Monday, January 26, 2015

தனக்குத்தானே....


தனக்குத்தானே...

திட்டாய் அழுக்கு படிந்த சட்டை
கீறலாய் வடுவொன்று முகத்தில்
அறுபதோ எழுபதோ சொல்லமுடியாத தளர்வுடன்
தனக்குத்தானே பேசிக்கொண்டு 
தலை கவிழ்ந்தபடி நடக்கிறவரை
எளிதில் சேர்த்துவிட முடியும் 
ஏதோ மெண்டல் பட்டியலில். 
பின்னால் கேட்டுக்கொண்டு 
நடக்க நேர்ந்ததில் தெரிந்தது
தன்னாலே பேசவில்லை அவர்.
கொடுத்துக் கேட்கிற இரு செவிகள்
தன் துக்கங்களுக்குக் கிடைக்காத துக்கத்தை 
வேறெப்படிப் போக்குவார் அவர்...

அவளும்...

பாத்திரத்தை எட்டிப்பார்த்தால்
கொஞ்சம்போல சோறு மிச்சமிருந்தது
பயல் இலையில மிச்சம் வெச்ச
பச்சடி ஒரு மொளறு
எடுத்துப்போட்டு சாப்ட்டதில
ஏழெட்டு மணி மாடாக வேலை செஞ்சதுக்கு
அமுதமாக...
அரை வயித்தை திருப்தியா நெரப்பி
அம்மா வந்து பாத்தபோது
அப்பாவுக்கோ கொழம்பு நல்லா வரல,
பயலுக்கோ தொவரம் உப்பு ஜாஸ்தி.

><><><

Saturday, January 24, 2015

நமக்கு நாமே...


அன்புடன் ஒரு நிமிடம் - 73
”அப்ப சாப்பாடெல்லாம் எப்படி, செல்ஃப் குக்கிங்தானே யாழினி வர்ர வரைக்கும்? பின்னே? உனக்குத்தான் சமைக்க தெரியுமே…” என்றபடியே வந்தார் ராகவ், “பார்க்கலாம் டேஸ்ட் எப்படின்னு? இன்னிக்கு உன்னோடதான் சாப்பாடு.”
“அதெல்லாம் ஆரு உட்கார்ந்து சமைக்கிறது? அதுவும் பக்கத்தில நாலஞ்சு ஹோட்டல் இருக்கிறப்ப? கால் மணியில போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம் அதை விட்டிட்டு ரெண்டு மணி மெனக்கெட்டு….” அலுத்துக் கொண்டான் கிஷோர்.
”அப்படீங்கிறே?” என்றவர் ஏதோ யோசித்தபடி டிவியை உயிர்ப்பித்தார்.
“முதல்ல போய் சாப்பிட்டுட்டு வந்துரலாமே மாமா?”
“உட்கார்! அருமையான படம் ஓடுது எச்.பி.ஓவில!”
படம் முடிந்தபோது…“ஆச்சு மணி பத்து. இனி ஆரு திறந்திருப்பா? இன்னிக்கு பட்டினிதான்!”
சொன்ன மாதிரியே எவரும் திறந்திருக்கவில்லை.
“கவலையே படாதே, இந்த ஏரியாவில் எனக்குத் தெரிஞச ஓட்டல் ஒண்ணு உண்டு.”
“சரி, இந்நேரம் எதும் இருக்காதே அங்கே?”
“அதெல்லாம் கிடைக்கும் பார். எனக்கு தெரிஞ்சவராக்கும்.”
“அட நம்ம சாரு! வாங்க வாங்க!” வரவேற்பு மட்டுமே அங்கே கிடைத்தது.சொன்னமாதிரியே எல்லாம் தீர்ந்திருந்தது. ஒரு வடைகூட இல்லை.
“ஐயோ, என்ன இப்படி சொல்லிட்டே? உன்னை நம்பியில்ல அழைச்சிட்டு வந்தேன் என் மருமானை!”
“அப்படியா? சரி என்ன வேணும் சொல்லுங்க. உடனே பண்ணிக் கொடுத்துடறேன்.”
கிஷோருக்கு சிரிப்பு வந்தது. இனிமேல் என்ன பண்ண ஆரம்பித்து எப்ப சாப்பிட்டு… இதிலே என்ன வேணும்னு சாய்ஸ் வேறேயா?
“சொல்லுங்க, சப்பாத்தி? பூரி? கோதுமைதோசை? பரோட்டா? இடியாப்பம்? இல்லே கொஞ்சம் சிம்பிளா சாப்பாடு?”
”எனக்கு நைட்ல சாப்பாடுதான்.. இவனுக்கு சப்பாத்தி கிடைச்சா ஒரு வெட்டு வெட்டுவான்.. என்ன கிஷோர்?”
அவன் கிண்டலாய் தலையசைக்க அந்த நபர் வேலையில் இறங்கினார். கடையில் வேறு ஆளும் இல்லை. சின்ன ஹோட்டல். பார்த்தாலே தெரிந்தது அடுப்பு கிரைண்டர் மிக்ஸி எல்லாம்.
”பார்க்கலாம் என்ன பண்றார்னு!” என்று இவனுடன் அடுப்புக்கு பக்கத்து சீட்டுக்கு நகர்ந்தார்.
எண்ணி முப்பதாவது நிமிஷம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தயாராகி வந்துவிட்டது டேபிளுக்கு.
இவன் புருவங்கள் உயர்ந்தன. குக்கரில் வைத்த சாதம், மணக்க மணக்க மிளகு ரசம், பூசணிக்காய்க் கூட்டு, பொரித்த அப்பளம்…. போதுமே அவருக்கு!
இன்னொரு பக்கம் சப்பாத்தியும் தொட்டுக்க தக்காளியைப் போட்டு ஒரு குருமா. சுடச்சுட….
ஆச்சரியத்தையும் சேர்த்து விழுங்கினான் சப்பாத்தியுடன்.
மறுநாள் இரவு.
”என்னடா சாப்பிடப் போய்விட்டு வந்திட்டியா? நேத்து என்னால நேரமாயிடுச்சே?” போனில் ராகவ்.
“இல்லே மாமா,  நேத்து கவனிச்சேன். இன்னிக்கு இருக்கிற வசதிக்கு ஒரு பிளானைப் போட்டு ரெண்டு கைகளையும் உபயோகிச்சா என்ன வேணா பண்ணலாம் நிமிஷத்திலேன்னு!  இத்தனை சீக்கிரமா ஒரு சமையலை நாம செஞ்சு முடிக்க முடியும்னு இருக்கிறப்ப நமக்குப் பிடிச்ச மாதிரி வெளியே அலையாம  நானே பண்ணி சாப்பிடறது எத்தனை நல்ல விஷயம்னு  நினச்சுப் பார்த்தேன். வர்றீங்களா இன்னிக்கு அடையும் வெங்காய சட்னியும்.”

