Wednesday, May 20, 2020

நானே நானாக...

விபத்தில் அடிபட்டு தன் ஒரு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு வீல் சேரில் நாளை ஓட்டுகிறார் போட்டோகிராபர் ஜெஃப். அவ்வப்போது வந்து பார்க்கும் காதலியும் நர்சும்... நேரம் போகணுமே? அபார்ட்மெண்ட் ஜன்னலோரம் பைனாகுலரில் எதிர் ஜன்னல்களில் மற்றவர்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு உதிக்கிறது ஒரு விபரீத சந்தேகம். இடி மழையின் இடையே கேட்டதே ஒரு சின்ன அலறல், என்ன அது? நோயாளி மனைவியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரன், தோர்வால்ட், நீளக் கத்தி ஒன்றை கழுவுகிறானே ஏன்? ஒரு பெரிய ட்ரங்கு பெட்டியை வீட்டிலிருந்து அவன் நகர்த்துவது எதற்காக இருக்கும்? சத்தமில்லாமல் மனைவியை காலி பண்ணி விட்டான் என்று சந்தேகம்! துப்பறியும் நண்பனிடம் சொன்னால், விசாரித்து, அவள் ஊருக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது என்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர் நாயை யாரோ கொன்றுவிட ஜெஃப்புக்கு மட்டும் சந்தேகமே இல்லை அது அவன் தான் என்று. ‘உடலை புதைத்த இடத்தை நாய் தோண்ட ஆரம்பித்திருக்கும், அதான்!’ பொய்யாக ஒரு போன் கால் கொடுத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார். அந்த நேரத்தில் காதலி சுவர் ஏறி குதித்து அவன் வீட்டில் நுழைந்து ஆராய்கையில் அவன் வந்துவிடுகிறான். காதலியை காப்பாற்றணுமே? வேறு வழியின்றி போலீஸுக்கு போன் செய்கிறார் ஜெஃப். அவர்கள் வந்து அவளைப் பிடிக்க, விரல்களைப் பின்புறமாக வைத்து ஜெஃப்புக்கு சைகை காட்டுகிறாள் காதலி. விரலில் தோர்வால்டின் மனைவியின் கல்யாண மோதிரம். பார்த்துவிடுகிறான் தோர்வால்ட் இவர் பார்ப்பதை.
அடுத்து என்ன? ஜெஃப்பைத் தீர்த்துக்கட்ட இரவில் அவர் வீட்டில் நுழைகிறான் அவன். தன் காமிராவின் ஃபிளாஷ்களை அவன் முகத்தில் அடித்துத் தப்ப முயல்கிறார் வீல் சேர் ஜெஃப். முடியவில்லை. தள்ளி விடுகிறான் அவரை ஜன்னல் வழியே. சரியாக போலீஸ் வந்து சேர, மாட்டிக் கொள்கிறான். கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறான்.
கடைசி காட்சி: அதே ஜன்னல் ஓரம். அதே வீல்சேரில் ஜேம்ஸ். ‘இரண்டு காலிலும்’ கட்டுப் போட்டுக் கொண்டு!
ஹிட்ச்காக்கின் பிரபல ‘Rear Window’’வில் ஜெஃப் ஆக வந்து, அந்த வீல் செயரில் நம்மையும் நகர வைத்தவர்...
James Stewart.. மே 20. பிறந்த நாள்!
ஒரு மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 36 மில்லியன் குவித்தது. (ஏன் எல்லோரும் சினிமா எடுக்க ஓடுகிறார்கள் என்று புரிகிறதா?)
‘பின் ஜன்னல்' தவிர இவர் பின்னியெடுத்த படம், ‘என்னவொரு அற்புதம், வாழ்க்கை!’ (‘What A Wonderful Life’) துடிப்பான நடிப்பு!
ஹிட்ச்காக்கின் ‘Vertigo’விலும் ஹீரோ இவரே. உயரம் என்றால் துயரம் அவருக்கு அதில். ‘Rope’ என்ற ஒரே ஷாட் ஹிட்ச்காக் படத்திலும்!
கையில் அடுத்த வேலைக்கான கட்டிடக் கலை டிகிரியை வைத்திருந்தவர், ஆரம்பத்தில் கலக்கியது கௌபாய் படங்களில். ஒரே தொப்பியுடன் என்பது விசேஷம்.
1934 இல் ‘Art Trouble’ முதல் படத்தில் நடித்தபோது டைட்டிலில் பெயர் வரவில்லை. ஆனால் 32 வயதில் ஆஸ்கார் வாங்கி விட்டார். ‘The Philadelphia Story’ க்காக வாங்கிய அந்த ஆஸ்காரை அப்பாவின் இரும்பு கடையில் பார்க்க வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர். அப்போது இவர் பிரபல நடிகர். அழைப்பு வரவே, குறைந்த 5 பவுண்டை நிறைய சாப்பிட்டு சரியாக்கிவிட்டு ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அப்படி என்ன எழுதினாரோ தெரியவில்லை, அப்பா அப்போது கொடுத்த கடிதத்தை தப்பாமல் பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கடைசிவரை. பிரிகேடியர் ஜெனரல் ஆன ஒரே நடிகர்!
திலீப் குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் இவருக்கு அளித்தது 50 திரை சாதனையாளர்களின் மூன்றாவது ரேங்க் என்றால், பிரிமியம் மேகஸின் அளித்தது மாபெரும் நடிகர்களில் ஒன்பதாவது இடம்.
Quote?
‘I don't act, I react….பாத்திரங்களுக்கு உள்ளேபோய் குழப்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை நான். கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நான் ஆகவே எல்லா படத்திலும் வருகிறேன்!’

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் சிறப்பு. தொடரட்டும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!