Wednesday, July 15, 2026

அக்காவின் ஆவி… (சிறுகதை)


அக்காவின் ஆவி… (சிறுகதை)
கே.பி.ஜனார்த்தனன்
('ஆரண்யநிவாஸ்' தை 2024 இதழில்)
"அதோ அங்கே பாருங்க! என்னையே முறைத்துக் கொண்டு நிற்கிறா பாருங்க அவ!"
வசந்தியின் தூக்கிய கரத்துக்கு நேரே நிழலாடியது.
நான் வேகமாக அருகில் ஓடிச் சென்று பார்த்தேன். இடதுபுறமிருந்து வந்த தெருவிளக்கு வெளிச்சத்தில், இடையில் கட்டியிருந்த கொடிக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த துணி அசைந்தபோது அதன் வடிவமற்ற நிழல் கோரமாக ஆடியது.
சிரித்தேன்.
"சிரிக்காதீங்க, உங்களை பார்த்ததும் ஓடிட்டா!"
நான் திரும்பி அவளை அணைத்தபடி கூடத்துக்குள் நுழைய முயன்றேன். நகர மறுத்தாள்.
அந்தக் குளிர் பூசிய இரவிலும் அவள் முகம் வேர்த்திருந்தது. கண்கள் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு... இனி நிச்சயம் இவளும், இவளால் நானும் தூங்கப் போவதில்லை.
சுருள் சுருளாக அலை பாய்ந்திருந்த அவள் தலைமுடியைக் கோதியபடியே இருட்டை வெறித்தேன். வசந்தி, நீ இவ்வளவு பயந்தவளா?
நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் அக்காவின் கணவன் என்ற முறையில் அவளுடன் பழகியிருந்த முதல் இரண்டு வருட காலத்தில் அவள் எனக்கு ஒரு சூட்டிகையாகத்தான், பேரழகியாகத்தான், குறும்புக்காரியாகத்தான் தெரிந்திருந்தாள்.
ராஜியைத் திருமணம் செய்தபின், இரண்டு வருடம் அவளுடன் இந்த பூனாவில் வாழ்ந்தபின் ஒரு நாள் நான் மட்டும் தனியனாக ஊருக்குத் திரும்பிச் சென்று அவள் பெற்றோரிடம் நின்றபோது எனக்கு பேச நா எழவே இல்லை. அவர்களோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அப்போதுதான் கிடைத்த என் மெசேஜை வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். ராஜியின் அப்பா மட்டும் முன்னால் வந்தார். "மாப்பிள்ளை, அவள் பாடி கிடைக்கவே இல்லையா?"
நான் பரிதாபமாக விழித்தேன். "எங்களால் ஆன மட்டும் பார்த்தோம் மாமா, ராஜி ஆற்றோடு அடித்துக் கொண்டு போனவள் போனவள் தான்."
என்னுடைய கதறலைக் கேட்டு ஓடி வந்தவர்களும் செய்வதறியாது நின்றார்கள்
"ஐயோ, மகளே!" என்று வாய்விட்டு அழுதார். தொடர்ந்து எழுந்த அவலக் குரல்களும் விக்கல்களும்...
ஆனால் எல்லாம் இரண்டு வாரம் தான். அதற்குள் எல்லாரும் ஓரளவு தேறி எனக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கும் அளவு பக்குவம் பெற்று விட்டார்கள்.
அவர்களுடைய திருப்திக்காக ஒரு மாதம் இருந்து விட்டு திரும்பினேன். மறுபடியும் ஒற்றையாக. ஆனால் அவர்கள் என்னை விட்டால் தானே?
என்னைத் தொந்தரவு செய்ய தொடங்கினர், வசந்தியை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. அவளுக்கு பூரண சம்மதம் என்று தெரிந்தபின் என்னை இசைய வைப்பது இன்னும் எளிதாகிவிட்டது.
முருகன் சன்னதியில் திருமணம் முடிந்து இவளை இங்கே அழைத்துக்கொண்டு வந்து ஒரு மாதம் ஆகவில்லை.
நௌ ஷி இஸ் ஸீயிங் திங்க்ஸ்!