“எதிர்பார்த்தேன்!” என்றார் ராகவ்.
(’அமுதம்’ ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)
(படம்- நன்றி; கூகிள்)

Thursday, January 22, 2015

நல்லதா நாலு வார்த்தை... 41.


'தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டால்
உண்மையில் நீங்கள் இழக்கவில்லை.'
- Zig Ziglar
('If you learn from defeat, 
you haven't really lost.')

<>

’நிகழ்வுகள் 
அவற்றுக்கு நம் 
எதிர் வினைகளை விட 
முக்கியத்துவம்
குறைந்தவை.’
- John Hersey
(‘Events are less important than
our responses to them.’)
<>

’அவரை வெறுக்கச் செய்வதன் மூலம் என்
ஆன்மாவை ஒடுக்கி, இழிவு படுத்த 
ஆரையும் அனுமதியேன்.’
- Booker T. Washington 
('I will permit no man to narrow and
degrade my soul by making me hate him.')
<>

எளிமையே ஆகச் சிறந்த 
நவ நாகரிகம்.’
- Leonardo da Vinci
(‘Simplicity is the ultimate sophistication.’)
<>

‘நிழல்களை அஞ்சாதீர்.
பக்கத்தில் எங்கேயோ ஒளி
பளிச்சிடுவதையே அவை
பகர்கின்றன.’
- Ruth E. Renkel
(‘Never fear shadows. They simply mean there’s
a light shining somewhere nearby.’)

<>

’கடவுள் உங்களிடம் 
தேடிப் பார்க்கப்போவது
பட்டங்களையோ பதக்கங்களையோ அல்ல,
பட்ட காயங்களையே.’
-Elbert Hubbard
(‘God will not look you over for medals,
degrees or diplomas, but for scars.’)
<>

’உருவாக்க முடிகிற
ஒவ்வொரு நண்பரையும் 
சேமித்து வைக்கிற மனிதனே
உலகின் மிக 
சந்தோஷமான கருமி.’
- Robert Sherwood
(‘The happiest miser on earth is the man
who saves up every friend he can make.’)
><><><

Saturday, January 17, 2015

அவள் - 14

 


85.
அற்புதமானவர்கள்
மிக அற்புதமானவர்கள்
அவள். 
><><

86
அவள் எதற்கோ
சிரிக்கிறாள்
நான் எனக்குள்
தொலைந்து போகிறேன்.
><><

87
பக்கத்தில் இருந்தவளைக்
காணோம்
’இங்கே இருக்கிறேன்,’
குரல் வருகிறது
கனவுக்குள்ளிருந்து.
><><

88
அமைதியாய் நீ
அமர்ந்திருக்க அமர்ந்திருக்க
அமைதியிழந்து போகிறேன்.
><>< 

89
உன் பேரும் அதுதான்
என் பேரும் அதுதான்
ஏன் சொல்ல வேண்டும் அதை
உரக்கவோ மெதுவாகவோ?
><>< 

90
கடிதம் ஏந்தி வந்து
நிற்கிறது
புறாவே.
><>< 

91.
சாட்சாத் என்னுடையது
சற்றுமுன் சாலையில் நீ
கண்டெடுத்த இதயம்.
><>< 

(படம்- நன்றி: கூகிள்)

Wednesday, January 14, 2015

உள்ளம் உள்ள நீ...


