அப்பா...
அப்பாடா என்று நாம் வாழ்க்கையில்
அமருகிற வரைக்கும் ஓயாதவர்.
><><
தந்தையர் தினம்...
போற்றப் படுவதில்லை வெகுவாக,
ஆயினும் உணரப்படுகிறார்...
எப்போதும் வருவதில்லை,
எனினும் தோன்றி விடுகிறார்.
சரியான தருணங்களில்...
அடுக்கடுக்காய் அறிவுரைதான்,
அவசியம் பிற்பாடுதான் தெரிகிறது...
அவரால் முடியவில்லை,
அவ்வப்போது மனதைத் தொட.
ஆனால் செய்தவை அறிய வரும்போது
ஆக்கிரமித்துக் கொள்கிறார் மனதை.
><><
அப்பாவைவிட அம்மாவை
பிள்ளைகளுக்குப் பிடிக்கும்.
அப்பாவை ஏமாற்ற முடியாது.
அம்மா ஏமாறுவதுபோல
நடிப்பது தெரியாது.
><><
அப்பாவின் செருப்பு
ஒருநாளும் தேய்வதில்லை.
அவர் நடக்கிற தூரமோ
ஐந்தாறு கிலோமீட்டர் அனுதினமும்.
ஆனாலும் தேயாத மாயம்
அகப்படவேயில்லை
அவர் இறக்கும் வரையில்.
வந்திருந்த யாரோ சொன்னார்கள்
’அன்பான மனைவியும்
அருமையான பிள்ளைகளும்
வாய்த்ததில் அவருக்குத்
தரையில் கால் பாவவில்லை.’
><><
2 comments:
தந்தையர் தினத்திற்கான உங்கள் கவிதை சிறப்பு.
வெங்கட் நாகராஜ் : நன்றி சார்!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!