<> <> <>
மறுநாள் மாலை வசந்தியிடமிருந்து ஒரு அவசர போன் வந்தது கம்பெனிக்கு. பறந்தால், கட்டிலில் படுத்து, கைக்குள் முகம் புதைத்தபடி அழுதுகொண்டே இருந்தாள். சமாதானப்படுத்தி விஷயத்தை தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
காலையில் நான் போனதுமே ராஜி வந்தாளாம். "பாருங்க, அதோ அந்த துணி துவைக்கிற கல்லில்தான் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வசந்தி, உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லணும், அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு, இல்லேன்னா எனக்கு நேர்ந்த கதிதான் உனக்கும்னு எச்சரிக்கை பண்ணினா."
அதிர்ச்சியில் ஓரடி பின் வாங்கினேன். அடிப்பாவி, என்னைக் கொலைகாரன் என்றா சந்தேகப்படுகிறாய்?
ஒரு நிமிடம் தான். என் கோபம் மறைந்தது. அப்படி எல்லாம் எளிதில் சந்தேகம் தோன்றக் கூடியவளாக இருந்தால் என் கையால் ஒரு தாலியைக் கட்டிக் கொண்டு என்னோடு இந்த ரிமோட் பிளேஸுக்கு வருவாளா?
"ஏன் அவள் அப்படி சொல்லணும் சந்தீப்?" என்னையே பார்த்தபடி இன்னசெண்டாகக் கேட்டாள் வசந்தி.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு வினாடி விழித்தேன். "இப்ப நான் சொல்றதைக் கேட்டு ஆச்சரியப்படாதே வசந்தி. உன் மனசில ஒரு மூலையில் நான் உங்கக்காவைக் கொலை செய்து விட்டேன்கிற சந்தேகம் இருக்கு. அதான் உனக்கு இப்படி எல்லாம் பிரமைகள் ஏற்படுது."
"சே!" என் வாயைப் பொத்தினாள், "கண்டபடி பேசாதீங்க. அந்த மாதிரி எல்லாம் துளிகூட கிடையாது என் மனசில். ஆனா நான் கண்டது பிரமை இல்லை. அது எங்க ராஜியின் ஆவியேதான்."
தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. எப்படி? எப்படி இவளுக்கு நான் கொலை செய்யவில்லை என்பதை, அந்த உண்மையை, நிரூபிப்பது?
<> <> <>
"இன்னிக்கும் அவள் வந்திருந்தாள். சொன்னாள். என் மேலே எப்பவும் உங்களுக்கு ஒரு கண்ணாம்."
என் கோபம் எல்லை கடந்து விட்டது. "என்ன உளர்றே? அப்படின்னா என்னைக் கொலைகாரான்னு சொல்றியா?"
அவள் அடங்கி போனாள். என்னை கட்டிப்பிடித்துக் கொண்டாள். " எனக்கு... எனக்கு பயமா இருக்கு."
"ராஜியைக் கண்டா, என்னைக் கண்டா?"
"ரெண்டு பேரையும்," என்றாள். சிரித்தேன். மறுபடியும் எனக்குள் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. இவளது பயத்தைப் போக்கி விடலாம் என்ற நம்பிக்கை.
நம்பிக்கைக்கு ஆதாரமான அந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால்! முன்னால் நடந்தது. வசந்தி ஒன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல.
ராஜியின் கிராமத்தில் திருட்டு பயமுண்டு. நான் அங்கிருந்த ஒருநாள் இரவு எங்கள் வீட்டுக்குள்ளேயே ஒருவன் புகுந்து விட்டான். ராஜி அப்பாவின் அறையில் அவன் ஏதோ உருட்டிக் கொண்டிருக்க, விழித்துக் கொண்டு விட்ட நாங்கள் நடுங்க ஆரம்பித்தோம். "மெள்ள வெளியில போய் யாரையாவது கூட்டி வரட்டுமா?" என்று நான் ராஜியிடம் கிசுகிசுக்க, "வேண்டாம், சத்தம் போடுவோம், ஓடி விடுவான்!" என்று ராஜி சொல்ல, வசந்தி கொஞ்சம் கூட அசராமல் ஒரு கழியை எடுத்துக்கொண்டுவந்து என்னிடம் நீட்டினாள். "அப்பா ரூமுக்கு வெளில நின்னுக்குங்க. அவன் வெளியே வரும்போ ஒரு போடு போடுங்க!"
