<>

203
சற்று நேரம் உன்னோடு
பேசிக் கொண்டிருந்தேன்..
திரும்பினால்
மறுநாள்.

<><><>