Sunday, October 10, 2021

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ராஜேஸ்வர ராவும்...

 


“பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ?” பாடலுக்கு அவர் அமைத்த இசையும் அப்படியே! தமிழ் தெலுங்கு இந்தி மூன்றுக்கும் சொந்தமானது. எல்லோர் மனதுக்கும் பந்தமானது. இன்றைக்கும் மிஸ் பண்ணாமல் கேட்கும் ‘மிஸ்ஸியம்மா’ படப் பாடல்.

எஸ். ராஜேஸ்வர ராவ்.. தென்னிந்திய திரை உலகில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர்.. இன்று பிறந்த நாள்!
“தெரிந்து கொள்ளணும் பெண்ணே… அதைப்போல், நடந்து கொள்ளணும் பெண்ணே…” என்று சாவித்திரி பாட, “பழகத் தெரிய வேணும்.. உலகில், பார்த்து நடக்க வேணும்..” என்று ஜெமினி பாட அந்தப் படமே ஒரு இசை விருந்து. “எல்லாம் உனக்கே தருவேனே, இனிமேல் உரிமை நீ தானே..” என்ற ஏ எம் ராஜா பாடும்போது மயங்காதார் யார்? கடைசியில் வரும் “மாயமே நான் அறியேன்..” அற்புதமான மெலடி.
எத்தனை முறை கேட்டாலும் புதிதாகத் தெரியும், புத்துணர்ச்சியும் காதல் உணர்வும் அள்ளித் தெளிக்கும் அந்தப் பாடல்: “ஓஹோ வெண்ணிலாவே...விண்ணாளும் வெண்ணிலாவே…வீசும் தென்றலிலே.. கதை, பேசும் வெண்ணிலவே..” ஜெமினி, சாவித்திரி ‘பிரேம பாசம்’ படத்தில் நடிக்கும் அந்த கண்டசாலா, லீலா பாடல் ஒலிக்காத திசையில்லை.
“எங்கிருந்து வீசுதோ.. இனிதாகவே தென்றல்..” என வீசிய ‘கடன் வாங்கி கல்யாணம்’ படப்பாடல். இந்தப் படத்தில்தான் ஜாலியான அந்த “கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே..” இசையில் ஜாலம் செய்த, “போதும் உந்தன் ஜாலமே..”
‘அவர் யார்?’ என்று கேட்க வைத்த, மயக்கும் குரல் கொண்ட ரகுநாத் பாணிகிரஹி தமிழில் பாடிய அந்த இரண்டே பாடல் ‘அவள் யார்?’ படத்தில் இவர் இசையமைத்தவைதான். (“நான் தேடும் போது.. நீ ஓடலாமோ?” “கண் காணும் மின்னல் தானோ?”)
1976 இல் கே எஸ் கோபாலகிருஷ்ணன் ‘தசாவதாரம்’ எடுத்தபோது இவர்தான் இசையமைத்தார்.
“சேலாடும் நீரோடை மீதே... தேனின்பப் பண் பாடுவோமே..” என்ற கண்ணதாசன் பாடல் ராஜா சுசீலாவின் குரலில் வந்தது. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’
பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆரம்பத் தமிழ்ப் பாடல்களில் ஒன்றான, அவரை பிரபலப்படுத்திய “அவனல்லால் புவி மேலே அணுவும் அசையாது…” இவரது ‘பிரேம பாசம்’ படத்தின் பாடல்.
எல்லா வகை வாத்தியங்களும் வாசிக்கத் தெரிந்த இவர் எல்லா வகை பாடல்களும் இசையமைக்கத் தெரிந்தவர். “காப்பியிலே பல் தேய்க்கிறார்... மாப்பிள்ளை டோய்..” அந்தக் காமெடி பாடல் ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் வருவது.

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மறக்க முடியுமா? ஒரு சில தவிர மற்றவை கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்கள் சார். இசையமைப்பாளர் பற்றி நிறைய தெரிந்து கொண்டோம்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ரகுநாத் பாணிகிரஹி பற்றி இப்போதுதான் அறிகிறேன். அந்தப் பாடல்களும் கேட்டதில்லை.

இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் பற்றி இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன் மிஸ்ஸியம்மா பாடல்கள் மற்ற பாடல்கள் கேட்டிருந்தாலும்.

மிக்க நன்றி சார்

துளசிதரன்

கே. பி. ஜனா... said...

மகிழ்வுடன் நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!