அன்புடன் ஒரு நிமிடம் - 72
விசேஷ நாள் என்பதாலோ என்னவோ பல சரக்குக் கடையில் கூட்டமான கூட்டம். யமுனா கொடுத்த லிஸ்ட் வினோத் கையில்.
அலுத்துக் கொண்டான் தியாகுவிடம். “என்னடா எத்தனை நாழியா நிக்கிறோம் நம்மளைக் கவனிக்கிறாங்களா பாரு. இனி எப்ப வாங்கி முடிச்சு… எப்ப வீட்டுக்குப் போய்…”
அவன் அனத்தல்களுக்கு வெறுமே உம் கொட்டிக் கொண்டிருந்தான் தியாகு.
அடுத்தாற்போல் அவர்கள் ஸ்டேஷனை அடைந்து மின்ரயிலுக்கு நிற்க அங்கும் ரயில் தாமதம், இருபது நிமிஷமாக ப்ளாட்ஃபார்மிலேயே நிற்கவேண்டியதாயிற்று.  
அங்கேயும் அவன் எரிச்சல் தொடர்ந்தது. ”சே! என்ன, இன்னிக்குப் பார்த்து இப்படி லேட் ஆகுது!”  நொடிக்கொரு முறை சொல்ல இவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. “இருடா, இதோ வந்துரும்,”
இந்த ஸ்டேஷன் வந்து வெளியே  நிறுத்தியிருந்த பைக்கை எடுத்து வரும்போது ரெண்டு சிக்னலிலும் முழுசாக மூணு நிமிஷம்.
“பாரு நமக்குன்னு சொல்லிவெச்ச மாதிரி ரெட் விழுது. நடு ரோட்டில நின்னுட்டு… அவஸ்தைடா!”
வீட்டுக்கு வந்து சேர்ந்து அவன் அறையில் அமர்ந்தார்கள். டீப்பாயிலிருந்த வாரப் பத்திரிகையை விரித்தான் வினோத். “அப்பாடா!”
27 ஆம் பக்கத்தில் அந்த கவிதைகள் பகுதி. அவர்கள் இருவருமே ஆவலுடன் ரசிப்பது.
வரி வரியாக படித்து சிலாகித்தான் வினோத்.
“ஒரு ஏழை முதியவரின் கண்ணில் தெரிகிற பரிவை அப்படியே கண் முன் கொண்டு வர்றார் பாரு, அருமை!”
இன்னொன்றைப் படித்துவிட்டு...
”இலைப் பந்தலிட்ட மரங்களிலும் இளந்தண்டு வளைந்த பசுங் கொடிகளிலும் இன்னமும் மிச்சமிருக்கும் இயற்கையின் அழகை  நமக்கு நினைவூட்டுது இந்த வரி, பார்த்தியா.”
இன்னொன்று.
“அட, இத பாருடா, ஒரு பஸ் ஸ்டாண்டில் பேப்பர் விற்கிறவரின் கூக்குரலிலிருந்து பஸ்சை ரிவர்ஸில எடுக்கிற அந்த சவுண்டு வரை கலந்து கேட்கிற தினுசை நமக்கு அறிமுகப்படுத்தறார் பாரு.  ஆமா, என்ன யோசனை, பதிலே சொல்லாம?”
அவனைக் கூர்ந்து பார்த்தான் தியாகு, “ஒண்ணு சொல்லவா?” என்றான், “நீ இங்கே வந்து ரசிக்கிற இந்த விஷயங்கள் மாதிரிதானேடா  நாம காத்திருந்த இடத்திலெல்லாம் இருந்தது? அந்த பலசரக்குக் கடைக்கு பக்கத்தில பச்சைப் பசேல்னு எத்தனை மரங்கள், செடிகொடிகள் இயற்கை அழகு சொட்டச் சொட்ட! ரயிலுக்கு நிற்கிறப்ப  நம்மை சுத்தி கலவையா எழுந்த அந்த சப்தங்களில் எத்தனை ஸ்வரங்கள்! சிக்னலில் காத்திருந்தப்ப வழி கேட்ட ஸ்கூட்டி பெண்ணுக்கு விலாவாரியா விளக்கிட்டிருந்த அந்த முதியவர் கண்ணில் எவ்வளவு பரிவு! இங்கே வரிவரியா சிலாகிக்கிற, இத்தனை ரசனை உள்ளம் உள்ள நீ, அந்த நேரங்களில் அந்த இடங்களில் பக்கத்தில் கொட்டிக் கிடக்கிற படைப்பின் அதிசயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளாமல் ஏன் வீணா எரிச்சலும் டென்ஷனும் அடையணும்? அதான் எனக்குப் புரியலே!”
அவனுக்குப் புரிந்தது.

('அமுதம்’ ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)
><><><><
(படம்- நன்றி : கூகிள்)