அந்தச் சின்ன ஸ்டேஷனில் ஒரு நிமிடம் தான் நின்றது ரயில். அவசரம் அவசரமாக சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு இறங்குவதற்குள் கௌரி தவித்துப் போனாள். ஆனாலும் அவள் வருத்தப்படவில்லை. 'அந்த நிலத்தை எப்படியாவது பார்த்து விடணும்..'
தேடிப்போன மூலிகை காலிலேயே தட்டுப்பட்ட மாதிரி எதிர்பாராமல் கையில் வந்து விழுந்த பொக்கிஷமல்லவா அது?
மகன் ஆனந்துக்கு பெண் பார்த்து முடிவு செய்த போது...
"ஒரு நிமிஷம்," என்றார் பெண்ணின் அம்மா. "பேசினபடி கல்யாணத்தை ஐப்பசியிலேயே நடத்த முடியுமான்னு தெரியலே.. கொஞ்சம் தாமதம் ஆகலாம்.." என்றார்.
"ஏன்?"
"ஊரிலே இருக்கிற அரை ஏக்கர் தென்னந்தோப்பை வித்துத்தான் கல்யாணம் செய்து தரணும். அதான்.."
"ஊருன்னா?"
"செம்பழவூர்..!"
"அப்படியா?"
"ஆமாம். அங்கே வாய்க்கால் பாலம் மெயின் ரோட்டைத் தொடற இடத்திலேதான் எங்க தென்னந்தோப்பு இருக்கு.."
சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள் கௌரி
"அப்போ ஒண்ணு செய்யுங்க.. நிலத்தை மகன் பேருக்கு எழுதிக் கொடுத்துடுங்க. நாங்களே கல்யாண செலவு முழுக்கப் பார்த்துக்கறோம்.." என்றாள்.
சம்மதித்தார்கள். சந்தோஷமாக வீடு திரும்பினாள் கௌரி.
உடனே போய் அந்த நிலத்தைப் பார்க்க மனம் துடித்தது. கணவரை அழைத்தாள். அவர் தயங்கவே, "பரவாயில்லை.. எங்க அம்மாவைப் பெத்த தாத்தா அங்கேதான் இருக்கார்.." என்று தனியாகக் கிளம்பி விட்டாள்.
விஷயத்தைக் கேட்டதும் தாத்தாவின் கண்கள் விரிந்தன.
"வா, பேசிட்டே போகலாம்..." என்று நடந்தார்.
"நீ... நீயாம்மா வரதட்சணை வாங்குறே? பழசு எல்லாம் மறந்து போச்சா? அந்தக் காலத்திலே நீ பண்ணின ஆர்ப்பாட்டமும் கேட்ட கேள்விகளும்... இப்ப நடந்தது மாதிரி இருக்கு. உன்னைக் கட்டிக்க வரதட்சணை கேட்டாங்கன்னு என்ன குதி குதிச்சே? 'எனக்கு என்ன குறை? படிப்பில்லையா? அழகில்லையா? குணம் இல்லையா? வரதட்சணை கொடுத்துத்தான் கல்யாணம் பண்ணி வெக்கணும்னா, எனக்குக் கல்யாணமே வேண்டாம்'னே..."
"சரி, பழசெல்லாம் இப்ப எதுக்கு தாத்தா? அதை விடுங்க... வாய்க்கால் பாலம் வந்தாச்சு. அந்த நிலம் எங்கே இருக்கு? காட்டுங்க சீக்கிரம்..."
"அதோ, அந்த ஒற்றைப் பனையிலேருந்து இந்த ரோடு வரை கிடக்குதே.. அதான்.."
ஆசை பொங்கப் பார்த்தாள் கௌரி. பிறகு தாத்தாவை நிமிர்ந்து ஆழ்ந்து நோக்கினாள். நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்டாள்.
"இந்த நிலத்தைத்தானே அந்த காலத்துல என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறதுக்காக எங்கப்பா எனக்குத் தெரியாம ராவோடு ராவா வித்தார்! செம்பழவூர் வாய்க்கால் பாலம் ஒட்டின நிலம்னு அவங்க சொன்னதுமே நீங்க அம்மாவுக்கு மஞ்சக்காணியாக் கொடுத்த நிலம்தான் இதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. இழந்த நம்ம பரம்பரைச் சொத்தை மீட்கணும்கிற துடிப்புலதான் இதை வற்புறுத்தி அவங்ககிட்டேர்ந்து வாங்கினேன். கவலைப்படாதீங்க தாத்தா... ஊருக்குப் போனதும் அவங்களுக்குச் சிரமமில்லாம கல்யாணத்தை நாமளே நடத்தறதோட, இந்த நிலத்துக்கான கிரயத் தொகையையும் கொடுத்துடுவோம்!"
பேத்தியின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார் தாத்தா.
><><
1 comment:
வரதட்சணை வாங்குவதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம்! நல்ல கதை. விற்ற நிலத்தை மீண்டும் பெறுவதோடு, அதற்கு பதில் செய்யும் விஷயங்களும் நல்லதே.
நல்லதொரு கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!