ஒட்டுமொத்த உலகத்தின் புல்லட் வேகத்தை எதிர்த்து ஒற்றை மனிதன் புன்னகைத்து நிற்கிறான். இப்படி ஒரு முட்டாளா என்று பார்க்க ஆரம்பிக்கிறோம். போகப் போக இப்படி ஒரு அப்பாவியா என்று பார்க்க ஆரம்பிக்கிறோம்.. போகப் போக இப்படியும் வாழலாமா என்று பார்க்கிறோம்… போகப் போக இப்படியல்லவா வாழ வேண்டும் என்று நாம் பார்க்கும் போது படம் முடிகிறது.
அவர், ஹிரயாமா, தன் ஒற்றை உபகரண வாளியை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு டாய்லெட்டாக சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். தினம் வேலைக்கு தன் வேனில் பயணிக்கும் போது அவருக்கு பிடித்த மாதிரி பழைய கேசட்டில் பாடல்களை (Nina Simone இன் “Feelin good ”....) கேட்டுக்கொண்டு. படுக்குமுன் Faulkner படிப்பது என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் தன்னளவில் நேர்த்தியாக வாழ்கிறார். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது நாள் என்ற பாடல் வரிதான் அவருடைய வாழ்க்கையின் வரியும்.
அந்த ரெண்டரை நிமிட ஒரே ஷாட்! முழுக்க முழுக்க க்ளோசப்பில்! அதுதான் அவருக்கு Cannes பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்கித் தந்திருக்க வேண்டும். தன் வாழ்க்கையை ரசித்து புன்னகைப்பதும் சிரிப்பதும் அந்த ஆனந்த மிகுதியில் அழுவதும்… ஓ, அந்த சிரிப்பு கலந்த அழுகை அல்லது அழுகை கலந்த சிரிப்பு! நமக்கு ஒரே பிரமிப்பு!
ஆக் ஷன் படம் அல்ல. நேர் எதிர். மெது…வாகத்தான் போகும். எண்ணி சிலர். அவரது அசிஸ்டன்ட் கிளீனர். அவன் வெளியே அழைத்துப் போக விரும்பும் கர்ல் ஃப்ரண்ட். தினம் அவர் சாண்ட்விச் சாப்பிடும் கடைக்காரி. அவளை டைவர்ஸ் செய்துவிட்ட கான்சர் நோயாளி கணவன். சின்ன சின்ன சம்பவங்கள்தான். ஆனால் உயர்ந்த ரசனைக்கு இட்டுச் செல்லும் படம், நாம் விரும்பினால்!
வாழ்க்கையில் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரே படம் எது என்று சொன்னால் இதை விட தகுதியான படம் இருக்க முடியாது. ஏனென்றால் இது எல்லா படத்தையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது இது அல்லவா படம் என்று.
ஓடிக்கொண்டே இருக்கிறீர்களா வாழ்க்கையில்? சாதித்துவிட வேண்டும் என்று ஒரு லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு? ஒவ்வொன்றாக அடைந்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த படத்தை பார்க்காதீர்கள், மறுபடி உங்களை சிந்திக்க வைத்து விடுவார்கள்.
‘நிழல் மேல் நிழல் விழுந்தால் நிழல் இன்னும் கறுக்குமா?’ கடைசி சீனில் வரும் சுவாரசியமான கேள்வி. கதையின் பொறி அந்த கேள்வியில்!
படம்: ‘Perfect Days’ (2023)

No comments:
Post a Comment