Wednesday, June 30, 2021

எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச...


அவரு எவ்வளவு பெரிய ப்ரொடியூசர்.. ஆனா அவரை நம்ம தேவர் அண்ணன், நம்மள நெனச்சு படம் எடுத்திருக்கார், நாலு நல்ல விஷயம் காட்டுவார்னு நம்பி படக் கொட்டகைகள் நோக்கிப் படையெடுப்பார்கள் ஜனங்கள். ஏமாந்ததே இல்லை. இருவருமே.

சாண்டோ சின்னப்ப தேவர்… June 28. பிறந்த நாள்!
தம்பி உடையான் படமெடுக்க அஞ்சான்னு சொல்ற மாதிரி டைரக் ஷனைப் பார்த்துக்கொள்ள ஒரு தம்பி. திருமுகம். ஒரு பிரேமில் கூட அவர் கை தெரியாத படி காட்சிகள் ரொம்ப இயல்பாக மலரும், கதையை மட்டும் பகரும். வர்மாவின் காமிரா வழுக்கிக் கொண்டு நகரும்.
முருகன் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்கு கொஞ்சமும் குறையாதது கதை மேல் அவர் வைத்திருந்ததும். பாருங்களேன். ‘தெய்வச் செயல்’ என்று ஒரு படம் எடுத்தார். நாலு யானைகளை வளர்க்கும் செல்வந்தர் சுந்தர ராஜன் நொடித்துப் போனபோது தானும் வாழ்ந்து அவற்றையும் வாழ வைக்கும் அந்தக் கதை நன்றாகப் போகவில்லை.
எப்படித் தோற்க முடியும் இந்தக் கதை என்று யோசித்தார். எழுதினார் அதற்கு இன்னொரு திரைக்கதை. அப்போதுதான் டாப்புக்கு வந்து கொண்டிருந்த பிரபல கதாசிரியர் Salim - Javed -இடம் சீன்கள்எழுதி வாங்கி ஹிந்தியில் வெளியிட்டார். ‘ஹாத்தி மேரே சாத்தி’. ஆத்தி, அது கலக்கிற்று வசூலை. குலுக்கிற்று பாலிவுட்டை. அதை அப்படியே தமிழிலும். ‘நல்ல நேரம்.’ இங்கேயும் ஹிட்.
டீம் வைத்துக்கொண்டு கதை டிஸ்கஷன் செய்யும் முறையை அனேகமாக இவர்தான் கொண்டு வந்தார். Tell the gist. Get the best. Leave the rest. That's it.
பக்தி சிரத்தையுடன் தியேட்டரில் நுழைந்தது பரமன் லீலைகள் பார்த்து பரவசத்துடன் வெளிவர முடிந்தது இவர் காலத்தில்தான்.
ஆஹா, வரிசையாக அவர் தந்த எம் ஜி ஆர் படங்கள்! ஜஸ்ட் பதினோரு நாளில் முடித்துவிட்டார் ‘முகராசி' ஷூட்டிங்கை.
எந்தப் பிராணியைத்தான் கூர்ந்து கவனித்து இருப்போம்? இதயம் என்று அதற்கும் ஒன்று இருக்கும் என்று எண்ணி இருப்போம்? ஆனால் ‘ஆட்டுக்கார அலமேலு’வையும் ‘கோமாதா என் குலமாதா’வையும் பார்த்ததும் நம் அபிப்பிராணியமே எத்தனை மாறிப் போச்சு!
நம்ம எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம சின்னப்ப தேவரைப் பத்தி நாஞ்சொல்ல தனியா என்ன இருக்கு? மறக்க முடியாத மனிதர்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!