"ஐயையோ? வேண்டாம், அவன் சுருண்டுட்டா? உசிருக்கு ஏதாவது ஆயிட்டால்? என்னால் முடியாது!" நான் பின்வாங்க, அவள் நேரே போய் அங்கே நின்றுகொண்டு... வெளியே வந்தவன் மேல் ஒரு போடு போட்டாள். கீழே விழுந்தவன் கம்பும் கையுமாக அவள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து எழத் தயங்க, "அக்கா, அந்தக் கயித்தை எடு!" என்றாள் வசந்தி. "இப்ப பக்கத்து வீட்டுக்காரங்களைக் கூப்பிடுங்க," என்றாள் என்னிடம்.
அவளாவது பயப்படுவதாவது!
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.
இரவு திடீர் திடீரென்று விழித்துக் கொண்டு என்னை உலுக்குவது முதல் அசாதாரண வேளைகளில் கம்பெனிக்கு போன் செய்து என்னை அழைப்பது வரை, ஓடி ஒடி வந்து ராஜியை நானும் சரி வேறு யாரும் சரி கொலை செய்யவில்லை என்று எந்தப் பயனுமின்றி விளக்குவதற்குள் படாத பாடுபட்டு போனேன்.
மெல்ல மெல்ல பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இவள் இப்படி திடீர் திடீர் என்று பிதற்றுவது தெரிந்தது. என்னை ஒரு மாதிரி சந்தேகத்துடன் பார்க்க தொடங்கினார்கள். கொஞ்ச நாளில் விஷயம் கம்பெனிக்கும் எட்டி விட்டது. அவர்களும் தங்கள் பங்குக்கு என்னைத் துளைக்க ஆரம்பிக்க...
வீட்டுக்கு வந்தால் இவள் என்னைத் தூங்கவும் விடாமல்... ஒருநாள் இரவு கனவு கண்ட நிலையிலேயே என் சட்டையைப் பிடித்து அவள் அறியாமலேயே உலுக்கத் தொடங்கி விட்டாள்.
என்னால் பொறுக்க முடியவில்லை.
"வசந்தி! அது உன் அக்காவின் ஆவியும் இல்லை நான் அவளைக் கொல்லவும் இல்லை. தயவுசெய்து இதை நம்பு. இந்த விஷயத்துக்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி வை," என்றேன் அழுத்தம் திருத்தமாய்.
அவள் அடங்குவதாக இல்லை. "என்னையும்... என்னையும் அதே போல்..."
அவள் முடிக்கவில்லை. நான் வெறியனானேன். "என்னோடு வா," என்று அவளை அழைத்துக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். ஊரைத் தாண்டி அந்தப் பாழடைந்த வீட்டின் முன் கொண்டு போய் நிறுத்தினேன். கதவைத் திறந்து உள்ளே தள்ளினேன்.
"வசந்தி!" ராஜி தான் கத்தினாள்.
"அக்கா!" விழி பிதுங்க வெறித்தாள் வசந்தி.
"பார், நன்றாகப் பார். உன் அக்காவை நான் கொலை செய்யவில்லை. அவளை இங்கேதான் அடைச்சு வெச்சிருக்கேன். எல்லாம் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான்! இப்பவாவது நான் ஒரு கொலைகாரன் இல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டியா?"
"எனக்கு அப்பவே தெரியும்!" என்றாள் வசந்தி நிதானமாய், "உங்களால் ஒரு உயிரைக் கொல்ல முடியாது. அதனால்தான் என் அக்காவை எப்படியாவது உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் உங்களோடு வந்தேன், என் வாழ்க்கையை அடகு வைத்து! கடைசியில் எனக்கு வெற்றிதான்! நாம இங்கே புறப்பட்டு வரும்போது பக்கத்து வீட்டுக்காரருக்கு சைகை காட்டிவிட்டுத்தான் வந்தேன்."
பின்னால் வந்த போலீசார் எனக்கு விலங்கிட்டு அவள் சொன்னதை ஊர்ஜிதம் செய்தார்கள்.
வசந்தி, உன் அழகு மட்டுமா என்னை வீழ்த்தியது? அறிவும் தான்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!